சுழலி-24
வீரன் சொல்லிச் சென்றதற்கிணங்க, வஞ்சனைக் காண வந்திருந்தான் செந்தூரன். முக்கியமானவர்கள் மட்டும் சந்தித்துக் கொள்ளும் பிரத்யேக மண்டபம் அது. வஞ்சனும், கோதையும் அமர்ந்திருக்க, முதன்மை அமைச்சரும், செம்பியனும் அங்கு இருந்தனர். செந்தூரனைத் தொடர்ந்து மஞ்சரியும் வந்திருந்தாள்.
“கோமானுக்கு எனது வணக்கங்கள்” வஞ்சனை வணங்கினான் செந்தூரன்.
“அமருங்கள் செந்தூரரே!” செந்தூரனும் அமர்ந்தான். மஞ்சரி, முதன்மை அமைச்சருக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர, செந்தூரன் செம்பியனுக்கு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
“கிரக நிலவரங்களை பற்றிய செய்தி உங்களனைவரையும் எட்டியிருக்கும். இன்னும் இரண்டு தினங்களில் நானும் செந்தூரனும் படைகளோடு பொதியை மலை நோக்கி புறப்படுகிறோம். சித்தமுனியை சந்தித்து நம் தேசத்திற்கான உபாயத்தை பெற்று வருவதே எங்களின் நோக்கம்.
நாங்கள் புறப்பட்ட நாளிலிருந்து ஒரு மண்டலத்திற்குள் நம் தேசத்திலும் தேசத்திற்கு கட்டுப்பட்ட அனைத்து இடங்களிலும் இருக்கும் ஆலயத்திற்கு குடமுழுக்கு செய்திடுங்கள். ஆலயப் பணிகள் அனைத்தும் மஞ்சரி கவனித்துக் கொள்வாள். அதேபோல், இருபத்தி நான்கு மணி நேரமும் வேள்விகளை நிகழ்த்திட உத்தரவிடுகிறேன்.
நிச்சயம், உபாயத்தை அறிந்த பின்னரே நாடு திரும்புவோம். நாடு திரும்பியதும், மஞ்சரிக்கு மங்கலநாணை கங்கை நாட்டு அரசர் எனது பால்ய நண்பன் செந்தூரன் அணிவான்” தான் பேச வேண்டியதையும், உத்தரவுகளையும் சொல்லி முடித்தான் வஞ்சன்.
கேட்ட மஞ்சரிக்கும் செந்தூரனுக்கும் மகிழ்ச்சி தாளவில்லை. ஆனால், செம்பியனுக்கு இதில் துளிக் கூட விருப்பமில்லை என்பது அவரின் முகத்திலேயே தெரிந்தது.
“மஞ்சரிதேவியின் திருமண சேதி பற்றி நீங்கள் வந்ததும் முடிவெடுத்துக் கொள்ளலாம் அரசே! தற்போது படைவீரர்களை திரட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பது எனது யோசனை” என்றார் செம்பியன்.
“ஏன் தங்களுக்கு இதில் விருப்பமில்லையா மாமா?” மஞ்சரிதான் பதற்றத்தோடு கேட்டாள்.
“எனது விருப்பத்தை இங்கு யாரும் கேட்கவில்லையே அம்மா. ஆட்சியில் இருப்பவர்களின் சொல்லிற்கு மறுப்பேச்சு சொல்ல எவருக்கும் துணிச்சலில்லை. தற்போது இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேசலாம் தேவி”
“எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசுமய்யா! அகம் ஒன்று வைத்து, புறமொன்று பேசவேண்டாம்” எள்ளலாக சொன்னான் செந்தூரன்.
“யாரும் அகத்தில் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை செந்தூரா. தற்போது இருக்கும் சூழ்நிலையைத்தான் நான் கூறுகிறேன். மக்கள் அனைவரும் பசிப்பிணியால் வாடும் தருவாயில் இதனைப் பற்றி பேசவேண்டுமா என்றுதான் கூறினேன்” வார்த்தைகளில் அதிருப்தி தென்பட்டது.
“இருவரும் வாக்குவாதத்தை சற்று நிறுத்துங்கள். அரசே! பயண ஏற்பாடுகளை நான் செய்கிறேன். எத்தனை வீரர்கள் வேண்டும் என்பதையும் பயணத்திற்கு தேவையான இத்தியாதிகளையும் நான் செந்தூரன் அவர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் அரசே!” என்ற முதன்மை அமைச்சர், அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
செம்பியனுக்கு உள்ளம் கனன்றது. ‘எனக்கு இந்த இடத்தில் அதிகாரமிருந்தும், உறவுமுறை இருந்தும் என்னுடைய சொல்லிற்கு மதிப்பேதும் இல்லை. இது மன்னராக எடுத்த முடிவா அல்லது யாரேனும் மன்னரை மூளைச்சலவை செய்துள்ளார்களா என்று தெரியவில்லை. என் மகன் காளிங்கன் இருக்கும்போது இந்த செந்தூரன் மஞ்சரிக்கா? விடக்கூடாது, இதைப் பற்றி கோதையிடம் பேச வேண்டும்’ மனத்தில் நினைத்துக் கொண்டார்.
வஞ்சன் இங்கு ஏதும் பேசவில்லை. அவனுக்கு சில செய்திகள் செவி வழிக் கேட்டது. அதனால், அனைவரும் என்னதான் முடிவு எடுக்கின்றனர் எனப் பொறுத்திருந்து பார்க்கலாம் என்றே அமைதிக் காத்தான்.
அரசவை கலைந்தது. செம்பியன் கோதையைத் தேடிச் சென்றார். செம்பியன் வருகைப் புரிந்த செய்தியை வீரன் ஒருவன் சொல்லிச் செல்ல, தனது தந்தையை வரவேற்க காத்திருந்தாள் கோதை.
“வாருங்கள் தந்தையே! அமருங்கள்”
“நலமாக உள்ளாயா என் மகளே?”
“என் நலத்திற்கு என்ன குறைவு தந்தையே? கொங்கு நாட்டையே கட்டியாளும் மன்னவருக்கு என்னை மணம் முடித்துக் கொடுத்திருக்கிறீர்கள். நாட்டின் மகாராணியாக திகழ்கிறேன், அதனைவிடவும் என் அன்பர் என்னை கண்ணிமைப்போல் காத்து வருகிறார். நான் மிகவும் நலமாக உள்ளேன் தந்தையே! ஆனால், தங்களின் முகமோ வாட்டமாக இருக்கிறதே? என்னவாயிற்று தந்தையே?”
“என்றுமே, எனது முகத்தை வைத்தே அகத்தை கண்டுக்கொள்கிறாய் கோதை நீ. மஞ்சரிக்கு செந்தூரனை மணம் முடிப்பதைப் பற்றி ஏன் என்னிடம் ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை?” ஆதங்கமாக வந்து விழுந்தன வார்த்தைகள்.
“இருவரும் ஒருவரையொருவர் மணமொத்து கந்தர்வ மணம் புரிந்தபின், யாரிடம் மொழிவது தந்தையே? செந்தூரன் ஒன்றும் சாதாரணமானவர் அல்லவே! கங்கைநாட்டையே தனது பால்ய வயதிலிருந்து கட்டியாளும் வீரர். இதுவரை நாட்டையும் நாட்டு மக்களையும் கருத்தாய் பாதுகாத்து வருபவர். நிச்சயம், மஞ்சரியை நன்முறையில் பார்த்துக் கொள்வார் தந்தையே!”
“அதற்கில்லையம்மா, நம் காளிங்கனிற்கு மஞ்சரியைக் கேட்கலாம் என்றே எண்ணியிருந்தேன். அதுமட்டுமல்லாமல் மாயமந்திரம் செய்து நாட்டைக் காத்து என்ன பயன்? இதுவரை போர்த்தொடுத்து வேறெந்த நாட்டையும் அவன் கைப்பற்றிடவில்லையே” அவரின் எண்ணத்தோடு செந்தூரன் மீதான் நம்பிக்கையின்மையையும் கூறினார்.
“காளிங்கனிற்கா?” மெதுவாக நடந்து விளக்குகளை ஏற்றியவள், “அவர் மாயமந்திரம் செய்கிறார்தான். ஆனால், போர் செய்ய என்ன அவசியம் ஏற்பட்டது தந்தையே? கொங்கு நாட்டின் கீழ்தான் அவரின் ஆட்சியும் உங்களின் ஆட்சியும் இருக்கிறது. என் மன்னவர் போர் முரசு கொட்டினால்தான் மற்றவர்களும் இணைய முடியும். அப்படியிருக்கையில் செந்தூரன் மட்டும் எவ்வாறு தனியாக போர்த்தொடுத்து செல்லவியலும்? ஆனால், காளிங்கன்? இதுவரை தங்களின் நிழலிலேயே வாழ்ந்து வருபவன். நாட்டின் இளவரசன் என்று பெயருக்கு மட்டுமே இருப்பவனுக்கு மஞ்சரியைக் கொடுக்க எனக்கு துளியும் விருப்பமில்லை. நான்தான் மஞ்சரியை செந்தூரனிற்கு கொடுக்க வேண்டும் என்று என்னவரிடம் மொழிந்தேன். இது என்னுடைய முடிவுதான். இனி இதைப்பற்றி பேச யாதொன்றுமில்லையப்பா.
அடுத்த முறை வரும்பொழுது அன்னையையும் அழைத்து வாருங்கள், கண்டு மாதங்கள் ஆகிவிட்டது. நான்சென்று அவரின் பயண ஏற்பாட்டை கவனிக்கிறேன்” என்றவள் பதிலை எதிர்பார்க்காமல் சென்றுவிட்டாள்.
கையறுநிலையில்தான் நின்றிருந்தார் செம்பியன். மனத்திற்குள் வன்மம் கனன்றது.
…..
நீலா அவசரமாக ஒரு துணியில் ஏதோ எழுதிக்கொண்டிருந்தாள். ‘இரண்டு நாட்களில் பயணம் ஆரம்பித்துவிடும். சித்தமுனியின் இருப்பிடத்தை அறிந்து வை’ என்று குறிப்பிட்டவள், அதனை ஒரு புறாவின் காலில் கட்டி அனுப்பினாள். அப்போது அங்கு வந்தான் ஒருவன். முகத்திரை அணிந்திருந்தவன், செந்தூரனும் மஞ்சரியும் பேசிக்கொண்டதை நீலாவிடம் சொல்லிச் சென்றான்.
செந்தூரனும் மஞ்சரியும் பேசியதை அறிந்த நீலாவிற்கு உள்ளுற கலக்கம்தான் ஏற்பட்டது. இருவரும் கந்தர்வ மணம் செய்துக்கொண்டனர் என்பதே அவளுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியெனில், யட்சினி இங்கு இருப்பது அதைவிட பெரும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
‘நான் தற்போது என்ன செய்ய வேண்டும்? மஞ்சரி எப்படி என்னிடம் சொல்லாமல் செந்தூரனை மணந்துக் கொண்டாள்? தோழியாய் அவள் என்னிடம் சொல்லியிருக்க வேண்டுமல்லவா? தாதிப் பெண்தான் என்று மறைத்துவிட்டாளா? இருக்காது, இந்த யட்சினிதான் ஏதோ செய்து மஞ்சரியை சொல்லவிடாமல் தடுத்திருப்பாள். இனியும் தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் நமக்குத்தான் ஆபத்து. உடனே அவர்களோடு நானும் புறப்பட்டு என் இனத்தைக் கண்டறிய வேண்டும். அப்போதுதான் என் சாபத்திலிருந்து விடுதலைக் கிட்டும். இனியும் நான் இங்கிருப்பது சரியல்ல. காளிங்கனிற்கு மடல் அனுப்பிவிட்டு நான் உடனே புறப்படவேண்டும்’. நீலா தனக்குள் ஒரு முடிவெடுத்தவளாக காளிங்கனிற்கு தான் செய்ய போகும் செயல்களை சுருக்க மடலாக எழுதினாள். அதை மற்றொரு புறாவின் காலில் கட்டி அனுப்பிவிட்டவளை ஏறிட்டாள் மஞ்சரி. ஒரு நிமிடம் அதிர்ந்த நெஞ்சத்தை சமன்செய்தாள் நீலா.
“என்ன செய்கிறாய் நீலா? யாருக்கு தூது அனுப்புகிறாய்?”
“நான் யாருக்குத் தூது அனுப்பப் போகிறேன், எல்லாம் என்னவருக்குத்தான்.”
“அடி கள்ளி! என்னிடமே நீ இதுநாள்வரை சொல்லவில்லை பாரேன். யாரவரோ? எந்த நாட்டு இளவரசரோ?” ஆர்வத்தோடு கேட்டாள் மஞ்சரி.
“இந்த தாதிப் பெண்ணிற்கு இளவரசரா வரப்போகிறார்? அவர், கடமலைநாட்டின் வீரர். எல்லைக் காவலில் இருக்கிறார்.” வெட்கத்தோடு சொன்னாள் நீலா. அந்த நாணம் உண்மையில் அவளின் எண்ணத்தை வெளிப்படுத்துகிறது என்று எண்ணிக் கொண்டாள் மஞ்சரி.
“பலே பலே! நம் நாட்டின் சூழ்நிலை சரியானதும் சோதரிடம் கூறி உடனே உனது திருமணத்தை நடத்தி வைத்துவிட வேண்டியதுதான். என்ன சரிதானா?”
சிரிப்புடன் கேட்டவளிற்கு பதில் தராமல், சற்றுத் தள்ளி நடந்தவள், “அதிருக்கட்டும், நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை மஞ்சரி. நாம் தோழிகள்தானே. நான்தான் உனது உள்ளம் அறிந்தவள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், நீ கந்தர்வமணம் புரிந்ததைப் பற்றி ஒருவார்த்தைக் கூட என்னிடம் பகிரவில்லையே” சப்தமின்றி ஆனால் அழுத்தமாகக் கேட்டாள் நீலா.
அவளின் கேள்வியில் முதலில் அதிர்ந்தாலும், பின் புன்னகைத்த மஞ்சரி அவளின் தோள்தொட்டு தன்முன் நிறுத்தினாள்.
“எனக்கே என்ன நடக்கவிருக்கிறது என்று தெரியாமல் சிறுபிள்ளைபோல் நின்றுக் கொண்டிருந்தேனடி. இதில், எங்கிருந்து உன்னிடம் மொழிவது. நன்றாகப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென பஞ்சபூதங்கள் சாட்சியாக இந்த மரகதமாலையை அணிவித்துவிட்டார். நான் என்ன செய்ய?”
அந்த மரகதமாலையை கண்ட நீலாவின் கண்களில் ஆச்சரியம் பொங்கி வழிந்தது. இத்தனை நாள் அவள் தேடிக்கொண்டிருந்த ஒருபொருள் தற்போது கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது. இனியும் தாமதிக்கக் கூடாது என்று மீண்டுமொருமுறை மனத்தில் சொல்லிக்கொண்டாள்.
“அனைத்தும் நன்முறையில் நடந்தேறினாள் சரி தேவி. இதை அரசர் அறிவாரா?”
“சோதரனுக்கு தெரியும் என்றுதான் நினைக்கிறேன். சித்தமுனியிடம் உபாயம் கண்டறிந்து வந்தபின், எனக்கும் அவருக்கும் மங்களநாண் விழா நிகழ்த்த வேண்டும் என்று பெரியவர்களிடம் தெரிவித்துவிட்டார். நீதான் அரசரியாரிடம் சொன்னதாய் அவர் கூறினார். தற்போது ஒன்றும் தெரியாதவள்போல் என்னிடமே கேள்விகளைத் தொடுக்கிறாயா?” மஞ்சரி விளையாட்டாக கூறினாள்.
‘நானா? அரசியாரிடம் இவர்களைப் பற்றி கூறினேனா?’ என்று குழம்பியவள், “அடடா, அப்படி என்ன கூறினேன் என்று நீ அறிவாயா?” என்று கேட்டாள்.
“ம்ம், அறிவேனே. அரசியார் முதலில் எனக்கு மணம் செய்வதைப் பற்றி பேச்சை எடுத்ததும், என் மனத்தில் இருக்கும் மையலை சொல்லியது மட்டுமல்லாமல், அரசியார் அவரை மறுத்த காரணத்திற்கும் சரியான விளக்கம் அளித்து, இதோ என் திருமண வைபவத்தையும் நிகழ்த்தியுள்ளாயே. இது ஏதும் எனக்கு தெரியாது என்று நினைத்தாயா? உண்மையிலேயே நீதானடி என் அருமை நெஞ்சிற்கினிய தோழி” கட்டியணைத்தாள் மஞ்சரி.
‘யட்சினியின் வேலைதான் இது. நான் தாமரைக் குளத்தில் இருக்கும் நேரம்தனில், இவள் இதனை நிகழ்த்தியுள்ளாள். யட்சினி, உன் ஆட்டம் எதுவும் என்னிடம் செல்லாது. சிவன்காப்பு கிடைத்ததும் உன்னை விரட்டுவதே எனது முதல் குறிக்கோள்’ என்று உறுதிப்பூண்டாள்.
….
நாட்கள் சட்டென்று நகர்ந்தன. இரண்டு நாட்களாக அனைவரும் பயணத்திற்கான ஏற்பாடுகளையும் மறுபுறம் வேள்வி, குடமுழுக்கிற்கான ஏற்பாடுகளையும் செய்துக் கொண்டுதான் இருந்தனர்.
மாலை மயங்கும் நேரம். நாளை வைகறை நேரத்தில் அனைவரும் புறப்பட்டுவிடுவார்கள். தற்போதுதான் செந்தூரனின் பிரிவு மஞ்சரியை மிகவும் வாட்டியது. இரண்டு நாட்களாக அவனை சந்தித்தாலும், தனிமையில் உரையாடிட நேரம் வாய்க்கவில்லை. அதுவே அவளின் மனத்தை இன்னும் வலுவிழக்கச் செய்தது. தாமரைக் குளத்திற்கு அருகே இருக்கும் சோலையில் தனிமையில் தவித்துக் கிடந்தாள் மஞ்சரி.
“கடும் சிந்தனையில் இருக்கிறாயா கண்ணே?” அவளின் காதுமடலில் செந்தூரனின் மீசை உரச, மெல்லிய அழுத்தத்தோடு இடைவளைத்து கேட்டான்.
“ஐயகோ, யாரேனும் பார்த்தால் என்னாவது? நீங்கள் இப்படியெல்லாம் செய்தால் சோதரன் என்னவென்று நினைப்பார்?” மெல்ல அவளின் குரல் உள்ளே சென்றது.
“மறந்துவிட்டாயா, நமக்கு மணமாகிவிட்டது என்று?” அவனின் கைவிரல்கள் மஞ்சரியின் இடையில் நர்த்தனம் ஆடின.
இவர்களின் மனநிலைக்கு தகுந்ததுபோல் வானிலையும் மாற்றம் கொண்டது. தென்றல் காற்று சுகந்தமாய் இருவரையும் தழுவிச் சென்றது. மழைத்தூறல்கள் இருவரின் முகத்திலும் பட்டுத்தெறிக்க, அதனை உணராது மோனநிலையில் இருந்தனர் இருவரும்.
மழை வலுக்கத் தொடங்கியது. ஊசியாய் குளிர் தைக்க, செந்தூரன் அவளை இழுத்துக் கொண்டு சோலை மண்டபத்தில் தஞ்சமடைந்தான்.
அந்த ஈரமுகத்திலும் செம்மை பூசிய கன்னங்கள் தெளிவாய் அவளின் நாணத்தை எடுத்துரைத்தது.
“நான் புறப்படும் தருவாயில் நீ இப்படியெல்லாம் செம்மை பூசிக்கொண்டால் நான் எப்படி கண்ணே பயணம் மேற்கொள்வது? உன் நினைவுகள்தான் என்னை வாட்டி வதைக்கும்” தூரம் சென்றவளை, மெல்லிடைப் பிடித்து அருகே இழுத்தான்.
பெண்ணவள் நாணத்தில் தலை கவிழ்ந்திட, அவளின் தேனிதழில் செந்தூரனின் வண்டிதழ் மொய்த்தது. நேரம் செல்ல செல்ல இருவரும் நிதானம் இழக்கத் துவங்கினர். சோலை மண்டபத்தில் இருவரின் இல்லறமும் இனிதே துவங்கியது. உச்சம் தொட்டு மூச்சு வாங்கி இருவரும் துயில் கொள்ள, மழை மேகங்கள் இன்னும் கருமை பூசி மாரியை பொழிந்துக் கொண்டிருந்தன.
செந்தூரனின் நெஞ்சில் தலைசாய்த்து உறக்கத்தில் இருந்தாள் மஞ்சரி. செந்தூரனிற்கு மனது ஏனோ நிலையில்லாமல் தவித்தது. அவளின் கூந்தலை தடவிக் கொண்டிருந்தவனின் கண்கள் கண்ணீரை சிந்தின.
நேற்றைய அவனின் கிரகநிலைப்படி பொதிய மலைக்கு சென்றால் அவன் மீண்டு வரமாட்டான் என்பதை அறிந்துக் கொண்டான். காதல் செய்து, காமம் களித்து காலம் முழுதும் மஞ்சரியோடு மட்டுமே மனமும் மஞ்சமும் பகிர்வேன் என்று உறுதிக் கொண்ட மஞ்சரியின் மன்னவன் இன்னும் சில காலங்களில் மடிந்து போகப் போகிறான் என்பதை அறிந்த நொடி வாழ்வே சூனியம் ஆனதுபோல் தெரிந்தது. வெளி வானத்தில் சூழ்ந்திருந்த கருமை மனதிற்குள் நுழையவும் முயற்சித்தது. முயன்று வெறுமையை விரட்டியவன், இருக்கும் இந்த நொடிகளை தன்னவளுடன் களித்து கழித்தான்.
“மஞ்சரி, எழுந்து கொள்”
“ம்ம்… இன்னும் சிறிது நேரம்…” அவனின் நெஞ்சமெனும் மஞ்சத்தில் இன்னும் புதைந்தாள்.
“இல்லையம்மா, எழுந்துகொள்ளேன். எனக்கு நேரம் குறைவாக உள்ளது. அதற்குள் சிலவற்றை நான் உன்னிடம் சொல்ல வேண்டும்”
தன்னவனின் குரலில் தென்படும் மாற்றத்தைக் கண்டறிந்தவள் எழுந்தாள்.
“தயாராகிவிட்டு வா. விரைவில்” என்றவன், அவனும் தயாராக ஆயத்தமானான்.
மஞ்சரி வந்ததும், சோலை மண்டபத்தில் இருக்கும் சிறிய சிவலிங்கத்தின் முன் அமர்ந்தவன், அவளையும் அமரும்படி சொன்னான்.
மறுபேச்சு எதுவும் பேசாதவள், செந்தூரன் சொல்படி அனைத்தும் செய்தாள். இருவரும் சேர்ந்து, நள்ளிரவு வேளையில் சிவனுக்கு ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.
தன் மனதை ஒருநிலைப்படுத்தியவன், “மஞ்சரி, நாங்கள் பயணம் முடித்து வர வெகுகாலமாகலாம். இல்லையேல், விரைவிலேயே வரலாம். எதுவும் நம் கையில் இல்லை. ஆகவே, நான் கற்றறிந்த மந்திரங்களையும், சுவடிகளையும் உனக்குத் தருகிறேன். இந்த மந்திரங்கள் அனைத்தும் ஆபத்துக் காலத்தில் உனக்கு உறுதுணையாக இருக்கும். விரைந்து அனைத்து ஆலயங்களிலும் குடமுழுக்கு மற்றும் வேள்விகளை துரிதமாக முடித்துவிடு. யட்சினி உனக்குத் துணையிருந்தாலும், ஏதோ ஒரு நேரத்தில் அவளில்லாமல் நீ செயல்பட வேண்டியிருக்கும். அதற்காகவே அனைத்தையும் உனக்கு நான் தாரைவார்க்கிறேன்.
பஞ்சபூதங்கள் முன்னிலையிலும், எம்பெருமான் ஈசன் முன்னிலையிலும் நான் எனது மந்திரங்களையும், சுவடிகளையும் என்னவளுக்கு சமர்ப்பிக்கிறேன்.”
மஞ்சரியின் உடல் ஒருமுறை நடுங்கி குலுங்கியது. கண்கள் இரண்டும் கலங்கித் தவித்தன. ஆனால், ஒருசொட்டு நீரும் கண்ணிலிருந்து சொரியவில்லை. தன்னவன் எது செய்தாலும் அது நன்மைக்கே என்ற எண்ணம் அவளுள் எழுந்தது.
நள்ளிரவு நேரமும் முடிந்தது. மஞ்சரியின் பிறைநெற்றியில் இதழ்முத்தம் பதித்தவன், “நீ சென்று ஓய்வெடு. வைகறையில் சந்திப்போம்” என்று புறப்பட்டுவிட்டான்.
மஞ்சரி அவன் சொல் கேட்கும் பாவையாகவே நின்றிருந்தாள். இருவரும் ஒன்றிணைந்தபிறகு ஏற்படும் முதல் பிரிவு அவளை வாட்டத்தான் செய்தது. ஆனாலும், நாட்டு மக்களின் நலனுக்காக செல்பவனை தன்னோடே இருத்தி வைக்க அவளுக்கு சிறிதும் உடன்பாடில்லை. சிரித்தமுகமாகவே அவனை வழியனுப்பிட உறுதிக் கொண்டவள், அறைக்கு சென்று தயாரானாள்.
…
வைகறைப் பொழுது.
வஞ்சன் மற்றும் செந்தூரனோடு படை வீரர்களும் நாட்டிற்காக பொதிய மலை பயணத்திற்கு புறப்பட்டனர்.
செந்தூரன் யட்சினியிடம் சில கட்டளைகளை விதித்துவிட்டே புறப்பட்டான். அனைத்தும் அறிந்த யட்சினி நிலையில்லா மனத்தோடுதான் அவனிடம் விடைபெற்றாள். ஆனால், மஞ்சரியோ நெஞ்சம் முழுக்க மகிழ்வோடு, புன்னகை பூத்தவளாய் தன்னவனுக்கு விடைக்கொடுத்தாள். தன்னவன் மீண்டும் நாடு திரும்பும் நாளுக்காக காத்திருக்க துவங்கினாள்.
கோதை, மனத்தில் உள்ள பிரிவின் வலியைக் காட்டாது, இன்முகமாக வஞ்சனுக்கு விடைகொடுத்தாள். பயணம் துவங்கியது.
படைகள் புறப்பட, யாருக்கும் தெரியாமல் அவர்களோடு தனது பயணத்தையும் துவங்கினாள் நீலா.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
+1