சுழலி-23
தன்முன் நின்றிருந்தவளையும் தன்னையும் மாறிமாறி பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சரி. சற்றுநிமிடத்திலேயே மஞ்சரிக்கு கிலி பரவியது. அச்சத்துடன் செந்தூரனின் கரம் பற்றியவள் அவனைக் கலக்கத்துடன் பார்த்தாள்.
“பயம் வேண்டாம் தேவி. யட்சினி உன்னை ஒன்றும் செய்ய மாட்டாள்.” அவளின் பயத்தைப் போக்க முயன்றான் செந்தூரன்.
“ஆனால், அவள் எப்படி என்னைப் போல்?” அவளின் கலக்கம் இன்னும் மறையவில்லை.
யட்சினியே பேசத் துவங்கினாள். “மஞ்சரி, யட்சினியாகிய நான் தேவலோகத்தில் வசிப்பவள். என் தோழிகளோடு ஒருநாள் பொதியமலையை சுற்றி வரும்போது, என்னுடைய அசட்டுத்தனத்தால் ஒரு முனிவரிடம் சாபம் பெற்றேன். அன்றிலிருந்து மோட்சம் தேடி சுற்றித் திரிந்தேன். அன்றொரு நாள், என்னைக் கண்டுக் கொண்ட கோடாங்கி ஒருவன் அவனின் பிடிக்குக் கொண்டு வர முயற்சி செய்தான். அப்படி நான் அவனிடம் சிக்கிக் கொண்டால் ஏவல் வேலைகளுக்கு என்னைப் பயன்படுத்தி அவன் நினைத்தக் காரியத்தை செய்திடுவான். அவனிடமிருந்து தப்பிக்கப் போராடுகையில்தான், என்னை அவனிடமிருந்து செந்தூரன் காப்பாற்றினான். அதன்பலனாய், அன்றையிலிருந்து இன்று வரை செந்தூரன் சொல்கேட்கும் யட்சினியானேன்.
இன்றுவரை நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்திடவில்லை. செந்தூரனின் காவல் எல்லை தற்போதுவரை எனது பொறுப்பு. ஒவ்வொரு நாளும் நான் எனது மோட்சக் காலத்தை எண்ணியே நகர்த்திக் கொண்டிருக்கிறேன். என்னால், எவரைப் போலவும் மாறமுடியும். உன்னைப் போல், வஞ்சனைப் போல், கோதையைப் போல், நீலாவைப் போல்” என்று அனைவரைப் போலவும் மாறி மாறி பேசினாள் யட்சினி. “ஆனால், என்னால் செந்தூரனின் உருவத்திற்கு மாற இயலாது. நான் அவனுக்கு அடிமை. அவன் உத்தரவு இன்றி அவன் உருவத்திற்கு என்னால் மாற இயலாது தேவி.” தன்னைப் பற்றி சுருக்கமாக சொல்லி முடித்தாள் யட்சினி.
தற்போதுதான் மஞ்சரியின் கலக்கம் தீர்ந்தது. அனைத்தும் நன்மைக்கே என்று எண்ணினாள்.
பார்வையை செந்தூரனிடம் திருப்பியவள், “அன்பரே! சித்தமுனியைக் காண படைகளை அனுப்பவதில் எனக்கு உடன்பாடில்லை. நம் நாட்டிற்கு அவரின் உதவி தேவையெனில், அரசன் தானே சென்று அழைத்து வர வேண்டும். படைகளை அனுப்பி அவரை அழைத்து வருவது அத்தனை சரியா?” தனக்குள் உறுத்திக் கொண்டிருந்த கேள்வியைக் கேட்டுவிட்டாள் மஞ்சரி.
“அதற்கு நான் ஒரு வழி அமைத்துவிட்டேன் தேவி. நீ இதனை எண்ணி கலக்கம் கொள்ள வேண்டாம். நிச்சயம், வஞ்சனே சென்று சித்தமுனியிடம் உபாயம் கேட்டு வருவான். உடன் நானும் செல்வேன். அதுவரை, இங்கு நல்லவர்கள் போல் வேடமிடும் கயவர்களை கண்டு நீதான் நம் இராஜ்ஜியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.”
அவன் சொன்னதைக் கேட்டு பெரிதும் அதிர்வுற்றது மஞ்சரி மட்டுமல்ல, இன்னொருவரும் தான். அதனை செந்தூரனும் யட்சினியும் கவனிக்கத்தான் செய்தார்கள்.
“நானா? நான் எப்படி?”
“மஞ்சரி, நம் இராஜ்ஜியத்தை அபாயம் என்னும் பெரும் இருள் சூழ உள்ளது. அது எந்தவிதத்தில் அமைந்திடும் என்று யாருக்கும் தெரியாது. மந்திர வழிகளில் அதற்கான உபாயத்தை தேடி நாங்கள் புறப்படும் தருவாயில், யட்சினியின் உதவியுடன் நீ இங்கிருக்கும் கயவர்களை கண்டறிந்து களையெடுக்க வேண்டும். அப்போதுதான் நம் நாடும் நாட்டு மக்களும் இன்னல்களிலிருந்து விடுபடுவார்கள்.” என்று ஆணித்தரமாகக் கூறியவன், தனது உறையிலிருந்து சிறு கத்தியை எடுத்தான்.
“என்மேல் நீ கொண்டிருக்கும் காதலும் நம்பிக்கையும் உண்மையானால், சிறிதும் சுணங்காது என் கண்ணைப் பார் கண்மனி” என்றவன்,
மஞ்சரியின் கையைப் பற்றி தனது வலது உள்ளங்கையையும், மஞ்சரியின் இடது உள்ளங்கையையும் கீறி ஒன்றோடு ஒன்றாகப் பிணைத்தான்.
“இன்றிலிருந்து இன்னும் எத்தனை யுகங்கள் நாம் பிறவியெடுத்தாலும் நாம் இருவருமே இணைபிரியா தம்பதியராக புவியில் வலம்வருவோம். இன்றுமுதல் நான் மஞ்சரியைத் தவிர்த்து வேறு எந்த பெண்ணையும் இச்சைக்காகவும் இசைதலுக்காகவும் நாட மாட்டேன். என் இறுதி சொட்டு குருதி உதிரும் வரை மஞ்சரி ஒருவளே எனது காதலுக்கும் எனது வாழ்க்கைக்கும் என்றென்றும் துணைவியாவாள். சாளரத்திலிருந்து வரும் காற்றே! தென்றல் சுகமாய் பொழியும் மாரியே! அந்தி பொழுதில் எங்களைக் காணும் சூரியனே! எல்லையில்லாமல் வீற்றிருக்கும் நீலப் பரப்பே! எம்மைத் தாங்கும் ஞாலத்தாயே! அனைவரின் சாட்சியாக மஞ்சரியை நான் கந்தர்வ மணம் புரிந்துக் கொள்கிறேன். எங்கள் குருதி ஒன்றோடு ஒன்று கலந்துவிட்டது. இனி, இவளே என்றும் எனது மனதிற்கும் மஞ்சத்திற்கும் உரியவள். என் காதல் சுழலியே! என் கண்ணம்மா! இனி, என் கட்டளைக்கு இணங்கும் அனைத்தும் நமது. இன்றுத் தொட்டு இனி எத்தனை பிறவி எடுத்தாலும் உன்னையன்றி வேறெவரையும் நாடேன் அன்பே! இந்த மரகதமாலை என்றும் உன் கழுத்தில் நானிட்ட மாங்கல்யமாய் திகழும்.” திடீரென்று நடந்த நிகழ்வில் ஆனந்த அதிர்ச்சியடைந்தாள் மஞ்சரி.
“யட்சினி, வேள்வி அன்று நானும் மஞ்சரியும் தம்பதிசமேதராய் அமரவிருக்கிறோம். வஞ்சனிடம் நான் பேசிக்கொள்கிறேன். நம் நாட்டின் வேள்விக்கு ஏற்பாடு செய். நானும் வஞ்சனும் சித்தமுனியைக் கண்டு உபாயம் பெற்று வரும் வரை, என்னிடத்தில் மஞ்சரி இருப்பாள். நானும் அவளும் இனி வேறில்லை. இன்றுமுதல் அவளைக் காக்கும் பொறுப்பு உனது.” என்று மஞ்சரியிடம் காதலாய் தனது மனதைக் கூறி கந்தர்வ மணம் புரிந்தவன், யட்சினியிடம் உத்தரவாக முடித்தான்.
யட்சினி கலக்கம் கொண்டாள். ‘காதல் என்ற ஒன்று இந்த மானிடர்களை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அதனை தற்போது கண்முன்னே கண்டாலும் உனக்காக என் மனம் வருந்தத்தான் செய்கிறது. இந்த காதலே உன்னை அழிவை நோக்கி அழைத்து செல்லப் போகிறது செந்தூரா. எதிர்காலம் அறிந்தும் உனக்கு நான் தற்போது உதவி செய்யவியலாத சூழ்நிலையில் இருக்கிறேன். என்னை மன்னித்துவிடு.’ கலக்கத்தைக் கண்களில் காட்டாமல் மறைத்தவள், “நான் உத்தரவு பெற்றுக் கொள்கிறேன். காதல் புறாக்களுக்கு நடுவே கன்னியிவளுக்கு என்ன வேலை. நான் வருகிறேன் மஞ்சரி” என்றவள் சட்டென்று மறைந்து போனாள். நடக்கும் அனைத்தையும் மறைந்திருந்து கேட்டவனும் சத்தம் வராமல் அவ்விடத்தை விட்டு அகன்றான்.
மஞ்சரியின் கண்கள் தற்போது ஆச்சர்யத்தில் மிளிர்ந்தது. ஆனால், செந்தூரனோ அவளை காதல் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் பார்வை வீச்சை தாங்க இயலாதவள், தன் இமையைத் தாழ்த்திக் கொண்டாள்.
“கண்ணே! இசை மீட்டுவாயா?” அரிதினும் அரிது, செந்தூரன் கேட்பதும், அதற்கு இசைந்து மஞ்சரி யாழ் மீட்டி இசைப்பதும். அந்த கானம் செவிதனில் செல்லும்போது, சுவர்க்க லோகத்தில்தான் நாம் இருக்கின்றோமா என்ற ஐயப்பாடும் எழுந்துவிடும். வாருங்கள், அவளின் விரலும் வீணையாகும் தருணத்தை காணலாம்.
செந்தூரன் கேட்டதும் மறுக்கத் தோன்றுமா மங்கையவளிற்கு? குறிஞ்சி யாழை எடுத்தவள், தனது தேன்மதுரக் குரலில் குறிஞ்சிப் பண்ணை இசைத்தாள்.
“தேன் மதுரக் குரலினிலே ஆட்டுவிப்பேன்
நான் பண்ணிசைத்து! – தேன்
மதுரக் குரலினிலே ஆட்டுவிப்பேன்
நான் பண்ணிசைத்து!
காதல் கன்னியாம், கயற்கண்ணியிவளை
காதற் கன்னியாம், கயற்கண்ணியிவளை
மணந்துக் கொண்டீர் நீர்
மையல் கொண்டு.
கரிய விழிகள் இரண்டும்
காதல் மொழி பேச
இடைவளைத்தீர் நீர்
மெல்லிடை வளைத்தீர்
இசை மீட்டும் இந்த யாழிசையோ
ஓஓஓஓஓ
இசை மீட்டும் இந்த யாழிசையோ
நிந்தன் மஞ்சத்தில் என்று துயில்கொள்வாளோ?
தேன் மதுரக் குரலினிலே ஆட்டுவிப்பேன்
நான் பண்ணிசைத்து! – தேன்
மதுரக்”
அவளின் இசையில் மயங்கிக் கட்டுண்டவன், பாடும் அவளின் பூவிதழில் தேன் குடித்தான்.
….
அரசவை
செந்தூரனின் யோசனையின்படி, வஞ்சன் கட்டியம் பார்க்க ஆட்களை வரவழைத்திருந்தான்.
அனைத்து குறுநில மன்னர்களும் குழுமியிருந்தனர்.
“கோமானே! இன்னும் சிறிது நாட்களில் வானவெளியில் பெரிய மாற்றங்கள் நிகழவிருக்கிறது. கிரகங்களின் நிலை சரிவர அமையவில்லை. போர் சூழும் அபாயம் தெரிகிறது அரசே! இன்னும் ஒரு வார காலத்திற்குள் சித்தமுனியைத் தேடி நீங்களே புறப்பட வேண்டும். ஒரு மண்டலம் வேள்வி நடத்தி, எல்லைக்குள் இருக்கும் அனைத்து ஆலயங்களிலும் குடமுழுக்கு செய்ய வேண்டும் அரசே! அனைத்தும் சரியாக நடந்துவிட்டால் விரைவில் அரசர், தந்தை எனும் பதவியை அடைவார்” என்று கட்டியம் கூறினார் அவர்.
வஞ்சனிற்கு இறுதி வரி மகிழ்வைக் கொடுத்தாலும், உள்ளுக்குள் ஏதோ விபரீதம் நிகழப்போகிறது என்றே மனது அடித்துக் கொண்டது.
“உடனடியாக செந்தூரனை அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டவன், கோதையை தேடிச் சென்றான்.
….
கோதையின் அறை.
நீலா கோதையின் கூந்தலுக்கு மலர்களைக் கோர்த்துக் கொண்டிருந்தாள். கோதையோ கடும் சிந்தையில் உழன்றுக் கொண்டிருந்தாள்.
“அரசியாரே! கொய்த மலர்களை கொண்டையில் வைத்துவிட்டேன். பாருங்களேன்!” கண்ணாடியை அவள்முன் வைத்தாள் நீலா.
ஆனால், இவை எதுவும் கோதையின் கவனத்தில் பதியத்தான் இல்லை.
இரண்டுமுறை நீலா அழைத்த பிறகே, சுயத்திற்கு வந்தாள் கோதை.
“என்ன நீலா?”
“தங்களுக்கு என்னவாயிற்று அரசியாரே? மலர்களின் மணம் கூட மனத்தில் பதியவில்லை. தங்களின் சிந்தையில் ஏதோ சிக்குண்டு தவிக்கிறது.”
“என் மனத்திற்கு ஏதோ நெருடிக்கொண்டே இருக்கிறது நீலா. இன்னும் நம் நாட்டிற்கு என்று ஒரு வாரிசை என்னால் ஈன்றெடுக்க முடியவில்லை. மஞ்சரியும் மணப்பருவத்திற்கு வந்துவிட்டாள். அவளையாவது நல்ல குணமான இளவரசனுக்கு மணம் முடித்து, அவளின் பிள்ளையை நான் தூக்கி வளர்க்க வேண்டும் என்று மனது பேராவா கொள்கிறது. ஆனால், நாட்டின் நிலையை எண்ணி மறுபுறம் மனதோ நிலையில்லாமல் ஆழிப்பேரலையாய் அலைகிறது. என்னவென்று சொல்வேன்? நீதான் அவளின் நெருங்கிய தோழியாகிற்றே, அவளின் மனத்தில் யாரேனும் உளரோ?”
“ஆம், தேவி. உங்களின் நாத்துணையாள் மனத்திலும் ஒருவர் இருக்கிறார்” சிரிப்புடனே சொன்னாள் நீலா.
சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் கோதை. “என்ன கூறுகிறாய் நீலா? மெய்யாகவா? யாரது? எந்த நாட்டு இளவரசன்? உடனே, அவரிடம் கூறி அவளுக்கு பரிசம் போட வேண்டும்”
“பொறுமை கொள்ளுங்கள் தேவி. அவர், இளவரசன் அல்ல. கங்கை நாட்டு அரசர் செந்தூரன்” சொல்லி முடித்ததும் கோதையின் முகத்தில் பெரும் அதிருப்தி.
“அவரா? ஏதோ மாயமந்திரங்கள் கொண்டு ஆட்சி புரிந்துக் கொண்டு வருகிறார் என்றே அனைவரும் சொல்கின்றனர் நீலா. அவருக்கு எப்படி மஞ்சரியை? மஞ்சரிக்கு எப்படி அவரைப் பிடித்தது?”
“ஏன் தேவி? மாயமந்திரங்கள் செய்து அவரொன்றும் தீவினைகள் செய்யவில்லையே. அதனைக் கொண்டு நாட்டையும் மக்களையும் நன்முறையாகத் தானே வைத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், கொங்கு தேசத்தை சுற்றிலும் பல இடங்களில் சூறையாடல் நிகழ்ந்துவிட்டது. ஆனால், அவரின் ஆட்சியில் இதுவரை எதுவும் நிகழவில்லை. அப்படியிருக்க, மஞ்சரியின் ஆசையில் என்ன குறை கண்டீர் தேவி” தோழியாக அவளின் கருத்தை எடுத்துரைத்தாள்.
“நீ சொல்வதும் சரிதான். இருப்பினும் நான் அவரிடம் இதைப்பற்றி கலந்துரையாடிவிட்டுதான் எந்த முடிவையும் எடுக்க முடியும் நீலா. அதற்குள் நீ மஞ்சரியிடம் ஏதும் மொழியாதே” என்றாள் கோதை.
“உத்தரவு தேவி. தாங்களே சொல்லும் வரை, நான் என் வாயிலிருந்து ஒரு முத்தையும் உதிர்க்க மாட்டேன்” என்று சிரித்தாள் நீலா. அவளின் பாவனைக் கண்டு கோதைக்கும் சிரிப்பு எழ, வஞ்சன் வரும் சேதி வீரனால் சொல்லப்பட்டது.
“ஆக, நான் புறப்படுகிறேன் தேவி” என்று அங்கிருந்து வெளியேறிய நீலாவின் இதழில் வெற்றிப் புன்னகை. ஒருநிமிடம், அப்போது தாமரைக் குளத்தில் அமர்ந்திருப்பது யாரோ? அவள் நீலா என்றால்? இவள்?
மேனி குலுங்க நடைபயின்றவள், சட்டென்று மறைந்து போனாள் யட்சினி.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
+1