Loading

சுழலி-3

பேரன்பு மயங்கி விழுந்ததில் அவன் பிடித்திருந்த பிடி தளர, தன் உயரத்திலிருந்து ஐந்தடி வரை படமெடுத்து நின்றது அது. யாழ்நிலவாவிற்கு பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தான் பிடித்திருந்த அலைபேசியை இறுக்கி பிடித்துக் கொண்டாள். மெதுவாக அவள் நகர முற்பட,

“யாரும், ஒரு அடி அசையாதீங்க. அது நம்மள தான் பாத்துட்டே இருக்கு. அதுக்கு பிரச்சனைன்னு தோணிடுச்சுன்னா கண்டிப்பா யாராயவது சீண்டத்தான் பாக்கும். சோ, அப்டியே நில்லுங்க” என்றாள் அங்கை.

‘ஆத்தாடி, சிவனேன்னு இருந்தவள வீடியோ புடின்னு கூட்டிட்டு வந்துட்டு இப்போ ஆடாத அசையாதன்னு சொல்லிட்டு இருக்காளே.’ உள்ளுக்குள் பயத்தினால் புலம்பிக் கொண்டிருந்தாள் யாழ்.

காற்று வேறு வேகமாக வீசியது. பொதுவாக இராஜநாகங்கள் மனிதர்களை உடனே சீண்டாது. பாம்புகளிலேயே மிகவும் சாதுவானது இது. ஆனால், அளவில் பெரியதாக இருப்பதால் அதனை கண்டவுடன் அனைவரும் பயத்தில் ஏதேனும் செய்து விடுகின்றனர். இதனை மனத்தில் வைத்தே அங்கை அதனை பார்த்துக் கொண்டிருந்தாள். அது நினைத்திருந்தால் இந்நேரம் பேரன்புவை சீண்டியிருக்கலாம். ஆனால், அது இதுவரை ஒன்றும் செய்யாமல் படமெடுத்து மட்டுமே நிற்கிறது. அப்போதுதான் அறிவு ஒரு விசயத்தை கவனித்தான்.

மரத்தின் மேல் இரண்டு சிறிய இராஜநாகங்கள் இவர்களை பார்த்துக் கொண்டிருந்தது.

“அங்கை, அப்டியே மரத்த பாரு, மெதுவா”

பார்த்த அங்கைக்கும் சட்டென்று கிலி பரவியது. இருந்தும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்தாள். “இப்போ மூணயும் பிடிக்கணும்னு அவசியம் இல்ல. முதல்ல பேரன்புவ சேஃப்பா கொண்டு வரணும்”

ஆம், அவனின் கால் பக்கத்தில் தான் மரம் இருந்தது. கை கீழிருக்கும் இராஜநாகத்தின் வால் பக்கம் இருந்தது. அவைகளுக்கு தங்களால் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று உணர்த்த வேண்டும் என்பதில் அங்கை முனைப்பாக இருந்தாள்.

மழை வருவது போல் அந்த இடமே இருட்டிக் கொண்டிருந்தது. காற்றின் இரைச்சல் வேறு ஒரு பக்கம், அது வீசிச் செல்லும் தூசித் துகள்கள் ஒரு பக்கம் என சற்றுத் தடுமாறித்தான் போயினர் அங்கையின் குழு.

முதல் மின்னல் மின்னியது. கூடவே இடியும்.

யாழ், தான் வைத்திருந்த அலைபேசியை கீழே போட்டுவிட்டாள். இடி சத்தத்தில் அது மற்றவர்களுக்கு தெரியவில்லை. ஆனால், சிறிய அசைவையும் உணரும் இராஜநாகத்திற்கு தெரிந்துவிட்டது.

மெதுவாக அதனின் பார்வைக் கோணம் யாழின் பக்கம் திரும்பியது.

இரண்டாவது மின்னல் மின்னியது. மரத்தில் இருந்த இரண்டையும் காணவில்லை. அதனை சரியாகக் கவனித்துவிட்டான் அறிவு.

“அங்கை, மரத்துல இருந்த ரெண்டயும் காணோம்”

அங்கையின் கவனம் மரத்தை நோக்கி செல்ல, பாம்பின் கவனம் யாழிடம் நிலைத்தது. அது தன்னைத்தான் பார்க்கிறது என்பதை உணர்ந்த யாழ், ஒரு அடியை பின்னே எடுத்து வைத்தாள்.

“யாழ், அசையாத.” அறிவு ஒருபக்கம் சொல்லிக் கொண்டிருந்தான்.

ஆனால், அதனை செவியில் யாழ் வாங்கவில்லை. அவளுக்கு பயபந்து உருண்டு தொண்டைக்குழியில் நின்றது. அவள் ஓடத் தயாராக நின்றாள்.

இராஜநாகம் தனது நாவை இரண்டு முறை வெளியே நீட்டியது. அங்கையும் அறிவும் தயாராய் இருந்தனர். அது தீண்டபோகிறது என்பதை அங்கை உணர்ந்துவிட்டாள்.

“யாழ், எதுவும் நடக்காது. பயப்படாம இரு. பயப்படுறப்போ உன்னோட பாடி டெம்ப்ரச்சேர் மாறும். அத இன்னும் ஈசியா அதுனால அப்சர்வ் பண்ண முடியும்.”

யாழ் பயத்தில் உறைந்துவிட்டாள். அவளுக்கு சுற்றி நடப்பது எதுவும் தெரியவில்லை. எதையும் உணரவும் முடியவில்லை. எதிரில் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் இராஜநாகம் மட்டுமே கண்களுக்கு தெரிகிறது. அதனிடம் இருந்து தப்பிக்க ‘ஓடு’ என மூளை கட்டளையிட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், ஓடினால் துரத்தும் என்று உணர்ந்த இதயம் தனது வேகத்தைக் கூட்டுகிறது. ஒரு நிமிடம் ஒரு யுகமாக நீள்வதுபோல் ஒரு பிரம்மை யாழுக்கு.

இராஜநாகத்தின் முழு கவனமும் தற்போது யாழின் மீதுதான் என்றுணர்ந்த அங்கை, அதை பிடிக்கும் முயற்சியில் இறங்கினாள்.

இராஜநாகத்தின் பளிங்கு கண்கள் யாழை வேறொரு நிலைக்கு அழைத்துச் செல்கிறது. அவளை ஓட மூளை கட்டளையிடுவது தெரிகிறது. ஆனால், அவளின் கால்கள் அசைய மறுக்கின்றன.

யாழ் அடுத்த அடி எடுத்து வைத்ததும், இராஜநாகம் அவளைத் தாக்க முன்னே செல்ல, அதன் வாலை இலாவகமாகப் பிடித்து விட்டாள் அங்கை. தற்போது அங்கையை பார்த்து பலமாக சீறியது.

யாழ் நிலா எதிலிருந்தோ விடுபட்டதுபோல் சட்டென்று சுயநினைவு வந்தவள் அந்த இடத்திலேயே பொத்தென்று அமர்ந்துவிட்டாள்.

அறிவிற்கு தற்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. மரத்திலிருந்து இறங்கிய மற்ற இரண்டையும் தேடுவதா? யாழை பார்ப்பதா? காணொளி எடுப்பதா? அங்கைக்கு உதவி செய்வதா? என்ற வினாக்களின் புதிரில் சிக்கிக் கொண்டான்.

அங்கையின் கையை தனது வாலால் சுற்றிய இராஜநாகம் அவள் கையை பிடிமானமாகக் கொண்டு அவளிடம் நெருங்கப் பார்த்தது. அதன் முயற்சிகள் அனைத்தையும் சாதூர்யமாக சமாளித்தவள், பாம்பு பிடிக்கும் பிடி கருவி மூலம் அதன் தலையை சரியாக பிடித்தாள்.

மூன்றாவது முறை மின்னலும் இடியும். ஒவ்வொரு முறை மின்னல் வெட்டும் போதும் அறிவிற்கு பயம் உண்டானது. இதுவரை இந்த மாதிரி சூழ்நிலையில் பாம்பை பிடித்தது இல்லை.

“அறிவு, வீடியோ எடு. நீங்க ரெண்டு பேரும் அன்பயும் யாழயும் கூட்டிட்டு போங்க. பத்திரம், மத்த ரெண்டும் எங்க இருக்குன்னு தெரியாது. ஜாக்கிரதயா போங்க.” என்று அனுப்பி வைத்தவள், இராஜநாகத்தின் தலையை பிடிக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தாள். அந்த கைப்பிடியின் அழுத்தத்தை சிறிதாக விலக்கினாலும் அது சீறத்தான் முயற்சிக்கிறது. அதன் வாலின் இறுக்கம் வேறு அங்கைக்கு ஒருபக்கம் வலியினை உண்டாக்க அருகிலிருந்த கருப்புப் பையின் அருகே கொண்டு செல்வது அங்கைக்கு பெரிதும் சவாலான காரியமாகத்தான் இருந்தது.

யாழையும் பேரன்புவையும் அங்கிருந்து அழைத்து ஜீப் இருக்கும் பக்கம் கொண்டு சென்றுவிட்டனர். யாழ் பயத்தில் அப்படியே அமர்ந்து இருந்தாள். பேரன்புவிற்கு தண்ணீர் தெளிக்கப்பட்டது. இரண்டு முறை நீரை முகத்தில் அடித்து கன்னத்தை தட்டிய பிறகே இலேசாய் கண் விழித்தான் பேரன்பு. பிறகு, அவனுக்கு குடிக்க நீரை கொடுக்க, அமைதியாக அதனை வாங்கிக் குடித்தவனின் இதயம் அளவுக்கு மீறி துடித்தது. இன்னும் அந்த பளிங்கு கண்கள் தன்னை மயக்குவது போன்ற மாய உணர்வு அவனுக்குள்.

நான்காவது முறை மின்னல் வெட்ட, அவர்கள் அருகில் இருந்த மரத்தின் மேல் அந்த மின்னல் விழுந்தது. சட்டென்று அந்த மரம் தகதகவென தீப்பிடிக்க ஆரம்பித்தது. அங்கையும் அறிவும் ஒரு நொடி கவனம் சிதறிட, இராஜநாகம் அங்கையின் கையில் இருந்து நழுவியது. அதிவேகத்தில் மரத்தின் அருகில் சென்ற அது, அங்கிருக்கும் தன் கூட்டில் இன்னும் வெளிவராத தன் பிள்ளைகள் இருக்கும் முட்டைகளை அப்படியே விழுங்கியது. மரத்தின் பின்னால் இருந்த புதரில் இருந்து மற்ற இரண்டு குட்டி இராஜநாகங்களும் வந்தன.

மரத்தில் பற்றியிருந்த தீயினால் உண்டான வெளிச்சத்தில் நடந்த அனைத்தையும் கண் கூடாக பார்த்துக் கொண்டிருந்தனர் அங்கையும் அறிவும்.

அவர்களை தீண்டும் எண்ணத்தில் அது இல்லை போலும், தன் சந்ததிகளை காக்கும் முயற்சியில் முதலில் அங்கிருந்து சென்றது. பின்னாடியே சென்ற இரு குட்டிகளில் ஒன்று நின்று திரும்பி அங்கையை பார்த்து சீறி விட்டு சென்றது.

“அங்கை, அதுங்க எங்க போகுது? வா ஃபாலோ பண்ணலாம்”

“இல்ல அறிவு. எனக்கு இது சரியாபடல. ஃபாலோ பண்ண வேண்டாம். விடிஞ்சதும் அகைன் ப்ரின்சிபல் கிட்ட கேட்டு ஒரு தடவ தேடிப் பாக்கலாம். முதல்ல பிடிச்ச அந்த ஓலப்பாம்ப கொண்டு போய் காட்டுல விடணும். அவங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சுன்னு தெரியல.”

“சரி அங்கை. ஆனா, லாஸ்ட்டா ஒன்னு கவனிச்சியா அந்த குட்டி பாம்பு நின்னு சீறிட்டு போச்சு”

“ம்ம்…” என்றவளுக்கு மனம் முழுக்க ஆயிரம் கேள்விகள்.

நடந்தவைகள் எல்லாம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. சாதாரணமாக பாம்பு என்றால் முதலில் சீண்டத்தான் வரும். அதனை பொறுமையாக கையாண்டாலும் சில நேரங்களில் படமெடுத்துவிட்டால் கொத்தியே தீரும் என்ற அளவுக்கு அதற்கு நஞ்சு, பற்களில் உற்பத்தியாகிவிடும். ஆனால், இத்தனை களேபரத்திலும் மூன்று இராஜநாகங்களும் அங்கிருந்து சென்றது இவளுக்கு ஆச்சர்யமாகவும் அதே சமயம் பயமாகவும்தான் இருந்தது.

இருவரும் ஜீப்பிற்கு வந்தனர். யாழும் பேரன்புவும் அமர்ந்து இருக்க, அவர்களுக்கு அருகில் அங்கையின் குழுவைச் சேர்ந்த மற்ற இருவரும் நின்றிருந்தனர்.

“இப்போ எப்டி இருக்கு?” இருவரையும் பார்த்துக் கேட்டாள் அங்கை.

“எனக்கு ஓகே. பட், இப்போ கூட கொஞ்சம் பதட்டமா இருக்கு. யாழ்தான் இன்னும் தெளியல.” என்றான் பேரன்பு.

அங்கைக்கு குற்றவுணர்ச்சியாக இருந்தது. தான் இதில் அவளை இழுத்துவிடாமல் இருந்திருந்தால் இந்நேரம் வீட்டில் அமைதியாக இருந்திருப்பாள் என்றே எண்ணினாள்.

“யாழ்…” மெதுவாக அவளின் தோளைத் தொட்டாள் அங்கையற்கண்ணி.

அவளின் கண்கள் அங்கு சூழ்ந்திருந்த இருளையே வெறித்து இருந்தது. இரண்டு முறை அழைத்தும் பதில் தராது அமர்ந்திருந்தாள் யாழ்நிலா.

“அறிவு, வண்டிய எடு. உடனே கிளம்பணும்.” என்று அங்கை துரிதப்படுத்தியதில் அறிவு வண்டியை இயக்கினான். ஆறு பேரும் புறப்பட்டனர். அந்த கல்லூரியில் இருந்து ஜீப் வெளியே வந்ததும், வண்டி சென்ற திசையின் எதிர்திசையில் உள்ள ஜருகுமலையை நோக்கி அந்த மூன்று இராஜநாகங்களும் ஊர்ந்து சென்றுக் கொண்டிருந்தன.

“அறிவு, அன்புவ வீட்ல விட்டுட்டு நீயும் இவங்களும் போய் இத ரேஞ்சர்கிட்ட கொடுத்துடுங்க. நானும் யாழ் கூட வீட்டுக்கு போறேன்”

அறிவும் சரியென்று அங்கையையும் யாழையும் அவர்கள் இல்லத்தில் இறக்கிவிட்டான்.

மணி இரவு எட்டாகியிருந்தது.

அங்கையின் தந்தை சாரதி கூடத்தில் அமர்ந்து செய்தியை பார்த்துக் கொண்டிருந்தார். சமையலறையில் வீட்டின் தலைவி கற்பகம் இரவுக்கு உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்.

வெளியில் வண்டி சத்தம் கேட்டதும் சாரதி எட்டிப் பார்க்க, தங்கையை அரவணைத்தவாறு உள்ளே நுழைந்தாள் அங்கை.

“கற்பகம், இங்க வா” என்று உள்ளுக்குள் குரல் கொடுத்தவர், “நிலாம்மா என்ன ஆச்சு?” என்று மகளின் அருகில் வந்தார்.

கற்பகமும் வர, “இவ காலேஜ்லதான்மா இன்னைக்கு பாம்பு வந்துடுச்சு. அதுவும் இவ கால் மேல தான் ஏறி போயிருக்கு. அதுல ரொம்ப பயந்துட்டா.” தந்தை கேட்ட கேள்விக்கு தாயிடம் பதிலளித்தாள்.

சாரதியும் அங்கையும் ஒருவருக்கொருவர் நேருக்குநேராக பேசிக் கொண்டு வருடமாகிவிட்டது.

“என்னடி சொல்ற? நிலா, ஒன்னுமில்ல. வா, வந்து உட்காரு.” என்று சிறியவளை அமர வைத்தவர், “என்ன பாம்பு அங்கை?” கணவருக்கு தெரியாமல் மெதுவாக பெரியவளிடம் விசாரித்தார்.

“ஓலப்பாம்புதான்மா. இவ பயந்துட்டா” பின்பாதியை தவிர்த்து முன்பாதியை மட்டும் சொன்னாள். இராஜநாகம் என்று மட்டும் சொல்லியிருந்தாள், அன்னை ஒருபக்கம் பயந்திருப்பார். தந்தை ஒருபக்கம் கத்தியிருப்பார். அதனால், பாதியை மறைத்துவிட்டாள். அவளுக்கும் இன்னும் உள்ளுக்குள் சிறிய உதறல் இருந்தது. தனக்கே நடந்த விசயத்திற்கு விடை தெரியாதபோது இதனையும் சொன்னால், தேவையில்லாத சண்டைதான் வரும் என்று தவிர்த்துவிட்டாள்.

கிளம்பியதிலிருந்து யாழ் அங்கையின் கையை விடவில்லை. இன்னும் அவளின் கையை இறுக்கமாகப் பிடித்திருந்தாள்.

“சரி, வா நிலா. தூங்கி எழுந்தா எல்லாம் சரியாகிடும்” என்றவர் அவளுக்கு திருநீறு இட்டார்.

அப்போதும் அங்கையின் கையை அவள் விடவில்லை.

அதனை கவனித்தவர், “நீயே அவள ரூமுக்கு கூட்டிட்டு போ அங்கை” என்று அனுப்பி வைத்தார்.

நடந்த அனைத்தையும் வெறும் பார்வையாளராகவே பார்த்துக் கொண்டிருந்தார் சாரதி. உள்ளுக்குள் இரண்டு மகள்கள் பற்றியும் பயம் அதிகமாகியது. குறிப்பாக அங்கையை பற்றிய பயம்.

‘பெண் பிள்ளைக்கு இதெல்லாம் தேவையா?’ என்று ஆரம்பித்த அவரின் மறுப்பு, தற்போது அனுதினமும் அவளுக்கு ஏதும் ஆகிடக் கூடாது என்ற பயத்தில் வந்து நிற்கிறது. காரணமில்லாமல் சாரதியின் மனம் பயப்படவில்லை. இந்த விசயத்தால்தான் தனது நண்பரை இழந்தவர் தற்போது மகளையும் இழக்கக் கூடாது என்று தற்போதுவரை அவளிடம் வாதம் செய்துக் கொண்டிருக்கிறார் தந்தையானவர்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
15
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. அடேய் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கு அது அந்த குட்டி பாம்பு நின்னு சீறிட்டு போறத படிக்கிறப்ப ப்பா அப்படியே அல்லு விடுது