Loading

அத்தியாயம் – 4

வெகுநேரமாக அழுது கரைந்த பாவனாவை தேற்றினான் சர்வா. ஒரு வழியாக அவள் அழுது முடித்த பிறகு சில முக்கிய தகவல்களை அவளிடம் கூறினான்.

 

பின் பெரிதாக மூச்சை இழுத்துவிட்ட சர்வா பாவனாவை நோக்கி “பாவனா நீ அந்த அறைக்குள்ளையே அடஞ்சு கிடக்காத, என்னால அப்புறம் திட்டத்தை செயல்படுத்த முடியாது. வெளிய வர முயற்சி செய் அதேநேரம் மத்தவங்களுக்கு சந்தேகம் வராத மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக உனக்குள்ள மாற்றம் உண்டாகுன மாதிரி நடந்துக்கோ புரிஞ்சதா?” என்றான்.

 

கண்ணீரை அழுந்த துடைத்துக் கொண்டவள் சரி என்பதாக தலை ஆட்டினாள். 

 

“சரி உன்னோட அறைக்கு போ நாம நாளைக்கு சந்திக்கலாம்”

 

பாவனா அறைக்கு சென்றபின் சர்வானந்தன் மீண்டும் பழையபடி தன் இடத்தில் வந்து படுத்துக் கொண்டான்.

 

இதே இரவு வேளையில் தன் தூக்கம் தொலைத்து கூடாரத்தின் வாயிலில் அமர்ந்து வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சம்யுக்தா.

 

அவளது இதயத்தில் ஏதேதோ எண்ணங்கள் பேரலைகளாக முட்டி மோதியது. தூக்கத்தில் பவ்யா மெல்ல புரண்டு படுத்தாள். அதில் சம்யுக்தாவின் கவனம் அவர்கள் புறம் திரும்பியது. 

உள்ளே சென்று அவளுக்கு தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தவளை வெளியில் இருந்து ஒரு நபர் அழைத்தார்.

 

மெல்ல எழுந்து வெளியே சென்றாள். அவள் முன் நின்றிருந்தான் அவன். 

 

“சொல்லு அகிலன்”

 

“எதுக்காக தினமும் இப்படி ராத்திரி தூக்கத்தை தொலைச்சுட்டு வானத்தையே பார்த்துட்டு இருப்ப. இப்படியே நீ பார்க்குறதால எல்லாம் சரியாகிடுமா சொல்லு. நேரங்கெட்ட நேரம் வரை தூங்காம இருக்குறது அப்புறமா விடியகாலையில தூங்கி கெட்ட கனவு கண்டு பயந்து எழுந்துகுறது இதுவே உன்னோட வழக்கமா மாறிடுச்சு இப்படி இருக்காத”

 

“என்னை கவனிக்குறதை நிறுத்து அகிலன்”

 

“ஆனால் உன் தாத்தா இல்லாத நிலையில உங்களை பார்த்துக்க வேண்டியது என் கடமை அதை தான் செய்றேன். உன் தாத்தாவோட கட்டளையும் அது தான்”

 

தாத்தா என்ற வார்த்தையை கேட்டவள் அமைதியாகிவிட்டாள். அவனை நிமிர்ந்து பார்த்தவள் தலை அசைப்பின் மூலம் தன் இயலாமையை தெரியப்படுத்திவிட்டு குடிலுக்குள் சென்றாள்.

 

சென்றவளை அழைத்தான் அகிலன்.

 

“சம்யுக்தா”

 

திரும்பி பார்த்தவளிடம் “எல்லாம் சரியாகிடும் நம்பிக்கையா இரு” என்றான், 

 

மெல்ல கண்களை மூடித்திறந்து தலையாட்டியவள் அவளது குடிலுக்குள் சென்று பவ்யாவின் அருகில் படுத்துக் கொண்டாள்.

 

மறுநாள் சர்வா சந்திராவுடனும் உதயுடனும் உற்சாகமாக ஊர் சுற்றி பார்க்க கிளம்பினான். கிராமத்தின் அழகில் மயங்கிய சர்வானந்தன் நேரத்தையும் மறந்தான்.

 

அனைத்து இடங்களிலும் சுற்றி திரிந்துவிட்டு இறுதியாக பம்புசெட்டிற்கு வந்து சேர்ந்தனர். உதயும் சர்வாவும் வெகுநேரமாக நீருக்குள் இருந்தபடி விளையாடிக் கொண்டிருந்தனர். சந்திராவிற்கு பெரிய வீட்டு ஆட்களிடம் இருந்து அழைப்பு வந்தது. 

 

வீட்டிற்கு செல்லும் வழியை பற்றி கூறியவன் சர்வா உதயிடம் சொல்லிக் கொண்டு பெரியவீட்டிற்கு சொந்தமான வயலை நோக்கி சென்றான். அங்கே சரயுவின் தந்தை அமர்ந்திருக்க அவர் கூறிய சில எடுபுடி வேலைகளை செய்து கொடுக்க ஆரம்பித்தான்.

 

உதயை தேடிக் கொண்டு வந்த காவேரி அவர்களோடு இணைந்து கொண்டாள். சிறுவயதில் தானும் தன் அண்ணனும் செய்த கலாட்டாக்கள் பற்றி கதை கதையாக கூற சுவாரசிய உணர்வு குறையாமல் அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான்.

 

ஊர் மொத்தமும் ஒரே நாளில் பார்வையிட ஆசையோ என்னவோ பசியையும் மறந்து இருள் சூழும் வரை சுற்றி திரிந்தனர். உதய்கான பால் மற்றும் திட உணவுகளை காவேரி எப்பொழுதும் தன் கையோடு வைத்திருப்பதால் அவனை பற்றி கவலையில்லாமல் இருந்தனர்.

 

சந்திரா பெரிய வீட்டு வயலில் வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தான். தன் வீட்டு வாயிலில் இருந்து எதார்த்தமாக பெரியவீட்டின் புறம் பார்வையை திருப்ப தோட்டத்தின் ஆரம்பபுள்ளியில் அமர்ந்திருந்தாள் பாவனா.

 

வெள்ளை உடையில் மண் தரையில் அமர்ந்திருந்தவளை சுற்றி களிமண் குமிக்கப்பட்டிருந்தது. மேலும் அவளது கைகளிலும் முகத்திலும் ஆங்காங்கே களிமண் ஒட்டியிருந்தது. 

 

வெகு சுவாரசியமாக ஏதோ செய்து கொண்டிருந்தாள். பாவனாவின் முகம் காட்டும் பாவனையில் தொலைந்து போனான் சந்திரகாந்தன்.

 

“எங்கடா போன?” என்ற காந்தாரியின் குரலில் நிகழ் உலகிற்கு  வந்தவன் “அது அம்மா ஐயா வயலுக்கு வரச் சொன்னாரு அதான் போயிருந்தேன்” என்றான்.

 

“ஓ அப்படியா, சரி உன் கூட வந்தாரே, அந்த தம்பிக்கு போன போடு காலையில உன்னோடு போனது கூட்டிட்டு வரப்போன இந்த காவேரியும் ஆளக்காணோம் எங்க ஊர் சுத்துறாளோ” என்றார்

 

தாயின் கூற்றுக்கு தலை அசைத்தவாறு கையில் போனை எடுத்த சந்திராவின் பார்வை பாவனாவை விட்டு விலகவில்லை. பின் சர்வாவிற்கு அழைத்து விரைவாக வீட்டிற்கு வந்து சேருங்கள் என்றவன் மீண்டும் பாவனாவை ரசிக்க ஆரம்பித்தான்.

 

வீட்டிற்குள் சென்ற காந்தாரி மீண்டும் வெளியே வந்தார். மகனின் பார்வை சென்ற திசையை பார்த்தவர் துணுக்குற்றார்.

 

“சந்திரா” என உரக்க அழைக்கவும் சுயம் மீண்டு திரும்பி பார்த்தான்.

 

“எ.ன்..ன.ம்மா?” என வார்த்தை குலர கேட்கவும் “அந்த பொண்ணு பெரியவீட்டுக்கு வந்த விருந்தாளி அவுகளுக்கு ரொம்ப நெருக்கம் வேண்டாம்யா” என்றார்.

 

“ஆனா அம்மா நான் சும்மா”

 

“சும்மா கூட நீ அந்த பாக்கம் பார்க்க வேண்டாம்”

 

அம்மா இவ்வளவு முறை அழுத்தி கூறவும் புருவம் சுருக்கினான் சந்திரா. 

 

சரயு இவனிடம் வலிய பேசினாலும் அவனது தாய் புன்னகையுடன் ரசிப்பாரே அன்றி ஒருபோதும் தள்ளியிரு என்று கூறியதில்லை.

 

 காரணம் தன் மகனின் பார்வையில் இருந்த கண்ணியமாக இருக்கலாம். ஆனால் சந்திராவுக்கு அவை புரியாது.

 

இன்று அவன் கண்களில் தெரிந்த ரசனை காந்தாரியை பயம் கொள்ளச் செய்தது.

 

“வீட்டுக்குள்ள போ சந்திரா” எனவும் பாவனாவின் புறம் திரும்ப இருந்த தலையை கட்டுப்படுத்திக் கொண்டு உள்ளே சென்றான்.

 

சர்வா காவேரி உதய் மூவரும் வீடு வந்து சேர்ந்தனர். தோட்டத்தில் அமர்ந்து இருந்த பாவனாவை பார்த்த காவேரி “என்னம்மா இன்னைக்கு சரயு அப்பா வீட்டுல இல்லை போல?” எனக் கேட்டாள்.

 

“ஆமா காவேரி ஐயா மதியம் என்னை வயலுக்கு கூப்பிட்டு வேலை சொன்னாரு அப்புறம் பக்கத்து ஊருல ஒரு முக்கிய வேலை இருக்குனு சொல்லி புறப்பட்டு போய்ட்டாரு ஏன் கேட்குற?”

 

“பின்ன அந்த பொண்ணு தோட்டத்துல சுதந்திரமா உட்காந்து இருக்கே அதான் கேட்டேன்”

 

பார்வையை கூர்மையாக்கிய சந்திரா “ஏன் அப்படி?” என வினவினான்.

 

“சந்திரா பெரியவீட்டு விவகாரம் நமக்கு தேவையில்லாதது” என்ற காந்தாரி காவேரியை முறைத்துப் பார்த்தார் அவள் அதனை பெரிதுபடுத்தாமல் விளையாண்டு கொண்டிருந்த சர்வா உதய் அருகில் சென்று அமர்ந்தாள்.

 

இவை அனைத்தையும் காதில் கேட்டுக் கொண்டிருந்தாலும் கவனியாதது போல் அமைதியாய் இருந்தான் சர்வானந்தன்.

 

அடுத்து இரண்டு நாட்கள் சர்வாவிற்கு உதயுடன் ஊரை சுற்றி பார்ப்பதிலும் வயல்களில் காவேரியுடன் வேலை பார்ப்பதிலும் கழிந்தது என்றால் இவை அனைத்திலும் பங்கு கொண்டாலும் பாவனாவின் நினைவில் கழிந்தது சந்திராவின் பொழுதுகள்.

 

இடையிடையே சரயுவின் வருகையும் அவளது ஒருதலை காதலை வெற்றியடைய செய்வதற்கான முயற்சிகளும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்