Loading

 

ஜாலம் 04

 

பாரியின் வாகனமோ சாலையில் மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது.. அருகில் அமர்ந்திருந்தவளை சிறிதும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.. அதில் அவளுக்கு ஏக கடுப்பு..

 

அவளது காரை சாரதியை எடுத்து வர பணித்து, இவனுடன் வருவது கூட அவனிடம் பேசத்தானே.. இவன் என்னவென்றால் அவள் பேச்சை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டேன் என்கிறான்.. என்ற கோபம் உள்ளுக்குள் எரிமலையாய் வெடித்தாலும் அதனை காட்டிகொள்ளாமல்…

 

“பாரி.. நான் பேசிட்டே வறேன் நீங்க பதில் எதுவுமே சொல்லலையே..” என்ற திவ்யாவை நிமிர்ந்து பார்த்தான் வேந்தன்..

 

“ஏற்கனவே இத பத்தி ரொம்பவே பேசிட்டோம் திவ்யா.. இனியும் பேச என்ன இருக்கு..”

 

“அம்மாக்காக யோசிப்பீங்கனு எதிர்பார்த்தேன்..”

 

“மேம் உன் விருப்பம் பாரினு தான் சொன்னாங்க.. கம்பெல் பண்ணலயே திவ்யா…”

 

“ஆனா அவங்களுக்கு இது விருப்பம் தான்..” என்று அவள் சொல்லிகொண்டிருக்க சரியாக அவள் வீடும் வந்துவிட்டது..

 

வாகனத்தை நிறுத்தி அவள் இறங்குவதற்காக காத்திருந்தவன்,  “திவ்யா லிஷன், எப்பவுமே என் மனசு மாறாது… பெட்டர் உங்களுக்கான லைப வாழப்பாருங்க… மேம்கிட்டயும் நான் இதையே தான் சொல்லி இருக்கேன்..” என்றவன் அங்கிருந்து கிளம்பியிருந்தான்.

 

கோபமாய் வீட்டுக்குள் நுழைந்த திவ்யா கை பையை அங்கே இருந்த சோபாவில் எறியவும் மாடியில் இருந்து அவளது தாய் சரஸ்வதி இறங்கி வரவும் சரியாக இருந்தது…

 

“என்ன டென்ஷன் திவ்யா.. எதா இருந்தாலும் வீட்டுக்கு வெளிய விட்டுடு வரணும்னு தெரியாதா?..”

 

“என் லைப் பிரச்சனை மாம்.. இப்போவும் சைக்காட்ரிஸ்ட்டா தான் யோசிப்பீங்களா?..”

 

“இதான் நடக்கும்னு நான் உங்கிட்ட ஏற்கனவே சொல்லிட்டேனே திவ்யா..”

 

“ம்மா ப்ளீஸ் மா நீங்க சொன்னா பாரி கண்டிப்பா என்ன கட்டிப்பான்.. மாம் யூ நோ, ஹவ் மச் ஐ லவ் ஹிம்…”

 

“அவன் படிப்புக்கு ஸ்பான்ஸர் பண்ணது மட்டும் தான் நான்.. அதுக்காக அவன் லைப் டிசிஷனையும் நானே எடுக்க முடியாது திவ்யா…  நான் சொன்னா கண்டிப்பா செய்வான்னு சொல்லுறியே, அந்த நம்பிக்கைக்கு நான் நேர்மையா இருக்கும்ல..” என்றார் சரஸ்வதி..

 

 

“என்ன ஏமாத்திடீங்கல்ல.. என்ன ஏமாத்திடீங்க.. ஐ ஹெட் யூ.. ஐ ஹெட் யூ டு தி கோர்…” என்று அவள் அழ, அதற்கு மேல் ஒரு தாயாய் அவருக்கும் மனம் வலிக்கத்தான் செய்தது.. 

 

“யூ டிசேர்வ் எ பெட்டர் லைப் திவ்யா..” என்றவர் அவளை அணைத்துக்கொண்டார்..

 

“லீவ் மீ.. லீவ் மீ..” என்று அவரை உதறித்தள்ளியவள்  “எனக்கு தெரியும் என்ன பண்ணனும்னு.. பாரி தான் என் ஹஸ்பண்ட்.. இதுக்காக நான் எந்த எல்லைக்கும் போவேன்…” என்று கத்தியப்படி மேலே சென்ற மகளை பார்த்த அந்த தாய்க்கு மகளின் விருப்பம் புரியத்தான் செய்தது.. 

 

விருப்பத்தை தாண்டி அவளிடம் இருப்பது பிடிவாதம்… அதற்கு அவரும் ஒருவகையில் காரணம் தான்..

 

தான் பார்த்து வியந்த ஒருவனை பற்றி இவளிடம் பேசியது தவறோ என காலம் தாழ்ந்தே புரிந்தது…

 

அவருக்கும் அவன் என்றால் பரிபூரண சம்மதம் தான்.. இருந்தும் அவன் விரும்பாத போது தான் என்ன செய்திட முடியும்?… தாயாய் இல்லாமல் நடுநிலையாய் யோசிக்கவே அவர் மனம் உந்தியது.. 

 

_________________________________________

 

 

மீனாட்சியின் வீட்டில் இரவு உணவுக்காக சாப்பிட மேசையில் அமர்ந்திருந்தனர் நால்வரும்.. மகளும் அம்மாவும் மூஞ்சை தூக்கி வைத்து அமர்ந்திருக்க, இரண்டுக்கும் எதிலோ முட்டிகொண்டது என்பது வைதேகிக்கு புரிந்து போனது…  

 

“என்னடி ரெண்டு பேரும்  நீயா நானால போட்டி போடுற போல எதிரெதிர உக்காந்திருக்கீங்க.. அதிசயமாவுல இருக்கு.. எப்போவும் ஒட்டிட்டுல திரிவீங்க.. என்னாச்சு இன்னைக்கு..”

 

“பேசாம சாப்பாட போடுமா.. கண்ட கண்ட கேள்வி எல்லாம் கேட்டுகிட்டு.. யாரு எப்படி போனா நமக்கென்ன…” என்று மீனாட்சி பேச.. மகிழின் பார்வை அவளையே துளைத்தது..

 

“என்ன தாத்தா இந்த மீனு ஓவரா பண்ணுது.. டூ அவர்ஸா பேசாம புதுசா பனிஷ்மென்ட் வேற கொடுக்குது.. நான் அப்படி மோசமா ஒன்னும் பண்ணிடலயே.. சும்மா அவன் நோட்டுல  எழுதுன பக்கத்த எல்லாம் மட்டும் தான கிழிச்சு விட்டேன்.. இது பெரிய குத்தமா…” என்று மெல்லிய குரலில் அருகில் அமர்ந்திருக்கும் தாத்தாவிடம் முனுமுனுக்க..

 

அவளது மெல்லிய குரலின் லட்சணத்தில் அங்கே அமர்ந்திருந்தவர்களுக்கு பேசியவை தெளிவாய் கேட்கவும் செய்தது..

 

மீனாட்சி மகளை முறைத்ததும் குமரேசனை பார்த்த மகிழ் “மாட்டிகிட்டோம் பங்கு..”  என்று சொல்லி மெல்ல சிரித்தாள்..

 

“மகி.. வர வர உன் சேட்டை ரொம்ப ஓவரா போகுது.. பொண்ணு மாதிரியா நடத்துகிற நீ…  இன்னொருத்தரோட உழைப்ப அழிச்சிட்டு வந்திருக்க.. எவ்வளவு நாள் எழுதுன நோட் அதெல்லாம்.. ஒரு நாள்ல அழிச்சிட்டு வந்திருக்க… அந்த பையனுக்கு இன்னும் தான உன்மேல கோபம் கூடும்.. அந்த பையன்கிட்ட நீ மன்னிப்பு கேக்குற வர என்னோட பேசக்கூடாது…” என்று சொன்னவள் கோபமாய் அங்கிருந்து சென்றாள்…

 

எப்போதும் கண்டிப்பவள் தான் ஆனால் இந்தளவு கோபம் இருந்ததில்லை.. வழமையாக சிரிப்புடன் பேசும் தாய் இன்று கோபப்பட்டதும் தாங்கமுடியவில்லை மகியால்… கண்ணெல்லாம் கலங்கி விட்டது குழந்தைக்கு… அவளும் இறங்கி அம்மாவை தேடி சென்றாள்..

 

அங்கே அறையில் கவலையுடன் அமர்ந்திருந்த மீனாட்சி அருகில் சென்றவள்  “ஐ எம் சாரி மம்மி.. ஆர்வன் கிட்ட மார்னிங் சாரி கேக்குறேன்.. பேசு மம்மி.. இனி யார்கூடவும் சண்ட போட மாட்டேன்.. பிங்கி ப்ரோமிஸ்…” என்று தொண்டையில் இருவிரல்களை வைத்து அழுதபடி கேட்கவும்.. இவளுக்கும் அழுகை வந்துவிட்டது…

 

“நான் மீனுவோட சில்வண்டு இல்லையா இனிமேல்..” என்று பாவம் போல் கேட்க, அதற்கு மேல் கோபத்தை இழுத்து வைக்க முடியாமல் மகளை அணைத்துக்கொண்டாள் மீனாட்சி…

 

“என் சில்வண்டு இனி இப்படி பண்ணுமா?…”

 

“நோ மம்மி.. மகி குட் கேர்ள்..” என்று தாயின் கன்னம் இரண்டிலும் மென் முத்தம் வைக்க, அவளும் பதிலுக்கு முத்தத்தால்  குளிப்பாட்டினாள்..

 

“அம்மாவும் மகளும் கொஞ்சிக்கிட்டது போதும் வாங்க சாப்பிட…” என்று வைதேகி அழைக்க இருவரும் சாப்பிட சென்றனர்..

 

 

 

தனது அறையில் மீனாட்சி மகியை தூங்க வைத்துக்கொண்டிருக்க, உள்ளே வந்தார் வைதேகி…

 

“என்ன மீனு, மகி தூங்கிட்டாளா?… பாவம் புள்ள அழுதுடிச்சு… கொஞ்சம் அதிகமா தான் பேசிட்ட நீ என் தங்கத்த..”

 

” இப்போ தான் தூங்கினா மா…” என்று எழுந்து அமர்ந்தவள்..

 

“பின்ன என்னமா.. நோட்ட தானே கிழிச்சேன்னு சாதாரணமா சொல்லுறா.. இன்னொருத்தரோட உழைப்பு அதுனு அவளுக்கு புரியலயே.. அவ இப்போ பழகுற பழக்கம் தான் காலம் முழுக்க வரும்… அதோட அப்பா இல்லாம வளத்ததுனால தான் இப்படினு பேசுவாங்கமா.. நரம்பில்லாத நாக்கு என்ன வேணா பேசும்னு தெரியாதா.. இப்போ அவளுக்கு தப்போட ஆழம் புரிஞ்சிருக்கும் இனி இப்படி பண்ணமாட்டா…”

 

” சின்ன பொண்ணுடி அவ போக போக புரிஞ்சிப்பா… மகி ஏன் அப்பா இல்லாம வளரனும்.. அத பத்திதான் மீனு நானும் பேச வந்தேன்..” என்று வந்த விசயத்துக்கு வந்தார் வைதேகி..

 

“என்னமா என்ன விஷயம்..” என்று கேட்டவளுக்கும் விடயம் புரியத்தான் செய்தது…

 

“மதியம் தரகர் வந்திருந்தார்… வரன் ஒன்னு வந்திருக்காம்.. நாளைக்கு பாக்க வர்றாங்கலாம்..” என்றார் வைதேகி.. அவளிடம் மௌனம்..

 

“என்ன மீனு எதுவுமே சொல்ல மாட்டேங்குற…”

 

“என்ன சொல்லணும் மா… அதான் எப்பவோ பாருங்கனு சொல்லிட்டேனே.. மகிகிட்ட இனி எல்லாம் சொல்லி ஆகணும்.. இப்போவே அவன் நினைப்ப மாத்துனா தான் இல்லனா கஷ்டம்… கண்டிஷனுக்கு ஓகேனா வர சொல்லுங்கம்மா…”

 

“ஏண்டி உன் முகம் இப்படி இருக்கு… என்ன பிசையிது உன் மனசுக்குள்ள.. முகமே வாடிப்போடிச்சு.. பெத்த மனசு பதறுதுடி.. உனக்கு சம்மதம் தானே மீனு..” என்றார் கலக்கத்துடன்..

 

“சம்மதம் தான் மா… எதுவும் யோசிக்காம போய் தூங்கு…” என்று தாயை அனுப்பி வைத்தவள்.. அப்படியே மெத்தையில் சரிந்து விட்டதை பார்க்க, கண்களின் ஓரத்தில் கண்ணீர் அதுபாட்டுக்கு அழையா விருந்தாளியாய் வந்தது சேர்ந்தது…

 

_____________________________________________

 

 

வேந்தன் தான் வளர்ந்த ஆசிரமத்திலுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக பின்னேர வகுப்பு எடுப்பது வழக்கம்.. இன்றும் வகுப்புகள் முடிந்து வீட்டுக்கு வர இரவாகி இருந்தது…

 

வீட்டினுள்ளே நுழைய.. அவன் ஜெர்ரியோ கர்ம சிரத்தையாய் படித்துக்கொண்டிருந்தது… அவனுக்கே அதிர்ச்சி தான்…

 

“என்னாச்சு இன்னைக்கு.. எனக்கு அதிர்ச்சிலாம் காத்திருக்கும்னு தெரியாம போய்டிச்சே…”

 

“செம கோபத்துல இருக்கேன் போய்டுப்பா…”

 

“அப்போ நிஜமாலுமே கோபம் தான் போலயே.. அப்பான்னு எல்லாம் வாயில வருது… அப்படி என்ன கோபம் என் ஆரு பேபிக்கு… அப்படியே கோபத்த கன்டினியூ பண்ணுவீங்கலாம் அப்பா டென் மினிட்ஸ்ல ப்ரஷ் ஆகிட்டு வருவேனாம்…” என்று உள்ளே சென்றவன்.. சொன்னபடி பத்து நிமிடத்தில் வந்திருந்தான்..

 

 

கூடவே மகனுக்கென்று வார்த்த மசாலா தோசையுடனும் வந்து மகன் அருகில் அமர்ந்தவன்… அவனுக்கு ஒரு வாய் ஊட்டிவிட்டபடி  “இப்போ சொல்லுங்க என்ன கோபம் என் ஜெர்ரிக்கு…”

 

“எல்லாம் அந்த மகி லூசால வந்ததுப்பா..” என்றதும் வேந்தன் முறைக்க..

 

“ஓகே ஓகே அந்த மகியால வந்தது போதுமா?..” என்றான் தந்தையின் முறைப்பின் பொருள் உணர்ந்து…

 

“அப்படி என்ன பண்ணா மகி பேபி…” என்றான் வேந்தன் சிரித்தபடி…

 

வேந்தனுக்கு மகியை தெரியும்.. அதுவும் தினம் தினம் மகனின் வாயிலிருந்து வரும் பெயராகிற்றே…  ஆனால் நேரில் பார்த்துக்கொண்டதில்லை…

 

அவள் சேட்டைகளை ஆர்வன் வாயிலிருந்து அடிக்கடி கேட்பதால் அவள் மீது சிறு பாசமும் எழுவதுண்டு…

 

“இன்னைக்கு நானும் என் கேங்கும் நின்னுட்டு இருந்தோமா…”

 

“பர்ஸ்ட் ஸ்டான்டெட்ல எல்லாம் கேங்காடா உங்களுக்கு… ரொம்ப முன்னேற்றம் தான்..” என்றான் வேந்தன் புன்னகையுடன்..

 

“குறுக்க பேசாதப்பா…”

 

“ஓகே ஓகே பேசல…” என்றவன் பேச்சினூடே மகனுக்கும் ஊட்டி தானும் உண்டு முடித்திருந்தான்…

 

“இன்னைக்கு நானும் என் கேங்கும் நின்னுட்டு இருந்தோமா… அப்போ மகி நடந்து வந்தா.. நான் என் பென் எழுதலனு ஊதினேனா.. மை அவ டிரஸ்ல பட்டுடிச்சு…” என்று சொல்ல வேந்தனோ மகனை தீர்க்கமாய் பார்க்க..

 

“ப்ரோமிஸ் பா.. தெரியாம தான் பட்டிச்சு… ஆனா அதுக்கு அவ என் நோட்ல உள்ள எழுதுன பேஜ் எல்லாம் கிழிச்சிட்டா… அதான் இப்போ எழுதுறேன்…” என்றவன் சோகமாக சொல்லி முடிக்க

 

“அச்சச்சோ மகி பண்ணது தப்புதான்.. பட் நீ பண்ண மிஸ்டேக்குக்கு சாரி கேட்டியா ஆரு முதல்ல…”

 

“இல்லப்பா நான் தெரியாம தான  பண்ணேன்.. எதுக்கு சாரி..”

 

“நீ தெரியாம பண்ணன்னு அவளுக்கு தெரியாதில்லையா? சோ நீ  எக்ஸ்பிளைன் பண்ணி இருக்கனும் தான…”

 

“எஸ் ப்பா..”

 

“ஓகே.. நாளைக்கு மகி கூட பேசி சமாதானம் ஆகிகோங்க.. இப்போ தூங்கலாமா?…”

 

“எழுதணுமே..” என்று சோகமாய் கண்களில் தூக்கத்தோடு வினவிய மகனை பார்க்க பாவமாய் இருந்தது அவனுக்கு..

 

“இட்ஸ் ஓகே கண்ணா.. அப்பா மிஸ்கிட்ட பேசுறேன்.. தெரியாம கிழிஞ்சிடிச்சு.. கொஞ்சம் கொஞ்சமா ஆரு எழுதி பினிஷ் பண்ணிடுவான்னு சொல்லிக்கலாம் சரியா??..”

 

“ஓகேப்பா… லவ் யூ..”  என்று வேந்தனை அணைத்துக்கொள்ள.. மகனை அப்படியே  கைகளில் அள்ளியவன்.. சமையலைக்கு சென்று கையை கழுவிகொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டான்…

 

 

சிறிது நேரத்துக்கெல்லாம் மகன் உறக்கத்தில் ஆழ, வேந்தன் எண்ணம் எல்லாம் அந்த நாளின் ஆச்சரியங்களை அணிவகுத்தது…

 

ஏன் தன்னை ஒருத்தர் ஒருவருடம் பார்க்க விரும்பவில்லை என்ற கேள்விக்கு இன்று பதில் தெரிந்துவிட்டது… ஆனால் இப்படி இவளாக இருக்கும் என்று அவன் எண்ணவேயில்லை…

 

“பயப்படுற ஆளா இவ… அன்னைக்கு அந்த லெட்டர படிச்ச எனக்கே வெக்கம் வந்திச்சு.. அப்படி ஒரு லெட்டர அசிஸ்டன்ட் ப்ரோபஸ்ஸர்னு கூட பாக்காம அவ்வளவு தைரியமா வந்து கொடுத்தவளுக்கு இப்போ பயமாம்…”  என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டவனுக்கு அன்றைய நாளின் எண்ணம் மனதில் படமாய் ஓடியது…

 

ஒரு சுவரஷ்ய மனநிலையில் அவன் அந்த சம்பவத்தை எண்ண.. அங்கே விட்டதை பார்த்து படுத்திருந்த மீனாட்சியோ நாளை இதை மறுபடியும் எண்ண முடியுமா என்ற வலியுடன் மீட்டிப்பார்த்தாள்….

 

அவர்களது வர்ணஜாலம் ஆரம்பித்த புள்ளி.. எட்டு வருடங்களின் முன்…

 

 

ஜாலம் தொடரும்…

 

 

                        _ஆஷா சாரா_

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. கல்லூரி படிக்கிறப்ப காதல சொல்லிக்கிட்டு வாங்க அப்ப சேர முடியாமல் பிரிந்து இப்ப ஆளுக்கு ஒரு குழந்தையோட தனியா நிக்கிறாங்களா??

      1. Author

        Thank u sis ❤❤❤❤

        இல்லையே 🤭🤭🤭 மீனு மட்டும் தான் லவ் சொல்லுவா…

        போக போக ஸ்டோரி புரியும் daa… 😍😍😍