சுழலி – 2
ஜருகுமலை மலைக்கிராமம் – மேலூர்.
தனது நான்கு சக்கர வாகனமான ஜீப்பில் கண்கள் முழுக்க ஏக்கத்தோடு பயணித்துக் கொண்டிருந்தான் பிறைசூடன். அவனுடன் தன் வாகன ஓட்டும் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தாள் ஆருத்ரா. பின் இருக்கையில் காதில் ஊடலை மூலம் பாட்டுக் கேட்டுக் கொண்டே அந்த இயற்கை அழகை இரசித்தவாறு பயணப்பட்டுக் கொண்டிருந்தான் சிவரஞ்சன்.
ஜருகுமலையின் இருபதாவது கொண்டைஊசி வளைவைக் கடந்த பின் ஒரு ஒற்றையடி பாதை தென்பட்டது. அதில் வாகனத்தைச் செலுத்தினாள் ஆருத்ரா.
“ஆரு, ஜீப்ப நிறுத்து” பிறையின் சொல்லுக்கேற்ப வண்டியை நிறுத்தினாள் ஆருத்ரா.
“இங்க இருந்து நடந்துதான் போகணும். லக்கேஜ்லாம் எடுங்க” என்றபடி தனது தோள்பையை எடுத்தான் பிறைசூடன்.
“டேய், அதான் ரோடு போட்டுத்தான இருக்காங்க. ஜீப்லயே போலாமே. ஏன் நடக்கணும்?” தன் பெருத்த சந்தேகத்தை முன் வைத்தான் ரஞ்சன்.
“ரஞ்சு, அவன்கிட்ட வாங்கிக் கட்டிக்கணும்னே கேட்பியா? ஆல்ரெடி சொல்லி இருக்கான்ல. இங்க அதிகமா அனிமல்ஸ் இருக்கும். முக்கியமா பாம்புலாம் வரும். சோ, இங்க இருந்து வண்டில போகக் கூடாதுன்னு அவங்க தலைவர் சொல்லி இருக்குறதா முன்னாடியே சொன்னான்ல?” சிவரஞ்சனின் காதைக் கடித்தாள் ஆருத்ரா.
“நல்லவேள ஞாபகப்படுத்துன. ஆனாலும், பாம்புன்னு சொன்ன அப்ரோம்தான் லைட்டா அல்லுவிடுது” எச்சிலை விழுங்கியபடி தனது உடைமைகளை எடுத்தான்.
“அதான் இவன் இருக்கான்ல. பாத்துப்பான். டேய், இங்க இருந்து பாரு, வியூ செமயா இருக்கு.”
இவர்களின் உரையாடல்களில் பிறை கலந்து கொள்ளவில்லை. கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கழித்துத் தன் கிராம மக்களைச் சந்திக்கச் செல்கிறான். அவனுள் ஆயிரமாயிரம் கேள்விகள் இருந்தன. அவனின் பெற்றோர்கள் தன்னை அடையாளம் காண்பார்களா? சொக்கனுக்குத் தற்போது எப்படியும் இருபது வயதாவது இருக்கும்? அவன் என்ன செய்து கொண்டிருப்பான்? கல்லூரி சேர்ந்து இருப்பானா? இல்லை அன்று இருந்தது போல்? நினைக்கவே அவனுக்குக் கசந்தது.
பெருமூச்சொன்றை விட்டவன், ‘என்ன நடந்தாலும் பாத்துக்கலாம். முதல்ல ரேன்ஜர போய்ப் பாக்கணும்’ என்று எண்ணிக் கொண்டே தன் நடையைத் தொடர்ந்தான்.
“பிறை, இன்னும் எவ்ளோ தூரம் நடக்கணும்?” மூச்சு வாங்கியபடி கேட்டான் சிவரஞ்சன்.
“இன்னும் ஒரு கிலோ மீட்டர்தான். ஊர் வந்துடும்” என்றவனின் கண்கள் சுற்றும்முற்றும் பார்த்துக் கொண்டே இருந்தன.
அவனின் இல்லத்திற்கு இன்னும் ஒரு கொண்டைஊசி வளைவைக் கடந்தால் சாலைமார்க்கமாகவே சென்றுவிடலாம். ஆனால், சிறுவயது முதல் ஓடியாடிய இந்த இடம் இவனின் மனத்திற்கு இன்னும் நெருக்கமானதும் கூட. ஆகவேதான் இதன் வழியாகத் தன் இல்லத்திற்குச் சென்றால் நிச்சயம் சொக்கனைக் காணலாம் என்றே தேர்ந்தெடுத்தான்.
இன்னும் சிறிது நேரத்தில் இருட்டத் தொடங்கிவிடும் என்று உணர்ந்த பிறை, “கொஞ்சம் வேகமா நடங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிடும்”
“எனக்கு வீட்டுக்குப் போற ஃபீல் இல்ல, ட்ரக்கிங்க்குப் போற மாதிரியே ஃபீல் ஆகுது.”
“புலம்பாம வாடா. அவன் நம்மள கூட்டிட்டு வந்ததே பெரிய விசயம். இதுல நீ பேசுற பேச்சுல, திக்குத் தெரியாத காட்டுல விட்டுட்டுப் போனாலும் ஆச்சர்யப்படுறதுக்கு இல்ல” அவனை இழுத்துக் கொண்டு நடந்தாள் ஆருத்ரா. என்னதான் நடந்தாலும் பிறையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
கிட்டத்தட்ட கிராமத்தின் நுழைவாயிலுக்கு வந்தாயிற்று. மலைக்கிராமத்திற்குள் நுழைந்ததுமே வரவேற்றது ஒரு பெரிய கிணறு. நான்கைந்து பேர் அருகில் இருந்த பெரிய திண்ணையில் அமர்ந்திருந்தனர்.
“ஆருப்போய், பொழுது சாஞ்ச அப்ரோம் ஊருக்குள்ள வரது? சுத்திப்பாக்க வந்தவுகன்னா முதல்ல அங்கேயே நில்லுங்க” என்று சத்தமிட்டப்படி ஒருவர் அருகில் வந்தார்.
பிறை சிரிப்புடனேயே நின்றுவிட்டான். இது ஊர்வழக்கம், பொழுது சாய்ந்த பின்னர் வெளியாட்கள் உள்ளே வரக் கூடாது என்பது.
“மணி அண்ணாதான?”
“நான் மணிதான்பா. நீ ஆரு? ஆரு வூட்டுக்கு வந்து இருக்க?”
“அண்ணா, நான் பிறைசூடன். சொக்கனோட அண்ணா.”
“நிஜமாவா? பிறைசூடனா நீ? வருசக்கணக்குள்ள ஆச்சு? வா, நம்ம ஆத்தா கோவிலுக்குப் போய் மஞ்சத்தண்ணீல கால கழுவிட்டு ஊருக்குள்ள வா. இவங்க யாரு?”
“என்னோட ப்ரெண்ட்ஸ்தான் அண்ணா. ரெண்டு நாள்ல கிளம்பிடுவாங்க.”
“சரி என்கூட வாங்க” என்றபடி வந்த வழியே மற்றொரு ஒற்றையடி பாதைப் பிரிவிற்குள் அழைத்துச் சென்றார். இருட்டிவிட்டது. மணி எட்டுப்போல் இருக்கும். அங்கு, அந்த வனக்கோவிலின் முன் வைக்கப்பட்டிருந்த தொட்டியில் மஞ்சளும் வேப்பிலையும் நிறைந்து இருந்தன. காலணிகளைக் கழற்றிவிட்டு அந்த நீரைக்கொண்டு கால்களைக் கழுவினர். பின், மணி அவர்களைக் கோவிலின் நுழைவாயில்வரை அழைத்துச் சென்றார்.
“சாமிய நல்லா வேண்டிக்கிட்டு ஊருக்குள்ள வாங்க. இத்தன நாளா உன்ன எதிர்ப்பாத்துட்டு ஆத்தா இருக்கா. நல்லா கும்புட்டு வா பிறைசூடா.” என்றவரும் கடவுளை வேண்டினார்.
‘ஆத்தா, ரொம்ப நாள் கழிச்சு இப்போதான் நான் ஊருக்குள்ள வரேன். இத்தன வருசம் கண் இமைக்குற நொடில போய்டுச்சு. அப்பாவும் அம்மையும் என்னை ஏத்துக்கணும். முக்கியமா நான் செஞ்ச காரியத்துக்குச் சொக்கன் என்கூட பேசுவானான்னு கூடத் தெரியல. இனிமே நடக்குற எல்லாத்துக்கும் நீ தான்மா துணையா இருக்கணும். மஞ்சரி மறுபடியும் பாக்குற சந்தர்ப்பம் கிடைக்குமா?’ பிறையின் மனது பல கேள்விகளால் சூழப்பட்டு இருந்தது.
“பிறை, இந்தச் சாமி யாரு? பொதுவா இப்படிக் காட்டுக்கு வனகாளி, வன தேவதை, வனமாயி இப்படிலாம் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கேன். இவங்களும் அப்படிதானா?”
“கிட்டத்தட்ட அப்டித்தான் ஆரு. இவங்க இந்த மலையையும், மக்களையும் காத்துட்டு வராங்க. இது வெறும் நம்பிக்க மட்டும் கிடையாது. உண்மையும் கூட.”
“என்ன பிறை சொல்ற?”
“புள்ளைங்களா, இதெல்லாம் அப்றமேட்டுக்குப் பேசிக்கலாம். ஏப்பா, பிறைசூடா அல்லாரயும் வூட்டுக்குக் கூட்டிட்டுப் போ. இன்னைக்கு அமாவாச வேற. ஓதம் இருக்கும்னு தெரியும்ல. வேகமா போ”
“வாங்க போலாம்.”
சிவரஞ்சனிற்கு இந்த இடமே தற்போது வித்தியாசமாகத் தோன்றியது. காலையில் பயணப்படுகையில் இரம்மியமாகத் தெரிந்த இடம் தற்போது ஏதோ அச்சமூட்டுவதாய் இருந்தது. இருந்தும் தனது பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாது அமைதியாக உடன் சென்றான்.
வீட்டிற்குள் நுழையும் முன்னே பிறைக்குள் ஆயிரமாயிரம் உணர்வுகள் உள்ளுக்குள். வனக்கோவிலின் வடக்கே ஒரு சிறு சந்து செல்ல அங்கிருந்து இடதுபக்கம் சென்றனர். ஒரு பெரிய பாறை மீது இவனின் வீடு இருந்தது. மேலே யாரோ நிற்பது தொலைவில் இருந்து பார்க்கும் போதே தெரிந்தது.
“அடேய், திருட்டுப்பயலே. மணிக்கிட்ட காசு வாங்கிக் கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு மேல ஆச்சு. இன்னும் திருப்பிக் குடுக்காம டிமிக்கிக் குடுத்துட்டுத் திரியுறியா? இனிமே பஞ்சாயத்து அது இதுன்னு என்கிட்ட வந்தீங்க. தோல உறிச்சுப்புடுவேன்.” என்று சத்தமிட்டவாறே ஒருவனை இன்னொருவன் எட்டி உதைத்தான்.
உதை வாங்கியவன் நேராக விழுந்தது பிறையின் காலடியில்தான்.
“ஆத்தாடி, நல்ல வரவேற்பு.” என்று இரண்டடி தள்ளி நின்றனர் ஆருத்ராவும் ரஞ்சனும்.
“டேய், சொக்கா” என்ற பிறையின் அழைப்பில் நிமிர்ந்தவன் ஒருநிமிடம் கண்ணோரம் சுருங்கப் பார்த்தான்.
பின் யாரென்று உணர்ந்து கொண்டவன், “வந்துட்டீங்களா? காலைலயே ரேஞ்சர் சொன்னாப்புல. வீட்டுக்குப் போகலாம்.” பட்டும்படாமலும் பேசியவன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றான்.
“இவன்… உன் தம்பியா பிறை?” கொஞ்சம் சத்தமாகவே கேட்டுவிட்டான் ரஞ்சன். சொக்கன் திரும்பிப் பார்க்க, “ஈஈஈ… இவர்ர்ர்… இவ்வ்வரு உங்க தம்பியா பிறை?” என்றான் இளித்துக்கொண்டே.
பிறை ஏதும்பேசாது தலையைமட்டும் அசைக்க, சிவரஞ்சன் “இந்தா மச்சான். முந்தாநேத்து உன்கிட்ட வாங்குன 252 ரூவா. 75 பைசா.”
“பைத்தியமா நீ? இத எதுக்கு இப்போ தர?”
“அதுக்கில்ல மச்சான். என்னதான் நான் உன் பிரெண்டா இருந்தாலும் சில பல அடிகளுக்கு மேல பாடி தாங்காது. நீ என்மேல எதாவது கோபமா இருந்து அது எசக்குபிசக்கா உன் தம்பி காதுல போச்சுன்னா, அப்ரோம் இந்த உதைக்கு நான் அடிவாரத்துல கிடப்பேன். அதுவும் இல்லாம, கடன் வாங்குனாலும் கரெக்ட்டா நான் கொடுத்துடுவேன்ல அதான். வச்சிக்க.”
“ஏய் லூசே, நீ வேற ஏன்டா?” என்றபடி பணத்தைத் திருப்பிக் கொடுக்க முயல, அதனைத் தடுத்தாள் ஆருத்ரா.
“வந்தவரைக்கும் லாபம்டா. பேசாம என்கிட்ட குடு” என்று அதனை வாங்கி அவளின்வசம் வைத்துக் கொண்டாள்.
“கிராதகி” என்று ரஞ்சனால் முணுமுணுக்க மட்டுமே முடிந்தது.
மூவரும் சொக்கனோடு அந்தப் பாறைமேல் இருக்கும் இல்லத்திற்குள் சென்றனர். அவர்கள் கீழிருக்கும் போது பார்த்தது ஒரு மனிதன் என்று நினைக்கையில், மனிதன் போல் ஒரு பொம்மைதான் அங்கிருந்தது.
“என்ன ஆரு, இவன் வீட்டுக்குப் பொம்மைலாம் காவலுக்கு வச்சி இருக்காங்க?”
“அதுலாம் எனக்குத் தெரியாது. ஆனா ஒன்னு மட்டும் எனக்கு உறுதியா தெரியும்”
“என்னது?”
“இங்கருந்து போறதுக்குள்ள பிறைக்கிட்டயும் அவன் தம்பிக்கிட்டயும் செமத்தியா வாங்கதான் போற.”
‘ஆத்தா வனத்தாயி, என் உசுருக்கு எந்த ஆபத்தும் இல்லாம ஊர் போய்ச் சேர்த்துடு’ உடனே ஒரு வேண்டுதலை வைத்தான்.
உள்ளே சென்ற சொக்கன் தனது அப்பாவிடம் பேசிக்கொண்டிருந்தான்.
“இப்போ எதுக்கு இத்தன கோவம்? ஏதோ போய்ட்டான். இப்போ நம்ம சனத்துலயே நல்ல நிலைமைல இருக்குறது இவன்தான். இந்தக் கோவம்லாம் எத்தன நாளைக்கு? அவன உள்ளார வரச் சொல்லுங்க அப்பு. அம்மே நீயாவது சொல்லேன்”
“அவனுக்கும் சேர்த்துத் தான புள்ளைங்க படிக்கணும்னு உன் அப்பு ஆசப்பட்டாரு. ஆனா, இவன் மட்டும் ஊர வுட்டுப் போய்த்தான் படிக்கணுமா என்ன? ஆத்தா வனத்தாயி நீதான்மா என் புள்ளைக்குக் கவசமா இருந்து காப்பத்தணும்”
“ஏன்ம்மே, இன்னுமா உனக்குப் புரியல. ஆத்தா கூட இருக்கங்காட்டியும்தான் அவன் இவ்ளோ தூரம் பாதுகாப்பா இருக்கான். இல்லன்னா அவன் செஞ்ச தப்புக்கு இந்நேரம் என்ன நடந்து இருக்கும்னு நமக்குத் தெரியும்ல. அவன உள்ளார கூப்டுங்க அம்மே”
தன் தாய் தந்தை இருவரிடமும் தனது தமையனுக்காகப் பேசிக் கொண்டிருந்தான் சொக்கன்.
“இருந்தாலும் சொக்கா ஆத்தாக்கிட்ட கேட்காம கொள்ளாம நாமளே எந்த முடிவும் எடுக்க முடியாது.
“அது வரைக்கும் அவன வூட்டுக்குள்ள சேர்க்காம இருக்கப் போறீங்க அப்டித்தான? அவன் மட்டும் வரல, கூட அவனோட கூட்டாளிங்களயும் கூட்டிட்டுத்தான் வந்து இருக்கான். இப்போ என்ன பண்ணப் போறீங்க?”
சொக்கனின் இந்தக் கேள்விக்கு இருவரும் பதில் சொல்லவில்லை.
“சொக்கா, வீட்ல இருக்கீயா?” என்றபடி வந்தார் அந்தப் பகுதியின் வனக் காப்பாளர் கார்த்திகேயன்.
“வாங்க சார்.” என்று சொக்கன் அவரை வரவேற்க,
“கும்புடுறோங்கய்யா.” என்று பெரியவர்கள் இருவரும் அவரை உள்ளே அழைத்தனர்.
“மன்னிக்கணும். நான் நீங்க பேசுனதக் கேட்டுட்டுத்தான் வந்தேன். பிறையயும் அவனோட ப்ரெண்ட்ஸ்சயும் நான் என்னோட வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்.”
“அதுவந்துங்க…” பெரியவர் இழுத்தார்.
“நீங்க உங்க சாமிக்கிட்ட குறி கேட்டுட்டுப் பதில் சொல்ற வரைக்கும் இந்தக் குளுருல மூணு பேரும் இருக்க முடியுமா சொல்லுங்க? நீங்க பொறுமையா எல்லாம் செய்ங்க. என்னாலதான் அவன் இந்த இடத்த விட்டுப் போற மாதிரி ஆச்சு. இப்போ நானே கூட்டிட்டு வந்துட்டேன். மஞ்சரி இல்லாம போனதுக்குப் பிறை எந்த விதத்துலயும் காரணம் கிடையாது. அதுமட்டும் இப்போவும் நான் உறுதியா சொல்வேன். வரேன்ங்க” என்றுவிட்டு வெளியே வந்தவர், “பிறை, நீயும் உன் ப்ரெண்ட்ஸும் என்கூட வாங்க” என்று அழைத்துச் சென்றார்.
தனது வீட்டையே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே அவருடன் பயணித்தான் பிறைசூடன் நம் நாயகன்.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
14
+1
3
+1
காலேஜ்ல மயக்கம் போட்டு விழுந்தவுடனே அப்படியே விட்டுட்டு என்னடா கிராமத்துல கூட்டிட்டு வந்து காட்டிட்டு இருக்க. பிறை அப்படி என்ன பண்ணான் ஏன் அவனை அவங்க அப்பா அம்மா சேர்த்துக்க மாட்டேங்கிறாங்க??
next epi la avan enna anan nu solren ka.. thanks for your comment.. stay tuned