Loading

சுழலி – 4

சேலம் மாவட்டம். மலைகளால் சூழப்பட்டுள்ள தமிழ்நாட்டின் ஒரு மாவட்டம் என்ற பெருமை அதற்குண்டு. தற்போது இருக்கும் சேலம் மாவட்டம் முன்னர் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் சேர்ந்தது தான் முழு சேலம் மாவட்டமாக இருந்தது. இந்தியாவிலேயே முதலில் மாவட்டமாக உருவான இடம் சேலம். காலப் போக்கில் மாவட்டம் பிரிக்கப்பட்டு சேலம் தற்போது மலைகள் சூழ்ந்துள்ள பகுதியாக உள்ளது.

சேலம் வடக்கே சேர்வராயன் மலை, தெற்கே ஜருகுமலை, கிழக்கே கோதாமலை மற்றும் தென்மேற்கே கஞ்சமலை உள்ளது. மேலும், பச்சைமலை, கொல்லி மலை போன்ற மலைகள் சேலத்திலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது. கதையை புரிந்துக்கொள்ள இந்த மலைகளை தெரிந்து கொள்வது அவசியம். நம் பயணம் இனி எழில் கொஞ்சும் இந்த மலைகளுக்கு நடுவில் தான்.

இதில் முக்கியமான மலைகளில் ஒன்று தான் ஜருகுமலை.

கார்த்திகேயன் ஜீப்பில் பிறைசூடன் மற்றும் அவனின் நண்பர்களை தனது இல்லத்திற்கு அழைத்து வந்தார்.

ஜருகுமலையின் பதினெட்டாவது கொண்டை ஊசி வளைவின் ஒரு பக்கம் சிறிய பாதை பிரிந்து செல்கிறது. அங்கு தான் தற்போது கார்த்திகேயனின் வீடு இருக்கிறது.

கார்த்திகேயன் ஜருகுமலை காடுகளின் வன அதிகாரி.

“போய் ரெப்ரஸ் ஆகிட்டு வாங்க. நான் டின்னர் எடுத்து வைக்குறேன்” மூவரும் செல்ல, “பிறை, ஒரு நிமிசம்” என்று அவனை மட்டும் அழைத்தார் கார்த்திகேயன்.

பிறையும் அமைதியாக நின்றான்.

“ஒன்னும் கவலப்படாத பிறை. எல்லாம் சரியாகிடும். நான் எப்டியாவது அப்பாவ கன்வீன்ஸ் பன்றேன்.”

“இல்ல வேண்டாம் ண்ணா. ஏற்கனவே மஞ்சரி இல்லன்றதே இங்க பெரிய பிரச்சனையா இருக்கு. இதுல, நானும் அவங்க கூடவே இருந்தா இன்னும் ரணம் தான் மிஞ்சும். எப்டியும் இங்க தான இருக்கப் போறேன். புரிய வைக்க முயற்சி பண்றேன். நீங்க எங்களுக்காக இதுவரைக்கும் செஞ்சதே பெரிய விசயம். இன்னமும் உங்க மேல நீங்க பழிய ஏத்துக்க வேண்டாம்.”

“பைத்தியம் மாதிரி பேசிக்கிட்டு இருக்காத பிறை. என்ன பழி அது, இதுன்னு? இங்க வந்த நாள்ல இருந்து உங்கள எல்லாம் பாக்குறேன். மஞ்சரி விசயத்துல நீ செஞ்சது சரின்னு தான் நான் சொல்லுவேன். நீ தான் அத ஏத்துக்க மாட்டிங்குற”

பிறை அமைதிக் காத்தான். அப்போது வெளியே இன்னொரு ஜீப் சத்தம் கேட்டது.

“யாரு, இந்நேரத்துல?” என்றபடி வெளியே வந்தான் கார்த்திகேயன்.

அறிவும் பேரன்புவும் வண்டியில் இருந்து இறங்கினர். வீட்டிற்கு செல்ல மறுத்த அன்பு, அங்கை குழுவில் இருந்து மற்ற அனைவரையும் அனுப்பிவிட்டு, அறிவோடு வந்திருந்தான்.

“என்ன ரெண்டு பேரும் இந்நேரத்துல வரீங்க?”

“ஆர்ட்ஸ் காலேஜ்ல பாம்பு வந்துடுச்சுன்னு கால் வந்தது சார். அதான், அங்கையும் நாங்களும் போனோம். இங்க என்ட்ரி பண்ணிட்டு போக சொல்லி மணி அண்ணா சொன்னாரு. அவரு இல்லயா?”

“மணி வீட்டுக்கு போய் இருக்காரு. அறிவு, நீ என்ட்ரி போட்டுரு. ஏன் அன்பு ஒரு மாதிரி இருக்க?”

“ஹான்… ஒன்னும் ஒன்னும் இல்ல சார்”

“அறிவு என்னாச்சு?”

“என்ட்ரி போட்டுட்டு வந்துடுறேன் சார்” என்றபடி அறிவு சென்றுவிட, அன்பை தான் யோசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திகேயன்.

பேரன்புவின் நடவடிக்கை சற்று வித்தியாசமாக இருந்தது. முகம் வெளிறி இருந்தது. அந்த இருட்டும் அவனுக்குள் ஏதோ செய்வது போல் இருக்க, கடினப்பட்டு தன்னை அமைதிப்படுத்திக் கொண்டிருந்தான்.

“ரெண்டு பேரும் உள்ள வாங்க”

இருவரையும் உள்ளே அழைத்தான் கார்த்தி. பிறையும் அவனது நண்பர்களும் தயாராகி வந்திருந்தனர்.

“வந்துட்டீங்களா? டேய், நீங்களும் கை கழுவிட்டு வாங்கடா. சாப்டலாம்”

“இல்ல சார், பரவால்ல. அங்கைய மீட் பண்ண போகணும்”

“ஆமா, நானும் கேட்கணும்னு இருந்தேன் அங்கை வரல? என்னாச்சு?”

அறிவு தான் பதிவிட்டிருந்த காணொளியை கார்த்தியிடம் காட்டினான்.

கார்த்திகேயன் அந்த காணொளியை பார்த்துவிட்டு அறிவையும் அன்புவையும் தான் குழப்பமாக பார்த்தான்.

“என்னங்கடா இது?”

“இதான் நடந்தது. ஓலப்பாம்பு பிடிச்சதுக்கு அப்ரோம் இராஜநாகம் இருக்குறதா இவன் எமர்ஜன்சி அலர்ட் பண்ணான். நாங்கலாம் போனோம். இவன் அதோட கண்ண பார்த்த உடனே ஒரு மாதிரி ஆகிட்டான். திடீர்னு மயக்கம் போட்டுட்டான். அப்ரோம் நானும் அங்கையும் அத பிடிக்க எவ்ளோவோ டிரை பண்ணோம். அது கூட ரெண்டு குட்டியும் இருந்தது. கடைசில போறப்போ அதோட முட்டயயும் அது எடுத்துட்டு போச்சு. யாழும் இதுல மயங்கிட்டா”

“அறிவு நீ என்ன சொல்ற?”

“அந்த வீடியோல இருக்குறத தான் சார் சொல்லிட்டு இருக்கேன்”

ஆருத்ராவும் ரஞ்சனும் இவர்கள் சொல்வதை கேட்டு விழித்துக் கொண்டிருந்தனர்.

“ஆரு…”

“ம்ம்…”

“என்னடி, வந்த உடனே அவங்க வீட்டுக்குள்ள கூட விடல. இவனுங்க என்னடான்னா பாம்பு கதை ஓட்டிட்டு இருக்கானுங்க”

“எனக்கு மட்டும் என்ன தெரியும்? நானும் உன் கூடதான சேர்ந்து கேட்டுட்டு இருக்கேன். கொஞ்சம் அமைதியா இரு. ஆனா, பாரேன். இந்த பிறை எவ்ளோ இன்ட்ரெஸ்ட்டா கேட்டுட்டு இருக்கான்”

“அவனுக்கு அது பழகின விசயம். நமக்கு பாம்பு புஸ்ன்னு சொன்னாலே இங்க பிஸ்ன்னு போய்டும்.”

“ச்சே, பயந்தாங்கொள்ளி.”

“ஆமா, நீ பெரிய தைரியசாலி. உனக்கும் உள்ள அல்லு விடுதுன்னு தெரியும். கேவலமா சமாளிக்காத”

“தெரியுதுல மூடு”

இவர்களின் உரையாடலை கார்த்திகேயன் சொன்ன விசயம் கலைத்தது.

“அந்த வீடியோல என்ன இருக்குன்னு நீங்களே பாருங்க”

அறிவும் அன்புவும் அதை வாங்கினர். மற்றவர்களும் அதனைப் பார்த்தனர்.

அங்கை யாழிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்க, அப்போது அவளின் சிறுசேணி (Walky-Talky)யில் பேரன்புவின் ‘எமர்ஜன்சி! எமர்ஜன்சி! காலேஜ் பின் கேட் பக்கம் பெரிய இராஜநாகம் இருக்கு. ஐ ஆம் ரிப்பீட். எமர்ஜன்சி’ என்ற குரல் கேட்டது.

பின், அங்கை மற்றும் அறிவு முன்னே ஓட, யாழ் பின்னாடியே காணொளி எடுத்துக் கொண்டு தொடர்கிறாள்.

அங்கையின் குழுவில் இருந்த மற்ற இருவரும் வந்திருந்தனர்.

பேரன்பு எதையோ பார்த்து பயந்து நின்றுக் கொண்டிருப்பது தெரிகிறது. மற்ற அனைவரும் பயத்தில் இருப்பதும் தெரிகிறது. ஆனால், அவர்கள் முன் எதுவும் இல்லை. அதாவது அந்த இடத்தில் பாம்பு இல்லை. பின், சிறிது நேரத்தில் பேரன்பு மயங்கி விழுகிறான். அங்கை இல்லாத எதையோ பிடிக்க முயற்சிக்கிறாள். அறிவு ஒரு பக்கம் அமைதியாக நிற்கின்றான்.

பின், யாழ் கீழே விழுகிறாள். காணொளி மறைகிறது. பின், அதனை அறிவு எடுக்கிறான். அங்கை எதையோ பிடித்து இருக்கிறாள். ஆனால், அவளின் கையில் எதுவும் இல்லை. காற்று பலமாக வீசுகிறது. மின்னல் மின்னுகிறது. பின், அந்த மரம் தீப்பிடிக்கிறது. அனைவரும் அந்த இடத்தை விட்டு செல்கின்றனர். காணொளி இப்படித்தான் பதிவாகியிருந்தது.

அறிவும் அன்புவும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர். ரஞ்சனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“என்ன ப்ரோ, எதாவது ட்ராமா ப்ளாட் ரெடி பன்றீங்களா? செமயா ஆக்டிங்க் பண்ணியிருக்கீங்க உங்க டீம்”

அனைவரும் தற்போது அவனைத்தான் முறைத்தனர்.

‘என்ன ஏன்டா முறைக்குறீங்க. அங்க தான் ஒன்னும் இல்லயே. அததான் நானும் சொன்னேன்’ உள்ளுக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

“சார், நாங்க ஒன்னும் நடிக்கல. நிஜமா அங்க நாங்க பத்தடி பாம்ப பாத்தோம். கருநாகம் அது.” அன்பு சொன்னான்.

“சரி, அந்த ஓலப்பாம்பு எங்க?”

“கார்ல இருக்கு சார்”

திடீரென்று வெளியே ஏதோ சத்தம் கேட்டது.

அனைவரும் வெளியே சென்று பார்த்தனர். அந்த இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. அப்போது தான் கார்த்திகேயன் கவனித்தான் எப்போதும் நீர் அருந்த வரும் இராஜநாகம் தற்போது வந்திருப்பதை.

“எல்லாரும் உள்ள போங்க”

“சார்…”

“சொல்றேன்ல அறிவு. உள்ள போங்க. அது மத்தவங்கள பாத்தா சீற ஆரம்பிச்சிடும்”

பேரன்புவும் அதனை பார்த்துவிட்டான்.

“அறிவு, நாம மிஸ் பண்ண இராஜநாகம் இதான்”

“என்னடா சொல்ற?”

“நிச்சயமா இதான். அதோட கண்ணு. என்னைக்கும் அத என்னால மறக்க முடியாது”

பிறையும் அதன் கண்ணை பார்த்தான்.

பச்சை பளிங்கு நிறத்தில் மின்னியது. அவனுக்குள் ஏதோ இடறியது. ‘இந்த கண்ண எங்கயோ பாத்து இருக்கேன்’ மீண்டும் மீண்டும் அவனின் நினைவடுக்கு ஏதோ காட்சிகளை அவனுக்கு காட்டியது. ஆனால், பிறைக்கு ஏதும் நினைவிற்கு வரவில்லை.

கார்த்திகேயன் அந்த இராஜநாகத்திற்கு தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்தான். அதனோடு இன்னும் இரண்டு குட்டி இராஜநாகங்களும் வந்தன.

அதனை அறிவும் தற்போது பார்த்தான்.

“அன்பு. நிச்சயமா இதான்டா. அது கூட ரெண்டு குட்டி இருந்தது.”

“நாகங்கள் தண்ணீ குடிக்குறப்போ பேசாதீங்க. அதுங்களுக்கு சின்ன மாற்றம் தெரிஞ்சாலும் சீற ஆரம்பிக்கும். அது இத்தன நாள் பழகுனவங்களா இருந்தாலும் பாக்காது” இருவரையும் அமைதியாக இருக்கச் சொன்னான் பிறைசூடன்.

மூன்று இராஜநாகங்களும் அமைதியாய் நீர் அருந்திவிட்டு சென்றது. இரண்டாவது குட்டி இராஜநாகம் நின்று கார்த்திகேயனை திரும்பி பார்த்துவிட்டு, சாளரத்தின் வழியாக பார்த்துக் கொண்டிருக்கும் அறிவையும் அன்புவையும் பார்த்துவிட்டு சென்றது.

“ஆத்தாடி… அன்பு, இப்டிதான்டா இன்னொன்னு அங்கையயும் பாத்துட்டு போச்சு.”

“என்ன ப்ரோ சொல்றீங்க.?” ஆருத்ராவிற்கு பயம் அப்பட்டமாக தெரிந்தது.

“நாங்க சொல்றது உண்மதான். நம்புங்க.”

கார்த்திகேயன் இருவரையும் அழைத்தான்.

“அறிவு… அன்பு…” இருவரும் வந்தனர்.

“ஓலப்பாம்பு எங்க?”

“எடுக்குறோம்…”

இருவரும் ஜீப்பிற்குள் சென்று எடுத்து வந்தனர். அதில் தற்போது இரண்டு ஓலப்பாம்புகள் இருந்தது. பத்து முட்டைகளில் இரண்டு இல்லை.

“என்னங்கடா இது?”

“மறுபடியும் என்ன சார்?”

“ஒரு பாம்புன்னு சொன்னீங்க. இதுல ரெண்டு இருக்கு. பத்து முட்டைங்கன்னு சொன்னீங்க. இதுல எட்டு தான் இருக்கு?”

“எதே?”

அறிவு அந்த கருப்பு பையை கீழே விட்டான். அதிலிருந்து இரண்டு ஓலப்பாம்புகள் வந்தன.

“டேய், அன்பு. அங்கை ஒன்னு தானடா பிடிச்சா?”

“ஆமாடா. பத்து முட்ட தான்டா எடுத்து வச்சா. நானே என் கண்ணால பாத்தேன்டா.”

“இப்போ வந்த பாம்பு டின்னர் முடிச்சிட்டு போய் இருக்குமோ?” தனது பெரிய சந்தேகத்தை கேட்டான் சிவரஞ்சன்.

“டேய், ரஞ்சு கேவலமா காமெடி பண்ணாத. இங்க வந்ததுல இருந்து ஒரே மாய மந்திரமா இருக்குடா. பேசாம நைட்டோட நைட்டா எஸ் ஆகிடலாமா?” ஆரு பயந்தாள்.

….

அங்கை வீட்டில் அனைவரும் உறக்கத்தை தழுவிக் கொண்டிருந்தனர். ஆனால், அங்கை மட்டும் சாளரம் வழியாக அந்த நிலவை பார்த்துக் கொண்டிருந்தாள். ஏன், அந்த சிறிய இராஜநாகம் அவளை பார்த்து சீறியது என்ற கேள்விக்கு பதில் தேடிக் கொண்டிருந்தாள்.

“இன்னும் தூங்காம என்னை பத்தி என்ன யோசனை அங்கை?” குரல் எங்கிருந்தோ ஒலித்தது.

திடுக்கிட்டாள் அங்கை. அந்த அறையில் அவளை தவிர யாரும் இல்லை.

“யாரு?” பலத்த அமைதி.

“இப்போ யார் பேசுனது?”

“யாருன்னு சொன்னா உடனே கண்டுபிடிச்சிடுவியா அங்கை… ஸ்ஸ்ஸ்…” அவளின் அறையில் யாரோ இருப்பது போல் தோன்றியது.

“யாரா இருந்தாலும் முன்னாடி வாங்க”

அப்போது அவளின் அறையின் வெளியில் ஒரு நிழல் உருவம் தென்பட்டது. அதனைப் பின் தொடர்ந்து போனாள். அது வீட்டைக் கடந்து எங்கேயோ போய்க் கொண்டிருந்தது. தனது இருசக்கர வாகனத்தை எடுத்தவள் அதனை பின் தொடர்ந்தாள்.

சிறிது நேரத்தில் அந்த நிழல் அவளிற்கு தென்படவில்லை.

தற்போது ஜருகுமலையின் அடிவாரத்தில் நின்றுக் கொண்டிருந்தாள் அங்கையற்கண்ணி.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
15
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. அடேய் என்னடா எல்லாம் மர்மமா இருக்குது ஏதோ திகில் படம் பார்த்த மாதிரியே ஃபீல் ஆகுது