Loading

சுழலி-8

சிவரஞ்சன் கேட்ட கேள்வியில் அனைவரும் திகைத்து நின்றனர். சட்டென்று அறிவுக்கும் அன்புவிற்கும் கோபம் வந்துவிட்டது.

“ப்ரோ, என்ன இப்டி பேசுறீங்க? அவளே இப்போ தான் உயிர் பிழைச்சு வந்து இருக்கா? இன்னும் உயிரோடத்தான் இருக்கியான்னு கேட்குறீங்க?” சிவாவிடம் எகிறினான் அறிவு. கண்முன்னே தன் தோழி இருந்த நிலையை பார்த்தவனால் இப்படியொரு வார்த்தையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சிவரஞ்சனோ இன்னமும் அங்கையை பார்த்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. இரவு நடந்த களேபரத்தில் சிவரஞ்சன் அங்கையை சரியாக கவனிக்கவில்லை. காலையில் கண் விழித்ததில் இருந்து இப்போது தான் அங்கையும் அவனை காண்கிறாள்.

“அங்கை, உனக்கு இவர தெரியுமா? நீ ஏன் பேசாம இருக்க?” அன்பு ஒரு பக்கம் இவளிடம் வினா தொடுத்தான். நடக்கும் அனைத்தையும் வெறும் பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆருத்ரா.

அங்கை சிவரஞ்சனையே பார்வையால் எரித்துக் கொண்டிருந்தாள்.

“அறிவு, அன்பு உடனே இங்கருந்து கிளம்பலாம். இனிமே இங்க என்னால ஒரு நிமிசம் கூட இருக்க முடியாது” சொன்னவள், விறுவிறென்று வெளியேற முற்பட்டாள்.

“அங்கை, கொஞ்சம் இரு. நம்மள சுத்தி முதல்ல என்ன நடக்குதுன்னே தெரியல. நீ தான் இப்போ அந்த பாம்புக்கிட்ட மாட்டி இருக்க. கார்த்தியும், பிறையும் வரட்டும். அதுக்கு அப்ரோம் என்னன்னு முடிவு பண்ணலாம்” முடிந்தளவு அவளை தடுத்து நிறுத்தப் பார்த்தான் அறிவு.

“எது நடந்தாலும் எனக்கு தான நடக்கப் போகுது. நான் பாத்துக்குறேன். இவன் இருக்குற இடத்துல என்னால இருக்க முடியாது” அங்கையின் வார்த்தைகளில் அத்தனை வெறுப்பு.

“அங்கை…” சிவரஞ்சன் பேச வர, பக்கத்தில் இருந்த அன்புவின் கன்னத்தில் சப்பென்று அறைந்தாள் அங்கை.

“அறிவு இருக்கா உனக்கு? சொல்லிக்கிட்டே இருக்கேன்ல, காதுல விழுகல? அங்கைன்னு பக்கத்துல வந்த கொன்னுடுவேன். நம்பிக்கைக்கு தகுதியே இல்லன்னு சொல்றது, அப்ரோம் ‘அங்கை’ன்னு வந்துடுறது பெரிய ம**று மாதிரி.” பற்களுக்கு இடையே வார்த்தைகள் சிதைந்தது. வார்த்தைகள் என்னவோ சிவரஞ்சனிற்கு தான். ஆனால், பார்வை முழுக்க அன்புவிடம் தான் இருந்தது.

“ஆருத்ரா, தயவு செய்து அவர உள்ள கூட்டிட்டு போங்களேன். பிறை வர வரைக்கும், ப்ளீஸ். அங்கை, நீ கொஞ்சம் பொறுமையா இரு. நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாம, இங்க இருந்து போறது அவ்ளோ சேஃப் இல்ல” கெஞ்சாத குறையாக அவளுக்கு எடுத்து சொன்ன அறிவு, சிவரஞ்சனை உள்ளே போகுமாறு வலியுறுத்தினான். ஆருத்ராவும் அவனை உள்ளே அழைத்து செல்ல, பொத்தென்று இருக்கையில் அமர்ந்தாள் அங்கை.

பாவம், அன்புதான் வாங்கிய அடியில் கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

அப்போது வெளியே மீண்டுமொரு பாட்டு சத்தம் கேட்டது.

“மலமேல குடியிருக்கும்

மயில்வாகன குறும்புக்காரன்…

மத்தாப்பு சிரிப்பால

மனசக்கொள்ளும் மாயக்காரன்…

அப்பனுக்கு பாடம்சொல்லி

பெயர்பெற்ற சுப்பனுங்க…

என்சாமி ஒனக்கு

என்னோட வந்தனமுங்க.” என்று பாடிக்கொண்டே கார்த்தியின் வீட்டிற்கு அருகில் வந்தாள் ஒரு பெண்.

“ஐயா, கார்த்தி சாமி. இருக்கீகளா?”

சத்தம் வெளியே தான் கேட்டது. “அன்பு, யாருன்னு போய் பாரு.”

“என்னடா?”

“யாருன்னு போய் பாருடா. கூப்டுறாங்க”

“ஆன்… என்ன சொன்ன? சத்தமா சொல்லுடா”

“ரைட்டு, காது போச்சு. அங்கை இங்கயே இரு. நான் யாருன்னு போய் பாத்துட்டு வரேன்” தலையில் அடித்துக் கொண்டவன், வெளியே சென்றான் அறிவு.

‘என்னடான்னு தான கேட்டேன். அதுக்கு ஏன் தலையில அடிச்சுட்டு போது பக்கி. கிரகம், என் நேரம் இவங்க கூட மாட்டிக்கிட்டு முழிக்குறேன்’ அன்பால் புலம்ப மட்டுமே முடிந்தது.

“சொல்லுங்கமா. யார் வேணும்?” நடுத்தர வயது பெண்மணியாக இருந்தவரைப் பார்த்து கேட்டான் அறிவு.

“யய்யா, கார்த்தி ஐயா இல்லீங்களா?”

“அவரு வெளிய போய் இருக்காரும்மா. உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க.”

“நான் குறி சொல்றவங்க. அடிக்கடி இந்த பக்கம் வருவேன். அப்போ கார்த்தி ஐயாக்கிட்ட தண்ணீ வாங்கி குடிச்சிட்டு, ஒருவா சோறு உண்டுட்டு போவேன். ஐயாவ காணல போல. தண்ணீ கிடைக்குங்களா?”

“சரிம்மா, உள்ள வாங்க. நான் சாப்ட எதாவது இருக்கா பாக்குறேன்”

“பொறுத்துக்கோங்க. நான் உள்ள வரமாட்டேனுங்க சாமி. பொறத்தாலேயே நிக்குறேனுங்க. நீங்க கொண்டு வாங்க.” என்று வாயிலில் தன் கூடையை வைத்துக் கொண்டு அமர்ந்துவிட்டார்.

இடையில் சொருகி வைத்திருந்த வெற்றிலையில் சிறிது சுண்ணாம்பு தடவி வாயில் போட்டவர், எதேர்ச்சையாக ஒரு மரத்தைக் கண்டார். மூன்று இராஜநாகங்களும் மரத்தின் கிளையில் ஊர்ந்து கிடந்தன. அந்த குட்டி இராஜநாகம் உள்ளே அங்கையைதான் பார்த்துக் கொண்டிருந்தது. இதனையெல்லாம் பார்த்து என்னவென்று யூகித்துக் கொண்டாள் அவள்.

சமையலறையில் அறிவு தேடியும் சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. ‘இனிமேல்தான் சமைத்து சாப்பிட வேண்டும் போல’ என்று எண்ணிக் கொண்டவன், ஒரு செம்பில் நீர் எடுத்து வந்தான்.

“என்னடா பன்ற?” எரிச்சலோடு கேட்டாள் அங்கை.

“வெளிய குறி சொல்ற அம்மா வந்து இருக்காங்க அங்கை. இங்க வந்தா கார்த்தி சார் கிட்ட தண்ணீ வாங்கி குடிப்பாங்களாம். ரொம்ப பசில இருக்காங்க போல. ஆனா, உள்ள ஒன்னுமே இல்ல”

அனைத்தையும் கேட்டுக் கொண்டவளின் கண்களில் கூடத்தில் சொக்கன் கொண்டு வந்த தூக்கு பட்டது.

“அத எடு”

அறிவும் அதையெடுத்து கொடுக்க, திறந்து பார்த்தவள் “இதுல கூலு இருக்குடா. இத கொடு அவங்களுக்கு. நாம அதுக்குள்ள சமச்சிடலாம்.”

“நீயே போய் குடு. நான் உள்ள என்ன இருக்குன்னு பாக்குறேன்” அறிவு உள்ளே சென்றுவிட, அங்கையும் அன்புவும் வெளியே வந்தனர்.

“இந்தாங்கம்மா, இதுல கூலு இருக்கு. குடிங்க”

“தவிச்ச வாய்க்கு தண்ணீக்கு பதிலா கூலு கிடச்சு இருக்கு. நல்லாயிருக்கணும் தாயி.” என்றவர் அவளின் கைத்தொட, ஒரு நிமிடம் கண்மூடி திறந்தார்.

“உங்கள இதுக்கு முன்னாடி இங்க நாங்க பாத்ததே இல்லயே” அன்பு தான் கேட்டான்.

“நான் குறி சொல்றவ சாமி. என் பேரு வள்ளி. பொறந்தது வளந்ததுலாம் இந்த மலைல தான். ஆனா, இப்போ இருக்குறது கல்வராயன் மலைல. அங்கதான் கட்டிக் கொடுத்து இருக்காங்க. அடிக்கடி அம்மையயும் ஐயனயும் பாக்க வந்தாக்கா இந்தப்பக்கம் வருவேன். தாயி, பசிக்குது. கூலு தேருமான்னு தெரியல. சோறு இருந்தா போடேன்”

அங்கைக்கு சங்கடமாக இருந்தது. அதற்குள சத்தம் கேட்டு வந்த ஆருத்ரா, “கொஞ்சம் இருங்கம்மா. உள்ள சமச்சிட்டு இருக்காங்க. இருந்து சாப்பிட்டு போங்க” என்றபடி அறிவுக்கு உதவி செய்ய சென்றாள்.

“தாயி, நீ செத்த உட்காரேன். உனக்கு நான் குறி சொல்றேன்”

சிரித்தவள், “இந்த காலத்துல இன்னுமாம்மா குறி சொல்றதுலாம் நம்புறாங்க. எனக்கு இதுல நம்பிக்க இல்லம்மா” என்றாள்

“நம்பிக்கைங்குறது நம்ம வாழ்க்கைல நடக்குறத பொறுத்துதான் தாயி. இது வரைக்கும் உன் வாழ்க்கைல வந்த இடையூறுலாம் புண்ணிய பலன்னால தலைக்கு வந்து தலைப்பாகயோட போயிருக்கலாம். ஆனா, இனிமே வரது உன்னோட நம்பிக்கய மட்டுமில்லாம, உன்ன சேர்ந்தவங்களோட நம்பிக்கயும் சேர்த்து ஆட்டிப்படைக்கும். ஒருவாட்டி நான் சொல்ல வரத கேளேன்” அவரின் கண்கள் இறைஞ்சியது என்று கூட சொல்லலாம். அங்கைக்கு அப்படித்தான் தோன்றியது.

…..

காட்டிற்குள்…

கார்த்தி பேசிக் கொண்டிருக்க, திடீரென்று அந்த காலை நேரத்தில் காற்று அதிவேகமாக வீசத் தொடங்கியது. கண்களில் புழுதி மணல்கள் சேர, மூவராலும் அந்த இடத்தில் நிற்க கூட முடியவில்லை.

“ஒருத்தர் கைய ஒருத்தர் பிடிச்சுக்கோங்க. பிரிஞ்சிட வேண்டாம்” கார்த்தி கத்தினான். சட்டென்று சொக்கன் மணலில் தரதரவென்று இழுத்து செல்லப்பட்டான்.

“சொக்கா… டேய்…” கார்த்தி ஒரு பக்கம் அவனை நோக்கி ஓட, மறுபக்கம் பிறை சிரமப்பட்டு அந்த மரத்தின் கிளையை பிடித்திருந்தான். ஆளையே தூக்கி வீசுவதுபோல் பேய்க்காற்று அடித்தது.

திடீரென்று பிறையின் காதிற்குள் அந்த குரல் கேட்டது. “சொக்கனோட வா… குறிப்பு இருக்கு. சொக்கனுக்கு புலப்படும். கல்ராயன் மலைக்கு வந்து சேரு. ஒம்பது உசுரு ஆபத்துல சிக்கியிருக்கு. உடனே வந்துடு சூடாஆஆ”

சட்டென்று காற்று வீசுவது நின்றது. பிறை நிதானத்திற்கு வர நேரம் தேவைப்பட்டது. சொக்கன் உடலெல்லாம் கீறலோடு விழுந்து கிடந்தான். கார்த்திகேயனும் சற்றுத் தொலைவில் விழுந்து கிடந்தான். அவர்களை பார்த்த பிறை, விரைந்து சென்று தூக்கினான். கார்த்தி தட்டுத்தடுமாறி எழுந்துவிட்டான்.

“சொக்கா… கண்ண திறடா. உனக்கு ஒன்னுமில்லல?” பிறை பதற்றமாகக் கேட்டான்.

கண்ணைத் திறந்தவன், வலியில் முணகினான். “ஸ்ஸ்ஆஆஆ அம்மா…”

“பாத்து மெதுவா எழுந்திரு.” மெதுவாக அவனை தூக்கியவன், தோளோடு அணைத்து அழைத்துச் சென்றான்.

கார்த்தி அப்போதுதான் கவனித்தான், சொக்கனிற்கு பின்னேயிருந்து பெரிய கருநாகத்தின் வால் மறைந்ததை.

“உடனே, இங்கயிருந்து போகணும். வாங்க.” பிறையும் சொக்கனும் முன்னே நடக்க, கார்த்திகேயன் சற்று நேரம் அங்கே நின்றுப் பார்த்துவிட்டு முன்னேறினான்.

பிறையின் எண்ணம் முழுவதும் அந்த குரலிலேயே இருந்தது. ஆனால், சொக்கனின் நிலையைக் கண்டவன், அவனிடம் இதைப் பற்றி பேசும் எண்ணத்தை சற்றுத் தள்ளி வைத்தான்.

மூவரும் வீட்டிற்கு அருகில் வர, அந்த பாட்டுச் சத்தம் இவர்களையும் எட்டியது.

அங்கையின் கையை தனது உள்ளங்கையில் வைத்த வள்ளி, குறி சொல்ல ஆரம்பித்தாள்.

மலைமேலே மேவியிருக்கும்

மருதமலையோனே என்சேயோனே

வள்ளி தெய்வானையின்

வண்ணமுக வடிவேலனே

தேவர்களுக்கு துணைநிற்கும்

சேனாதிபதியோனே

கரங்கள் கூப்பி

கருத்தாய் கூப்பிடுறேன்

வள்ளியிவள் வாக்கில்வந்து

வடிவெடுத்து நிற்குமய்யா…

வடிவெடுத்து நிற்குமய்யா…

கண்ணியிவள் கைக்கொண்டேன்

காபந்து செய்திடுவாய்…

நீ காபந்து செய்திடுவாய்…

கண்களை மூடி முருகனை மனதில் நிறுத்தி வாக்கினை பகர்ந்தாள் வள்ளி.

“முக்கண்ணுடையோனின் சரிபாதியவளின் திருநாமத்தைக் கொண்டவளே. கயலே கண்ணிகையே, விட்டக்கொற தொட்டக்கொற உன்னையே தொடருது. உன் மண்ணை நீ சேரும்முன்னே குறிப்பை நீ தேடிடனும். குலம்காக்கும் தெய்வமதை தொழுது வணங்கிடனும். ஆபத்து சூழும் போது அறிவாய் இருந்திடணும். உடன்பிறவா பிறப்பாலே உசுரு உருகுமே. அப்போ, மணவாளன் சொல்லும்படி மதிச்சு கேட்டுக்கணும். மதுரை நாயகன் நாமம் கொண்டவனும் சேயோன் போல் காப்பவனும் உடனிருக்க, தவிடாய் போகமட்டும் தன்னால் இயன்றதை செய்திடுவாய். குறிப்பு கிடைத்தவுடன், குறிப்பாய் வைத்திடனும். கல்வராயன் மலையினிலே கருங்காலி மரத்திடையில் கருநாகம் படையெடுக்கும். மஞ்சரி பூ போல மதிமுகம் ஒன்று உடன்வரும். அதை கல்கொண்டு விரட்டாமல் கண்ணிமைபோல் பாத்திடணும். இன்றிலிருந்து மூவைந்தாம் நாள் மன்னவன் கைப்பிடித்திடுவாய். குறிப்பை உணர்ந்துகொண்டு யுத்தியை பயன்படுத்து. ஆபத்து விலகிடுமாம் ஐயன் அவன் சொல்லிச்சென்றான். ஓம்… ஓம்… ஓம்…”

அனைத்தையும் கேட்ட அங்கை குழம்பிப் போயிருக்க, பிறைதான் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
16
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. குறி செம சூப்பரா இருந்தது. சிவரஞ்சன் அண்டு ரெண்டு பேருக்கு என்ன பிரச்சனை ஏற்கனவே ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் தெரியுமா 👌👌