Loading

மோனிஷா தன் ஆஃபீஸில் அந்த மாத வருவாய் கணக்கை பார்வையிட்டுக் கொண்டிருக்க, அறைக்கதவு தட்டப்பட்டது.

 

 

“யேஸ் கம் இன்…” என மோனிஷா அனுமதி அளிக்கவும் தன் அழுத்தமான காலடிகளுடன் உள்ளே நுழைந்தவனை நிமிர்ந்து பார்த்த மோனிஷா, “என்ன ஏ.சி.பி சார்… கேஸை வாப்பஸ் வாங்க சொல்ல வந்தீங்களா? அந்த பார்த்தி கிட்ட எவ்வளவு லஞ்சம் வாங்கினீங்க?” என எடுத்ததுமே நக்கலாகக் கேட்கவும் அவளின் எதிரில் நின்றவன் தன் சன் க்ளாஸைக் கழற்றி விட்டு மோனிஷாவைப் புரியாமல் நோக்கினான்.

 

அதே சமயம் மோனிஷாவும் அவனின் விழிகளைத் தான் புருவம் சுருக்கிப் பார்க்க, சரியாக அங்கு வந்த சஞ்சய் நிலைமையைப் புரிந்துகொண்டு, “ஐயோ மேடம்… இவர் ஏ.சி.பி இல்ல… அவரோட அண்ணன்… அட்வகேட் விரான் சர்வேஷ்… இந்த கேஸ் விஷயமா உங்க கிட்ட கொஞ்சம் டீட்டெய்ல்ஸ் வாங்க வந்து இருக்கார்…” என்கவும் விரான் புன்னகைக்க, அவனையே மேலிருந்து கீழ் வரை பார்வையால் அளந்த மோனிஷா, “ஆனா இவர்…” என இழுத்தாள்.

 

“நைஸ் டு மீட் யூ மிஸ் மோனிஷா… ஐம் விரான் சர்வேஷ்… நானும் வியுவும் ட்வின்ஸ்…” எனப் புன்னகையுடன் கூறியவாறு அவளிடம் நட்புக் கரம் நீட்டினான் விரான்.

 

 

மோனிஷா, “ஓஹ்… சாரி… ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்குறதால நான் உங்களை அவர்னு நினைச்சிட்டேன்… உட்காருங்க சார்…” எனப் பதிலுக்கு விரானின் கரம் பற்றினாள்.

 

விரான், “நீங்களும் உட்காருங்க சஞ்சய்…” என சஞ்சய்யிடம் கூறியவன் இருக்கையில் அமர்ந்து, “அப்புறம் இன்னொரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புறேன் மிஸ்… என் தம்பி வியான் ஒன்னும் நீங்க நினைக்கிறது போல லஞ்சம் வாங்குற போலீஸ் இல்ல… ஒருத்தன் லஞ்சம் வாங்கினான்னு சொல்லி இருக்குற எல்லா போலீஸும் அப்படி இருக்க மாட்டாங்க… உங்களுக்கு புரிஞ்சி இருக்கும்னு நினைக்கிறேன்…” என்றான் புன்னகையுடன் அழுத்தமான குரலில்.

 

“சாரி…” என மோனிஷா மெல்லிய குரலில் கூறவும், “பரவால்ல… எல்லாம் நாம பார்க்குற கண்ணோட்டத்துல தான் இருக்கு…” என்றான் விரான்.

 

அந்த சங்கடமான சூழ்நிலையை மாற்றும் பொருட்டு சஞ்சய், “ப்ரோ… கேஸ் விஷயமா ஏதோ விசாரிக்க இருக்குறதா வியான் ப்ரோ சொன்னாங்க…” என்கவும், “ஆமா சஞ்சய்… பண மோசடி என்ட் ஆள் வெச்சி உங்க கம்பனி ப்ராடெக்ட் சீக்ரெட்ஸ் எல்லாம் திருடிட்டதா சொன்னாங்க… கேஸ் கோர்ட்ல வந்தா மிஸ்டர் பார்த்திக்கு எதிரா நமக்கு வலுவான ஆதாரம் தேவை… சோ அதைப் பத்தி பேச தான் வந்தேன்… இதுக்கு முன்னாடி கூட இப்படி நடந்து இருக்குதா? ஐ மீன் ஏதாவது முன் பகை காரணமாக?” என விரான் கேட்கவும்,

 

“முன் பகை எல்லாம் இல்ல சார்… எல்லாம் பிஸ்னஸ் தான்… எங்க காஸ்மெட்டிக்ஸ் எல்லாம் இந்தியாலயே நம்பர் வன் ப்ளேஸ்ல இருக்கு… அதுக்கு அடுத்தது இருக்குறது ட்ரூ பியூட்டி கம்பனி தான்… எங்க ப்ராடெக்ட்ஸ் எல்லாமே மேக்சிமம் நேச்சுரல்… சோ எங்க காஸ்மெட்டிக்ஸ்ல எந்த சைட் அஃபேக்ட்ஸும் இல்லன்னு மக்கள் விரும்பி வாங்குவாங்க…” என விளக்கம் அளித்தாள் மோனிஷா.

 

மேலும் சில விபரங்களைக் கேட்டறிந்து கொண்ட விரான் அங்கிருந்து வெளியேறினான்.

 

போகும் வழியில் வியானுக்கு அழைத்த விரான் மறுபக்கம் அவன் அழைப்பை ஏற்கவும், “வியு… நீ கேட்ட டீட்டெய்ல்ஸ் எல்லாம் வாங்கிட்டேன்… சில விஷயங்கள் கொஞ்சம் சந்தேகப்படும்படி தான் இருக்கு…” என்கவும் வியானிடம் கனத்த அமைதி.

 

விரான், “என்னாச்சு வியு? ஏன் எதுவும் சொல்ல மாட்டேங்குற?” எனக் கேட்கவும், “சேம் காலேஜ்ல இன்னைக்கு இன்னொரு சூசைட் கேஸ் விரு…” என வியான் பதிலளிக்கவும் அதிர்ந்த விரான், “என்னடா சொல்ற? இது எப்படா நடந்தது?” எனக் கேட்டான்.

 

வியான், “இன்னைக்கு காலைல தான் டா… அதைப் பத்தி விசாரிக்க தான் வந்திருக்கேன்… நான் உன் கிட்ட அப்புறம் பேசுறேன்…” என்று அழைப்பைத் துண்டித்தவன் நேராக சென்றது இன்னுமே அதிர்ச்சி மாறாமல் அப்படியே அமர்ந்து இருந்த ரிதன்யாவிடம் தான்.

 

 

“நீங்க தான் முதல்ல பார்த்தீங்களா?” என்ற வியானின் குரலில் தலையை நிமிர்த்திய ரிதன்யா ஆம் எனத் தலையசைத்தாள்.

 

 

காலையில் தூக்கில் இருந்த பெண்ணைக் கண்டதும் ரிதன்யா பயந்து அலற, அவளின் சத்தத்தில் செக்கியூரிட்டி மற்றும் இன்னும் சில ஆசிரியர்கள் அங்கு வந்து சேர்ந்தனர்.

 

அவர்களும் அதிர்ச்சியில் உறைய, உடனே காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லப்பட்டது.

 

அவர்களின் கல்லூரியில் இது இரண்டாவது மரணம். ஒரு மாதத்திற்கு முன்னும் இதே போல் ஒரு பெண் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தாள்.

 

அது கொலையா தற்கொலையா என்ற விசாரணையே இன்னும் முடியாமல் இருக்க, தற்போது அதே போலவே இன்னொரு மரணமும் நிகழவும் அந்தச் செய்தி காட்டுத் தீ போல் பரவியது.

 

பத்திரிகையாளர்கள், காவல் துறையினர், தடவியல் துறையினர் அனைவருமே அங்கு வந்தனர்.

 

வியான் ரிதன்யாவிடமிருந்தே விசாரணையை ஆரம்பித்தான்.

 

“எத்தனை மணிக்கு போல பார்த்தீங்க?” எனக் கேட்கவும், “ஒ…ஒரு… ஏழு மணி… ஏழு மணி போல இருக்கும்…” என்றாள் ரிதன்யா குரல் நடுங்க.

 

அவளால் இன்னுமே தான் கண்டதை நம்ப முடியவில்லை.

 

“ஏழு மணியா? ஹ்ம்ம்… எட்டு மணிக்கு தானே காலேஜ் ஸ்டார்ட்… நீங்க அவ்வளவு ஏர்லியா வந்து என்ன பண்ணீங்க?” 

 

“இன்…னைக்கு பசங்களுக்கு மந்த்லி டெஸ்ட்… அ…அதனால தான் ஏர்லியா வந்தேன்… எக்சேம் ஹால் எல்லாம் ஓக்கேயான்னு செக் பண்ணலாம்னு போனப்போ தான்… அந்த… அந்த… பாடியைப் பார்த்தேன்…”

 

“இங்க பாருங்க மேடம்… முதல்ல பதட்டப்படாம பதில் சொல்லுங்க… ஏதோ நீங்க தான் கொலை பண்ணிட்டீங்க போல இப்படி நடுங்குறீங்க?” என வியான் சற்று கடுமையாகக் கேட்கவும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்த ரிதன்யா, “நா…நான் இல்ல சார்…” என்றாள் கண்கள் கலங்க.

 

வியான், “அப்போ எங்களுக்கு கொஞ்சம் கோப்பரேட் பண்ணுங்க மேடம்… மற்றவங்களையும் விசாரிக்கணும்… நீங்க இப்படி தயங்கி தயங்கி பதில் சொல்லும் போது உங்க மேல தான் சந்தேகம் வருது…” என்கவும் ரிதன்யா தலை குனிந்தவாறே சரி எனத் தலை அசைத்தாள்.

 

பெருமூச்சு விட்ட வியான், “தற்கொலை பண்ணிக்கிட்ட பொண்ணை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா? இந்த காலேஜா?” 

 

“ஹ்ம்ம்… அவ பெயர் ஹேமா… செகன்ட் இயர்… நான் இன்ச்சார்ஜா இருக்குற க்ளாஸ் தான்… பட் த்ரீ டேய்ஸா காலேஜ் வரல அவ…” என்ற ரிதன்யாவின் குரலில் முன்பிருந்த பயம் இல்லை.

 

“ஓக்கே… நீங்க லாஸ்ட்டா அந்தப் பொண்ணைப் பார்த்தப்போ அவ நார்மலா இருந்தாளா? இல்ல ஏதாவது பயமா பதட்டமா இருந்தாளா?”

 

“இல்ல சார்… நார்மலா தான் இருந்தா… நான் இந்த காலேஸ் ஜாய்ன் பண்ணி வன் வீக் தான் ஆகுது… வந்த முதல் நாள்ல இருந்தே என் கிட்ட ரொம்ப க்ளோஸா பழகினா… எப்பவும் சிரிச்சிட்டே தான் இருப்பா… லாஸ்ட்டா காலேஜ் வந்தப்போ கூட நல்லா தான் பேசிட்டு போனா…” என ரிதன்யா கூறிக் கொண்டிருக்கும் போதே, “ஐயோ… என் பொண்ணு… படுபாவி… பாதில எங்களை எல்லாம் தவிக்க விட்டுட்டுப் போய்ட்டாளே…” என்ற கதறல் கேட்கவும் இருவரின் பார்வையும் குரல் வந்த திசையில் திரும்பியது.

 

இறந்த ஹேமா என்ற பெண்ணின் பெற்றோர் தான் கதறிக் கொண்டிருந்தனர்.

 

அவர்களிடம் சென்ற வியான், “இறந்தது உங்க பொண்ணா?” எனக் கேட்கவும் அந்தப் பெண்ணின் தந்தை, “ஆமாங்க ஐயா..‌. எங்களுக்கு இருக்குற ஒரே பொண்ணு… அவளும் போய்ட்டா…” எனத் தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.

 

“ஒரே பொண்ணுன்னு சொல்றீங்க… நைட் வீட்டுல இருந்து கிளம்பும் போது பார்க்க மாட்டீங்களா? எப்படி காலேஜ்ல வந்து இப்படி பண்ணி இருக்காங்க? மூணு நாளா காலேஜ் வேற வரலன்னு சொல்றாங்க… ஏன் வரல?” எனக் கேட்டான் வியான்.

 

ஹேமாவின் தாய், “எங்க சொந்தக்காரங்க ஒருத்தங்க வீட்டுல விஷேஷம்னு நானும் இவரும் ஊருக்கு போயிருந்தோம்… எங்க பொண்ணுக்கு பரீட்சை இருக்குன்னு வர முடியாதுன்னு சொல்லிட்டா… காலைல தான் ஊருல இருந்து கிளம்பி வந்தோம்… வந்தா காலேஜுல இருந்து தகவல் வந்தது ஐயா…” என அழுதார்.

 

வியான், “ஊருக்கு போனதுக்கு அப்புறம் உங்க பொண்ணு கூட பேசினீங்களா? ஏதாவது சொன்னாங்களா? அவங்க வாய்ஸ்ல ஏதாவது மாற்றம் இருந்ததா?” என்க,

 

“இல்லங்க ஐயா… ஊருக்கு போனதும் பேசினது தான்… நல்லா தான் பேசினா… எல்லாரையும் கேட்டதா வேற சொல்ல சொன்னா… அடுத்த நாள் கால் பண்ணப்போ பரீட்சைக்கு படிக்கிறதாவும் கால் பண்ணி தொந்தரவு பண்ண வேணாம்னும் கோவமா சொல்லிட்டு வெச்சிட்டா… நாங்களும் அவளுக்கு தொந்தரவா இருக்கும்னு கால் பண்ணல…” என்றார் ஹேமாவின் தாய்.

 

அவர்களின் பதிலில் ஆத்திரம் அடைந்த வியான், “அவ வேணாம்னு சொன்னா நீங்க பொண்ணு என்ன பண்ணுறான்னு கால் பண்ணி விசாரிக்க மாட்டீங்களா? இப்படி தான் கேர்லெஸ்ஸா இருப்பீங்களா?” எனக் கோபமாகக் கேட்கவும் அவர்களோ பதில் கூறாமல் அழுதனர்.

 

வியானின் அருகில் நின்றிருந்த ரிதன்யாவோ, ‘ச்சே… என்ன மனுஷங்க இவங்க? போலீஸ்னா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லயா? அவங்களே ஒரே பொண்ணை இழந்துட்டு அழுதுட்டு இருக்காங்க… அவங்களைப் போய் திட்டுறார்…’ என மனதில் அர்ச்சித்தாள்.

 

அவள் தன்னைத் திட்டுவதை வியான் உணர்ந்தானோ என்னவோ, ரிதன்யாவைத் திரும்பி அழுத்தமாக ஒரு பார்வை பார்க்கவும் பயந்து தலை குனிந்தாள் ரிதன்யா.

 

“தற்கொலை பண்ணிக்கிட்ட பொண்ணோட ஃப்ரெண்ட்ஸ வர சொல்லுங்க…” என வியான் ஒரு காவலரிடம் கட்டளை இடவும் உடனே அவர் சில மாணவியர்களை அழைத்து வந்தனர்.

 

வியான், “ஹ்ம்ம்… நீங்க தான் ஹேமாவோட ஃப்ரெண்ட்ஸா?” எனக் கேட்கவும் அதில் ஒரு மாணவி, “ஆமா சார்… அவ எங்க நாழு பேர் கூடவும் தான் எப்பவும் இருப்பா…” என்றாள்.

 

“அந்தப் பொண்ணுக்கு ஏதாவது லவ் மேட்டர் இருந்ததா? இல்ல யாராவது காதலிக்கிறேன்னு சொல்லி தொந்தரவு பண்ணாங்களா?” 

 

“இல்ல சார்… எங்களுக்கு தெரிஞ்சி அவ யாரையும் காதலிக்கல… ஆனா ஒரு பையன் ரொம்ப நாளா அவளை லவ் டார்ச்சர் பண்ணிட்டு இருந்தான்…”

 

“இந்த காலேஜ் பையனா?”

 

“இல்ல சார்… காலேஜ் பையன் இல்ல… எங்களை விட ஒரு ஃபைவ் இயர்ஸாலும் பெரியவன் போல… டெய்லி அவ காலேஜ் விட்டு போகும் போது அவ பின்னாடியே ஃபாலோ பண்ணி வருவான்… ஒரு நாள் அவளே அவன் டார்ச்சர் தாங்க முடியாம ரோட்ல வெச்சி நல்லா திட்டிட்டா… அதுக்கப்புறம் அவன் வரவே இல்ல…”

 

“இது நடந்து எத்தனை நாளாச்சு? அந்தப் பையன் இந்த ஊரா?”

 

“ஒரு டூ மந்த்ஸ் இருக்கும் சார்… இந்த ஊரான்னு தெரியல… அந்தப் பையன் ஹேமா பின்னாடி சுத்தின கொஞ்சம் நாள் மட்டும் தான் அவனைப் பார்த்து இருக்கோம்… அதுக்கு முன்னாடியோ அப்புறமோ பார்த்ததே இல்ல…” 

 

“சரி… நாங்க திரும்ப விசாரிக்க வந்தா இதே போல கோப்பரேட் பண்ணுங்க…” என்ற வியான் இன்னும் சிலரை விசாரித்துக் கொண்டிருக்க, “ரியா…” என்ற பழக்கப்பட்ட குரலில் திரும்பினான்.

 

ஏதோ ஒரு யோசனையில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்த ரிதன்யாவை நோக்கி வந்து கொண்டிருந்த அபிமன்யுவைப் புருவம் சுருக்கிப் பார்த்த வியான், “நீ இங்க என்ன பண்ற அபி? உன் காலேஜ் பக்கத்துல தானே இருக்கு…” எனக் கேட்டான்.

 

அதற்குள் அபிமன்யுவைக் கண்டு ரிதன்யாவும் அவர்கள் அருகில் வர, “நீங்க தான் இந்த கேஸை ஹேண்டில் பண்றீங்களா வியான்ணா?” என அபிமன்யு கேட்கவும் ஆம் என வியான் தலையசைத்தான்.

 

அபிமன்யு, “ரியா… ஆர் யூ ஓக்கே?” என ரிதன்யாவிடம் திரும்பிக் கேட்கவும், “ஐம் ஓக்கே அபி… நல்லவேளை நீ வந்த…” என ரிதன்யா பதிலளித்தாள் கலக்கமான குரலில்.

 

இருவரையும் குழப்பமாகப் பார்த்துக் கொண்டிருந்த வியானைக் கண்ட அபிமன்யு, “வியான்ணா… இது ரியா… ரிதன்யா… என் ஃப்ரெண்ட்… இவ தான பாடியை ஃப்ர்ஸ்ட் பார்த்ததா சொன்னாங்க… சும்மாவே சரியான பயந்தாங்கொள்ளி இவ… அதான் நான் உடனே வந்தேன்…” என்க, “ஓஹ்… தெரியுது பார்த்தாலே…” என்ற வியானின் நக்கல் குரலில் அவனை முறைத்தாள் ரிதன்யா.

 

************************************

 

தன் முன் தலை குனிந்து நின்றிருந்தவனின் கன்னத்தில் பளார் என அறைந்த அந்த கறுப்பு ஹூடி அணிந்தவன், “அறிவில்லயாடா உனக்கு? எதுக்கு டா திரும்ப அதே காலேஜ்ல போய் சம்பவம் பண்ணி இருக்க… நம்ம ரூல்ஸ் தெரியாதா உனக்கு? தொட்ட இடத்துலயே திரும்ப கை வைக்க கூடாதுடா…” எனக் கோபமாகக் கத்தினான்.

 

“இதுக்கு தான் சொல்றது புது ஆளுங்களை வேலைக்கு எடுக்கும் போது தரவா எல்லாம் சொல்லிக் கொடுத்து எடுக்கணும்னு… ச்சே… எவன்டா இவனை வேலைக்கு எடுத்தது?” எனக் கத்தவும் இன்னொருவன் தயக்கமாக வந்து அவன் முன் நிற்கவும் அவனையும் அறைந்தான்.

 

“இது தான் முதலும் கடைசியுமா இருக்கணும்… திரும்ப இப்படி நடந்தா கொன்னு போட்டு உன் உடம்புல இருக்குற இரத்தத்தையும் உறிஞ்சிடுவேன்…” என மிரட்டவும் அவன் முன் தலை குனிந்து நின்றிருந்த இருவருக்கும் திக் என்றானது.

 

ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து ஊதித் தள்ளியவன், “பெரிய ஆர்டர் ஒன்னு வந்து இருக்குடா… அதுவும் ஃபாரின் ஆர்டர்… பெரிய இடம் வேற… அதனால பெரிய அளவுல சம்பவம் பண்ணணும் இந்தத் தடவை…” என்றான் குரூரச் சிரிப்புடன்.

 

************************************

 

“போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் வந்திடுச்சா குரு?” என காவல் நிலையத்தினுள் நுழைந்தவாறு வியான் கேட்கவும் அவனுக்கு செல்யூட் அடித்த குரு, “யேஸ் சார்… கழுத்துல கயிறு இறுகி தான் அந்தப் பொண்ணு இறந்து இருக்கா… அதை வெச்சி இது தற்கொலை தான்னு சொல்ல முடியும்… ஆனா இன்னொரு விதமா இது கொலையா இருக்கலாம்னு சந்தேகப்படுறேன்…” என்றார்.

 

வியான் அவரைக் கேள்வியாக நோக்கவும் ஹேமாவின் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டை அவனிடம் வழங்கிய குரு, “ஒரு வாரத்துக்கு முன்னாடி நாங்க பிடிச்ச கும்பல் கடத்தி இருந்த பொண்ணோட உடம்புல கூட ப்ளாஸ்மா இருக்கல… இந்தப் பொண்ணோட உடம்புல கூட ரொம்ப லோவா தான் ப்ளாஸ்மா இருந்து இருக்கு…” என்க,

 

“அப்போ அந்தக் கும்பல்ல இருக்குறவங்க யாரோ தான் இந்தக் கொலையை பண்ணி இருக்காங்க… கயிற்றாலயே அந்தப் பொண்ணோட கழுத்தை நசுக்கி கொன்னுட்டு தற்கொலை போல க்ரியேட் பண்ணி இருக்காங்க…” என்றான் வியான் தன் தாடையைத் தடவியபடி.

 

குரு, “யேஸ் சார்..‌. அப்புறம் இறந்த பொண்ணை லவ் டார்ச்சர் பண்ணின பையனைப் பிடிச்சிட்டோம்… எவ்வளவு அடிச்சி கேட்டும் சொன்னதையே தான் சொல்றான் சார்… நீங்க வந்து கொஞ்சம் விசாரிங்க…” என்கவும் வியான் எழுந்து அந்தப் பையனை அடைத்து வைத்து இருந்த சிறைக்குள் நுழைந்தான்.

 

ஏற்கனவே நன்றாகவே அடி வாங்கி நிற்கக் கூட சக்தி இல்லாமல் இருக்க, அவன் தாடையை ஒரு விரலால் நிமிர்த்திய வியான், “உன் பெயர் என்ன?” எனக் கேட்டான் அழுத்தமாக.

 

“ஜோ…சப்…” என்றான் திக்கித் திணறி.

 

குருவைத் திரும்பி கோபமாக ஒரு பார்வை பார்த்த வியான், “எதுக்கு இப்படி சாகுற அளவுக்கு அடிச்சி இருக்கீங்க?” எனக் கோபமாகக் கேட்கவும், “எவ்வளவு கேட்டும் சொன்னதையே தான் சார் சொல்லிட்டு இருந்தான்… அதான்…” என குரு தயக்கமாகக் கூறவும், “அதுக்காக இப்படி போட்டு அடிப்பீங்களா? போலீஸ் தானே… ஒருத்தன் உண்மையை சொல்றானா இல்லயான்னு கூட தெரிஞ்சிக்க முடியாதா?” எனக் கண்டித்து விட்டு மீண்டும் ஜோசப்பிடம் பார்வையைப் பதித்தான் வியான்.

 

வியான், “நீ எந்த ஊரு? என்ன வேலை பார்க்குற?” என அழுத்தமாகக் கேட்கவும், 

 

“இ…தே ஊர் தான்… சார்… மா…மாவோட கடையில… கெ…ஷியரா இருக்…கேன்…” என்றான் ஜோசப்.

 

“ஹ்ம்ம்… ஹேமாவைத் தெரியுமா?”

 

அந்தக் கேள்வியில் ஜோசப்பின் கண்கள் சட்டெனக் கலங்கி விட்டன.

 

வியான் அவனைக் கேள்வியாக நோக்க, “என்… என் உசுரு… சார்…” என ஜோசப் கண்ணீருடன் பதிலளிக்கவும், “அந்தப் பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டா… நீ தான் காரணம்னு நாங்க சந்தேகப்படுறோம்…” என வியான் கூறவும் ஜோசப்பிடம் பதில் இல்லை.

 

ஆனால் கண்ணீர் மட்டும் விடாமல் வழிந்தது.

 

“உண்மையை சொல்லு… நீ அந்தப் பொண்ணை ஏதாவது சொல்லி ப்ளாக்மெயில் பண்ணியா?”

 

“நா…நான் எப்…படி சார்? அ…அவன்னா எனக்…கு அவ்வளவு பிடிக்…கும்…”

 

“வீணா பொய் சொல்லி என் கிட்ட அடி வாங்காதே… அந்தப் பொண்ணோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் நீ அந்தப் பொண்ணை லவ் டார்ச்சர் பண்ணதா சொல்றாங்க… திடீர்னு நீ காணாம போய்ட்டியாம்? என்னைப் பண்ணினாய்?” 

 

“நா…நான் ஹே…மாவை நி…ஜமா தான் சார் கா..தலிச்சேன்… அவ பின்…னாடியே சுத்தி…னேன் அவளும் என்…னை காதலிப்பான்னு நம்பி… அந்…த நேரம் எல்லாம் நான்… எந்…த வேலைக்…கும் போகல… வெட்…டியா தான் சுத்தி…ட்டு இருந்தேன்… ஒரு நாள் என் ஹேமா என்…னை ரொம்…பத் திட்டிட்டா… வே…லையே இல்…லாம ஊர் சு..த்துறவனு…க்கு அவங்க வீட்டுல… எந்த நம்…பிக்கைல பொண்ணு கொடு…ப்பாங்கன்னு கேட்…டாங்க… மு…முதல்…ல நல்ல வே…லைக்கு போ… அப்புறம் இ…ந்த காதல் கல்…யாணம் எல்லாம் பண்ணுன்னு திட்…டிட்டா… அன்னைக்கே நா..ன் மாறிட்டேன்… என் ஹேமா…வுக்காக… நல்…லா சம்…பாதிச்சிட்டு தான் அவ முன்…னால போய் நிற்…கணும்னு எ…எங்க மாமா கடை…ல வேலை…க்கு சேர்ந்தேன் சார்… அ…அதுக்குள்ள…” என்ற ஜோசப் அதற்கு மேல் வார்த்தை வராமல் கதறினான்.

 

அங்கிருந்து வெளியேறிய வியான் குருவிடம், “அந்தப் பையனை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போய் உங்க செலவுலயே ட்ரீட்மெண்ட் பண்ணிட்டு வீட்டுல விட்டுடுங்க…” என அழுத்தமான குரலில் கூறவும், “பட் சார்… அவன் சந்தேக லிஸ்ட்ல இருக்கான்…” என்றார் குரு.

 

அவரை முறைத்த வியான், “அந்தப் பையன் உண்மைய தான் சொல்றான்… கொலைக்கு காரணமானவன் வேற யாரோ… அவனை கண்டுபிடிக்கணும் முதல்ல… போய் நான் சொன்னத செய்ங்க முதல்ல…” எனக் கட்டளை இடவும் அவனுக்கு செல்யூட் அடித்த குரு ஜோசப்பை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்றான்.

 

************************************

 

“ருத்ராக்ஷ்… எத்தனை நாளைக்கு தான் ஆத்யாவை தூரத்துல இருந்து பார்த்து மட்டுமே லவ் பண்ண போற? இரண்டு வருஷமா காதலிக்கிற… ஆனா அதை அவ கிட்ட போய் சொல்ல மாட்டேங்குற… முதல்ல அவ கிட்ட போய் உன் லவ்வ சொல்லுடா…” என ருத்ராக்ஷின் நண்பனான நவீன் கூறவும் தன் தோழிகளுடன் மரத்தடியில் அமர்ந்து கைகளை ஆட்டி ஆட்டி ஏதோ கதை பேசிக் கொண்டிருந்த ஆத்யாவை தூரத்தில் இருந்தே ரசித்தவாறு, “என்ன அவசரம் டா நவீன்? கொஞ்சம் நாள் போகட்டும்… அவ படிப்பு என்னால கெடக் கூடாது… இப்படி தூரத்துல இருந்தே அவளை ரசிச்சிட்டு வன் சைடா லவ் பண்றது கூட நல்லா தான் டா இருக்கு…” என்றான் காதலுடன்.

 

 

 

அவனின் பதிலைக் கேட்டு தலையில் அடித்துக்கொண்ட நவீன், “அட முட்டாள் பயலே… நீ இப்படி தூரத்துல இருந்தே காதலிச்சிட்டு இரு… எவனாச்சும் வந்து அவளைத் தூக்கிட்டு போவா… அப்பவும் இப்படியே தூரத்துல இருந்தே ரசிச்சி ஆசிர்வாதம் பண்ணு…” எனச் சலிப்பாகக் கூறவும் நவீனை முறைத்த ருத்ராக்ஷ், “நீ உன்னோட திருவாயை மூடு… என் தியா ஒன்னும் அப்படிப்பட்ட ஆள் இல்ல… அடுத்த வாரம் அவ பிறந்த நாள் வருது… அப்போ நான் அவள் இம்ப்ரஸ் ஆகுறது போல ப்ரபோஸ் பண்றேன்…” என்றான்.

 

நவீன், “எதுவா இருந்தாலும் சீக்கிரம் பண்ணுடா… இன்னும் கொஞ்சம் நாள் தான் நாம காலேஜ்ல இருக்க போறோம்…” என்கவும் ருத்ராக்ஷிடம் பதில் வராமல் இருக்கவும் திரும்பிப் பார்த்தவன் அவன் ஆத்யாவையே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு, “இவன் இந்த ஜென்மத்துல திருந்துற கேஸ் இல்ல…” என்றான். 

 

************************************

 

“என்னங்க… இந்த பசங்க ரெண்டு பேரும் கொஞ்சம் நாளா நேரத்துக்கு வீட்டுக்கு வரதே இல்லங்க… ஆது வேற இவனுங்க வரும் வரை சாப்பிடாம, தூங்காம முழிச்சிட்டு இருக்கா… எப்போ வராங்கன்னும் தெரியல… எப்போ போறாங்கன்னும் தெரியல…” என ஈஷ்வரி கவலைப்பட, “விடு ஈஷ்வரி… மத்த பசங்க போல ரெண்டு பேரும் ஊரையா சுத்துறாங்க? இல்லயே… போலீஸ், லாயரா இருந்தா அப்படி தான்… நீ மாத்திரையை சாப்பிட்டுட்டு தூங்கு… நான் கால் பண்ணி பார்க்குறேன்…” எனப் பிரபு மனைவியை சமாதானப்படுத்தினார்.

 

ஈஷ்வரியை ஒருவாறு சமாதானப்படுத்தி தூங்க அனுப்பி வைத்த பின் தன் பேரன்களுக்கு அழைக்க பிரபு கைப்பேசியை கையில் எடுக்க, “தாத்தா…” என அவரின் கழுத்தை சுற்றி கரங்களை மாட்டி அணைத்துக் கொண்டாள் ஆத்யா.

 

 

பிரபு, “ஆதும்மா… இன்னும் தூங்கலயாடா?” எனப் புன்னகையுடன் தன் பேத்தியின் தலையை வருடியவாறு கேட்க, “இல்ல தாத்தா… வியுண்ணாவும் விருண்ணாவும் வரட்டும்… நான் அப்புறம் தூங்குறேன்… விருண்ணா கால் பண்ணி சொன்னார் அவங்க வர லேட் ஆகும்னு… அதான் உங்களைத் தூங்க சொல்லலாம்னு வந்தேன்…” என்றாள் ஆத்யா.

 

“நான் இருக்கேன்டா… பரவால்ல… நீ போய் தூங்குடா… ரொம்ப நேரம் முழிச்சிட்டு இருக்க கூடாதுமா…” எனப் பிரபு கூறவும் அவருக்கு அருகில் வந்து அமர்ந்து கொண்ட ஆத்யா, “தாத்தா… அதான் நான் இருக்கேன்ல… உங்களுக்கு தான் இப்போ ரெஸ்ட் வேணும்… சோ நீங்க போய் தூங்குங்க… நான் விருண்ணாவும் வியுண்ணாவும் வந்ததுக்கு அப்புறம் அவங்க கூட சாப்பிட்டுட்டு தூங்குறேன்…” என ஆத்யா பிரபுவின் கன்னத்தைப் பிடித்து இழுத்தபடி கூறினாள்.

 

பிரபு, “சரிடா… எப்படியும் நீ நான் சொல்றதைக் கேட்க போறது கிடையாது… அதனால நான் போய் தூங்குறேன்… ரொம்ப லேட் பண்ணாம தூங்குடா நீயும்…” என்று விட்டு உறங்கச் சென்றார்.

 

அவர் சென்றதும் பெருமூச்சு விட்ட ஆத்யா ஹால் சோஃபாவில் படுத்துக்கொண்டு விரானும் வியானும் வரும் வரை கைப்பேசியில் கேம் விளையாடினாள்.

 

சற்று நேரத்திலேயே ஏதோ தீவிரமாகப் பேசியவாறு இருவரும் வீட்டினுள் நுழைய, “அண்ணா…” என ஓடிச் சென்று இருவரையும் அணைத்துக் கொண்டாள் ஆத்யா.

 

வியான், “பப்பு… இன்னும் தூங்காம என்ன பண்ற?” என்க, “ஆமா பப்பு… நான் தான் கால் பண்ணி சொன்னேனே நாங்க வர லேட் ஆகும்னு… அப்போ இன்னும் சாப்பிட கூட இல்லயா?” எனக் கேட்டான் விரான்.

 

ஆத்யா இல்லை என இட வலமாகத் தலையசைக்கவும் அவளின் சகோதரர்கள் இருவருமே அவளை முறைத்தனர்.

 

அந்தச் செல்லத் தங்கைக்கு தெரியாதா அவர்களை சமாதானப்படுத்தும் வழி?

 

உடனே பாவமாக முகத்தை வைத்துக்கொண்ட ஆத்யா, “நான் எப்போ அண்ணா நீங்க ரெண்டு பேரும் இல்லாம நைட் சாப்பிட்டு இருக்கேன்?” எனக் கேட்கவும் உடனே இரட்டையர்கள் மனம் இளகி, “சரிடா… நீ சாப்பாடு எடுத்து வை… நாங்க ஃப்ரெஷ் ஆகிட்டு வரோம்…” என்றான் வியான் புன்னகையுடன்.

 

ஆத்யா புன்னகையுடன் உள்ளே ஓட, “தாத்தாங்களும் பாட்டிங்களும் தூங்கிட்டாங்களா பப்பு?” எனக் கேட்டான் விரான்.

 

“ஆமாண்ணா… ரொம்ப நேரமா உங்க ரெண்டு பேருக்காகவும் வெய்ட் பண்ணிட்டு இப்போ தான் போய் தூங்கினாங்க…” என சமையலறையில் இருந்தே குரல் கொடுத்தாள் ஆத்யா.

 

சகோதரர்கள் இருவரும் குளித்து உடை மாற்றி விட்டு வந்ததும் மூவருமே ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

 

சாப்பிட்டு முடித்ததும், “பப்பு… நீ போய் தூங்குடா… ரொம்ப லேட் ஆகிடுச்சு… விரு… கொஞ்சம் மேல வா…” என்று விட்டு வியான் செல்லவும் அவனைப் பின் தொடர்ந்தான் விரான்.

 

இருவரும் மொட்டை மாடி சுவற்றில் சாய்ந்து அமர்ந்து இருக்கவும் விரான், “வியு… கேஸ்ல ஏதாவது இம்ப்ரூவ்மன்ட் இருக்கா?” எனக் கேட்கவும் பெருமூச்சு விட்ட வியான், “இல்ல விரு… இன்னும் இன்னும் சிக்கல் ஆகிட்டே போகுது…” என்றான் சலிப்பாக.

 

“ஏன் டா? என்னாச்சு?” என்ற விரானின் கேள்விக்கு, “இது வரைக்கும் மூணு கேஸ்… ரெண்டு தற்கொலை, ஒன்னு கடத்தல்… ஆனா விசாரிக்கும் போது மூணுமே கொலை தான்னு தெரிய வருது… அதை நிரூபிக்க ஆதாரம் தான் இல்ல…” என்றான் வியான்.

 

“அது எப்படி வியு ஆதாரம் இல்லாம போகும்? கொலையாளி கண்டிப்பா ஏதாவது ஒரு தடயத்தை விட்டுட்டு போய் இருப்பான்ல… மூணுமே ஒரே ஆளா பண்ணி இருக்கான்?” 

 

“மூணு கேஸுமே ஒன்னோட ஒன்னு சம்பந்தப்படுது… மூணுலயுமே சேமா இருக்குறது ப்ளாஸ்மா தான்… நாம அன்னைக்கு அந்தக் கும்பல் கிட்ட இருந்து காப்பாத்தின பொண்ணோட உடம்புல மொத்தமாவே ப்ளாஸ்மாவை எடுத்து இருந்தாங்க… பட் மற்ற ரெண்டு கேஸ்லயுமே ஓரளவு தான் ப்ளாஸ்மா குறைவா இருந்து இருக்கு… என்ட் அந்த மொத்தமா ப்ளட்ல ப்ளாஸ்மா இல்லாம இருந்த பொண்ணோட ஏஜ் ஒரு தேர்டீன், ஃபார்டீன் இருக்கும்… மற்ற ரெண்டு பொண்ணுங்களுமே காலேஜ் பொண்ணுங்க… கில்லர் பொண்ணுங்களை டார்கெட் வெச்சி தான் இதெல்லாம் பண்ணுறான்னு டவுட்டா இருக்கு…”

 

“ஹ்ம்ம்… சஞ்சய் ப்ரோ வர்க் பண்ணுற கம்பனி எம்.டி கிட்ட வாங்கின டீட்டெய்ல்ஸ்ல ஏதாவது தெரிஞ்சதா?”

 

“அது கூட சந்தேகமா தான் இருக்கு விரு… ட்ரூ பியூட்டி கம்பனி குறுகிய காலத்துல பெரிய இடத்துக்கு வந்து இருக்காங்க..‌. அதைப் பத்தி இன்னும் டீப்பா விசாரிக்கணும்…”

 

“சரி நீ யோசிக்காதே வியு… ஏதாவது ஆதாரம் கண்டிப்பா சிக்கும்… இது வரை யோசிக்காத கோணத்துல திங்க் பண்ணு… வழி கிடைக்கும்…” என வியானின் தோளில் தட்டினான் விரான்.

 

இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போது கையில் தலையணைகள், பாய் என்பவற்றுடன் மேலே வந்தாள் ஆத்யா.

 

“என்ன பண்ற பப்பு? தூங்கலயா? இதெல்லாம் எதுக்கு?” என தங்கையின் செயலைப் புரியாமல் பார்த்தபடி வியான் கேட்கவும் தான் கொண்டு வந்தவற்றை ஒரு ஓரமாக வைத்த ஆத்யா மொட்டை மாடி சுவரில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்திருந்த சகோதரர்கள் இருவருக்கும் இடையில் வந்து அமர்ந்து கொண்டாள்.

 

விரான், “தூக்கம் வரலயா பப்பு?” எனக் கனிவாகக் கேட்கவும் மறுப்பாதத் தலையசைத்த ஆத்யா இரட்டையர்களின் கரங்களை எடுத்து தன் கைக்குள் பொத்திக்கொண்டு, “உங்க ரெண்டு பேரையும் இப்போ எல்லாம் ரொம்ப மிஸ் பண்றேன்‌ அண்ணா…” எனும் போதே அவளின் குரல் கம்மியது.  

 

“டேய்…” “பப்பு…” என விரானும் வியானும் பதற, புன்னகைத்த ஆத்யா, “முன்னாடி மாதிரி உங்க ரெண்டு பேர் கூடவும் பேச முடியல… எங்கேயும் சேர்ந்து வெளியே போக முடியல… நைட்டுக்கு மட்டும் தான் ஒன்னா உட்கார்ந்து சாப்பிடுறோம்… ரொம்ப மிஸ் பண்ணுறேன்ணா உங்க ரெண்டு பேரையும்…” எனக் கண் கலங்கினாள்.

 

விரான், வியானின் கண்கள் கூட தங்கையின் பேச்சில் கலங்கி விட, “சாரி டா பப்பு…” என இருவரும் ஆத்யாவை அணைத்துக் கொண்டனர்.

 

ஆத்யா, “தாத்தாங்க… பாட்டிங்க… அத்தைங்க… மாமாங்க… சித்தப்பாங்க… சித்திங்க… பெரியப்பா… பெரியம்மான்னு ஃபேமிலில எல்லாரும் கூட இருந்தும் தனிமையா ஃபீல் பண்றேன்ணா… நீங்க ரெண்டு பேரும் என் கூட இல்லன்னா ரொம்ப கஷ்டமா இருக்கு… நீங்க ரெண்டு பேரும் என் கூட இருக்கும் போதெல்லாம் இதுவரை நிஜமாவே எனக்கு அப்புவையும் அம்முவையும் அவ்வளவா ஞாபகம் வராது… ஏன்னா நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நீங்க ரெண்டு பேரும் தான் எனக்கு எல்லாமுமா இருக்கீங்க… ஆனா இப்போ எல்லாம் உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியாததுனால அடிக்கடி அப்புவையும் அம்முவையும் ஞாபகம் வருது… 

 

என் முகம் கொஞ்சம் வாடினா கூட தாத்தாங்க, பாட்டிங்க எல்லாம் கவலைப்படுவாங்க… வயசான காலத்துல ஆல்ரெடி அவங்க நிறைய பட்டுட்டாங்க… என்னாலயும் அவங்களை இன்னும் வருத்தப்பட வைக்க முடியல… அதனால எவ்வளவு கவலை இருந்தாலும் அவங்க முன்னாடி எதையும் காண்பிக்காம சிரிச்சிட்டு இருப்பேன்… ஆனா உள்ளுக்குள்ள ரொம்ப வலிக்கிதுண்ணா… ரொம்ப கஷ்டமா இருக்கு… 

 

சரின்னு நைட்டுக்காவது நீங்க ரெண்டு பேரும் வந்ததுக்கு அப்புறம் உங்க கூட கொஞ்சம் நேரம் பேசலாம்னு பார்த்தா இந்தக் கொஞ்ச நாளா நீங்க ரெண்டு பேரும் லேட் ஆகி வீட்டுக்கு வரீங்க… வந்ததும் சாப்பிட்டுட்டு என்னைத் தூங்க சொல்லிட்டு நீங்க ரெண்டு பேரும் கேஸ் கேஸ்னு அதைப் பத்தியே பேசுறீங்க… எனக்கு எதுவும் பிடிக்கலண்ணா… 

 

பாட்டி கூட சில சமயம் திட்டுவாங்க… இவ்வளவு வளர்ந்து இருக்கேன்… எதுக்கு இன்னும் அண்ணனுங்களையே எல்லாத்துக்கும் எதிர்ப்பார்த்துட்டு இருக்கேன்னு… சின்ன வயசுல இருந்து உங்க கூடவே வளர்ந்து உங்க ரெண்டு பேரோட கையை பிடிச்சுமே எல்லாம் கத்துக்கிட்டு இப்போ தள்ளி இருக்குறது எப்படிண்ணா? இன்னைக்கு என்னன்னு தெரியல… ரொம்ப கஷ்டமா இருக்குண்ணா… அம்முவையும் அப்புவையும் காலைல இருந்து அடிக்கடி ஞாபகம் வருது… அதான்…” எனக் கண்ணீர் வடித்தாள்.

 

தம் பெற்றோரின் மரணத்துக்குக் கூட இதுவரை ஒரு துளி கண்ணீர் வடிக்காது தமக்குள்ளே இறுகி இருப்பவர்கள் இன்று தம் செல்லத் தங்கையின் கண்களில் கண்ணீரைக் கண்டதும் அவளுடன் சேர்ந்து விரானும் வியானும் கூட கண்ணீர் சிந்தினர்.

 

ஆத்யாவின் இரண்டு பக்கத்தாலும் வியானும் விரானும் அவளை அணைத்துக்கொண்டு, “சாரி பப்பு…” என்றனர்.

 

“ம்ஹ்ம்ம்…” என மூக்கை உறிஞ்சிய ஆத்யா, “முடியாது… நான் ரெண்டு பேர் மேலயும் கோவமா இருக்கேன்… நான் அப்பு கிட்டயும் அம்மு கிட்டயும் சொல்லுவேன் நீங்க ரெண்டு பேரும் என்னை அழ வெச்சிட்டீங்கன்னு… விருண்ணா… நீங்க அம்மு கிட்ட வாக்கு கொடுத்தீங்க தானே என்னையும் வியுண்ணாவையும் நல்லா பார்த்துப்பேன்னு… பட் இன்னைக்கு என்னை அழ வெச்சிட்டீங்க…” என உதட்டைப் பிதுக்கினாள்.

 

சகோதரர்கள் இருவருக்குமே அன்று தம் பெற்றோரின் மரணத்தின் போது அவர்களிடம் கொடுத்த வாக்கு நினைவு வந்தது.

 

அவசரமாக தம் கண்ணீரைத் துடைத்தனர் இருவரும்.

 

வியான், “அண்ணா… எழுந்திரு…” எனத் தானும் எழுந்து விரானிடமும் கூற, ஏன் என்று காரணம் கேட்காமலே தன் தம்பி கூறியதும் எழுந்தான் விரான்.

 

“பப்பு… உன் கோவம் போகும் வரை நானும் அண்ணனும் தோப்புக்கரணம் போடுறோம்… சரியா?” என்ற வியான் இரு காதையும் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போட, “ஆமா… பப்புவை அழ வெச்சதுக்கு எங்களுக்கு இது தான் பனிஷ்மன்ட்…” என்ற விரானும் தோப்புக்கரணம் போட்டான்.

 

ஒவ்வொரு முறையும் குனிந்து எழும் போது இருவரும், “சாரி பப்பு… இனிமே இப்படி பண்ண மாட்டோம்… சாரி அம்மு… சாரி அப்பு… பப்புவை நாங்க நல்லா பார்த்துக்குவோம்…” என்று கூறினர்.

 

முதலில் அவர்களைக் கண்டு கொள்ளாது முகத்தைத் திருப்பிக்கொண்ட ஆத்யா அதிக நேரம் தன் சகோதரர்கள் கஷ்டப்படுவதைப் பொறுக்க இயலாது எழுந்து சென்று அவர்களை நிறுத்தி அணைத்துக் கொண்டாள்.

 

விரான், “என் பப்புக்கு கோவம் போயிடுச்சா?” எனப் புன்னகையுடன் கேட்கவும் மறுப்பாகத் தலையசைத்தாள் ஆத்யா.

 

வியான், “அப்போ இன்னும் கொஞ்சம் நேரம் தோப்புக்கரணம் போடவா டா பப்பு? இல்லன்னா நீயே எங்களுக்கு ஏதாவது பனிஷ்மன்ட் கொடு…” என்றான்.

 

ஆத்யா, “தோப்புக்கரணம் எல்லாம் போட வேணாம்… நான் என்ன சொன்னாலும் செய்வேன்னு ப்ராமிஸ் பண்ணுங்க…” என அவர்கள் முன் கரம் நீட்டவும், “எங்க பப்பு சொல்லி நாங்க என்னைக்கு முடியாதுன்னு சொல்லி இருக்கோம்?” எனக் கேட்டான் விரான்.

 

“ஹ்ம்ம்… அப்போ நாளைக்கு ஃபுல் டே எங்கேயும் போகாம என் கூட மட்டும் தான் இருப்பீங்கன்னு ப்ராமிஸ் பண்ணுங்க… நான் எங்க கூப்பிட்டாலும் நாளைக்கு ரெண்டு பேரும் என் கூட வரணும்… எங்க? சரின்னு ப்ராமிஸ் பண்ணுங்க…” என ஆத்யா தன் கையைக் காட்ட, வியான் தன் அண்ணனின் முகத்தைப் பார்த்தான்.

 

விரான் கண்களை மூடித் திறக்கவும் இருவரும் ஒருசேர, “ப்ராமிஸ்… நாளைக்கு ஃபுல்லா நாங்க ரெண்டு பேரும் பப்பு கூட தான் இருப்போம்… நீ எங்க கூப்பிட்டாலும் வருவோம்… இப்போ ஹேப்பியா?” எனக் கேட்கவும், “ஹை ஜாலி…” என சந்தோஷமாக தன் சகோதரர்களை அணைத்துக் கொண்டாள்.

 

விரான், “பப்பு… உன்ன இவ்வளவு ஃபீல் பண்ண வெச்சிட்டோம்னு நினைக்கும் போது ரொம்ப வருத்தமா இருக்கு டா… டீவி நியூஸ்ல எல்லாம் பார்க்குறாய் தானே இப்போ கொஞ்சம் நாளா நடக்குற சூசைட் கேஸஸ்… அதைப் பத்தி விசாரிக்க தான் டா நானும் வியுவும் போறோம்… பட் உன்ன இவ்வளவு ஏங்க வைப்போம்னு நினைக்கலடா…” என்றான்.

 

ஆத்யா, “அச்சோ… பரவால்லண்ணா… என் ஒரு அண்ணன் போலீஸ், ஒரு அண்ணன் லாயர்… எனக்கு உங்க ரெண்டு பேரையும் நினைச்சா எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா? என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கூட அடிக்கடி சொல்லுவேன்… நீங்க கேஸ் விஷயமா தான் வெளியில போய்ட்டு லேட்டா வரீங்கன்னு தெரியுதுண்ணா எனக்கு… ஆனாலும் மனசு தான் கேட்க மாட்டேங்குது… உங்கள மிஸ் பண்றேன்… இனிமே கொஞ்சம் கொஞ்சமா என்னை மாத்திக்க ட்ரை பண்றேன்ணா…” என்றாள் கண்கள் கலங்க.

 

“டேய் பப்பு… நீ எதுக்கு மாறணும்? நீ இப்படியே இரு… எங்க ரெண்டு பேரையும் கேள்வி கேட்க உனக்கு இல்லாத உரிமையா? இனிமே முன்னாடி மாதிரியே இருக்கலாம்… இந்த கேஸ் மட்டும் முடியட்டும்… முடிஞ்ச அளவு உன் கூட தான் இனிமே டைம் ஸ்பென்ட் பண்ணுவோம்…” எனக் கூறி ஆத்யாவின் நெற்றியில் முத்தமிட்டான் வியான்.

 

“என் பப்பு… நானும்…” என்ற விரானும் ஆத்யாவின் நெற்றியில் முத்தமிட, அவ்வளவு நேரம் இருந்த கவலை மறந்து சிரித்த ஆத்யா, “ஹஹா… போதும் போதும் அண்ணா… வாங்க தூங்கலாம்… இன்னைக்கு நாம மூணு பேரும் இங்கயே அப்புவையும் அம்முவையும் பார்த்துக்கிட்டே தூங்கலாம்…” என்றாள்.

 

சகோதரர்கள் இருவரும் அவளைப் புரியாமல் நோக்க, “அதோ… அப்புவும் அம்முவும்…” என நட்சத்திரத்தைக் கை காட்டினாள் ஆத்யா.

 

அதனைக் கண்டு விரானும் வியானும் புன்னகைத்தனர்.

 

பின் பாய் போட்டு விரானும் வியானும் இரு பக்கமும் படுத்துக்கொள்ள, அவர்களுக்கு நடுவே படுத்துக்கொண்டாள் ஆத்யா.

 

மூவரும் பல நாட்கள் கழித்து வெகு நேரம் பேசியவாறே உறக்கத்தைத் தழுவினர்.

 

வானில் நட்சத்திரங்களாய் மாறி மின்னிக் கொண்டிருந்த சஜீவ்வும் நித்ய யுவனியும் தம் பிள்ளைகளின் ஒற்றுமையைக் கண்டு மகிழ்ந்து தென்றலாக அவர்களை வருடி முத்தமிட்டனர்.

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment