Loading

சுழலி-28

பொதிய மலை.

கொங்கிளக்கேசர் செந்தூரனின் கட்டுக்குள் இருந்தார். அவரின் மனதில் எப்படியாவது தப்பித்து செல்ல வேண்டும் என்றுதான் இருந்தது. அப்போது அகோரிகள் சொன்னதுதான் நினைவிலாடியது.

‘கேசரே! சிறு பிழை நிகழ்ந்தாலும் செந்தூரன் கை ஓங்கிவிடும். ஆகவே, ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். சித்தமுனியின் கலசநீர் எங்கள் கைகளில் கிடைத்தால் அதன் மூலம் நீங்கள் கொங்கு நாட்டை மட்டுமல்ல, இந்த உலகையே ஆளலாம். அதனை எப்படியாவது கைப்பற்றிடுங்கள். இதில் ஏதாவது தவறு நடக்கும் பட்சத்தில், இன்னுமொரு உபாயத்தை சொல்கிறோம். செந்தூரனின் விதிக்கணக்கின்படி, முழுநிலவு தொடங்கி உச்சமடையும் சமயம் அவனின் புண்ணிய பலன்கள் அவனைவிட்டு சென்றிருக்கும். சிவன்காப்பும் உடனிருக்காது. எப்படியாது அவனை ஒரு நிமிடம் சுயமிழக்க செய்து நாங்கள் சொல்லும் இம்மந்திரத்தை ஓதிடுங்கள். பின், அவனின் உடல் ஏவலின் வசிப்பிடம். அதன்பிறகு யார் நினைத்தாலும் செந்தூரன் நமது கட்டுக்குள்தான். அவன் உடலும் உயிரும் நமக்கு அவசியம். அவனின் கட்டுக்குள் இருக்கும் யட்சிணியும் நம் கைவசம்’

‘அகோரிகள் கூற்றின்படி எப்படியாது அந்த கலசநீரை கைப்பற்றிட வேண்டும். அதற்குமுன் செந்தூரனை நிலைகுலைய செய்ய வேண்டும்’ என்று எண்ணிய கேசர் அதற்கான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்தான்.

செந்தூரன் “நீலா, உடனடியாக அனைவரும் புறப்படுங்கள். இருட்டுவதற்குள் கோட்டைக்குள் சென்றிருக்க வேண்டும். பயணம் தயாராகட்டும். காளிங்கா, நீ கல்வராயன் மலைக்கு வஞ்சனுக்கு துணையாகச் செல். மன்னரை எந்த ஆபத்தும் நெருங்காமல் பார்த்துக் கொள்” என்று வேலைகளை முடுக்கிவிட்டவன், இதன்பின் சமாளித்துவிடலாம் என்றே எண்ணியிருந்தான்.

மனிதனின் மனக்கணக்கு அனைத்தும் நிறைவேறிவிடுமா என்ன?

அனைவரும் புறப்பட தயாராக, முழுநிலவு நேரம் துவங்க ஆரம்பித்தது. அந்நாள்படி மதியத்திலிருந்து முழுநிலவு நேரம் என்று முன்னரே அகோரிகள் கேசருக்கு அறிவுறுத்தியிருந்தார்கள். அந்த சமயம் வந்ததும்தான் செந்தூரன் பலமிழப்பான். விதியின் விளையாட்டு ஆரம்பம் ஆகியது. நீலாவால் ஏவல் சக்திகளை இனம்காண இயலவில்லை. அவள் ஒரு கட்டுக்குள் இருந்தாள். ஆகவே, கமண்டல நீரை வைத்திருக்கும் செந்தூரனை பல அருவங்கள் சுற்றி வந்தன. சிவன் காப்பு இல்லாததும், தன்னுடைய புண்ணிய பலன்களை அவன் மக்களுக்காக தாரை வார்த்ததும் அருவங்களை அவன் காண இயலா சூழ்நிலையை உருவாக்கியிருந்தன. இதில், சித்தமுனியின் பேச்சைமீறி நீரை கேசருக்கு கொடுத்தது பெரிய இன்னல்களுக்கு வழிவகுத்து இருக்கிறது. அதற்கு நாமே காரணகர்த்தாவாக இருக்கப் போகிறோம் என்று அறியாது பயணத்தை தொடர்ந்தான் செந்தூரன்.

முழுநிலவு தொடங்கியது. “செந்தூரா! என்னை அடைத்துவிட்டால் எல்லாம் நின்றுவிடும் என்று நினைத்தாயா? உன்னைப்போல் திட்டமிடாமல் நான் காரியத்தில் இறங்கமாட்டேனடா. சிறுபிள்ளைப்போல் இருக்கும் ஒரு நாகவசியக்காப்பை வைத்துக்கொண்டு ஆட்டம் ஆடாதே. நீ கோட்டைக்குள் செல்;லும்முன் அங்கு செம்பியன் அரியணை ஏறியிருப்பான் செந்தூரா” என்று இடிஇடியென நகைத்தான் கடுங்கோ கொங்கிளக்கேசர்.

இதனைக் கேட்டதும் ஒரு நிமிடம் செந்தூரன் சுயமிழந்துதான் போனான். அதற்குள் கேசர் மந்திரத்தை மனத்திற்குள் சொல்ல, ஒரு ஏவல் செந்தூரனின் தலைமேல் சுற்றியது. செந்தூரனின் கண் மட்டும் ஒருநொடி மேலே பார்த்துவிட்டால் அந்த ஏவல் அவனின் உடலுக்குள் புகுந்துவிடும்.

ஒரு நிமிடம் தடுமாறிய செந்தூரன் சட்டென்று சுதாரித்துக்கொண்டவன், கேசரின் கழுத்தை பிடித்து, “அடேய், கிழட்டு நரியே! அரியணை என்பது அவ்வளவு எளிதான இருக்கையென்று நினைத்தாயோ! என் தந்தையை சூழ்ச்சியால் கொன்ற குள்ளநரிக் கூட்டமே. என் கண்முன்னே களிற்றிற்கு நெடியேற்படுத்தும் மூலிகையைக் கொடுத்து என் தாய் மிதிப்பட்டு இறப்பதை காண வைத்த நயவஞ்சக நாய்களே, எப்போதடா இவன் மாய்வான், நாட்டை ஆளலாம் என்று கள்ளர் கூட்டத்தை ஏவிவிட்டு மக்களின் வயிற்றில் அடித்த மாபாவிகளே! நீங்கள் என்ன செய்திருந்தாலும் அங்கு என்னவள் அதை முறியடித்திருப்பாள். தீதும் நன்றும் பிறரால் வராது. அவரவர் செயலுக்கு அவரவர் கூலி பெறுவார். இனி நீ செய்த செயலுக்கு என் மகனின் காலால் மிதிப்பட்டு மீளாமரணம் எய்துவாயடா.” என்று ஆடித்தீர்த்தான்.

அவனின் பிடியால் கழுத்து நரம்புகள் இறுக, மந்திரம் முழுமையடையாமல் நிற்கிறது. ஏவலாலும் செந்தூரனின் உடலுக்குள் இறங்க முடியவில்லை. அது மேலேயே அவனை சுற்றியே வட்டமடித்துக் கொண்டிருக்கிறது. அதனோடு இன்னும் பல அருவங்கள் கமண்டல நீரை களவாட கண்ணி வைத்து காத்துக்கிடக்கின்றன.

நாம் சற்று கொங்கு நாட்டு நிலவரத்தைப் பார்த்துவிட்டு வரலாம்.

….

அரண்மனை

நள்ளிரவு நேரத்தில் கூட கொங்கு நாடு ஒளிவீசிக் கொண்டிருந்தது. எங்கும் மந்திர உச்சாடானங்கள். வேள்விகள் துவங்க இருக்கின்றன. மஞ்சரி ஆலயப்பணிகளில் இருக்க, யட்சிணியோ செவ்வேலன் சொன்னதை மனத்தில் உருப்போட்டுக் கொண்டிருந்தாள்.

‘சித்தமுனியின் கமண்டல நீரை வேள்வி முடித்து பருகினால், அவரால் பெற்ற சாபத்திற்கு விமோச்சனம் கிடைக்கும்’ இது ஒன்றே அவளின் மனத்தில் தற்போது ஓடிக்கொண்டிருந்தது.

‘நிச்சயமாக, கமண்டல நீர் செந்தூரன்தான் அவன்வசம் வைத்திருப்பான். அங்கு என்ன நிலவரம் என்று தெரியவில்லை. நீலாவும் அந்த நீருக்காகத்தான் சென்றிருக்க வேண்டும். கேசர் உயிரோடு இருக்கிறார் என்றால், காளிங்கனும் உடனிணைந்து ஏதோ சதி செய்கிறான். வேள்வி நேரம் என்னால் ஆலயத்திற்குள் செல்ல இயலாது. இந்நேரம் செவ்வேலன் அவனின் மனைவியை அழைத்துக் கொண்டு வந்திருப்பான். அனைத்தும் நல்விதமாக முடிந்ததும், செந்தூரனிடமிருந்து கமண்டல நீரை பெற வேண்டும். என்னப்பனே! உன் விளையாட்டில் என்னையும் ஒரு பாவையாக மாற்றிவிட்டாய். பொதியில் நடப்பதை தற்போது என்னால் உணரவும் இயலவில்லை. எதுவானாலும் செந்தூரனுக்கு துணையாக இருங்கள்’ அவனுக்காக வேண்டியவள், அரண்மனையை கண்காணிக்க பறந்தாள்.

அரண்மனைக்கு வெளியே காற்றோடு காற்றாக மிதந்து ஒவ்வொரு அறையாக நோட்டமிட்டவாறு சென்றுக் கொண்டிருந்தாள் யட்சினி. பெரும்பாலான அறைகளில் யாரும் இல்லை. காவல் வீரர்கள் மட்டுமே இருந்தனர்.

முதன்மையமைச்சர் அறையில் விளக்கின் வெளிச்சம் அதிகமாக இருந்ததைக் கவனித்தவள் அவ்விடம் சென்றாள். ‘இவர் வேள்விக்கு செல்லாமல் இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறார்?’ என்ற கேள்வி எழாமல் இல்லை.

காற்றாக அந்த அறைக்குள் நுழைந்தவள், மறைவிடத்தில் தன்னை மறைத்துக் கொண்டாள்.

முதன்மையமைச்சர் கோபமாக உள்ளே வர, செம்பியனும் இன்னும் சில சிற்றரசர்களும் பின்னோடே வந்தனர்.

“அமைச்சரே!” செம்பியன் ஆரம்பிக்கும் முன்னரே, முதன்மையமைச்சர் மாரிவெண்கோ வார்த்தைகளை கடித்துத் துப்பினார்.

“ஏதும் பேசாதே செம்பியா? செய்யும் ஒரு காரியமாவது சரியாக செய்கிறாயா? உன்னிடம் கொடுத்த வேலை என்ன? எப்படி மஞ்சரியின் செவிக்கு திட்டம் தெரியவந்தது. கேசராவது செந்தூரனை கைது செய்து அழைத்து வருவாரா? அல்ல?” கேள்வியாய் செம்பியனை நோக்கினார்.

“நிச்சயம் தந்தை செந்தூரனை கைது செய்து அழைத்து வருவார் அமைச்சரே! வஞ்சன்?”

“வஞ்சனைக் கொல்ல கல்வராயன் மலைக்கு ஆட்களை அனுப்பியுள்ளேன். நாளை அவனின் உடல்தான் கொங்கு நாட்டை வந்தடையும். ஆள ஆளில்லாத இந்த சேர நாடு முழுவதும் இனி நம் கைவசம்.” இடிஇடியென சிரித்தான் மாரிவெண்கோ.

‘ஆக, கள்ளர்கள் துணையாடு பொருட்கள் சூறையாடப்படவில்லை, இந்த துரோகிகள்தான் அதனை நிகழ்த்தியுள்ளனர். பிறந்த பொன்னாட்டை சூறையாடுவது, தாயின் கருவறையை கலைப்பதற்கு சமானாம் என்பதை மறந்து துரோகம் இழைத்துள்ளனர். நிச்சயம் இது செந்தூரனிற்கு தெரிந்திருக்கும். இப்போது நான் என்ன செய்வது? வேள்வி நிகழ்வதால் என்னால் அரண்மனையை விட்டு எங்கும் செல்ல இயலாது. என் மந்திரங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பின் நீடிக்காது. வேறு எந்த உருவத்தையும் என்னால் தற்சமயம் எடுக்க இயலாது. இவர்களின் முகத்திரையை கிழித்தால்தான் மஞ்சரிக்கு உண்மை புரிபடும். கடவுளே, ஏதேனும் வழியைக் காட்டு’ மனத்திற்குள் மருகிக்கொண்டிருந்தாள் யட்சினி.

யட்சினி என்ன செய்து நடக்கவிருக்கும் விபரீதத்தை தடுக்கப் போகிறாள்?

….

கல்வராயன் மலை.

வஞ்சன் இன்னும் சிறிது நேரத்தில் கல்வராயன் மலை உச்சியை அடைந்து விடுவான். அங்கிருந்து நிமிட தூரத்தில் வனக்காடு வந்துவிடும். வனக்காட்டில் தான் சித்தமுனி சொன்ன இடம் இருக்கிறது.

‘இறைவா! எப்படியோ கல்வராயன் மலைக்கு வந்துவிட்டேன். இன்னும் சற்று நேரத்தில் வனக்காட்டை அடைந்து விடலாம். இந்நேரம் செந்தூரன் அரண்மனைக்கு சென்றிருப்பானா? இல்லை, வழியில் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து இருக்குமா? காளிங்கன் படைகள் எதற்கு நம்மை சுற்றி வளைக்க வேண்டும்? விரைந்து சித்தர் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டும். அங்கிருந்து எப்படியாவது மக்களை நாடி அரண்மனைக்கு சேதி அனுப்பிட வேண்டும்’ என்று எண்ணியவன் பரிதியை விரைவாக செலுத்தினான்.

அப்போது வஞ்சன் அணிந்திருந்த சிவன்காப்பு பிரகாசமாக ஒளிர்ந்தது. ஒளியின் திசையை கவனிக்க, பெரிய கருநாகம் ஒன்று அவனை பின்தொடர்ந்து வந்துக் கொண்டிருப்பதை கண்டான்.

“செந்தூரன் சொன்னதுபோல் ஆபத்தை இது நமக்கு உணர்த்தி விட்டது. சிவப்பா! விரைந்து செல்;. ம்ம்” என்று குதிரையின் பிடியில் அழுத்தம் கொடுத்திட, சீறிப்பாய்ந்தது அவனின் சிவப்பன்.

அதனின் வேகத்திற்கு ஈடுகொடுத்தது போல் காளிங்கனும் வேகமாக ஊர்ந்து சென்றான். சிவனின் காப்பு மீண்டும் ஒளிர்ந்திட, வஞ்சனின் கண்களுக்கு காளிங்கனின் உருவம் தெளிவாக தெரிந்தது.

‘காளிங்கனா? அவன் எப்படி கருநாகமாக? இவனால் செந்தூரனிற்கு ஏதேனும் நிகழ்ந்து இருக்குமோ? கடவுளே! ஏதும் நிகழ்ந்து விடக் கூடாது. செந்தூரனிற்கு பதில் என் உயிரை எடுத்துக் கொள்ளுங்கள். அவன் என் தங்கையோடு வாழ வேண்டும்.’ எந்த நேரம் வஞ்சன் வேண்டினானோ, உண்மையில் அவன் உயிர்தான் போகப்போகிறது என்பதை அறிய மறந்து போனான்.

இன்னும் சற்றுத் தொலைவில் வனக்காடு வந்துவிடும். குதிரை விரைந்து செல்ல, நடுவில் தடுக்கிய பெரிய கல்லால் குதிரை தடுமாறி விழுந்தது. வஞ்சன் தவறி விழுந்து வனக்காட்டிற்குள் புகுந்தான்.

வனக்காடு, வனதேவதை ஆட்சி செய்யும் இந்த வனத்தில் எந்த மாயமந்திர சக்திகளுக்கும் இடமில்லை. இயற்கை ஒன்றே தெய்வம். இறையே இயற்கை. இதுவரை இங்கு ஒரு துளி இரத்தம்கூட சிந்தாது இந்த வனத்தை காத்து வருகிறாள் வனதேவதை. அங்குள்ள மக்களும் வேடுவத்தலைவன் முருகனை வணங்கி உயிர்வதை செய்யாது வாழ்ந்து வருகின்றனர். முக்கிய குறிப்பு, தேவநாகவேடர் குலமும் இங்குதான் வசித்து வருகிறார்கள்.

‘அந்தோ, வஞ்சனிற்கு என்னவாயிற்று?’ என்று எண்ணியபடியே காளிங்கன் வனக்காட்டிற்குள் நுழைகிறான். இதுவரை செந்தூரனின் நாகவசியக் காப்பிற்கு கட்டுப்பட்டு இருந்தவனின் எண்ணங்கள் சிதறியது. மனித உருவும் அவனால் எடுக்க இயலாது. நாகமாக இருந்தாலும், காளிங்கனின் எண்ணவலைகள் தற்போது சரியாக அவனின் எண்ணங்களை பிரதிபலித்தன.

‘நான், எப்படி இங்கே?’ என்று ஒருநிமிடம் தடுமாறியவன், “அடேய் வஞ்சா! சிக்கினாயா? உன் முடிவு என் கையில் என்பதுதான் விதி. இனி நீ நாடு திரும்பிட இயலாது. ஆட்சியும் அரசும் இனி எங்கள் கையில்.” என்று கொக்கரித்தவன், விரைந்து சென்று வஞ்சனை தீண்டினான். வஞ்சனின் ஒரு துளி இரத்தம் வனக்காட்டில் சிந்தி சிதறியது.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்