Loading

அத்தியாயம் – 3

சந்திராவை ரசித்தபடி பார்த்துக் கொண்டிருந்த சரயு தன் பக்கத்தில் அரவம் தெரியவும் தன் கள்ளதனம் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில் வேகமாகத் திரும்பி பார்த்தாள்.

 

அவளது கண்கள் அதிர்ச்சியில் விரிவடைந்தது. பாவனா தன் அருகே நின்றிருப்பதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அவளது பார்வையும் கீழே இருந்த சந்திராவின் வீட்டில் நிலைத்து இருந்தது. அவளது பார்வையில் தெரிந்த ஒளியும் முகத்தில் இருந்த பிரகாசமும் சரயுவிற்கு எதோ உணர்த்த மெதுவாகத் திரும்பி தோட்டத்து வீட்டை பார்த்தாள்.

 

சந்திரகாந்தன் தன் வசீகரப் புன்னகையில் சுற்றியிருப்போரை மயக்கிக் கொண்டிருக்க அதில் தொலைந்து போக முயன்றாலும் முடியவில்லை. பவானாவின் பார்வை அவளுக்கு உறுத்தலைக் கொடுத்தது.

 

சந்திரகாந்தன் தாயுடன் உள்ளே சென்றுவிடப் பாவனாவும் புன் சிரிப்புடன் மெல்ல தன் அறைக்குச் சென்றுவிட்டாள்.

 

சந்திரகாந்தன் மீது சரயுவிற்குச் சிறு வயதில் இருந்தே காதல். ஒருதலைக் காதல். அவளும் எத்தனையோ முறை மறைமுகமாகச் சந்திரகாந்தனுக்குத் தன் காதலை தெரியப்படுத்த முயன்றுள்ளாள். பள்ளி பயிலும் காலத்தில் இருந்தே அவன் மீது ஈர்ப்பு.

 

ஆனால் முதலாளியின் மகள் என்ற எல்லையுடனே சந்திரகாந்தன் நின்றுவிடுவதால் அவனால் இவளது முயற்சிகள் தோல்வியைத் தழுவியது.

 

பாவனாவின் பார்வையில் குழம்பிய மனநிலையோடு மீண்டும் தோட்டவீட்டின் புறம் பார்வையைத் திருப்பினாள். வெளியே நின்று கொண்டிருந்த சர்வா உதடுகள் காது வரை நீளும் படி சிரித்தான். ஒருநிமிடம் அச்சிரிப்பில் பயந்தவள் மறுநிமிடம் அவனை முறைத்துப் பார்த்தாள்.

 

அவனோ “ஹாய்ங்க! இது தான் உங்க வீடா?” எனக் கத்திக் கேட்க “சரியான கிறுக்கன்!” என்று முணுமுணுத்தபடி கீழே இறங்கி சென்றுவிட்டாள்.

 

அவளது முகத்திருப்பத்தை ஒரு பொருட்டாகக் கூட எண்ணாமல் தோள்களைக் குழுக்கியபடி அவனும் வீட்டிற்குள் சென்றுவிட்டான்.

 

சந்திராவின் வீட்டில் ஒரு பெரிய ஹாலும் அதன் நடுவே இரண்டு தடுப்புகளும் அமைக்கப்பட்டு இருந்தது. ஒரு தடுப்பின் புறம் சமையற்கட்டும் மற்றொரு தடுப்பின் புறம் அவனது தங்கை தங்கி கொள்வதற்கான அறையும் இருந்தது.

 

இரு தடுப்புகளுக்கும் முன்னே சாணம் பூசப்பட்ட மண் தரையும் இருந்தது. தற்பொழுது அதில் சிறிய பாய் ஒன்று விரிக்கப்பட்டு இருந்தது. அதில் தான் சர்வாவும் சந்திராவும் அமர்ந்திருந்தனர்.

 

இருவர் முன்பும் தேநீர் கோப்பையை வைத்தவர் சில பிஸ்கெட் துண்டுகளையும் எடுத்து வந்து கொடுத்தார்.

 

“என்னம்மா பிஸ்கெட் எல்லாம் கொடுக்குற? உன் புள்ள வீட்டுக் வந்துருக்கானு கவனிப்பெல்லாம் ஜாஸ்தியா இருக்கு” என்றபடி வீட்டினுள் நுழைந்தாள் சந்திரகாந்தனின் தங்கை காவேரி.

 

வருமையில் வாடிய அவர்களது குடும்பத்தில் டீ காபியோடு பிஸ்கட் சேர்த்து உண்பதெல்லாம் அரிதான ஒன்று. தற்போது சூழ்நிலை மாறி இருக்கலாம் ஆனால் கடந்த கால நினைவுகளை மறக்க இயலாதே. அந்த நினைவு தான் காவேரியின் தற்போதைய கேள்விக்கான காரணம்.

 

“ஏய் எருமை வந்ததும் உன்னைத் தான் தேடுனேன்! எங்க என் மருமகன்?” என்றான் சந்திரகாந்தான்.

 

“ம் வந்ததும் தங்கச்சிய பத்தி விசாரிக்காம அவனைபத்தி கேட்குற அவனைக் காலையிலே பால்வாடியில (அங்கன்வாடி) கொண்டுபோய் விட்டுட்டு வந்துட்டேன்”

 

“ஏன் பிள்ளை! நான் அவனைப் பார்க்க ஆசையா வந்தேன்”

 

“டேய் அவன் என்னை அங்கேயேவா இருக்கப் போறான் வந்துடுவான்”

 

அவர்களின் தாயான காந்தாரியோ புன்னகையோடு இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தார். வழக்கம் போல் எப்பொழுதும் இந்த வீட்டில் நடக்கும் செயல்கள் தான் இவை. கடந்த சில ஆண்டுகளாக உயிர்பில்லாமல் இருந்த வீடு சந்திராவின் வருகையின் பின்னே உயிர் பெற்றதாக உணர்ந்தார்.

 

“லூசு! நான் வரேனு தெரியும்ல அப்புறம் ஏன் அவனை அங்க அனுப்புற?” எனச் சந்திரகாந்தன் காவேரியிடம் சண்டைக்குச் செல்ல “நான் வந்துட்டேன்!” என்று கத்தியபடி வாசல்புறம் இருந்து உள்ளே ஓடி வந்தான் காவேரியின் நான்கு வயது மகன்.

 

“மருமகனே!” என்றபடி வேகமாகச் சென்று அவனைத் தூக்கி சுற்றினான். “மாமா நான் வெளிய தான் இருந்தேன் பால்வாடி போகல நீங்க ஏமாந்துட்டீங்க!” என்றான்.

 

இத்தனை வருடங்களாகச் சந்திரா வெளிநாட்டில் இருந்தாலும் வீடியோ கால் மூலமாக அவன் தினமும் மருமகனுடன் பேசிவிடுவான்.

 

“அம்மாவும் மகனும் வந்ததும் என்னை ஏமாத்துரீங்களா கவனிச்சுக்கிறேன்டா!”

 

“நானும் கவனிச்சுக்கிறேன்டா” எனக் குறும்புடன் கூறினான் சிறுவன்.

 

“டேய் உதய்! மாமாவ மரியாதை இல்லாம பேசக்கூடாதுனு சொல்லி இருக்கேன்ல!”

 

“சாரிமா!” என்றவன் மாமனின் புறம் திரும்பி “சாரி மாமா இனிமே அப்படிச் சொல்லமாட்டேன்” என்றான்

 

அவ்வளவு நேரம் அந்தக் குடும்பத்தை ரசித்துக் கொண்டிருந்த சர்வா வேகமாக எழுந்து பொடியனின் பக்கம் வந்து நின்றான்.

 

“ஹாய் குட்டி நீங்க ரொம்பக் கியூட்” என்றான்.

 

சிறுவன் புதியவனைக் கேள்வியாகப் பார்க்கவும் “என்னை அப்படிப் பார்க்குறீங்க நானும் உங்களுக்கு ஒரு மாமா தான்!” என்றான்.

 

அவன் தன் தாயின் புறம் தற்பொழுது பார்வையைத் திருப்ப அவளோ அண்ணனை நோக்கி தன் பார்வையைச் செலுத்தி இருந்தாள்.

 

சந்திரகாந்தன் அவளிடம் “காவேரி இவர் என் பிரண்ட் சர்வானந்தன்” என அறிமுகப்படுத்தி வைக்கவும் மரியாதை நிமித்தமாகப் புன்னகை செய்தாள் காவேரி.

 

தாயின் புன்னகையில் அந்தப் பொடியனுக்கு என்ன புரிந்ததோ “மாமா நீங்களும் என் மாமா கூட வேலை பார்க்க போயிருந்தீங்களா?” எனக் கேட்டான் “ஆமான்டா செல்லம்” என்றபடி அவனைத் தூக்கிய சர்வா வெளியே சென்று அமர்ந்து கொண்டான்.

 

குழந்தையோடு குழந்தையாகச் சற்று நேரத்திற்குச் சுற்றம் மறந்து லயித்திருந்தான்.

 

சந்திரகாந்தனுக்குச் சர்வாவை எண்ணி ஆச்சரியமாக இருந்தது. விமானத்தில் தனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் என்றவுடன் கண்களை அகலவிரித்து ஜொல்லுவிட்டவன் தற்போது அவளது மகனிடம் தன்னை மாமன் முறை என அறிமுகப்படுத்திக் கொள்கிறானே என வியந்தான்.

 

அவனை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த சந்திராவின் கவனத்தைக் கலைத்தார் காந்தாரா.

 

“சந்திரா பெரிய வீட்டுக்கு ஒரெட்டு போய்டு வந்துருப்பா”

 

“சரிமா” என்றவன் வாசல் புறம் சென்றான். அவன் வாயிலை கடந்து செல்கையில் அவனது நடையைத் தன் விளிப்பால் நிறுத்த செய்தான் சர்வா.

 

“சந்திரா எங்க போற?”

 

“பெரிய வீட்டுக்கு” எனச் சரயு நின்றிருந்த விட்டின் புறம் கைகளைக் காட்டினான். சர்வானந்தனுக்குச் சற்று முன் மேல்மாடியில் நின்று இருந்த பெண்ணவளின் நியாபகம் வரவும் “நானும் வரவா?” எனக் கேட்டான்.

 

சந்திரா தலை அசைக்கவும் உதயையும் உடன் அழைத்துக் கொண்டு பெரிய வீட்டிற்கு இருவரும் சென்றனர்.

 

வாசலில் நின்றபடி “ஐயா!” என அவன் குரல் கொடுக்கவும் உள்ளிருந்து ஒரு பெண்மணி எட்டிபார்த்தார். வாசலில் நின்றிருந்தவனைப் பார்த்ததும் அவர் முகம் மலர்ந்து சிரிந்தார்.

 

“வணக்கம் அம்மா! ஐயா இல்லீங்களா?”

 

“உள்ள தான் இருக்காரு வா சந்திரா” என்றவர் வேலைக்கார பெண்மணியை அழைத்தார். “ஐயா ரூம்ல இருப்பாரு அவரைப் பார்க்க சந்திரா வந்துருக்கானு சொல்லு” என்றார்

 

அவரும் “சரிங்க அம்மா” என்றபடி சென்றுவிடக் கூடத்திற்குச் செல்லும் வழியில் இருந்த முதற்கட்டில் இருவரையும் அமர சொன்னார். அவர்கள் அமர்ந்ததும் சர்வாவை காட்டி யார் எனக் கேட்டார்.

 

“என்னோட சிநேகிதன் அம்மா!”

 

“சரிப்பா! டேய் உதய் வாங்க பாட்டிகிட்ட வாங்க!” என அவன் அழைக்கவும் தாவி கொண்டு சென்றான் சிறுவன்.

 

அவனை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தவரையும் உதயையும் ரசித்தான் சர்வா. உதயின் மீது அனைவரும் காட்டும் அன்பு அவனுக்குப் பொறாமையைத் தோற்றுவித்தது.

 

அன்பு சிறுவயதில் இருந்து அவனுக்குக் கிடைக்கப்பெறாதது. அதனால் உண்டான ஏக்கம் அவ்வப்பொழுது இந்தப் பொறாமை உணர்வையும் தோற்றுவித்துவிடுகிறது.

 

“என்ன சந்திரா பெரிய மனுசன் ஆகிட்டையோ?” என்றபடி கீழிறங்கி வந்தார் அந்தப் பெண்மணியின் கணவர்.

 

அவர் வருவதைக் கண்டதும் பவ்யமாக எழுந்து நின்ற சந்திரா “ஐயோ அப்படி எதுவும் இல்லைங்க! ஐயா தவறினப்போ லீவு கிடைக்கலங்க அதான் வரமுடியல மன்னிச்சுடுங்க” என்றான்.

 

அவர் அப்பொழுதும் மனம் மாறாமல் முறைத்துக் கொண்டே இருந்தார். “அப்பா! அதான் அவரு சொல்றாருல அப்புறமும் ஏன் இப்படிக் கோபமா முகத்தை வச்சுருக்கீங்க? விடுங்கப்பா!” என்றபடி அவர்பின்னே வந்து நின்றாள் சரயு.

 

மகளது குரலில் மலர்ந்து சிரித்தவர் அவர்புறம் திரும்பி “சிநேகிதி வீட்டுக் போறேனு சொல்லிட்டு போனியே எப்போ வந்தமா?” என்றார்.

 

“கொஞ்சம் முன்னாடி தான் வந்தேன்பா சரி நீங்க சந்திராகிட்ட எப்பவும் போலச் சகஜமா பேசுங்க அவங்க வீட்டு நிலைமை நமக்கும் தெரியும் தானப்பா”

 

“சரிமா நீ சொன்னால் மறுப்பு சொல்வேனா?” என்றார்.

 

அவர் அவ்வாறு கூறியதும் அவளது மனதினுள் ‘ஆனால் ஒரு விஷயத்துல மட்டும் என்னோட பேச்சை கேட்கமாட்டேங்குறீங்கப்பா அதான் கஷ்டமா இருக்கு’ என்று நினைத்துக் கொண்டாள்.

 

பின் சந்திரா சர்வாவையும் அவரிடம் அறிமுகப்படுத்தி வைக்க அவனுடன் சில வார்த்தைகள் மரியாதை நிமித்தமாகப் பேசியவர் வெளியே சென்றுவிட்டார்.

 

அவர் தலை வீட்டைவிட்டு மறைந்ததும் சரயு தாயின் கைகளில் இருந்த உதய் தாவி குதித்துச் சரயுவின் அருகே சென்றான்.

 

“அத்தை தூக்குங்க” என்றான். அவன் எப்பொழுதும் சரயுவை அப்படித் தான் அழைப்பான். அவனாக அழைத்தான் என்றால் இல்லை. அவள் தான் அவனுக்குப் பேச்சுவர ஆரம்பித்த நாட்களில் இருந்து அப்படிக் கூற பழக்கிவிட்டிருந்தாள்.

 

சரயு உதயை தூக்கி கொஞ்சியபடி அவளது அறைக்குச் சென்றுவிட்டாள். செல்லும் முன் ஒருமுறை சந்திராவின் புறம் பார்வையை திருப்பினாள். 

 

அவள் சந்திராவின் பார்வையை எதிர்நோக்க சர்வாவோ புருவங்களை ஏற்றி இறக்கி என்ன என்றான். கிறுக்கன் என்றபடி சரயு சென்றுவிட்டாள்.

 

நண்பர்கள் இருவரும் சரயுவின் தாயிடம் இருந்து விடைபெற்று வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.

 

உதயுடன் விளையாடிய சரயு அவனுக்கு உணவு எடுத்துவந்து ஊட்டினாள் அதில் மெல்ல அவன் கண் அயர்ந்து நித்திரைக்குச் சென்றுவிட்டான்.

 

“தூங்கிட்டானாமா?” எனக் கேட்டபடி அறைக்குள் பிரவேசித்த தாயிடம் “அம்மா இன்னைக்கு அந்த மேல் அறையில இருக்குற பொண்ணு வெளிய வந்தா அம்மா” என்றாள்.

 

“இதுல அதிசயம் என்ன இருக்கு அவள் குளிக்கப் பின்பக்க படிக்கட்டு இருக்குற அறைக்குதான போகனும் பின்பக்க தோட்டத்துல தான பெரும்பாலான நேரம் இருப்பாள்” என்றார்.

 

“என்னமா சொல்ற அந்தப் பொண்ணு அறையவிட்டு வெளிய வருமா?”

 

“ஆமான்டி என்னோட மேற்பார்வையில தான் வருவா உன் அப்பாகிட்ட இதைபத்தி கேட்டுட்டு இருக்காத!”

 

“ச்சே இல்லமா!” என்றவள் “ஆனால் அவளோட பார்வையில ஒரு வித்தியாசம் தெரிஞ்சதே அதை எப்படி உங்களுக்கு எக்ஸ்பிளைன் பண்றதுனு தெரியலமா”

 

“மனசை போட்டுக் குழப்பிக்காத! உதய் எழுந்துகிறதுக்குள்ள வந்து சாப்பிடு வா!” என்றவர் சென்றுவிட யோசனையுடன் இவளும் பின் சென்றாள்.

 

இரவு வந்தது அனைவரும் தூங்கிய பின் மெல்ல கண்விழித்த சர்வானந்தன் மற்றவர்களை நோட்டம்விட்டபடி எழுந்து பெரியவீட்டின் புறம் சென்றான்.

 

அங்கே மாடி அறைக்குச் செல்லும் படிகளின் அருகே ஓர் உருவம் ஒன்று மறைந்து நின்றது. இவன் அதன் அருகில் சென்று “பாவனா!” என அழைத்தான்.

 

அடுத்த நொடி இருளில் இருந்து வெளியே வந்தவள் அவனை அணைத்துக் கொண்டாள். கண்ணீர் மளமளவென்று வெளிவந்து அவனது சட்டையை நனைத்தது.

 

ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டவன் மெல்ல தலை வருடிக் கொடுத்தான். அவளது அழுகையும் விசும்பலும் நின்றபாடில்லை.

 

அவளைத் தன்னிலிருந்து பிரித்தவன் “நான் வரமாட்டேனு நினைச்சுட்டியா?” எனக் கேட்டான்

 

தலையை ஆம் என அசைத்தவள் பின் இடவலமாக அசைத்து குழம்பிய முகத்துடன் அவனை ஏறிட்டாள்.

 

அவளது செயலில் புன்னகை துளிர்க்க “பயந்துட்டியா?” எனப் பரிவாகக் கேட்டான். அதில் மீண்டும் அழுகை வர மீண்டும் அணைத்துக் கொண்டாள்.

தொடரும்…..

ஹாய் நண்பர்களே

இத்தனை நாளாக கதை போடதாதற்கு மன்னிக்கவும். சூழ்நிலையின் காரணமாக எழுத முடியவில்லை. இனி சரியாக கதை பதிவுகள் வரும். தங்களது ஆதரவை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்