சுழலி-20 (முதல் பாகம் – இறுதி அத்தியாயம்)
நான்காம் நாள் – மொக்குள்
அனைவரும் வள்ளிக் கொண்டு வந்திருந்த உணவுப் பொருட்களை உண்டு தயாராக இருந்தனர்.
நள்ளிரவு தொடங்கியது. ஒரு பக்கம் சுவடிகள் தனது குறிப்புகளை வெளிப்படுத்தத் துவங்க, மறு பக்கம் நீலா தனது வேள்வியைத் துவங்கினாள். கல்வராயன் மலையிலேயே இரண்டு இடங்களில் மட்டும் சிறு வெளிச்சம் தோன்றியது போல் இருந்தது. நீலா துவங்கிய வேள்வி நெருப்பானது தனது கனல்களை சிதறடிக்க, சுவடியில் இருந்து வெளிப்பட்ட வெளிச்சமோ கண்ணைப் பறிக்கும் அளவிற்கு இருந்தது.
தனது கையில் வெளிச்சத்தோடு வெப்பத்தையும் உமிழ்ந்துக் கொண்டிருந்த அந்த சுவடியின் எழுத்துக்களை படித்தவனின் விழிகள் அதிர்ச்சியில் இன்னும் விரிந்தது.
“சொக்கா, அதில் என்ன குறிப்பிட்டிருக்கிறது?” சித்தர் கேட்டார். அவருக்கு என்ன நடக்கும் என்ற ஒரு யூகம் இருந்தாலும், விதியின் கணக்கானது எப்படி விடையளிக்கும் என்ற சூட்சமம் யாரும் அறியாத ஒன்று.
கைகள் நடுங்கியபடி அதில் இருந்ததை வாசிக்க தொடங்கினான் சொக்கன்.
“கார்மேகங்கள் இடுஇடுங்க, கண்ணிமைகள் மின்னல் தாக்க, வேள்வி தீயானது வேகம் கொண்டு பரவிடுமாம். கன்னிப் பெண்ணின் உதிரம் தாக்க, முன்னரே வெளிவந்திடுமாம் செம்மை பூசிய செந்தூர நாகம். தாமதப்படுத்த தக்க பொருட்கள் உடனே சேகரித்திடு. முன்னரே தெளிவில்லாதவற்றை தெளிவுப்படுத்திடு. மறைக்க ஒன்றுமில்லை. மனதில் இருப்பதை உரைத்திடு. உள்ளே மறைக்கும் ஒவ்வொன்றும் நஞ்சாய் மாறும் வேள்வியால். அதுவே அழிவிற்கு வித்திடுமாம். மறைபொருளென்று வையகத்தில் ஏதுமில்லை. குறிப்புகளை அறிந்திட்டால் இனியொரு பொழுதும் ஓய்வுமில்லை.”
அனைவருக்கும் முழுதாகப் புரிந்திட இயலவில்லை எனினும், செந்தூரன் குறித்த நாளிற்கு முன்னதாகவே வெளிவந்திடுவான் என்ற ஒன்று மட்டும் உறுதியாக தெரிந்தது.
சித்தருக்கும் பெரிய அதிர்வுதான். பொருட்களுக்கான வழிகள் கிடைத்திடும் என அவர் எண்ணியிருக்க, முன்னரே செந்தூரன் வரப் போகிறான் என்பதை குறிப்பு உணர்த்திவிட்டது. இனி ஒரு நிமிடமும் தாமதப்படுத்தக் கூடாது என்ற முடிவுக்கு வந்தார்.
இப்போது அனைவரும் சிவரஞ்சனைப் பார்த்தனர். இந்நேரம் அவனின் குறிப்புச் சுவடி ஒளிர்ந்திருக்க வேண்டும். ஆனால், அது எந்தவித அறிகுறியும் காட்டாது அப்படியே இருந்தது.
சொக்கனின் புரியாத புதிருக்கு சிவரஞ்சனின் குறிப்பே ஒரே வழி. ஆனால், தற்போது அதுவும் எந்த எதிர்வினையும் புரியாமல் இருக்க, மற்றவர்களுக்கு கிலி பிடித்தது.
“ஐயா, இப்போ நாம என்ன செய்றது? இன்னும் முக்கியமான பொருட்கள நாம உடனே கண்டுபிடிச்சாகனுங்களே. கால தாமசம் ஆகக் கூடாது” உள்ளுக்குள் எழுந்த படபடப்பை மறைத்தவாறு கேட்டார் வள்ளி.
“மஞ்சரி” சித்தரின் குரலுக்கு தனது அருவத்தை உருவமாகக் கொண்டாள் மஞ்சரி.
பிறையும் சொக்கனும் ஏற்கனவே அவளை பார்த்திருந்தாலும் இப்போது மஞ்சரியின் தோற்றம் சற்று வித்தியாசமாக இருப்பது போன்றதொரு உணர்வு.
ஆனால், அங்கையும் யாழும் மஞ்சரியை கண்டு அதிரத்தான் செய்தனர்.
“அறிவு, உனக்கு முன்னாடியே இவங்க இருக்குறது தெரியுமா?” அன்பு விழித்த விழி மூடாமல் கேட்டான்.
“தெரியும்” என்றவன் மஞ்சரியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
கார்த்திகேயனிற்கும் அதிர்ச்சிதான். இந்த அதிர்வுக்கெல்லாம் காரணமானவள் புன்னகை முகம் மாறாது நின்றுக் கொண்டிருந்தாள்.
“என்னங்கடா நடக்குது? மஞ்சரி அப்டியே யாழ் மாதிரியே இருக்காங்க?” நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கேட்டாள் ஆருத்ரா.
ஆம், மஞ்சரி அப்படியே யாழ் நிலாவைப் போலத்தான் இருந்தாள். திருத்தம், யாழ் நிலாதான் தன் தாய் மஞ்சரியை உரித்து வைத்தாற்போல் இருக்கிறாள்.
“மஞ்சரி, நீ உன் மகளின் அருகில் சென்று அறியாததை அறிவித்து விடு.” என்றார் சித்தர்.
மஞ்சரி புன்னகை முகமாக யாழிடம் செல்ல, அவளோ பயந்து இரண்டடி பின்னே எடுத்து வைத்தாள். அப்போது மழைத் தூறத் துவங்க, சிவரஞ்சனின் சுவடி ஒளிர்ந்தது.
உடனே அதனைக் கையிலெடுத்தவன், வேகமாகப் படிக்க ஆரம்பித்தான்.
“படபடவென மழைத்துளிகள் சிதற,
கடகடவென மனதிற்குள் மின்னலடிக்க,
சடுகுடு சடுகுடு ஆட்டம் தொடங்குது.
வருவான் அவன் வருவான்
வேள்வித் தீயில் செம்மை பூசி
செந்தூரன் அவன் வருவான்!
வேடுவன் குகை ஒன்று,
வள்ளிக் குறி சொல்ல
மெல்ல அது திறந்திடுமாம்.
வான்துளி இனி அடங்காது,
அவன்கோரமும் இனி சிதறாது.
முழுநிலவன்று,
உதிரம் குடித்திடும் நாளோ!
உயிர் சிதறிடும் நாளோ!
பழி பெருகிடும் நாளோ!
வெறி அடங்கிடும் நாளோ!
இனம் காக்க ஒருத்தி,
தன்சொல்ல காக்க ஒருத்தி,
இருதுருவம் ஒன்றாக இணைந்தால்
எதிர்வரும் சிக்கல்கள் சிதறிடும் தூள்தூளாக!
நடுவில் ஒரு மாற்றம் உண்டாகும்,
அது மெய்யோ பொய்யோ அறிந்திட இயலாது.
பொருட்களின் தேடல் குகையினில் தொடங்க,
உண்மையின் தேடல் மனக்குகையினில் செதுக்க.
அறிந்தபின் அதிராது,
தொடருங்கள் பயணத்தை.
விதியை மதியால் வெல்லும்நாள்
வெகுதொலைவில் இல்லை.
நாதன் அவன் துணையிருப்பான்,
கணக்காக பலம் கொடுப்பான்.”
ஏதோ ஒரு உண்மை அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று புரிந்தது. முதலில் இந்த மழையில் இருந்து காத்துக் கொள்ள ஒதுங்க இடம் வேண்டும் என்ற எண்ணத்திற்கும் முதல் வரியே பதிலாக வந்தது.
அதனை உணர்ந்துக் கொண்ட வள்ளி தன் குறிசொல்லும் குச்சியை நெற்றியில் வைத்து ஏதோ பாடத் துவங்கினாள்.
“குகனே, குறும்பனே! வாக்கில் அமர்ந்திடுவாய். மெய் சொல்லும் நாவிதனில் மெய்யாய் அமர்ந்திடுவாய். ரேகைகள் இல்லாது வேர்களினால் குறி சொல்லிடுவாய். மண்ணோ மனமோ உனைத் தவிர்த்து ஏதும் இல்லை. உயிர்கள் காத்திடவே உடனே வந்திடுவாய். கெட்டது அழித்திடவே கெடுபிடி காட்டாது வாக்கு மலர்ந்திடுவாய்.” வேலவனை வணங்கியவள், அப்படியே அமர்ந்து மண்ணில் கைவைத்தாள்.
“வேடுவனின் துணையிருக்கும் வேடன்குல குறத்தியிவள். குருவாய், திருவாய் மொழிகின்றேன் அன்னையே நீ எங்களை காத்திடணும். பெய்யும் மழையினிலே பெயரறியா உருவமொன்று, எங்களை துரத்தி வர, உயிர்காத்து உதவிடணும். கண்ணே கற்கண்டே, பாதகம் ஏதும் வாராமல் பாங்காய் பாதுகாக்க பாங்கி நீ முன் வரணும். மலையின்வாசன் அனுப்பி வைத்தான், மறுக்காமல் வந்திடணும். குறிப்புகளும் உன்னைக் கைக்காட்ட, குணமாய் திறந்திடணும். இருக்க இடம் தர, கைம்மாறு என்ன வேணும்? கருத்தாய் நீ மொழிந்தால் கலங்காமல் நாங்களிருப்போம்.”
கண்ணைத் திறக்காமலேயே, “அங்கை, பிறை. நீங்க ரெண்டு பேரும் மண்ணுல கை வச்சு, எந்த ஒரு சூழ்நிலைலயும் யாரோட இரத்தமும் இந்த கல்வராயன் மலைல சிந்த விடமாட்டோம்னு சத்தியம் பண்ணுங்க” என்றாள் வள்ளி.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, “நீங்க மலைத் தெய்வத்துக்கு வாக்கு தந்தா தான், அவ நமக்கு வழிகாட்டுவா. நம்புங்க, எந்த உயிரும் இங்க இரத்தம் சிந்தக் கூடாது. அதுக்கும் அவ நம்ம கூடவே இருப்பா” என்று உறுதியளித்தாள்.
இயற்கையன்னைமீது பெரிய பாரத்தைப் போட்டு, இருவரும் மண்மேல் கைவைத்து வாக்கு பகர்ந்தனர்.
“இந்த நிமிசத்துல இருந்து, எந்த சூழ்நிலை வந்தாலும் எந்த உயிரோட இரத்தமும் இங்க சிந்தாது. நாங்க ரெண்டு பேரும் ஒரே உயிரா இணைஞ்சு வாக்கு தரோம்” என்றதும், இரண்டு மரங்களுக்கு இடையில் ஒரு பெரிய குகைவாயில் போல் ஒன்று திறந்தது.
“மழை வலுப்பதற்குள் அனைவரும் உள்ளே செல்லுங்கள்” என்ற சித்தர், அனைவரையும் உள்ளே அனுப்பிவிட்டு ஏதோ உந்த திரும்பினார்.
தூரத்தில் மலையின் உச்சியில், கையில் வில் அம்புகளோடு, தலையில் சேவல் இறகுகளை சுமந்தவாறு காட்சியளிக்கிறான் வேடன் என்னும் குறும்புக்காரன்.
சித்தர் அப்படியே நெடுஞ்சாணுக்கிடையாக விழுந்து தொழுகிறார். மனத்திற்குள், ‘அப்பனே சுப்பையா! பயணப்பட்டு கொண்டிருக்கிறோம். அனைவருக்கும் துணையாக இருந்து காத்தருள வேண்டுகிறேன். பயணம் முடியும் தருவாயில், உன் காலடியில் சராணகதி ஆகிட அருள் கொடுமய்யா’ என்று வேண்டிக் கொள்கிறார்.
அந்த சிறுவனின் இதழானது புன்னகை சிந்திட, சட்டென மறைந்தும் போனான்.
குகைக்குள் அனைவரும் சென்றனர். இரண்டு மரங்களுக்கு நடுவே சிறு படிகள் செல்ல, உள்ளே பெரிய குகை ஒன்று இருந்தது. இதற்கு முன் இங்கு யாரோ இருந்திருக்க வேண்டும். பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் சற்று தூசி படிந்து இருக்க, அனைவரும் இடத்தை சுத்தம் செய்தனர்.
“நீ யாழுக்கு விளக்கிடு மஞ்சரி. அனைவரும் தெரிந்துக் கொள்ளட்டும்.” என்றார் சித்தர்.
“முடிஞ்சத மறுபடியும் என்னால வெளிய சொல்ல முடியல. நான் சொல்றத விட, வள்ளி சொன்னா சரியா இருக்கும்னு நினைக்குறேன்” புன்னகை பூசிய வதனம், பல வகையான உணர்வுகளை பிரதிபலித்தது.
அனைவரும் வள்ளியை நோக்கிட, நீண்ட பெருமூச்சொன்றை விட்டவள் “மஞ்சரியோட காதல் கணவன்தான் செந்தூரன்.” என்று முந்தைய காலத்தை சொல்ல ஆரம்பித்தாள்.
…..
நீலா வேள்வியைத் துவங்கி இருந்தாள். காளிங்கன், மலைமக்களின் கூட்டத்திலிருந்து ஒரு கன்னிப் பெண்ணை வசிய மருந்துக் கொடுத்து அழைத்து வந்திருந்தான்.
பிஞ்சின் முகம் எதையும் வெளிக்காட்டாது எதையோ வெறித்துக் கொண்டிருந்தது.
அந்த நள்ளிரவு நேரத்தில் கோட்டான்களின் சப்தத்தோடு, இன்னும் இனம் கண்டறியா இரைச்சலில் நீலாவின் வேள்வியும் நெருப்போடு துவங்கியது. தீ கங்குகள் எட்டுத்திக்கும் சிதறி தெறித்தன. அவளை சுற்றி கருநாகக் கூட்டம் மட்டுமே இருந்தது.
“காளிங்கா, அனைத்து பொருட்களையும் எடுத்து வை” என்று கட்டளையிட்டவள், மந்திரங்கள் சொல்லி வேள்வித் தீயை வளர்த்துக் கொண்டிருந்தாள்.
இம்முறையும் யாரும் அறியாமல் அந்த இடத்திற்கு வந்திருந்தாள் அங்கதினி.
‘இறைவா, எப்படியாவது இந்த வேள்வி தடைபட்டு விட வேண்டும். அவன் வெளியேற இன்னும் எட்டு தினங்கள் இருக்கிறது. அதற்கு முன் அவன் வந்துவிட்டால் இழப்புகள் பெரியதாய் இருக்கும்.’ என்று மனத்திற்குள் வேண்டியவள், நீலாவின் வேள்விப் பொருட்களை காளிங்கனுக்கு தெரியாமல் அப்புறப்படுத்தத் துவங்கினாள்.
அனைத்து பொருட்களையும் எடுத்து வந்த காளிங்கன், மீண்டும் அது இடத்தில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியுற்றான்.
‘இப்போது தானே பொருட்களை கொண்டு வந்து வைத்தேன். அதற்குள் அனைத்தும் எங்கு சென்றன?’ என்று யோசித்துக் கொண்டிருந்தவனின் எண்ணமானது, மறைந்திருந்து வந்த அங்கதினியின்மேல் திரும்பியது.
தனது நீண்ட வாலால் அவளை பிடித்தவன், “நீலா, இன்னுமொரு கன்னிப் பெண் கிடைத்துள்ளாள்.” என்றான்.
நீலா கண் திறந்துப் பார்த்தவள் எக்காளமிட்டு சிரித்தாள். “நினைத்தேன். எப்படியும் நீ தான் அந்த பெண்ணை காப்பாற்றி அழைத்து சென்றிருக்க வேண்டும். காவல் பரணிலிருந்து மற்றொரு வழிக்கு உன்னைத் தவிர வேறு யாராலும் அவளை அழைத்து சென்றிருக்க முடியாது. இப்போது இங்கு உனக்கென்ன வேலை?” வேள்வியைத் தொடர்ந்துக் கொண்டே கேட்டாள்.
“காலம் இன்னும் இருக்கிறது அத்தையாரே. மீண்டுமொரு வாய்ப்பாக எண்ணி, அவனை வெளிக்கொணரும் நோக்கத்தை கைவிடுங்கள். மஞ்சரியம்மா உங்களுக்கு நல்லது செய்யவே எண்ணினார்கள். உண்மை அறியாமல் நீங்கள் இப்போதும் தவறுதான் செய்துக் கொண்டிருக்கிறீர்கள்” தன்னால் முடிந்தவரை நீலாவிற்கு புரிய வைக்கும் நோக்கில் ஈடுபட்டாள் அங்கதினி.
“மஞ்சரி… எனக்கு…. நல்லது… எண்ணினாள்? கேட்கவே நகைப்பாக இருக்கிறது அங்கதினி. சரியோ, தவறோ நானும் என்னைச் சார்ந்தவர்களின் உயிரும் தற்போது என் கையில் இருக்கிறது. நம் இனம் என்றுமே வாக்கு தவறியதில்லை அங்கதினி. என்னைச் சார்ந்தவர்களை காப்பாற்ற நான் செந்தூரனை நிச்சயம் வெளிக்கொணர்வேன். அதற்கு எந்த எல்லைக்கும் நான் செல்வேன்”
“நான் இருக்கும்வரை நடக்க விடமாட்டேன் அத்தையாரே. நீங்கள் இந்த வேள்வியை நிறுத்தியே ஆக வேண்டும்.”
“காலம் கடந்து இப்போது எனக்கு கனிந்துவிட்டது.” என்றவள், அங்கிருந்த சிறு பெண்ணின் மணிக்கட்டில் கத்தியால் கீறிட, பெருகிய உதிரத்தை நெருப்பிலிட்டாள்.
“செம்மை நிறத்திற்கு சொந்தமானவனே! செந்தூரன் என்னும் நாமம் கொண்டவனே. உன் விடுதலைக்காக, கன்னிப் பெண்ணை தானம் செய்கிறேன். குருதி நாற்றம் முகர்ந்து, தடைகள் அனைத்தும் உடைத்து வெளியே வந்துவிடு. எங்களின் விடுதலையை தந்துவிடு” என்றவள், அந்த பெண்ணை நெருப்பிலிட்டாள்.
சட்டென்று காளிங்கனிடம் இருந்து தப்பிய அங்கதினி, “நானிருக்கும் வரை, உனது சக்தி என்றும் முழுமையடையாது செந்தூரா… உன் மகளும் மகனும் வரும் வரை அரைமனிதனாக உலாவிடு” என்று கத்திக் கொண்டே அந்த நெருப்பில் குதித்தாள் அங்கதினி.
“அங்கதினி…” நீலா அதிர்ச்சியாகிட, இடியென சத்தத்துடன் வெளிவந்தான் செந்தூரன்.
“நீலா… கொடுத்த வாக்கினை தக்க சமயத்தில் காப்பாற்றி விட்டாய். இன்றிலிருந்து நீயும் உன்னைச் சார்ந்தவர்களையும் நான் விடுவிக்கிறேன். நீங்களும் மற்றவர்களைப் போல் வாழலாம்” என்றவன், அப்போதுதான் கவனித்தான்.
உடலின் மேல்பாகம் மட்டும் மனித உருவத்தோடு இருக்க, கால்களிரண்டும் கண்ணிற்கு தெரியாமல் இருந்தது. அதாவது, அவனின் இடுப்புப் பகுதியிலிருந்து கீழே மற்ற பாகங்கள் எதுவும் கண்ணிற்கு புலப்படவில்லை. அதில் பெரிதும் அதிர்ந்தான் செந்தூரன்.
“எப்படி இது சாத்தியம்? நீ வேள்வியை சரியாகத்தானே செய்தாய்?”
“சரியாகத்தான் செய்தேன். அதற்குள்…” நீலா தடுமாறிட,
“அதற்குள் என்னவாயிற்று?” கர்ஜித்தான் செந்தூரன்.
“அதற்குள் அங்கதினி நெருப்பில் விழுந்து உயிரை மாய்த்துக் கொண்டாள்.” என்றாள்.
“அங்கதினி…” என்று கத்தியவன், “மஞ்சரி எங்கே?” பல்லிடுக்கிலிருந்து வந்து விழுந்தன வார்த்தைகள்.
“அவள்… சுவடிகளை கண்டெடுத்து வன எல்லைக்குள் சென்றுவிட்டாள்.”
இடிஇடியென சிரித்தான் செந்தூரன். அவனின் கோரமுகம் இன்னும் கோரமாய் மாறியது.
“ஏ, என் காதல் சுழலி மஞ்சரி! வந்துவிட்டேனடி. உன்னோடு கொஞ்சிக் கூடி குலாவிடும் நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். முழுநிலவன்று என் சக்தி முழுமையடைந்ததும் என் மடியில் உன்னை இருத்தி மஞ்சரியோடு மஞ்சம் பகிர்வேன்.” இடிகள் இடித்திட, மின்னல் மின்னிட, அந்த காடே அதிரும்படி அவனிட்ட கூக்குரல் அனைவரையும் உலுக்கி எடுத்துவிட்டது.
வருவான் செந்தூரன்.
இனி நம் பயணம் அடுத்தப் பாகத்தில் செந்தூரனோடு தொடரும்.
முதல் பாகம் முற்றிற்று.
இதுவரை என்னோடு பயணித்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
11
+1
1
+1
யாழ் மஞ்சரியோட பொண்ணு அப்போ அங்கை யாரோட பொண்ணு,
செந்தூரமோட மகளும் மகனும் வருவாங்கன்னா மகள் யார் அப்போ மகன் யாரு?
மஞ்சரி எல்லாரையும் காப்பாத்த அங்க முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தா
இங்க நீ என்ன காரியம் டா பண்ணி வச்சிருக்க ஏன் இப்படி அங்கதினிய எதுக்கு இப்படி அநியாயமா பலி கொடுத்துட்ட 😡😡