சுழலி-21
ஐந்தாம் நாள் – முகிழ்
அனைவரும் குகைக்குள் சென்றிட, மஞ்சரியின் சொல்படி வள்ளி நடந்த, கடந்த காலத்தை பற்றி சொல்ல ஆரம்பித்தாள்.
“பல நூறு வருசத்துக்கு முன்னாடி இந்த இடம் சேரர்களோட ஆட்சிக்கு கீழ இருந்தது. அதாவது, இப்போ சொல்ற கொங்கு நாடு, கேரளம் தென்னாடு முழுக்க சேரர்களோட ஆட்சி தான். இந்த சேலத்துக்கு கூட சேரலம்னு இன்னொரு பேர் இருந்ததா சொல்லுவாங்க. அப்போ, இந்த பகுதிய ஆண்டுட்டு வந்தவருதான் சேரமான் வஞ்சன்.”
வள்ளி சொன்னதை ஆமோதித்த சிவரஞ்சன், அவன் அறிந்ததை சொல்லலானான். “ஆமா, இது வரலாறுல இருக்குற விசயம் தான். மூவேந்தர்கள்னு சொல்றோம், ஆனா, சோழர்கள், பாண்டியர்கள் பத்தி தெரிஞ்ச நமக்கு சேரர்கள் பத்தி தெரிஞ்சிக்க முடியல. முடியலன்னு சொல்றத விட, சோழ நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் முன்னாடி அழிவ சந்திச்சது சேர நாடு தான்.
கிட்டத்தட்ட சொல்லனும்னா இப்போ இருக்குற பொதிகை மலைல இருந்து வடபெண்ணையாறு வரைக்கும் வடக்கிழக்கா இருபது டிகிரி சாய்வா ஒரு கோடு போட்டா, அதுல மேல இருக்குற நாடுகள் அதாவது பகுதிகள் எல்லாமே சேரர்களோடது. கீழ இருக்குறது, அதோட புதுக்கோட்டைக்கு வடக்கு பகுதிலாம் சோழர்களோடது. அதுக்கு தெற்குல இருக்குற தென்பகுதி எல்லாம் பாண்டியர்களோடது. இப்போ அழிஞ்சு போய் இருக்குன்னு சொல்ற குமரிக் கண்டம் பகுதிக் கூட பாண்டியர்களோட ஆட்சின்னு தான் குறிப்பிடுறாங்க.
சேரநாடு பல பகுதிகளா பிரிஞ்சு இருந்தது. அதாவது, இந்த மேற்குத் தொடர்ச்சி மலைகள் இருக்குற பெரும்பாலான பகுதி எல்லாமே சேர நாட்டோட ஆட்சிப் பகுதிதான். குடமலைன்னு தமிழ் நூல்கள்ல குறிப்பிட்டு இருக்க மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்குல இருக்குறது கடன்மலைநாடு அப்டின்னும், கிழக்குல இருக்குறது தான் கொங்குநாடுன்னும் பிரிச்சாங்க.
அந்த கடன்மலை நாட்டின் வடபகுதிய குட்டம், குடம், துளுவம், கொங்கணம் அப்டின்னு பல பகுதிகளா பிரிச்சாங்க. கொங்கு நாட்ட, குடகொங்கு அதாவது மேல்மண்டலம், குணகொங்கு கீழ்மண்டலம் அப்டின்னு பிரிச்சாங்க.
இதுல இன்னும் நாம ஆழமா பாத்தா, அந்த குடகொங்கு பகுதிய கூட மறுபடியும் குடகு, கருநாடு, கங்கநாடு, கட்டியநாடு அப்டின்னு பல பகுதிகளா பிரிச்சு இருக்காங்க. குடகை நாட்ட ஆண்ட கோசர் மன்னர்கள கொங்கிளங்கோசர் அப்டின்னும், கங்கை நாட்ட ஆண்ட கங்கர் மன்னர்கள கொங்கு நாட்டரசர் அப்டின்னும் குறிப்பிட்டாங்க.
சேரர்கள் கீழ ஆட்சி செய்த குறுநில மன்னர்கள் அடுத்தடுத்து தனக்கு கீழ் இருக்குற நாட்ட பிரிச்சு எடுத்துக்கிட்டாங்க. அதுக்கு அப்ரோம் கொங்கு மண்டலம் மட்டும் சேரர்களோட ஆட்சில இருந்தது. அதுக்கு அப்ரோம் வந்த ஒவ்வொரு படையெடுப்புலயும் சில பகுதிகள் போய்டுச்சு. கடைசியா கொங்கு நாடுன்னு கோயம்புத்தூர்ல இருந்து சேலம் மாவட்டம் வரை இருக்குற பகுதிகள் மட்டும்தான் இருந்தது. என்னதான் கடன்மலை நாடும் கொங்கு நாடும் பிரிஞ்சாலும் சேரன் செங்குட்டுவன் அரசாட்சிக்கு கீழ தான் இருந்தாங்க. அப்ரோம் நடந்த பல்வேறு கால மாற்றங்கன்னால, சேரர்கள் ஆட்சிப் பகுதியா கொங்கு நாடு, குட்ட நாடு, குடநாடு அப்ரோம் பூழி நாடு மட்டும் தான் கடைசி வரைக்கும் சேரர்களோட ஆட்சிப்பகுதியா இருந்து இருக்கு.
இதுல முன்ன சொல்லப்பட்டிருக்க சேரநாட்டோட வடபகுதியான துளுவம், கொங்கணம், குடகு, கருநாடகம் இதுலாம் வேறு மொழி பேசக்கூடிய மாநிலத்துல ஒரு பகுதியா போய்டுச்சு.
இதுல, கருநாடு, கங்கநாடு, கட்டிய நாடு எல்லாம் ஒன்பதாம் நூற்றாண்டுலயே முழுக்க கன்னட நாடாகிடுச்சு. அதுக்கு அப்ரோம் பதினொன்னாம் நூற்றாண்டுல நடந்த ஹொய்சாள நாட்டு படையெடுப்பால அந்த பகுதி முழுக்க ஹொய்சாள ஆட்சிக்கு வந்துடுச்சு.
பன்னிரெண்டாம் நூற்றாண்டு ஆரம்பத்துல ஹொய்சாள மன்னன் விஷ்ணுவர்த்தன் சேரநாட்டு மேல போர்த் தொடுத்து சேர அரசனை வென்று நீலமலை அதாவது இப்போ சொல்ற நீலகிரிய கைப்பற்றுனாங்க.
இதுக்கு அப்ரோம் தான், சேர நாட்டோ வட எல்லை முழுக்க ரொம்ப தெற்கு பக்கம் போய்டுச்சு. கேரள பக்கம் போகவும் ஆரம்பிச்சுடுச்சு.” நீண்ட பெரும் வரலாற்றை சுருங்கச் சொல்லி முடித்தான்.
அனைவரும் தற்போதே கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட சேரர்களின் ஆட்சிப் பகுதியை எண்ணி வியக்கவே செய்தனர்.
அடுத்த வியப்பாக அமைந்தது வள்ளியின் கூற்று. “ஆமாங்க, இவரு சொன்ன மாதிரி தான் சேர மன்னர்கள் ஆட்சி இருந்தது. அப்போ இருந்த மக்கள்லாம் நகர வாசிங்க, நாட்டு வாசிங்க, மலைவாசிங்க, காட்டுவாசிங்கன்னு இருந்தோம். என்னதான் பிரிவு இருந்தாலும் அதுலாம் வெறும் பேரோட மட்டும்தான் இருந்துச்சு.
எல்லாரும் ஒன்னும்மண்ணா பொலங்கிட்டுதான் இருந்தாங்க. இவரு சொன்ன மாதிரி நம்ம நாடு இன்னும் எங்க அழிவ நோக்கி போய்டுமான்னு பயத்துல தான் சேர நாட்டு ராசா எங்க வஞ்சன் உபாயத்த தேடி அலஞ்சாரு.”
…..
சில நூறு வருடங்களுக்கு முன்பு…
கொங்கு நாடு.
அரண்மனையின் பஞ்சு துயிலும் மன்னனவனுக்கு நெருப்பாய்தான் சுட்டது. சுற்றிலும் ஒவ்வொரு பக்கமும் நடைபெற்று வந்த அந்நிய நாட்டு படையெடுப்பு தாயவளை சூறையாடிக்கொண்டு வந்துக்கொண்டிருந்த நேரம். குறுநில மன்னர்கள் அனைவரும் அடைக்கலம் தேடி வஞ்சனிடம் வந்து சேர்ந்தனர்.
அரசவையை சூழ்ந்திருந்த அமைதியை தன் கட்டைக் குரலால் கலைத்தார் கடன்மலைநாட்டின் குடநாட்டு மன்னன் செம்பியன்.
“அரசர்க்கரசே! சிரம்தாழ்த்தி வணங்குகிறேன். கோமான், தாங்களே அமைதிக்காத்தால் எங்களின் நிலை என்னாகும் அரசே? மக்கள் அனைவரும் பசி பட்டினியால் வாடி வதங்கி இருக்கின்றனர். ஆயிரம் பிரிவினைகள் இருந்தாலும் அனைவரும் சேரநாட்டின் குலம்தானே. போர்த்தொடுத்து வந்தால் வெட்டி வீழ்த்திடுவோம் என்று அறிந்தே சூழ்ச்சி என்னும் ஆயுதம் ஏந்தி வருகின்றனர். குடநாட்டில் பத்தாயிரம் வீரர்களை இரவு காவலுக்கு நியமித்தும் அவர்களைக் கடந்து சூறையாடிவிட்டு சென்றிருக்கின்றனர் மன்னவா!
அதிகாலையில் பிஞ்சு குழந்தை ஒன்று பசியால் இறந்தத் தன் தாயின் மார்பில் சுரக்காத பாலுக்கு ஏங்கி அவளின் மார்புக்காம்பை கடித்திழுப்பதை கண்டவுடன் என் உயிர் ஏன் இன்னமும் உடலோடு இணைந்திருக்கிறது என்று பெரும் பாரம் கொண்டேன் மன்னவா, பெரும் பாரம் கொண்டேன். இனி நீங்கள் ஒருவரே வழியென்று திருவடி தேடி வந்துள்ளேன்” என்றும் மனம் தளராதவர், தம் மக்களுக்காக வாழ்க்கையின் விளிம்பு நிலைக்கு வந்ததைக் கண்ட வஞ்சனுக்கும் கண்கள் கலங்கத்தான் செய்தது.
முதன்மை அமைச்சர் தயக்கமாக எழுந்தார். “அரசே!”
“ம்ம். கூறுங்கள் அமைச்சரே!” வழிய இருந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவன், நிமிர்ந்து அமர்ந்தான்.
“பழுத்த வயதுடையவன், பிழையாக ஏதும் கூறின் முதலில் பொறுத்தருள வேண்டும் கோமானே! நெடுங்காலமாக இறைவனிடம் நாட்டம் கொள்ளாது, குடமுழுக்கு, வேள்வி ஏதும் நிகழ்த்தாமல் இருப்பதுதான் இத்தகை சகுணத்திற்கு காரணமாக இருக்கும் என்று உன் உள்மனம் உரைக்கிறது.” என்று சற்று நிறுத்தினார்.
“ஏன் நிறுத்திவிட்டீர்கள்? அபாயம் என்று நீங்கள் கருதினால், அதற்கு உபாயம் என்று ஒன்றை மனத்தில் சிந்தித்தே வைத்திருப்பீர்கள் அல்லவா? அதையும் முழுதாகக் கூறிவிடுங்கள் அமைச்சரே!”
பெருத்த மூச்சொன்றை விட்டவர், தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அவரறிந்த உபாயத்தை கூறினார்.
“பொதிய மலையின் தெற்கு அடிவாரப் பகுதியில் சித்தமுனி ஒருவர் இருப்பதாய் கேள்வி. அவரைக் கண்டறிந்து அவரிடம் உபாயம் கேட்டால் தகும் என்று எண்ணுகிறேன்.”
வஞ்சன் கண்களை மூடி சிந்தனையில் ஆழ்ந்தார். மணமாகி மனத்தோடு ஒன்றி வாழ்ந்தாலும் இன்னும் இந்த பேரரசுக்கு வாரிசு என்று ஒன்றும் உருவாகிடவில்லை. எதிரிகளின் கண்ணிற்கு இதுவும் ஒரு வாய்ப்பாகத்தான் அமைந்து இருக்கிறது, இப்போது. அதுவே, வஞ்சனிற்கு பெருத்த மனத்தளர்வு. இதில், நாட்டு மக்களின் நிலை, பசி, வறுமை போன்றவற்றை எப்படி சமாளிப்பது என்று திண்டாடித்தான் போனான்.
“செம்பியன் அவர்களே! சேர நாட்டு கருவூலத்தில் இருந்து தேவையான பொற்காசுகளை எடுத்து அண்டை நாட்டிலிருந்து உணவினை வருவியுங்கள். பிள்ளைப் போன்ற நெல்லிற்கு தீ வைத்துவிட்டதனால், மண் மகள் தன் நிலைக்கு வர சற்றுக் காலமெடுக்கும். அதற்குள் மாரி பெய்தால் நலம். பொய்த்துப் போகாது என்று நம்பிக்கைக் கொள்கிறேன். இன்றே, ஆயிரம் வீரர்கள் கொண்ட படைகளை ஏற்பாடு செய்யுங்கள் தளபதி. அனைவரும் பொதிய மலைக்கு சென்று அந்த சித்தரைக் கண்டு அழைத்து வருவதே அவர்களின் தலையாய வேலை.” வஞ்சன் பேசிக்கொண்டிருக்க, அரசவை வாயில் கதவு திறந்தது.
கங்கநாட்டின் மன்னன் கொங்கு நாட்டரசன் செந்தூரன் வீறுநடைப் போட்டு வந்துக் கொண்டிருந்தான். கட்டிளங்காலையவன், நெஞ்சை நிமிர்த்தி வரும் தோரணையே எதிரிகளுக்கு சவால் விடும். இதுவரை அவன் நாட்டில் மட்டுமே எந்தவொரு படையும் உள்நுழையவில்லை என்பது அங்கிருக்கும் அனைவருக்கும் தெரியும். இதற்காக அவன் பல வேள்விகளையும் மந்திர உச்சாடனங்களையும் செய்து யட்சினிகளை காவலுக்கு வைத்துள்ளான் என்று அரசல்புரசலாக வஞ்சனுக்கு தகவல் வந்திருந்தது. ஆனால், அதில் நம்பிக்கை இல்லாதவன் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
செம்மை நிற பட்டாடை காற்றில் பறந்து வர, இடது கை, வலது இடையில் சொருகி இருக்கும் வாலை கம்பீரத்தோடு பிடித்துக் கொண்டிருந்தது.
“நாட்டையும் நாட்டு மக்களையும் நலம்பெற வைக்கும் அரசே! செந்தூரனின் பணிவுகள். கங்கை நாட்டிலிருந்து உணவுப் பொருட்களை கொண்டு வந்துள்ளேன். தாங்கள் அனுமதிக் கொடுத்தால் மக்களுக்கு கொடுத்துவிடலாம்.”
வஞ்சனைவிட, வயதில் சிறியவன் செந்தூரன். இவனின் தந்தை அந்நிய நாட்டு படையால் இவனது பதினைந்தாம் பிராயத்தில் வீரமரணம் எய்திருக்க, அன்றிலிருந்து இன்றுவரை கங்கைநாட்டை தன் கைக்குள் வைத்திருக்கிறான் செந்தூரன், வஞ்சனே கண்டு வியக்கும் வீரன்.
என்னே, இவனுக்கு அனைத்தும் தன்னகம் இருக்க வேண்டும் என்ற பேராசை சற்று அதிகம். ஒரு மனிதன் எத்தகைய நல்லவனாக இருந்தாலும், ஆசை பேராசையாக மாறும் தருணம்தனில் அவன் வாழ்வு வரமளிக்காது போகும்.
வஞ்சன், செந்தூரனைத்தான் கூர்ந்துப் பார்த்தான். இவனை ஏன் சித்தமுனியைத் தேடும் படைக்கு தலைவனாக அமர்த்தக் கூடாது என்பதே வஞ்சனின் எண்ணமாக இருந்தது.
செந்தூரன் கொண்டு வந்த பொருட்களை வஞ்சனின் கையசைவு மூலம் பணியாளர்கள் எடுத்துக்கொண்டு சென்றனர்.
“செந்தூரா! உன்னிடம் நான் சற்று உரையாட வேண்டும். சபை முடிந்ததும் சந்திக்கலாம். காத்திரு”
“உத்தரவு கோமானே!” என்றவன், செம்பியனைப் பார்த்து எள்ளல் நகை வீசிச் சென்றான்.
….
காத்திருக்கும் மண்டபத்தில் சாளரம் வழியாக தன்னை தழுவிச் செல்லும் சுகந்தக் காற்றை சுவாசித்துக் கொண்டிருந்தான் செந்தூரன்.
கீழே தாமரைக் குளத்திற்கு பணிப்பெண்கள் சூழ அவள் நடந்து வந்தாள், மஞ்சரி.
“தேவி, பொறுமையாக வாரும். தங்களின் தங்க மேனி தகதகப்பில் தேவர்கள் இறங்கி வந்தாலும் அதிசயப்படுவதற்கில்லை” கிண்கிணி சிரிப்போடு சொன்னாள் மஞ்சரியின் தோழி நீலா.
ஆனால், இவளின் நகைப்பில் மஞ்சரியின் கவனம் செல்லவில்லை. அதனை நீலாவும் உணர்ந்தாள்.
“என்னவாயிற்று மஞ்சரி? வதனம் சூம்பிப்போய் இருக்கிறது?” தனது கேலியைக் கைவிட்டவளாய், அக்கரையாய் வினவினாள்.
“நாட்டின் நிலைதான் என்னவோ? மனது கிடந்து பிசைகிறது நீலா. மக்கள் அனைவரின் நெஞ்சமும் மன்னர் பெயர் சொன்னாலும், பசியால் வாடும் அவர்களுக்கு உண்டி நிரப்ப ஏதேனும் வழி கிட்டுமா என்ற சிந்தனையிலேயே இருக்கிறது.” கவலை தோய்ந்த முகத்திலும் பேரழகியாய் மிளிர்ந்தாள் வஞ்சனின் சகோதரி மஞ்சரி.
மலரின் மணத்தில் மதிமயங்கி செல்லும் வண்டுபோல, பெண்ணவளின் எழிலில் மயங்கிய செந்தூரனின் கண்கள் அவளையே சுற்றிக் கொண்டிருந்தன.
“அரசவையில் ஒரு முடிவு எடுத்துள்ளார்கள். யாரோ, சித்தமுனியாம். பொதியமலையில் தவம் மேற்கொண்டுள்ளாராம். இத்தனை நாட்கள் குடமுழுக்கு ஏதும் நிகழ்த்தாமல், வேள்வி புரியாமல் இருந்ததனால் இப்படி நடக்கிறது என்று எண்ணிய அமைச்சர்கள், அரசரிடம் ஆலோசனைக் கேட்டு, ஆயிரம் வீரர் படைகளை அவரைத் தேடி அனுப்பவதாய் பேச்சு. இதற்கு தலைமை தாங்குபவர்தான் யாரோ? இது எனது கேள்வி”
“சித்தமுனியா? நமக்கு தேவையானதை நாம்தானே நீலா சென்று கேட்க வேண்டும். வீரர்களை அனுப்பி அவரை அழைத்து வரச் சொல்வது அவ்வளவு உத்தேசமாய் எனக்குத் தெரியவில்லை. சோதரனே சென்று அழைத்தால் நலம் என்றே எண்ணுகிறேன்.”
“நாம் சொல்வது அனைத்தையும் அவர் கேட்டுவிட்டுதான் மறுவேலை காண்பார் என்று எண்ணுகிறாயா மஞ்சரி?” பாத சலங்கை கானத்தோடு வந்து சேர்ந்தாள் வஞ்சனின் மனையாள், நாட்டின் மகாராணி கோதையிசையாள்.
“மகாராணிக்கு எமது வந்தனங்கள்” பணிப்பெண்கள் அனைவரும் வணங்கி ஒதுங்கி நின்றனர்.
மஞ்சரி ஏதும் பேசாமல் எழுந்து நிற்க, வாஞ்சையாய் அவளின் குழல் கோதியவள், “கன்னிப் பெண் இப்படி பொழுது சாயும் நேரத்தில் வெளியில் இருக்கலாமா? சஞ்சலத்திற்கான வழியை அவர் பார்த்துக் கொள்வார். நீ வா மஞ்சரி” என்று அழைத்து சென்றவர், நீலாவிற்கு கண்களாலேயே செய்தி தெரிவித்துவிட்டு சென்றார்.
…
அனைத்தையும் பார்வையாளனாய் பார்த்துக் கொண்டிருந்த செந்தூரனின் கருவிழிப் பார்வை, மஞ்சரியின் பின்னோடே சென்றது. கண்டதும் காதல் வலையில் விழுந்துவிட்டான் மன்னன் இவன். மங்கையவளின் நிலைதான் என்னவோ?
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
11
+1
+1
சேர நாட்டு வரலாறு ரொம்ப அருமையா சொல்லி இருக்க டா சூப்பர் 👌👌👌