சுழலி-27
அரண்மனை.
திடீரென்று தனது அறையில் தோன்றிய இராஜநாகத்தை பயம் அப்பிய விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சரி.
“வீரர்க…” மஞ்சரி சத்தமிடுவதற்குள் தனது உருவத்திற்கு மாறினான் செவ்வேலன்
“தேவி, சப்தமிட்டு என்னைக் காட்டிக் கொடுத்துவிடாதீர்கள். நான்தான் செவ்வேலன்”
“நீரா? நீங்கள் எப்படி இராஜநாகமாய்?”
மஞ்சரியின் குழம்பிய விழிகள் செவ்வேலனிற்கும் குழப்பத்தை கொடுத்தது. ‘நீலா நம்மைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையா?’ என்ற எண்ணம்தான் முதலில் தோன்றியது.
அப்போது உள்ளே வந்தாள் யட்சினி.
“நீலா, என்னைப் பற்றி நீ தேவியிடம் உண்மையை கூறவில்லையா?”
“என்ன உண்மை? என்ன கூறவேண்டும்?” என்றபடி ஒயிலாக நடந்து வந்தவள், நீலாவின் உருவத்திலிருந்து தனது உருவத்திற்கு மாறினாள்.
“யட்சினி?” செவ்வேலனின் உதடுகள் முணுமுணுத்தன.
“இங்கு என்னதான் நடக்கிறது? செவ்வேலன் அவர்களே, நீங்கள் எப்படி நாகமாய் உருவெடுத்தீர்கள்? நீலா எங்கே?” மஞ்சரியின் வினாவிற்கு பதிலளிக்காத செவ்வேலன், யட்சினியைத் தாக்க சென்றான்.
தனது மந்திர சக்தியால் செவ்வேலனைக் கட்டிய யட்சினி, “உண்மையை விளம்பும் வரை, ஓரடி நகர இயலாது. சில செய்திகளை அவரவர் வாயிலிருந்து வாங்கினால்தான் சுவாரஸ்யம் கூடும். அனைத்தும் நானே சொல்லிவிட்டால் சலித்துவிடாது. மஞ்சரி தேவி, இவன் சொல்லும் செய்திகளை கேட்டுக் கொள்ளுங்கள். பின், அவனை என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்.” என்றாள். அவளின் பேச்சில் நய்யாண்டித்தனம் சற்று தூக்கலாகவே இருந்தது.
“யட்சினி, நீலாவிற்கு என்ன ஆனது? நீ அவள் உருவில்? அவள் எங்கே?” குழப்பத்தோடு கேட்டாள் மஞ்சரி.
“அனைத்தையும் சொல்கிறேன் தேவி. முதலில் விருந்தினரை உபசரிக்க வேண்டுமல்லவா?” என்றவள், செவ்வலனிடம் திரும்பினாள். “நீலா யார்? நீ யார்? இப்போது நீலா எங்கு சென்றிருக்கிறாள்? அனைத்தையும் ஒப்புவித்தால் உயிரோடு திரும்பலாம்” என்றாள்.
“உன் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சிடுவேன் என்று எண்ணாதே. உன்னால் என்னைக் கொல்ல இயலாது என்பதை நான் அறிவேன். தேவநாகவேடர் குலத்தவனை பகைத்துக் கொள்ளாதே யட்சினி” சீறினான் செவ்வேலன்.
“என்னிடம் கூறுங்கள்? நீலா தற்போது எங்கே? என்னதான் நடக்கிறது? யட்சினி அவரை விடுவித்துவிடு.” தளர்ந்து அமர்ந்தாள் மஞ்சரி. நெஞ்சமெல்லாம் கலக்கமே நிறைந்திருந்தது. தன்னவனும், சகோதரனும் அனைத்து இன்னல்களையும் கடந்து வர வேண்டும் எண்ணித் தவித்திருந்தவள், தற்போது மசக்கையின் காரணமாக இன்னும் நலிவுற்றாள்.
மஞ்சரியின் சொல்படி, செவ்வேலனை விடுவித்தாள் யட்சினி. செவ்வேலனால் மஞ்சரியை அலட்சியம் செய்ய இயலவில்லை. தான் அறிந்ததை சொல்லலானான்.
“தேவி, முதலில் என்னை நீங்கள் பொறுத்தருள வேண்டுகிறேன். நான் கல்வராயன் மலையை சேர்ந்த தேவநாகவேடர் குலத்தவன். நினைத்த நேரத்தில் இராஜநாகமாய் எங்களால் உருவெடுக்க இயலும். என் சகோதரிதான் நீலா. அவளின் பதினாறாம் பிராயத்தில் பொதிய மலைக்காட்டிற்கு வந்த பொழுது ஒரு மானுடன் மேல் காதல் கொண்டு, அவனை பின் தொடர்கையில், சித்தமுனியின் தவத்தை கலைத்ததனால், அவரிடம் இனி நிரந்தரமாய் மனிதஉருவிலேயே இருக்கும்படி சாபம் பெற்றுவிட்டாள். மனித உருவிலேயே இருப்பவளை எம் குலமக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை அறிந்த என் தந்தை, அவளை இங்கு அழைத்துவந்து தங்கள் தந்தையிடம் ஒப்படைத்தார். அன்றிலிருந்து இன்று வரை உங்களின் தோழியாக உடனிருக்கிறாள்.”
இத்தனை வருடங்கள் நம்மோடு இருந்தவள் ஒரு தேவநாகவேடர் குலத்தவளா? என்ற செய்தியே மஞ்சரிக்கு அதிர்வை தந்தது. இன்னும் அவன் கூறப்போகும் அனைத்தையும் கேட்டால் இவளின் நிலை என்னவாகும் என்று எண்ணினாள் யட்சினி.
“அவளை உடனிருந்து பாதுகாக்கவே நானும் வீரர்கள் படையில் இணைந்தேன். என் திறமையைக் கண்டு சிற்றரசர் செந்தூரர்தான் ஒற்றர்படையில் இணைத்தார். அதற்கு நீலாவும் உதவி புரிந்தாள். ஆனால், சில காலமாக நீலாவின் நடவடிக்கையில் மாற்றத்தை நான் கண்டேன். அவளை பின்தொடர்கையில்தான் நான் உண்மைகளையும் கண்டுகொண்டேன். அவள் காதல்வயப்பட்டது, இளவரசர் காளிங்கன்மேல்தான். பின்னிரவில் இருவரும் கூடிக்களித்திட, நீலாவின் சாபமும் காளிங்கனுக்கு சென்றுவிட்டது. அப்போதுதான், காளிங்கனின் தாத்தா கொங்கிளக்கேசர் உயிரோடு இருப்பதாய் தகவல் வந்தது. அத்தகவலை நான் அரசரிடம் கூற விழையும் நேரம் நீலா தடுத்துவிட்டாள். அவளின் திட்டமே வேறாக இருந்தது. நாட்டு மக்களின் நிலைக்காக செந்தூரரும் அரசப்பெருமானும் பொதியமலைக்கு செல்லும் போது, காளிங்கனோடு படைகள் திரட்டி அங்கு சென்று சித்தமுனியின் கலச நீரை பருக எண்ணினாள். அவரின் தவப்பலனாய் பிரம்மனிடம் பெற்ற இந்த கலச நீரை அவரால் சாபம் பெற்றவர்கள் வேள்வி நடத்தி பருகினால், உடனே அச்சாபம் நீங்கி விமோச்சனம் பெறுவார்கள். அதை நிறைவேற்றவே காளிங்கனும் நீலாவும் கொங்கிளக்கேசரின் படைகளோடு பொதியமலைக்கு செல்வதாய் இருந்தனர். பின், நான் என் தந்தை அவளின் விமோச்சனத்திற்காக படும் இன்னல்களை எடுத்து கூறியும், நாட்டு மக்களின் நிலையை கூறியும், செல்லவிடாமல் தடுத்துவிட்டேன்.
நாட்டை சுற்றியும், இந்த ஆட்சியை பிடிக்கவும் பல சதி திட்டங்கள் நடந்து கொண்டிருப்பதை செந்தூரர் அறிவார். நான் அறிந்த அனைத்தையும் அவரிடம் சொல்லிவிட்டேன். அதனால், அவர் உங்களுக்கு காவலாய் என்னை ஆலயப்பணிகள் இடங்களை கவனிக்கும்படி உத்தரவிட்டுதான் சென்றார்.”
செவ்வேலன் சொல்லும் அனைத்தும் மஞ்சரியால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. ஏற்றுக்கொள்ளாமலும் இருக்க முடியவில்லை. தன் தோழியனவள் சுயநலத்தோடு செய்ததையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை பாவையாள்.
மஞ்சரியின் எண்ணங்கள் இப்படியிருக்க, யட்சினியின் எண்ணங்கள் வேறாய் இருந்தது.
“இன்று நீங்கள் அரண்மனைக்கு வந்தபிறகு சிலர் ஆலயத்தின் பின்புறம் பேசிக்கொண்டிருந்ததை நான் கேட்டேன். அரசர் செம்பியன் ஆலயப்பணிகளை வேண்டுமென்றே தாமதித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அவரைத் தவிர்த்து, இன்னும் யாரோ, ஆலயத்தில் ஒரு கொலை செய்ய திட்டமிட்டுக் கொண்டிருந்தனர். பேராபத்து சூழ உள்ளது இளவரசி. அதனை தங்களிடம் மொழியவே நான் இங்கு வந்தேன். ஆனால், வந்த பின் தான் புரிகிறது, நீலா அனைவரையும் ஏமாற்றிவிட்டு பொதியில் சென்றிருக்கிறாள் என்று. என் தங்கையே நாட்டின் இன்னலுக்கு காரணமாகிவிட்டாள் இளவரசி.” அவனின் குரல் குமுறலோடு வந்தது.
மஞ்சரி யோசனையில் ஆழ்ந்தாள். இச்சமயம், புத்திசாலித்தனமாக இருத்தல் அவசியம். செவ்வேலன் சொல்வதுபோல் ஆலயத்தில் அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால், மக்களின் மனதில் இருக்கும் மிச்சமீதி நம்பிக்கையும் பொய்த்துப்போய் விடும். வேள்வி நிகழ்த்த முடியாது. குடமுழுக்கு எதுவும் செய்ய இயலாது. அதிருப்தி அதிகமாகிவிடும் என்று எண்ணியவள் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுத்தாள்.
“யட்சினி, கலகங்கள் தீரும்வரை நீ நீலாவின் உருவிலேயே இரு. செவ்வேலன் அவர்களே, இந்நொடி முதல் நீங்கள் என் மெய்க்காப்பளன். உடனே தளபதியை வரச் சொல்லுங்கள். யாரங்கே! அரசியாரை நான் காணவேண்டும். உடனடியாக அவசரகால சபையை கூட்டுங்கள்.” என்று உத்தரவிட்டவள், கம்பீரமாக புறப்பட்டாள்.
‘அன்பரே, சில முடிவுகளை எடுக்க நான் கடமைப்பட்டுள்ளேன். நீங்களும் சகோதரரும் இங்கு வருவதற்குள் நாட்டின் நிலையை நான் சீர்ப்படுத்திவிடுவேன். விரைந்து கரம் சேருங்கள். உங்களை எண்ணியே நான் காத்துக்கொண்டிருக்கிறேன்’ மனத்தில் செந்தூரனை நினைத்தே அனைத்து காரியங்களையும் செய்தாள்.
அவைக் கூட்டப்பட்டது. நாடு முழுக்க வேள்வியும், குடமுழுக்கும் செய்ய வேண்டியிருப்பதால், அனைத்து சிற்றரசர்களும் அரண்மனையில்தான் இருந்தனர்.
கோதையைக் கண்ட மஞ்சரி, நடந்தவற்றை விளக்கி, இனி எடுக்கப்போகும் நடடவடிக்கையையும் விவரித்தாள். கோதையும் இதற்கு உடன்பட, நடவடிக்கைகள் ஆணையாக உத்தரவிடப்பட்டது.
“நாட்டின் நிலையை மாற்ற முயற்சிகள் நடந்துக் கொண்டிருக்கிறது. ஆலயத்தில் இன்று அசம்பாவிதம் நடக்கப் போகிறதாய் எனது ஆஸ்தான ஒற்றரிடமிருந்து தகவல் வந்திருக்கிறது. ஆகவே, சில முக்கிய நடவடிக்கைகளை நான் எடுக்கலாம் என்றிருக்கிறேன். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.”
“நடவடிக்கைகளை முதலில் கூறுங்கள் இளவரசி. அதிலிருக்கும் சாதக பாதகங்களை எண்ணி முடிவெடுத்துக் கொள்ளலாம்” என்றார் செம்பியன்.
அனைவர் முன்னிலையிலும் மஞ்சரியை அவமதிப்பாய் பேசினார். அது அங்கிருந்த சிலருக்கு எள்ளலாகவும், சிலருக்கு கோபமாகவும் அமைந்தது.
“தளபதியாரே! உடனே காவல்களை அதிகப்படுத்துங்கள். சந்தேகிக்கும்படி யாராக இருந்தாலும் மறுபேச்சிற்கு இடமின்றி சிறையில் அடையுங்கள். வேள்வி இப்போதே தொடங்க வேண்டும். நள்ளிரவிலிருந்தே ஈசனுக்கு நாதங்கள் ஒலிக்க வேண்டும். இன்றிலிருந்து மூன்றாம் நாள் அனைத்து ஆலயங்களிலும் குடமுழுக்கு நிகழ்ந்திருக்க வேண்டும். அந்த பொறுப்பை நான் நீலாவிற்கு அளிக்கிறேன். முதன்மை அமைச்சரே, நாட்டின் எல்லைகளில் காவலை பலப்படுத்த ஆணையிடுங்கள். ஆயிரம் வீரர்களை கல்வராயன் மலைக்கு சகோதரனுக்கு துணையாக அனுப்பி விடுங்கள். பொதியில் மலையை நோக்கி ஐநூறு வீரர்களை அனுப்பிவிடுங்கள். அனைத்தும் உடனே நிகழ வேண்டும்.
கல்வராயன் மலையில் இருக்கும் தேவநாகவேடர்குல தலைவரை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள். மலைவாசி மக்களையும், வனவாசி மக்களையும் உடனடியாக நாட்டின் எல்லைகளில் கருப்பரை ஆவகானம் செய்ய உத்தரவிடுங்கள். இவையனைத்தும் அரசியார் கூறிய நடவடிக்கைகள். அதனை சிரமேற்கொண்டு இளவரசி நான் செய்ய சித்தமாக இருக்கிறேன். நாட்டின் நலன் கருதி அனைவரும் இதற்கு ஒத்துழைத்தே ஆக வேண்டும். சபை களையட்டும். நாளைய விடியல் நமக்கானதாய் அமையும்.” என்று உத்தரவிட்டவள், தனது அறைக்கு சென்றாள்.
அவளின் இந்த முடிவுகள் எதற்கென்று யாரும் கேட்கவும் இல்லை. அவளின் சொல்லிற்கு தலையை ஆட்டியே ஆக வேண்டும் என்ற எண்ணம்தான் அனைவரிடத்திலும். செம்பியன் மட்டுமல்ல இன்னொருவரும் ஆடித்தான் போனார் மஞ்சரியின் இந்த மாற்றத்தில்.
அவளின் பின்னே வந்த யட்சினி, “தேவி, உடனடியா நாம் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். இளவரசி வருகிறார் என்று தெரிந்தால் மக்களும் கூடிவிடுவர். உடனடியாக வேள்வியை நிகழ்த்த வேண்டும்”
“நானும் அதைத்தான் எண்ணினேன் யட்சினி. வேலா, உடனடியாக உன் துணைவியாரை அழைத்துக் கொண்டு வா.”
“உத்தரவு இளவரசி.”
“தேவி, அவர்கள் எதற்கு?” புரியாமல் வினவினாள் யட்சினி.
“யட்சினி, உன்னால் இவ்வேள்வியில் நிற்க இயலாது. கடும் மந்திரங்கள் உச்சாடானம் செய்யப்படும். அது உன் உருவத்தை வெளிக்கொண்டுவிடும். ஆகவே, நீ நாட்டின் எல்லைக்காவலில் துணையாய் இரு. யாரும் நாட்டிற்குள் நுழைந்திடாவண்ணம் காவலை பலப்படுத்து. நானும், அரசியாரும் துணைவர்கள் இல்லாமல் வேள்வியில் பங்கு கொள்ள இயலாது. தன் சகோதரி தவறு செய்தாலும், நாட்டின் நலனுக்காக நம்மோடு இருக்கும் செவ்வேலனை நான் முழுமையாக நம்புகிறேன். ஆகவே, அவர்தாம் அவரின் துணைவியாரோடு வேள்வியில் அமரப்போகிறார். இதை எதிர்க்க பலரும் வருவார்கள். அவர்களை நான் சமாளித்துக் கொள்கிறேன். என்னவரும் என் சகோதரனும் நலமாக வந்திடமட்டுமே நான் கடவுளை வேண்டிக்கொண்டிருக்கிறேன். இனி, நொடியும் தாமதிக்க நான் விரும்பவில்லை. உடனே புறப்படு.”
இத்தனை இன்னல்களிலும் தன் நலனைப் பற்றி எண்ணிய மஞ்சரியை கண்டு யட்சினியின் கண்கள் கலங்கின. தன்னால் இது செய்ய இயலாது என்று செந்தூரனிடம் கூட உரைக்கும் யட்சினியால், வேள்வி நேரம் உடனிருக்க இயலாது என்று மஞ்சரியிடம் உரைக்க முடியவில்லை. ஆனால், அதனை மஞ்சரி கூறாமல் புரிந்துக்கொண்டதை எண்ணி யட்சினிக்கு ஆனந்தமாய் அமைந்தது.
“நான் சொல்லாமலேயே என் நிலையை புரிந்துக்கொண்டீர்கள் தேவி. இன்னுமொரு பிறவி எனக்கு மானிடராய் வாய்க்கப்பெற்றால், உமக்கு தோழியாக, உம்மைக் காக்கும் கேடயமாக நான் இருக்க வேண்டும். ஒருவேளை செந்தூரன் என்னை அடிமையிலிருந்து விடுவித்தாலும் நான் என்றும் உன் சொல்லுக்கு கட்டுப்படுவேன் தேவி. இது எம்பெருமான் மீது ஆணை. நீ எத்தனை பிறவி கொண்டாலும், உனக்கு என்றும் நான் துணையாக இருப்பேன் தேவி.” என்றவள் அவளைக் கட்டியணைத்தாள்.
புன்னகைப் புரிந்த மஞ்சரி, “என்னவர் நான் எடுக்கும் முடிவுகளில் சம்மதிப்பார் என்ற நம்பிக்கையோடு மேலும் ஒரு முடிவை எடுத்துள்ளேன் யட்சினி”
யட்சினி புரியாமல் பார்க்க, “என்று இருவரின் உதிரமும் உடலும் ஒன்று கலந்ததோ, அன்றிலிருந்து எமது வாக்கும் ஒன்றே. இந்நொடி நானும் என்னவரும் உன்னை அடிமையிலிருந்து விடுவிக்குறோம். நாட்டின் நிலை சீராகும் வரை நீ என்னோடு உடனிருக்க வேண்டும். விரைவில் சாபம் நீங்கப் பெற்று நீ தேவலோகம் அடைய நானும் இறைவனை பிரார்த்திக்கிறேன் யட்சினி” என்றாள்.
யட்சினி புளகாங்கிதம் அடைந்தாள். அவளுக்கு வார்த்தைகள் நாவிலிருந்து வரவில்லை. அனைத்தையும் அறிந்துக் கொள்ளும் யட்சினி, இந்த இடத்தில் ஆனந்த அதிர்ச்சியில் வரும் இன்னல்களை அறியாது போனாள், அல்லது அறிந்தும் சொல்லாது போனாளோ?
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
+1