Loading

அத்தியாயம் – 1

 

நள்ளிரவு நேரம் 

காட்டுபகுதியையும் நகர்புறத்தையும் இணைக்கும் பிரதான சாலை 

 

நகரத்தில் இருந்து 25 கி.மீ தள்ளியும் சாலையானது நீண்டு கொண்டிருந்தது. சாலையின் நடுபகுதியில் விரைவாக சென்று கொண்டிருந்தது இரண்டு கார்கள்.

 

கண்ணில் இடும் மையை போன்ற கும்மிருட்டை அவன் கையில் இருந்த தீப்பந்தின் ஒளியானது போக்கிக் கொண்டிருந்தது.

 

இரவு நேர பூச்சிகளின் ரீங்காரமும் நேற்றைக்கு பெய்த மழையின் காரணமாக துாரத்தில் கேட்கும் தவளையின் சத்தம் அவ்விரவை சற்று பயமாக மாற்றிக் கொண்டிருந்தது.

 

தீப்பந்தத்ததை கையில் தாங்கி கொண்டிருந்த அம்மனிதனுக்கோ எவ்வித பயமும் இல்லை போலும் பிரதான சாலையை நோக்கி பார்வையை செலுத்தி இருந்தான்.

 

வெகு நேரமாக நிற்கிறான் போலும் கால்கள் இரண்டும் மறத்து போயிருந்தது. இன்னும் சற்று நேரம் இந்நிலை தொடர்ந்தால் சரிந்து நிற்க முடியாமல் கீழே விழுவது உறுதி. ஆனால் அவனை அந்நிலைக்கு தள்ளாமல் அவன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இரண்டு கார்களும் வந்தாகிற்று.

 

ஓடிச் சென்று காரின் முன் நின்றான். காரில் இருந்து இரண்டு நடுத்தர வயது உடைய ஆண்களும் ஒரு முதியவரும் இறங்கினர். அவர்களுக்கு பின் கைகள் கட்டப்பட்டு வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்ட ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக காரின் உள் இருந்து வெளியே இழுத்து வந்தனர்.

 

அப்பெண்ணோ நகர மறுக்க ஈவு இரக்கம் இல்லா அப்பெரிய மனிதன் அவளை தன் காலால் அவளது வயிற்றில் எட்டி உதைத்தார். வலியில் முனங்கியவாரே கீழே சென்று விழுந்தாள்.

 

வயிற்றில் ஏற்பட்ட அதிகப்படியான வலியில் அம்மா என்று கத்த முடியா நிலைமைைய ஏற்படுத்தி இருந்தது அவளது வாயை அடைத்திருந்த பிளாஸ்திரி.

 

தீப்பந்தத்தை தாங்கி நின்றவனை பார்த்து மற்ற இருவர் கண் சைகை செய்ய புரிந்து கொண்டவன் அவளது முடியை பற்றி இழுத்துச் சென்றான்.

 

காட்டின் நடுமையத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்களின் பயணத்தை தடுக்கும் விதமாக அவளின் முன் வந்து விழுந்தது பாம்பு ஒன்று. ஆ…. என்று அலறியடித்து எழுந்து அமர்ந்தாள் சம்யுக்தா. 

 

ஐந்தடிக்கும் சற்று அதிகமான உயரம் நீளக் கூந்தல் கூர்மையான மூக்கு வில் போன்று வளைவான புருவம் கண்கள் தான் சற்று சிறியதாக இருக்கும். மாநிறத்தில் எளிமையான தோற்றத்தில் இருப்பாள்.

 

துாக்கத்தில் இருந்து விழித்து எழுந்தவளின் கண்களை கூசச் செய்தது அவள் இருந்த கூடாரத்தின் வழி உள் நுழைந்த சூரிய ஒளி. கண்களை கசக்கி கொண்டவள் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தாள்.

 

நான்கு புறமும் குட்சிகளை ஊண்டி தார்பாயினால் அதனை சுற்றி வளைத்து மேற்புறம் கூம்பாக குட்சியை நீட்டி அதன் மேலும் தார்பாய்களை விரித்து கட்டப்பட்டிருந்தது அவளின் மாளிகை.

 

தன்னுடைய இருப்பிடத்தில் தான் இருக்கிறோம் என்பதை அறிந்த பின்பே அவளது இதயத்தின் துடிப்பானது சீராகியது.

 

கண்களை அழுந்த துடைத்தவள் முகத்தை உள்ளங்கையால் மூடினாள். பெரிய மூச்சாக இழுத்து தன்னை ஆசவாசப்படுத்திக் கொண்டவளின் முன்வந்து நின்றான் ஒரு சிறுவன். ஆறு வயது இருக்கும் ஆனால் அவனுக்கு இருக்கும் முதிர்ச்சியோ அவனது வயதை விட அதிகமாக இருக்கும்.

 

முகத்தை மூடி இருந்த அவளது கைகளை எடுத்துவிட்டவன் “அக்கா! அக்கா!” என பரபரத்தான்.

 

“என்னடா தம்பு?” என்றாள். தம்பி என்பதை அவள் தம்பு என்றே கூறுவாள்.

 

“அக்கா நான் பொம்மைய செஞ்சு முடிச்சுட்டேன் சீக்கிரம் வா காட்டுறேன்!”

 

தம்பி அவனின் உற்சாகத்தில் தானும் புத்துணர்ச்சி கண்டவள் அவன் பின் எழுந்து சென்றாள்.

 

அவளது குடிலுக்க அருகே இன்னும் சில குடில்கள் அதே போல் சற்று இடைவெளி தள்ளி தள்ளி அமைந்திருந்தது. அக்குடில்களில் இருந்து இருபது அடி தொலைவுக்கு அப்பால் தேசிய நெடுஞ்சாலை ஒன்று இருந்தது.

 

ஊர் ஊராக சென்று பொம்மைகள் செய்து விற்கும் நாடோடி இன மக்கள் அவர்கள். ஊர் ஊராக சுற்றி திரிந்து தங்களது கால்நடைகளை வளர்ப்பதும் கைவினைப் பொருட்களை விற்பதும் இவர்களது தொழிலாக இருந்தது. அதுவே இவர்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்தது.

 

சிறு சிறு குட்டி வாண்டுகள் சூழ்ந்திருகக்க சம்யுக்தாவை அவ்விடம் அழைத்து சென்றான் கார்மேகன்.

 

அவன் கூட்டத்தில் நுழையவும் அனைவரும் விலகிக் கொள்ள அக்காவை உள்ளே அழைத்து சென்றவன் அங்கே தான் செய்திருந்த கிளி பொம்மையை அவளிடம் காட்டினான்.

 

“ஹையோ! அழகா இருக்கு தம்பு!” என்று அதனை கையில் எடுத்து சுற்றி சுற்றி பார்த்தாள். உண்மையை கூற வேண்டும் என்றால் அந்த பொம்மை அவ்வளவு நன்றாக வரவில்லை தான். ஆனாலும் அவனது முயற்சியை பாராட்ட வேண்டும் என்பதால் அவ்வாறு கூறினாள் சம்யுக்தா.

 

தமக்கையின் பாராட்டில் அகம் மகிழ்ந்து சிரித்தான் கார்மேகன். அவன் சிரிக்கும் பொழுது அவன் பல்லின் கீழ் வரிசையில் இருக்கும் செத்துப்பல் அவ்வளவு அழகாக இருக்கும்.

 

“ஆமா பவ்யா எங்கடா?”

 

“இங்க தான் அக்கா இருந்தா!” என்று சுற்று முற்றும் பார்க்க அவளும் சுற்றிலும் பார்வையை திருப்பினாள். துாரத்தில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்க அங்கிருந்தோர் அனைவரும் அவ்விடம் நோக்கி ஓடிச் சென்றனர்.

 

மரக்கட்டையால் வேலி போல் வட்டமாக அமைக்கப்பட்டிருக்க அதற்குள் நிறைய ஆடுகள் கட்டப்பட்டு இருந்தன. அதற்குள் நிறை மாதமாக இருந்த ஆடு ஒன்று குட்டியை ஈன முயன்று கொண்டிருந்தது. அதன் அருகில் நின்று முதுகில் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் ஆறு வயதே நிரம்பிய பவ்யா.

 

ஆடுகளின் கத்தலில் இன்னும் சிலரும் அங்கே கூடிவிட அக்கூட்டத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் ஆட்டுகுட்டிக்கு பிரசவம் பார்த்தார். ஒரே நேரத்தில் மூன்று குட்டிகளை ஈன்றது. இரண்டு பெட்டை ஆடுகளும் ஒரு கெடாவையும் ஈன்றிருந்தது.

 

அவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தனது தம்பி தங்கைகளை அழைத்து வந்து குடிலுக்கு முன் நிறுத்தினாள் சம்யுக்தா.

 

குடிலின் முன் அமைந்திருந்த விறகு அடுப்பின் உள் இருந்து சாம்பலை எடுத்தவள் அதனை இருவர் கையிலும் கொடுத்து கூடவே அருகில் இருந்த செங்கற்களை துகள் ஆக்கி அதனுடன் சேர்த்தாள்.

 

அதனை பெற்றுக் கொண்ட இருவரும் தங்களது பற்களை துலக்க ஆரம்பித்தனர். பின் தங்களது கையையும் வாயையும் நீரினால் சுத்தம் செய்தனர்.

 

மெல்ல தமக்கையின் அருகில் சென்ற பவ்யா அவளது பாவடையை பிடித்து தன் முகம் துடைத்துக் கொண்டாள். 

 

இருவரையும் அமர வைத்து கடுங்காப்பியை போட்டு அவர்களது கையில் கொடுத்தவள் தானும் ஒரு குவளையை எடுத்துக் கொண்டு நெடுஞ்சாலை ஓரம் சென்றாள்.

 

அங்கே அவர்களால் செய்யப்பட்ட பொம்மைகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தது. மேற்பார்வைக்காக ஒரு பெண் அமர்ந்திருக்க இவளும் அவளுடன் இணைந்து கொண்டாள். தன் கையில் இருந்த மற்றொரு குவளையில் தேநீரை கொஞ்சம் பகிர்ந்து அருகில் இருப்பவளிடம் கொடுத்து தானும் குடித்தாள்.

 

குடித்து முடித்தவள் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களைப் பார்த்து பொம்மைகளின் விலையைக் கூறி கத்த ஆரம்பித்தாள். சிலர் நின்று விலையை விசாரிக்க சிலர் அப்படி ஒருவள் அங்கு அமர்ந்து கத்திக் கொண்டிருப்பது தெரியாதது போல் கடந்தனர்.

 

துபாய் விமான நிலையம்

 

செக்கிங் கவுண்டரில் பரிசோதிப்பவரிடம் வாதாடிக் கொண்டிருந்தான் ஒருவன். விமானத்தில் ஏறும் முன் பயணிகளிடம் சோதனை நடத்துவர். அப்படி நடத்துகையில் அவனிடம் மூன்று லைட்டர்கள் இருக்கவும் அதனை வாங்கி வைத்துக் கொண்டனர்.

 

“சார் திஸ் இஸ் டூ மச்! பிளீஸ் கிவ் மை லைட்டர்” ( சார் இது அநியாயம் என்னோட லைட்டர தயவு செய்து கொடுங்க)

 

“சாரி சார் வீ காண்ட் அலோவ் ஒன் மோர் லைட்டர்” ( சாரி சார் ஒரு லைட்டர்கு மேல எங்களால அனுமதிக்க முடியாது)

 

மேலும் அவன் அவர்களிடம் வாதாடிக் கொண்டே இருந்தான். ஒருநிலைக்கு மேல் சந்தேகம் கொண்ட ஆபிசர்கள் அவனை தங்களது கஸ்டடிக்கு அழைத்துச் செல்வது என முடிவு செய்தனர்.

 

அவனை இழுத்துச் செல்ல முனையும் போது மற்றொருவன் அவ்விடம் வந்தான். “பாஸ்! பாஸ்! நில்லுங்க!” என்று அவனின் நடையை நிறுத்தினான்.

 

“நானும் பார்த்துட்டு தான் இருந்தேன் இரண்டே இரண்டு லைட்டர் தான அதுக்கு போய் ஏன் இப்படி சண்டை போடுறீங்க?”

 

“தமிழா பாஸ் நீங்க?” என ஆச்சரியம் உற்றவன் “நீங்களே நியாயத்த கேளுங்க பாஸ்! வெறும் இரண்டே இரண்டு லைட்டரை எடுத்தட்டு போறதுனால இவங்களுக்கு என்ன பிரச்சனை?”

 

“புரியுது பாஸ்! ஆனால் இந்த நாட்டு விதிப்படி இது தப்பு லைட்டர் தான பாஸ் இன்னொனு வாங்கிட்டா சரியா போச்சு”

 

“லைட்டர் தானாவா? பாஸ்! அந்த லைட்டர்ஸ் இரண்டும் என்னோட girl friends கொடுத்தது”

 

“என்ன girl friends ஆ?”

 

“ஆமா பாஸ்!”

 

‘ஐயோ சரியான பொறுக்கியா இருப்பான் போலையே? பார்க்க தமிழ் பையன் மாதிரி இருக்கவும் உதவி பண்ண வந்தது தப்பு போலையே!’ என்று மூளை சிந்திக்கவும் மனமோ ஒருத்தர் பேசுற ஒரு வார்த்தையில அவங்கேளாட கேரக்டர்ர முடிவு பண்ற அதிகாரம் உனக்கு யாரு கொடுத்தா முதல அவன பத்தி மதிப்பிட உனக்கு என்ன உரிமை இருக்கு என்று கேட்டது. 

 

இவன் இப்படி சிந்தையில் இருக்கவும் உடன் இருந்தவனை கவனிக்க தவறினான். அவனோ அங்கிருந்த அதிகாரிகளிடம் தன்னுடைய வார்த்தை ஜாலத்தை காட்ட முயற்சிக்க அவனை நோக்கி துப்பாக்கியை நீட்டினர் அதிகாரிகள்.

 

அப்பொழுதும் சண்டையை நிறுத்தாமல் தொடர்ந்து எதிர்வாதம் புரிந்தவனைை அவர்கள் முன் இருந்து அப்புறப்படுத்தி அவனுக்காக இரண்டாமானவன் மன்னிப்பு கோரி அழைத்து வந்துவிட்டான்.

 

புலம்பிக் கொண்டே அவ்விடம் விட்டு அகன்றவன் பிளைட்டினுள் ஏறினான். தன்னுடைய சீட் நம்பரை தேடிக் கொண்டிருந்தவனிடம் இரண்டாமானவன் சீட் நம்பரை கேட்டான்.

 

அதிர்ஷ்டவசமாக இருவருக்கும் அருகருகே இடம் கிடைத்தவுடன் ஆசுவாசமாக சீட்டில் அமர்ந்தனர்.

 

“பாஸ் ஆனாலும் உங்களுக்கு செம்ம தில்லு”

 

முதலாமானவன் அவனை கேள்வியாக நோக்க 

 

“அது அங்க அந்த ஆபிசர்ஸ் கூட சண்டை போட்டீங்களே அது பத்தி சொன்னேன்”

 

அவன் மென்புன்னகை சிந்தினான்.

 

“பாஸ் பாஸ்னு நீங்க கூப்பிடுறது ஏதோ மாதிரி இருக்கு நீங்க என்னோட பேர் சொல்லியே கூப்பிடலாம் என்னோட பேர் சர்வானந்தன். எனக்கு குளோஸ் ஆனவங்க சர்வானு கூப்பிடுவாங்க உங்களுக்கு எப்படி கூப்பிடனுமோ அப்படி கூப்பிடுங்க”

 

“ம் நான் உங்கள சர்வா பாஸ்னு கூப்பிடுறேன்”

 

“மறுபடியும் பாஸா!” என்று சலித்துக் கொண்டவன் “உங்க பேரு?” என்று அருகில் இருந்தவனிடம் கேட்க அழகாக புன்னகைத்தவன் “சந்திரகாந்தன்” என்று கூறினான்.

 

“பெயர் பொருத்தமா இருக்கு உண்மையிலே உங்க சிரிப்பால காந்தம் போல இழுக்குறீங்க!”

 

“சர்வா பாஸ்! நான் பொண்ணு இல்ல பையன். ரொம்ப புகழ்றீங்க?”

 

“இது என்னடா கொடுமை? அழகா இருக்கீங்கனு பொண்ணுங்ககிட்ட மட்டும் தான் சொல்லனுமா?”

 

அதற்கு சந்திரகாந்தன் பதில் ஏதும் கூறாமல் சிரிக்க இவனும் உடன் சேர்ந்து சிரித்தான்.

 

“சரி சொல்லுங்க நீங்க எந்த ஊரு?” என முதலில் தன் கேள்வியை ஆரம்பித்தான் சந்திரகாந்தான்.

 

“நான் கால் பதிக்குற எல்லா இடமும் என் ஊரு!”

 

“புரியல!”

 

“உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி, இப்படி உங்களுக்கு எப்படி தோணுதோ அப்படி நினைச்சுக்கங்க”

 

“ஓ! சரி அடுத்து எங்க?”

 

“தெரியல எதுவும் ஐடியா இல்ல! நம்ம நாட்டுக்கு போனதுக்கு அப்புறம் தான் முடிவு பண்ணனும் உங்கள பத்தி சொல்லுங்க சந்திரா”

 

“சந்திரா?”

 

“ஆமா! சந்திரகாந்தன்.. ரொம்ப பெருசா இருக்கே அதான் சந்திரா!”

 

“ஒகே ஒகே! என் ஊரு பனையரசன்பட்டி கிராமம், அழகான கிராமம்” என அழகான என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தான்.

 

அதிலிருந்தே அவ்வூரின் செலுமையை பற்றி நன்றாக புரிந்தது மற்றவனுக்கு.

 

“எங்க வீட்டுல நான் அப்பா அம்மா ஒரு தங்கை!”

 

“தங்கையா?” என்று கண்களை பெரிதாக விரித்து சர்வானந்தன் ஆர்வமாக கேட்க “கல்யாணம் ஆகிடுச்சு!” என்றான் சந்திரகாந்தன்.

 

தொடரும்..

முதல் அத்தியாயம் எப்படி இருக்குனு கமெண்ட் பண்ணுங்க நண்பர்களே!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
7
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments