Loading

அத்தியாயம் – 5

 

இரண்டு நாட்கள் கழிந்த காலை பொழுதொன்றில் சந்திராவின் வீட்டு வாசலில் இருந்து யாரோ “ஏய்” என்று கத்துவது போல் சத்தம் ஒன்று கேட்டது. 

 

இரவு வெகுநேரம் பாவனாவுடன் உரையாடிவிட்டு நேரம் கழித்து வந்த சர்வா நல்ல உறக்கத்தில் இருந்தான். இந்த சத்தத்தில் உறங்கி கொண்டிருந்தவன் வேகமாக எழுந்து வெளியே ஓடினான். 

 

காவேரியின் தலை முடியை பற்றி இழுத்துக் கொண்டிருந்தான் ஒருவன். கோபம் கொண்ட சர்வானந்தன் வேகமாக அவர்களை நெருங்க முற்பட்டான்.

 

ஆனால் அதற்குள் தன் தலையில் கை வைத்தவனின் கைகளை இழுத்த காவேரி அவனை கீழே தள்ளி அருகில் இருந்த துடைப்பத்தை எடுத்து தொடர்ந்து அடிக்க ஆரம்பித்தாள்.

 

ஒவ்வொரு அடிக்கும் “குடிப்பியா இனிமேல் குடிப்பியா” என கேட்டுக் கொண்டே அடித்துக் கொண்டிருந்தாள்.

 

சர்வாவின் பின்புறம் நின்றிருந்த காந்தாரியோ “சர்வா உள்ள போயா! எனக்கு தான் சரியான புருஷன் கிடைக்கல என் பொண்ணுக்கும் இப்படி தான் அமையனுமா? இவனால என் புள்ளைக்கு நிம்மதியே போச்சு” என்றார்.

 

அவரது வார்த்தைகளில் இருந்து அடிவாங்கி கொண்டிருப்பவன் காவேரியின் கணவன் என்பது புரிந்தது. வாங்கும் அடிகளை எதிர்க்க கூட திறன் இல்லாது அவன் தள்ளாட்டம் கொள்வதை அப்பொழுது தான் கவனித்தான் சர்வா.

 

முடியும் மட்டும் அடித்து ஓய்ந்தவள் அப்படியே கீழே அமர்ந்து அழுக ஆரம்பித்தாள். சர்வாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 

 

அப்பொழுது எதார்த்தமாக சரயு வீட்டின் மாடியில் பார்க்க இவர்களையே பார்த்தபடி நின்றிருந்தாள் பாவனா.

 

ஓரிரு நொடிகளில் இருவரது கண்களும் சந்தித்து கொண்டது. உள்ளே செல் என்பது போல் சர்வா கண் சைகை காண்பிக்க தலை ஆட்டிய பாவனா தன் அறைக்கு ஓடிவிட்டாள். அவள் சென்றபின் மெல்ல திரும்பி பார்த்தவனின் எதிரில் நின்றிருந்த சந்திராவை கண்டதும் துணுக்குற்றான்.

 

சர்வாவை முறைத்தபடி நின்றிருந்தான் சந்திரா. அவனையும் மாடி அறையையும் மாறி மாறி பார்த்தவன் “வேண்டாம் சர்வா உன் வேலையை அந்த பொண்ணுகிட்ட வச்சுக்காத” என்றவன் கீழே விழுந்துகிடந்த தங்கை கணவனின் அருகில் சென்றான்.

 

அவனை மெல்ல தூக்கி உள்ளே சென்றவன் அவனை சாய்ந்து அமரவைத்துவிட்டு பாய் விரித்து அதில் படுக்கவைத்தான். 

 

பின் தனக்கு பின்னே திரும்பி பார்க்க கண்ணீர் வடித்தபடி காவேரி நின்றிருந்தாள். பெருமூச்சுவிட்டவன் காவேரியை கடந்து வெளியே சென்றான்.

 

காலை எழுந்ததும் தோட்ட வேலைகளை பார்த்தவன் பின் உதயை அழைத்து சென்று அங்கன்வாடியில் விட்டுவந்தான். அப்படி வீட்டிற்கு திரும்பி வந்த பொழுது தான் இவை அனைத்தும் நிகழ்ந்தன.

 

இவை வழக்கமாக நிகழ்பவை தான். காவேரியும் அவளது கணவனும் காதல் திருமணம் புரிந்தவர்கள். உதய் வயிற்றில் இருக்கும் பொழுது காவேரியின் கணவன் வேலனுக்கு கூடா நட்புகள் கிட்டியது. அதன் விளைவு குடி பழக்கத்திற்கு அடிமையானான். அவனை மாற்றுவது தான் இயலாத ஒன்றானது.

 

மனைவி பிள்ளையின் மீது அன்பு அதிகம் தான் ஆனால் அதனைவிட மதுபானத்தின் மீது அதிக அன்பை வைத்துவிட்டான்.

 

கணவனின் அருகில் அமர்ந்த காவேரி அவளால் உண்டான காயங்களுக்கு மருந்து தடவ ஆரம்பித்தாள். அந்த வலியிலும் கூட “வலிக்குது காவேரி” என்று கூறியபடி அழுபவனை என்ன செய்வது என்று தான் அவளுக்கு தெரியவில்லை. எப்படியாவது கணவனை இதில் இருந்து மீட்டு கொண்டுவர வேண்டும் என்று வழக்கம் போல் எண்ணிக் கொண்டாள்.

 

அன்றைய நாள் முழுவதும் சர்வாவும் சந்திராகாந்தனும் முகம் கொடுத்து பேசிக் கொள்ளவில்லை. இருவரும் அமைதியின் உருவமாக திரிந்தனர். 

 

இரவும் வந்தது சந்திரா கண்களை மூடியபடி படுத்துகிடந்தான். அவன் மனதிற்குள் சர்வா மற்றும் பாவனாவின் பார்வை பரிமாற்றமே தொடர்ந்து வந்து அலைக்கழித்தது.

 

வலக்கையை மேலே தூக்கி கண்களை மறைத்தது போல் வைத்துப்படுத்து கிடந்தான். வழக்கம் போல் பாவனாவை சந்திப்பதற்காக கிளம்பிய சர்வா சந்திராவின் நிலையை கண்டு உறங்கிவிட்டதாக எண்ணிக்கொண்டு மெல்ல பெரியவீட்டின் புறம் அடியெடுத்து வைத்தான்.

 

அவன் செல்லும் போது உண்டான லேசான சலசலப்பில் கைகளை எடுத்து சர்வா உறங்கி கொண்டிருந்த திசைபக்கம் பார்த்தான். அவன் அவ்விடத்தில் இல்லை இயற்கை உபாதைகள் கழிக்க சென்றிருக்கலாம் என எண்ணினான். காலையில் இருந்து அவனிடம் முகம் காட்டாதிருந்த தவறை உணர்ந்தவன் மன்னிப்பு கேட்பதற்காக காத்திருந்தான்.

 

வெகுநேரம் ஆகியும் திரும்பி வராததால் சந்தேகம் கொண்டவன் எழுந்து அவனை தேடி வந்தான். எங்கும் அவன் இல்லை இரவு நேரத்தில் அவன் பெயரை சொல்லி கத்தி அழைக்கவும் அவனுக்கு விருப்பம் இல்லை.

 

அழுதழுது ஓய்ந்த தங்கையும் வேலை செய்த கலைப்பில் உறங்கும் தாயும் தன் சத்தத்தால் உறக்கம் கலைந்துவிடுவார்களோ என்று பயந்து “சர்வா” என முணுமுணுத்தவாறு தோட்டத்திற்குள் அடியெடுத்து வைத்தான்.

 

இங்கே பாவனாவிடம் “இன்னும் ஒரே வாரம் தான் அதுக்கு அப்புறம் இங்கிருந்து போயிடலாம் தைரியமா இரு நான் இருக்கேன்” என்றான் சர்வா.

 

சரி என்பதாக தலை அசைத்த பாவனா சர்வாவின் பின்னே பார்த்து அதிர்ந்தாள். அவளது முகமாற்றத்தை கண்டவன் பின்னே திரும்பி பார்க்க சந்திரா கோபத்துடன் நின்றிருந்தான்.

 

“எத்தனை முறை உனக்கு சொல்றது உன்னை இங்க கூட்டிட்டு வந்ததே தப்பா போச்சு” என உறுமிய சந்திரா சர்வாவின் முகத்தில் ஒரு குத்துவிட்டான். 

 

ஏனோ அவன் பாவனாவிடம் பேசுவது இவனுக்கு பிடிக்கவில்லை. இத்தனைக்கும் அவளது பெயர்கூட சந்திராவிற்கு தெரியாது. அப்படி இருக்கையில் தன்னுள் நிகழும் இந்த வித்தியாசமன உணர்விற்கு பொருள் என்ன என ஆராய விரும்பவில்லை.

 

சர்வா சந்திராவை தடுக்க முயற்சி செய்தான் அவனது திடீர் தாக்குதலை சர்வாவினால் எதிர்கொள்ளமுடியவில்லை. 

 

பாவனாவும் சந்திராவை தடுக்க முயற்சி செய்தாள். ஆனால் அவனது பலத்திற்கு இவளால் அவனை அசைக்ககூட முடியவில்லை. அப்பொழுது ஒரு கரம் சந்திராவை பிடித்து வேகமாக இழுத்தது. 

 

மூன்றாவதாக ஒருகரம் தன்னை தீண்டவும் யாரென திரும்பி பார்த்தவன் எதிரில் நின்றிருந்தவரை கண்டு அதிர்ந்தான்.

 

“அம்மா நீங்க! இங்க அது சர்வா ஏதோ தெரியாம அந்த பொண்ணுகிட்ட பேசிட்டான்” என தடுமாற்றமாக கூறிய சந்திராவை கை நீட்டி தடுத்தார் எதிரில் இருந்த பெண்மணி.

 

“எல்லாம் எனக்கு தெரிஞ்சு தான் நடக்குது சந்திரா சத்தம் போட்டு எங்களை காட்டிக் கொடுத்துடாத! சர்வா இங்க வந்ததே பாவனாவ கூட்டிட்டு போக தான்! அவளுக்கு விடுதலை கிடைக்கனும் எம்பொண்ணைவிட சின்ன பொண்ணு பாவம் அவள்! இதை தடுக்காத சந்திரா!” என அவன் முன் கை கூப்பினார் சரயுவின் தாய் கோசலை.

 

“அம்மா!” என வேகமாக அவரது கையை கீழே இறக்கிவிட்ட சந்திரா “பெரிய வீட்டு மருமக நீங்க எங்கிட்டபோய்..” என அதிர்ந்து கூறினான். 

தொடரும்

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்