சுழலி-26
திடீரென்று கேட்ட சத்தத்தில் மஞ்சரியின் அறையில் இருந்த யட்சினி திடுக்கிட்டு திரும்ப, மறைவிற்கு பின் ஒரு உருவம் வெளிப்பட்டது. அறைச் சுவரானது கதவாய் மாற, வெளிப்பட்டான் செவ்வேலன்.
மஞ்சரியை எதிர்நோக்கி வந்தவனிற்கு அங்கு நீலா இருப்பது யோசனையையும் குழப்பத்தையும்தான் தந்தது.
“நீலா? நீ பொதியில் செல்லவில்லையா? இங்குதான் இருக்கின்றாயா?”
யட்சினிக்கு ஒன்றும் புரியவில்லை எனினும், அவனே பேசட்டும் என அமைதிக் காத்தவள், “இளவரசி இங்கு இருக்கும்போது, நான் எப்படி பொதியில் செல்வது?” என்றாள்.
“நல்லவேளை, நான் அனுப்பிய தூது சரியாக உன்னிடமே வந்துவிட்டது. உனது சாபம் நீக்குவதற்கான வழியை தந்தை தேடிக்கொண்டுதான் இருக்கிறார். வீணாக சித்தமுனியைத் தேடி சென்று உனது முடிவை நீயே தேடிக்கொள்வாய் என அவரும் மிகவும் கவலையோடு தான் இருந்தார் நீலா. நீ செல்லவில்லையென்பதை உடனடியாக தந்தைக்கு தெரியப்படுத்த வேண்டும்” அவளைக் கண்ட மகிழ்வில் செவ்வேலன் தன்போக்கில் பேசிக்கொண்டிருந்தான்.
‘ஆக, நாம் நினைத்ததுபோல் நீலா சாபம் வாங்கிய வேடர்குலத்தவள்தான். நிச்சயம், அவள் தற்போது பொதியைக்குத்தான் சென்றிருக்க வேண்டும். உடனே இந்த உண்மையை மஞ்சரிக்கு எடுத்துக் கூற வேண்டும். இனி, நீலாவை மஞ்சரி நம்பிக்கொண்டிருப்பது சரியாக இராது. இவள் அங்கு செல்வது இவனுக்கு உடன்பாடு இல்லையென்கிறான். தந்தை என்று வேறு சொல்கிறான். அப்போது, இவனும் தேவநாகவேடர் குலத்தினன் போலவே! இருக்கட்டும், இவன் வாயில் இருந்தே விசயத்தைக் கறக்க வேண்டும்.’ மனத்தினுள் எண்ணிக் கொண்டாள்.
“அதனைப் பிறகு தெரியப்படுத்தலாம். வந்த காரணம் யாதோ?” தனது கருவிழிப் பார்வையினை மோகப் பார்வையாக மாற்ற ஆரம்பித்தாள்.
இருட்டில் அதனை அறியாத செவ்வேலன், ஆலயத்தில் தான் கேட்டதை பகிர்ந்தான். “யார் இதற்கு காரணம் என்று தெரியவில்லை. ஆனால், ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போவது மட்டும் உறுதி. இதனை உடனடியாக இளவரசியாரிடம் தெரிவிக்க வேண்டும்”
அவன் சொன்னதைக் கேட்டவளின் முகம் யோசனையில் ஆழ்ந்தது.
“நீ கூறுவது எத்தனை தூரம் உண்மையென்று நான் நம்புவது?” அவள் நம்ப மறுத்தாள். ஏனெனில், சிறிது நேரம் முன்புவரை அவள் காவலுக்கு வைத்திருந்த அவளின் சக்திகள் அனைத்தும் சரியாக இருக்கிறது என்றுதான் சொல்லிச் சென்றன.
“இளவரசியிடம் கூறி, என்னை அவரின் ஒற்றன்படையில் சேர்ப்பித்தவளே நீ தான். நீயே நம்ப மறுத்தாள் நான் என்ன செய்வது? நான் கூறியது அனைத்தும் உண்மையே. வேடர்குலத்தலைவன் மேல் ஆணையாக” இதற்குபின், அவள் ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால், இவன் யார்? ஏன் நீலா இவனை ஒற்றன் படையில் சேர்க்க வேண்டும்? நீலா ஏன் சித்தமுனியைத் தேடிச் செல்ல வேண்டும்? இப்படி பல்வேறு கேள்விகள் அவளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
அவள் அறிந்தவரை, நீலா சாபவிமோச்சனம் பெறுவதற்காக பொதியில் சென்றிருக்கிறாள். அதனால், அவளின் உருவத்தில் இவள் இங்கு இருக்கிறாள். இதுமட்டும்தான் காரணமா என்று தற்போதுதான் சிந்திக்க துவங்கினாள் யட்சினி.
அவளின் அமைதி செவ்வேலனை என்னவோ செய்தது. இன்னும் அவள் தன்னை நம்ப மறுக்கிறாள் என்றே எண்ணினான்.
“இன்னும் நீ நம்பவில்லையா நீலா?”
“இல்லை. இதை உடனே இளவரசியிடம் தெரிவிக்க வேண்டும். ஆனால், அரண்மனையிலும் பலர் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இதில் யாரை நம்புவது என்றுதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்”
“நானே சென்று அவரிடம் இதை கூறுகிறேன் நீலா. நீ இளவரசியின் அறைக்கு வந்துவிடு” என்றவன், சட்டென இராஜநாகமாக மாறியவன், அங்கிருந்த ஒரு பொந்தின் வழியாக இளவரசியின் தனிப்பட்ட உள் அறைக்குள் சென்றான்.
யட்சினியின் இதழ்கள் மர்ம புன்னகை சிந்தியது. உடனே, அங்கிருந்து மறைந்தவள், மஞ்சரியின் அறைக்குள் வந்து சேர்ந்தாள்.
….
பொதியில்
வஞ்சனும் செந்தூரனும் அருவி குகையை விட்டு வெளியே வர, அவனின் பாதி படைகள் இறந்துக் கிடந்தன. மீதமிருக்கும் படைகளும் தொலைவில் யாருடனோ சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இருவரும் பெரும் அதிர்ச்சியில் இருக்க, அரையுயிராக ஓடி வந்த வீரன் ஒருவன், “காளிங்கன் படைகள்…” என்று சொல்லி முடிப்பதற்குள் முதுகில் அம்பு தாங்கி உயிரிழந்தான்.
“செந்தூரா, இவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். உடனடியாக நீ கிளம்பு” இடையில் சொருகியிருந்த வாளை எடுத்தவாறு சொன்னான் வஞ்சன்.
“இல்லை, வஞ்சா! தற்போது இருவரின் பணியும் மிகவும் முக்கியம். நீ உடனே இங்கிருந்து புறப்பட்டு கல்வராயன் மலைக்குச் செல். இதோ, இந்த சிவன்காப்பை வைத்துக்கொள். அருவ சக்திகளிடமிருந்து இது உன்னைக் காக்கும். உடனே புறப்படு. இவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்”
“விரைவில் அரண்மனையில் சந்திக்கலாம். பத்திரம்” என்றபடி செந்தூரனை அணைத்து விடுவித்தவன், தனது புரவியில் ஏறி வேறு மார்க்கமாக புறப்பட்டான்.
செந்தூரன், மனதார இறைவனை தொழுதவன் தனது புரவியில் மலைமேல் ஏற ஆரம்பித்தான்.
‘வஞ்சன், கல்வராயன் மலைக்கு செல்வதற்குள் நான் கோட்டைக்கு சென்றிருக்க வேண்டும். இந்த கலசநீரை கோதையிடம் கொடுத்துவிட்டு உடனே படைகளைத் திரட்டி கல்வராயன் மலைக்கு சென்று வஞ்சனிற்கு உதவிட வேண்டும்.’ மனதில் முடிவெடுத்தவனாய் புறப்பட்டான்.
குடநாட்டு மன்னன் செம்பியனின் இளைய மகன்தான் காளிங்கன். அவன் ஏன் தற்போது படைகளை திரட்டி வந்துள்ளான் என்பது செந்தூரனிற்கு குழப்பமாக இருந்தது. பொதிய மலையின் உச்சிக்கு செல்ல இன்னும் சில நாளிகையே இருந்தது. அங்கு சென்றுவிட்டால், அங்கிருந்து புரவியை வேறுப்பக்கம் அனுப்பிவிட்டு, பள்ளத்தாக்கிற்குள் இறங்கி மலைவாழ் மக்களிடமிருந்து புரவியை வாங்கிக் கொண்டு கோட்டைக்கு விரைந்திடலாம் என்று எண்ணியவனின் கவனத்தை அவனது புரவி கலைத்தது. மிகவும் சோர்ந்த நிலையில் இருப்பதை கவனித்தவன், அருகே ஒரு ஓடையின்பக்கம் அதனை இளைப்பாற விட்டான்.
கண்மூடி சாய்ந்திருந்தவன், உணவு பதார்த்தங்கள் சமைக்கும் மணம் வர யோசனையோடு கண்களை திறந்தான். அப்போதுதான், தனக்கும் உண்டி உண்டு என்பதை அவனது மூளை எடுத்துரைத்தது.
குதிரையை அங்கேயே கட்டியவன், “நான் வரும்வரை இவ்விடத்தை விட்டு எங்கும் செல்லாதே கருப்பா.” என்று அதற்கு உத்தரவிட்டே சென்றான். எஜமானின் கட்டளைக்கான ஒத்திசைவை கனைத்து அறிவுறுத்தியது.
மெதுவாக அந்த குடிலுக்கு அருகினில் சென்றவன், “யாரேனும் இல்லத்தில் இருந்தால், அருந்த நீர் தாருங்கள்” என்று கேட்டு நின்றான்.
பசிப்பிணியில் வாடித் தவித்த மக்கள் அனைவருக்கும், அள்ள அள்ள குறையாத அளவிற்கு தானியங்களையும் உணவையும் வாரி வழங்கிய செந்தூரன், தற்போது ஒருவாய் தண்ணீருக்கு கையேந்தி நிற்கிறான்.
குடிலிருந்து ஒரு வயதான முதியவர் நீரோடு வந்தார். கைகளில் தவழ்ந்த நீரின் தழும்பலே அவரின் நடுக்கத்தை பறைசாற்றியது.
முதலில் அந்த நீரை வாங்கிப் பருகிய பின்னர்தான், செந்தூரனின் மூளை தெளிவாக யோசித்தது. ஏன், காளிங்கன் படைகள் இங்கு வர வேண்டும்? அப்போது, நாட்டில் வேள்விகளின் நிலை? நிச்சயம் தவறு நடக்க யட்சினி விடமாட்டாள். மஞ்சரி பார்த்துக் கொள்வாள் என்ற போதிலும், நயவஞ்சகக்காரர்களை எப்படி இனம் காண்பாள் என்னவள்? விரைந்து கோட்டைக்கு செல்ல வேண்டும் என்று தன் மனத்திற்குள் பேசிக்கொண்டவன், அதன்பின்னரே நீரைக் கொடுத்தவருக்கு ஒரு நன்றிக் கூட சொல்லவில்லை என்று அவரை நிமிர்ந்துப் பார்த்தான். பார்த்தவனின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.
“தந்தையே! தாங்களா? இங்கு எப்படி?” வார்த்தைகள் நாவிற்கு அடியில் சிக்குண்டு வார்த்தைகளுக்கு பஞ்சத்தை ஏற்படுத்தியது.
“செந்தூரா, என் மகனே! இளம்கன்றாய் கண்டவனை தற்போது ஆண்மகவாய் காண முடியாத பாவியாகிப்போனேனே… பார்வை பறிபோய், மேகநோய் பீடித்து தனித்து நிற்கும் நிலையிலா நான் உன்னைக் காண வேண்டும். அந்தோ!” வீரமரணம் அடைந்துவிட்டார் என்று நினைத்திருந்த தன் தந்தையை இந்நிலையில் காணவே அவனுக்கு மனது வெம்பியது.
“என்னவாயிற்று தந்தையே? இத்தனை வருடங்கள் நீங்கள் உயிரோடிருந்தும் பெற்றவரை பேணா மகனாய் இருந்துவிட்டேன். இனி, நான் இருந்து என்ன பயன்?”
“அப்படிக்; கூறாதே செந்தூரா! இனிதான் உனக்கு பல கடமைகள் இருக்கின்றது. நம் நாடும் மக்களும் இன்னலில் தவிக்கின்றனர். மேலும், நம்மை ஏமாற்றிய துரோகிகளுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டாமா? என்றும் என் மகனின் விழிகள் நீரை சொரியக் கூடாது. உள்ளே வா!” என்று அழைத்துச் சென்றார் செந்தூரனின் தந்தை.
“எனக்கு விரிவாக விளக்குங்கள் தந்தையே. என்னவாயிற்று?”
“போரில் என் மார்பில் அம்பு தைத்தது உண்மைதான். உயிர் பறவை உடலை விட்டு வெளியேற துடிக்கும் நேரம்தனில்தான் துரோகிகளை அடையாளம் காணும் சந்தர்ப்பம் வாய்த்தது செந்தூரா. குடநாட்டு மன்னன் செம்பியனின் தந்தை கடுங்கோ கொங்கிளகேசர் சிதறிய கொங்கு நாடுகளை தனதாக்கும் பணியில் இருந்தார். அந்நிய படையெடுப்பின்போது நமக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார் என்று நானும் வஞ்சனின் தந்தையும் நினைத்திருக்கும் வேளையில், அந்நிய நாட்டோடும் கரம் கோர்த்து நாட்டை சுரண்டும் முயற்சியில் தந்திரம் செய்திருக்கிறான் அவன்.
எனது உடல் யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று எண்ணியவன், அரையுயிராய் கிடந்த என்னை தேர்க்காலில் கட்டி வெகுதூரம் அனுப்பிவிட்டான். உடலில் காயங்களோடு, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அம்பு தைத்த நெஞ்சோடு வாழ்விற்கும் சாவிற்கும் போராடிக் கொண்டிருந்தவனை இங்கு தவமிருக்க வந்த அகோரிகள்தான் காப்பாற்றினர். உடல் காயங்களுக்கு மருந்தளித்தவர்களால் என் உள்ளக்கனலுக்கு மருந்திட இயலவில்லை.
மாதங்கள் கடந்து அவர்கள் பயணம் மேற்கொள்ளும் சமயம் அவர்களோடு என்னையும் அழைத்தார்கள். நான் மறுத்துவிட்டேன். எனக்கு தெரியும், நிச்சயம் நான் உன்னை சந்திப்பேன் என்று. அந்நாளிற்கு காத்திருந்து நடந்தவற்றை உன்னிடம் சொல்லவே இன்றுவரை என் உயிர்பறவை கூட்டை விலக்காமல் இருக்கிறது. இதில், சில நாட்களில் உன் அன்னையையும் இழந்துவிட்டாய். அறிவேன் செந்தூரா. நீ எப்படி துரோகிகள் வலையில் சிக்காமல் இருக்கின்றாயோ என்றே அனுதினமும் நான் பிரார்த்திக் கொண்டிருக்கிறேன்” அந்த இடமே பேரமைதி கொண்டது.
“உடனே உங்களை என்னோடு அழைத்துச் செல்கிறேன் தந்தையே. அந்த செம்பியனையும் அவனின் நாட்டையும் தன்வசப்படுத்துகிறேன்.”
“அது மட்டும் போதுமா செந்தூரா?”
“வேறு என்ன செய்ய வேண்டும் தந்தையே? ஆணையிடுங்கள்” தன் வாளைப் பிடித்தவாறு அவன் சொன்ன தோரணை உள்ளம் சிலிர்க்க வைத்தது.
இந்நொடி எதையும் ஆராயாது தந்தை சொல்வதை சிரமேற்கொண்டு செய்யும் நிலைக்கு ஆளானான் செந்தூரன்.
“அகோரிகள் செல்லும் முன் என்னிடம் சிலவற்றை சொல்லிச் சென்றார்கள் செந்தூரா. நீ யட்சினியின் உதவியால் நாட்டைக் காப்பாய் எனவும், நாட்டின் இன்னலை சரி செய்ய நீயும் வஞ்சனும் பொதிய மலைக்கு வருவீர்கள் எனவும் அச்சமயம், சித்தமுனியின் கலசம் உன்னிடம் இருக்கும் எனவும் கூறினார்கள். அந்த கலசநீரை சிறிதை நான் அருந்தினால், இந்த மூப்பு நோயிலிருந்து விடுதலை கிட்டிவிடும். யார் நம்மை வஞ்சித்தார்களோ அவர்கள் முன்பு நான் இன்னும் வீழவில்லையடா மூடா என்று நிற்க வேண்டும்.
மற்றுமொரு துர்செய்தியையும் பகிர்ந்தார்கள் செந்தூரா”
“என்ன தந்தையே?” செந்தூரனின் மனம் தடுமாறியது.
“இன்றைய நாள் அறுபது வருடங்களுக்கு ஒருமுறை மட்டும் வரும் முழுநிலவு நாள். கிரகங்களின் மாறுதலால் இன்று இரவுக்குள் வஞ்சன் வீழ்வான். செம்பியன் கொங்கு நாட்டை வசம் செய்வதற்குள் நாம் கொங்குநாட்டின் ஆட்சியை பிடித்திருக்க வேண்டும். உன்னை தவிர்த்து இந்த கொங்கு பிரதேசத்தை யாராலும் சிறப்பாக ஆள முடியாது செந்தூரா. இந்த இருவிசயங்களையும் நீ மக்களுக்காக செய்துதான் ஆகவேண்டும்.”
முன் சொன்ன விசயங்கள் மனத்தில் நெருடலாக இருந்தாலும், பின் சொன்ன விசயங்கள் அவனை சிந்திக்க வைத்தன. ஏற்கனவே கொங்கு நாட்டை முழுவதும் தன் கட்டுப்பாட்டில் இருந்தால், எப்படியெல்லாம் மக்களின் நல்வாழ்வுக்கு கொண்டு வரவேண்டும் என்ற எண்ணக்கிடங்கில் இருந்தவனுக்கு அவனின் தந்தை சொன்ன வார்த்தைகளே பிரதானமாக இருந்தது.
மேலும், அவரை வீழ்த்த நினைத்தவர்களின் எண்ணத்தை தவிடுபொடியாக்கி பழைய வீரனாய் அவரை அழைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணமும் எழுந்தது.
சிவனின் காப்பு அவனின் கையில் இல்லாததும், கிரகநிலை மாற்றமும் அவனின் எதிரில் நிற்பது அவனின் தந்தையே இல்லை என்கின்ற உண்மையை அவன் கண்ணிற்கு மறைத்து விட்டது. செந்தூரனின் புத்தி சாதூர்யம் இவ்விடத்தில் சறுக்கித்தான் போனது. அவனின் சுயநலமும், ஆசைக்கான தூபமும் சற்று மேலே வர, மற்றவையெல்லாம் மங்கித்தான் போயின. இத்தனை வருடங்கள், அன்னை தந்தை இல்லாது அவன்பட்ட இரணங்களும், முதுகுக்குப் பின் அடைந்த அவமானங்களும் கொங்கு தேசத்தை தன் தந்தையோடு ஆள வேண்டும் என்ற எண்ணத்தை ஆழ விதைத்தது. நெல்லுக்கு இரைக்கும் நீர் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம். கலசநீர் கொஞ்சமேனும் தன் தந்தையின் உடலுக்குள் சென்றாலே அவர் குணமாகிவிடுவார் என்று எண்ணியவன், நீரை பருக வைத்தான்.
தியானத்தில் அமிழ்ந்திருந்த சித்தமுனி, சட்டென்று கண் விழித்தார். ‘தவறிழைத்துவிட்டாய் செந்தூரா! மாபெரும் தவறிழைத்துவிட்டாய். விதியின் வசத்தால், என் தவப்பலனாய் யாம் பெற்ற நீரை பாவம் செய்தவனுக்கு புகட்டிவிட்டாய். இனி நடக்கவிருக்கும் அனைத்து இன்னல்களுக்கும் நீ ஒருவனே காரணமானவனாவாய். நமசிவாய’
நீரை பருகியவுடன் தனது சுயஉருவத்திற்கு வந்தான் செந்தூரனின் தந்தை வடிவத்தில் இருந்த செம்பியனின் தந்தை கடுங்கோ கொங்கிளக்கேசர்.
“நீ…” கொங்கிளக்கேசரின் உருவத்தைக் கண்டு திகைத்த செந்தூரன், அதிர்ந்து நிற்க, காளிங்கனின் படைகள் அவனை சூழ்ந்தது.
“நான்தான்! நானேதான் செந்தூரா! உன் தந்தையின் நெஞ்சில் அம்பு தைத்தவன். அவனின் உடல்கூட யாருக்கும் கிடைக்காமல் செய்தவன்.”
“நயவஞ்சகப் பேடியே! உன்னை” வாளை உருவ முற்பட்டான். அதற்குள் காளிங்கன் அவனின் கழுத்தில் வாளை வைத்திருந்தான்.
“என்னடா, திமிறிக்கொண்டு வருகிறாய். நீ அறியாத செய்தி ஒன்றை கூறுகிறேன் கேள். அரண்மனையில் உன் கந்தர்வ காதலி கருவுற்றிருக்கிறாள் தெரியுமா?”
அதிர்விலும் பெரும் அதிர்வு செந்தூரனிற்கு. அதனைக் கண்டு கொங்கிளக்கேசரும் காளிங்கனும் நகைக்க, தன் முகத்திரையை விலக்கி வந்தாள் நீலா.
“அன்பரே! வேள்வி முடியும் தருவாயில் இருக்கிறது. கலசநீர் கொடுங்கள்” என்றாள்.
“நீலா? அப்போதே உன்மேல் நான் சந்தேகம் கொண்டேன். இப்படி துரோகியாய் மாறுவாய் என்று நான் துளியும் எண்ணவில்லை. மஞ்சரி நின்மேல் அத்தனை நட்பாய் இருந்தாளே, அவளை ஏமாற்ற உனக்கு எப்படி துணிவு வந்தது.?” ஆக்ரோசமாகக் கத்தினான் செந்தூரன்.
எள்ளல் புன்னகை ஒன்றைச் சிந்தியவள், “நட்பாய் இருந்தால், என் சாபத்திற்கு விமோச்சனம் அவளால் நல்கிட இயலுமா? யார் துரோகி நானா? யட்சினியின் துணைக்கொண்டு நாட்டை கட்டுக்குள் வைத்துவிட்டால் நீ பெரிய வீரனா? நானாவது என் சுயநலத்தைதான் முன்னிறுத்தினேன். ஆனால், நீயோ? திடீரென கண்ட உன் தந்தையின் உருவத்தைக் கூட அடையாளம் காண இயலாமல் அவர் சொன்னதற்காக மொத்த கொங்கு நாட்டையும் ஆளும் எண்ணத்திற்கு வந்துவிட்டாய். இப்போது சொல், யார் துரோகி?” சீறினாள் மங்கையவள்.
“அனைத்தும் உங்களின் சதிதானோ? முட்டாள்களே! யட்சினியின் உதவியால் நான் நாட்டை ஆளவில்லை. அவள் எனது கைப்பாவை மட்டுமே. வீரமிருப்பின் கைவிலங்கை அவிழ்த்துவிட்டு மற்போர் செய்துபாருங்களடா. அறிவுக்கெட்ட அரக்கர்களே. நீ அகோரி என்று சொன்னபோதே நான் சுதாரித்திருக்கவேண்டும். பாசம் என்னும் மாயை கொண்டு சாதித்துவிட்டதாய் மார்த்தட்டிக் கொள்ளாதே! முடிந்தால், என்னோடு போர் புரிந்து பெற்றுக்கொள்ளுங்களடா நாட்டையும் கலசத்தையும். பிச்சையாகக் கொடுக்கிறேன். பிழைத்துக் கொள்ளுங்கள்”
செந்தூரனின் கழுத்தில் இருந்து வாளை எடுத்தவன், கோபமாக அவனின் நெஞ்சில் எட்டி உதைத்தான் காளிங்கன். “யாருக்கு யார் பிச்சை இடுவது? இன்னும் சற்று நேரத்தில் நீயும் கல்வராயன் மலைக்கு சென்றுக்கொண்டிருக்கும் உன் ஆருயிர் நண்பனும் மடிந்து மண்ணிற்கு உரமாகப் போகிறீர்கள். உங்களை வீழ்த்த தெரிந்த எங்களுக்கு, அரண்மனையில் இருக்கும் பெண்களை வீழ்த்துவதா கடினம். இவ்வேள்வி முடிந்ததும், நீலா அவளின் சுய உருவத்திற்கு வந்திடுவாள். அதனைக் கண்கொண்டு கண்டபின் மடிந்துபோடா. வீரர்களே! இவனை சங்கிலியால் பிணைத்து விடுங்கள்” உத்தரவிட்டவன், வேள்வி நடக்குமிடத்திற்கு சென்றான்.
செந்தூரன் மூளை விரைந்து இங்கிருந்து தப்பிக்க வேண்டிய வேலையில் ஈடுபட்டது. ‘வஞ்சனைக் காப்பாற்ற வேண்டும். அங்கு மஞ்சரி கருத்தரித்திருக்கிறாள் என்றால், நிச்சயம் பஞ்சம் விலகும். ஆனால், நாட்டை ஆள மன்னர் வேண்டுமே! இங்கிருந்தால் யட்சிணியால் நமக்கு உதவிட இயலாது. எப்படியாவது கோட்டை வாயிலை நெருங்கிட வேண்டும். அங்கிருந்து நினைத்த நொடி யட்சிணி வந்துவிடுவாள். இச்சூழ்நிலையில், அவளைத் தவிர்த்து நமக்கு யாராலும் உதவிட இயலாது. இறைவா! இக்கயவர்களிடமிருந்து எம்மக்களை காத்தருள வேண்டுகிறேன். என் புண்ணிய பலன்கள் அனைத்தையும் இந்நொடி நின் திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன். நாட்டு மக்களையும் துரோகத்தால் சூழ்ந்திருக்கும் என்னவளையும் காப்பாற்றிடப்பா!’ திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பதுபோல் தனது வேண்டுதல்களால் இறைவனை மனமுருகி தியானித்தான். விதியின் கணக்கிற்கு இறைவனும் பதிலெழுதித்தான் ஆகவேண்டும். இனி அனைத்தும் காலப்பயன்.
வேள்வி முடியும் தருவாயிலிருக்க, கலசநீரை சிறிது அருந்திய நீலாவும் காளிங்கனும் ஒன்றாக வேள்வியில் குதித்தார்கள். அந்நொடி சித்தமுனி அளித்த சாபம் நீங்கப்பெற்று இருவரும் நாகமாக உருவமெடுத்தனர்.
இதனை பார்த்துக் கொண்டிருந்த செந்தூரனிற்கு மட்டுமல்ல, கொங்கிளகேசரும் சற்று அதிர்ந்துதான் போனார். நீலா மட்டுமே சாபம் பெற்றவள் என்று எண்ணிக் கொண்டிருந்த அவருக்கு, தனது பெயரன் காளிங்கனும் நாகஉருவெடுத்தது அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
“காளிங்கா! என்ன நடக்கிறது இங்கே?” கோபத்தில் அவரின் முகம் கனன்றது.
“தாத்தா! நீலா சாபம் பெற காரணமாக இருந்ததே நான்தான். ஆகவே, அவளோடு கூடி அவளின் சாபத்தை நானும் பெற்றேன். இனி யார் நினைத்தாலும் என்னையும் என்னவளையும் பிரித்திட இயலாது” என்றான்.
“என்ன பிதற்றல் இது? மனிதஉரு எடு காளிங்கா. செம்பியனுக்கு நான் என்ன பதிலளிப்பேன்?” ஆட்சியைப் பிடிக்க தனது பெயரனை தன்னுடன் அனுப்பிய மகனிடம் இனி அவன் தேவநாகவேடர் குலத்தவரோடு சேர்ந்துவிட்டான் என்று எப்படி மொழிவார் இந்த கொங்கிளக்கேசர்?
“தாத்தா! எனக்கு நாடும் பதவியும் எதுவும் வேண்டாம். இவள் ஒருவளே எனக்கு போதும்.”
“காதல் பித்தால் உளறாதே! அவளின் தந்தை நிச்சயம் உன்னை ஏற்றுக் கொள்ளமாட்டார். மகளுக்காக நாடோடியாய் விமோச்சனம் தேடி அலைந்துக் கொண்டிருப்பவர், உன்னால்தான் அவள் சாபம் பெற்றாள் எனத் தெரிந்தால் நிச்சயம் உன்னைக் கொன்று குவித்துவிடுவார்”
இவர்களின் சம்பாஷைணைகளில் செந்தூரன் முக்கியமான விசயத்தைக் கண்டுக்கொண்டான். ‘ஓ, அப்போது நான் வைத்தியம் அளித்த அந்த இராஜநாகம்தானே தேவநாகவேடர் குலத்தின் தலைவர். வசமாய் சிக்கிக்கொண்டீர்களடா’ என்று நினைத்தவன் எக்காளச் சிரிப்பு சிரித்தான்.
அவனின் சிரிப்பில் அனைவரின் கவனமும் செந்தூரனிடம் சென்றது. “அடேய், என்ன இங்கு கேளிக்கையா நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது? இப்போது நீ நிறுத்துகிறாயா இல்லையா?” கத்தினார் கொங்கிளக்கேசர்.
“வயது முதிர்ந்த கிழமே! இனி நீர் என்ன நினைத்தாலும் என்னைத் தடுக்க முடியாது. நீலா! இந்நொடி நான் உனக்கு ஆணையிடுகிறேன். என் கைவிலங்கை அவிழ்த்துவிட்டு, இருவரும் வீரர்களை தாக்குங்கள்.”
தேவநாகவேடர் குலத்தலைவன் செந்தூரனிற்கு அளித்த நாகவசியக் காப்பும், அவர் கொடுத்த வாக்கும் சரியான நேரத்தில் செந்தூரனிற்கு உதவியது. சற்று நேரத்தில் காளிங்கனும் நீலாவும் அவர்களின் சுயத்திலேயே இல்லை. காளிங்கன் மனித உருவெடுத்தவன் செந்தூரனின் கைவிலங்கை அவிழ்த்துவிட, நீலா நாகமாய் மாறி அனைவரையும் தாக்கினாள். பின், காளிங்கன் மீண்டும் நாகமாய் மாற, நீலாவும் காளிங்கனும் கொங்கிளக்கேசர் முன் படமெடுத்து நின்றனர், கருநிற இராஜநாகமாய்.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
3
+1
+1