146 views

வியான் பேசி முடித்ததும் அவ் அரங்கம் முழுவதும் கரகோஷங்களால் அதிர, பதிலுக்கு ஒரு தலையசைப்பைக் கொடுத்தவன் மீண்டும் தன் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டான்.

பின் சில நிகழ்ச்சிகள் நடைபெற, வியான் கல்லூரி முதல்வரின் காதில் ஏதோ கூறி விட்டு எழுந்தவன் அங்கிருந்து வெளியேற, இவ்வளவு நேரம் அவனை ரசித்துக்கொண்டு இருந்தவளோ வியானின் பின்னே செல்ல, அவளின் தோழிகள் அதிர்ந்தனர்.

“ஹேய்… இவ என்ன டி அவர் பின்னாலயே போறா?” என அவளின் தோழி ஒருத்தி வினவ, “எனக்கும் தெரியல டி… எங்க ஆளுன்னு கூட சொல்லக் கூடாதுன்னு சொன்னா… ஒருவேளை வன் சைட்டா லவ் பண்ணி ப்ரபோஸ் பண்ண போறாளோ?” என இன்னொரு தோழி தன் சந்தேகத்தை முன் வைக்க, “வாங்க டி போய் பார்க்கலாம்…” என அவர்களும் அவளைப் பின் தொடர்ந்தனர்.

மறுபக்கம் வியானை ரசித்துக் கொண்டிருந்தவளை காதலுடன் நோக்கிக் கொண்டிருந்த ருத்ராக்ஷும் அவள் எழுந்து போகவும் அவளைப் பின் தொடர்ந்து சென்றான்.

கேட்போர் கூடத்திலிருந்து வெளியேறிய வியான் தன் ஜீப்பை நிறுத்தி இருந்த இடத்திற்கு செல்ல, அவனைத் தொடர்ந்து வந்தவளோ ஓடிச் சென்று, “தேங்க்ஸ் வியுண்ணா…” என அவனை அணைத்துக் கொள்ளவும், ‘என்ன? அண்ணனா?’ என‌ ருத்ராக்ஷ் உட்பட அவளின் தோழிகள் அனைவரும் அதிர்ந்தனர்.

தன்னை அணைத்தவளை பதிலுக்கு அணைத்த வியான், “பப்பு ஹேப்பியா?” எனப் புன்னகையுடன் கேட்க, “ரொம்ப ரொம்ப ஹேப்பி வியுண்ணா… நான் சொன்னதுக்காக மறுக்காம என் காலேஜ் வந்தீங்களே… லவ் யூ அண்ணா…” என சந்தோஷமாகக் கூறியது இவ்வளவு நேரம் தன் சகோதரனின் ஆளுமையான தோற்றத்தை ரசித்துக் கொண்டிருந்த ஆத்யா தான்.

வியான், “என் பப்பு கேட்டு நான் மறுப்பேனா?” என்றவன் அவளின் நெற்றியில் முத்தமிட, புன்னகைத்த ஆத்யா, “அண்ணா… வாங்க நான் உங்களுக்கு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் இன்ட்ரூ பண்ணி வைக்கிறேன்… என் முன்னாடியே அவங்க உங்களை சைட் அடிக்கிறாங்கண்ணா… அவளுங்களுக்கு இருக்கு இன்னைக்கு…” எனச் செல்லக் கோபத்துடன் கூறியவள் தன் தோழிகளிடம் வியானை இழுத்துக்கொண்டு செல்ல, மென் புன்னகையுடன் அவளுடன் நடந்தான் வியான்.

ஆத்யா வியானை தம்மிடம் அழைத்து வரவும் அவளின் தோழிகள் அவன் வந்தது முதல் அவனை சைட் அடித்ததை மறந்து பதட்டமடைய, “வியுண்ணா… இவங்க மூணு பேரும் என் ஃப்ரெண்ட்ஸ்… இது அமுதா… இது வினோதினி… அப்புறம் இது தர்ஷினி…” என ஆத்யா அவர்களை அறிமுகப்படுத்தவும் தம் பதட்டத்தை மறைத்து மூவரும் வியானைப் பார்த்து புன்னகைக்க, “ஹாய் சிஸ்டர்ஸ்…” என வியான் புன்னகைக்கவும், ‘இவனுக்கு புன்னகைக்க கூட தெரியுமா?’ என மனதில் எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு அவன் ‘சிஸ்டர்ஸ்’ என அழைக்கவும் ‘புஸ்’ என்றானது.

ஆத்யா அவர்களின் முகம் போன போக்கைக் கண்டு வாயை மூடி சிரிக்க, அவளின் தோழிகள் மூவருமே ஆத்யாவை ஏகத்துக்கும் முறைத்தனர்.

வியான், “சரி டா பப்பு… நான் கிளம்புறேன்… ஒரு கேஸ் விஷயமா விசாரிக்க போக வேண்டி இருக்கு… ஆல்ரெடி லேட் ஆகிடுச்சு… காலேஜ் முடிஞ்சதும் எனக்கு இல்லன்னா விருவுக்கு ஒரு மெசேஜ் போட்டுட்டு வீட்டுக்கு கிளம்பு… பத்திரமா இருந்துக்கோ பப்பு…” என்கவும் ஆத்யா சரி எனத் தலையசைக்க, அவளின் தலையை வருடி விட்டு கிளம்பினான் வியான்.

வியான் செல்லும் போது தூரத்தில் நின்று ஆத்யாவையே கண்களில் காதல் சொட்ட பார்த்துக் கொண்டிருந்த ருத்ராக்ஷை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றான்.

மேடையில் அமர்ந்து இருந்தவனின் பார்வையிலிருந்து ஆத்யாவையே நோக்கிக் கொண்டிருந்த ருத்ராக்ஷ் தப்பவில்லை.

அவனின் முகம் இவ்வளவு நேரம் ஆத்யாவுடன் பேசும் போது இருந்த கனிவு மறைந்து மீண்டும் இறுக்கத்தைத் தத்தெடுத்தது.

வியான் சென்ற பின் ஆத்யாவை சூழ்ந்து கொண்ட அவளின் தோழிகள், “ஏன் டி இத்தனை நாளா உனக்கு இப்படி ஒரு ஹேன்ட்ஸமான அண்ணன் இருக்குறதை மறைச்ச?” எனக் கேட்க, அவர்களைப் போலியாக முறைத்த ஆத்யா, “பின்ன? உங்க கிட்ட இருந்து என் அண்ணனுங்களை காப்பாத்த தான்… ஆனா எனக்கு ரெண்டு அண்ணனுங்க இருக்குற விஷயம் உங்களுக்கு தான் முன்னாடியே தெரியுமே…” எனத் தோளைக் குலுக்கினாள்.

வினோதினி, “உனக்கு ரெண்டு அண்ணா இருக்குறது தெரியும் ஆது… ஆனா இவ்வளவு ஹேன்ட்ஸமா இருப்பாங்கன்னு தெரியாதே…” என சோக கீதம் வாசிக்க, “இப்போ மட்டும் தெரிஞ்சி என்ன பயன்? அதான் தங்கச்சின்னு கூப்பிட்டுட்டு போய்ட்டாரே…” என்றாள் தர்ஷினி.

அமுதாவும் அதனை ஆமோதித்து தலையசைக்க, தன் தோழிகளை முறைத்த ஆத்யா, “என் அண்ணனுங்க ரெண்டு பேரையும் இனிமே யாராவது சைட் அடிச்சீங்க கண்ணை நோண்டி காக்காக்கு போட்டுடுவேன்…” என மிரட்டவும் மூவரும் உதட்டை சுழித்தனர்.

************************************

“வாட் நான்சன்ஸ் ஆர் யூ டாக்கிங்? எப்படி இவ்வளவு கேர்லெஸ்ஸா இருப்பீங்க சஞ்சய்? நம்ம கம்பனிக்கு எவ்வளவு பெரிய லாஸ் தெரியுமா?  இவ்வளவு பெரிய தப்பு நடக்கும் வரை நீங்க எங்க பார்த்துட்டு இருந்தீங்க? இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா நம்ம கம்பனிக்கு எவ்வளவு பெரிய அசிங்கம் தெரியுமா? இதுக்கு தான் உங்களை கம்பனி மேனேஜரா அப்பாய்ன்ட் பண்ணி இருக்கேனா? உங்க சைன் இல்லாம எப்படி அந்த ஆளு இவ்வளவு பெரிய அமௌன்ட்டை ஆட்டையை போட்டு இருக்கார்?” எனக் கோபத்தில் தன் முன்னே தலை குனிந்து நின்றவனை பொரிந்து தள்ளினாள் மோனிஷா.

ஃபெதர்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர். இள வயது நவநாகரீக மங்கை. இன்றைய உலகில் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம் தான் ஃபெதர்ஸ் நிறுவனம். அனைத்துப் பொருட்களும் முதற் தரத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள் மோனிஷா. வெளிநாட்டில் தான் கற்ற கல்வியைப் பயன்படுத்தி இயற்கைப் பொருட்களையும உடலுக்கு தீங்கு விளைவிக்காத இரசாயனப் பொருட்களை குறைந்த விகிதத்திலும் பயன்படுத்தி ஃபெதர்ஸ் (இறகுகள்) என்ற பெயரில் சிறிய அளவில் தயாரிக்க ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் அவளது பொருட்கள் அதிகம் பிரசித்தி பெறவில்லை எனினும் படவரி (Instagram) மற்றும் முகப்புத்தகத்தில் (Facebook) தன் பொருட்கள் பற்றியும் அதன் தரத்தைப் பற்றியும் பதிவேற்ற, ஓரளவு ஃபாலோவர்ஸைப் பெற்றாள். அதன் மூலம் ஒன்று இரண்டு பேர் அவளின் பொருட்களை கொள்வனவு செய்யத் தொடங்கினர். அதில் திருப்தியடைந்தவர்கள் அதனை மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்ய, அவளின் பொருட்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் பிரசித்தி பெறத் தொடங்கின.

அதில் வரும் வருமானத்தில் தனக்குக் கீழே இன்னும் சிலரை வேலைக்கு அமர்த்தி, பொருட்களின் தரத்தை மேலும் உயர்த்தி, அனைத்து அழகுசாதனப் பொருட்களையும் தயாரிக்க ஆரம்பித்தாள். நாட்கள் செல்ல செல்ல அவளுக்கு அதன் மூலம் நல்ல இலாபம் கிடைக்கவும் சிறிதாக ஆரம்பித்த அவளது ஃபெதர்ஸ் நிறுவனத்தை சென்னை நகரில் ஓரளவு விரிவாக்கினாள். இரண்டு வருடங்களிலேயே மோனிஷாவின் முயற்சியாலும் அவளின் தன்னம்பிக்கையாலும் அவளின் நிறுவனம் விருட்சமாக வளர்ந்து வேரூன்றி நிற்கிறது. இந்தியாவிலேயே முதற் தர அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் என்ற பெயரையும் விரைவிலே பெற்றது ஃபெதர்ஸ் நிறுவனம்.

இவ்வளவையும் சுயமாக ஆரம்பித்து இன்று மக்கள் மத்தியில் பேசப்படும் அளவுக்கு தன் நிறுவனத்தைக் கொண்டு வந்தவளின் மனதில் பல வருடங்களாக ஒரு வெறுமை. பெற்றோர், உறவினர் யாரும் அற்று ஆசிரமத்தில் வளர்ந்தவளுக்கு சிறு வயதில் இருந்தே தன்னைப் போன்றோருக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஆழப் பதிந்திருந்தது.

அதற்காகவே நன்றாகப் படித்து பாடசாலை, கல்லூரி அனைத்திலும் சிறந்த மாணவியாகத் திகழ்ந்து அவளின் படிப்பிற்கு கிடைத்த உதவித்தொகையில் வெளிநாடு சென்று தன் கல்வியறிவை மேலும் வளர்த்துக் கொண்டாள். அவளின் நிறுவனம் வளர்ந்து அதில் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பங்கை அவள் வளர்ந்த ஆசிரமத்திற்கு என ஒதுக்கி அங்கிருக்கும் சிறுவர்களைத் தன்னால் இயன்றளவு படிக்க வைத்துக் கொண்டு இருக்கிறாள். அப்படி இருந்தும் அவளின் மனதில் இருந்த வெறுமை மட்டும் நீங்கவே இல்லை. அதன் காரணமும் பேதை முதலில் அறியவில்லை.

அப்போது தான் மோனிஷாவிற்கு யாரையாவது குடும்பம் சகிதமாக வெளியே கண்டு விட்டால் தனக்கு பெற்றோர், உறவினர் என வாழும் கொடுப்பினை கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் எழுவதைக் கண்டறிந்து தன் மனதிலுள்ள வெறுமையின் காரணத்தை அறிந்தாள். அதன் காரணமாக அவள் பலவீனம் அடைந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் தன் கவனம் மொத்தத்தையும் தன் பணியில் பதித்து சில நாட்களில் வெற்றியும் கண்டாள். ஆனால் அதனுடன் கூடவே தனிமையை அதிகம் விரும்ப ஆரம்பித்தாள். தன் மன ஏக்கத்தை யாருக்கும் வெளிக் காட்டி விடக் கூடாது என்ற எண்ணத்தில் எப்போதும் ஒரு இறுக்கத்துடனே இருப்பாள். அவளின் மனதில் இருக்கும் வெறுமையை போக்கும் சக்தி உடையவன் எங்கிருக்கிறானோ?

ஃபெதர்ஸ் நிறுவனத்தின் மேனேஜராக இருப்பவன் தான் சஞ்சய். அவனைத் தான் தற்சமயம் மோனிஷா இவ்வளவு கோபமாகத் திட்டிக் கொண்டிருக்கிறாள். காரணம் முதன் முறையாக அவளின் நிறுவனத்தில் நடந்துள்ள பண மோசடி.

சஞ்சய், “சாரி மேம்… இது எப்படி நடந்ததுன்னு நிஜமாவே தெரியல… நான் ஃபைல்ஸ் சைன் பண்ணும் போது எல்லாம் கரெக்ட்டா பார்த்து தான் பண்ணுவேன்…” எனத் தயக்கமாகக் கூற, “ஐ டோன்ட் நீட் யுவர் எக்ஸ்ப்ளனேஷன்ஸ் சஞ்சய்… அந்த ஆளு திருடின பணத்தை என்ன பண்ணான்னு முதல்ல விசாரிக்க சொல்லுங்க… கம்பனிக்கு உள்ள வேலை பார்க்குறவங்களே இப்படி மோசடி பண்ணினா நம்ம ப்ராடெக்ட்ஸ் வாங்குறவங்களுக்கு எப்படி நம்ம மேல நம்பிக்கை வரும்? இந்த லாஸை எப்படியாவது சரி பண்ண பாருங்க…” என்றாள் மோனிஷா.

சஞ்சய் அங்கிருந்து வெளியேறவும் தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்த மோனிஷாவின் மனமோ சமாதானம் அடைய மறுத்தது. எவ்வளவு முயன்றும் முடியாமல் சஞ்சய்யிடம் கூறி விட்டு புறப்பட்டுச் சென்றவள் நேரே சென்றது கடற்கரைக்குத் தான்.

************************************
“பப்பு… ஏன் இப்படி இருக்க? அப்படி என்ன பிடிவாதம்? அண்ணனுங்க ஊட்டி விடாம சாப்பாடு வயித்துக்குள்ள இறங்காதா? ப்ரேக் ஃபாஸ்ட், லன்ச் ரெண்டையும் தனியே தானே சாப்பிடுவ… நைட்டுக்கு மட்டும் என்ன வந்தது?” என பல மணி நேரமாக உண்ணாமல் போராட்டம் செய்து கொண்டிருந்த ஆத்யாவிடம் ஈஷ்வரி சற்று குரலை உயர்த்தி விடவும் சட்டென கண் கலங்கி விட்டாள் அவ் வீட்டின் இளவரசி.

பிரபு, “எதுக்கு ஈஷ்வரி சும்மா ஆதும்மாவை திட்டுற? வியானும் விரானும் தானே அவளுக்கு டெய்லி நைட் ஊட்டி விடுவாங்க…” என மனைவியைக் கடிந்துகொள்ள, “இல்லங்க… பாருங்க மணி என்னாச்சுன்னு? இவ்வளவு நேரம் இவ சாப்பிடாம இருந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?” என்றார் ஈஷ்வரி பேத்தியை எண்ணி வருத்தத்துடன்.

“என்ன சத்தம் இங்க?” எனக் கேட்டபடி வந்த வியானின் குரலில் அத்தனை அழுத்தம். உடனே ஈஷ்வரி அமைதி ஆகி விட,

ராஜாராம், “அதான் வந்துட்டான்ல உங்க அண்ணன்… சாப்பிடு ஆதும்மா…” எனக் கெஞ்ச, மறுப்பாகத் தலையசைத்தாள் ஆத்யா.

“நீ இன்னும் சாப்பிடலயா பப்பு? சாரி டா… சொன்னேன்ல ஒரு கேஸ் விஷயமா விசாரிக்க போறேன்னு… அதான் லேட்டு…” என மன்னிப்புக் கேட்ட வியானின் குரலில் சில நொடிகளுக்கு முன் இருந்த அழுத்தம் மறைந்து அவ்வளவு மென்மை.

சரியாக, “சாரி… சாரி… சாரி… சாரிடா பப்பு… இனிமே லேட் பண்ண மாட்டேன்… ப்ராமிஸ் டா…” என வந்ததும் வராததுமாக ஆத்யாவின் முன் நின்று தோப்புக்கரணம் போட ஆரம்பித்தான் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் அஞ்சும் அளவுக்கு வாதிடும் அந்த நேர்மையான வக்கீல் விரான் சர்வேஷ்.

அவனின் செய்கையில் அனைவரும் புன்னகைக்க, ஆத்யாவோ அவனைப் பார்க்காது மறுபக்கம் திரும்பிக் கொண்டாள். விரானோ மறுபக்கம் வந்தும் சலிக்காது தோப்புக்கரணம் போட, அதற்கு மேல் தன் சகோதரனை தண்டிக்க மனமின்றி புன்னகைத்தாள் ஆத்யா.

அவளின் புன்னகை முகத்தைக் கண்டதும் தான் அங்கிருந்த அனைவரின் மனமும் நிம்மதி அடைந்தது. அவளின் அண்ணன்களைப் பற்றி சொல்லவா வேண்டும்?

வியான் விரானிடம் புருவம் உயர்த்தி ஏதோ கேட்கவும் அதனைப் புரிந்து கொண்ட அவனின் சகோதரன் கண் மூடித் திறந்து தன் பதிலைக் கூற, லேசாகத் தலையசைத்தான் வியான்.

பின் சகோதரர்கள் இருவரும் சேர்ந்தே தம் செல்லத் தங்கைக்கு உணவை ஊட்ட, அவளும் பதிலுக்கு தன் சகோதரர்களுக்கு ஊட்டி விட்டாள்.

அதனைக் கண்டு பெரியவர்களின் கண்கள் கலங்கின.

சஜீவ் சர்வேஷ், நித்ய யுவனி இருவரும் இறந்த தினத்திலிருந்து ஆத்யாவின் முழுப் பொறுப்பும் அவனின் சகோதரர்களிடம் தான். தன் சகோதரர்கள் இன்றி எதுவுமே செய்ய மாட்டாள் ஆத்யா.

வியான், விரான் இருவரும் படித்து முடித்து வேலைக்கு செல்ல ஆரம்பிக்கவும் சகோதரர்கள் மூவருக்கும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் சந்தர்ப்பம் வெகுவாகக் குறைந்தது.

அதற்காக இருவரும் ஆத்யாவைக் கவனித்துக் கொள்ளாமல் இல்லை. வேலைக்கு சென்றாலும் அடிக்கடி அவளுக்கு அழைத்து அவளின் நலனை விசாரித்துக் கொள்வர். சிறு வயதில் இருந்தே அண்ணன்களின் மடியிலேயே வளர்ந்தால் அச் செல்லத் தங்கையால் அவர்களை விட்டு இருக்க முடியாத நிலை.

அதனால் தான் எந்த வேலை இருந்தாலும் இரவில் தனக்காக தன் சகோதரர்கள் நேரம் ஒதுக்க வேண்டும் என அவ் வீட்டின் இளவரசி கட்டளை இட, அதனை மறுக்கும் தைரியம் யாருக்கு உண்டு?

இரவுணவை தன் சகோதரர்கள் ஊட்டி விடாது உண்ண மாட்டாள் ஆத்யா. அதற்காக அவர்கள் இருவரும் எந்த வேலை இருந்தாலும் தம் தங்கைக்காக அதனைப் போட்டு விட்டு உடனே வீட்டுக்கு வந்து விடுவர்.

ஈஷ்வரி, “அண்ணா… அண்ணி தூங்கிட்டாங்களா?” என ராஜாராமிடம் கேட்க, “ஆமாம்மா… டேப்ளட்ஸ் போட்டதும் தூங்கிட்டா…” எனப் பதிலளித்த ராஜாராமின் கண்கள் லேசாகக் கலங்கின.

ஒரே மகளை இழந்த துக்கத்தில் வசந்தி படுத்த படுக்கை ஆகி விட, அம் மொத்தக் குடும்பத்தையும் வழி நடத்தும் பொறுப்பு ஈஷ்வரி உடையதாகியது.

இன்று வரை வயதானாலும் தன் திடமான மனதால் அக் குடும்பத்தையே நிர்வகிக்கிறார் ஈஷ்வரி.

இரவுணவை சகோதரர்கள் மூவரும் ஒன்றாக முடித்து விட்டு சிறிது நேரம் ஹால் சோஃபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

சோஃபாவின் இரு மூலையிலும் வியானும் விரானும் அமர்ந்திருக்க, அவர்களுக்கு நடுவில் அமர்ந்திருந்த ஆத்யா விரானின் மடியில் தலை வைத்து வியானின் மடியில் கால் நீட்டி படுத்தாள்.

சற்று நேரத்தில் ஆத்யா உறங்கி விடவும் புன்னகையுடன் அவளின் நெற்றியில் இதழ் பதித்தான் விரான்.

ஆத்யாவின் கால்களை விலக்கி விட்டு எழுந்த வியான் அவளின் தூக்கம் கலையாதவாறு மெதுவாக அவளின் அறைக்கு தூக்கிக்கொண்டு சென்று கட்டிலில் படுக்க வைத்தான்.

ஆத்யாவின் நெற்றியில் இதழ் பதித்த வியான் சில நொடிகள் அவளின் முகத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, அவனின் தோளில் கரம் பதித்த விரான், “வியு… நான் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வரேன்… டெரஸ்ல வெய்ட் பண்ணு…” என்கவும் சம்மதமாகத் தலையசைத்தான் வியான்.

மொட்டை மாடியில் தமையனுக்காக காத்திருந்த வியான் வானில் தெரிந்த அந்த ஒற்றை நிலவை வெறித்துக் கொண்டிருக்க, அவனின் பார்வை வீச்சு தாங்காது வெட்கம் கொண்டு வெண்மதியவள் மேகக் கூட்டங்கள் இடையே தன்னை மறைத்துக் கொண்டாள்.

‘அம்மு… நான் பண்ண போற இந்த காரியத்துல ஜெய்ப்பேனா அம்மு?’ என வானில் மின்னும் நட்சத்திரங்களைப் பார்த்து வியான் தன் மனதில் தாயுடன் பேச, அவனின் முகத்தை இளந் தென்றல் வந்து வருடியது.

“அம்மு என்ன சொல்றாங்க வியு?” என உடை மாற்றிக் கொண்டு வந்த விரானும் தன் சகோதரனுடன் சேர்ந்து இரவு வானில் பார்வையைப் பதித்தான்.

விரானின் கேள்வியில் லேசாகப் புன்னகைத்த வியான், “நம்ம கண்டிப்பா ஜெய்ப்போம்னு சொல்றாங்க…” என்க, “ஹ்ம்ம்… அப்பு கூட அதை தான் சொல்றார்…” என்றான் வியான் புன்னகையுடன்.

பெற்றோரின் மரணத்தின் பின் இதுவரையிலும் அவர்களை எண்ணி ஒரு துளி கண்ணீர் வடிக்காதவர்கள் தமக்குள் மொத்தமாக இறுகிப் போயினர்.

அந்த இரட்டையர்களுக்கு இருந்த ஒரே ஆறுதல் இந்த இரவு வானம் தான்.

மனம் அமைதியற்றுத் துடிக்கும் ஒவ்வொரு முறையும் சகோதரர்கள் இருவரும் இரவு வானில் தெரியும் நிலவையும் நட்சத்திரங்களையும் பார்த்தபடி தம் பெற்றோருடன் மனதால் பேசுவர். அவர்களுக்கு அதில் ஏதோ பெரிய திருப்தி.

சில நொடிகள் சகோதரர்கள் இருவரும் சேர்ந்தே இரவு வானை வெறித்துக் கொண்டிருக்க, இவ்வளவு நேரம் இருந்த இலகுத் தன்மை மறைந்து முகத்தை இறுக்கமாக வைத்த வியான் விரானிடம் திரும்பி, “போன விஷயம் என்னாச்சு விரு? ஏதாவது இன்ஃபார்மேஷன் கிடைச்சதா?” எனக் கேட்டான்.

விரான், “ஆமா வியு… போன காரியம் சக்சஸ் தான்… பட் நாம நினைக்கிறது போல இது ஒருத்தன் ரெண்டு பேர் பண்ற வேலை இல்ல… ஒரு பெரிய க்ரூப்பே இதுல சம்பந்தப்பட்டு இருக்கு…” என்கவும் முகத்தில் எந்த ஒரு அதிர்ச்சியையும் காட்டாத வியான், “எனக்கு முன்னாடியே இந்த சந்தேகம் இருந்தது… இப்போ கன்ஃபார்ம் ஆகிடுச்சு…” என அமைதியாகக் கூறவும் அதிர்ந்தான் விரான்.

வியான், “நீ இந்த கேஸை ஹேன்டில் பண்றது யாருக்காவது தெரியுமா விரு?” எனக் கேட்கவும் மறுப்பாகத் தலையசைத்த விரான், “என் அசிஸ்டனுக்கு கூட தெரியாது வியு… நீ கவலைப்படாதே…” என்றான்.

சில நொடிகள் அமைதியாய்க் கழிய, “வியு… நீ இன்னும் ஏன் அந்த லேடிக்கு எதிரா எந்த ஆக்ஷனும் எடுக்காம இருக்க?” என விரான் கேட்க, அவன் யாரைக் குறிப்பிடுகிறான் எனப் புரிந்த வியானின் கண்கள் கோபத்தில் சிவந்தன.

“எல்லாத்துக்கும் ஆதாரம் வேணுமேண்ணா… அந்த ஆதாரங்கள் மட்டும் என் கைக்கு கிடைக்கட்டும்… அப்புறம் அவளுக்கு இந்த வியான் யாருன்னு காட்டுறேன்…” என வியான் பல்லைக் கடித்துக்கொண்டு கூறவும் அவனின் தோளில் தட்டி அமைதிப்படுத்தினான் விரான்.

************************************
மறுநாள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்க, சகோதரர்கள் மூவரும் வீட்டில் இருந்தனர்.

வியானும் விரானும் கார்டனில் அமர்ந்து தொழில் சம்பந்தமாக ஏதோ பேசிக் கொண்டிருக்க, வசந்தியை சக்கர நாற்காலியில் அமர்த்தி தள்ளிக்கொண்டு அங்கு வந்தாள் ஆத்யா.

சகோதரர்கள் இருவரும் தம் தங்கையைக் கேள்வியாக நோக்க, “பாட்டி எப்பவும் ரூம்லயே இருக்காங்களேண்ணா… அவங்களுக்கு போர் அடிக்கும்ல… அதான் வெளிய கூட்டிட்டு வந்தா பாட்டியோட மனசுக்கு கொஞ்சம் ரிலேக்ஸா இருக்கும்ல…” என ஆத்யா கூறவும் அங்கு வந்த ராஜாராம், “ஆதும்மா… உங்க பாட்டி எங்க போனாலும் அவங்க மூஞ்சி அப்படி தான் இருக்கும்…” எனக் கேலி பேசவும் அவரை ஏகத்துக்கும் முறைத்தார் வசந்தி.

வசந்தி, “கிழவனுக்கு வயசாகியும் இன்னும் குசும்பு மட்டும் குறையல…” என்க, “எனக்கு எங்க வசு வயசாகிடுச்சு? பாரு எப்படி ஸ்ட்ரோங்கா இருக்கேன்னு…” என ராஜாராம் கூறவும், “ஆமா… இவருக்கு அப்படியே இளமை ஊசலாடுது…” என வசந்தி உதட்டை சுழிக்கவும் அங்கு பலத்த சிரிப்பலை எழுந்தது.

“எதுக்குண்ணா சும்மா என் அண்ணியை கிண்டல் பண்ணுறீங்க?” எனத் தன் சம்மந்தியம்மாவிற்கு வக்காலத்து வாங்கியபடி அங்கு வந்தார் ஈஷ்வரி.

பிரபுவும் அங்கு வந்தவர், “உங்க அண்ணிய ஒன்னு சொன்னா போதுமே…” என மனைவியைக் கேலி செய்தார்.

திடீரென, “பாட்டி…” என சத்தம் வரவும் அனைவரும் சத்தம் வந்த திசையில் பார்வையைப் பதிக்க, அங்கு காவ்யா தன் கணவன் கௌதம் மற்றும் அவர்களின் மகன் தேவ்வுடன் வந்திருந்தாள்.

“ஹை… கவிச் சித்தி…” எனத் துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடிய ஆத்யா காவ்யாவை அணைத்துக்கொள்ள, “எப்படி இருக்க ஆதும்மா?” எனத் தன் அக்காவின் மகளை அணைத்துக்கொண்டாள் காவ்யா.

“வாங்க மாப்பிள்ளை… வாம்மா காவ்யா…” என அவர்களை வரவேற்றார் ராஜாராம்.

விரான், “டேய்‌ தேவ்? எப்படி டா இருக்க? இப்போ தான் இந்த அண்ணன்களைப் பார்க்க வரணும்னு தோணிச்சா?” என்கவும் அவனை வந்து அணைத்துக்கொண்ட பத்து வயதேயான தேவ் தாடையில் விரல் வைத்து ஏதோ யோசித்தவன், “நீங்க விரான் அண்ணாவா? இல்ல வியான் அண்ணாவா?” எனக் கேட்க, “விரான்” என்கவும், “நான் இங்க வரணும்னு தான் டெய்லி சொல்லுவேன் அண்ணா… இந்த அப்பாவும் அம்மாவும் தான் ரொம்ப பேட்… ஏதாவது வேலை இருக்குன்னு சொல்லிட்டே இருப்பாங்க…” எனக் குற்றப் பத்திரிகை வாசித்தான்.

“அண்ணா…” என வியானையும் அணைத்துக்கொண்ட தேவ், “அண்ணா… நான் உங்களை டீவில பார்த்தேன்ணா… நீங்க டிஷ்யூம் டிஷ்யூம்னு ரௌடிங்களை அடிப்பீங்களா?” எனக் கேட்க, லேசாகப் புன்னகைத்த வியான், “யாரு தேவ் உனக்கு அப்படி சொன்னாங்க?” எனப் பதிலுக்கு கேட்கவும், “மூவீஸ்ல எல்லாம் போலீஸ் ஹீரோ அப்படி தானேண்ணா ரௌடிங்களை அடிப்பாங்க…” என தேவ் கூறவும் அனைவரும் சிரித்தனர்.

வசந்தி, ஈஷ்வரி இருவருமோ குழந்தை மனம் மாறாமல் பேசும் தேவ்வைப் பார்த்தபடி இதே வயதில் தானே தன் பேரன்களும் தம் பெற்றோரை இழந்து தம் வயதை விட அதிக பக்குவத்துடன் இருந்தனர் என எண்ணும் போதே அவர்கள் கண்கள் கண்ணீரை சிந்தின.

“வியு கண்ணா… விரு கண்ணா…” என அவர்களை நெருங்கிய காவ்யா வாஞ்சையுடன் தன் சகோதரியின் புத்திரர்களின் தலை கோத, “சித்தி…” என இருவரும் அவளை அணைத்துக் கொண்டனர்.

தன் ஆசை மாமனின் மறு உருவமாக இருந்த இருவரையும் கண்டு காவ்யாவின் கண்கள் கலங்கின.

அந்த சூழ்நிலையை இலகுவாக்கும் பொருட்டு, “தாத்தா… பாட்டி… கவிச் சித்தியும் ஃபேமிலியா வந்து இருக்காங்க… அண்ணனுங்களும் இன்னைக்கு வீட்டுல இருக்காங்க… நாம ஏன் பெரிப்பா, பெரிம்மா, மாமாங்க, அத்தைங்க எல்லாரையும் வர சொல்லி ஒரு ஃபேமிலி கெட்டுகெதர் நடத்தக் கூடாது?” என ஆத்யா ஆசையாகக் கேட்கவும் அனைவருக்கும் அவளின் யோசனை பிடிபட, அவர்கள் சம்மதிக்கவும் உடனே அனைவருக்கும் அழைத்து தகவல் தெரிவித்தாள் ஆத்யா.

சில மணி நேரத்திலேயே அனைவரின் வருகையாலும் வீடு கலை கட்டத் தொடங்கியது.

ஜனனி – பிரேம், அவர்களின் மகள் அனுராதா, அஞ்சலி – சித்தார்த், அவர்களின் பிள்ளைகளான தீக்ஷா, அர்ஜுன், திவ்யா – ஹரிஷ், அவர்களின் மகன் அபிமன்யு, ஆரவ் – பிரியா, அவர்களின் மகள் அவ்னி, ஜீவிகா – வீராஜ், அவர்களின் மகள் பூர்ணிமா என அனைவரும் வந்திருந்தனர்.

அனுராதா வியான் மற்றும் விரானை விட ஒரு வருடம் மூத்தவள். பூர்ணிமா வியான் மற்றும் விரானை விட சில மாதங்களால் மூத்தவள். தீக்ஷா, அபிமன்யு இருவரும் சம வயதினர். விரான் மற்றும் வியானை விட ஒரு வருடம் இளையவர்கள். அவர்களிலும் ஒரு வருடம் இளையவர்கள் தான் அர்ஜுன் மற்றும் அவ்னி.

அனைவரும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, ஏதோ அழைப்பு வரவும் சற்று தள்ளிச் சென்று பேசி விட்டு வந்த விரானை வழி மறித்தாள் அவ்னி.

விரான் புருவம் உயர்த்தி அவளிடம் என்ன எனக் கேட்கவும் அவனின் கண்களையே உற்று நோக்கினாள் அவனி.

அவளின் செயலில் சிரிப்பு வந்தாலும் அதனைத் தனக்குள் அடக்கிய விரான் அவளைக் கேள்வியாய் நோக்க, அவனின் கண்களை நன்றாக உற்று நோக்கிய அவ்னி சட்டென புன்னகை முகத்துடன், “விரான் அத்தான்…” எனக் கத்தினாள்.

“என்னாச்சு அவ்னிம்மா? ஏன் அப்படி பார்த்த?” என விரான் புன்னகையுடன் கேட்கவும் வியானை ஒரு முறை திரும்பிப் பார்த்த அவ்னி ரகசியம் கூறவது போல் வியானின் காதின் அருகில் சென்று, “நீங்களும் வியான் அத்தானும் பார்க்க அப்படியே ஒரே மாதிரி இருக்கீங்க… பட் உங்க கண்ணோட கலர் டிஃபரன்ட்டா இருக்கும்… உங்க கண் ப்ரௌன் கலர்ல இருக்கும்… வியான் அத்தானோட கண் ப்ளூ கலர்ல இருக்கும்… அதான் நீங்க வியான் அத்தானா விரான் அத்தானான்னு செக் பண்ணேன்… வியான் அத்தான் எப்பப்பாரு உம்முன்னே இருப்பார்… சரியான முசுடு… போலீஸ் வேற… எனக்கு அவரைப் பார்த்தா லைட்டா பயம்…” என்கவும் சிரித்த விரான் அவளின் காதை மெல்லமாகத் திருகியபடி, “என் கிட்டயே வந்து என் தம்பியை முசுடுன்னு சொல்றியா? இரு உன்ன அவன் கிட்ட போட்டுக் கொடுக்குறேன்…” என்றான் விளையாட்டாய்.

அவ்னி, “ஐயோ வேணாம் அத்தான்… எல்லாரும் சேர்ந்து படம் பார்க்கலாமான்னு கேட்கத் தான் வந்தேன்… எங்க நீங்கன்னு நினைச்சி வியான் அத்தான் கிட்ட இதைப் போய் கேட்டா அவர் முறைப்பார்…” என்றாள் சோகமாக.

“சரி சரி… நான் சொல்லல… நீ சும்மா மூஞ்சியை இப்படி அப்பாவி போல வெச்சி நடிக்காதே தாயே… நான் கேட்குறேன் எல்லார் கிட்டயும்…” என வியான் கூறவும், “தேங்க்ஸ் அத்தான்…” என்று விட்டு ஓடினாள் அவ்னி.

வியான் ஏதோ தீவிர சிந்தனையில் இருக்கவும் அவன் அருகில் வந்து அமர்ந்த அனுராதா, “என்னாச்சு வியான்? ஏன் ஒரு மாதிரி இருக்க? ஏதாவது ப்ராப்ளமா?” எனக் கேட்க, லேசாகப் புன்னகைத்த வியான், “இல்லக்கா… சும்மா தான்… ஒரு கேஸ் விஷயமா திங்க் பண்ணிட்டு இருந்தேன்…” என்கவும் அவனைப் பொய்யாக முறைத்த அனுராதா, “எல்லாரும் சேர்ந்து ஜாலியா இருக்க வந்து இருக்கோம்… இன்னைக்கு ஒரு நாளாவது உன் வேலைக்கு லீவ் கொடுக்க முடியாதா? நீ மட்டும் தனியா இங்க வந்து உட்கார்ந்துட்டு இருக்க…” எனக் கடிந்து கொண்டாள்.

உடனே தன் இரு காதுகளையும் பிடித்த வியான், “சாரி அக்கா…” என மன்னிப்பு வேண்ட, புன்னகைத்த அனுராதா அவனின் முடியைக் கலைத்து விட்டாள்.

ஆத்யாவிற்கு தாய், தந்தை, சகோதரன் என எல்லாமுமாக இருக்கும் இரட்டைச் சகோதரர்கள் அனுராதாவிடம் மட்டும் தான் அடங்கிப் போவார்கள். அவள் ஏதாவது கூறினால் மறுக்காது கேட்பார்கள்.

“ஆஹ்… அண்ணா…” என்ற ஆத்யாவின் அலறல் சத்தம் கேட்கவும் விரானும் வியானும் என்னவோ ஏதோவென பதறி அவளிடம் ஓட, அவளோ கீழே விழுந்து கையை சிராய்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னாச்சு பப்பு?” என இருவரும் ஓடிச் சென்று அவளைத் தூக்கி விட, “விழுந்துட்டேன்ணா…” என்ற ஆத்யாவின் முகம் வலியில் சுருங்கி இருந்தது.

அதனைக் கண்டு அவளின் சகோதரர்களின் கண்களும் கலங்கின.

ஜனனி, “பார்த்து கவனமா இருக்க மாட்டியா ஆதும்மா? பாரு கைல இரத்தம் வருது…” என வருத்தமாகக் கேட்க, “தேவ் கூட ஹைட் அன்ட் சீக் விளையாடிட்டு இருந்தேன் பெரியம்மா… வழில இருந்த கல்லைக் கவனிக்கல… அதுல ஸ்லிப் ஆகி விழுந்துட்டேன்…” என்றாள் ஆத்யா கண்ணீருடன்.

“என்ன தேவ் இது? உனக்கு தனியா விளையாட முடியாதா? எதுக்கு ஆது அக்காவ கம்பல் பண்ண?” என தன் மகனைக் காவ்யா கடிந்துகொள்ள, “அவனைத் திட்டாதீங்க சித்தி… பாவம் அவன்… அவன் மேல எந்தத் தப்பும் இல்ல… நான் தான் அவனை விளையாட கூப்பிட்டேன்…” என்றாள் ஆத்யா.

“ரொம்ப வலிக்குதா பப்பு?” என வியான் கவலையாகக் கேட்க, ஆத்யா ஆம் என உதடு பிதுக்கினாள்.

இருவரும் மெதுவாக அவளை உள்ளே அழைத்துச் செல்லவும் ஜனனி ஆத்யாவின் காயத்திற்கு மருந்திட்டாள்.

அஞ்சலி, “சும்மாவே இந்தப் பசங்க ரெண்டு பேரும் ஆதும்மாவை அப்படி தாங்குவாங்க… இப்போ அடி வேற பட்டிருக்கு… கேட்கவா வேணும்?” என சித்தார்த்திடம் புன்னகையுடன் கூறவும் சித்தார்த் புன்னகைத்தான்.

வியானும் விரானும் ஆத்யாவை விட்டு எங்கும் நகராமல் இருக்க, அனைவரும் அதனைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டனர்.

ஆண்கள் ஹாலில் அமர்ந்து தொழில் சம்பந்தமாக பேசிக் கொண்டிருக்க, ஈஷ்வரியை மிரட்டி அமர வைத்து பெண்கள் அனைவரும் சமையல் பொறுப்பை ஏற்றனர்‌.

இளம் பட்டாளமோ ஒன்றாக அமர்ந்து படம் பார்த்தனர்.

அந்த நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியாகக் கழிந்தது.

************************************

“ரியா… நீ கண்டிப்பா அந்த காலேஜுக்கு போகணுமாம்மா? நம்ம ஊருல இருக்குற காலேஜுக்கே வேலைக்கு போலாமேம்மா…” என சுவாமிநாதன் வருத்தமாகக் கூற, “அப்பா… இது எனக்கு ரொம்ப பிடிச்ச வேலைப்பா… எனக்கு சென்னைல தான் அப்பாய்ன்மன்ட் கிடைச்சி இருக்கு… கொஞ்சம் நாள் போகட்டும்… செட் ஆகலன்னா நான் ட்ரான்ஸர் வாங்கிட்டு நம்ம ஊருக்கே வந்திடுறேன்…” என்றவாறு சென்னை செல்ல தன் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் ரிதன்யா.

சுவாமிநாதன், “அதுக்கில்லடாம்மா… சென்னைல ஒரு காலேஜ்ல தான் இப்போ கொஞ்சம் நாள் முன்னாடி ஒரு பொண்ணு சூசைட் பண்ணிக்கிட்டா… இன்னும் அந்த கேஸ் முடிவுக்கு வரல… அது கொலையா தற்கொலையான்னே தெரியல… அம்மா இல்லாத பொண்ணு… எனக்கு உன்ன விட்டா யாரும்மா இருக்கா ரியா?” என்க, “அப்பா… அப்படி எதுவும் ஆகாதுப்பா… வீணா பயப்படாதீங்க… நான் முதல்ல சென்னை போய் வீடு எல்லாம் செட் ஆனதும் உங்களையும் கூட்டிட்டு போறேன்… உங்க பொண்ணு மேல நம்பிக்கை இல்லையாப்பா?” என ரிதன்யா கேட்கவும் பதறிய சுவாமிநாதன், “என்ன ரியா கேள்வி இது? என் பொண்ணை நம்பாம நான் வேற யாரை நம்ப போறேன்? நீ போய்ட்டு வாடா கண்ணா… ஆனா பார்த்து பத்திரமா இருடா…” எனக் கண் கலங்கக் கூறவும் அவரை அணைத்துக்கொண்டாள் ரிதன்யா.

பின் சுவாமிநாதன் பேரூந்து நிலையம் வரை சென்று ரிதன்யாவை வழி அனுப்பி வைக்க, தன் வாழ்வின் புதிய அத்தியாயம் சென்னையில் தொடங்க இருப்பதை அறியாது ரிதன்யா அந்தப் பயணத்தை ரசித்தபடி சென்னை நோக்கிப் பயணித்தாள்.

************************************
தன் மனம் கவர்ந்தவளின் நினைவில் முகத்தில் புன்னகையுடன் விசில் அடித்தபடி வீட்டிற்குள் நுழைந்த ருத்ராக்ஷின் முன் வந்து நின்றார் அவனின் சித்தி.

அவரைக் கண்டதும் ருத்ராக்ஷின் முகத்தில் இருந்த புன்னகை மறைந்து கோபம் குடி கொண்டது.

ஆனால் அதனை அவரிடம் வெளிப்படுத்த விருப்பமின்றி அவரைக் கடந்து செல்ல முயல, “என்னப்பா ரொம்ப ஹேப்பியா இருக்க போல…” என ருத்ராக்ஷின் கரத்தைப் பிடித்து நிறுத்தி அவனின் சித்தி புன்னகையுடன் கேட்கவும் கோபமாக அவரின் கரத்தைத் தட்டி விட்டு ருத்ராக்ஷ் அங்கிருந்து செல்ல, ஹாலில் அமர்ந்திருந்த அவனின் தந்தை சக்கரவர்த்தி, “என்ன ருத்ரா இது? சித்தி கிட்ட இப்படி தான் நடந்துக்குவியா? எவ்வளவு பாசமா உன் கூட வந்து பேசினாங்க… ஒழுங்கா அவ கிட்ட சாரி கேளு…” எனக் கடிந்து கொண்டார்.

ஏளனமாக உதட்டை வளைத்த ருத்ராக்ஷ், “யாரு? இவங்களுக்கு என் மேல பாசமா?” எனக் கேலியாகக் கேட்டபடி அவனின் சித்தியை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்க்க, உள்ளுக்குள் எழுந்த கோபத் தீயை மறைத்து அவனைப் பார்த்து புன்னகைத்தார் அவர்.

ருத்ராக்ஷ், “அதான் சித்தின்னு சொன்னீங்களே… அப்போ சித்தி போல நடந்துக்க சொல்லுங்க டாட்… அதை விட்டுட்டு எனக்கு அம்மா ஆக ட்ரை பண்ண வேணாம்னு சொல்லுங்க… என்னைக்கா இருந்தாலும் என் அம்மா இடத்துக்கு இந்தப் பொம்பளயால வர முடியாது…” எனக் கோபமாகக் கூறி விட்டு அங்கிருந்து தன் அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.

“ருத்ராக்ஷ்…” எனக் கோபத்தில் சத்தமிட்ட சக்கரவர்த்தியை, “விடுங்கங்க… நம்ம பையன் தானே… ஏதோ கோவத்துல பேசிட்டு போறான்… கொஞ்ச நாள் போனா என்னைப் புரிஞ்சிக்கிட்டு நல்லா பேசுவான் பாருங்க…” என ருத்ராக்ஷின் சித்தி சமாதானப்படுத்த, “பாரு சித்ரா எப்படி பேசுறான்னு… நீ எவ்வளவு பாசமா சொந்த பையன் போல அவன் கிட்ட நடந்துக்குற… அவன் கொஞ்சம் கூட உன்ன மதிக்காம போறான்… எல்லாம் நீ கொடுக்குற இடம் தான்… திரும்ப என் முன்னாடி அவன் உன்ன இப்படி நடத்தட்டும்… அப்போ இருக்கு அவனுக்கு…” எனக் கோபமாகக் கூறி விட்டு அங்கிருந்து செல்ல, கண்களில் வன்மம் தெறிக்க ருத்ராக்ஷின் அறையை வெறித்தாள் சக்கரவர்த்தியின் இரண்டாம் தாரமான சுசித்ரா.

************************************
யாருக்கு யாரு ஜோடின்னு ஏதாவது கெஸ் இருக்கா மக்களே? 🤗

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    Your email address will not be published. Required fields are marked *