அத்தியாயம் – 2
சந்திரா தன் தங்கைக்கு திருமணம் முடிந்துவிட்டது என கூறினான்.
“ஓ!” என்று சோகமாக இழுத்த சர்வாவை கண்டு மெல்லிய சிரிப்பு ஒன்றை உதிர்த்தான் சந்திரா. ஏனோ அவனது செயல்கள் இவனுக்கு தவறாக தோன்றவில்லை. மற்றவர்களிடம் இருந்து சற்று மாறுபட்டு தெரிகிறான் அவ்வளவே!
“சரி சொல்லுங்க சந்திரா துபாய்க்கு என்ன விஷயமா வந்தீங்க எதுவும் டிரிப்பா?”
“இல்லை பாஸ்! அஞ்சு வருச கான்ட்ராக்ட்ல வேலை பார்க்க வந்தேன் இப்போ வேலை முடிஞ்சது சொந்த நாட்டுக்கு நிம்மதியா போயிட்டு இருக்கேன்”
“அடுத்து என்ன பிளான்?”
“ஊருக்கு பக்கமா எனக்கு ஏற்றமாதிரி ஒரு வேலையை தேடிக்கிட்டு அப்படியே வாழ வேண்டியது தான்”
“காதல் எதுவும் இல்லையா உங்க லைப்ல?”
“அந்த கொடுப்பனை எல்லாம் இல்ல பாஸ்! உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன? என் அப்பா குடிகாரர். சின்ன வயசுலையே குடும்ப பாரம் என் தலையில ஏறிடுச்சு படிப்பும் பாதியில விட்டாச்சு! சரி என்ன விடுங்க உங்க அப்பா அம்மா பத்தி சொல்லுங்க”
“என்னோட அப்பா அம்மா இப்போ ஒன்னா இல்ல இரண்டு பேரும் டிவோர்ஸ் வாங்கிகிட்டாங்க! இப்போ தனிதனி வாழ்கையில சந்தோஷமா இருக்காங்க. மாசம் மாசம் என்னோட அக்கவுண்ட்டுக்கு பணம் வந்துரும் அடுத்த வருஷத்துல இருந்து அதுவும் கட்!”
“ஏன் பாஸ் அப்படி?”
“பின்ன ஏழு கழுதை வயசு ஆனப்பிறகு கூடவா பணம் அனுப்புவாங்க பிராப்பர்ட்டி கொஞ்சம் இருக்கு அதை எம்பேர்ல மாத்தி தருவதா சொல்லி இருக்காங்க”
“என் கூட எங்க ஊருக்கு வர்ரீங்களா?”
“ஆ!..” என ஒற்றை புருவம் உயர்த்தி அவன் கேட்க “இல்லை! எனக்கு உங்கள ரொம்ப புடிச்சுருச்சு ரொம்ப நல்ல பிரண்டா எனக்கு தோன்றீங்க அதான் சும்மா ஒரு இரண்டு நாள் இருந்துட்டு போங்களேன்” என்றான் சந்திரா.
“நல்ல ஐடியாவா தான் இருக்கு. சரி வரேன்” என்றான் சர்வானந்தன்.
பனையரசன்பட்டி
பனைமரத்தை போல ஓங்கி உயர்ந்த பெரிய வீட்டின் உச்சியில் இருந்தது அந்த அறை.
அறை முழுவதும் திரைசீலைகள் மறைக்கப்பட்டு சூரிய கதிர்கள் கூட உள்ளே நுழைய மறுக்கப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட அறையின் உள்ளே தான் அடைக்கப்பட்டிருந்தது கிளி ஒன்று.
ஆம் கிளியை போன்றே கீச் குரலும் அழகிய மூக்கும் உடையவள் சிரித்தால் அழகாக விழும் குழி கூடுதல் அழகு. ஆனால் சிரிக்க மறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.
அறையின் உள்ளே இருந்த ஒற்றைக் கட்டிலை விடுத்து தரையில் படுத்து சுருண்டு கிடந்தாள் அவள். முகமானது எவ்வித உணர்வையும் வெளிக்காட்டாமல் இருளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.
அந்த இருளை போக்கும் விதமாக கதவு மெதுவாக திறக்கப்பட்டு உணவு வைத்துச் செல்லப்பட்டது. வெற்றுப்புன்னகை ஒன்றை உதிர்த்தவள் உணவை எடுத்து உண்ண ஆரம்பித்தாள்.
உணவு தொண்டையை விட்டு இறங்க மறுத்தது. ஆனாலும் உண்ண வேண்டும். உணவு மிச்சம் இருந்தால் அதன்பிறகு நிகழ்பவைகளுக்கு அவளது உடல் தான் புண்ணாகும்.
அந்த அடிக்கு பயந்தே அவள் உணவு உண்பது நடந்து வருகிறது இந்த இரண்டு வருட காலமும்.
உணவை முடித்து கைகளை கழுவியவளோ அறை சன்னலை மெதுவாக திறந்தாள். சூரிய ஒளிகள் கண்களை கூசச் செய்ய விரக்தி புன்னகை புரிந்தாள்.
குனிந்து தன் வெள்ளை உடையை பார்த்தாள். நிறம் மங்கி போயிருந்தாலும் அது அவளுக்கு அழகையே கூட்டியது. காதின் ஓரம் “என்னை நம்பு பாவனா! நான் நிச்சயம் வருவேன் உன்னை இங்கிருந்து கூட்டிட்டு போவேன் காத்திரு!” என்ற வார்த்தைகள் ஒலித்தது.
சில மாதங்களுக்கு முன் அவனை சந்தித்தாள். தன்னை காக்க வந்த தேவதூதன் என நம்பினாள். ஆனால் அதுவும் அவனது வருகை இல்லாமல் பொய் என்று நிரூபனமானது
கண்கள் கூசினாலும் சூரியனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள். சில மணி நேரங்களுக்கு பிறகு சூரியனின் தாக்கம் அதனை சூழ்ந்த மேக கூட்டங்களால் மட்டுப்பட ஆரம்பித்தது.
மெல்ல மெல்ல இருள் சூழந்து வானில் இருந்து ஓரிரு துளிகள் பூமியை வந்தடைந்தது. சில வினாடிகளில் படபடவென தொடர்ந்து மழைத்துளிகள் கொட்ட பூமியில் இருந்து எழுந்த மண் வாசம் காற்றில் பரவ ஆரம்பித்தது.
அதன் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்த பாவனாவிற்கு எவ்வளவு கட்டுபடுத்தியும் நாக்கில் எச்சில் ஊருவது அடங்கவேயில்லை.
ஏனோ மண் வாசனையின் மீது அவளுக்கு அப்படியொரு போதை. நாவெச்சிலோடு மேலும் சில விஷயங்களும் நியாபகத்திற்கு வர வெளியே பெய்து கொண்டிருக்கும் மழைக்கு நிகராக அவளது கண்களும் நீரை சொரிந்து கொண்டிருந்தது.
பேருந்தில் இருந்து இறங்கி பனையரசன்பட்டி என பெயர் பலகையுடன் கூடிய நிழற்கூடையின் உள் சென்று நின்றனர் சந்திராவும் சர்வாவும்
“என்ன சந்திரா உங்க ஊருக்குள்ள என்டர் ஆகும் போதே மழை இப்படி பெய்யுது? இத்தனைக்கும் இது மழை சீசன் கூட இல்லையே!”
தோள்களை குழுக்கிய சந்திரா “தெரியல பாஸ்! எனக்கு இந்த மழை என்னை வரவேற்குற மாதிரி தோணுது எனக்காக ஏதோ ஒன்னு காத்துட்டு இருக்குறது போல ஒரு ஃபீல்!” என்றான்.
“லவ் எதுவும் இல்லனு சொன்னீங்க! இப்போ நீங்க பேசுறத பார்த்தால் வேற மாதிரி தோணுதே!”
“ஐயோ சத்தியமா இல்ல பாஸ்! ஏனு தெரியல ஒரு மாதிரி உணர்வு! எனக்கு சொல்ல தெரியல ஒருவேளை இத்தனை வருஷத்துக்கு அப்புறம் சொந்த ஊருக்கு வந்ததால வந்த படபடப்பா இருக்கும்”
“இருக்கும் இருக்கும்” என்ற சர்வாவின் இழுப்பலான பேச்சு பேருந்து நிறுத்ததிற்குள் ஓடிவந்த ஒரு நபரால் தடைபட்டது.
பெண்ணொருத்தி தன் தாவணியால் முக்காடிட்டு ஓடிவந்து நிழற்குடையினுள் நின்றாள்.
அழகாக இருக்கும் அவளை பார்த்ததும் தலையை வேகமாக கலைத்து முகத்தை அழுந்த தேய்த்துக் கொண்டு நின்றான் சர்வானந்தன்.
அவனது அலப்பறையை பார்த்து சந்திரகாந்தனிற்கு சிரிப்பு வந்தது. சர்வா அவளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். இடைவிடாமல் ஏதேதோ குட்டிக்கரணம் செய்தான் அவள் திரும்பியும் பார்க்கவில்லை.
ஆனாலும் நம்பிக்கையைவிடாது தொடர்ந்து அவன் அவள் முன் நடப்பதும் ஓடுவதுமாக இருக்க பழனோ பூஜ்ஜியம் தான்.
அதன்பிறகும் சிரிப்பை அடக்க இயலாது சிரித்துவிட்டான் சந்திரகாந்தன். அவனது சிரிப்பு சத்தத்தில் அந்த பெண்ணின் கவனம் அவர்கள் புறம் திரும்பியது.
வெடித்து சிரித்துக் கொண்டிருந்த சந்திராவை பார்த்ததும் அந்த பெண்ணின் கண்கள் அகலவிரிந்தது. அவளது கண்களில் வியப்பை தாண்டி ஒரு மின்னலும் வந்து சென்றது.
“சந்திரா!” என அவள் அழைக்க சிரிப்பை கட்டுப்படுத்தியபடி அவள் புறம் பார்த்தான் சந்திரகாந்தன்.
“ஊர்ல இருந்து இப்போ தான் வர்ரீங்களா சந்திரா?” என அவனது உடமைகளை ஆராய்ந்தபடி கேட்டாள் அவள்.
அவளை புரியாமல் பார்த்தவன் “ஆம்!” என்பதாக தலை அசைத்தான். அவனது நெற்றி சுருக்கத்தை பார்த்து புன்னகைத்தவள் “என்ன தெரியலையா? நான் தான் சரயு!” என்றாள்.
அவனது எண்ண ஓட்டத்தில் ஒரு சிறு பெண் வந்து போக பெரிதாக வாயை திறந்தவன் “அட! பெரிய ஐயா பொண்ணு தான! நல்லா வளர்ந்துட்டீங்கமா இந்த அஞ்சு வருசத்துல எனக்கு அடையாளமே தெரியல!” என்றான்.
“வாங்க போங்கனு கூப்பிட வேண்டாம் வா போனே கூப்பிடுங்க”
“ஐயோ!..” என அவன் தயங்க சலிப்பாக தலை அசைத்துக் கொண்டவள் சர்வானந்தனை கேள்வியாக பார்த்தாள்.
“இவரு என்னோட பிரண்ட் சர்வானந்தன்” என அறிமுகப்படுத்தி வைத்தான் சந்திரா.
அவனது முகத்தையே குறுகுறுவென பார்த்தவள் “உங்கள எங்கேயோ பார்த்துருக்கேன்! ஆனால் எங்கனு தான் நியாபகம் வரமாட்டேங்குது” என்றாள்.
சர்வா,“அட அழகா பிறந்தாலே இதாங்க பிரச்சனை பார்க்குற பொண்ணுங்க எல்லாம் இப்படி சொல்லி தான் எங்கிட்ட பேச்சை வளர்ப்பாங்க”
சரயு அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு ‘சரியான கிறுக்கனா இருப்பான் போல!’ என்று எண்ணியபடி வெளியே சென்றாள்.
“ஏங்க மழை பெய்யுதுங்க! நனைஞ்சுட போறீங்க!” என்று கத்தினான் சர்வா.
அவனை திரும்பி பார்த்த சரயு “கன்பார்ம் இவன் கிறுக்கன் தான்!” என சத்தமாக புலம்பியபடி அவ்விடம்விட்டு நகர்ந்தாள்.
“என்ன பாஸ் அந்த பொண்ணு என்னை கிறுக்கன்னு சொல்லிட்டு போகுது?”
“சொல்லாம பின்ன! மழை நின்னு ரொம்ப நேரம் ஆச்சு”.
“சே அழகான பொண்ணு முன்னாடி இப்படி அசிங்கப்பட்டுட்டேனே!” என தலையில் அடித்துக் கொண்டான்.
“அடிச்சுகிட்டது போதும் வாங்க பாஸ் எங்க வீட்டுக்கு போகலாம். வசதி கம்மியா தான் இருக்கும் பரவா இல்ல தான!”
“ஒன்னும் பிரச்சனை இல்ல!” என்றவன் ஊரை சுற்றி பார்த்தபடி சந்திராவின் பின் சென்றான்.
சுற்றி எங்கும் பச்சபசேலென்று கண்ணுக்கு குழுமையாக இருக்கும் ஊரை பிரம்மிப்பாக பார்த்து வந்தவனை நோக்கி “எப்படி இருக்கு எங்க ஊரு?” என கர்வத்துடன் கேட்டான் சந்திரா.
கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் மடக்கி மற்ற விரல்களை நீட்டி ஒற்றை கண் சிமிட்டி சூப்பர் என்றான்.
அவனது பதிலில் நிறைவான புன்னகைத்த சந்திரா அவனது தோளோடு கைபோட்டபடி வீட்டின் திசையில் நடந்தான்.
முன்னே சென்று கொண்டிருந்த சரயு அடிக்கொரு முறை பின்புறம் திரும்பி சந்திராவை பார்த்தபடி சென்றாள். அவனது சிரிப்பை காணும் போதெல்லாம் அவளது கன்னங்கள் ரத்த நிறத்தை தத்தெடுத்துக் கொண்டது.
ஆண்கள் இருவரும் தங்களுக்குள் பேசியபடி வந்தனர் இத்தனை மணி நேர பயணத்தில் இல்லாது இந்த சில நிமிட நடைபயணம் அவர்களை நெருங்க வைத்திருந்தது.
ஊரைப்பற்றி ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டே வந்த சர்வா சந்திராவை “வாடா போடா” என பேசும் அளவு நெருங்கி இருந்தார்கள் என்றால் பாருங்களேன்.
வீட்டை அடைந்த சரயு வேகமாக மொட்டை மாடிக்கு ஏறினாள். மூச்சிரைக்க ஓடிவந்தவள் கைபிடி சுவரை பிடித்தபடி அவளது வீட்டின் பின்புறத்தை பார்த்தாள்.
அவர்களது வீட்டின் பின்புறம் சிறிய தோட்டம் ஒன்று உள்ளது. அதனை ஒட்டிய ஒரு சிறிய வீடும் இருந்தது. அந்த வீடு தான் சந்திரகாந்தனின் வீடு.
அவனது தந்தை தோட்ட காவலராக இருந்தார். ஆனால் குடியால் அந்த வேலையையும் செய்யாமல் இருக்க வேறு ஆளை பணி நியமித்துவிட்டனர்.
இருப்பினும் சந்திரா வெளிநாடு சென்றபின் அவனது தாயை தனியாகவிட மனிதில்லாமல் சரயுவின் தாய் தான் தோட்டவீட்டில் தங்கவைத்து பார்த்துக் கொள்கிறார்.
அடிக்கொரு முறை வீட்டில் இருக்கும் வேலைகளுக்கும் அழைக்கப்படுவார் சந்திராவின் தாய்.
பிள்ளை ஊரில் இருந்து வந்தமையால் வாசலில் நிற்க வைத்து ஆலம் சுற்றிக் கொண்டிருந்தார் சந்திராவின் தாய். அதை தான் ரசித்துப்பார்த்துக் கொண்டிருந்தாள் சரயு.
“உங்க பையனுக்கு மட்டும் தான் ஆலம் சுத்துவீங்களா?” என கேட்ட சர்வாவுக்கும் சேற்றே சுற்றினார் அவர்.
அதேநேரம் இதயம் ரயில் ஓடுவது போல் படபடவென துடிக்கவும் வேகமாக சரயுவின் பின் இருந்த அறையை திறந்து வெளியே வந்தாள் பாவனா.
தொடரும்..