சுழலி – 5
“உடனே அங்கைக்கு போன் பண்ணு அறிவு.” குழப்பத்தோடு இருந்தவர்களுக்கு உத்தரவு போட்டான் கார்த்தி.
அறிவு அங்கைக்கு அழைப்பு விடுத்தான். தொடர்ந்து இருமுறையும் அழைப்பு சென்றும் எடுக்கப்படவில்லை.
அங்கையின் அலைபேசி அவளின் அறையில் ஒலித்து அடங்கியது.
“அங்கை கால் எடுக்கல சார்”
“மறுபடியும் போடுடா. அங்கைய உடனே கிளம்பி வர சொல்லு”
பிறைக்கு ஒரு பக்கம் ஆச்சர்யம், மறுபக்கம் அதிர்ச்சியும் தான். ஒரு பெண் பாம்பு பிடிக்கும் குழுவில் இருக்கின்றாளா என்பது அவனுக்கு ஆச்சர்யம் எனில், அந்த பச்சை பளிங்கு கண்கள் அவனுக்கு எதையோ உணர்த்தியது. வெகு நேரமாக அனைத்தையும் உள்வாங்கியவன் தீவிர யோசனையில் இருந்தான்.
ஆருவிற்கு அந்த இடத்தில் இருக்க பயம் கூடுவது போல் உணர்ந்தாள். உள்ளே நீர் அருந்த சென்றவள் பிறை அமர்ந்திருக்கவும் அவனருகில் சென்றாள்.
“பிறை?” ஆரு அழைத்தாள்.
தீவிர யோசனையில் இருந்தவன் ஆருத்ராவின் அழைப்பில் தான் நிமிர்ந்தான்.
“என்ன ஆரு?”
“உனக்கு என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?”
“ஒரு மாதிரி மனசு பதட்டமா இருக்கு ஆரு. என்னன்னு தெரியல.”
“அந்த பாம்பு வந்தது சொல்றீயா?”
“ப்ச், இல்ல ஆரு. ஆனா, சம்திங்க் இஸ் டிஸ்டர்ப்பிங்க் மீ. யாருக்கோ ஏதோ நடக்க போற மாதிரி”
“ஒன்னும் டென்சன் ஆகாத. யாருக்கும் ஒன்னும் ஆகாது.”
….
அறிவும் அன்பும் நான்கைந்து முறை அங்கைக்கு அழைத்து இருப்பார்கள். ஆனால், அவளோ ஜருகுமலையின் அடிவாரத்தில் எங்கோ போய்க் கொண்டிருந்தாள்.
அந்த நிழலைப் பின் தொடர்ந்து வந்தவள், அடிவாரத்தில் இருந்து அதனைக் காணாது சிறிது நேரம் அங்கையே நின்றுவிட்டாள்.
பின், மீண்டும் அந்த குரல்…
“அங்கை, நின் செப்புத் திருமேனியது எனக்கு சொந்தமானது. ஆனால், அதனை தீண்டி, சுவைத்திட ஆவலில்லை. அந்த மென்பாதங்கள் மட்டுமாவது மண்ணில் பதிய வேண்டுகிறேன். வா…”
“யாரு… யாரது?”
“ஒற்றைவரிதனில் என்னை விவரித்திட இயலுமா? அது யாராலும் முடியாது என்று நீ தானே கூறினாய்? வா…”
“யாரா இருந்தாலும் முன்னாடி வாங்க”
சில்லென்ற காற்று அவளைத் தீண்டிச் சென்றது. குரல் வருகிற திசையை நோக்கி நடக்கலானாள். ஆனால், அவளின் இதயம் ஏறுக்குமாறாய் துடித்துக் கொண்டிருந்தது.
‘பயப்படாத அங்கை. தைரியமா இரு’ மனத்திற்குள் ஓராயிரம் முறை சொல்லிக் கொண்டே சென்றவள், நான்காவது கொண்டை ஊசி வளைவினை வந்தடைந்தாள். தற்போது தான் அங்கு சாலை வசதி செய்திருந்தமையால் மேலேறி வர சற்று சுலபமாய் இருந்தது.
“முன்னே வர எனக்கு ஐயமில்லை… நிந்தன் மதிமுகம்தனை கையிலேந்திட திங்கள் கணக்கிருக்கிறது… வா…”
சாலையை ஒட்டின காட்டுப் பகுதியில் சருகுகள் மிதிபடும் சப்தம் கேட்டது.
அதனைக் கூர்ந்து கவனித்தவள், அங்கு அந்த சிறிய இராஜநாகக் குட்டி இருப்பதை கண்டுக்கொண்டாள்.
அவளின் வருகையை அதுவும் கண்டுக் கொண்டது. அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தபின், மெதுவாக ஊர்ந்து சென்றது.
‘இது, காலேஜ்ல பாத்த பாம்பு தான? பாம்பு பழிவாங்கும்னு சொல்றதுலாம் உண்மையே கிடையாது. ஆனா, ஏன் இது எப்போ என்ன கைட் பன்னுது?’
யோசனையோடே அதனைப் பின் தொடர்ந்தாள். மெதுவாக செல்ல ஆரம்பித்து, திடீரென்று அது வேகமெடுத்தது.
உள்ளுக்குள் பயம் இருந்தாலும், அதனைத் தொடர்ந்தாள் அங்கை.
“மீண்டும் என் வழியில் ஏன் குறுக்கே வருகிறாய் மஞ்சரி? அவளின் பாதம் என் மண்ணில் விழ வேண்டும். இல்லையேல் வீழ்த்தும் வழியை யான் அறிவேன்.”
பதிலேதும் கூறாமல் அங்கையின் கவனம் முழுக்க தன்னகத்தே கொண்டு அந்த பாம்பு பதினெட்டாவது கொண்டை ஊசி வளைவிற்குள் புகுந்தது.
சிறிய பாம்பை அவள் தொடர ஆரம்பித்த பிறகு எந்த குரலும் அங்கையின் செவியை தீண்டவில்லை.
கார்த்திகேயன் வீட்டிற்கு சற்றுத் தொலைவில் திடீரென்று அந்த பாம்பு காணாமல் போனது. அப்படியே நின்றுவிட்டாள் அங்கை.
கண்ணிற்கு எட்டிய தூரம் வரை, இருட்டு… இருட்டு… இருட்டு மட்டுமே…
அங்கைக்கு மூச்சு வாங்கியது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் இங்கு தனியாய் இருக்கிறோம் என்பதே அப்போது தான் அவளின் புத்திக்கு எட்டியது.
தனது கை இரண்டையும் முழங்காலில் வைத்து சற்று குனிந்து உதடு குவித்து மூச்சை ஆழ சுவாசித்தாள்.
மீண்டும் சருகுகள் மேல் ஏதோ செல்வது போன்ற சத்தம். அந்த இருட்டில் அவளுக்கு ஒன்றுமே புலப்படவில்லை.
அவளின் பின்னே யாரோ வேகமாக சென்றது போல் உணர்வு. திரும்பிப் பார்த்தால் ஒன்றுமில்லை.
தற்போது அவளை சுற்றி ஆபத்து இருக்கிறது என்பது மட்டும் அவளின் ஆழ் மனது அடித்துக் கூறியது.
காற்று வீசும் சத்தம் கூட உள்ளுக்குள் கிலியை கொடுத்தது.
“ஸ்ஸ்ஸ்…….” காற்றின் கீதத்தில் அபசுவரமாய் இன்னுமொரு சத்தம்.
‘நிச்சயம் அந்த பாம்பாதான் இருக்கணும்’ உறுதியாய் நம்பினாள். அன்றாடம் பாம்புகளை கையாளுவதிலேயே கவனம் செலுத்துபவளுக்கு அதனின் சிறு அசைவு கூட அத்துபடி.
ஆனாலும், இந்த இருட்டில் என்ன செய்வதென்று அவசரமாக ஒரு திட்டம் வகுத்தாள். அது அமாவாசை தினம் என்பதால் நிலவொளி கூட இல்லை. நட்சத்திரங்களின் வெளிச்சம் மட்டுமே ஏதோ தென்பட்டது. அதனை வைத்து ஒரு பெரிய குச்சினை எடுத்துக் கொண்டாள். தூறல் விழ ஆரம்பித்தது.
‘இனிமே இங்க இருக்குறது சரியில்ல. உடனே வழிய கண்டுபிடிச்சு ஊருக்குள்ள போயாகணும்’ வியர்வை அவளின் உடலை நனைத்து இருந்தது. அந்த பயத்தின் வாசம் அனைத்து விலங்குகளுக்கும் புலப்படும்.
“நெடி ஏறுகிறது அங்கை… ம்ம்… உன் வாசம், எனக்கே உரித்தான உன் வாசம்… அந்த பயத்தின் வாசம்… சுழலில் சிக்கிக் கொள்ள தயாராக இரு”
திடீரென்று ஒலித்த குரலில் ஈரக்குழை நடுங்கிப் போனது. அப்போது சட்டென்று மின்னல் மின்னிட, அங்கையின் கண் முன்னே அந்த பச்சை நிறக் கண்கள் மின்னி மறைந்தது.
“ஆஆஆஆஆ….” பயத்தில் அலறியவள், வேகமாக அங்கிருந்து ஓடினாள்.
….
அவளின் அலறல் கார்த்திகேயன் வீட்டில் இருந்த அனைவருக்கும் கேட்டது.
“அண்ணா, இப்போ யாரோ கத்துனாங்க தான?”
“ஆமா பிறை…”
“சார், இது அங்கையோட வாய்ஸ்.”
“நிஜமாவா அன்பு?”
“ஆமா, சார். அங்கையோடது தான்.”
“ஓ காட்… என்ன ஆச்சுன்னு தெரியல. அறிவு, கிட் எடுத்துக்கோ. நாங்க மூணு பேரும் பாத்துட்டு வரோம். நீங்க இங்கயே இருங்க”
ஏற்கனவே சிவரஞ்சனும் ஆருவும் பயத்தில் இருக்க, இது இன்னமும் அவர்களுக்கு பீதியைத்தான் கிளப்பியது.
மூவரும் கிளம்ப, “அண்ணா, நானும் வரேன்.” என்று எழுந்தான் பிறை.
“நீயும் போய்ட்டா அப்போ நாங்க தனியா இருக்கணும் பிறை. நீ இங்கயே இரு” என்றாள் ஆரு.
ஆனால், பிறைக்கோ அந்த குரல் உள்ளுக்குள் ஏதோ செய்தது.
“இல்ல, ஆரு. நானும் கூட போறேன். உடனே வந்துடுவோம். சத்தம் வந்தது, இங்க பக்கத்துல தான். நீங்க ரெண்டு பேரும் இங்கயே இருங்க”
“பிறை…” ஆருவின் கண்களில் பயம் ஏகத்துக்கும் இருந்தது.
“அவன போக விடு ஆரு. நாம இங்கயே இருக்கலாம். டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. அந்த பொண்ணு என்ன பிரச்சனைல இருக்கோ. சீக்கிரம் போங்க” சிவரஞ்சன் அனைவரையும் அனுப்பி வைத்தான்.
…..
நால்வரும் டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு அந்த இருட்டிற்குள் நுழைந்தனர்.
“நானும் அன்புவும் இந்த பக்கம் போறோம். பிறை, நீ அறிவுக் கூட அந்த பக்கம் போ… அங்கையோ இல்ல வேற யாரோ கண்ணுல பட்டா உடனே வாக்கி டாக்கில கூப்டுங்க” என்றபடி கார்த்திகேயன் அன்புவோடு வலதுபக்கம் சென்றான்.
இடதுபக்கம் பிறை அறிவோடு சென்றான். அந்த இருட்டினை நெருங்க, நெருங்க பிறைக்கு உள்ளுக்குள் படபடத்தது.
“அங்கை…”
“அங்கை… எங்க இருக்க…” ஆளுக்கு ஒரு திசையில் கத்திக் கொண்டே சென்றனர். சிறிது தூரம் வரை நால்வருக்கும் மற்றவர் கூப்பிடுவது செவியில் விழுந்தது.
பிறையின் கண்கள் அந்த இருட்டில் உன்னிப்பாக அனைத்தையும் உற்று நோக்கியவண்ணம் இருந்தது.
“அங்கை….”
மெல்லிய தூறலோடு காற்று வீசியது. “அறிவு, சீக்கிரம் பாரு. இன்னும் கொஞ்ச நேரத்துல மழ வந்துடும்.”
சரியென்று தலையசைத்தவனின் கண்களுக்கு இருட்டைத் தாண்டி வேறெதுவும் அவனின் கண்களுக்கு புலப்படவில்லை. மனது திக் திக் என்று துடித்தது.
‘கடவுளே, அங்கைய என் கண்ணுல காட்டிடு. அங்கை, நாங்க உன்ன தேடித்தான் வரோம்.’ உள்ளுக்குள் போராட்டம் நடத்திக் கொண்டு வந்தான் அறிவு.
மழை பெய்ய ஆரம்பித்தது. இருந்தும் திசைக்கிருவராக தேடிக் கொண்டிருந்தனர்.
அப்போது மின்னல் வெட்ட, பிறையின் கண்களுக்கு மரத்தின் பின்னே ஏதோ இருப்பது தெரிந்தது.
“அறிவு”
“ம்ம்…”
“அங்க… அங்க என்னமோ இருக்க மாதிரி இருக்கு. பொறுமையா வா”
இருவரும் அந்த சறுகுகளின் நொறுங்கும் சப்தத்தில் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்தனர்.
“டார்ச் ஆஃப் பண்ணு, அறிவு”
இருவரும் மெதுவாக மிக மெதுவாக அந்த இடத்தை அடைந்தனர்.
அவர்கள் கண்ட காட்சி, ஒரு நிமிடம் இதயத்தை நின்று துடிக்க செய்தது.
அங்கை உதடு துடிக்க, மேலே வழியும் மழைநீரோடு கண்ணீரையும் சேர்த்து, காலை இறுகக் கட்டி அமர்ந்திருந்தாள். அவளுக்கு முன்னே பன்னிரண்டு அடி இராஜநாகம் படையெடுத்து நின்றுக் கொண்டிருந்தது.
அறிவும் பிறையும் உறைந்தே போயினர். அறிவுக்கு உறுதியாகத் தெரிந்தது, இது அவர்கள் பிடித்த இராஜநாகம் அல்ல.
அறிவு ஏதோ சொல்ல வர, பிறை அவன் வாயில் ஒற்றை விரலை வைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்தான்.
பிறையும் அறிவும் மரத்தின் ஒரு பக்கம் மறைந்துக் கொள்ள, பிறை விரைந்து யோசித்தவன், அவன் காலுக்கு அருகில் இருக்கும் பெரிய கல் ஒன்றை எடுத்து, அதை அங்கைக்கு எதிர்ப்பக்கம் அதாவது இராஜநாகத்தின் பின்பக்கம் தூக்கிப் போட்டான்.
திடீரென்று உணர்ந்த நில அதிர்வை தனக்குள் உள்வாங்கிய நாகம் அதனை நோக்கி சென்றது.
அந்த பக்கம் அது சென்றவுடன், இதுவரை இழுத்து வைத்த மூச்சினை விட்ட அங்கை அப்படியே மயங்கி சரிந்தாள்.
பிறை அவளின் அருகில் செல்ல, அறிவு அது சென்றுவிட்டதா என ஒருமுறை உறுதி செய்துக் கொண்டான்.
“அங்கை…. அங்கை” பிறை அவளின் கன்னம் தட்டி எழுப்பினான். ஏனோ, அவனின் மனது அந்நியாயத்திற்கு தவித்தது. அவளுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்று நொடிக்கொரு முறை அவனின் தெய்வத்தை வேண்டிக் கொண்டான்.
அரைவிழிப் பார்வையில் அவனைக் கண்டவளின் கண்கள் சிரித்தது. பிறைசூடனின் கை வளைவுக்குள் முழு மயக்கத்திற்கு சென்றாள் அங்கையற்கண்ணி.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
15
+1
2
+1
மஞ்சரி யாருடா. அங்கையை ஏன் அந்த மலைக்கு கூட்டிட்டு போகுது அந்த பாம்பு.
அங்கையோட உடம்பு அந்த குரலுக்கு சொந்தமானதுன்னா என்னடா இதெல்லாம் ரொம்ப த்ரில்லா போகுது??
Thanks ka…. Love cum thriller ka… inime than inum bayangarama irukum wait and read