Loading

VAV HOSPITALS & FERTILITY CENTER என வாசலில் பெரிதாகப் பெயரிடப்பட்டிருந்த மருத்துவமனையின் பிரசவ அறையின் முன் பதட்டமாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான் சஜீவ் சர்வேஷ்.

தன்னவளின் சொந்தமாக மகப்பேற்று மருத்துவமனை கட்டி இயலாதவர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கும் கனவை தன் கனவாக எண்ணி ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து நித்ய யுவனிக்காக சஜீவ் சர்வேஷ் கட்டிக் கொடுத்தது தான் இந்த VAV HOSPITALS & FERTILITY CENTER.

தம் புத்திரர்களினதும் பிறக்கப் போகும் பிள்ளையின் முதல் எழுத்தையும் வைத்தே இருவரும் ஆசை ஆசையாக மருத்துவமனைக்கு பெயரிட்டு இருந்தனர்.

நித்ய யுவனி இரண்டாம் முறையாக கருவுற்ற பின் முதல் முறை தன்னவளுடன் இருந்து செய்ய முடியாத அனைத்தையும் பல மடங்காக இம் முறை செய்தான் சஜீவ்.

கால் தரையில் படாத வண்ணம் அவளைத் தாங்கினான் என்று கூறினால் மிகையாகாது. நித்யா லேசாக முகம் சுருக்கினால் கூட சஜீவ்வின் மனம் துடிக்கும்.

தாம் இழந்த நாட்களை எல்லாம் அணு அணுவாக ரசித்து வாழ்ந்தனர்.

அவர்களின் காதலின் பரிசை கையில் ஏந்தவே தற்போது இவ்வளவு பதட்டமாக காத்துக் கொண்டிருக்கிறான் சஜீவ்.

அவனுக்கு இணையாக அவனின் புத்திரர்களும் தந்தையைப் போலவே அங்குமிங்கும் பதட்டமாக நடந்து கொண்டிருக்க, இவர்களின் கூத்தைக் கண்டு இருவரின் பெற்றோரும் தலையில் அடித்துக் கொண்டனர்.

“விரு கண்ணா… வியு கண்ணா… பாட்டி கிட்ட வாங்க…” என ஈஷ்வரி அழைக்கவும் விரான் ஓடிச் சென்று வசந்திக்கும் ஈஷ்வரிக்கும் இடையில் அமர்ந்தான்.

வியானோ நித்ய யுவனியை அனுமதித்திருந்த அறையையே ஏக்கமாகப் பார்த்தபடி நின்றிருந்தான்.

ஒரு பக்கம் ராஜாராம் தன் மகளை எண்ணி கவலையுடன் அமர்ந்திருக்க, இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என எண்ணிய பிரபு பதட்டமாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த சஜீவ்வை நிறுத்தி வியானைக் காட்டினார்.

அப்போது தான் சஜீவ்விற்கும் வியானின் நிலை புரிய, அவன் அருகே சென்று அவனின் உயரத்துக்கு மண்டியிட்டான்.

வியான், “அப்பு… அம்மு…” எனச் சோகமாக அறையைக் கை காட்ட, அவனை அணைத்துக்கொண்டான் சஜீவ்.

உடனே தன் பாட்டிகளை விட்டு ஓடி வந்த விரான் சஜீவ்வின் மறுபக்கம் வந்து அணைத்துக்கொள்ள, இவ்வளவு நேரம் இருந்த பதட்ட நிலை மாறி அனைவரின் முகத்திலும் ஒரு புன்னகை அரும்பியது.

தன் புத்திரர்களை தன்னை விட்டு விலக்கிய சஜீவ், “ஏன் ரெண்டு பேரும் சோகமா இருக்கீங்க?” என இருவரின் கன்னம் பற்றி புன்னகையுடன் கேட்க, விரான் வியானின் முகத்தைப் பார்த்து விட்டு, “எங்க க்ளாஸ்ல கார்த்திக்னு ஒரு ஃப்ரெண்ட் இருக்கான் அப்பு… கொஞ்சம் நாள் முன்னாடி அவனோட அம்மா கூட தங்கச்சி பாப்பா எடுத்துட்டு வரதா சொல்லி ஹாஸ்பிடல் போனாங்களாம்… ஆனா அவங்க திரும்பி வரவே இல்லயாம்… தங்கச்சி பாப்பா கூட வரலயாம்… ரெண்டு பேரும் சாமி கிட்ட போய்ட்டாங்களாம்…” என்க, “அம்முவும் பாப்பா கூட சேர்ந்து சாமி கிட்ட போயிடுவாங்களா அப்பு?” என வியான் கவலையாகக் கேட்கவும் அதிர்ந்தான் சஜீவ்.

அவனின் கேள்வியில் அனைவரின் இதயமும் ஒரு நொடி துடிக்க மறந்தது.

சஜீவ்விற்கு அது பற்றி எண்ணவே பயமாக இருந்தது.

அவசரமாக தன்னிலை மீண்ட சஜீவ், “விரு… வியு… அம்முவுக்கு அப்படி ஒன்னும் நடக்காதுடா… உங்க அம்மா ரொம்ப ப்ரேவ் தானே…” என்கவும் இருவரும் வேகமாக ஆம் எனத் தலையசைக்க, “அப்புறம் என்ன? அம்மு காட் கிட்ட ஃபைட் பண்ணி பாப்பாவையும் கூட்டிட்டு நம்ம கிட்ட திரும்பி வருவாங்க… ஓக்கேயா?” என சஜீவ் கூறி முடிக்கும் போது அவனையும் மீறி கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.

தன் பிஞ்சுக் கரங்களால் அதனைத் துடைத்து விட்ட வியான், “அப்போ நாங்க இனிமே ஃபீல் பண்ண மாட்டோம் அப்பு… நீங்களும் அழாதீங்க…” என்க, “ஆமா அப்பு… நானும் வியுவும் அம்முவையும் பாப்பாவையும் சிரிச்சிட்டே வெல்கம் பண்ணுவோம்…” எனப் புன்னகைக்கவும் இருவரையும் பாய்ந்து அணைத்துக் கொண்டான் சஜீவ்.

சில மணி நேரத்திலேயே நித்ய யுவனியின், “அம்மா…” என்ற அலறலும் அதனைத் தொடர்ந்து ஒரு குழந்தை வீரிட்டு அழும் சத்தமும் கேட்கவும் அனைவரும் முகம் மலர்ந்தனர்.

சற்று நேரத்தில் வெள்ளை நிற துவாலைக்குள் சுற்றி ஒரு பஞ்சுக் குவியலை நர்ஸ் வந்து சஜீவ்வின் கரத்தில் தரவும் முதல் முறை போலவே மெல்லிய நடுக்கத்துடன் கண்களில் கண்ணீருடன் தன் செல்ல மகளை தன் கரத்தில் ஏந்தி அன்பு முத்தமிட்டான் சஜீவ்.

அனைவருமே வந்து குழந்தையை மாறி மாறி தூக்கிக் கொஞ்ச, சஜீவ் நித்ய யுவனியின் புதல்வர்களோ அந்தப் பக்கம் கூட வரவே இல்லை.

ராஜாராம், “வியான் கண்ணா… விரான் கண்ணா… பாப்பாவை பார்க்கலயா?” எனக் கேட்கவும் இருவருமே ஒரே போல் மறுப்பாகத் தலையசைத்தனர்.

சஜீவ் அவர்களைப் புரியாமல் பார்க்க, “முதல்ல அம்முவை பார்க்கணும்…” என வியான் கூறவும் புன்னகைத்த சஜீவ், “அம்முவை இப்பவே பார்க்க முடியாதுடா வியு… வார்டுக்கு மாத்தினதும் போய் பார்க்கலாம்… இப்போ ரெண்டு பேரும் வந்து பாப்பாவை பாருங்க…” என்க, “முடியாது… அம்முவை தான் முதல்ல பார்க்கணும்…” என விரான் உறுதியாகக் கூறி விடவும் வேறு வழியின்றி அனைவரும் அமைதியாகினர்.

நித்ய யுவனியை வார்டுக்கு மாற்றியதும் முதல் ஆளாக விரானும் வியானும் தம்  தாயைக் காணச் செல்ல, தன் மகவைக் கரத்தில் ஏந்திக்கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தான் சஜீவ்.

நித்ய யுவனி இன்னும் மயக்கத்திலேயே இருக்க, ஆளுக்கு ஒரு பக்கம் அவளின் கரத்தைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தனர் விரான் மற்றும் வியான்.

தன்னவள் விழி திறக்கும் வரை காத்திருந்த சஜீவ் நித்ய யுவனி மெதுவாக விழி திறக்கவும் அவளை நெருங்கி அவளின் நுதலில் ஆழமாக இதழ் பதித்தான்.

அதில் புன்னகைத்த நித்ய யுவனி தன் கரங்களைப் பிடித்துக்கொண்டு அமர்ந்து இருந்து புத்திரர்களின் கன்னம் வருட, “அம்மு…” என இருவரும் அவளை பாய்ந்து அணைத்துக் கொள்ளவும் பதறிய சஜீவ், “ஹேய் பார்த்து…” எனக் கத்தினான்.

பதிலுக்கு அவர்களை அணைத்துக்கொண்ட நித்ய யுவனி, “எனக்கு ஒன்னும் இல்ல சஜு… எனக்கு கொஞ்சம் எழுந்திரிக்க ஹெல்ப் பண்ணுங்க…” என்கவும் அவளின் முதுகில் கரம் கொடுத்து சாய்வாக அமர வைத்தான் சஜீவ்.

“ரெண்டு பேரும் ரொம்ப பயந்துட்டீங்களா?” என நித்ய யுவனி தன் புதல்வர்களைப் பார்த்துக் கேட்கவும், “ஆமா யுவி… ஏதேதோ கற்பனை பண்ணி என்னையும் சேர்த்து பயமுறுத்திட்டாங்க…” என்ற சஜீவ் தம் மகவை நித்ய யுவனியின் கரத்தில் வைக்கவும் குழந்தையின் குட்டிக் கரத்தில் தன் முதல் முத்தத்தைப் பதித்தாள் நித்ய யுவனி.

“பாப்பா… பாப்பா…” என இருவரும் தம் தங்கையை காணத் தடுமாற, நித்ய யுவனி அவர்களுக்கு தெரியுமாறு குழந்தையை வைக்கவும் வியானும் விரானும் குழந்தையைத் தொட்டுப் பார்க்க கை நீட்ட, ‘இனி வரும் காலம் தன் அண்ணன்கள் மட்டும் தான் தனக்கு எல்லாமே…’ எனத் தெரிந்ததாலோ என்னவோ குழந்தை புன்னகைத்தபடி தன் பிஞ்சு விரல்களால் தன் சகோதரர்களின் விரலை இறுக்கிப் பிடித்துக் கொண்டது.

“சஜு… இங்க பாருங்க… பாப்பா சிரிக்கிறா… அப்படியே உங்களை மாதிரியே இருக்கா… கியூட்டா…” என நித்ய யுவனி மகிழ்ச்சியுடன் கூற, “ம்ஹ்ம்ம்… என் யுவி போல இருக்கா…” என நித்ய யுவனியை அணைத்துக் கொண்டான் சஜீவ்.

தம் பெற்றோரை முறைத்த விரான் மற்றும் வியான், “பாப்பா எங்களைப் போல தான் இருக்கா…” என்கவும் ஒருவரையொருவர் காதலுடன் நோக்கிக் கொண்டனர் சஜீவ் சர்வேஷ் மற்றும் நித்ய யுவனி.

சற்று நேரத்தில் அவர்களின் பெற்றோர்கள் வந்து நலம் விசாரிக்க, சஜீவ், நித்யா இருவரின் நண்பர்களும் தம் குழந்தைகளுடன் அங்கு வர, அவ்விடமே மகிழ்ச்சிக்கு குறைவில்லாமல் இருந்தது.

************************************

“சுச்சி கண்ணா… அப்பா கூட பேசுடா…” என சிறைக் கம்பிகளுக்கு வெளியே நின்று ரகுவரன் கெஞ்சிக் கொண்டிருக்க, சுசித்ராவோ சுவற்றை வெறித்தபடி தன் தந்தை பேசுவதை காதிலே வாங்காமல் அமர்ந்திருந்தாள்.

அவள் கண்களோ கோபத்தில் இரத்தச் சிவப்பைக் கொண்டிருந்தன.

மனதில் பழி வெறி ஊறிக் கிடக்க, அதனைத் தீர்க்கும் நாளை வெகுவாக எதிர்ப்பார்த்துக் காத்திருந்தாள்.

ரகுவரன், “சுச்சி..‌.” என வருத்தமாக ஏதோ கூற வர, “பேசாதீங்க… பேசாதீங்க… போங்க முதல்ல இங்க இருந்து… ஊருல பெரிய ஆள்னு பெயர் மட்டும் தான்… பெத்த பொண்ணுக்கு ஜாமீன் வாங்கத் துப்பில்லையா? ச்சே… கிளம்புங்க இங்க இருந்து… அடுத்த தடவை என்னைப் பார்க்க வரதா இருந்தா ஜாமீன் வாங்கிட்டேன்னு நல்ல செய்தியோட வாங்க…” எனத் தந்தை என்றும் பாராமல் ஆவேசமாகக் கத்தவும் வேறு வழியின்றி அங்கிருந்து கிளம்பிப் போனார் ரகுவரன்.

தன் முன் இருந்த சுவற்றில் கல்லொன்றை எடுத்து நித்ய யுவனியினதும் சஜீவ்வினதும் பெயரை எழுதி விட்டு, கோபமாக அதனை வெட்டியவள், “நித்யா… சர்வா… உங்க ரெண்டு பேரையும் குடும்பத்தோட அழிச்சி உங்களைப் பழி வாங்காம விட மாட்டேன்…” என்ற சுசித்ரா, “ஆஹ்…………” என பித்துப் பிடித்தது போல் அச் சிறையே அதிரக் கத்தினாள்.

************************************

சுகப் பிரசவம் என்பதால் மூன்று நாட்களிலே நித்ய யுவனியை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

விரானும் வியானும் தம் தங்கையை விட்டு ஒரு நொடி கூட எங்கும் நகராது இருக்க, சஜீவ்விற்கு அது தன்னவளுடன் நேரம் செலவழிக்க ஏதுவாக அமைந்தது.

நல்லதொரு நாளில் சஜீவ், நித்ய யுவனியின் செல்ல மகளுக்கு சுற்றத்தார் ஆசிர்வாதத்துடன் ஆத்யா எனப் பெயரிட்டனர்.

ஆத்யா தன் தாய், தந்தை, சகோதரர்கள் தவிர்த்து யாரிடமும் செல்ல மாட்டாள்.

அதிலும் அழும் குழந்தையை நித்ய யுவனியால் கூட அவ்வளவு சீக்கிரம் சமாளிக்க முடியாது. ஆனால் ஆத்யாவோ தன் சகோதரர்கள் ஒருவர் அருகில் இருந்தால் மட்டும் உடனே தன் அழுகையை நிறுத்தி பொக்கை வாய் தெரிய சிரிப்பாள்.

அதனைக் காணும் போது நித்ய யுவனிக்கும் சஜீவ்விற்கும் மகிழ்ச்சியில் கண்கள் கலங்கும்.

அன்றும் அது போலவே வியானும் விரானும் தரையில் அமர்ந்து ஆத்யாவுடன் விளையாடிக் கொண்டிருக்க, அவர்களையே கட்டிலில் அமர்ந்தபடி ஏதோ தீவிர சிந்தனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் நித்ய யுவனி.

சத்தம் வராமல் அறைக்குள் நுழைந்த சஜீவ் பின்னிருந்து நித்ய யுவனியை அணைத்துக்கொள்ளவும் தன்னிலை மீண்டவள், “என்ன பண்றீங்க சஜு? பசங்க இருக்காங்க…” என சஜீவ்வை விலக்கியபடி மெதுவாகக் கடிந்து கொண்டாள்.

அவளின் மடியில் தலை சாய்த்த சஜீவ், “என் பொண்டாட்டியைக் கொஞ்சவும் அவ கூட ரொமான்ஸ் பண்ணவும் நான் யாரோட பர்மிஷன் கேட்கணும்?” என்கவும் முகம் சிவந்த நித்ய யுவனி அதனை தன்னவனுக்கு மறைக்க அரும்பாடு பட்டாள்.

நித்ய யுவனி, “மூணு பசங்க வந்துட்டாங்க… இன்னும் என்ன ரொமான்ஸ் வேண்டிக் கிடக்குது உங்களுக்கு?” என சலித்துக்கொள்ள, “ஏய்… என்ன நீ பல்லு போன கிழவி போல பேசிட்டு இருக்க?” என்ற சஜீவ் நித்ய யுவனியின் கழுத்தை சுற்றி கரம் போட்டு தன் முகத்துக்கு நேராக கொண்டு வந்தவன், “நமக்கு எத்தனை பசங்க வந்தாலும் எத்தனை வயசு ஆகினாலும்… ஏன் நம்ம பல்லெல்லாம் விழுந்து, தோல் சுருங்கி, கண்ணுல குழி விழுந்து, முடி எல்லாம் நரைச்சி போய் தாத்தா பாட்டி ஆனா கூட நான் உன் மேல வெச்சிருக்குற காதலும் நீ என் மேல வெச்சி இருக்குற காதலும் மாற போறதே இல்ல… அப்போ கூட என் யுவி கிழவி கூட நான் ரொமான்ஸ் பண்ணுவேன்… யாரும் என்னை ஏன்னு ஒரு வார்த்தை கேட்க முடியாது… கடந்து போகும் ஒவ்வொரு நொடியும் நம்ம காதல் கூடிட்டு தான் போகுமே ஒழிய கொஞ்சம் கூட குறையாது… நீ எப்பவும் என் யுவி தான்… நான் எப்பவும் உன் சஜு தான்… சாவா இருந்தாலும் ரெண்டு பேருக்கும் ஒரே சமயத்துல தான் வரும்… மரணம் கூட நம்மள பிரிக்க முடியாது யுவி…” என்று விட்டு தன்னவளின் இதழ்களை சிறை செய்தான்.

சில நொடிகள் நீடித்த அம் முத்தம் வியானின், “அப்பு…” என்ற கத்தலில் கலைய, தன்னிலை மீண்டவர்கள் வியானைக் கேள்வியாகப் பார்க்கவும் நித்ய யுவனியை வந்து அணைத்துக் கொண்டான் வியான்.

வியான், “என் அம்முவை என்ன பண்ணீங்க நீங்க?” என முறைப்புடன் கேட்கவும் நித்ய யுவனி, ‘இதுக்கு தான் பசங்க முன்னாடி வேணாம்னு சொன்னேன்… பார்த்தீங்களா?’ என்ற பாவனையில் சஜீவ்வை எரித்து விடுவது போல் பார்க்க, தலையில் அடித்துக்கொண்ட சஜீவ், “டேய்… அவ உனக்கு அம்மு ஆக முன்னாடி என்னோட யுவி டா… நிம்மதியா ரொமான்ஸ் பண்ண விடுறானான்னு பாரு…” என்று முன் பாதியை சத்தமாகச் சொன்னவன் பின் பாதியை வாய்க்குள் முணங்கினான்.

நித்ய யுவனி சஜீவ்வின் முகத்தைப் பார்த்தே அவனின் எண்ணவோட்டத்தை அறிந்து கொண்டவள் உதடு மடித்து சிரிக்க, அவளை முறைத்த சஜீவ் விரானுடன் விளையாடிக் கொண்டிருந்த ஆத்யாவைத் தூக்கிக்கொள்ளவும் வீரிட்டு அழத் தொடங்கினாள் ஆத்யா.

“ஷ்ஷ்…ஷ்ஷ்ஷ்…” என சஜீவ் அவளைத் தன் தோள் மீது போட்டு ஆட்டியபடி சமாதானப்படுத்த முயல, ஆத்யாவோ அழுகையை நிறுத்தாது இருந்தாள்.

“அப்பு… நீங்க பப்புவை அழ வெச்சிட்டீங்க…” என விரான் சிணுங்கவும், “எனக்குன்னே வந்து பிறந்து இருக்காங்க பாருங்க… மூணு பேரும் இந்த அப்பனையே வெச்சி செய்றாங்க…” என சஜீவ் சலிப்பாகச் சொன்னாலும் அவனுக்கும் தன் பிள்ளைகளின் ஒற்றுமையைக் காண அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

ஆத்யாவின் சகோதரர்களிடமே அவளை ஒப்படைத்த பின் தான் அவளின் அழுகை நின்றது.

சஜீவ் பால்கனியில் சென்று நின்று கொண்டு வானத்தை வேடிக்கை பார்க்க, தன்னவனின் அருகே வந்து அவனின் தோள் சாய்ந்தாள் நித்ய யுவனி.

புன்னகையுடனே தன் மனையாளின் தோளைச் சுற்றி கரம் போட்டு நித்ய யுவனியை மேலும் தன்னோடு இறுக்கி அணைத்த சஜீவ், “லவ் யூ யுவி…” என்க, “லவ் யூ டூ சஜு…” என்றாள் நித்ய யுவனி விழி மூடி.

சில நொடிகள் மௌனமாய் அந்தத் தருணத்தை இருவரும் ரசித்துக் கொண்டிருக்க, சஜீவ்வே பேச்சைத் தொடங்கினான்.

“நான் உள்ள வரும் போது ஏதோ டீப் திங்கிங்ல இருந்தியே யுவி… என்னாச்சு? ஏதாவது ப்ராப்ளமா?” என சஜீவ் கேட்கவும் தன் பிள்ளைகளை ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டு பெருமூச்சு விட்ட நித்ய யுவனி, “பசங்களை மிஸ் பண்ண போறது போல ஒரு ஃபீல் சஜு… ஏன்னு தெரியல… காலைல இருந்து இப்படி தான் இருக்கு… அவங்களை விட்டு நாம ரொம்ப தூரம் போக போறோம் போல ஃபீல் ஆகுது…” என்றவளின் கன்னம் தாண்டி கண்ணீர் வடிந்தது.

அவளைத் தன் பக்கம் திருப்பி கட்டி அணைத்துக்கொண்ட சஜீவ், “ஏன் யுவி அப்படி எல்லாம் யோசிக்குற? நம்ம பசங்களை விட்டு நாம எங்க போக போறோம்? நாமளே போக நினைச்சாலும் அவங்களால நம்மள விட்டுட்டு இருக்க முடியாது…” என்க, “அது தான் சஜு எனக்கு இருக்குற பயமே… நமக்கு ஏதாவது ஆச்சுன்னா பசங்க எப்படி இருப்பாங்க? பார்த்தீங்கல்ல கொஞ்சம் நேரம் கூட வியுவும் விருவும் நம்மள விட்டு இருக்க மாட்டேங்குறாங்க… பப்பு கூட பரவால்ல அண்ணனுங்க கூட இருந்தா எதுவுமே புரியாது… ஆனா வியுவும் விருவும்?” எனக் கண் கலங்கினாள் நித்ய யுவனி.

தன்னவளின் கண்ணீர் சஜீவ்வின் மார்பை நனைக்க, நித்ய யுவனியை தன்னை விட்டு விலக்கி அவள் கண்களை ஆழப் பார்த்த சஜீவ், “யுவி… வீணா எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதே… நாம ரெண்டு பேரும் நம்ம பசங்க கூட தான் இருக்க போறோம்… யாராலயும் அவங்களை நம்மள விட்டு பிரிக்க முடியாது… இதையே நினைச்சி நினைச்சி இருக்குற நிமிஷங்களை இழந்துடாதே… சரியா? என் யுவி தானே… இனி இதைப் பத்தி எதுவும் யோசிக்க கூடாது…” என்கவும் நித்ய யுவனி சம்மதமாய் தலையசைக்க, “தெட்ஸ் மை கேர்ள்…” எனப் புன்னகைத்த சஜீவ் நித்ய யுவனியின் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்து அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டான்.

எவ்வளவு தான் தன்னவளுக்கு சமாதானம் கூறினாலும் நித்ய யுவனி கூறிய விடயம் சஜீவ்வின் மண்டையைக் குடைந்து கொண்டே இருந்தது.

“சர்வா… நித்யாம்மா… உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வந்திருக்காங்க…” என ஈஷ்வரி கீழே இருந்து குரல் கொடுக்கவும் இருவரும் தம் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு கீழே சென்றனர்.

நித்ய யுவனி ஆத்யாவைத் தூக்கிக்கொண்டு கீழே இறங்கவும், “பப்பு…” எனக் கத்திக்கொண்டே சிறுவர்கள் அனைவரும் அவளை நோக்கி ஓடி வந்தனர்.

ஆத்யா அனைவரிலும் இளையவள் என்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் செல்லப் பிள்ளை அவள்.

ஜனனி – பிரேம், அஞ்சலி – சித்தார்த், திவ்யா – ஹரிஷ், பிரியா – ஆரவ் தம்பதிகள் தம் குழந்தைகள் சகிதம் வந்திருந்தனர்.

விரானும், வியானும், “அக்கா…” எனக் கத்திக் கொண்டு ஜனனியின் மகள் அனுராதாவின் கரத்தை ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்துக் கொண்டனர்.

ஈஷ்வரி ஆத்யாவை வாங்கிக் கொள்ளவும் சிறுவர்கள் அவரிடம் செல்ல, தன் உயிர்த்தோழியை அணைத்துக் கொண்டாள் ஜனனி.

“எப்படி இருக்க நித்து?” என்ற ஜனனியின் கேள்விக்கு, “நான் ரொம்ப நல்லா இருக்கேன் ஜெனி… நீ எப்படி இருக்க? நீங்க யாருமே வரதா சொல்லவே இல்லயே… என்ன சர்ப்ரைஸ் விசிட்டிங்?” எனக் கேட்டாள் நித்ய யுவனி புரியாமல்.

ஹரிஷ், “பப்பு பிறந்ததுல இருந்து புருஷனும் பொண்டாட்டியும் எங்கேயும் வரல… அதான் நாங்களே உங்களைத் தேடி வந்துட்டோம்… இன்னைக்கு ஃபுல்லா இங்க தான்…” என்கவும் அனைவரும் புன்னகைத்தனர்.

நித்ய யுவனி, “சித்…” என சித்தார்த்தை அணைத்துக்கொள்ள, சஜீவ் இருவரையும் முறைத்துப் பார்த்தான்.

சித்தார்த், “அங்க பாரு நிது உன் புருஷன… இன்னுமே பழைய மாதிரியே என்னை எப்படி முறைக்கிறார் பாரு…” என்கவும் சஜீவ் தன்னையும் மீறி சிரித்து விட்டான்.

அங்கு கலகலப்புக்கு குறைவே இல்லாமல் இருக்க, இங்கு சிறையில் சுசித்ராவோ அடிபட்ட பாம்பாய் பழி வாங்க துடித்துக் கொண்டிருந்தாள்.

************************************

நான்கு வருடங்களுக்கு பிறகு…

சஜீவ்வின் வீட்டில் அனைவரும் அவ் வீட்டின் குட்டி இளவரசி ஆத்யாவின் நான்காவது பிறந்த நாளைக் கொண்டாட பரபரப்பாகத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

மொத்த குடும்பமும் நண்பர்கள் பட்டாளமும் அங்கே கூடி இருக்க, எந்தப் பக்கம் திரும்பினாலும் சிறுவர்கள் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது.

“ஆதும்மா… குட் கேர்ள் தானே பப்பு… அடம் பிடிக்காம அம்மு சொல்றதை கேளுடா… இந்த ஃப்ராக் பப்புக்கு சூப்பரா இருக்கும்டா… அப்படியே ப்ரின்ஸஸ் போல…” என நித்ய யுவனி ஆத்யாவிடம் ஒரு உடையைக் காட்டி கெஞ்சிக் கொண்டிருக்க, “ஆமா பப்பு… அப்புவோட செல்ல ப்ரின்ஸஸ்… அம்மு சொல்ற ட்ரெஸ்ஸை போடுவீங்களாம்…” என சஜீவ்வும் மறு பக்கம் வந்து கெஞ்சினான்.

ஆனால் அவர்களின் செல்ல மகளோ, “மாட்டேன்… மாட்டேன்… அந்த ட்ரெஸ் வேணாம்…” எனக் கத்திக்கொண்டு அறையைச் சுற்றி ஓடினாள்.

நித்ய யுவனி, “பப்பு… பப்பு… இங்க அம்மு கிட்ட வா…” என சற்று குரலை உயர்த்தவும் ஆத்யா அழத் தொடங்கி விட்டாள்.

“என்ன பண்ற யுவி? எதுக்கு குழந்தை கிட்ட கத்திட்டு இருக்க?” எனத் திட்டிய சஜீவ் ஆத்யாவைத் தூக்கிக்கொள்ள, அவள் அழுகையை நிறுத்தவே இல்லை.

தங்கையின் அழு குரல் கேட்டதும் அவளின் பத்து வயதான இரு அண்ணன்களும், “பப்பு…” என ஓடி வந்தனர்.

பத்து வயதான விரானும் வியானும் தம் தங்கையை அவ்வளவு அன்பாகப் பார்த்துக் கொள்வர்.

ஆத்யா என்ன கேட்டாலும் செய்து விடுவர். ஆத்யா கொஞ்சம் முகம் வாடினால் கூட உடனே அவளுக்காகச் சண்டைக்குச் செல்வர்.

ஆத்யாவும் அதே போல் தன் சகோதரர்களை யாரும் எதுவும் கூற விட மாட்டாள். அப்படி யாராவது தன் சகோதரர்களை ஏதாவது சொல்லி விட்டால் போதும். உடனே தன் குட்டிப் பற்களால் கடித்து வைத்து விடுவாள்.

பலமுறை நித்ய யுவனி ஆத்யாவின் இந்தக் குணத்துக்காக அவளைக் கடிந்து கொண்டிருப்பாள். ஆனால் உடனே ஆத்யாவின் தந்தையும் சகோதரர்களும் நித்ய யுவனியுடன் சண்டைக்கு வந்து விடுவர்.

வியானுக்கு எவ்வளவு தான் நித்ய யுவனி தான் எல்லாமுமாக இருந்தாலும் ஆத்யாவைத் திட்டினால் தன் தாயுடனே மல்லுக்கு நிற்பான்.

இப்போது கூட விரானும் வியானும் ஆத்யாவை சமாதானப்படுத்தி நித்ய யுவனி காட்டிய உடையையே அணிவித்து ஆத்யாவின் இரு பக்கமும் கை கோர்த்து குட்டி இளவரசி போல் கீழே அழைத்துச் சென்றனர்.

இன்னும் கோபம் குறையாமல் அமர்ந்து இருந்தவளின் அருகே வந்து அமர்ந்த சஜீவ் நித்ய யுவனியின் கரத்தை எடுத்து தனக்குள் வைத்துக்கொண்டு, “யுவி… என்னாச்சு உனக்கு? எதுக்கு இப்போ பப்பு மேல கோவப்படுற? அவ சின்ன குழந்தை டி…” என்க, அவனின் கரத்தை தட்டி விட்ட நித்ய யுவனி, “என்ன சின்ன குழந்தை சஜு? பார்த்தீங்களா இந்த வயசுலயே எப்படி பிடிவாதம் பிடிக்கிறான்னு… இதுல அவளை கொஞ்சம் திட்டி திருத்தலாம்னு பார்த்தா உடனே நீங்களும் உங்க பசங்களும் பப்புக்காக என் கிட்ட சண்டைக்கு வந்துடுவீங்க…” எனக் கோபமாகக் கூறியவளின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன.

“ப்ச்… யுவி…” என அவளைத் தன் மார்பில் சாய்த்துக் கொண்ட சஜீவ், “விடும்மா… குழந்தைங்கன்னாலே இப்படி தானே… பெரிய பசங்களா வளரும் போது சரி வந்துடுவாங்க… அதுவும் அவங்க நம்ம வளர்ப்பு யுவி… தப்பா போவாங்களா?” என்கவும் மூக்கை உறிஞ்சியவள், “தெரியல சஜு… ஏதோ என் மனசை அரிக்குது… ரொம்ப பயமா இருக்கு… எப்படி வெளிய சொல்லன்னு புரியல… எனக்கு ஒன்னுன்னா கூட நான் தாங்கிப்பேன்… ஆனா நான் எவ்வளவு போல்டா இருந்தாலும் பசங்களுக்கோ உங்களுக்கோ ஒன்னுன்னா உடஞ்சி போயிடுறேன்…” எனக் கண்ணீர் சிந்தினாள் நித்ய யுவனி.

சஜீவ், “யுவி… ஏன் இப்படி இருக்க நீ? கொஞ்சம் நாளாவே இப்படி தான் நடந்துக்குற? பப்பு பிறந்தப்ப கூட இப்படி தான்… நம்ம பசங்களை விட்டு நாம பிரிஞ்சா அவங்க எப்படி இருப்பாங்கன்னு யோசிச்சிட்டு இருந்த… பாரு… நாழு வருஷம் போயிடுச்சு… நாம நம்ம பசங்க கூட சந்தோஷமா தானே இருக்கோம்… நீ வீணா ஒவ்வொன்ன நினைச்சி வருத்தப்பட்டு அது நம்ம பசங்களையும் பாதிக்கிறது போல பண்ணாதே யுவி…” என்கவும் நித்ய யுவனி சரி எனத் தலையாட்ட, “என்ன நடந்தாலும் நான் உன் கூட இருப்பேன் யுவி… நம்ம பசங்களுக்கும் ஒரு பிரச்சினையும் வராது… இதே அன்பு அவங்களுக்குள்ள எப்பவும் இருக்கும்… சரி வா கீழ போகலாம்… எல்லாரும் வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன்… கேக் கட் பண்ற டைம் ஆச்சு…” என்ற சஜீவ் நித்ய யுவனியின் முகத்தைக் கழுவ வைத்து கீழே அழைத்துச் சென்றான்.

நித்ய யுவனியின் வாடிய முகத்தைக் கண்டு ஜனனி சஜீவ்விடம் கண்களாலே என்ன எனக் கேட்க, எதுவும் இல்லை என இட வலமாகத் தலையசைத்தான் சஜீவ்.

பிரேம், “வாங்க வாங்க… கேக் கட் பண்ணலாம்… இன்னைக்கு நம்ம லிட்டில் ப்ரின்ஸஸ் பர்த்டேய ஜாலியா என்ஜாய் பண்ணலாம்…” என மகிழ்ச்சியுடன் கூறவும் அந்த மகிழ்ச்சி அனைவரையும் தொற்றிக்கொண்டது.

விரானும் வியானும் ஆத்யாவின் கரத்தைப் பிடித்து கட்டிகையை வெட்ட, ஆத்யா முதல் துண்டை விரானுக்கும் வியானுக்கும் ஒரே சமயத்தில் ஊட்டி விட்டாள்.

அனைவரும் கை தட்ட, “ஹேப்பி பர்த் டே பப்பு…” எனத் தம் தங்கையை அணைத்துக்கொண்ட சகோதரர்கள் தாம் சேமித்து வைத்த பணத்தில் இருந்து அவளுக்கு பிடித்த பார்பி பொம்மைகளை வாங்கி பரிசாகக் கொடுத்தனர்.

பின் நித்ய யுவனிக்கும் சஜீவ்விற்கும் ஆத்யா கட்டிகையை ஊட்டி விட, இருவரும் சேர்ந்து ஆத்யாவின் கழுத்தில் டாலருடன் கூடிய ஒரு தங்கச் செயினை மாட்டி விட்டனர்.

அந்த திறந்து மூடக் கூடிய டாலரினுள் குட்டியாக ஐவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது.

சிறுவர்கள், பெரியவர்கள் அனைவருக்கும் கட்டிகையை ஊட்டி விட்ட பின் சிறுவர்கள் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்க, நித்ய யுவனிக்கு அவளின் மருத்துவமனையில் இருந்து அழைப்பொன்று வந்தது.

நித்ய யுவனி ஒரு ஓரமாகச் சென்று அழைப்பை ஏற்கவும் மறுபக்கம், “ஹலோ டாக்டர்… ஒரு இமர்ஜென்சி கேஸ்… பேஷன்ட்டும் அவங்க ஃபேமிலியும் நீங்க தான் கண்டிப்பா வந்து டெலிவரி பார்க்கணும்னு சொல்றாங்க…” என மருத்துவமனை ஊழியர் ஒருவர் கூற,

“நான் எப்படிங்க இன்னைக்கு வர முடியும்? இன்னைக்கு என் பொண்ணோட பர்த்டே… நீங்க டாக்டர் சவிதா கிட்ட சொல்லுங்க… அவங்க அந்த கேஸை ஹேன்டில் பண்ணுவாங்க…” என்றாள் நித்ய யுவனி.

மறுபக்கம் அந்த ஊழியரிடம் இருந்து தொலைபேசியை வாங்கி பேசிய டாக்டர் சவிதா, “டாக்டர்… நாங்க எல்லாரும் எவ்வளவோ கன்வின்ஸ் பண்ணோம்… நான் டெலிவரி பார்க்குறேன்னு சொன்னேன்… ஆனா அவங்க கேட்க மாட்டேங்குறாங்க… சாரி டாக்டர்… நீங்க கொஞ்சம் வந்தீங்கன்னா நல்லா இருக்கும்… ஏதாவது ப்ராப்ளம் ஆச்சுன்னா நம்ம ஹாஸ்பிடல் நேம் தான் கெட்டு போகும்…” என்க, “ப்ச்… ஏன் தான் இவங்க இப்படி பண்றாங்களோ? சரி நீங்க அது வரைக்கும் பார்த்துக்கோங்க சவிதா… நான் உடனே கிளம்பி வரேன்…” என்று விட்டு நித்ய யுவனி அழைப்பைத் துண்டித்தாள்.

கைப்பேசியைக் கையில் வைத்துக்கொண்டு நித்ய யுவனி ஏதோ யோசனையுடன் இருக்க, “என்னாச்சு யுவி? யார் கால் பண்ணாங்க? ஏன் டென்ஷனா இருக்க?” எனக் கேட்டுக்கொண்டே அங்கு வந்தான் சஜீவ்.

நித்ய யுவனி, “ஹாஸ்பிடல்ல இருந்து கால் பண்ணாங்க சஜு… இமர்ஜென்சி கேஸ் ஒன்னு… நானே கண்டிப்பா போக வேண்டிய சூழ்நிலை… அது தான் என்ன பண்ணன்னு புரியல…” என்க, “இதுல என்ன யோசிக்க இருக்குது யுவி? இமர்ஜென்சி கேஸ்னு சொல்ற… பப்புவோட பார்ட்டி முடிஞ்சிடுச்சு தானே… நீ போய்ட்டு வா யுவி… டாக்டர்ஸ் கடவுளுக்கு சமம்… நீ போறது ரெண்டு உயிரைக் காப்பாத்த…” என சஜீவ் கூறவும் சம்மதித்த நித்ய யுவனி மருத்துவமனைக்கு கிளம்பப் பார்க்க, “நீ தனியா போக வேணாம் யுவி… நானும் உன் கூட வரேன்…” என்றான் சஜீவ்.

“பசங்க மட்டுமே சஜு இங்க… நீங்களும் வந்தா அவங்க தனியா இருப்பாங்களே…” என நித்ய யுவனி மறுக்க, “நாம இல்லன்னா என்ன யுவி? வீட்டுல எல்லாரும் இருக்காங்க தானே… அவங்க சமாளிப்பாங்க… உன் கூட நான் மட்டும் தானே இருக்கேன்…” என சஜீவ் கூறவும் நித்ய யுவனியின் முகத்தில் புன்னகை.

பின் இருவரும் வீட்டில் சொல்லிக்கொண்டு கிளம்ப, திடீரென ஆத்யா, “அம்மு… அப்பு…” என அழத் தொடங்கினாள்.

நித்ய யுவனியும் சஜீவ்வும் எவ்வளவு சமாதானப்படுத்தியும் ஆத்யா இருவரையும் செல்ல விடாது அழ, இருவருக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை.

வழமையாக தங்கையை சமாதானப்படுத்தும் அண்ணன்களோ அவளுடன் சேர்ந்து தம் பெற்றோரைக் கட்டி அணைத்துக்கொள்ள, நித்ய யுவனிக்கும் சஜீவ்விற்கும் ஏனோ துக்கம் தொண்டையை அடைத்தது.

ஜீவிகா, “என்னாச்சு இன்னைக்கு இவங்களுக்கு? பப்பு வேற இப்படி அழறா…” என வருத்தமாகக் கூற, “எனக்கும் தெரியல ஜீவி…” என்றான் வீராஜ்.

வியான் நித்ய யுவனியை இறுக்கி அணைத்துக் கொள்ள, விரான் சஜீவ்வை அணைத்துக் கொண்டான். நித்ய யுவனியும் சஜீவ்வும் ஆத்யாவை அணைத்துக் கொண்டிருந்தனர்.

“வியு கண்ணா… விரு கண்ணா… அப்புவும் அம்முவும் சீக்கிரமா வந்துடுவோம்டா… ரெண்டு பேரும் பப்புவை பத்திரமா பார்த்துக்கோங்க… சரியா…” என நித்ய யுவனி கூற, வியானும் விரானும் அவர்களை விடாது மறுப்பாகத் தலையசைத்தனர்.

சஜீவ், “என் வியுவும் விருவும் குட் பாய்ஸ் இல்லயா? என்னாச்சு உங்களுக்கு? அம்முவும் அப்புவும் ஹாஸ்பிடல் போய்ட்டு சீக்கிரம் வந்துடுவோம்…” என்க, “போக வேணாம் அப்பு… அம்மு எங்க கூடவே இருங்க… நான் அண்ணா கூட சண்டை போட மாட்டேன்…” என்றான் வியான்.

“நான் வியுவோட திங்க்ஸ் எதுவும் பர்மிஷன் இல்லாம எடுக்க மாட்டேன் அம்மு… பப்புவையும் வியுவையும் நான் பத்துரமா பார்த்துப்பேன்… நீங்க போக வேணாம்…” என விரான் பெரிய மனிதன் போல் கூற, நித்ய யுவனியும் சஜீவ்வும் தம் கவலை மறந்து புன்னகைத்தனர்.

“என்னாச்சு உங்க எல்லாருக்கும்? விரான் கண்ணா‌… வியான் கண்ணா… ஆதும்மா… வாங்க பாட்டி கிட்ட… அப்பாவும் அம்மாவும் இங்க பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடலுக்கு தானே போறாங்க… அதுக்கு எதுக்கு இவ்வளவு அலப்பறை? யுவனி… நீயும் என்ன சின்ன பசங்க போல கண்ணைக் கசக்கிக்கிட்டு…” என வசந்தி கடிந்துகொள்ள, பிள்ளைகளின் பிடி இறுகியது.

ராஜாராம், “என்ன மாப்பிள்ளை நீங்களும் இது? பசங்களை நாங்க பார்த்துக்குறோம்… நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு சீக்கிரம் வாங்க…” என்றவர் ஆத்யாவை தூக்க முயற்சிக்க, அவளோ வருவேனா என அடம் பிடித்தாள்.

தன் கண்களைத் துடைத்துக்கொண்ட நித்ய யுவனி ஆத்யாவின் கன்னம் ஏந்தி, “என் ப்ரின்ஸஸ் அவ அண்ணனுங்க கூட குட் கேர்ளா இருப்பாளாம்… அப்புவும் அம்முவும் சீக்கிரமா வந்துடுவோமாம்…” என்க, ஆத்யாவோ இன்னும் சத்தமாக அழத் தொடங்கினாள்.

நித்ய யுவனிக்கு மீண்டும் மருத்துவமனையில் இருந்து அழைப்பு வர, வேறு வழியே இன்றி தம்மை விட்டு குழந்தைகளை விலக்கி விட்டு எழுந்தாள்.

ஆத்யாவின் கரத்தை எடுத்து விரானினதும் வியானினதும் கரத்திற்குள் வைத்த சஜீவ், “அப்புவும் அம்முவும் வரும் வரை பப்புவை பத்திரமா பார்த்துக்கோங்க… தாத்தா, பாட்டிங்களுக்கு தொந்தரவு பண்ணக் கூடாது… ரெண்டு பேரும் சண்டை போட்டுக்க கூடாது… என்ன நடந்தாலும் மூணு பேரும் ஒருத்தரை ஒருத்தர் எந்த இடத்திலயும் விட்டுக் கொடுக்க கூடாது…” என்கவும் விரானும் வியானும் சம்மதமாகத் தலையசைத்தனர்.

சஜீவ்வும் நித்ய யுவனியும் தம் குழந்தைகளை ஆரத் தழுவி முகம் முழுவதும் முத்தமிட்டவர்கள் ஆத்யா அழ அழ, மனமேயின்றி அங்கிருந்து கிளம்பினர்.

விரானும் வியானும் ஆத்யாவின் இரு பக்கமும் நின்று அவள் கரத்தைப் பற்றிக் கொண்டு தம் பெற்றோரையே கண்களில் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அழும் மனைவியை சமாதானப்படுத்தும் வழி அறியாது தானும் கண் கலங்கியபடி மருத்துவமனை நோக்கி பயணமானான் சஜீவ் சர்வேஷ்.

குழந்தைகளை பெரியவர்கள் ஒரு வழியாக சமாதானப்படுத்த, அவர்களோ முன்பிருந்த மகிழ்ச்சி மறைந்து ஏதோ கவலையுடனே மற்ற சிறுவர்களுடன் விளையாடினர்.

சில மணி நேரங்கள் கழிந்து சஜீவ்வின் வீட்டில் சிறுவர்கள் ஒரு பக்கம் விளையாட, பெரியவர்கள் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, காவல் துறையினர் வீட்டினுள் நுழைந்தனர்.

சிறுவர்கள் பயந்து ஒரு மூலையில் ஒதுங்க, பெரியவர்களோ என்னவோ ஏதோ என பதட்டம் அடைந்தனர்.

பிரபு, “என்னாச்சு சார்? எதுக்கு வந்திருக்கீங்க? ஏதாவது ப்ராப்ளமா?” எனப் புரியாமல் கேட்க, சில நொடி மௌனம் காத்த காவல்துறை அதிகாரி, “சஜீவ் சர்வேஷ், நித்ய யுவனி… உங்க பசங்களா?” எனக் கேட்டார்.

அவர்களின் கேள்வியில் அனைவரையும் பயம் தொற்றிக்கொண்டது.

************************************

வணக்கம் மக்களே!!!

ஹோப் யூ ஆல் ஃபைன். என்னோட முதல் கதையான  “நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா? “ கதையின் இரண்டாம் பாகம் தான்  “சொல்லு நீ I love you…” கதை. அந்தக் கதையின் தொடர்ச்சி தான் இது. ஆனால் கதாப்பாத்திரங்கள் கொஞ்சம் அதிகமா இருக்கும். இலகுவாக உங்க மனசுல பதியிறது போல தான் நிச்சயம் தருவேன். எல்லாருமே கதையில் முக்கியமானவங்க தான். கதையின் கரு கதையோட போக்குல புரியும். ” இருளில் கண்ணீரும் எதற்கு? ” கதை வழமை போலவே வரும். இந்தக் கதைக்கு பெரிய அத்தியாயமா கொடுக்குறதால தினமும் வராது. என்னோட மற்ற கதைகளுக்கு கொடுத்த அதே அன்பையும் ஆதரவையும் இந்தக் கதைக்கும் கொடுப்பீங்கன்னு நம்புறேன். படிச்சிட்டு மறக்காம உங்க கருத்துக்களை சொல்லுங்க ☺️.

நன்றி….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்