Loading

சுழலி-7

பிறை சொன்ன வார்த்தை கார்த்திகேயனிற்கும் சொக்கனும் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

“அதுக்கு வாய்ப்பே இல்ல.” உறுதியாக சொன்னான் சொக்கன்.

“என்ன பிறை சொல்ற? எப்டி?” அதிர்ச்சி விலகாமல் கேட்டான் கார்த்திகேயன்.

“அங்கைய காப்பாத்த போனப்போ அவளுக்கு முன்னாடி கிட்டத்தட்ட பன்னென்டு அடி இராஜநாகம் இருந்தது. அதுக்கு பின்னாடி மின்னல் வெளிச்சத்துல நான் பாத்தேன். அவ திரும்பி வந்துட்டா” சொன்னவனின் கைகள் நடுக்கம் கண்டது.

அப்போது “ஸ்ஸ்ஆ.. அம்மா” என்ற முனகலுடன் அங்கை மெல்ல கண் விழித்தாள்.

மூவரின் கவனமும் அவள்பக்கம் சென்றது. இருக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவள், முதலில் தான் எங்கிருக்கிறோம் என்று குழம்பினாள். பின், தலையை இறுகப்பற்றிக் கண்களை மூடியவளின் மனக்கண்ணில் முந்தைய நாள் இரவு நடந்தது தோன்றி மறைந்தது.

அங்கையின் உடல் நடுங்க ஆரம்பிக்க, பிறை அவளின் அருகே சென்று அமர்ந்துக் கொண்டான்.

“ஒன்னுமில்ல அங்கை. இப்போ நீ பாதுகாப்பா தான் இருக்க. ரிலாக்ஸ்” பிறையின் வார்த்தைகள் அவளுக்கு தெம்பளித்திருக்க வேண்டும், தன்னை அமைதிப்படுத்த முயன்றாள்.

நீண்ட பெருமூச்சுகள் அவளிடம். ‘ஒன்னுமில்ல அங்கை. ஒன்னுமில்ல’ அவளுக்கு அவளே ஆயிரம் முறை சொல்லிக் கொண்டாள்.

ஒரு பெரிய மூச்சை இழுத்து விட்டவள், கண்களை திறந்தாள்.

“கார்த்தி சார்? நான் எப்டி இங்க?”

பொழுது விடிந்திருக்க, அறிவுதான் முதலில் கீழே வந்தான். கார்த்தி பதில் சொல்லும்முன் அறிவு அங்கையை அணைத்திருந்தான்.

“அங்கை, இப்போ நீ ஓகே தான? பயமுறுத்திட்ட”

அவனை விலக்கியவள், “ம்ம்.. என்ன ஆச்சு அறிவு? நான் எப்டி இங்க வந்தேன்? நேத்து காட்டுல… பாம்பு… அந்த கண்கள்…” அதன்பிறகு என்னவானது என்று நினைவடுக்குகளில் இருந்து எடுக்க முயன்றாள்.

“அந்த பாம்ப திசைதிருப்பி பிறையும் நானும் உன்ன இங்க கொண்டு வந்துட்டோம். இப்போ நீ பத்திரமா இருக்க”

“பிறை?”

அவளின் கேள்விகளுக்கு அனைவரும் பிறையை நோக்க, அங்கையின் பார்வையும் அதனை தொடர்ந்தது. தன்னருகில் தன்னையே கலக்கமாக பார்த்துக் கொண்டிருந்தவனின் விழிகள் எதுவோ அவளுக்கு சொல்லத் துடிப்பது போல் தோன்றியது அங்கைக்கு.

அவனை புன்னகையோடு ஏறிட்டவள், “தாங்க்ஸ்” என்றாள். அதற்குமேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை. பிறையும் சிரிப்புடன் இருந்துக் கொண்டான்.

“இப்போ நீ எதுவும் கேட்டு ஸ்ட்ரெஸ் எடுத்துக்க வேண்டாம் அங்கை. முதல்ல போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா. காஃபி குடிச்சிட்டு பொறுமையா அடுத்து என்னன்னு பாக்கலாம்”

“ம்ம்” இதற்கு முன்னும் கார்த்திகேயனின் இல்லத்திற்கு வந்திருக்கிறாள். ஆனால், உள்ளறைகளுக்கு சென்றதில்லை. ஆகவே, தற்போது எங்கு செல்வது என்று தெரியாமல் ஒருநிமிடம் அமைதி காத்தாள்.

அவளின் அமைதியை உணர்ந்த பிறை, “அந்த ரூம்ல என்னோட ப்ரென்ட் தூங்கிட்டு இருக்கா. அந்த ரூமையே யூஸ் பண்ணிக்கோ அங்கை.” என்று ஆருத்ராவின் அறையை சுட்டிக் காட்டினான்.

கண்களால் மீண்டும் அவனுக்கு ஒரு நன்றியைத் தெரிவித்தவள், நேராக அறைக்கு சென்றாள். ஆருத்ரா இன்னமும் உறங்கிக் கொண்டிருக்க, சத்தமிடாமல் குளியலறைக்குள் சென்றவள், தன்னை சுத்தப்படுத்திக் கொண்டாள்.

அன்புவும் கீழே வந்திருந்தான். “அறிவு, அங்கை எங்கடா? எழுந்துட்டாளா? இப்போ அவ ஓகேவா?”

“ம்ம், ஓகேதான். ரெஃப்ரெஸ் ஆக போயிருக்கா” அனைவரும் சிறிது நேரம் அமைதிகாத்தனர்.

அங்கை வெளியே வர, ஆருத்ரா எழுந்திருந்தாள். அங்கை சிநேகமாக ஒரு புன்னகை பூத்தாள்.

“இப்போ உங்களுக்கு ஓகேவா அங்கை? பெட்டரா ஃபீல் பண்றீங்களா?”

“ம்ம்… ஓகே. நீங்க?”

“நான் பிறையோட ஃப்ரென்ட் ஆருத்ரா. ஐ ஆம் அ டாக்டர்.”

“ஓ, கெஸ் நீங்க தான் டிரீட்மென்ட் பண்ணீங்களா?”

“ஆமா, ஏன் என்னை பாத்தா டாக்டர் மாதிரி தெரியலயா?”

“அய்யோ, அப்டி இல்ல. கேட்டேன்.”

“ஓகே, நான் ப்ரெஷ் ஆகிட்டு வரேன்” என்றவளுக்கு சிறுதலையசைப்பு கொடுத்துவிட்டு நகர்ந்தாள் அங்கை.

“அங்கை, ஒன்னுமில்லல உனக்கு?” அன்பு அருகில் வர, அவனை அப்படியே நிறுத்தியவள், “நான் நல்லாதான்டா இருக்கேன். இதே கேள்விய எத்தன பேர் தான் கேட்பீங்க. கார்த்தி சார், ஒரு காஃபி ப்ளீஸ்”

‘அங்கை பேக் டூ ஃபார்ம்’ அன்புவும் அறிவும் மனத்திற்குள் நினைக்க, அதனை வாய்வார்த்தையாக சொல்லிவிட்டான் கார்த்திகேயன்.

“அங்கை பேக் டூ ஃபார்ம். தட்ஸ் குட். நான் போய் எல்லாருக்கும் காஃபி எடுத்துட்டு வரேன்.”

அனைவரும் கூடத்தில் குழுமியிருந்தனர். கார்த்தி வருவதற்குள், அறிவு காணொளியைக் காட்டியிருந்தான்.

அதனைப் பார்த்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. “என்ன அறிவு இது?”

“அதுதான் புரியல அங்கை. அதுமட்டும் இல்ல, நேத்து நைட் பாக்ஸ்ல ரெண்டு பாம்பு இருந்தது. எட்டு முட்டைங்க தான் இருந்தது. அன்ட், நாம பாத்த அந்த மூணு இராஜநாகங்களும் இங்க தண்ணீ குடிக்க வந்தது. அதுல அந்த குட்டி நாகம் நேத்து உன்ன பாத்துட்டு போன மாதிரி என்னையும் பாத்துட்டு போச்சு. நீ எப்டி இங்க வந்த?”

அனைத்தையும் உள்வாங்கியவள், கண்களை மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள். பிறைக்கு அங்கமெல்லாம் பரபரத்தது. அவளின் அருகில் அமர்ந்து, கைகளைப் பிடித்துக் கொண்டு, ‘நான் இருக்கிறேன்’ என்று சொல்ல உள்மனது கட்டளையிட்டுக் கொண்டிருந்தது.

‘உன்கூட தான் அங்கை இருக்கேன். பயப்படாத. என்ன நடந்துச்சுன்னு தைரியமா சொல்லு.’ மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தான்.

என்ன உணர்ந்தாளோ, அங்கை கண் விழித்துப் பார்த்தது பிறையைத்தான். அவன் கண்களை மூடித்திறந்து ஒன்றுமில்லை என்பது போல் தலையசைக்க, அவள் எதிர்பார்த்தது கிடைத்தது போல் சொல்ல ஆரம்பித்தாள். மொழிகள் அனைத்தும் மற்றவர்களுக்காக இருக்க, விழிகள் மட்டும் அவனிடத்தில்.

“நேத்து நைட், யாழ் ரொம்ப பயந்துட்டா. அவள ரூம்ல படுக்க வச்சுட்டு, நான் என் ரூம்க்கு போய்ட்டேன். ஆனா, எனக்கு காலேஜ்ல நடந்தது மட்டும்தான் ஏதோ உள்ள உறுத்திக்கிட்டே இருந்தது. தூக்கம் கொஞ்சம் கூட வரல. அப்போதான் அந்த குரல்… யாரோ, ஏன் என்னை பத்தி நினைக்குற? அப்டின்னு கேட்டாங்க. நான் கேட்ட எந்த கேள்விக்கும் அந்த குரல் பதில் சொல்லல. அந்த நிழல் என்னை கூப்டுற மாதிரி இருந்தது. அத ஃபாலோ பண்ணிட்டு வந்தேன். ஜருகுமலை அடிவாரத்துல இருந்தேன்.

அப்ரோம், கொஞ்ச நேரத்துல மறுபடியும் அந்த குரல். நான் முன்னாடி வர சொன்னதுக்கு என்னமோ சொல்லுச்சு. ‘நின் செப்புத் திருமேனியது எனக்குச் சொந்தமானது. ஆனால், அதனை தீண்டி, சுவைத்திட ஆவலில்லை. அந்த மென்பாதங்கள் மட்டுமாவது மண்ணில் பதிய வேண்டுகிறேன்’ ‘ஒற்றைவரிதனில் என்னை விவரித்திட இயலுமா? அது யாராலும் முடியாது என்று நீ தானே கூறினாய்’ ‘முன்னே வர எனக்கு ஐயமில்லை. நிந்தன் மதிமுகம்தனை கையிலேந்திட திங்கள் கணக்கிருக்கிறது.’ இப்டிலாம் எனக்கு கேட்டுச்சு. அதுக்குள்ள அந்த குட்டி இராஜநாகம் என் கண்ணுல பட்டுச்சு. அதுக்கு அப்ரோம் நான் அததான் ஃபாலோ பண்ணிட்டு வந்தேன். கிட்டத்தட்ட ஒரு ஒன்றரை மணிநேரம் நான் காட்டுக்குள்ள இருந்து இருப்பேன். திடீர்னு அந்த குட்டி இராஜநாகமும் காணோம். எதுக்குள்ளயோ நான் வந்து சிக்குன மாதிரி இருந்தது. இருட்டுக்கு கண் பழகினாலும் எதயும் சட்டுன்னு பாக்க முடியல. அப்போ தான் ஒரு பெரிய இராஜநாகம் என் முன்னாடி வந்துச்சு. அதோட கண்ணு… இப்போ நினச்சா கூட எனக்கு ஒரு மாதிரி இருக்கு. பச்சை கலர்ல பளிங்கு மாதிரி. மினுமினுப்பா இருந்தது. அதுக்கு அப்ரோம் எனக்கு என்ன நடந்துச்சுன்னே தெரியல. கடைசியா நான் பாத்தது பிறையோட கண்கள தான்.”

கேட்ட அனைவருக்கும் மர்மமாய் தான் இருந்தது. இதில், சொக்கனும் பிறையும் தான் பலத்த யோசனையோடு இருந்தனர். கார்த்திகேயன் அந்த இருவரையும்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

பின் யோசித்தவனாக, “நானும் பிறையும் வெளிய போய்ட்டு வந்துடுறோம். இங்கயே இருங்க. அங்கை வீட்டுக்கு கால் பண்ணி சொல்லிடு. சொக்கா நீயும் வாடா” என்று கார்த்திகேயன் மற்ற இருவருடன் வனத்திற்குள் நுழைந்தான்.

கார்த்தி என்ன நினைக்கிறான் என்பதை சடுதியில் உணர்ந்துக் கொண்டவன், நேற்று அங்கையை கண்டுபிடித்த இடத்திற்கு அழைத்து வந்தான் பிறை.

“இந்த இடம் தான். இங்க இந்த மரத்துக்கு முன்னாடி பாம்பு இருந்தது. கிட்டத்தட்ட என்னோட ஹைட்டுக்கு இன்னும் ஒரு ரெண்டு இன்ச் மேல. மரத்துக்கிட்ட இந்த இடத்துல அங்கை கால குறுக்கிட்டு உட்கார்ந்து இருந்தா. அதோ அந்த பக்கம் மரத்துக்கிட்ட இருந்து தான் நானும் அறிவும் அத பாத்தோம். பாம்பு இருந்த இடத்துக்கு ரைட் சைட்ல தான் நான் மஞ்சரிய பாத்தேன்.” கிட்டத்தட்ட இவன் சொன்ன அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்தது. பிறை கல் எறிந்தது கூட மஞ்சரி இருக்கும் திசை நோக்கி தான். அதனாலேயே பாம்பு அந்த பக்கம் சென்றதும் பிறை இந்த பக்கம் அங்கையை மீட்டான். நடந்த அனைத்தையும் ஓரளவிற்கு சொக்கனும் கார்த்திகேயனும் கிரகித்துக் கொண்டனர்.

“சரி, இப்போ இங்க எதுக்கு கூட்டிட்டு வந்தீங்கண்ணா?” சொக்கனின் கேள்வி கார்த்திகேயனின் நோக்கி சென்றது.

“ஏதோ நம்மள சுத்தி அமானுஷ்யமா மர்மமா நடக்குற மாதிரி தான் எனக்கு தோணுது. இல்ல, நடக்குறது அங்கைய குறி வச்சு நடக்குதான்னு தெரியல. எது எப்டியோ, மஞ்சரி மறுபடியும் வந்தது ஏதோ ஆபத்துன்னு என்னோட உள்மனசு சொல்லுது. உனக்கு இன்னுமா சொக்கா நியாபகம் வரல. அன்னைக்கு மஞ்சரி கிராமத்து விட்டுப் போனப்போ ஊர் ஆளுங்களாம் கடைசியா அவள இங்க தான் பாத்தோம்னு சொன்னாங்க. மறந்துட்டியா? மறுபடியும் இங்கயே பிறை அவள பாத்து இருக்கான்னா, அவ ஏதோ சொல்ல வராளா? இல்ல, இங்க தான் இருக்காளா?” அவர்களை சுற்றி பெரிய மர்ம முடிச்சு ஒன்று உருவாகி இருக்கிறது என்பதை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

…..

நீருக்குள்ள மூழ்கிடவும் மனசில்ல…

நெருப்புக்குள்ள வீழ்ந்திடவும் மனசில்ல…

காத்துக்குள்ள கரைஞ்சிடவும் மனசில்ல…

மானத்துல மறஞ்சிடவும் மனசில்ல…

பூமிக்குள்ள புதஞ்சிடவும் மனசில்ல…

மனசில்ல… மனசில்ல…

 

காலம்பூரா காதலோட கரைஞ்சிட

தோணுதய்யா….

காத்திருப்பு முடியுமுன்னே கைசேருமா

என் காதல்?

 

சிறுவயசுல செஞ்ச தப்பு

இப்போ சேர்த்துவச்சு உசுருருவ…

 

செம்பளவள்ளி தோப்புக்குள்ள நானும்

செத்துப் பொழச்சு காத்துக் கிடக்கேன்.

 

மையலு கொண்ட மனம் இப்போ

மனசிறங்கி வந்திருமய்யா…

 

மண் தொட்டு,

மஞ்சள் நீர் தொட்டு,

சுழலியை மன்னியுமய்யா…

 

எங்கோ யாரோ பாட்டு பாடும் சத்தம் கார்த்திகேயன் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கேட்டது.

“தெம்மாங்கு பாடி, மையலை வெளிப்படுத்துகிறாயோ மஞ்சரி? நீ துடிக்கும் ஒவ்வொரு நொடியையும் நான் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். குறிப்பால் உணர்த்தினாலும் குறிசொல்லிச் சென்றாலும் அங்கையற்கண்ணியை உன்னால் காபந்து செய்திட இயலுமா? நீ வெளிவந்து மாபெரும் தவறு செய்துவிட்டாய். உன் மகளின் வாழ்வை கேள்விக்குறியாக்கிவிட்டாய். அவன் என் மண்ணைத் தொடும் முன், நான் கண்ணியிவளின் நெஞ்சம் அடைந்திருப்பேன்.”

இந்தக் குரல் அங்கையற்கண்ணிக்கு மட்டும் கேட்டு உள்ளுற திகிலைக் கிளப்பியது.

தாலாட்டு பாடும்முன்னே

தாயிவள் உனை தொலைத்தேன்.

ஆராரோ ஆரிராரோ…

கண்ணே… என் கண்ணிகையே

காபந்து செய்ய வந்தேன்…

கண் மூடி நீ ஒறங்க,

தலமாட்ட காத்து நிப்பேன்.

ஆரிரோ… ஆராரிரோ…

அன்னையென்று நீ அழைக்குமுன்னே

அம்மணி உன் கை துறந்தேன்…

அழுகாம நீ இருக்க,

அல்லும் பகலும் நான் துடிச்சேன்…

கெட்டது நெருங்குமுன்னே

குறிப்ப நீ தேடியெடு

ஆராரோ… ஆரிரரோ…

ஆராரோ… ஆரிரரோ…

 

பாடல் அனைத்தும் கேட்டாலும், சாதாரண தாலாட்டு பாடலாக அங்கையால் இதனை எடுத்துக் கொள்ள இயலவில்லை.

“என்ன பாட்டு அது, நல்லா இருக்குல்ல?” ரசித்துக் கேட்டான் அன்பு.

“சுள்ளிப் பொறுக்க வந்தவங்க பாடியிருப்பாங்கடா. பாட்டு மாதிரியும் இல்லாம, ஏதோ செய்தி சொல்ற மாதிரி இருக்குல்ல?” தனக்கு தோன்றியதை கேட்டான் அறிவு.

சிவரஞ்சனும் ஆருத்ராவும் கூட அந்த கானத்தை கேட்டிருந்தனர். சிவரஞ்சனிற்கு ஏதோ உள்ளுக்குள் நெருடலாகத் தோன்றியது.

சிவரஞ்சன் கூடத்திற்கு வர, அங்கு அங்கையைக் கண்டவன் அதிர்ந்து நின்றான்.

“அங்கை? நீ உயிரோடத்தான் இருக்கியா?” அவனின் இந்த கேள்வியில் அனைவரும் திகைத்தனர் என்றால், அங்கை அவனை விழிக் கொண்டு எரித்தாள்.

தொடரும்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
16
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. ரொம்ப மர்மத்தோட விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாம போகுது ஸ்டோரி சூப்பர் டா 👌👌👌

      1. Author

        Thank you ka… next epi on the way. stay tuned