சுழலி-9
வள்ளி சொன்ன அனைத்தையும் கேட்டு அதிர்ந்தது பிறை மட்டுமல்ல, உள்ளேயிருந்த சிவரஞ்சனும் தான். தான் கேட்டது அனைத்தும் உண்மைதானா என ஒருமுறை உறுதிப்படுத்திக் கொண்டான் சிவரஞ்சன்.
வேகமாக வெளியே வந்தவன், “நீங்க சொல்றது உண்மையா? அப்போ இதுக்கு வேற வழியே இல்லயா?” வள்ளியைப் பார்த்துக் கேட்டான்.
“எனக்கு வந்த வாக்க மட்டுந்தான் நான் சொல்லுவேன் சாமி. அதுக்கு மார்க்கமும் உபாயமும் அந்த முருகன்தான் உங்களுக்குக் காட்டுவான்.” என்றவளின் பார்வை நடந்து வரும் மூவரின் மேலே இருந்தது.
கார்த்திகேயனும் பிறையும் சொக்கனைப் பிடித்தபடி வர, அவர்களைப் பார்த்தவர்கள் பதறினர்.
“பிறை, என்ன ஆச்சு? ஏன், எல்லாருக்கும் இப்டி அடிபட்டு இருக்கு?” வந்தவர்களை அமர வைத்தபடியே கேள்விகளை தொடுத்தாள் அங்கை.
“ஒன்னுமில்ல அங்கை. தவறி பள்ளத்துல விழுந்துட்டான். ஆருவ கூப்டு” என்றபடி கார்த்தி அவளை உள்ளே அனுப்பினான்.
அவர்களைப் பார்த்து புன்னகைத்தபடியே எழுந்தாள் வள்ளி.
“ஆட்டம் தொடங்கிடுச்சு,
ஆறப்பொறுக்க நேரமில்ல.
பாஞ்சுநாள் பயணத்துக்கு
பாதையவள் கொடுத்துவிட்டாள்.
குறிப்பைக் கண்டுக்கொண்டு,
குகனின் பாதம்பணியும்.
வழியவன் நல்கிடுவான்,
வந்தவினை தகர்த்திடுவான்.
ஒத்துமையது முக்கியமுன்னும்
விதியது உணர்த்திடுமே.
ஒதுங்காம கைக்கொடுத்தால்,
உயிரிரண்டும் ஒன்றிணையும்.
வந்தவேலை முடிந்ததுவே,
வழிதருவாய் முருகவேலே!”
பாடிக்கொண்டே வள்ளி சென்றுவிட்டாள். அவளை நிறுத்தி கேள்விகள் கேட்க வேண்டும் என்று யாருக்கும் தோன்றக்கூட இல்லை. அனைவரும் அந்த பாடல் வரிகளிலும் அவள் சொன்ன குறிப்புச் சொற்களிலுமே சிக்கிக் கொண்டிருந்தனர்.
பிறையும் சிவரஞ்சனும் வள்ளியையே பார்த்திருக்க, சிறிது தொலைவிற்குப் பின் அவள் எந்தப்பக்கம் சென்றாள் என்றே தெரியவில்லை. சட்டென்று எதிலிருந்தோ விடுபட்டதுபோல் ஒரு உணர்வு.
அங்கை, ஆருவையும் அறிவையும் அழைத்துவந்தாள். ஆருத்ரா காயங்களுக்கு முதலுதவி செய்திட, வெளியே வந்த அங்கை கேட்ட முதல் கேள்வி இதுதான்.
“அந்த குறிசொன்ன அம்மா எங்க?”
“அவங்களுக்கு ஏதோ அவசர வேலன்னு கிளம்பிட்டாங்க அங்கை” பிறைதான் சொன்னான். ஆனாலும், பிறை சொன்னது அங்கைக்கு சந்தேகத்தைத்தான் கொடுத்தது.
அன்புதான் தலையைப் பிடித்துக் கொண்டு கத்தினான். “தயவுசெஞ்சு, நம்மள சுத்தி என்னதான் நடக்குது? யாராவது சொல்லுங்க. இல்லன்னா, எனக்கு மண்டையே வெடிச்சிடும்”
ஒருவர், ஒருவர் முகத்தைப் பார்த்துக் கொண்டனர். வீட்டில் என்ன நடந்தது என்று மற்ற மூவருக்கும் தெரியாது. மேலும், காட்டில் என்ன நடந்தது என்று மற்றவர்களுக்கும் தெரியாது என்பதால் யார் எதைஎதை கூற வேண்டும் என்றும் தெரியவில்லை.
“நான் சொல்றத பதட்டப்படாம கேளுங்க” பிறையும் சிவரஞ்சனும் ஒரே நேரத்தில் ஆரம்பித்தனர். பிறையும் ரஞ்சனும் ஒருவரையொருவர் யோசனையோடு பார்க்க,
“யாரும் எதுவும் சொல்ல வேண்டாம். நான் இங்க இருந்து கிளம்புறேன்னு முன்னாடியே சொன்னேன். நீதான் பிறை வரட்டும்னு சொன்ன அறிவு. இப்போ வந்தாச்சு. என்ன பேசனுமோ பேசிடு. நாம கிளம்புறோம்” காட்டமாக பதிலளித்தாள் அங்கை.
பிறையும் கார்த்திகேயனும் அறிவைதான் பார்த்தனர். ஆருத்ரா சொக்கனுக்கு மருத்துவ உதவி செய்து முடித்திருந்தாள்.
“என்ன அறிவு ஆச்சு? அங்கை ஏன் இவ்ளோ கோபம்?” பிறை புரியாமல் கேட்டான்.
அங்கை கைகளைக் கட்டிக்கொண்டு அந்தப்பக்கம் திரும்பிக்கொள்ள அனைவரின் பார்வையும் தற்போது அறிவைத் துளைத்தது.
“கைஸ், எனக்கொன்னும் தெரியாது. இவரு ரூம்ல இருந்து வெளிய வந்த உடனே அங்கைய பாத்து ‘நீ இன்னும் உயிரோடத்தான் இருக்கீயா?’ன்னு கேட்டாரு. நானும் அன்புவும் சண்டப் போட்டோம். அங்கைதான் இவரு இருந்தா இனிமே நான் இங்க இருக்கமாட்டேன், உடனே கிளம்பனும்னு சொல்லிட்டு இருக்கா. என்ன விசயம்னு எனக்கும் தெரியாது. ஆனா, அங்கை இப்போ ஆபத்துல இருக்கான்னு மட்டும் எனக்கு புரியுது ப்ரோ.” நடந்தவற்றையும் தான் பார்த்தவற்றையும் வைத்து பேசி முடித்தான் அறிவு.
“சிவா, என்னடா இது?”
“எனக்கு பாம்புன்னா ஏன் பயம்னு கேட்டுட்டே இருப்பல்ல பிறை. அதுக்கு இவளும் ஒரு காரணம். இவளாலதான் அப்பா இப்போ இல்ல” ரஞ்சன் இறுகிய முகத்தோடு சொன்னான்.
“அப்பாக்கு ஆக்சிடன்ட்டுன்னுதான சொன்ன?” பிறை சந்தேகமாகக் கேட்டான்.
“அது ஆக்சிடன்ட் இல்ல, கொல.” உரக்க சொன்னாள் அங்கை. தற்போது அனைவரும் அவளை அதிர்ச்சியோடு பார்த்தனர்.
“யாருமே அவர நம்பல. என்னைத் தவிர. என்னால ஒன்னும் பிரபா அங்கிள் சாகல. உன்னால, உன் ஃபேமிலினால. ஒருநாளாவது அவரு என்ன சொல்ல வராருன்னு காதுகொடுத்து கேட்டு இருப்பியா நீ? நம்பிக்கைக்கு தகுதி இல்லன்னு நீ சொன்னல்ல அவர? அவரு உன்மேல வச்சிருந்த நம்பிக்கய காப்பாத்துனியா? நீ இழுத்துவிட்டது தான் இப்போ இவ்ளோதூரம் வந்து நிக்குதுன்னு உனக்கு தெரியுமா?” வீடே அதிரும்படி கத்தினாள் அங்கை. அவளின் இந்த கோபம் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
“அங்கை, ப்ளீஸ் எனக்காக கொஞ்சம் அமைதியா இரு. சிவா என்ன நடந்துச்சு சொல்லு” அழுத்தமாகக் கேட்டான் பிறைசூடன்.
“அவ சொல்றதும் சரிதான். ஒருநாளும் என் அப்பா சொல்றதயும், சொல்ல வரதயும் நான் காதுகொடுத்து கேட்டது இல்ல. பெத்த பையன் நான் இருக்க, எப்போவும் அங்கைன்னு ஒருத்திக் கூட மட்டுமே அவர் டைம் ஸ்பென்ட் பண்ணா நான் எப்டி அவர் பேசுறத கேட்க முடியும்? எப்பவுமே அவருக்கு அங்கைதான் பெஸ்ட். என் அப்பா பிரபஞ்சனும் இவளோட அப்பா சாரதியும் மிலிட்டரில ஒன்னா வொர்க் பண்ணவங்க. அங்க ஆரம்பிச்ச இவங்களோட நட்பு, சொல்லமுடியாத அளவுக்கு வளந்தது. ரெண்டு பேருக்கும் சொந்த ஊரு சேலம்தான். அது, இன்னும் அவங்கள நெருக்கமாக்குச்சு. அப்பா படிச்சது ஃபாரஸ்டரி பத்தி. சாரதி அங்கிள் ஜ்வாலஜில செர்பன்டாலஜி ஸ்பெசலிஸ்ட். ரெண்டு பேருக்கும் இன்னும் பொதுவான விசயம் பாம்புகள்.
அப்பா சர்வசாதாரணமா பாம்புகளோட விளையாடுவாரு. சாரதி அங்கிள் அடிக்கடி பாம்பு பிடிக்கவும் போவாரு. ஒரு கட்டத்துல ரெண்டு பேருக்கும் அதுல இன்ட்ரெஸ்ட் அதிகமாகி இன்னும் அதப்பத்தி நிறய தெரிஞ்சிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அவங்களோட காலை விடியலும் பாம்புகளோட தான் ஆரம்பிக்கும். இரவு உறக்கமும் பாம்புகளோட தான் முடியும். இவங்கம்மா கற்பகம் அத சாதாரணமா எடுத்துக்கிட்டாலும் எங்க குடும்பமும் சரி, என் அம்மாவும் சரி ரொம்ப பயந்தாங்க. இதுனால வீட்ல சண்ட மட்டும் தான். ஒருநாள் சாரதி அங்கிளோட இவளும் வந்தா, அந்த சமயம் வீட்ல திடீர்னு ஒரு இராஜநாகம் வந்தது. அத அசால்ட்டா மேடம் கைல பிடிச்சு விளையாடினாங்க. அதுவும் இவள ஒன்னுமே பண்ணல. அன்னைல இருந்து என் அப்பாவுக்கு பிடிச்ச பொண்ணு இவதான். சின்ன வயசுலயே பாம்ப எப்டி பிடிக்கணும். அதுங்க கூட எப்டி பழகணும், இன்னும் எவ்ளோவோ, எல்லாமே சொல்லிக் கொடுத்தார். எனக்கும் தான். ஆனா, பயம் இருந்த அளவுக்கு எனக்கு கத்துக்க விருப்பம் கிடையாது. அதுனால அப்பா என்ன கம்பெல் பண்ணல. ஆனா, நாளுக்கு நாள் வீட்ல சின்ன சின்ன விசயத்துக்கு சண்ட வந்தது.
அம்மாவோட ஃபேமிலி அப்பாக்கிட்ட டைவர்ஸ் கேட்டாங்க. அதுனால, சண்ட அதிகம்தான் ஆச்சு. அப்பா, அம்மாவ அடிச்சிட்டாரு. சின்ன வயசுல ரெண்டு பேர்கிட்டயும் என்னால நெருங்க முடியல. அவங்க டைவர்ஸ் கேட்டப்போ எனக்கு வயசு பதினஞ்சு. அந்த ரெண்டுகெட்டான் வயசுல அம்மா பக்கம் மட்டும் தான் நியாயம் இருக்குதுன்னு எனக்கு தோணுச்சு. ஆமா, நான் என் அப்பாவ நம்பல. எந்நேரமும் பாம்போடயே இருக்குறவருக்கிட்ட என்னன்னு நான் பேசுறது? அப்டி அவரு பாம்போட இல்லன்னாலும் இவளோட இருப்பாரு. ஒரு கட்டத்துல இவளால கற்பகம் அம்மாவயும் என் அப்பாவயும் சேர்த்து வச்சு எல்லாரும் தப்பா பேச ஆரம்பிச்சிட்டாங்க. தப்புதான், நானும் அப்டி பேசினேன். அப்போ ஜீப் எடுத்துட்டு போனவருதான் திரும்ப வரல பிறை. அன்னைக்கு அப்பா கூட இவளும்தான் போனா. ஆக்சிடன்ட்ல அப்பா பாடி மட்டும்தான் கிடச்சது. இவ பாடி கிடைக்கலன்னு சொன்னாங்க. அதுனாலதான் அவள பாத்த உடனே அப்டி ஒரு கேள்வி கேட்டேன். பட், இப்போ நான் அப்பாவ ரொம்ப மிஸ் பன்றேன் பிறை” முகத்தை மூடி அழுதவனை தேற்றும் வழியறியாது அனைவரும் நின்றனர்.
“வெல், இப்போ அழுது ஒரு ப்ரோயஜனமும் இல்ல மிஸ்டர். கூட இருக்குறப்போ அவரோட அரும உனக்கு புரியல. இப்போ அழுது சிம்பத்தி கிரியேட் பன்றீயா?” அங்கை நக்கலாகக் கேட்டாள்.
“அங்கை, பேசாம இரு” அன்பு அடக்கினான்.
“நான் ஏன்டா பேசாம இருக்கணும். இங்க பேச வேண்டியது நான் மட்டும்தான். அவரு சாகுற இறுதி நொடில கூட இந்த நாய் பேர சொல்லிட்டுதான் இறந்தாரு. ஆனா, அவரோட பொணத்த கூட இவங்க வீட்ல யாரும் வாங்கலடா. என் அம்மாவயும் இவரயும் சேத்து வச்சு பேசின வார்த்தைகள் கொஞ்ச நஞ்சம் கிடையாது. நான் மறுபடியும் ஸ்நேக் கேட்சர்ரா ரெஜிஸ்டர் பண்ணதுக்கு அப்ரோம் இன்னைக்கு வரைக்கும் என் அப்பா என்கூட பேசுறது கிடையாது. காரணம், இவங்க யாரும் பிரபஞ்சன் அங்கிள் மேல வைக்காத நம்பிக்கதான். அவர இழந்த மாதிரி என்னையும் இழந்துடுவோமோன்னு அப்பாக்கு இன்னமும் பயம். இதுக்குலாம் யார்கிட்டயாவது பதில் இருக்கா அன்பு? நம்பிக்கைங்குறது ஒருத்தர் கேட்டு வாங்க முடியாது. அத அவரு உணர்த்த ரொம்ப பிரயத்தனப்பட்டாரு. ஆனா, புரிஞ்சிக்கதான் யாராலயும் முடியல. ப்ச், போலாம் அறிவு. இனிமே நாம இங்க இருக்கணுமா?” தளர்ந்து கூறியவளின் கண்கள் நீரால் நனைந்திருந்தது.
“அங்கை, ப்ளீஸ். என்மேல இருக்குற கோபத்துல நீ ரிஸ்க் எடுக்காத. இப்போ ஆபத்துல இருக்குறது நீதான். அந்த குறி சொல்ற அம்மா சொன்னதுலாம் முழுக்க முழுக்க உன்ன பத்திதான். நாம கல்வராயன் மலைக்கு உடனே கிளம்பனும் அங்கை” படப்படத்தான் சிவரஞ்சன்.
“நீ சொன்னா நான் கேட்கணுமா என்ன? அப்ரோம், ஏன் இந்த திடீர் அக்கறை? பை த வே, உங்க திடீர் அக்கறைக்கு ரொம்ப நன்றிகள். உன்னோட உதவியாலதான் என்னோட உயிரக் காப்பாத்திக்க முடியும்னா அந்த உயிர் எனக்கு தேவ இல்ல. என்னைக் காப்பாத்திக்க எனக்குத் தெரியும். அறிவு, அன்பு வாங்க போலாம்” அவளின் விழிகள் அனலைக் கக்கியது.
அங்கையின் கைப்பிடித்து நிறுத்தினான் பிறை. கண்களாலேயே அவளை அமைதியடைச் செய்தவனின் விழிகள் மொழியாடியது. “ப்ளீஸ், நான் சொல்றதயாவது கேட்கலாமே. ஒரு தடவ?”
அவன் பிடித்த கையை அவளும் உதறவில்லை, அவனும் தளர்த்தவில்லை. அப்படியே இருக்கையில் அமர்ந்தாள் அவனுடன்.
“ஏன் அறிவு, ரெண்டு பேரும் கண்ணாலேயே அப்டி என்னடா பேசிப்பாங்க?”
“நான் வேணா, அங்கைக்கிட்ட கேட்டு சொல்லவா?”
கையெடுத்துக் கும்பிட்டவன், “வேண்டாம், நீ எப்டி கேட்பன்னு எனக்கு தெரியும். அவங்க கண்ணால பேசுனா எனக்கென்ன, காதால பேசுனா எனக்கென்ன? உசுரோட வீடுபோய் சேர்ந்தா போதும்டா”
“காதால கேட்கதான் முடியும் அன்பு. பேச முடியாது” என்று அருகில் வந்து நின்றாள் ஆரு.
“யம்மா நீயுமா? கடிக்காதம்மா. மீ பாவம்” என்றவனை பார்த்து இருவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டனர்.
“காட்டுக்குள்ள என்ன ஆச்சு?” பிறை சொல்ல வந்ததை யூகித்தவளாய் கேட்டாள் அங்கை. அனைவரின் கவனமும் தற்போது பிறையை நோக்கி நகர்ந்தது.
“நேத்து உன்ன காப்பாத்த வந்தப்போ எங்க மலகிராமத்து பொண்ணான மஞ்சரிய நான் பாத்தேன். ஆனா, அவங்க இறந்து கிட்டத்தட்ட பன்னென்டு வருசம் ஆச்சு. அது ஆவியா, இல்ல நிஜமாவே அவங்கதானான்னு பாக்கதான் காலைல மூணுபேரும் போனோம். சரியா அந்த இடத்துல நிக்குறப்போ பெரிய சூறாவளி காத்து மாதிரி வீசுச்சு. நாங்க கைய பிடிச்சு ஸ்டடி ஆகுறதுக்குள்ள சொக்கன யாரோ தரதரன்னு இழுத்துட்டு போனாங்க. அவன காப்பாத்த கார்த்தி அண்ணா போனாரு. என்னால ஒரு இடத்துல நிக்க முடியல. அப்போ, எனக்கு மட்டும் ஒரு குரல் கேட்டுச்சு. சொக்கனோட கல்ராயன் மலைக்கு வர சொல்லுச்சு. குறிப்பு எங்க இருக்குன்னு சொக்கனுக்கு தெரியும். ஒம்பது உசுரு ஆபத்துல இருக்கு. சொக்கனோட உடனே வான்னு சொல்லுச்சு. இங்க வந்து பாத்தா அந்த குறி சொல்ற அம்மாவும் கிட்டத்தட்ட இதே விசயத்த தான் சொல்றாங்க.” நடந்தவற்றை கூறியதும் அனைவர் முகத்திலும் மிரட்சி.
இதுவே முன்னே இருந்த அங்கையாக இருந்தால், இதையெல்லாம் கிஞ்சித்தும் நம்பியிருக்க மாட்டாள். ஆனால், நேற்றைய சம்பவம் இதனை உண்மையென்றே உரக்கச் சொல்லியது. அவளின் கைகள் நடுக்கம் கொண்டது.
அவளின் இரண்டு கைகளையும் தன்னுள் அடக்கியவன், அங்கையின் கயல்கண்களை நோக்கினான். “உன்ன இதுக்கு முன்னாடி நான் பாத்தது இல்ல அங்கை. நேத்து காப்பாத்த வந்தப்போதான் முதல் முறை பாத்தேன். அந்த நிமிசமே நீ எனக்குள்ள வந்துட்ட. பாத்த உடனே பிடித்தம், லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்லாம் நான் நம்புறவன் கிடையாது. ஆனா, உன்ன பாத்த நிமிசம் இதே மாதிரி என் கைக்குள்ள உன்ன வச்சுப் பொத்தி பாத்துக்கணும்போல தோணுது. காலம் முழுக்க உன்னோட பயணிக்கனும்னு தோணுது. எந்த பிரச்சனை வந்தாலும் நான் உன்கூட இருக்கேன், இருப்பேன். எந்த சூழ்நிலைலயும் இருப்பேன் அங்கை” அவளிடம் தன் காதலை மொழிந்தான்.
“இங்க என்ன பிரச்சனை போயிட்டு இருக்கு, உன் அண்ண பன்ற வேலைய பாத்தியா?” என்று கார்த்தி ஒரு பக்கமும்,
“என்னாடா, சட்டுன்னு ப்ரோபோஸ் பண்ணிட்டாரு. அநேகமா இந்நேரம் அங்கை சப்புன்னு வச்சியிருக்கணுமே” என்று இன்னொரு பக்கம் அன்புவும் புலம்பினர்.
இவர்களின் எண்ணத்திற்கு மாறாக சிவரஞ்சன் அதிர்ச்சியாகிட, ஆருவும் அறிவும் மகிழ்ச்சியில் திளைத்தனர். பிறையும் அங்கையும் ஒன்று சேர வேண்டும் அவசர கோரிக்கையும் வைத்தனர். ஆனால், இது இப்படித்தான் நடக்கும் என்று சொக்கன் முன்னமே அறிந்திருந்தான் என்பது அவனது கண்களிலேயே தெரிந்தது.
மெதுவாக பிறையின் கைகளிலிருந்து தன் கையை எடுத்தவள், பதிலேதும் கூறாமல் தரையை நோக்கினாள்.
“ஆனா, பிறை. சொக்கன இழுத்துட்டு போனது மஞ்சரி கிடையாது. பெரிய கருநாகம்” கார்த்தி சொன்னதும் அனைவர் முகத்திலும் பெரிய அதிர்ச்சி.
பிறை இருக்கையை விட்டு எழுந்திருந்தான். “என்ன அண்ணா சொல்றீங்க?”
“அதோட வால நான் பாத்தேன். அது, கருநாகம்தான்.” எச்சில் விழுங்கியபடி அவன் சொன்னான்.
அப்போது வாயிலில், “இப்போ நான் உள்ள வரலாமா?” என்றபடி யாழ்நிலா நின்றிருந்தாள்.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
15
+1
1
+1
1
செம்ம ரைட்டிங் சூப்பர் 👌👌