Loading


 

ஜாலம் 01

காலையிலேயே அந்த வீடு பரபரப்பாய் தான் இருந்தது.. கடுகு ஒருபக்கம் வெடிக்க, அடுத்து வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு தாளித்தவர்.. அடுத்த அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து இன்னொரு பக்கம் மகளுக்காக பூரி என தனியாளாய் அந்த சமையலறையில் சுழன்றுகொண்டிருந்தார் வைதேகி…

 

வைதேகி அந்த வீட்டின் அரசி.. குமரேசனின் அன்பு மனைவி.. இன்றோ கோபக்கார மனைவியாய் தான் சமையலறையில் நின்றிருந்தார்.. காரணம் அவர் மகள் இத்தனை நேரமாகியும்  இன்னும் எழ வில்லை என்பதே..

 

“அடியேய் இப்போ நீ எழுந்துகல.. பூரிகட்டதான் உள்ள வரும்..” என்று மகள் அறையை பார்த்து கத்த.. பதில் தான் வரவில்லை… அதில் மேலும் கோபமானவரின் பார்வை கணவனிடத்தில் திரும்பியது…

 

“ஏங்க… இப்படி உக்காந்தா ஆச்சா.. அவள ஒருவார்த்த என்னனு கேளுங்க..” என்றவருக்கும் தெரியும் இவரிடமிருந்து மகளுக்கு எதிர்ப்பு கிளம்பாதென்பது..

 

“விடுமா.. இன்னைக்கு ஒரு நாள் தான அவளுக்கு லீவு.. பாவம் தூங்கட்டும்..” என்றார் அவர் மனைவியின் முறைப்பையும் மீறி…

 

“அதுக்குனு பத்து மணிவரை தூங்குவாளா உங்க பொண்ணு.. போற எடத்துல என்ன தான் குத்தம் சொல்லுவாங்க, உங்கள இல்லை..” என்றார் முறைத்தபடி.. அந்த பார்வையில் எங்கே அவர் கணவர் பதில் பேச…

 

“அவ மட்டும் கெட்டது பாத்தாதுனு என் பேத்தியையும் இப்பவே கெடுக்குறா… சரியான கும்பகர்ணி..” என்று கோபத்தில் கடுகாய் வெடித்துக்கொண்டு போனவரின் பேச்சு தன்னால் நின்றது… காரணம் அவர் மகள் தான் பின்னிருந்து அவரை கட்டி இருந்தாளே…

 

கூடவே அவளை போல குட்டி போர்வையால் தன்னை சுற்றியப்படி அவள் ஜெராக்ஸும் வந்து, அவள் உயரத்துக்கு வைதேகியின் காலை கட்டி கொண்டாள்… அதன் பின்னரும் எங்கே அவர் கோபம் செல்லுபடியாக…

 

“என்ன மீனு இது… இத்தன மணி வரைக்குமா தூங்குவ.. பாரு இவளும் உன்ன போலவே பண்ணுறா..  டெய்லி இதே அக்கப்போரு..  இவள எழுப்பி ஸ்கூல் அனுப்புறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது.. இப்படி தூங்கினா எப்படிடி?…”

 

“அதெல்லாம் என் பொண்ணு என்ன போலவே படிப்புல புலிமா.. யூ டோன்ட் ஒர்ரி..” என்று தாயிற்கு முத்தமொன்றை லஞ்சமாக கொடுக்க..

 

அவரோ அவள் புறம் திரும்பி “யாரு உன்ன போலத்தான.. நீ படிச்ச லட்சணம் தான் எங்களுக்கு தெரியுமே.. படினு சொன்னா புக்லயே தூங்குற ஆளாச்சே நீ.. அதுவும் ஏன் படிக்காம தூங்குறனு கேட்டுட்டா போதும், தூங்கவே இல்லனு சாதிக்கிறதும் இல்லாம படிச்ச பேஜ்ஜ காட்டவானு சண்டைக்கு வர்ற ஆள் தானடி நீ…” என்று அவள் வண்டவாளத்தை எல்லாம் நேரம் பார்த்து  பிட்டு பிட்டு வைத்தார் அந்த தாய்க்குலம்..

 

“ஹி ஹி மம்மி.. பொண்ணு முன்னால மானத்த வாங்காம போ போய் எங்களுக்கு காபீ போடு.. சட்டுனு குளிச்சிட்டு வரோம்..” என்றவள்  முன்னே நடக்க, அந்த பெரிய மனுஷியும் அவள் பின்னே சென்றாள் வால் பிடித்தபடி…

 

போகும் அவர்களையே பார்த்து கொண்டிருந்த வைதேகிக்கு அதுவரை இருந்த நிலை மாறி கண்களில் கண்ணீர் உருண்டோட, குமரேசன் அவரை ஆறுதலாய் தோளோடு அணைத்துக்கொண்டார்…

 

“ஏங்க நமக்கு மட்டும் இப்படி.. அவ வாழ்க்கை இப்படியே போய்டுமாங்க??..” என்றார் கவலையாக..

 

“நீ கவலை படாதமா..  நானும் பல இடத்துல விசாரிச்சிட்டு தான் இருக்கேன்.. மாப்பிள்ளை சீக்கிரம் கெடச்சிடுவாங்க.. தரகர் வர சொல்லி இருக்கார் போய் பாப்போம்.. நல்லதாவே நடக்கும்..”

 

“சும்மாவே ஒரு பிள்ளையோட கட்டிக்க யாரும் வரமாட்டாங்க.. அப்படியே வர்ற ஒன்னு ரெண்டு பேரும் இவ போடுற கண்டிஷனுக்கு ஓகே சொன்னாதான் அதிசயம்… என்னவோ போங்க எனக்கு மனசே விட்டுப்போச்சு… இப்போவே இருபத்தெட்டு வயசாச்சு இவளுக்கு..”

 

“இவ்வளவு நாள் கல்யாணமே வேணான்னு சொன்னவ இப்போ ஓகே சொல்லி இருக்கான்னா அது முன்னேற்றம் தானமா… சீக்கிரம் நம்ம பொண்ணுக்கு கல்யாணம் நடக்கும் நீ கவலை படாத..”

“எப்படிங்க கவலை படாம இருக்குறது.. மகிழ பாக்குறப்போ எல்லாம் நெஞ்சுக்குள்ள யாரோ அழுத்துற போல வலிக்குதுங்க..” என்றவர் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டார்…

 

“நீ டென்ஷன் ஆகாதமா நான் பாத்துக்கிறேன்…” என்ற கணவனின் பேச்சில் அமைதியாக சமையலறைக்குள் நுழைந்தார்…

 

மகளை பற்றிய கவலையே, அந்த மூத்த தம்பதியினர் மனதளவில் உடைய பெரிதும் காரணமாகும்… வேறு சில காரணங்களும் இருக்கத்தான் செய்தது…

 

வைதேகி குமரேசன் தம்பதியினரின் மகள் தான் இந்த மீனாட்சி அம்மாள்… வயது இருபத்தெட்டு.. பேத்தி மகிழ்விழி வயது ஆறு..

குமரேசன் அவர் தாயின் மேலுள்ள அதீத பாசத்தினால் அவர் பெயரை தான் மகளுக்கு சூட்டினார்…

பாவம் அந்த பெரிய மனிதர், அதற்காக  இத்தனை வருடத்தில்  தினம் தினம் மீனுவின் வாயில் அரைபட்டுக்கொண்டு தான் இருக்கிறார்…

 

இவர்களது குடும்பம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தது… குமரேசனின் ஓய்வூதியமும் மீனுவின் வருமானமும் தான் ஓரளவுக்கு குடும்பத்தை சிக்கலில்லாமல் நடத்த உதவுகிறது.. அதிலும் வைதேகியின் சேமிக்கும் குணம் ஓரளவுக்கு கடன் என்று போகாதபடி பார்த்துக்கொள்கிறது…

 

 

அங்கே அடித்து பிடித்து அம்மாவும் மகளும் ஒருவழியாய் தயாராகி வெளியே வர.. சாப்பாடு மேசையில் தயாராக இருந்தது…

 

மீனுவோ குழம்பை ஒரு முறை வாசம் பிடித்து மேசையில் அமர்ந்து கொண்டவள் பக்கத்தில் அமரும் சத்தம் கேட்காததால் திரும்பி பார்க்க, அவள் குட்டி ராட்சசியோ அவளை முறைத்து கொண்டிருந்தாள்..

 

அந்த பார்வையின் காரணம் புரிய.. அவளை கையில் அள்ளிக்கொண்டவள் தன்னை போல் அவளையும் குழம்பை வாசம் பிடிக்க வைத்து, அருகில் அமர வைத்தாள்…

 

“அதென்னடி முளைச்சு மூனு இலை விடல, உனக்கு இப்போவே இவ்வளவு பிடிவாதம்..”

 

“அதெல்லாம் உன்கிட்ட இருந்து வந்தது மீனு… ஹவ் டு ஐ நோ?..” என்று உன் மகள் நான் என்பதை உறுதிப்படுத்தி அவள் வாயை அடைத்திருந்தாள் மீனுவின் குட்டி ராட்சசி…

 

மகளுக்கென இட்லியை பரிமாறியவள் தனக்கு பூரி ஒன்றை வைத்துக்கொண்டாள்..

 

பூரியை பார்த்ததும் எப்போதும் போல  இதழ்கள் விரிந்து கொண்டது.. கூடவே “பேர பாரு பாரி பூரின்னு..” என்ற அவள் குரலே அவள் காதில் ஒலித்தது…

 

“மீனு.. கனவுக்கு போய்டியா?.. இட்லி வை மேன்..” என்ற சில்வண்டின் குரல் தான் அவளை நிஜ உலகுக்கு அழைத்து வந்தது…

 

இனிய கனவு கலைந்த கோபத்தில், “அதான் உனக்கும் ரெண்டு கை இருக்குலடி.. எடுத்து வெச்சிக்க வேண்டியது தான…” என்றவளது கரமோ பேச்சுக்கு நேர்மாறாய் மகள் தட்டில் இட்லியை வைத்தது…

 

“உனக்கும் தான் இருக்கு.. நான் சின்ன பொண்ணு யூ நோ? எனக்கெப்படி எட்டும்…” என்றாள் கை தொட்டு விடும் தூரத்தில் இருந்த இட்லி பாத்திரத்தை கண்ணால் காட்டி வேண்டுமென்றே…

 

“அநியாயம் டி இதெல்லாம்.. வாய் மட்டும் எட்டூருக்கு நீளுது.. கை நீளாதாக்கும்…”

 

“டைம் இல்ல டைம் இல்ல..” என்று தாயை மிதப்பாய் ஒரு பார்வை பார்த்தாள் மகிழ்விழி..

 

 அதன் பின் என்ன அம்மாக்கும் மகளுக்கும் செல்ல சண்டைகளுடன் சாப்பாட்டு வேளை முடிய, டிவியில் மூழ்கினர் இருவரும்..

 

“அடியேய் சவுண்ட குறையேன்டி.. பக்கத்துவீட்டு பாட்டி வந்து சொல்லிட்டு போறாங்க… உங்க ரெண்டு பேரு அழிச்சட்டியமும் எல்லை மீறி தான் போகுது..”

 

“யாரு அந்த கெழவியா?.. அதுக்கு வேற வேல இல்லை.. இரு வறேன்…” என்று எழுந்தவள் கையில் எதையோ எடுத்துக்கொண்டு சண்டைக்கு செல்ல, அவள் அம்மா வைதேகியும் சரி,  மகள் மகிழ்விழியும் சரி ஒரு பொருட்டாக கூட அவளை மதிக்கவே இல்லை… தினமும் நடக்கும் கூத்து தானே இதெல்லாம்… இந்த விடயத்தில் மட்டும் மகிழ் தாயை தொடர்வதில்லை, அவளுக்கே சலித்து விட்டது போலும்…

 

 

“என்ன ஸ்ரேயா.. வாய்கொழுப்பு கூடிடிச்சா?..  சத்தம் போடுறத பத்தி நீ பேசுற பாத்தியா?.. அத தான் தாங்கிக்க முடியல..” என்று பேசியபடி அவர்களது கம்பவுண்டுக்குள் அசால்ட்டாக ஏறி குதித்தது உள்ளே செல்ல..

 

“வாடி அம்மாளு… யாருக்கு வாய் ஜாஸ்தி… அங்க மட்டும் என்ன கம்மியாவா இருக்கு..” என்று அவர் கழுதை சிலுப்பிக்கொள்ள..

 

“அப்படி கூப்பிடாதனு சொன்னாலும் வெறுப்பேத்துறல்ல நீ.. உனக்கெல்லாம் அந்த காலத்துலேயே ஸ்ரேயானு பேர் வெச்சிட்டாங்கன்னு கொழுப்பு வேற ஒன்னுமில்ல…”

 

“அதுக்கெல்லாம் ஒரு யோகம் வேணும்டி…”

 

“யோகத்துக்கு என்ன குற அதெல்லாம் நல்லா தான் இருக்கு.. மீனாட்சினு கூப்பிடலாம்ல.. அம்மாள ஏன் விடாம தொங்குற… எல்லாம் என்ன பெத்த தெய்வத்தோட சூழ்ச்சி..” என்றவள்  அவர் அருகில் அமர்ந்து எதையோ மோப்பம் பிடிக்க…

 

உடனே பக்கத்தில் வைத்திருந்த மூடிய டப்பாவை  பின் பக்கம் தள்ளி மறைத்து வைத்தார் ஸ்ரேயா பாட்டி….

 

“அடடே அங்க இருக்கா..” என்றவள் அதனை எடுத்து நிமிடத்தில் காலி செய்தவள்.. சப்புக்கொட்டியபடியே “செம போ உன் அதிரசதுக்கு மட்டும் நான் அடிமை… சும்மா சொல்லக்கூடாது பியூட்டி வழமை போல கலக்கிட்ட..” என்று அவர் கன்னத்தை கிள்ளினாள்…

 

“அது என் பேரனுக்கு வெச்சது..” என்றவர் கோபமாக சொல்ல..

 

“அந்த தடிமாட்டுக்கு அதிரசம் ஒன்னு தான் குறை.. கழனி தண்ணிய ஊத்து ஆர்வமா குடிப்பான்…”

 

“அது யார்டா என்னபத்தி புகழ்ந்து பேசுறது…” என்றபடி அங்கு வந்தான் சற்று முன்  ஸ்ரேயா பாட்டியால் சொல்லப்பட்ட அவர் பேரன் கௌரவ் கிருஷ்ணா..

 

“வாடா உடனே மூக்கு வேர்த்துடுமே உனக்கு.. போ போய் அந்த பேன போடு முதல்ல.. வீடு கட்ட சொன்னா நெருப்பெட்டி சைஸ்ல கட்டி வெச்சிருக்காங்க..” என்றாள் ஓரகண்ணால் ஸ்ரேயா பாட்டியை பார்த்து கொண்டே…

 

அவரோ மூக்கில் காத்து விட்டுக்கொண்டிருந்தார்… இருக்காதா பின்ன, அந்த பெரிய இரட்டை அடுக்கு மாடி வீட்டை போய் அப்படி சொன்னால் சும்மா இருப்பாரா?.. அதுவும் அவர் கணவர் பார்த்து பார்த்து கட்டிய வீடாகிற்றே பொங்கி எழுந்துவிட்டார்..

 

“அடியேய் எடுபட்ட சிறுக்கி… என் மாமன் எனக்காக பார்த்து பார்த்து கட்டுன கோட்ட இது.. இத போய் அப்படி சொல்லுறியா?..” என்றவர் கையில் இருந்த அவரது வெற்றிலை பெட்டியால் நங் என்று தலையில் ஒரு அடி வைத்தார் அவளுக்கு…

 

“ஹி ஹி வலிக்கலயே.. வலிக்கலயே.. அடுத்த வாட்டியாச்சும் வலிக்கிற போல அடி கிழவி..” என்று அவர் கன்னத்தை பிடித்து இழுத்தவள் “மிச்ச அதிரசத்த அந்த தடியனுக்கு கொடுத்துடாம எடுத்து வை நாளைக்கு வறேன்…” என்றவள் நிற்காமல் ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டாள்…

 

“சாப்பிடுவடி சாப்பிடுவ.. நாளைக்கு வந்தீனா உன் கால ஒடச்சு அடுப்புல வைக்கிறேனா இல்லையான்னு பாரு..”

 

“அதையும் பாக்கலாம் கெழவி…” என்றவளின் குரல் மட்டுமே பதிலாய் வந்தது…

 

“ஏன் பாட்டி அவளுக்காக தான  இதெல்லாம் செய்ற நீ.. அத உன்கையாலேயே கொடுத்தா தான் என்னவாம்.. எப்போ பாரு அவகிட்ட ஒரண்ட இழுத்துட்டே தான் இருப்பியா?…”

 

“அடப்போடா கூறுகெட்டவனே.. இதெல்லாம் உனக்கு புரியாது.. பாசம் எல்லாம் யாருமேலையும் காட்டலாம் ஆனா  உரிமை நமக்கானவங்ககிட்ட தான் வரும்… அவளுக்காக தான் பண்ணேன்னு அவளுக்கும் தெரியும் ஆனா காட்டிக்க மாட்டா.. எனக்கும் அப்படியே பழகிடிச்சு.. அதெல்லாம் பொண்ணுங்களுக்கே உரிய இயல்பு, உரிமைய உரிமையா எடுத்துப்போம்…” என்று அவள் விட்டு சென்ற பொருளை கையில் எடுத்தவர்

 

“இத பாத்தியா?…” என்று கையை காட்ட.. அதிலோ அவர் மூட்டு வலிக்கான மருந்து இருந்தது…

 

“மூட்டு வலி மருந்து முடிஞ்சி ரெண்டு நாள் ஆகுது உங்கிட்ட சொல்லலாம்னு இருந்தேன்.. அவளே வாங்கிட்டு வந்துட்டா பாத்தியா?… அதான் அவ.. அவ மனசுக்கு அவ நல்லா வாழுவா…” என்றார் நிறைந்த மனதுடன்…

 

“இந்த பொண்ணுங்கள புரிஞ்சிக்கவே முடியலப்பா… நேர்ல பார்த்தா நீயா நானான்னு அடிச்சிக்க வேண்டியது.. போனப்பறம் பாசத்தை பொழிய வேண்டியது.. ஸ்ஸபா..” என்றவன் எப்போதும் போல சலித்துக்கொள்ள…

 

“பேசினது போதும் காலைல வேலைக்கு போகும்போது அதிரசம் தறேன் மறக்காம கொண்டு போய் குடு… அப்பறம்..” என்றவர் மேலும் ஏதோ சொல்லவர, கை நீட்டி தடுத்தவன்..

 

“அதான் தெரியுமே எனக்காக கொண்டுவந்தேன் வேணும்னா எடுத்துக்கோன்னு சொல்லி குடுக்கணும்… அதான..” என்றான் அவரை நன்கு உணர்ந்தவனாய்..

 

“பரவாயில்ல என்னோட சேர்ந்து உனக்கும் அப்பப்போ அறிவு வேலை செய்யிது..” என்றவர் எழுந்து உள்ளே செல்ல..

 

“எதே..” என்று வழமை போல் அதிர்ந்து நிற்பதே இவன் முறையானது…

 

___________________________________________

 

இரவு நெடு நேரமாகியும் தீவிரமாக தனது மடிக்கணினியில் வேலை செய்தபடி இடை இடையே தனது தொலைபேசியை பார்த்து கொண்டிருந்தான் வேந்தன்… ஆனால் அவன் எதிர்பார்த்த அழைப்பு தான் வந்த பாடில்லை…

 

“ச்சே..” என்று அதிருப்தியை வெளிப்படுகியவனது கரங்கள் வழமை போல் பின் கழுத்தை வருட, கீழிதழ்களோ பற்களால் கடித்து உள்ளிழுக்கப்பட்டது.. கூடவே அந்த நீல நிற விழிகளுக்குள் சிறு அலைப்புறுதல்…

 

மனமோ செய்ய வேண்டாம் என்கிறது.. மூளையோ சரி பிழையை ஆராய்ந்து செய் என்கிறது… இரண்டுக்கும் நடுவே பெரிய போராட்டதுக்கு மத்தியில் அவன்… இன்று நேற்று என்றில்லை கடந்த சில வருடங்களாகவே இதே போராட்டம் தான்.. மீண்டு வருகிற வழி தான் புரியவில்லை…

 

அப்படியே மடிக்கணினியை மூடி கண்ணில் இருந்த கண்ணாடியை கழற்றி யோசனையில் அமர்ந்தவனது வயிறோ, தான் ஒருவன் இருப்பதை ஞாபகப்படுத்த, எழுந்து சமையலறையை நோக்கி நடைபோட்டான்….

 

அங்கே சமையலறையில் அதது வைக்கப்பட்ட இடத்தில் அவ்வளவு நேர்த்தியாக, அத்தனை சுத்தமாக இருந்தது அவன் கைவண்ணத்தில்…

 

நேரம் பார்க்க அதுவோ இரண்டில் பல்லை இளித்தது.. நேரே சென்று குளிர்சாதனபெட்டியை திறந்தவன் என்ன இருக்கிறது என்று தேட, தோசை மாவும் பகல் மீதமான சாம்பாரும் இருந்தது…  ஆனால் அவன் இருந்த மனநிலைக்கு தோசை சுட்டு சாப்பிடவெல்லாம் மனதில்லை..

 

சோர்வாக திரும்பி செல்ல எத்தனித்தவனது மனது எதையோ எடுத்து கொடுக்க.. சாப்பாட்டு மேசையருகே தன்னால் அவன் கால்கள் சென்றது…

 

அங்கே மேசையில் இருந்த அணிச்சலை(கேக்) பார்த்தவனது கண்களிலோ மின்னல்.. அங்கே மேசையில் அமர்ந்து அதனை வாயில் வைத்ததுதான் தாமதம் எப்போதும் போல அந்த சுவையில் கண்கள் தன்னால் மூடிக்கொண்டது…

 

சற்று முன் இருந்த அலைப்புறுதல் தன்னால் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது… அப்படி ஒரு காதல் அவனுக்கு அதன் மீது.. உலகிலே அவனுக்கு மூன்றாவது காதல் அது தான்…

 

அவன் பாரி வேந்தன்.. வயது முப்பத்து இரண்டு.. கணிதத்தில் முனைவர் பட்டம் (டாக்டரேட்) பெற்ற, பல்கலைக்கழக கணித பேராசிரியர்…

 

படிப்பு என்றால் புத்தகத்திலேயே தூங்கும் மீனுவும்.. இந்த அதி மேதாவி வேந்தனும் நேர்கோட்டில் சந்தித்தால்…. வர்ணஜாலம் ஏதேனும் நிகழ கூடுமா???….

                           

ஜாலம் தொடரும்…..

                 

                      ..ஆஷா சாரா..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
51
+1
72
+1
5
+1
5

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. Interesting sis.. மீனு…அம்பாள்🤣😂 இந்த குழந்தை யாரோடது..