சுழலி -6
கார்த்திகேயனின் வீட்டில்.
அங்கை கூடத்தில் இருக்கும் இருக்கையில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள். பிறை அவளின் அருகிலேயே அமர்ந்திருந்தான். அவனுக்குள் சொல்ல முடியாத ஏதோ ஒன்று அழுத்தியது.
“பயத்துல தான் மயங்கி இருக்காங்க. வேற ஒன்னும் இல்ல. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்” அங்கையை பரிசோதனை செய்த ஆருத்ரா கூறினாள்.
மணி இரவு ஒன்று. யாருக்கும் தூக்கம் என்பது துளி கூட வரவில்லை. அதுவும் பிறைக்கு அங்கையின் நிலை ஏனோ நெஞ்சை வாட்டியது.
“இப்டியே எல்லாரும் முழிச்சிட்டு இருக்கப் போறீங்களா? நாளைக்கு காலைல அடுத்து என்னன்னு பேசிக்கலாம். முதல்ல எல்லாரும் போய் படுங்க. அறிவு, அன்பு நீங்க ரைட் சைட் இருக்க ரூம் எடுத்துக்கோங்க. சிவா, நீயும் பிறையும் மாடிக்கு போய்க்கோங்க. ஆருத்ரா நீ கிட்சன் பக்கத்துல இருக்க ரூம் எடுத்துக்கோ. நான் இங்க ஹால்லயே இருக்கேன்.”
அன்புவும் அறிவும் யோசித்தனர். “இல்ல சார். நாங்க ரெண்டு பேரும் ஹால்ல படுத்துக்குறோம். அங்கைய நாங்க பாத்துக்குறோம். நீங்க போங்க” என்றான் அன்பு.
“எல்லாரும் அவங்க அவங்க ரூமுக்கு போங்க. நான் அங்கை கூட இருக்கேன். இதுக்கு மேல யாரும் எதுவும் பேச வேண்டாம்” முடிவாக சொன்னான் பிறை.
அவன் சொன்ன விதம் சாதாரணமாக இருந்தாலும், ஏதோ அழுத்தம் அதில் தெரிந்தது. அதனை மறுத்துப் பேச யாருக்கும் பேச்சு வரவில்லை. அதுவும் அறிவுக்கு நா துளியும் எழவில்லை. அருகில் இருந்து பார்த்தானே, அங்கை மயங்கிய பிறகு பிறையின் உடலில் அவன் கண்ட நடுக்கத்தை. அதனால் என்னமோ அங்கையின் அருகில் பிறையே இருந்தால் சரியாக இருக்குமெனத் தோன்றியது அறிவுக்கு.
“அன்பு, வா! நாம ரூம்க்கு போலாம்”
“ஆனா, அங்கைடா?”
“அதுலாம் அவரு பாத்துப்பாரு. நீ வா” அன்பை இழுத்துச் சென்றான் அறிவு.
சிவரஞ்சனும் கார்த்திகேயனும் ஒரே அறைக்கு சென்றுவிட, சிறிது நேரம் அவ்விடத்தில் நின்று இருவரையும் பார்த்த ஆரு, சிரித்துக் கொண்டே தனது அறைக்கு சென்றாள்.
பிறை அங்கையின் அருகிலேயே அமர்ந்து விட்டான். மற்றவருக்கு என்ன புரிந்ததோ, ஆருவிற்கு புரிந்தது தனது நண்பன் காதலில் விழுந்துவிட்டான் என்று.
….
“ஏன் அறிவு, பிறை ஏன் இப்டி செய்றாரு?”
“எப்டிடா?”
“அதான், அங்கை கூடவே இருக்கேன்னு நம்மள துரத்தி விடுறாரு. அவரு இப்போ தான் அங்கைய பாக்குறாரு. அதுக்குள்ள இவ்ளோ உரிம ஏன், எப்டி?”
“ஏன், எப்டின்னா? என்ன கேட்க வர அன்பு?”
“ப்ச், எனக்கு சொல்லத் தெரியல. ஆனா, பாத்த உடனே ரொம்ப உரிம எடுத்துக்குறது என்னமோ எனக்கு சரியா படல. அங்கை எழுந்தா நம்மள தான் திட்டுவா.”
“இதுக்கே இப்டி சொல்ற? அந்த பாம்பு அவ முன்னாடி இருக்கப்போ பாக்கணுமே. மனுசன் ரொம்ப பயந்துட்டாரு. எப்டியாவது அவள காப்பாத்தணும்னு மட்டும் தான் யோசிச்சாரு”
“அது முன்னாடி வந்த அதே பாம்பா அறிவு?” சாதாரணமாக சென்றுக் கொண்டிருந்த பேச்சு இப்போது இராஜநாகத்திடம் வந்து நின்றது.
“இல்ல அன்பு. இது அத விட பெருசா இருந்துச்சு. பாவம், அங்கை. ரொம்ப பயந்துட்டா. அது எப்டி தெரியுமா படமெடுத்து நின்னுட்டு இருந்துச்சு. கொஞ்சம் லேட் ஆகியிருந்தாலும் அங்கைய இப்போ நாம பாத்து இருக்க முடியாது. பிறைதான் சரியான டைம்ல அத திசை திருப்பி அங்கைய காப்பாத்துனாரு.”
“அறிவு, பாம்பு பழிவாங்கும்னா சொல்றாங்கல? அத பத்தி என்ன நினைக்குற?”
“சரியான முட்டாள்தனம்னு நினைக்குறேன்.”
“இப்போ நடக்குறதுலாம் பாத்தா, எனக்கு அப்டி தெரியல.”
“நாம அப்டி என்ன செஞ்சோம். இதுவரைக்கும் நாம பல பாம்புகள காப்பாத்தி அதுக்கு வாழ்விடத்த ஏற்படுத்தி கொடுத்து இருக்கோம். எதயும் கொன்னது கிடையாது. அப்டி இருக்கப்போ யார கொல்ல இப்டி செய்யுது?”
“அங்கை? காலேஜ்ல கூட அங்கைய தான் அந்த குட்டி பாம்பு பாத்துட்டு போச்சுன்னு நீ தான சொன்ன? இப்போ கூட அங்கை தான் மாட்டி இருக்கா?”
“என்ன விளையாடுறீயா? நம்மள விட இதுல ரொம்ப கான்சியஸா இருக்குறது அங்கை தான். கண்டிப்பா அங்கை இப்டி செஞ்சி இருக்க மாட்டா. இனிமே செய்யவும் மாட்டா.”
“ஒருவேள முன்ஜென்மத்துல?”
“பைத்தியமா அன்பு நீ? எந்த காலத்துல இருந்துக்கிட்டு முன்ஜென்மம், பாம்பு பழிவாங்கும்னு பேசிக்கிட்டு இருக்க?”
“அங்கை கிட்ட இத பத்தி பேசணும் அறிவு.”
“தேவயில்லாம நீ ஏதோ பேசிட்டு இருக்க. பேசாம தூங்கு” மறுபுறம் அறிவு திரும்பிப் படுத்துக் கொண்டான்.
ஆனால், அன்புக்கு இன்னமும் அந்த கண்கள் தான் முன்னே வந்து பயத்தை கொடுத்தது.
….
‘என்னை என்ன அங்கை செஞ்ச? நான் ஏன் இப்டி ஃபீல் பன்றேன்? உன் பேர கேட்ட அந்த நிமிசத்துல இருந்து சின்னதா ஏதோ ஒரு உணர்வு எனக்குள்ள. அந்த காட்டுல உன்ன பாம்புக்கு முன்னாடி பாத்த உடனே நான் செத்துட்டேன் அங்கை. உனக்கு எதுவும் ஆகக் கூடாதுன்னு மட்டும் தான் இந்த நிமிசம் வரைக்கும் எனக்குள்ள தோணிக்கிட்டே இருக்கு. இந்த லவ் அட் பர்ஸ்ட் சைட்லாம் நான் சுத்தமா நம்ப மாட்டேன். ஆனா, என்னமோ என்னோட லைஃப் இனிமே உன் கூட தான்னு மனசு சொல்லிக்கிட்டே இருக்கு. எந்த சூழ்நிலைலயும் உன்ன விட்டுட கூடாதுன்னு மனசு ஏங்குது. இத்தன நாள் எங்கடி போன, என் அங்கையற்கண்ணி?’ அவளுடன் பேசுவது போல், மனதிற்குள்ளேயே பேசிக்கொண்டிருந்தான். ஆனால், அவனின் முகபாவங்கள் அனைத்தும் நொடிக்கொரு முறை அவள்மேல் இருக்கும் உணர்வை ஆணித்தரமாக உணர்த்தியது.
….
நான்கு மணிக்கு எப்போதும் போல் கார்த்திகேயனிற்கு விழிப்புத் தட்ட, சோம்பல் முறித்தவாறு எழுந்தான்.
சிவரஞ்சன் இன்னும் உறக்கத்தில் இருக்க, காலைக்கடன்களை முடித்தவன் சமையலறைக்கு சென்று அனைவருக்கும் குழம்பியைத் தயாரித்து வைத்துவிட்டு, தனக்கும் ஒரு கோப்பை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
பிறை இன்னமும் அங்கையின் அருகிலேயே அவளின் கையை பிடித்தவண்ணம் அமர்ந்தவாக்கில் உறங்கிக் கொண்டிருந்தான்.
இதனை பார்த்தவனின் விழிகளில் குழப்ப ரேகைகள்.
“பிறை!” அவனின் தோள்தொட்டு எழுப்பினான். விழித்தவனின் விழிகள் சிவப்பாய் இருந்தது.
“அண்ணா, அதுக்குள்ள எழுந்திரிச்சிட்டீங்களா?”
“நீ ஒழுங்காவே தூங்கலயா? போய் ரெஸ்ட் எடு. நான் பாத்துக்குறேன்”
“இல்லன்னா, நடுவுல ரெண்டு தடவ பயந்து உடம்பு நடுங்கிடுச்சு. அதான் கைய புடிச்சிட்டு உட்காந்து இருக்கேன். ரொம்ப பயந்துட்டா. அங்கை கண் முழிக்கட்டும். அப்ரோம் நான் போறேன்”
“அங்கைய உனக்கு பிடிச்சு இருக்கா பிறை?”
“அண்ணா?”
“இல்ல, உன்ன பத்தியும் எனக்கு தெரியும். அங்கைய பத்தியும் தெரியும். நீ அவ்ளோ சீக்கிரம் முடிவு எடுக்கமாட்ட. பட், இப்போ நீ நடந்துக்குறது வச்சு தான் கேட்குறேன்”
“பிடிச்சு இருக்கான்னு கேட்டா பதில் இல்லன்னா. ஆனா, இனிமே இவள விட்டு என்னால இருக்க முடியுமான்னு கேட்டா அதுக்கு பதில் கண்டிப்பா இல்லதாண்ணா. அங்கை கிட்ட நீங்க தான் பேசணும்”
“பிறை, முதல்ல நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னு கண்டுபிடிப்போம். கண்டிப்பா எல்லாம் சரியான உடனே நானே அங்கை கிட்ட பேசுறேன்”
“ம்ம்… சரிண்ணா.”
“உள்ள காஃபி வச்சு இருக்கேன். ப்ரஸ் ஆகிட்டு எடுத்துக்கோ. இன்னைக்கு டியூட்டில ஜாய்ன்ட் பண்ணணும்.”
“ம்ம்.” என்று எழுந்தவன், ஒரு நிமிடம் நின்று அங்கையை கண்களில் நிரப்பிக் கொண்டு சென்றான்.
கார்த்தி தலையை உலுக்கி சிரித்துக் கொண்டான். ‘இவனுக்குள்ளயும் ரோமியோ இருக்கான் போல’ குழம்பி கோப்பையை எடுத்தவன் கவனம் வாசலில் இருந்தது. ஜீப்பைத் தாண்டி இருக்கும் மரத்தில் நேற்று வந்த அதே இராஜநாகம் கிளையில் இருந்தது.
ஒரு நிமிடம் திடுக்கிட்டுத்தான் போனான் கார்த்திகேயன். குழம்பி கோப்பையை ஒரு புறம் வைத்தவன், வெளியே வந்தான். கதவை சாற்றியவன், நீர் இருக்கும் இடத்திற்கு சென்று அமர்ந்தான்.
அவன் வருகையை உணர்ந்தது போல், மரத்தில் இருந்து இறங்கியது அது. மெதுவாக ஊர்ந்து வந்த இராஜநாகம் அவனருகில் தலையை தூக்கி நின்றது. அந்த கண்கள், பச்சை பளிங்கு கண்கள் அவனுக்கு ஏதோ சொல்வது போல் இருந்தது.
நீரை எடுத்து புகட்டிட, அமைதியாக நீர் அருந்தியது அந்த கருநாகம். பெரிய இராஜநாகம் பின்னாடியே இரண்டு குட்டி நாகங்களும் வந்தன. கார்த்திகேயன் உள்ளே திடுக்கிட்டாலும், அதனை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. தன்னுடைய சிறு அதிர்வும் பாம்பை அச்சப்படுத்தும் என்று உணர்ந்தவன், அமைதியாக அவற்றிற்கு நீர் புகட்டினான்.
தனது தாகத்தை தணித்துக் கொண்ட இராஜநாகம், தனது குட்டிகளுக்கு வழிவிட்டு நின்றது. மற்றதும் நீர் அருந்திய பிறகு செல்ல, கார்த்திகேயனின் செவியில் அந்த குரல் கேட்டது.
“அவளை விட்டுவிடாதே. கவனம்… மஞ்சரி உடனிருப்பாள்” என்ற குரல் மட்டும் கேட்டிட, அந்த இடத்திலேயே உறைந்து நின்றுவிட்டான் கார்த்தி.
எதிர்புறம் இருந்து சொக்கன் வந்துக் கொண்டிருந்தான். கார்த்தி அந்த பாம்புகளையே பார்த்தவண்ணம் நின்றுக் கொண்டிருக்க, சொக்கன் வந்து உலுக்கினான்.
“சார்… கார்த்தி சார். அண்ணா!”
“ஹான்… என்ன என்ன ஆச்சு? இங்க மூணு இராஜநாகம் இருந்துச்சே எங்க?”
“ஆமா, அதுங்க தண்ணீ குடிச்சிட்டு இருந்துச்சுங்கன்னு தான் நான் அந்த பக்கமே நின்னுட்டேன். இப்போதான போச்சு. ஏன்ணா, என்ன ஆச்சு?”
“இப்போ, உனக்கு எந்த குரலும் கேட்கலயா? யாரோ பேசுன மாதிரி?”
“இல்லயே அண்ணா. என்ன ஆச்சு?”
“ப்ச், ஒண்ணுல்ல. நீ வா, உள்ள வா” கதவைத் திறந்து உள்ளே அழைத்தான். அப்போது தான் தனக்கான குழம்பியை எடுத்துக் கொண்டு வந்தான் பிறை.
பிறையைப் பார்த்ததும் ஏதும் பேசாதவன், இருக்கையில் அங்கைப் படுத்திருந்ததைப் பார்த்து, யோசனையாக கார்த்திகேயனை பார்த்தான்.
“உன்கிட்ட பேசணும்னு நானே உன்ன கூப்டலாம்னு இருந்தேன். நீயே வந்துட்ட”
“இராத்திரி முழுக்க எனக்கு தூக்கமே இல்லன்னா. ஏதோ மனசு ஒரு மாதிரியாவே இருந்துச்சு. அதான் காலைல உங்கள பாத்துட்டு போலாம்னு வந்தேன். அம்மே உங்களுக்கும் மத்தவங்களுக்கும் கூல் குடுத்துச்சு.” என்றபடி ஒரு தூக்குசட்டியை கொடுத்தான்.
“அத அந்த பக்கம் வை. இப்போ ஒரு முக்கியமான பிரச்சன. ஏதோ இந்த பொண்ண சுத்தி நடக்குது. நேத்து கூட என்னன்னமோ நடந்துருச்சு.” புதிரோடு பேசிய கார்த்திகேயனை கண்கள் சுருக்கிப் பார்த்தான் சொக்கன்.
“என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லுங்கண்ணா. என்னால என்ன செய்ய முடியுமோ செய்றேன்”
“ம்ம்…” என்று பெருமூச்சொன்றை விட்டவன், நேற்று அறிவும் அன்புவும் வந்த பிறகு நடந்த காணொளி விசயத்தையும், அங்கை குரல் கேட்டதையும் சொன்னான்.
“அதுக்கு அப்ரோம்?”
“அங்கைய பிறை தான் தூக்கிட்டு வந்தான். அங்க என்ன நடந்துச்சுன்னு பிறை தான் சொல்லணும்”
இருவரும் பிறையை பார்க்க, அங்கை மேல் கவனத்தை வைத்தவாறு நடந்தவற்றை விளக்கினான்.
“நானும் அறிவும் தேடிட்டு போனோம்ல. கொஞ்ச தூரத்துலயே மழ வர ஆரம்பிச்சிடுச்சு. இன்னும் கொஞ்ச தூரம் போறப்போ தான், சருகுமேல ஏதோ ஊர்ந்து போற மாதிரி எனக்கு தோணுச்சு. கிட்ட போய் பாத்தா, வாலு மட்டும் தான் எனக்கு தெரிஞ்சது. இங்க இருந்து லெஃப்ட் சைட்ல ஒரு பத்து நிமிசம் நடந்தா அந்த பெரிய மரம் இருக்கு. அந்த மரத்துல கீழ அங்கை நடுங்கி போய் உட்காந்து இருந்தா. அந்த மரத்துக்கு ஆப்போசிட்ல தான் அத நானும் அறிவும் பார்த்தோம். அவளுக்கு முன்னாடி பன்னென்டு அடி இராஜநாகம் நின்னுட்டு இருந்துச்சு”
“நின்னுட்டு இருந்துச்சா?” கார்த்திகேயன் விழிகள் அதிர்வை கொடுத்தது.
“உறுதியா சொல்றேன். அது தன்னோட உயரத்துல இருந்து படையெடுத்து கிட்டத்தட்ட ஆறடி ஹைட்டுக்கு நின்னுட்டு இருந்துச்சு. அதோட கவனத்த திச திருப்ப, நான் ஒரு கல்ல ஆப்போசிட்ல போட்டேன். அது அந்த அதிர்வ வச்சு அந்த பக்கம் போயிடுச்சு. அந்த நேரத்துல தான் நான் அங்கைய தூக்கிட்டு வந்தேன்.”
“காலேஜ்ல வந்த பாம்பே இந்த முறையும் வந்து இருக்கலாம்ல? இராஜநாகங்கள் மனிதர்கள அடையாளம் வச்சுக்கும் தானே?” தனக்கு தோன்றிய கேள்வியை கேட்டான் சொக்கன்.
மறுத்து தலையசைத்த பிறை “நான் நல்லா கவனிச்சேன். இங்க தண்ணீ குடிக்க வந்த பாம்பு தான் காலேஜ்ல வந்த பாம்பு. அத அறிவு கூட சொல்லிட்டு இருந்தான். ஆனா, அங்கை கிட்ட இருந்தது அத விட பெருசு.”
“ம்ம்…” சொக்கனிடம் பதில் இல்லை. அமைதியாக அனைத்தையும் மீண்டும் மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தான்.
“அது மட்டும் இல்ல, மஞ்சரி திரும்பி வந்துட்டா” என்று பிறை சொன்னதும், கார்த்திகேயனும் சொக்கனும் அதிர்ச்சியில் இருக்கையை விட்டு எழுந்தனர்.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
16
+1
2
+1
இறைக்கு அங்கேயும் முன்னாடியே தெரியுமா?
யாரு அந்த மஞ்சள் நீ ரொம்ப சஸ்பென்ஷாவே போகுது??
Solren kaa.. thank you for your comment