சுழலி-25
பயணம் தொடங்கி இன்றோடு பதினைந்து நாட்கள் ஆகிறது. பொதிய மலையை வந்தடைந்து பன்னிரெண்டு நாட்கள் ஆகிறது. மூன்று நாட்களாக அனைவரும் சித்தமுனியைத்தான் தேடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அவரைக் கண்டுபிடிக்கத்தான் முடியவில்லை.
படைவீரர்களும் குதிரைகளும் சோர்ந்துதான் போயின. வஞ்சனுக்கு நம்பிக்கை சிறிது சிறிதாக குறைந்துக் கொண்டே வந்தது.
“செந்தூரா, நம் படைகளுக்கு சற்று ஓய்வு வேண்டும். அனைவரும் சோர்ந்துபோய் இருக்கின்றனர்.”
“ஆகட்டும் வஞ்சா, இன்னும் சற்றுத் தொலைவில் ஒரு அருவி இருக்கிறது. அங்கு கூடாரம் அமைத்து விடலாம்.”
“சரி, ஏன் இன்னும் நம்மால் சித்தமுனியைக் காண இயலவில்லை செந்தூரா? எனது நம்பிக்கைக் குறைந்துக் கொண்டே வருகிறது.” குரலில் வருத்தமும் இயலாமையும் மேலிட்டது.
“எந்த சூழ்நிலையிலும் உனது நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதே வஞ்சா. இது நமக்கான பரீட்சை என்றே வைத்துக்கொள்ளேன். அவர் நம்மை சோதித்துப் பார்க்கிறார். அதனால்தான் இன்னும் அவர் நம் கண்களுக்குப் புலப்படவில்லை. நிச்சயம், அவர் நம்முடன்தான் பயணிக்கிறார் என்று என் உள்மனம் அடித்துக் கூறுகிறது”
“எனக்குக் கோதையின் நினைவாகவே உள்ளது நண்பா. நாங்கள் என்ன பிழை செய்துவிட்டோம்? ஏன், இன்னும் எங்களுக்கு பிள்ளைப் பேறு கிடைக்காமல் இருக்கிறது? அவள்முன் நான் நன்றாக இருந்தாலும், என் மனதும் பிள்ளைக்காக ஏங்கியே தவிக்கிறது நண்பா. பெண்ணவள், அழுது அவளின் துயரங்களை கரைத்துவிடுகிறாள். நான் என்ன செய்ய?” கலங்கித் தவித்தான் வஞ்சன்.
மலையுச்சியிலிருந்து சில்லென்று விழுந்தது அருவி நீர். அதன் தாழ்வாரத்தில் அனைவரும் தத்தமது உடைமைகளை இறக்கி, இளைப்பாறினர். செந்தூரனும் வஞ்சனும் அருவியில் குளித்துக் கொண்டிருக்க, செந்தூரனின் காலை உரசிச் சென்றது ஒரு மாணிக்க நாகம்.
உணர்ந்தவன், சில நிமிடங்கள் அசையாது நின்றான். அது மெதுவாக அருவியின் பின்புறம் சென்றது. அதனை கூர்ந்து கவனித்தவன், உடனடியாக மேலாடையை உடுத்திக் கொண்டு அவ்விடத்திற்கு வந்தான்.
“வஞ்சா, விரைந்து ஆடையை உடுத்திக் கொண்டு என்னுடன் வா. மற்றனைவரும் இங்கிருக்கட்டும்” என்றவன், வஞ்சனை மட்டும் உடனழைத்து சென்றான்.
அருவிக்கு அடியில் குகை போன்ற அமைப்பு ஒன்று சென்றது. அதன் வழிதடத்தை பின்பற்றியவாறே இருவரும் சென்றனர். வேங்கை மலர்களை தன் வாயில் கவ்வியபடி முன்னே சென்றுக் கொண்டிருந்தது அந்த மாணிக்க நாகம்.
வஞ்சனுக்கு பேச்சே எழவில்லை. ஒருவித பயமும் தோன்றியது. ஆனால், செந்தூரனோ ஆனந்த அதிர்ச்சியில் இருந்தான். அவன் கேள்விப்பட்டவரை மாணிக்க நாகத்தை காண்பது அபூர்வத்திலும் அபூர்வம்.
அதுவும் தற்போது அது வேங்கை மலர்களை எடுத்துக் கொண்டு செல்கிறது என்றால், நிச்சயம் சிவபெருமானை வழிபாடு செய்யவே செல்லும் என்பதை அறிந்துக் கொண்டான். செந்தூரனிற்கு மற்றொரு கேள்வியும் உதித்தது. ஒருவேளை இவர்தான் சித்தமுனியாக இருக்குமோ? ஆனால், அதனை தற்போது வாய்திறந்து கேட்டு இந்த பொன்னான தருணத்தை அவன் இழக்க விரும்பவில்லை. இருவரும் சத்தமின்றி அதனைப் பின்தொடர்ந்தனர்.
செந்தூரன் யூகித்தப்படியே குகையின் முடிவில் சுயம்புலிங்கம் இருந்தது. அந்த இடமே அத்தனை சுத்தமாகவும் பராமரிக்கப்பட்டும் இருந்தது. நிச்சயம், இவ்விடத்தை யாரோ பராமரித்து வருகின்றனர் என்பதை இருவரும் உறுதிப்படுத்திக் கொண்டனர்.
இந்த பன்னிரெண்டு நாட்களும் சிவன்காப்பால் பல அமானுஷ்ய சக்திகளை அசாதாரணமாகக் கடந்து வந்துவிட்டான் செந்தூரன். எதையும் யாரிடமும் அவன் சொல்லவில்லை. தற்போது அதே சிவன்காப்பின் உதவியால்தான் யார் கண்ணிற்கும் தெரியாத மாணிக்க நாகம் இவன் கண்ணில் பட்டது. ஒருவேளை இவன் கண்ணில்பட வேண்டும் என்பதற்காகத்தான் அவன் காலில் ஊர்ந்து சென்றதோ?
சிவனின் லிங்கத்தில் மேல் ஏறி எம்பெருமான் அவன் தலையில் வேங்கை மலர்களை வைத்த மாணிக்க நாகம், பாந்தமாக அவனின் கழுத்தை சுற்றி படமெடுத்து நின்றது. அந்த கண்கொள்ளாக் காட்சியை கண்ட இருவரும் நெடுஞ்சாணுக்கிடையாக விழுந்து வணங்கினர்.
“ஓம் நமசிவாய! எம்பெருமானே, தங்களின் திருக்கோலத்தைக் காண நாங்கள் என்ன பாக்கியம் செய்தோம் என்று தெரியவில்லை. புளகாங்கிதம் அடைந்தோம் எம் அப்பனே! இன்னல்களை களைந்து உபாயம் வேண்டி வந்துள்ளோம். அருள்புரியப்பா” இருவரும் மனமாற வேண்டினர்.
சட்டென்று அந்த மாணிக்க நாகம் மனித உருவெடுத்தது. செந்தூரனின் யூகம் பொய்த்துப் போகவில்லை. சித்தமுனிதான் அவர்.
“மூவைந்து நாட்களாக நான் உங்களை கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். இருவரும் நாட்டிற்காக வந்துள்ளீர்கள் என்பது எனது எண்ணம். ஆனால், இதில் யாருக்கு நான் உபாயம் கூறுவது?” அவர் கேட்ட கேள்வியில் இருவரும் திகைத்துதான் போயினர்.
ஆம், இருவரும் இருவேறு எண்ணங்களோடு வந்திருந்தனர். அதை பட்டென்று உரைத்தவுடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
வஞ்சன், “முனிவர் அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். சுவாமி, கிரக நிலைப்படி எமது கொங்கு நாடு ஆபத்தினை எதிர்நோக்கியுள்ளது. பல வீரார்கள் படையெடுத்து வந்தாலும் எதிர்கொண்டு தாக்கி போர் புரிவோம். ஆனால், அதையும் மீறி ஏதோவொன்று நடக்கவிருப்பதாய் உள்ளம் எண்ணி தவிக்கிறது. நாட்டு மக்கள் அனைவரும் பசிப்பிணியால் அவதியுறுகின்றனர். ஒரு அரசனாக அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.” என்றான்.
அவர் புன்னகையோடு செந்தூரனைப் பார்த்தார். அவரின் கண்பார்வையின் அர்த்தத்தை அறிந்துக் கொண்டவன், தான் வந்ததற்கான காரணகாரியத்தை சொல்லலானான்.
“நீங்கள் எண்ணியது சரியே! நாங்கள் இருவரும் நாட்டின் நலனிற்காக வந்திருந்தாலும், இருவரின் கோரிக்கையும் வேறுதான். இவன் என் நண்பனாக இருந்தாலும் மாபெரும் கொங்கு தேசத்தை கட்டியாளும் வேந்தள். ஒரு நண்பனாகவும், அவனின் வாழ்வு நலம்பெற வேண்டியும் எனக்கான உதவியினை தங்களிடம் யாசிக்கவே வந்தேன் யாம். என் சகோதரி கோதைக்கு இன்றுவரை பிள்ளைப் பேறு உண்டாகவில்லை. அரசாள வாரிசு ஒன்று இல்லையென்றால் மற்ற நாட்டினர் எளிதாக எங்களை எதிர்கொள்ளவியலும். மேலும், என் நண்பன் பெயர்சொல்லவும் அவனின் வம்சம் தழைக்கவும் உபாயத்தை நீங்கள் வழங்குவீர் என்றே நான் உங்களைத் தேடி வந்துள்ளேன்” தன் எண்ணமதை சொன்னவுடன் வஞ்சனின் கண்கள் கலங்கித்தான் போனது.
இந்நாள்வரை முக்கிய சிலரைத் தவிர்த்து யாருக்கும் செந்தூரன் தனது நண்பன் என்று வஞ்சன் உரைத்தது கிடையாது. செந்தூரனும் அப்படித்தான். எந்த சூழ்நிலையிலும் நாடாளும் வேந்தள் இக்குறுநில மன்னனின் நண்பன் என்று இவனும் மார்த்தட்டியது கிடையாது. ஆனால், இருவரும் இன்றுவரை இணைபிரியா நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். ஆனால், விதி என்ற ஒன்று இவர்களை நோக்கி ஆயதம் ஏந்தி வருகையில் இருவரும் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
இருவரையும் புன்னகையோடு பார்த்தார் சித்தமுனி. சிறிது நேரம் கண்மூடி தியானத்தில் அமர்ந்தவரின் முகம் கலக்கம் கொண்டது. அறிந்துவிட்டார் இனி என்ன நடக்கப் போகிறது என்று. நீண்ட பெருமூச்சு அவரிடம்.
“பிள்ளைகளே! இருவரில் ஒருவருக்கு மட்டுமே என்னால் உபாயம் தரவியலும். அதில் யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.” என்றார்.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, வஞ்சன் தன் முடிவினை கூறினான்.
“நாட்டு மக்களின் நலனே தற்போது முக்கியம் சுவாமி. அதற்கான உபாயத்தை மொழியுங்கள்”
தனது நண்பன் இப்படித்தான் கூறப்போகிறான் என்பதை முன்னரே அறிந்துதான் இருந்தான் செந்தூரன். மனதை திடப்படுத்திக் கொண்டான். அவனின் எண்ணங்கள் எத்தனை எத்தனை கனவுகளை கொண்டு இருந்தது.
எப்படியேனும் கோதைக்கு பிள்ளைப் பேற்றிற்கான உபாயத்தை அறிந்துவிட்டால், வஞ்சனின் உயிர் நிச்சயம் தப்பிக்கும். நான் இல்லாவிடினும் மஞ்சரிக்கு நல்வாழ்வு அமைத்து தருவான். தேசம் செழிக்க உபாயம் இதுவே. கோதையின் பிள்ளையால் மட்டுமே நாடு வளம்பெறும். நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்க இவராலும் தற்காலிக உபாயத்தை மட்டுமே நல்க இயலும். அதற்குப் பின்? நடக்கப் போவதை எண்ணி மனது கலங்கியது. தான் மடிந்து போவது உறுதி என்பதை அறிந்துக் கொண்டான். அதற்குள் வஞ்சனையும் படைவீரர்களையும் பாதுகாப்பாக நாட்டிற்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் முடிவெடுத்தான்.
வஞ்சனின் பதிலைக் கேட்ட சித்தமுனி ஏதும் பேசவில்லை. செந்தூரனின் எண்ணவோட்டமும் அவர் அறிந்ததே! தன்னால் இனி என்ன செய்ய இயலும்? என்று எண்ணியவர், எம்பெருமானை வணங்கி உபாயத்தை கூற முன் வந்தார்.
“வஞ்சா! இந்நொடிவரை நீ நாட்டு மக்களுக்காக எண்ணுவதைக் கண்டு மனம் மகிழ்ச்சியடைகிறேன். உன் நாட்டின் கல்வராயன் மலையின் உச்சியில் ஒரு வனக்காடு இருக்கிறது. அங்கு உனது முன்னோர்கள் பன்னெடுங்காலமாக புதையலை புதைத்து வைத்திருக்கின்றனர். அள்ளஅள்ள குறையாத செல்வங்களும் தானியங்களும் அங்கிருக்கிறது. அதனைக் கொண்டு மக்களின் குறைகளை நிவர்த்தி செய். கிரகநிலை மாறுபாட்டால், இன்னும் சில மாதங்களில் பெரும் படையெடுப்பு ஒன்று நிகழும். அதற்கு உடனே முன்னேற்பாடுகளை செய்துவிடு.” என்றவர், செந்தூரன் பக்கம் திரும்பினார்.
“செந்தூரா! உன் எண்ணமதை நான் அறிவேன். இந்த கமண்டல நீரை பாதுகாப்பாக எடுத்துச் செல். நடுவில் எந்த மனமாறுதலும் இன்றி இதனோடு நீ கோட்டையை நெருங்கிவிட்டாய் எனில், நடக்கவிருக்கும் பல இன்னல்கள் தவிர்க்கப்படும். நீ எண்ணியதுபோல் பெரும் இழப்பிலிருந்து அனைத்தையும் தடுத்துவிடலாம். இது உனது நல்லெண்ணத்திற்கும் உன் நட்பின் ஆழத்திற்கும் இறையருளியது. பத்திரம்.” அதனை வாங்கியவன் கண்கள் நன்றி நவிழ்ந்தது. ஒரு புதிய நம்பிக்கை அவனுள் துளிர்விட்டது.
“இருவரும் பாதுகாப்பாக இம்மலையை விட்டு செல்லுங்கள். இந்த நீருக்காக பல சக்திகள் காத்துக் கொண்டிருக்கிறது. அதனைப் பத்திரமாக எடுத்து செல்ல சேயோன் துணையிருப்பான்.” என்றவர், மாணிக்க நாகமாக மாறி அங்கிருந்து நகர்ந்தார்.
இருவருக்கும் மகிழ்ச்சி தாளவில்லை. மீண்டும் சிவபெருமானை வணங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். ஒரு ஓலையில் வஞ்சன் படைகளோடு உபாயத்தை நோக்கி கல்வராயன் மலைக்கு செல்வதாகவும், செந்தூரன் கோட்டைக்கு வந்துக் கொண்டிருப்பதாகவும் எழுதி புறாவின் மூலமாய் அனுப்பி வைத்தனர். வெளியே வந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
…..
கொங்கு நாடு.
ஈரைந்து நாட்களாக குடமுழுக்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆலயத்தை மேற்பார்வையிட வந்திருந்தாள் மஞ்சரி. அவளுக்குள் ஒரு எண்ணம் உறுத்திக் கொண்டே இருந்தது. ஆனாலும், அதனை முழுமையாக அறிந்திடாமல் யாருக்கும் சொல்ல அவள் எண்ணவில்லை. கோதைக்கும் குளிர்க்காய்ச்சல் கண்டுவிட்டதால் அனைத்து பணிகளையும் மஞ்சரியே செய்தாள்.
நீலாவின் உருவில் யட்சினி அவளோடு எந்நேரமும் இருந்தாள்.
“நீலா”
“தேவி”
“நாளைக்குள் குடமுழுக்கிற்கான ஏற்பாட்டை முடிக்க வேண்டும். நாளை வேள்வி துவங்கினால்தான், ஒரு மண்டலம் முடியும்தருவாயில் குடமுழுக்கினை நிகழ்த்த முடியும். பணிகள் விரைந்து நடப்பதுபோல் தெரியவில்லையே. ஏன், பணிகள் மெதுவாக நடக்கிறது?”
“நானும் விரைவுப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறேன். தானியங்களும் வந்துக் கொண்டுதான் இருக்கிறது. இருந்தும் ஏன் பணி தாமதமாகிறது என்று தெரியவில்லை” இருவரும் பேசிக்கொண்டே பணிகளை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அரண்மனை மருத்தவர் அனுப்பி வைத்ததாய் காவலன் ஒருவன் வந்தான்.
“இளவரசிக்கு எனது வந்தனங்கள். அரசியார் உடனே உங்களை அழைத்து வரச் சொன்னார். மன்னரிடமிருந்து தூது வந்திருக்கிறது” என்றவன், கையோடு அழைத்துச் சென்றான்.
அவள் இந்தப்பக்கம் சென்றவுடன், செம்பியன் ஏற்படுத்திய ஆட்கள், இன்னும் வேலைகளை தாமதப்படுத்தினர். நாளை வேள்வி துவங்கக் கூடாது என்பது அவரின் எண்ணமாய் இருந்தது.
…
அரண்மனை.
வீரர்கள் அனைவரும் குதூகலமாய் இருந்தனர். உபாயம் கிடைத்துவிட்டது என்ற செய்தி அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. நாட்டின் நிலை மாறும் என்று அனைவரும் களிப்புடன் இருந்தனர்.
“என்ன அவசரகாரியம் அண்ணியார் அவர்களே! ஓலையில் என்ன குறிப்பிட்டு இருக்கிறது?” அறைக்குள் நுழைந்தவுடன் வினாவை எழுப்பினாள். அந்த ஓலையில் தன்னவனை பற்றி ஏதேனும் குறிப்பிட்டிருக்கிறதா என்ற கேள்வியும் உள்ளுற எழுந்தது.
“இளவரசியே, நீங்கள் அத்தையாகப் போகிறீர்கள். நம் மகாராணியார் கருவுற்றிருக்கிறார்.” மகிழ்வான செய்தியை கேட்டதும் மஞ்சரிக்கு தலைகால் புரியவில்லை. யட்சினிக்கும் ஆனந்த அதிர்ச்சிதான். மேலும், ஓலையில் குறிப்பிட்ட செய்தியைக் கேட்டதும் மஞ்சரிக்கு ஒருபுறம் மகிழ்வாக இருந்தாலும், இந்த நல்ல செய்தியைக் கேட்க சகோதரன் எப்போது வருவார் என்றே தோன்றியது.
திடீரென்று மஞ்சரிக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வர, அப்படியே இருக்கையில் அமர்ந்தாள்.
“தேவி, என்னவாயிற்று?”
“ஒன்றுமில்லை, வெகுநேரமாக வெயிலில் நின்றது தலைசுற்றுவதுபோல் இருக்கிறது நீலா. சிறிது நீர் கொணர்ந்து வாயேன்” முகத்தில் சோர்வு அதிகப்படியாய் தெரிந்தது.
மருத்துவச்சி, மஞ்சரியின் நாடியைப் பிடித்துப் பார்க்க, அனுபவம் நிறைந்தவர் முகத்தில் அத்தனை அதிர்ச்சி.
“இளவரசியாரே! காலையில் உணவு உண்டீர்களா?” எப்படியேனும் அவளைத் தனியே அழைத்து விசயத்தை கூறிவிட வேண்டும் என்று எண்ணினார் மருத்துவச்சி.
“இல்லையம்மா! ஆலயப்பணிகள் கவனிக்க வேண்டியிருப்பதால் நான் காலை உணவை மறந்துவிட்டேன்”
“அதனால்தான் இப்படி. இனி நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.” என்றவர், கொஞ்சம் குரலைத் தாழ்த்தி, “இரட்டைக் கருவைத் தாங்குகிறீர்கள் இளவரசி. பத்திரமாக இருங்கள்” என்று சொல்லிவிட்டு சென்றார். அருகேயிருந்த யட்சினிக்கு அவர் சொன்னது தெளிவாகக் கேட்டது. அதிர்ச்சியோடு மஞ்சரியைப் பார்த்தாள். இது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. மஞ்சரிக்கும் அதே அதிர்ச்சிதான். முதல் கூடலிலேயே கருவுற்றுவிட்டாள். இவர்கள் கந்தர்வ மணம் செய்துக் கொண்டது தெரிந்திருந்தாலும் தற்போது அவன் உடனில்லையே என்றுதான் மனம்பாடாய் படுத்தியது.
செந்தூரனை எண்ணி கண்கள் அனிச்சையாய் கலங்கியது. ‘விரைந்து வாருங்கள். உங்களுக்காக மூவர் காத்துக் கொண்டிருக்கிறோம்’ என்று வருந்தியவளை, யட்சினிதான் இச்சமயத்தில் அவளுக்கு ஆதரவாய் இருந்தாள்.
மயக்கத்திலிருந்து எழுந்த கோதையும் மருத்துவச்சி சொன்னதைக் கேட்டு, மகிழ்வதா அதிர்வதா என்று தெரியாமல் ஏதோ ஒரு நிலையில்தான் இருந்தாள். செந்தூரன் வந்ததும், விரைந்து இருவருக்கும் திருமணம் நிகழ்த்திவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தாள்.
இன்னும் பன்னிரெண்டு நாட்கள் காத்திருக்க வேண்டும். எப்படியும் வஞ்சன், மலைவழியினைப் பின்பற்றி கல்வராயன் மலைக்கு சென்றிடுவார். ஆக, அவர் வருவதற்குள் செந்தூரன் வந்துவிட்டால் உடனடியாக திருமண வைபவத்தை நிகழ்த்திவிட வேண்டும் என்றே எண்ணினாள் கோதை.
…
ஆலயத்தில்…
செம்பியன் ஏற்பாடு செய்த ஆட்கள் வேலையை தாமதப்படுத்த, மற்றுமொரு கூட்டம் சதிசெய்துக் கொண்டிருந்தது.
“அவர் சொன்னதுபோல் அனைத்தும் ஏற்பாடாகிவிட்டதா?”
“ஆகிவிட்டது. இன்று இரவு திட்டம் நிறைவேற்றப்படும். துக்கக் காரியம் நிகழ்ந்துவிட்டால் ஆலயப்பணிகள் அனைத்தும் தடைப்பட்டுவிடும். அதற்குபிறகு அவர் பார்த்துக் கொள்வார்”
“நல்லது. நான் வைகறையில் சந்திக்கிறேன்” யாரோ இருவர் பேசிக்கொள்வதை அந்தப்பக்கம் சென்றுக் கொண்டிருந்த பணியாளன் ஒருவன் கேட்டுவிட்டான்.
உடனடியாக முன்னேற்பாடுகள் சிலதை செய்தவன், தான் அறிந்ததை இளவரசியிடம் தெரிவிக்க அரண்மனை நோக்கிச் சென்றான் அவன்.
அவன்மட்டும் அறிந்த சுரங்கவழியில் செல்ல அது முடிந்தது மஞ்சரியின் அறையில்.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
6
+1
+1