Loading

சுழலி-22

மஞ்சரி அறைக்குள் சென்றதும் தனது பார்வையை திருப்பினான் செந்தூரன். சரியாக அப்போது அவனைக் காண வந்தார் அரசர் வஞ்சன்.

“அழைப்பு விடுத்திருந்தால் நானே தங்களைக் காண வந்திருப்பேனே மன்னவா? தாங்கள் இந்த எளியோனைத் தேடி இத்தனை தூரம் வரவேண்டிய அவசியம் யாதோ?” அவருக்கு இருக்கையை ஏற்படுத்திக் கொடுத்தவன் உரையாடினான்.

“அவசியம் இருந்தால்தான் கங்கைநாட்டு மன்னனை சந்திக்க இயலும். இல்லையேல், அவையோருக்குக் கூட அனுமதி கிடையாது என்றே நான் கேள்வியுற்றேன்.” மன்னரின் பதிலில் புன்னகைத்தான் செந்தூரன்.

“மன்னரும் மற்றவர்களும் ஒன்றல்ல வஞ்சா! நாம் நினைத்ததை விட காரியம் கடினமாக சென்றுக் கொண்டிருக்கிறது போலவே?” சட்டென்று ஒருமையில் தாவிய செந்தூரனை சின்ன சிரிப்போடு அணைத்துக் கொண்டார் வஞ்சன்.

“எமகாதகன்தான் நீ! ஆம் செந்தூரா! அந்நிய படையெடுப்புக்கு கள்ளர் கூட்டம் ஒன்று உதவி செய்துக் கொண்டு வருகின்றன. எத்தனை காவல்வீரர்களை நிறுவினாலும் எப்படியேனும் அவர்களின் கண்களில் மண்ணைத் தூவி கொள்ளையடித்துவிட்டு சென்று விடுகிறார்கள். நாட்டின் கருவூலம் தீர்ந்த பிறகு, மக்களுக்கு ஆட்சியாளனின்மீதும் நம்பிக்கையற்றுவிடும். அத்தகைய கையறு நிலையில் நம்மை வளைத்து பிடித்து நாட்டை கைப்பற்றுவதே அவர்களின் திட்டம். ஒற்றன் சேதி இது” இருவரும் தீவிர ஆலோசனையில் இருந்தனர்.

“இருக்கட்டும். நமக்கு கிட்டிய செய்தி கிட்டாததுபோல் நாம் இருந்துக் கொள்ளலாம். இப்போது சித்தமுனியைத் தேடி புறப்படும் வேலையை சற்று ஒத்தி வைக்கலாம். நான் கங்கை நாட்டில் ஒரு வேள்வியை நடத்த திட்டமிட்டுள்ளேன். அது முடிந்ததும், நானே படைகளுக்கு தலைமைத்தாங்கி செல்கிறேன். உனக்கு இதில் எதேனும் மாற்றுக்கருத்து இருக்கிறதா?”

“என் நண்பனாக இருந்தாலும், ஒற்றர்களின் தலைவன் நீ. திட்டம் தயாரானதும் மேற்கொண்டு முன்னேறலாம் செந்தூரா.”

“எனக்கொரு வேண்டுகோள், அதனை நீ செய்வாயா வஞ்சா?”

“நான் விரும்பாத ஒன்றை செய்ய சொல்லப் போகிறாய். கேளும்!” புன்னகை மாறாமல் வஞ்சன் கேட்டிட, செந்தூரன் தனது வேண்டுகோளைக் கேட்டான்.

“நாட்டின் நிலையைப் பற்றி ஆட்சியாளன் உன்னிடம் மொழிய ஒன்று உள்ளது. விளம்புகிறேன். இன்னும் சிறிது மாதங்களில் வானில் மாற்றங்கள் நிகழவிருக்கிறது. அதனால், நம் நாட்டிற்கு ஏதேனும் நிகழ வாய்ப்பும் இருக்கிறது. இதற்கு முன்னெச்சரிக்கையாக, கட்டியம் ஒன்று பார்க்கலாம் என்பது எனது எண்ணம். கட்டியக்காரர் சொல்படி வேள்விகளும் குடமுழுக்கும் நிகழ்த்திவிட்டால் மக்களுக்கு சற்று ஐயமும் விலகும் வஞ்சா”

சிறிது நேரம் வஞ்சன் சிந்தனையில் ஆழ்ந்தார். வஞ்சனும் செந்தூரனும் குருகுலத்தில் ஒன்றாகப் பயின்றவர்கள். செந்தூரனைவிட, வஞ்சன் வயதில் பெரியவனானாலும்கூட, அவர்களுக்கு இடையே இருக்கும் அந்த நட்பு என்றும் ஒருபடி மேலேதான் இருந்து வருகிறது. ஆனால், காலமாற்றத்தால், வஞ்சனே செந்தூரனை கொல்லும் சூழ்நிலையும் வரலாம். அல்லது, செந்தூரன் தனது கைகளால் வஞ்சனை வெட்டியும் வீழ்த்தலாம். விதியின் விளையாட்டை யாரறிவாரோ?

நீண்ட சிந்தனையில் இருந்து வெளிவந்த வஞ்சன், “மற்ற அரசர்களும் இதையேத்தான் மறைமுகமாக மொழிந்தார்கள். ஆகட்டும், வேண்டிய ஏற்பாடுகளை செய் செந்தூரா. நான் சென்று கோதையை சந்தித்துவிட்டு வருகிறேன்” என்று புறப்பட்டார்.

…. 

வஞ்சன் அறையைக் கடந்ததும், நளின இடையோடு, கருநாகக் கூந்தலை முன்னேவிட்டு, முல்லையும் மல்லியும் முடிந்து சரசமாட, செந்தூரன் அறைவந்து சேர்ந்தாள் மஞ்சரி.

இவள் தாமரைக் குளத்தில் நாம் கண்ட மஞ்சரிதானோ? ஏனோ, ஐயப்பாடு கொள்ளத்தான் மனது கூப்பாடு போடுகிறது.

“கங்கை நாட்டு அரசரே! சாளரத்திலேயே கண்கள் பதித்திருந்துவிட்டு, தற்போது மங்கையைக் காண தயக்கம் என்னவோ?” தேன்சொட்டும் பேச்சில் திரும்பிப் பார்த்தான் செந்தூரன். அவளின் கண்களில் மோகம் ததும்பியது.

ஆனால், எதையும் அவன் கண்டுக்கொள்ளவில்லை. வானக்கோட்பாடு அறிந்தவனாதலால், இன்னும் சில காலங்களில் என்ன மாற்றம் நிகழப் போகிறது என்பதை அனுமானமாக அறிந்தே இருந்தான். அவனின் பார்வை இன்னும் தன்பக்கம் திரும்பவில்லை என்பதை உணர்ந்தவள், அவனை நெருங்கி, முதுகோடு ஒன்றி நின்றாள்.

அவ்வளவுதான், இத்தனைநேரம் குழப்பத்தில் ஆழ்ந்திருந்த செந்தூரன் தற்போது கோபத்தின் உச்சியில் இருந்தான். அவளின் கையைப் பிடித்து முன்னே இழுத்தவன், தற்போது கழுத்தை பிடித்திருந்தான்.

“உன் தந்திரத்தை என்னிடமே காட்டுகிறாயா யட்சினி?” வார்த்தைகளிலேயே கோபம் தெரித்தது.

“கண்டுக்கொண்டாயா? இத்தனை யுகங்களில் உன்னை மட்டுமே என்னால் மயக்க முடியவில்லை செந்தூரா” கழுத்து நெரிப்பட்டாலும் சிரித்துக்கொண்டே பேசினாள்.

அவளை விடுவித்தவன், “காவலுக்கு யார் இருக்கிறார்கள்?”

“கவலை வேண்டாம். ஏற்பாடு செய்துவிட்டே உன்னை சந்திக்க வந்தேன். சித்தமுனியை நீ தேடிச்செல்லும் போது பல அபாயங்கள் உன்னை சூழ நேரிடும். உனக்கு துணையாக என்னால் வர இயலாது.” தான் வந்ததற்கான காரணத்தை உரைத்தாள் செந்தூரனிற்கு உதவி செய்யும் யட்சினி.

அவன் அவளை யோசனையாகப் பார்க்க, “எனக்கு சாபமளித்தவரே அவர்தான். அவரின் யோகநிலையை கலைத்ததற்காகத்தான் தேவலோகம் செல்ல இயலாமல் இங்கேயே சுற்றிக் கொண்டிருந்தேன். பின், எப்படி உன்னிடம் வந்தேன் என்பதையும் நீ அறிவாய் தானே! அதனைவிடு. இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு நீ உன் பயணத்தைத் துவங்கு. அப்போதுதான், அவரின் பார்வை கனிந்து, நாட்டிற்கான உபாயத்தை மொழிவார்.”

“ஆக, உனக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தெரிந்துவிட்டதுபோலவே?” பழச்சாறுக் கோப்பையை கையில் எடுத்தபடி கேட்டான்.

“தெரிந்து என்ன பயன்? எதனையும் யாருக்கும் ஏன் உன்னை உட்பட சொல்லக்கூடாது என்றே எனக்கு நீ கட்டளை விதித்துள்ளாய்.”

“ம்ம்… இங்கு எதுவுமே அதன்போக்கிலேயே நிகழட்டும் யட்சினி. தெரிந்துவிட்டால் வாழ்வில் ரசனையிருக்காது.”

“ஆமாம், கண்டேன் நானும் உன் ரசனையை. இந்த யட்சினியைவிட, அந்த மஞ்சரி எவ்விதத்தில் உயர்ந்துவிட்டாள்?” பொறாமை எட்டிப்பார்த்ததோ என்னவோ அவளின் தொனியில்?

“காதல், மையல், அவள்மேல் நான் கொண்ட பித்து என்னவேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். தாய்தந்தையை இழந்தபிறகு, எனக்கு ஆறுதலாக இவ்வுலகில் ஒரு உயிர் இருக்கிறதென்றால் அது அவள் மட்டுமே” காதல் நோய் அவனையும் பாதித்தது.

“சரி, நான் அரண்மனையை சுற்றியே இருக்கிறேன். ஏதேனும் தேவையெனில் அழை. புறப்படுகிறேன்” என்றபடி சட்டென்று மறைந்துபோனாள் யட்சினி.

படுக்கையில் எதையோ சிந்தித்தபடி படுத்திருந்தவள், திடீரென்று எழுந்தாள் மஞ்சரி.

அருகேயிருந்த நீலா பதறியபடி வர, மஞ்சரியின் முகமெல்லாம் வியர்த்துப்போய் இருந்தது.

“என்னவாயிற்று மஞ்சரி? கனவு ஏதேனும் கண்டாயா?”

“அவர்… அவர் வந்திருக்கிறாரா?” நாக்கு தந்தியடித்தது.

“எவர்?” நீலா குழப்பத்துடன் கேட்டாள்.

“விளையாடாதே நீலா. அவருக்கு ஏதோ நிகழப்போகிறது. எனது கனாவில் தோன்றியது.”

“அதெல்லாம் ஒன்றும் நடவாது மஞ்சரி. வீண் குழப்பமும் பயமும் வேண்டாம். அவர் இங்குதான் இருக்கிறார். அரசரும் அவரும் கலந்துரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.”

“அப்படியா? அவர் எப்போது வந்தார்? ஏன், நீ என்னிடம் கூறவில்லை.?”

“அடடா! தேவி உங்களின் கோபத்தை கண்டால் அவள் எப்படி மொழிவாள்?” சிரிப்புடன் வாயிலில் தன் கைகளைக் கட்டியபடி நின்றுக்கொண்டிருந்தான் செந்தூரன்.

நீலா அமைதியாக அவ்விடத்தை விட்டு நகர, மஞ்சரியோ கண்கள் படபடக்க, உதடு துடிக்க வெட்கத்தில் புதைந்திருந்தாள்.

அவன் அருகில் வர, இவளோ மஞ்சம் விட்டு எழுந்து சாளரம் நோக்கி சென்றாள்.

அவன் சிரிப்புடனேயே சாளரம் நோக்கி செல்ல, இவளோ அங்கிருந்து விலகி மீண்டும் மஞ்சம் நோக்கி வந்தாள்.

“இப்படியே எத்தனை நேரம் விளையாடலாம் என்றிருக்கிறாய் மஞ்சரி? உன்னிடம் தனித்து உரையாடவே வந்துள்ளேன். ஆனால், நீயோ என்னை நெருங்கவே விடமாட்டேன் என்கிறாய்” என்று மீண்டும் நெருங்க, அவள் நகரும் சமயம், அவளின் இடைவளைத்து அருகே இருத்தினான்.

கயல்விழிகள் சிமிட்டிக்கொண்டே இருக்க, கன்னக்கதுப்புகள் இரண்டும் செந்தூரன் அவனின் நிறத்தை பூசிக்கொண்டது.

“இப்படியெல்லாம் உன் முகம் ஓராயிரம் இரசனையை மொழிந்தால், நான் எப்படி கண்ணே விலகுவது? என்னை மீறி ஏதேனும் விபரீதம் நடந்துவிட்டால், உன் சோதரன் எனது சிரத்தை கொய்து விடுவான்” சொல்லிய மறுகணம் அவனின் வாயைப் பொத்தினாள் மஞ்சரி.

“அப்படியேதேனும் மொழியாதீர்கள்! தற்போதுதான் கொடுங்கனவு ஒன்றுக் கண்டேன். நீங்களும் இப்படி சொன்னால் உங்களின் நினைவுகளிலே நான் எப்படி உயிர்வாழ்வேன் பிரபோ?” கண்ணீர் ததும்பியது அவளது விழிகளில்.

“வாய்வார்த்தைகள் அனைத்தும் மெய்யாகிவிடாது அன்பே! நீ வருத்தம் கொள்ளாதே. என்றும் அப்படியொரு சூழ்நிலை நிகழாது.” அவளை அவனின் அணைப்பிற்குள் கொண்டு வந்தான்.

அவள் ஏதும் பேசாமல் அந்த அணைப்பு கொடுத்த சுகந்தத்தை இரசிக்க, இவன் சின்ன சிரிப்போடு அவளின் தலையை கோதிவிட்டவாறு நின்றிருந்தான்.

“நான் ஒன்று கேட்கலாமா?”

“கேள் மஞ்சரி! ஆனால், இப்படி அணைப்பிலிருந்தே கேள். அப்பொழுதுதான் சரியாக பதில் வரும்.”

“ம்ம்.. ம்ம்..” என்றவாறு அவனின் நெஞ்சத்தில் வாகாக சாய்ந்துக் கொண்டவள், “தாங்கள், நாட்டின் காவலுக்கு யட்சினியை வைத்திருப்பதாய் பேசிக்கொள்கிறார்களே அது உண்மையா? மாயமந்திரங்கள் எல்லாம் நிகழ்கிறதாமே! கேட்டதும் நெஞ்சம் பதைபதைத்துவிட்டது. தாங்களுக்கு இதில் ஏதும் நேரக்கூடாது என அனுதினமும் நான் இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறேன்” என்றாள்.

சிறிது நேரம் அமைதிக் காத்தவன், “நாட்டிற்காகவும் நாட்டு மக்களின் நலனிற்காகவும் நல்லதைக் கூட இப்படி யாருக்கும் தெரியாமல்தான் செய்ய வேண்டியுள்ளது மஞ்சரி. நான் என்ன செய்யட்டும்? ஆம், நம் நாட்டை யட்சினிதான் காவல் புரிகிறாள். அதனாலேயே அங்கே இன்னும் ஏதும் சூறையாடப்படவில்லை. இதைப்பற்றி உனக்கு விளக்கவே தற்போது இங்கு வந்துள்ளேன். நான் கூறுவதை செவிமடுப்பாயா?”

அவனின் பதிலில் மஞ்சரி சற்று ஆடித்தான் போனாள். இந்த மாயங்கள் மந்திரங்கள் அனைத்தும் எங்கோ எப்போதோ செவி வழிக் கேட்டது மட்டுமே. ஆனால், தற்போது அவற்றை தனது மணாளனாக வரப்போகிறவனே செய்கிறான் என்பதில் அவளுக்கு சிறிதும் உவப்பாக அமையவில்லை. ஆனால், காதல் கொண்ட மனது நாட்டின் நலனிற்கே இவையனைத்தும் என்று அவனுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது.

அவள் அமைதியை இவன் சம்மதமாய் எடுத்துக் கொண்டான்.

“நானும் வஞ்சனும் சிறுவயது முதலே குருகுலத்தில் ஒன்றாக பயின்றவர்கள் என்பதை நீ அறிவாய். பதின் வயதில் எனது தந்தை வீரமரணம் அடைந்துவிட, நாட்டின் அரசாட்சி பெரும் சூழ்ச்சிக்கு ஆளானது தேவி. ஆயுதம் ஏந்தி வருபவனை பிட்டத்தில் வைத்து நசுக்கியே நான் தோற்கடித்துவிடுவேன். ஆனால், நயவஞ்சகனை? துரோகம் புரிபவனை? மாயமந்திரங்கள் கொண்டு மதிமயங்க செய்பவரை எப்படி இனம் கண்டறிய மஞ்சரி? என் அன்னை எப்படி மரணம் எய்தினார் என்பதை நீ அறிவாயா?”

“பயிற்சிக்களத்தில் யானை மிதித்து…”

“அப்படித்தான் ஊரும் உறவும் நாடும் மக்களும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். உண்மையில், என் தாயாரை கொலைதான் செய்திருக்கின்றனர் நயவஞ்சகர்கள். யானைக்கு மதிமயக்கி கொடுத்து, மதம் பிடிக்க வைத்து, சரியாக அன்னையை அதனிடம் அனுப்பி வைத்திருக்கின்றனர். தந்தையை இழந்த ஆட்சியை நெறிப்படுத்துவதா, அல்ல அன்னை இழந்த துக்கத்தில் துவளுவதா என்று இரண்டுக்கும் நடுவில் சிக்கித்தவித்தேன் மஞ்சரி. அப்போதுதான் உனது தந்தையார் எனக்கு துணையாக இருந்தார். நான் மீண்டு வந்ததற்கு வஞ்சனின் நட்பும், உனது பாசமும் பெரிதும் துணையிருந்தது.

பாலகனிவன் என்ன செய்துவிடப் போகிறான் என்று எண்ணி கொலையை அப்படியே விபத்தாக முடித்துவிட்டனர். அப்போது மீண்டும் நான் எனது குருவை சந்திக்க நேர்ந்தது. அவர்தான் பொதிய மலைக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு, ஒரு பெரிய இராஜநாகம் உயிர் போகும் தருவாயில் துடித்துக் கொண்டிருந்தது. குருகுலத்தில் கற்ற மருத்துவக் கல்வியினால் அதற்கு சிகிச்சையளித்து, என்னோடே சிறிது காலம் வைத்துக் கொண்டேன். அது பதினைந்து அடி பெரிய இராஜநாகம். அதற்கு உடல்நலம் தேறியதும், ஒருநாள் என்முன் படமெடுத்து நின்றது. கையில் இருந்த குடுவையில் நீர் அருந்தக் கொடுத்ததும், சட்டென்று அது மனித உருவமாக மாறியது மஞ்சரி”

அன்று…

‘பயம் வேண்டாம் செந்தூரா. நான் நாகலோகத்தில் வசிக்கும் தேவநாகவேடர் குலத்தின் தலைவன். நாங்கன் அனைவரும் கல்வராயன் மலையில்தான் வசித்து வருகிறோம். எங்களது மகள் முனிவரின் தவத்தைக் கலைத்து, அவரிடம் பெற்ற சாபத்தால் நிரந்தர மனித உருவில் இருக்கிறாள். அவளைக் கண்டுபிடித்து சாபவிமோர்சனம் அளிக்கவே நான் பயணித்து வருகிறேன்.

கருணையுள்ளம் கொண்ட தயாளனே! எங்களிடம் இருக்கும் நஞ்சை மட்டுமே அனைவரும் கருத்தில்கொண்டு வாழ்வை பறிக்கும் முயற்சியில் ஈடுபட, என்னையும் சக உயிராகக் கருதி உயிர் காப்பாற்றிய உமக்கு என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன்.

தேவநாகவேடர் குலம் என்றும் உனது கட்டளைக்கு அடிபணியும். உனக்கு நான் நாகவசியக் காப்பை உபதேசிக்கிறேன். அது என்றும் உனக்கு துணைபுரியட்டும்.’ என்று நாகவசியக் காப்பை உபதேசித்தது.

பின், தனது சக்திகளை ஒன்று திரட்டிய இராஜநாகம், ‘செந்தூரா, நீ மிகப்பெரிய பணிக்கு செல்கிறாய். வழியில் கண்ணிற்கு அகப்படாத பல்வேறு ஆபத்துக்கள் உன்னை சூழும். இது வழிவழியாக எங்களது பாதுகாப்பில் இருக்கும் சிவன்காப்பு. இதை அணிந்துக் கொள். தக்க சமயத்தில் இது உனக்கு உறுதுணையாக இருக்கும். மீண்டுமொரு பயணத்தில் நாம் சந்திப்போம். தற்போது விடைபெறுகிறேன் செந்தூரா’ என்று சென்றுவிட்டது.

….

அதன்பிறகு, நான் வெகுதூரம் பயணிக்க, பொதியமலையினை அடைந்ததும், சித்தரின் அருவத்தை அந்த சிவன்காப்புக் காட்டியது. அவரின் சீடனாக நான் சிலகாலம் தங்கினேன். நான் சென்ற சமயம்தான் அவரின் வாழ்நாள் முடியும் தருவாய். அதனாலேயே, இறைவனே என்னை அனுப்பி வைத்ததாக எண்ணி, அவர் அறிந்த வித்தைகளையும், மந்திரங்களையும் எனக்கு உபதேசித்தார். அதனோடு, அதனை குறிப்பாகவும் எழுதி, சில சொல்ல முடியாத மந்திரங்களை சில பொருட்களில் பாதுகாத்து வைத்தார். அந்த பொருட்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்தால், இந்த உலகினையே கைக்ககுள் அடக்கலாம். ஆனால், அது அவ்வளவு சுலபமல்ல. அனைத்து சக்திகளுக்கும் காவலாக பல தடைகளையும் வைத்துள்ளார். அனைத்தும் என் கைப்படவே ஓலையில் செதுக்கிக் கொடுத்தேன்.

அதை அவரின் திருப்பாதங்களில் வைத்ததும், கனநேரத்தில் சுவடிகள் மறைந்து போனது. அதை எழுதிய எனக்கும் நினைவுகள் மறந்தும் போனது. ஆனால், அவர் கற்றுக்கொடுத்த வித்தைகளும் மந்திரங்களும் தான், இன்றுவரை எந்தவித ஆபத்துகளும் இல்லாமல் எனது நாட்டையும் என் மக்கள்களையும் நான் காத்து வருகிறேன் மஞ்சரி. தற்போதுவரை இவையனைத்தும் இரகசியமாகவே என்னுள் புதைந்துகிடந்தது. இனி, நமக்குள் புதைந்துக்கிடக்கும்”

இருவரும் பேசிக்கொண்டே மஞ்சத்தில் அமர்ந்திருந்தனர்.

“அப்படியெனில், இவையனைத்தும் நம் நாட்டு மக்களின் நன்மைக்கு மட்டுமே என்பது தற்போது புரிகிறது பிரபோ. ஆனாலும்…”

“மனதில் இருப்பதை உதிர்த்துவிடு. இல்லையேல், இருவருக்கும் அதனால், மனவிரயம்தான்”

“அந்த யட்சினி?”

“இங்கிருக்கிறேன் தேவி” என்று ஒயிலாக அவள்முன் வந்தாள் செந்தூரனின் யட்சினி தேவி.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்