சுழலி-29
வஞ்சனின் ஒரு துளி இரத்தம் வனக்காட்டில் சிதறிட, கொதித்தெழுந்தாள் வனதேவதை.
மரங்கள் வேரோடு பெயர்ந்து விழும் அளவிற்கு காற்று ஆங்காரமாக வீசியது.
அமைதியின் சொரூபமாய் திகழ்ந்த வனதேவதை உக்கிரகாளியாக காட்டையே உலுக்கி எடுத்தாள். மண்துகளும் சூறாவளியாய் மாறிட, கருவிழிகள் முழுதும் ஆக்கிரமித்து தோன்றினாள் வனக்காளியானவள்.
வஞ்சன் தனது இறுதி நொடிகளில் இருக்க, காளிங்கனோ அதிர்ச்சியின் உச்சத்தில் நின்றான்.
அவனின் அருகில் சூடான மூச்சுக்காற்று வீசிட, அதன் வெப்பம் தாளாது சுருண்டான் காளிங்கன் என்னும் கருநாகம்.
“இயற்கையே இறை என்றுக் கொண்டு, இயற்கையோடு இணைந்து இயைந்து வாழ்ந்துவரும் இந்த வனக்காட்டில் வேட்டைக்கு என்று கூட இதுவரை எந்த உயிர்களின் உதிரமும் சிந்தியது இல்லை. ஆனால், இப்போது ம்ம்ம்ம்…. ஆர்ர்ர்… மக்களின் நலன்கருதி அவர்களின் நலம் காக்க வந்த மாசற்ற மனிதனின் செங்குருதியை, தீய எண்ணம் கொண்ட நீ, தீண்டி மாபெரும் தவறிழைத்துவிட்டாய். ம்ம்ம்… காளிங்கா, இந்த வனத்தின் புனிதத்தை குழைத்துவிட்டாய். ஆஆஆஆ….”
“எந்த சாபத்திலிருந்து விமோச்சனம் பெற்று, உன் துணையோடு கூட நினைத்தாயோ, அது இனி வெறும் நினைவாகவே போகட்டும். காளிங்கா! இனி உன்னால் மனித உருவே எடுக்கவியலாது என்று சாபமளிக்கிறேன். இந்த நிமிடம் முதல், வனக்காட்டின் எல்லைக்குள் தீய எண்ணங்களோடு எவரும் நுழைய முடியாது. பின்வரும் காலத்தில் நின் காரியத்தை சாதித்திட என் எல்லைக்குள் வர நேரிடும். அந்த நொடி என் எல்லையில் கால் வைக்கும் அந்நொடி உன் தலை வெடித்து சிதறிடும் என்றும் சாபமளிக்கிறேன்.” சாபம் பெற்ற நொடி காளிங்கனால் வனக்காட்டில் இருக்க முடியவில்லை.
வனக்காளியின் சக்தியால் வனக்காட்டிலிருந்து தூக்கியெறியப்பட்டான்.
இன்னும் காற்றின் ஆங்காரம் குறையவில்லை. வஞ்சன் தன்னுடைய கடைசி நிமிடங்களில் இருந்தான்.
காளிங்கன் என்னதான் மனிதனாய் பிறந்து நாகமாய் மாறியவனானாலும் அவன் மாறிய நொடி தேவநாகவேடர் குலத்தின் சக்திகளை நாகத்திற்கே உரிய நஞ்சையும் பெற்றேயிருந்தான். ஆகவே, அவன் தீண்டிய கணமே கருநாகத்தின் நஞ்சு வஞ்சனின் உதிரத்தில் கலந்துதான் விட்டது.
உடல் நீலமாய் மாறிக்கொண்டிருந்தது.
அவனின் நிலைக்கண்ட காளியும் தன் உக்கிரத்தைக் குறைத்தாள். காளியே ஆனாலும் தாய்மை நெஞ்சம் கொண்ட அன்னைத் தெய்வமவள். வனத்தில் இருக்கும் அத்தனை உயிர்களுக்கும் தாயாய் விளங்கும் சக்தி ரூபணி, வஞ்சனை சேயாய் தாங்கினாள்.
“கவலைக்கொள்ளாதே வஞ்சா! உன் புண்ணிய பலனால் இப்போது உன் உயிர் பிரியும் நேரம் இதுவல்ல.” என்றவள் அவனின் தலையைக் கோதிவிட, இத்தனை நேரம் ஆர்ப்பாட்டமாய் துடித்த அவனின் இதயம் அமைதியடைந்தது. அலைபாய்ந்த அவனின் கருவிழிகள் மெதுவாய் மூடின.
பிறந்து ஐந்தே நாளான ஒரு சிம்ம யாளி நஞ்சு முறிவு மூலிகையை எடுத்துக் கொண்டு வந்தது. கருவுற்றிருந்த மலைப்பாம்பு வனதேவதையின் தூதிற்காக வரவைக்கப்பட்டது.
“உன் விதி முடிய இன்னும் நேரமிருக்கிறது மகனே! கரம் பிடித்தும் சுகம் காணாது நாட்டு மக்களின் நிலையே முக்கியம் என்று இத்தனை தூரம் நீ துடித்துக் கொண்டிருக்கிறாய். கவலைக் கொள்ளாதே! உன் பணிகளை தன் பணிகளாய் மாற்றிட வருவான் உன் ஆருயிர் தோழன். அவனே உன் இறுதி நொடிக்கும் வழியாய் அமைவான். உன் மனைவி கருவுற்று இருக்கிறாள். உன் மகனே பிற்காலத்தில் உன்னை வழிநடத்தி இங்கு அழைத்து வருவான்.” என்று பேசிக்கொண்டே சிம்ம யாளி கொணர்ந்து வந்த நஞ்சு முறிவை வஞ்சனுக்கு உட்செலுத்தினான். ஆனாலும், நேரம் கடந்தமையால் முறிவு வேலை செய்யவில்லை. அதனை அறிந்த வனதேவதையோ துடித்துப் போனாள்.
“மலைவாணியே! உடனே தேவனாகவேடர் குலத்தலைவனிடம் நிகழ்ந்தவைகளை கூறி அழைத்து வா… என்றவள், அந்தோ, வேலவா! என் பூமிதனில் இதுவரை எந்த உயிரையும் நான் மடிய விட்டது இல்லையே! புண்ணியபலன்கள் இருந்தும் இவனின் உயிரை காப்பாற்ற முடியா பாவியாகி போனேனே. இன்னும் இவனின் விதி முடியவில்லை. பிறகு ஏன், உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. பதில் கூறுங்கள் இறைவா!” வனதேவதையின் ஆங்காரக் கதறல் காட்டையே அதிர வைத்தது.
பஞ்சபூதங்களின் வசத்தையும் தன்னுள்ளே கொண்டிருந்தாலும் தவமிருக்க இவ்வனக்காட்டிற்கு வந்த சாதாரண மனிதிதான் இந்த வனதேவதை. இயற்கையின் அருளால் இங்கேயே ஜீவசமாதி அடைந்தவள், இதுவரை எந்த உயிரையும் அவளிருப்பிடத்தில் நீங்கவிட்டதில்லை. ஆனால், தற்போது அவளின் கையறுநிலையை என்னவென்று உரைப்பாள் பாவையவள்.
அப்போதுதான் ஒரு அசீரிரி ஒலித்தது. “உயிருள்ள ஒவ்வொரு பிறப்பும், மரணம் எய்தும் நிலை வரத்தான் செய்யும். அனைத்து உயிர்களின்மீதும் அன்பை கருணையின் தாயாய் அரவணைக்கும் நீ அறியாதது ஒன்றுமில்லை. வஞ்சன் உயிர் இங்கு பிரியாது. அவனை வனக்காட்டின் எல்லையை ஒட்டிய குன்றிற்கு அருகில் அழைத்து செல். செல்வங்கள் மக்களிடம் சேர்ப்பிக்கவும், இவனின் கடைசி நிமிடத்தை சாந்தமாக்கவும் அவன் வருவான். அதுவரை இவனின் உயிர் பிரியாது. என்னிடம் நீ பெற்ற வரத்தின்படி இனி எந்த உதிரமும் வனக்காட்டில் உதிராது. தூய்மையின் மறு இடமாய் இந்த வனக்காடு விளங்கட்டும்” என்றது.
கண்ணீர்மல்க கைதொழுதவள், வனக்காட்டின் எல்லை குன்றில் படுக்க வைத்தாள் வஞ்சனை. அப்போது அவன்வசம் இருந்த சிவன்காப்பு கழன்று அங்கிருந்த ஓடைநீரோடு மறைந்தும் போனது.
….
மாரிவெண்கோ ஏவிய படைகள் பொதிய மலைக்கும் கல்வராயன் மலைக்கும் செல்ல ஆயுத்தமாகிக் கொண்டிருந்தது. அவர்களின் பயணத்தை தாமதம் செய்ய, யட்சினி மலைவாசி மற்றும் வனவாசி மக்கள்களின் பிம்பத்தை உண்டாக்கினாள். ஒரு ஐநூறு சனங்கள் ஒட்டுமொத்தமாய் அரண்மனை வாயிலை மறைத்தபடி நின்றனர்.
அவர்களை வழிமறித்த வாயிற்காவலர்கள், “யாரப்பா நீங்கள்? இந்த நேரத்தில் இத்தனை பேர் வந்திருக்கிறீர்கள்.?”
“இன்னும் சிறிது நேரத்தில் முழுநிலவு உச்சம் அடைந்துவிடும். அதற்குள் விரைந்து வீரர்கள் பயணம் செய்ய வேண்டும் என்பது முதன்மையமைச்சரின் உத்தரவு. இப்போது இத்தனை மக்கள் வந்திருப்பதன் நோக்கம் என்னவோ?” இரு வீரர்கள் அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்க, ஒயிலாய், நளினமாய் அந்த கூட்டத்தை விலக்கி தன் மேனி பளபளப்பில் பார்ப்பவர்களை மயக்கியவண்ணம் வந்து நின்றாள் யட்சினி.
“கும்புடுறேனுங்க ஐயா! மஞ்சரியம்மா சேதி அனுப்பியிருந்தாங்க. ஊரு எல்ல முழுக்க காவச்சாமிங்கள ஆவகானம் செஞ்சிப்புட்டோமுங்க. அத சொல்லிப்போட்டு ராவுக்கு ஆரம்பிக்குற ஆலய பூசைல கலந்துக்குலாமுன்னு மலவாசி சனங்களும் வனவாசி சனங்களும் வந்துருக்கோமுங்க ஐயா! என்னங்க ஐயா சரிதானுங்களே” என்று அவளின் கொஞ்சும் கொங்கு தமிழை வீரர்கள் வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருக்க, மலைவாசி மற்றும் வனவாசி மக்களின் தலைவர்கள் இருவரும் முன்னே வந்து நின்று தலையை அசைத்தனர்.
அவளின் அழகில் மயங்கியவர்கள், ஏதும் பேசாது உள்ளே செல்ல அனுமதியளிக்க, மண்டபத்து வீரர்கள் அவர்களை அங்கே தங்க வைத்தனர். அனைவரையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாள் யட்சினி. இன்னும் சிறிது நேரம் அனைவரையும் சமாளிக்கலாம். முழுநிலவு உச்சம் அடையும்வேளை வேள்வியின் தாக்கம் அதிகரிக்கும். அப்போது மந்திரங்களின் எதிரொலி அவளை நிலையாக இருக்கவிடாது. அதற்குள் செந்தூரன் இங்கு வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
….
ஆலயத்தில், வேள்விக்கான ஏற்பாடுகள் துவங்கிட செவ்வேலன் அவனின் மனைவிகளோடு அங்கு வந்தான்.
மஞ்சரியை வணங்கியவன், “பணிவான வணக்கங்கள் தேவி. இவர்கள் இருவரும் என் மனைவிகள். இவள் செங்கொடி, இவள் மணிக்கொடி. செங்கொடி தற்போது கருவைத்தாங்கி இருக்கிறாள் தேவி.”
“அடடே! நல்ல சேதி செவ்வேலன் அவர்களே! மூவருமாய் வேள்வியில் அமர்ந்து வேள்வியை துவக்கி வையுங்கள்” என்றாள்.
ஒருகணம் சிலையாகிப் போனான் செவ்வேலன். “தேவி, நான் எப்படி?” அவன் தடுமாற,
“செவ்வேலன் அவர்களே! எது நடந்தாலும் நீலா என் தோழியல்லவா! அவளின் சகோதரன் எனக்கும் சகோதரன் அல்லவா? இச்சமயத்தில் என்னாலும் அரசியாராலும் எங்களின் துணைவர்கள் இல்லாமல் வேள்வியில் அமர இயலாது. என்னைப் பொறுத்தவரை நம் நாட்டின் நலனை கருத்தில்கொண்டு நம்பும் மனிதராய் என் கண்முன்னே இருக்கும் ஒரே நபர் நீங்கள் ஒருவரே. சகோதரியாய் தங்களிடம் வேண்டுகிறேன், நாட்டின் நிலைக்காகவும் நலனிற்காகவும் மூவரும் இணைந்து வேள்வியைத் துவக்கி வையுங்கள்” என்றாள் மஞ்சரிதேவி.
செவ்வேலனையும் சேர்த்து, மற்ற அனைவரின் முகத்திலும் பெரும் அதிர்ச்சி. பல சிற்றரசர்கள் இருக்கையில், ஒரு வீரனை, சேடிப்பெண்ணின் சகோதரனை எப்படி தம்பதிசமேதராய் வேள்வியில் நிறுத்தலாம்? என்ற கேள்வி எழாமல் இல்லை.
“இந்த வேள்வி மற்றும் குடமுழுக்கிற்கான பணியின் பொறுப்பை மன்னர் என்னிடம் ஒப்படைத்துள்ளார். ஆகவே, முடிவெடுக்கும் உரிமையும் என்னிடம் உள்ளது என்று எண்ணுகிறேன். செவ்வேலன் அவர்கள் சாதாரண வீரர் மட்டுமல்ல, என் மெய்க்காப்பளரும் கூட. எனவே, இந்த வேள்வியை அவரே துவக்கி வைக்க வேண்டும் என்பதில் யாருக்கேனும் மாற்றுக்கருத்து உண்டோ?” மங்கையவளின் கேள்விக்கு யாருக்கும் பதில் கூற துணிவு எழவில்லை.
செவ்வேலன் தன் இரு மனைவிகளோடு அமர்ந்து வேள்வியை தொடங்கினான்.
தன்னிடம் பெரிய பொறுப்பு ஒப்படைத்துள்ளதாக அவனின் மனம் புளாங்காகிதம் கொண்டது.
வேள்விகள் துவங்க, மங்கல வாத்தியங்களின் சப்தங்கள் விண்ணைப் பிளந்தது.
ஒவ்வொரு முறை ஒலிக்கும் பறைச்சத்தம் காதை கிழிக்க, எல்லைக் காவல் தெய்வங்கள் உக்கிரமெடுத்து சிலிர்த்து நின்றன.
பெரிய மீசையும், கையில் வீற்றிருக்கும் வானுயர்ந்த வீச்சருவாளும் எதிரிகளை காவு வாங்க காத்திருப்பது போல்தான் தோன்றியது.
இனி எல்லாம் அவனின் செயல் என ஈசனை நோக்கி வணங்கினாள் செந்தூரனின் மஞ்சரி தேவி.
….
பொதிய மலைச்சரிவிலிருந்து வந்துக் கொண்டிருந்தனர் செந்தூரனும் நீலாவும் உடன் சிறையிலடைப்பட்ட கேசரும். மிச்சமிருந்த வீரர்கள் என்னவானார்கள் என்பது பற்றி செந்தூரனிற்கு கவலை இல்லை. கமண்டல நீரோடு எப்படியாவது அரண்மனைக்கு சென்றிட வேண்டும் என்பது மட்டுமே அவனின் எண்ணமாக இருந்தது.
வானம் இருட்டிக்கொண்டு வந்தது. இன்னும் சற்று நேரத்தில் மழை வரவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்த நீலா அதனை செந்தூரனிடம் சொன்னாள்.
“இன்னும் சற்று நேரத்தில் மாரி பெய்யும். விரைந்து அரண்மனை செல்ல வேண்டும்”
அவனும் அதை அறிந்தே இருந்தான். வானம் இருட்டும்சமயம் மனத்தின் உந்துலால் தாமாகவே தலை வானை நோக்கும். நோக்கிவிட்டான் செந்தூரன்.
காத்திருந்த ஏவல், சமயத்தை பயன்படுத்திக்கொண்டு அவனின் விழி வழியாக வலியோடு மெய்யை அடைந்தது.
செந்தூரனின் ஆன்மா ஆட்டம் கண்டது இங்கே!
கேசரின் கண்களில் வெறியே மிஞ்சியிருந்தது. “செந்தூரா! இனி நீ உன் கட்டுப்பாட்டை இழப்பாய். கமண்டல நீரை என்னிடம் கொடு” ஒரு செவி அவனின் சொல்லை ஏற்க, மறு செவியோ அதனை மறுத்தது. ஒரு கை நீரை கொடுக்க முனைய, மறுகை அவனை தடுத்தது. தன் கையே தன் கண்ணை குத்தும் என்பதற்கு ஏற்ப அவனின் புலன்கள் அடங்கியும் அடங்க மறுத்தும் போராடிக் கொண்டிருந்தது.
இதனையெல்லாம் கண்ணுற பார்த்த நீலா, பாய்ந்து சென்று செந்தூரனின் உடலை இறுக்கினாள். அவளின் இறுக்கத்தால் செந்தூரனின் ஆன்மாவும் ஏவலும் மாறி மாறி கூவலுற்று வலியல் தவித்தன. கிடைத்த சந்தர்ப்பத்தை வீணாக்க தவறவில்லை செந்தூரன்.
“நீலா! அரண்மனை செல்லும் வரை, என் உடலிலும் மனத்திலும் எந்த மாற்றமும் நிகழக் கூடாது. ஏவல் என்னை ஆக்கிரமித்திட விடாதே. உடனே கேசரை கொன்றுவிடு. விரைந்து என்னை அரண்மனைக்கு அழைத்து செல்” என்று உத்தரவிட்டான்.
செந்தூரனின் உடல் இரு சக்திகளை தாங்க முடியாமல் அவதியுற்றது. அவனின் சொல்லுக்கேற்ப, கேசரை தீண்டிக் கொன்றாள் நீலா. மனித உருவெடுத்து புரவியில் அமர்ந்தவள், வேகம் கொண்டு அரண்மனை நோக்கி விரைந்தாள் புயலாக.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
5
+1
+1