Loading

சுழலி-30

யட்சினி ஏற்படுத்திய மாயை உண்மையென்று நம்பிய காவலர்கள், முதன்மையமைச்சரை அங்கு அழைத்துவர சென்றனர்.

நேரம் செல்லச் செல்ல, வேள்வியின் நெடியை யட்சினியால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அவளின் சக்திகள் குறைய ஆரம்பித்தது. கூட்டமாக இருந்த இடத்தில் இப்போது யட்சினி மட்டுமே தனித்து நின்றாள். அதே நேரம், நீலா செந்தூரனோடு கோட்டையை நெருங்கிக் கொண்டிருந்தாள்.

மாரிவெண்கோவும் செம்பியனும் வீரர்களோடு வர, அங்கு தனித்து நின்றிருந்த ஒரு பெண்ணை மட்டும் கண்டு குழம்பி நின்றனர்.

“வீரர்களே! மலைவாசி மக்களும், வனவாசி மக்களும் திரண்டு வந்துள்ளனர் என்றுதானே கூறினீர்கள்? ஆனால், தற்போது ஒரேயொரு பெண்மட்டும் தனித்து நிற்கிறாள். எம்மைக் கண்டால் வேலையற்றுத் திரிபவர்கள்போல் தெரிகிறதா?” படைகள் இன்னும் புறப்படாமல் இருப்பதைக் கண்டு இன்னும் கோபமடைந்தார் மாரிவெண்கோ.

ஆனால், செம்பியனோ யட்சினியின் அழகில் மெய்மறந்து சுற்றம் மறந்து அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

முதன்மையமைச்சரின் கூற்றில் பதறிய தலைமைக்காவலன், “பொறுத்தருள வேண்டும் ஐயா! நாங்கள் அனைவரும் அத்தனை பேரையும் இங்குதான் காத்திருக்குமாறு சொன்னோம். ஆனால், அதற்குள் எப்படி மாயமானார்கள் என்று எனக்கு தெரியவில்லை.”

“ஆமாம், மாயமாகித்தான் போனார்கள். இந்த அழகிய பெண்ணின் எழில் அனைவரும் மாயமாகித்தான் போனார்கள்” தனியாகப் பேசினார் செம்பியன்.

செம்பியனின் தெளிவில்லாத கூற்றில் திரும்பிய அமைச்சர், “செம்பியா! செம்பியா! அங்கு என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்? செம்பியா! நமக்கு தலைக்குமேல் ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கிறது. உன்னைத்தான் அழைக்கிறேன், செவியில் விழவில்லையா?” வார்த்தைகளை கடித்து துப்பினார்.

“ஆயிரெத்தெட்டு வேலைகளில் ஆயிரத்தொன்பதாவது வேலையாக இந்த பெண்ணை என் மஞ்சம் சேர்க்கலாம் என்றுள்ளேன் அமைச்சரே!”

“என்ன? என்ன பிதற்றல் இது? அங்கு வேள்வி துவங்கியது. அதற்குள் வஞ்சனைத் தேடி வீரர்களை அனுப்ப வேண்டும். நீ என்ன பெண் பித்து பிடித்து திரிகிறாயா?”

மாரிவெண்கோ பேசுவது எதுவும் செம்பியனின் செவியில் விழத்தான் இல்லை. அவர்தான் எப்போதோ யட்சினியின் மாயப்பார்வையில் சுயமிழந்துவிட்டாரே.

“நீங்கள் வீரர்களை அனுப்பும் பணியில் ஈடுபடுங்கள். நான் இந்த பெண்ணிடம் சிறு விசாரணை நிகழ்த்திவிட்டு வருகிறேன்” என்றபடி யட்சினியை அழைத்துச்சென்றவரின் வாயெல்லாம் முத்துப்பற்கள் இளித்தவண்ணம் இருந்தது.

யட்சினி ஏதும் பேசாமல் அழகுப்பதுமையாக அவரோடு சென்றாள்.

தலையில் அடித்துக் கொண்ட அமைச்சர், “இவனை…. அனைவரும் அங்கு என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்;கள். விரைந்து புறப்படுங்கள். கல்வராயன்மலையில் நம் மன்னர் தனியாகத் தவித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவிக்கரம் நீட்ட உடனே புறப்படுங்கள். காணாததைக் கண்டதுபோல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், அற்ப பதருகளே!” சுயம் மீண்ட காவலர்கள் புறப்பட தயாராகினர்.

வேள்வியின் தாக்கத்தால், யட்சினியின் மந்திரங்கள் ஏதும் முழுமையான பலனை அளிக்கவில்லை. ஆகவே, இன்னும் சற்று நேரத்தில் செந்தூரன் வந்ததும் அடுத்த திட்டத்தை மேம்படுத்தலாம் என்று எண்ணியே செம்பியனோடு சென்றாள் யட்சினி.

வீரர்கள் பயணத்தைத் துவங்க, மாரிவெண்கோ ஆலயத்திற்கு புறப்பட்டார். எப்படியாவது மஞ்சரியை தாமதப்படுத்தி, கோதையின் கருவை அழித்தாக வேண்டும் என்பதே அவரின் தற்போதைய எண்ணமாக இருந்தது.

….

செம்பியன் அறையில்.

“கண்ணே! நீ மலைவாசி பெண்ணா?”

“ம்ம்… என்னோடு வந்தவர்கள் எங்க போனாங்க ஐயா. அவங்கள காணோமுங்களே”

“பயம் கொள்ளாதே! அவர்களைத் தேடி அழைத்து வர வீரர்களை பணித்திருக்கிறேன். அருகே வா, இப்படி வந்து அமர்ந்துக் கொள்”

மெல்ல நடந்து வந்தவள், செம்பியனின் அருகில் அமர்ந்தாள். பொதுவாக, யட்சினியின் கண்களை கவனித்துவிட்டால், அதன்பின் குறைந்தபட்சம் ஒரு நாழிகையாவது அவளின் வசியத்தில் சிக்கித்தான் போவார்கள். இதில், செந்தூரன் மட்டுமே விதிவிலக்கு. ஆனால், செம்பியனோ தற்போது இந்த மோனநிலையில் சிக்கித்தான் போனார்.

“இதனை அருந்து பெண்ணே!”

“இல்லங்க ஐயா, வேண்டாம்”

“இது பழச்சாறுதான். வெகுதொலைவில் இருந்து வந்துள்ளாய், களைப்பாக இருக்கும். நீ பாதி அருந்து, நான் பாதி அருந்துகிறேன்” என்று கொஞ்சினார் அந்த கிழவன்.

சந்தர்ப்பத்தை நழுவவிடாதவள், தான் தயாராக வைத்திருந்த மயக்கப் பொடியை அதில் தூவி அதனை செம்பியனுக்கு கொடுத்தாள். மயங்கிவிட்டான் செம்பியன். அவனை அப்படியே படுக்கவைத்தவள், தூரத்தில் கேட்ட சத்தத்தில் காற்றாய் மாறி எல்லைக்கு விரைந்தாள்.

செந்தூரனும் நீலாவும் அரண்மனையின் எல்லையை வந்தடைந்தனர்.

“நீலா, நீ சென்று மஞ்சரியை அழைத்து வா.” என்றவன், “யட்சினி! செந்தூரன் அழைக்கிறேன். விரைந்து வா” என்று சப்தமிட்டான்.

அந்த சப்தத்தைக் கேட்டுத்தான் யட்சினி காற்றாய் விரைந்தாள்.

நீலா அந்தப்பக்கம் மறைந்ததும், இங்குத் தோன்றினாள் யட்சினி. தோன்றியகணம் கண்டுக்கொண்டாள். எது நடக்கக் கூடாது என்று அவள் எண்ணியிருந்தாளோ, அது நடந்துவிட்டது.

“செந்தூரா! என்னவாயிற்று?”

எல்லையில் வீற்றிருக்கும் காவல் தெய்வங்களின் சக்தியாலும் ஆலயத்தில் நடக்கும் வேள்வியாலும், செந்தூரனால் உள்ளே நுழைய முடியவில்லை. அவனின் உடலில் இருக்கும் ஏவல் அவனை நுழைய விடவில்லை.

“அனைத்தும் அறிந்த நீயே என்னவாயிற்று என்று கேட்கிறாயே யட்சினி. அனைத்தும் கைமீறி சென்றுவிட்டது. மஞ்சரி… மஞ்சரி எப்படி இருக்கிறாள்?”

“நலம்! கோதையும் கருவுற்று இருக்கிறார்கள். மஞ்சரி இரட்டைக் கருவைத் தாங்கியிருக்கிறாள்.”

அகலப் புன்னகை சிந்தினான் செந்தூரன். யட்சினியால் அவனின் அருகில் செல்ல முடியாது. அவள், கோட்டையைத் தாண்டினால் மீண்டும் உள்ளே வர இயலாது என்பதை அறிந்ததனால் எல்லைக்குள் நின்றே உரையாடிக் கொண்டிருந்தாள்.

“மகிழ்ச்சி. இந்த ஒற்றைச் சொல்லே என் அத்தனை பிறவிகளுக்கும் நான் முழுமைப்பெற்றிட போதும். இச்சமயம், நான் உன்னை விடுவிக்கிறேன். என்னுள் இருக்கும் இந்த ஏவல் எந்தநேரமும் முழுமையடையலாம். அதற்குள், நான் சொல்வதை செய்துவிடு.” என்றவன், சிறிது நேரம் கண்கள் மூடி அமர்ந்தான்.

யட்சினியின் உள்ளமோ பதைபதைத்தது. இனி நடக்கப் போகும் அனைத்தும் பெரும் போர்க்களமாய் வெடிக்கும். நடக்கும் நிகழ்வுகள் அவளின் கண்முன்னே காட்சியாய் விரிந்தது. முடிந்து மனதை திடப்படுத்திக்கொண்டாள்.

கண்ணைத் திறந்தான் செந்தூரன். “இன்னும் சற்று நேரத்தில் ஏவல் என் எண்ணவலைகளையும் மெய்யையும் முழுவதுமாக ஆக்கிரமித்துவிடும். அதற்குள் நான் சொல்வதை கவனத்தில் கொள். மீண்டுமொரு ஜனனம் எனக்கு கிட்டும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. ஒருவேளை கிட்டினால் என் இறுதி மூச்சு வரை மஞ்சரிக்காக மட்டுமே. என்னை ஏவல் முழுவதுமாக ஆக்கிரமித்தவுடன் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. இந்நொடி என் உயிர் பிரிந்திடாதா என்றே நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை ஏவலின் ஆக்கிரமிப்பால் நான் என்ன செய்தாலும் அது என் பாவக்கணக்கில்தான் சேரும். அப்போது என்னை அழிக்க முடியா நிலை வந்தால் யோசியாமல் மஞ்சரியின் கைகளால் என்னை அடைத்து வையுங்கள்.

இதே முழுநிலவு நாள் அன்று, என்றாவது ஒரு நாள் நான் பிரேதாத்மாவாக மாறி வெளிவந்தால், என்னுடைய சக்திகளின் குறிப்புகளை கொண்டு என்னை அழிக்க முயற்சி செய்யுங்கள். அனைத்தும் ஓலைகளில் குறித்து செவ்வேலன் தந்தையிடம் கொடுத்திருக்கிறேன். அதனை எப்படியாவது பாதுகாத்து வையுங்கள். என் அழிவு என் மகளின் குருதியாலும் மகனின் பாதங்களாலும் நிகழ வேண்டும். நான் மஞ்சரிக்கு பூட்டிய மரகதமாலையே என் கழுத்தில் இறுதி மாலையாக விழ வேண்டும்.

வனக்காட்டிலிருந்து ஒரு கல் தொலைவில்  யாராலும் அடக்க இயலாத அகோர சக்தியாக நான் வெளிப்படுவேன். இதுவே என் விதி. அப்போது என் தீய எண்ணங்கள் மட்டுமே உயர்ந்து நிற்கும். என் ஓலைப்படி கிடைக்கும் அனைத்து பொருட்களையும் பத்திரமாக பாதுகாத்து என்மேல் பிரயோகியுங்கள். நான் அழிந்தால் மட்டுமே மஞ்சரிக்கு பூரண வாழ்வு கிட்டும். எந்நாளும் அவள்மேல் நான் கொண்ட காதல் என்றும் பொய்த்து போகாது. என் ஆத்மாவை புண்ணிய பலன்களோடு பதினைந்து பொருட்களில் மறைத்து வைத்துள்ளேன். அதற்கான குறிப்பும் சுவடியில் உள்ளது. வஞ்சனின் மகன் அந்த குறிப்பை அறிந்துக் கொள்வான். தந்தையை மிஞ்சிய தனயனாக வருவான். அவனுக்கு என் மகளை மணமுடித்து வையுங்கள். வஞ்சனும் கோதையும் மீண்டுமொரு பிறப்பில் இணைந்து வாழ்வாங்கு வாழ்வார்கள். அவர்களுக்குத் துணையாக என் மகனும் மகளும் இருப்பார்கள். இவர்களுக்கெல்லாம் அரணாக செவ்வேலனின் மகனும் மகளும் விளங்குவார்கள்.

மீண்டும் இதுபோன்ற ஒரு முழுநிலவு நாளில் நவமனிதர்கள் பிறப்பார்கள். அவர்கள் இணைந்தே என்னை அழிப்பார்கள். இது எனக்கு நானே எழுதிக்கொள்ளும் மரண சாசனம். நான் முழுவதுமாக மரணித்த அந்த நொடி மஞ்சரி அமைதியாவாள். அதன்பின், அவளுக்கு உண்மைகள் புலப்படும். எங்களின் காதல் உண்மையானால், எங்களின் பந்தம் புனிதமானால் இத்தனை இன்னல்களுக்குப் பிறகும் மீண்டும் நாங்கள் மண்ணில் மொட்டாகி பூவாக மலர்வோம்.

இத்தனை நாட்கள் என்னோடு துணையாக இருந்த யட்சிணியே இறுதியாக எனக்கொரு உதவியும் செய்ய வேண்டும். இந்த கமண்டல நீரை எப்படியாவது கோதையிடம் சேர்த்துவிடு. நிச்சயம் அவள் கருவானது நல்வளர்ச்சி பெற்று இந்த கொங்கு நாட்டிற்கு வாரிசாய் மாறட்டும். அனைத்தும் அவன் செயல்” என்று மயங்கிய நொடி அவனின் ஆத்மா அமுக்கப்பட்டு பாதியாக நுழைந்த ஏவல் தற்போது முழுவதுமாக உள்ளே புகுந்தது.

கண்களிரண்டும் இரத்தமென சிவக்க எழுந்து அமர்ந்தான் செந்தூரன். சட்டென அவன் கொடுத்த கமண்டல நீரோடு எல்லைக்குள் நுழைந்துவிட்டாள் யட்சினி. காவல் முழுக்க வீச்சறுவாளைத் தாங்கிக் கொண்டு கருப்பசாமியும் அய்யனாரும் நிற்க செந்தூரனால் உள்ளே நுழைய முடியவில்லை. இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட யட்சினி, கமண்டல நீரை சிறிது பருகினாள். அவளுக்கான வேள்வியும் இதில் இணைந்தே நடக்கிறது என்பதை அப்போதுதான் உணர்ந்தான் செந்தூரன்.

அதனைக் கண்டு ஆத்திரமுற்றான் செந்தூரன். “யட்சினி… நீயும் என்னை ஏமாற்றுவாய் என்று நான் என் கனவிலும் எண்ணவில்லை. கமண்டல நீரை என்னிடமிருந்து பறித்து உன் சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொண்டது எத்தனை பெருங்குற்றம் என அறியாது போனாய். சுயநலம் என்னும் பேய் அனைவர் மனத்திலும் ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. இப்போதே உனக்கு சாபமளிக்கிறேன், நீ விமோச்சனம் பெற்று விண்ணகம் அடைந்தாலும், மீண்டுமொரு பிறப்பெடுப்பாயாக. அப்பிறப்பில் நாடோடியாய் அலைந்து திரிந்து என் காலடியில் விழுந்து எனக்கு மரணத்தைக் கொடு என்று மடியேந்தி நிற்பாய். அப்போது நான் கேட்கும் நிபந்தனையை நீ நிறைவேற்றாவிட்டால் மரணம் தேடி ஓடும் நாடோடியாய் வாழ்வாய்.

அடியே சுழலி! என் காதல் சுழலி! வாடி வெளியே! எல்லைத் தெய்வங்களை நிறுவிவிட்டால் என்னால் உள்ளே வராது என்ற மிதப்பில் திரிகிறாயோ? இங்கிருந்தே உன் உதிர வாடையை நான் அறிவேன் மஞ்சரி. நாம் ஒன்றிணைந்து இந்த உலகத்தையே ஆளலாம் வா! நீ என் மடி சேர்ந்து மஞ்சம் பகிர்ந்து மாமனவன் மடியினில் அமர்ந்து காணும் ஒற்றைப் பார்வைக்கு இந்த அகிலத்தையும் உன் காலடியில் சமர்ப்பிக்கிறேன் வா! கருத்தாங்கி நிற்கும் என் மங்கையே! பிறக்கும் குழந்தைகள் நமக்கு வேண்டாம். அவைகளை அழித்து விடு. நம் சல்லாபத்திற்கு அவைகள் என்றும் தடையே. இன்னொரு நாளில் திகதி குறித்து உன் அண்டத்தில் என் விந்தணுவை செலுத்துகிறேன். அப்போது பிறக்கும் நம் மகன் என்னையும் மிஞ்சி அகோர சக்திகளின் தலைவனாய் அனைவருக்கும் சொப்பனமாய் திகழ்வான். அவனை பெற்றெடுத்து வம்சம் வளர்க்கலாம் வா! மஞ்சரி! விரைந்து வா! வெளியே வா!” இவனின் இத்தனைக் கத்தலுக்கும் நாட்டின் இலைகூட அசையவில்லை. பெரும் அமைதி, பேரமைதி. அந்த நள்ளிரவை இன்னும் அச்சம் கொள்ளும் மயான அமைதி.

பொறுமையிழந்தவன், இத்தனை நாட்கள் காதலில் திளைத்து, கந்தர்வ மணம் புரிந்த தன் மனத்திற்கினியாளுக்கு, எந்த வாயால் அவளை கண்ணே மணியே அன்பே அமுதே என்று கொஞ்சினானோ அதே வாயால் அவளுக்கு சாபமளிக்க முன்வந்தான். “எத்தனை பிறவி கொண்டாலும் அவள் ஒருவளைத் தவிர வேறுயாரையும் மனதிலும் நினையேன் என்று பிரமாணம் எடுத்துக் கொண்டேன். ஆனால், என்னை காணக் கூட அவள் மறுக்கிறாள். காதல் என்னும் சுழலில் என்னை சிக்கவைத்து சுழலியாகிப் போனவளை எத்தனை பிறப்பு எடுத்தேனும் பழிவாங்காமல் விடமாட்டேன். அவள் எடுக்கும் அனைத்து பிறவிகளிலும் சந்தேகம் என்னும் கண்கொண்டே மற்றவர்களால் மாண்டுபோவாள். அவளின் கருவில் தாங்கி நிற்கும் உயிர்கள் பிண்டங்களாக போகட்டும். என்று என்னை நீ முழு மனதாக ஏற்கிறாயோ அன்றே உனக்கு நிம்மதியான உறக்கம் கிட்டும்” என்றவன், சட்டென மறைந்து போனான். யட்சினித் தவிப்புடன் ஆலயம் நோக்கி சென்றாள்.

நீலா மஞ்சரியை நோக்கி விரைய, வேள்வியில் நின்றுக் கொண்டிருந்தவளின் உதரத்தில் இருந்த இரட்டைக் கரு, கரைந்து உதிரமாய் வெளியேறியது.

“அம்மாஆஆஆஆ” என்ற அலறலோடு மயங்கினாள் மஞ்சரி.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்