ஜாலம் 05
எட்டு வருடங்களின் முன்..
மீனாட்சி எங்கோ புது இடம் ஒன்றில் நின்றிருந்தாள்.. அந்த அறையையே சுற்றி பார்த்தவளுக்கு பழக்கப்பட்ட இடம் போல் தெரியவில்லை..
திடீரென பின்னிருந்து இரு கரங்கள் அவளை அணைக்க.. அதிர்ச்சியுடன் திரும்ப போனவளை தடுத்த அந்த கரம் இன்னும் அவளை நெருக்கமாய் அணைத்துக்கொண்டது..
அணைப்புக்குள் கட்டுன்று இருந்ததெல்லாம் சில நொடிகள் தான்.. முயன்று திரும்பியவளை, இமைகள் மூடிய அவன் முகமே வரவேற்றது…
அவன் முகத்தையே அத்தனை நெருக்கத்தில் கேள்வியாய் பார்த்துக்கொண்டிருக்க, அவனோ அவள் முகத்தை கையில் ஏந்திகொண்டான்.. இத்தனைக்கும் அவன் விழி திறக்கவில்லை..
அவன் இதழ்களோ முத்தமிட அவளை நெருங்க, அவளோ சற்று விலக போராடியும் முடியவில்லை.. இதழ்கள் நான்கும் இணைய சிறு இடைவெளியே..
எங்கே முத்தமிட்டு விடுவானோ என்ற பயத்தில் நடுங்கிய அவள் இதழ்கள் இப்போது அவன் இதழ்களுக்குள் அடைக்கலம் ஆகி இருந்தது…
____________________________________________
“மீனாட்சி….” என்ற பெரிய சத்தம் அந்த அமைதியாக இருந்த இடத்தில், பெரிதாகத்தான் கேட்டது… ஆனால் சம்மந்தப்பட்டவளின் மூளையை தான் சென்று சேரவில்லை…
அருகில் இருந்த ஸ்ருதியோ “என்னடி கனவு கண்டுட்டு இருக்கியா?… மேம் கூப்பிடறாங்கடி..” என்று இடுப்பில் கிள்ள,
“ஆஆஆஆ மாடே.. ஏன்டி கிள்ளுன..” என்று இருக்கும் இடம் மறந்து அவளும் கத்த..
“மீனாட்சி அவுட்.. இர்ரெஸ்பான்ஸிபிள் இடியட்… பைனல் இயரும் வந்துடிச்சு இன்னும் பொறுப்பு வரல..” என்று அந்த பேராசியரின் சத்ததுக்கே மீனாட்சிக்கு நடந்தது ஓளரவுக்கு புரிந்தது…
ஸ்ருதியை அர்த்தப்பார்வை பார்த்தவள் வெளியேற.. விக்ரம் கௌரவ் இருவரும் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டனர்…
மீனாட்சி நேரே சென்றது, அவர்கள் வழமையாக அமரும் அந்த மரத்தடிக்கு தான்…
இந்த ஒரு வாரமாக அன்று கண்ட கனவின் தாக்கமே அவளுள் பரவிக்கிடந்தது.. கனவில் அவளை அணைத்து முத்தமிட்டவனின் முகமும் சரி அவன் உணர்வுகளும் சரி கனவென்றே நம்பமுடியாத அளவுக்கு அவளை ஆக்கிரமித்திருந்தது…
அவன் தான் அத்தனை துள்ளியமாக உணர்வுகளை அவளுக்கு கடத்தி இருந்தானே…
“யாரு அந்த மாங்கா… அழகா வேற இருந்தானே… டப்புனு கிஸ் அடிச்சிட்டான்… ஒரு வேள நம்ம எதிர்கால புருஷனா இருக்குமோ?…” என்று எண்ணம் ஓட..
மீண்டும் அவளே “இருந்தாலும் உனக்கு ரொம்ப தான் மீனு பேராசை.. உனக்கு போய் இப்படி ஒரு லட்டு ஹீரோவா??..” என்று அவளுக்கு பதில் கொடுத்துக்கொண்டாள்…
இவள் தனக்குள்ளேயே பேசிக்கொண்டிருக்க, இவளது எண்ணத்தின் நாயகனோ அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்…
பார்த்தவளுக்கு தன் கண்ணையே நம்ப முடியவில்லை.. கண்களை துடைத்து ஒரு முறை பார்த்தாலும் மீண்டும் அவனே…
மீண்டும் கனவுதான் காணுகிறோமா என்று கிள்ளியும் பார்த்துக்கொண்டாள்… ஆனால் அவனோ மறையவே இல்லையே…
நேரே அவளிடமே வந்தவன்.. “எக்ஸ்கியூஸ் மீ… இங்க மேத்ஸ் டிபார்ட்மென்ட் எந்த பக்கம்னு கொஞ்சம் சொல்ல முடியுமா??…” என்று அவன் வினவ, அவளிடம் பதிலே இல்லை… அவனையே பார்த்தது பார்த்தபடி அப்படியே தான் நின்றிருந்தாள் சிலை போல…
இரண்டு முறை கேட்டவனுக்குமே என்னடா இது என்ற யோசனைதான்… அவள் முன் கைகளை ஆட்டி கூட பார்த்துவிட்டான் ஆனால் அவள் உலகுக்கு தான் வரக்காணோம்…
சில வினாடிகளில் அந்த சிலைக்கு உயிர் கொடுத்தது என்னவோ அவள் நண்பர்கள் தான்…
ஸ்ருதியோ மீனுவின் மண்டையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்து கைகளை தட்டிக்கொள்ள.. சிலை உயிர்பெற்றிருந்தது…
ஸ்ருதியோ “எப்படி நம்ம டிரீட்மென்ட்…” என்று நண்பர்களை மிதப்பாய் ஒரு பார்வை பார்க்க.. அவர்கள் இருவரும் “தூஊஊ” என துப்புவதை போல் சைகை செய்திருந்தனர்…
“என்னடி ஆச்சு மீனு.. ஏன் அப்படியே நின்னுட்டு இருக்க?..” என்று கௌரவ் வினவ
“டேய் நான் கனவு ஒன்னு கண்டேன்னு உங்ககிட்ட சொல்லி இருந்தேன்ல.. அவர இப்போ இங்க நேர்ல கண்டேன் டா…”
“என்னடி உளறுற…” என்றான் விக்ரம்…
ஸ்ருதியோ ஏதோ புரியாத படத்தை பார்த்தவள் போல் “என்னங்கடா கனவுன்றிங்க.. அவருன்றிங்க.. ன்னா மேட்டரு…” என்றாள் கௌரவ் தோளில் கை குத்தியப்படி..
“அது ஒரு பெரிய காதல் கீதம் ஸ்ருதி.. நீ தான் வன் வீக்கா காலேஜ் வரலையே..” என்ற விக்ரம் மீனுவின் கனவினை சொல்ல..
“என்னாது கிஸ்ஸா… அடியேய் துரோகி.. என்ன கூப்பிடாம போய் இருக்கல.. இங்க உள்ள பிஸ்க்கோத்து பயலுகள எல்லாம் சைட் அடிக்க நான் வேணும்.. நல்ல அழகான ஆளுன்னதும் என்ன டீல்ல விட்டுட்டல்ல…” என்று கோபமாய் ஸ்ருதி வீர வசனம் பேச..
“அடியேய் எரும அது கனவுடி பக்கி…”
“அதெல்லாம் எனக்கு தெரியாது.. இன்னைக்கு மறுபடியும் தூங்குற.. என்னையும் கனவுல ஜொயின் பண்ணிக்குற.. எனக்கும் சூப்பர் பிகரா சேர்த்து கனவு காணுற…”
விக்ரமோ “அடியேய் எருமைங்களா கொஞ்சம் வாய மூடி தொலைங்கடி… பொண்ணுங்க மாதிரியா பேசுதுங்க.. பசங்க கூட தோத்து போய்டுவாங்க…” என்று அவர்களிடம் பேசியவன்..
கௌரவிடம் “மச்சான் உன்ன பக்கத்துல வெச்சிட்டே இந்த பக்கி இன்னொருத்தன பேசுது.. இந்நேரத்துக்கு நீ தூக்குல தொங்கி இருக்கனும்டா மானம் கெட்டவனே..” என்றவன் நக்கலுடன்…
கௌரவோ “ஏதோ பேசுறேன்னு புரியுது மச்சான் என்னனு தான் புரியல..” என்றவன் தன் காதலி ஸ்ருதியுடன் கை அடித்துக்கொண்டான்
“அட மாலகொரங்குகளா.. ஒரு மனிசன் என்ன ஷாக்ல இருக்கான்.. கனவுல கண்டவர நேர்ல பாத்தேன்னு சொல்லுறேன் ஒன்னாச்சும் அத பத்தி கேக்குதுங்களா??…” என்று மீனாட்சி தலையிலடித்துக்கொண்டது தான் மிச்சம்….
இப்படியே நாட்கள் வேகமாக நகர.. வேந்தன் அங்கே கணித பேராசிரியராக சேர்ந்து இரண்டு வாரம் கடந்திருந்தது…
கடந்த வாரத்தில் மீனாட்சி காதல் பித்து பிடித்து சுத்துகிறாள் என்றாள் மிகையில்லை…
“மச்சான் இன்னும் டூ வீக்ஸ்ல நமக்கு எக்ஸாம் முடிஞ்சி இங்க இருந்தே போக போறோம்.. என்ன பண்ண போற…”
“அதான்டி சுருதி டென்ஷனா இருக்கு.. இந்தாள் வந்ததும் தான் வந்தாரு.. முன்னவே வந்திருக்கலாமே.. இப்போ எனக்கு தான் கஷ்டம்… ஆள் வேற நல்லா இருக்காரு… அதுல அந்த கண்ணு வேற அநியாயத்துக்கு டாலடிக்கிதே.. என்னனு இவளுங்க கிட்ட விட்டுட்டு போறது மச்சி… ஒவ்வொருத்தி பார்வையும் சரி இல்ல.. அதுவும் அந்த மேத்ஸ் டிபார்ட்மென்ட் கழுதைங்க என்னமோ அவரு அவங்க ஆளுன்ற ரேஞ்சுக்கு பேசுதுங்க…”
“இது நியாயமான டென்ஷன் தான்.. பெட்டர் ஐடியா.. போறதுக்குள்ள ப்ரொபோஸ் பண்ணிடு மச்சி…”
“ப்ரொபோஸா???…”
“ஆமா அதுவும் சாதா ப்ரொபோஸல் இல்ல ரொமான்டிக் ப்ரோபோஸல்…”
“எப்படி மச்சி…”
“லெட்டர் எழுதிடு மச்சி… பழைய டெக்னிக் தான் பட் வேர்க்கவுட் ஆகும்… லாஸ்ட் டே இங்க இருந்து போகும் கொடுத்துட்டு போய்டலாம்..”
“நல்ல ஐடியா தான்… ஓகே எழுதுவோம்… எழுதுற எழுத்துல ரிஜெக்ட் பண்ணவே ரீசன் இருக்க கூடாது… அப்படி ஒரு லெட்டர் எழுதுறேன்…” என்று வீர வசனம் பேசி அங்கிருந்து சென்ற தோழியை பார்த்த ஸ்ருதிக்கு, நண்பி ஏதோ வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்க போகிறாள் என்று மட்டும் புரிந்தது…
அன்று மீனாட்சியின் பரீட்சையின் இறுதி நாள்… இந்த ஒருவாரத்தில் வீட்டில் அவள் வரைந்து வைத்திருக்கும் அவன் வரைபடத்திடம் காதலை சொல்லிப்பார்த்து.. அதனையே கதற வைத்திருந்தாள்…
பரீட்சைக்கு படித்தாளோ இல்லையோ அந்த கடிதம் எழுத இரவிரவாய் முழித்துக்கிடந்து ஒரு வழியாய் எழுதி முடித்திருந்தாள்…
பரீட்சையை அவசர அவசரமாக எழுதி முடித்தவள்… ஸ்ருதி விக்ரம் கௌரவ் மீவருக்கும் கண் காட்டி வெளியே செல்ல…
பத்து நிமிடத்தில் நால்வர் கூட்டணியும் அங்கே மரத்தடியில் கூடி இருந்தனர்…
விக்ரமோ “அடி லூசே கண்டிப்பா பண்ணி தான் ஆகணுமா.. அவரு வேற அசிஸ்டென்ட் ப்ரோபஸ்ஸர்.. மேனேஜ்மென்ட் கிட்ட கம்பளைண்ட் பண்ணா என்னடி பண்றது…”
“டேய் ஓரம் தீஞ்ச ஆப்ப வாயா, உன் நாரவாயால போகும் போதே இப்படி பேசுனேன்னு வையேன்.. இங்கயே சமாதி கட்டிடுவேன் பாத்துக்க..” என்று மீனாட்சி கோபத்தில் கொதிக்க..
ஸ்ருதியோ, “விடு மச்சி… அவன் தான் கேனயன்னு உனக்கு தெரியாதா?.. நீ டென்ஷன் ஆகாத, கூல் கூல்.. என்ன பேசணும்னு ஞாபகம் இருக்குல்ல..” என்று பேச்சை மாற்றி இருந்தாள்…
பாவம் விக்ரமோ “நான் அப்படி என்னடா சொல்லிட்டேன்” என்ற அப்பாவி லூக்கில் நிற்க.. அவன் காதருகில் குனிந்த கௌரவோ “நானே சும்மா தான நிக்கிறேன்.. உனக்கு என்ன?.. இந்த பக்கிகள தெரியாதா?.. ஒன்னு சொன்னா ஒன்பது செய்யும்.. சார் அடிக்காம அனுப்பி அவ உயிரோட வந்தா பாத்துக்கலாம்.. எதுக்கும் ஒரு குழிய தோண்டி வைப்போம்..” என்று சிரிக்க.. விக்ரமும் அவன் கூற்றில் சிரித்தான்..
என்னதான் நக்கல் பேசினாலும் தோழியின் ஆர்வம் புரியவே செய்தது ஆண்கள் இருவருக்கும்.. சொல்லாமல் தவிப்பதை விட சொல்லி ஒரு தெளிவுக்கு வரட்டும் என்ற எண்ணம் தான் ஆண்கள் இருவருக்கும்…
மீனாட்சி யாருக்கோ அழைப்பு விடுத்தவள்.. “என்னடா சார் எங்க இப்போ..”
அந்த பக்கமோ “இப்போ தான் மீனு சார் கிரௌண்ட் பக்கம் போனாரு.. ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் தான்.. அப்பறம் மீனு..” என்றவன் இழுக்க..
“என்னடா உன் ஆளு படம் தான.. வரஞ்சி கொண்டுவந்திருக்கேன் ஸ்ருதிகிட்ட இருக்கு வாங்கிக்கோ…” என்றவள் அழைப்பை துண்டித்திருந்தாள்..
“ஓகே போய்ட்டு வறேன்..” என்றவள் நண்பர்களை பார்க்க..
ஸ்ருதியோ “நானும் வர்றேனே மச்சான்..”
“இல்ல இல்ல.. உன்ன பார்த்தேன் அப்பறம் என்ன பேசணும்னு மறந்துடுவேன்… நீ இவனுங்க கூடவே இரு வந்துடுறேன்…”
“ஓகே ஓகே சென்று வா… வென்று வா..” என்று ஆசீர்வதிப்பது போல் கைகளை வைத்துக்கொண்டு ஸ்ருதி சொல்ல, பெண் சிங்கம் வேக நடையோடு கிளம்பி இருந்தது…
அங்கே வேந்தனோ தனியாக தான் அமர்ந்திருந்தான்… இங்கே வேலையில் சேர்ந்து ஒரு மாதம் கூட முடியவில்லை.. அதற்குள் எப்படி விட்டு செய்வது என்ற எண்ணம் தான்..
ஆனால் அவன் படிப்புக்கு இத்தனை நாளாய் உதவிய சரஸ்வதி இப்போது வெளிநாட்டுக்கு சென்று மேற்ப்படிப்பை தொடருமாறு சொல்லி இருக்க.. இவனுக்கோ என்ன செய்வது என்ற யோசனை.. இத்தனைக்கும் அவனுக்கு கல்வி உதவித்தொகை(ஸ்கோலர்ஷிப்) வேறு கிடைத்திருந்தது…
நண்பனும் விடாமல் போகச்சொல்லி தொல்லை தான் செய்கிறான்.. அதோடு இது அவனது கனவும் கூட.. ஆனால் ஏதோ தடுப்பது போல் ஒரு எண்ணம்… இப்படி பல யோசனைகளில் அமர்ந்திருந்தவனை ஒரு குரல் தடுத்தது… நிமிர்ந்து பார்க்க மீனாட்சி நின்றிருந்தாள்… அவனோ கேள்வியாக நோக்க..
“சார் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றாள்
“ஓகே சிட்..” என்றவன் எதிரில் இருக்கும் அமரும் வாங்கினை காட்ட, அவளும் அமர்ந்து கொண்டாள்…
“சார் நான் மீனாட்சி.. ஹோட்டல் மேனேஜ்மென்ட் பைனல் இயர் ஸ்டுடென்ட்..”
அவனோ “சொல்லுங்க மீனாட்சி” என்க
“ஐயோ இந்த வாய்ஸ்ல என் பேரே எனக்கு இனிமையா கேக்குதே.. அப்பா குமரேசா இன்னைக்கு தப்பிச்சிட்ட போ..”
“என்ன மீனாட்சி அமைதியாவே இருக்கீங்க.. என்னனு சொல்லுங்க.. ஏதாச்சும் ஹெல்ப் வேணுமா?..” என்றவனுக்கு இடம் வலமாய் தலையாட்டி பதில் கொடுத்தவள்.. கையில் வைத்திருந்த கடிதத்தை அவனிடம் நீட்டினாள்..
அவனோ யோசனையுடன் பிரித்து படிக்க தொடங்கும் முன்னரே அதிலிருந்ததை மனப்பாடம் போல் ஒப்பிக்க தொடங்கினாள் மீனாட்சி..
“அன்புள்ள பாரி வேந்தன் சாருக்கு… எல்லாருக்கும் பாரி எனக்கு மட்டும் பூரி… ரொம்ப யோசிக்காதீங்க செல்ல பேரு..” என்க அவனோ கடிதத்தில் இருந்து தலையை எடுத்து அவளை பார்க்க,
“அங்கேயே பாருங்க சார்.. நான் சொல்லி முடிச்சிடுறேன்.. என்னையே பார்த்தா உங்க கண்ணு என்ன டிஸ்டர்ப் பண்ணும்.. அப்பறம் சொல்ல வந்தத சொல்ல முடியாது ப்ளீஸ்…” என்க அவனுக்கு வந்த கோபத்துக்கு எழுந்தேவிட்டான்..
“சார் சார் ப்ளீஸ்.. முழுசா கேட்டுட்டு போங்க.. இந்த நாட்டுல பொண்ணுக்கு தைரியமா காதல சொல்லவுமா சுதந்திரம் இல்ல..” என்று பெண்ணியவாதம் சம்மந்தம் இல்லாத இடத்தில் பேச… வேந்தன்னுக்கோ சற்று சுவாரஸ்யம்.. என்னதான் பேச போகிறாள் என்று தான் பார்ப்போமே என்று மறுபடியும் அமர்ந்து கொண்டான்..
அவன் இருந்த குழப்ப மனநிலைக்கும் ஒரு மாற்றம் கூட தேவைப்பட்டது…
“உங்கள என் கனவுல தான் முதல்ல பார்த்தேன்.. கிஸ் எல்லாம் அடிசீங்க தெரியுமா?.. ஆனா நான் தான் குழப்பதுல இருந்ததால பீல் பண்ண முடியல… என்னடா வெக்கப்படாம இப்படி பேசுறாளேன்னு நினைக்கப்படாது.. எனக்கும் வெக்கம் வரும் கவலை படாதீங்க… வெக்கம் தன்னால் அருவியா கொட்டும்…” என்க
வேந்தன்னுக்கு கோபத்துக்கு பதில் சிரிப்பு தான் எட்டி பார்த்தது… எத்தனை தைரியம் இந்த பெண்ணுக்கு என்றும் எண்ணிகொண்டான்…
“நீங்க வேற ரொம்ப அழகா இருக்கீங்க… நான் இன்னைக்குதான் லாஸ்ட்டா இங்க வருவேன்… உங்கள இந்த காக்கா கூட்டத்துகிட்ட தனியா விட்டுடு போகவும் பயமா இருக்கு… நீங்க என்ன பண்ணுங்க.. நான் மீனாட்சியோட ஆளுன்னு ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்துட்டா.. உங்களுக்கும் டிஸ்டர்பன்ஸ் இருக்காது.. நானும் மடில நெருப்ப கட்டிட்டு இருக்க வேணாம்…”
“எனக்கு மட்டும் ஓகே சொன்னீங்கன்னு வெச்சுக்கோங்க… உங்கள தரைல நடக்க விடாம பாத்துப்பேன்… நான் நல்லாவே கேக் பேக் பண்ணுவேன் தெரியுமா??.. கேக் கடை திறக்குறேன்.. கார் வாங்குறேன்… அப்பறம் என்ன உங்கள பூப்போல பாத்துக்கிறேன்… அது மட்டுமில்ல.. நீங்க கையாள கூட சாப்பிட வேணாம்… நானே வாயாள ஊட்டிகூட விடுவேண்ணா பாத்துக்கோங்க.. இப்படி ஒரு பொண்ண மிஸ் பண்ணனுமான்னு யோசிச்சிக்கோங்க… இப்படிக்கு ப்ரியமுடன் உங்கள் அன்பு மீனு அலைஸ் மீனாட்சி..”
அவள் பேச்சு எல்லாம் எல்லை தாண்டி தான் இருந்தது.. ஆனால் குரலில் அந்த சாயல் இருக்கவே இல்லை… ஏதோ கடமைக்கு இதெல்லாம் ஒப்புவிக்க வேண்டும் என்ற ஒரு தொனி தான்..
தன் மீது இவளுக்கு காதல் என்று பெரிதாய் உள்ளே நுழையவில்லை என்று வேந்தனுக்கு புரிந்தது… வெறும் கிரஸ் அளவில் தான் என்றும் புரிந்தது…
அதனாலேயோ என்னவோ வேந்தன் சாதாரணமாகவே எடுத்துக்கொண்டான்…
“ஓகே மீனாட்சி… உங்களுக்கு என் மேல காதல் ரைட்…”
“இதத்தான சார் மூனு பக்கத்துக்கு மூச்சு பிடிக்க சொல்லி இருக்கேன்.. விடிய விடிய ராமாயணம் கதை தான் போலயே…. நல்ல வேள சீதைக்கு ராமன் சித்தப்பான்னு கேக்காம காதல்னாவது புரிஞ்சிச்சே…”
“ஹாஹா… மீனாட்சி யூ ஆர் சோ ஸ்வீட்.. அன்ட் யூனிக் பீஸ் டூ…”
“இவ்வளவு இங்கிலிஷ் வருது.. அதுல லவ் யூ டூ வரமாட்டேங்குதே சார்…”
“ஓகே நான் யாரையும் இங்க இப்போதைக்கு காதலிக்க மாட்டேன்.. போரின் போக போறேன்… நீங்க அதுக்காக பயப்பட வேணாம்.. உங்களுக்கு என் மேலயோ இல்ல வேற யார் மேலையோ லவ்னு ஒரு பீல் வந்தப்பறம் இந்த இன்ஷிடென்ட் நினைச்சி பாத்து வெக்கப்படாம இருங்க போதும்..” என்றவன் அங்கிருந்து செல்ல..
போகும் அவனையே குழப்பதுடன் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மீனாட்சி…
“என்ன இது நாம லவ்வ தான சொன்னோம்.. இந்தாளு லவ் வந்தப்பறம்னு சொல்லுறாரு… ஒரே குழப்பமா இருக்கே..” என்று எண்ணியப்படி மீனுவும் அங்கிருந்து சென்றிருந்தாள்…
இன்று வெவ்வேறாய் பிரியும் இவர்கள் உலகம்… இதற்கு பிறகு நடக்கும் சில நிகழ்வுகளால் பின்னாளில் ஒரே உலகமாய் மாறி ஜாலம் நிகழ்த்த காத்திருந்தது..
ஜாலம் தொடரும்….
_ஆஷா சாரா_
மீனு செம ப்ரோபோசல் வேற லெவல் 😂😂
Thank u sis❤❤
வேந்தனையே சிரிக்க vechidale 🤣🤣🤣
அடப்பாவி உன் ப்ரொபோஸல்ல தீயை வெக்க.. இப்படியொரு காதலை சொல்லி நான் பார்த்ததே இல்ல.. நீ வேற லெவல் தான் போ