சுழலி-19
வள்ளியின் உதவியால் அனைவரும் வனத்திற்குள் நுழைந்துவிட்டனர். இவர்களை எதிர்நோக்கி காத்திருந்த காளிங்கன் படைகள் வெகுநேரமாக அங்கேயே காத்துக் கிடந்தன. ஆனால், யாரும் வெளிவராததால் அவர்களுக்கு குழப்பமே மிஞ்சியது.
“ஏன், இன்னும் யாரும் வெளிவரவில்லை?” ஆவேசமாக சீறினான் காளிங்கன்.
“இல்லாதவர்களுக்காகக் காத்துக்கிடப்பது வீண் காளிங்கா” அவ்விடத்திற்கு வந்தாள் மஞ்சரி.
“மஞ்சரி…?”
“நானேதான் காளிங்கா! என் மகளோடு வந்திருக்கிறேன். இனியும் வீண்நம்பிக்கைக் கொண்டு செந்தூரன் வருவான் என்று காத்திருக்க வேண்டாம். அவனின் அழிவுக் காலம் ஆரம்பமாகிவிட்டது. சென்றுவிடு” எச்சரிக்கை விடுத்தாள்.
“அவன் விடுதலையே எங்களின் விடுதலை. எனக்கிட்ட கட்டளையை நான் செய்தே தீருவேன். எங்கே அவர்கள்?”
“சேர வேண்டிய இடத்தில் சேர்ப்பித்துவிட்டேன். இனி, அவர்களை உன்னால் மட்டுமல்ல நீலாவாலும் நெருங்க இயலாது”
“அதற்கு வாய்ப்பேயில்லை. இந்த பிராந்தியத்தை விட்டு அவர்கள் வனாந்திரத்திற்கு செல்ல வாய்ப்பேயில்லை” மனத்திற்குள் எண்ணியவன் சொல்லியேவிட்டான்.
“இந்த வழியில் தான் இந்த பிராந்தியம் ஆரம்பம். சுரங்கத்திற்கு மற்றொரு வழி இருப்பதனை மறந்துவிட்டாயோ?” எக்காளமாக சிரித்தாள் மஞ்சரி.
‘அதனையெப்படி மறந்தேன்? அய்யோ, இப்போது நான் நீலாவிற்கு என்ன பதில் சொல்வது? அடுத்து அவள் என்ன செய்வாளோ?’ உள்ளுக்குள் கதிகலங்கியது.
“உனக்கும் உன் படைக்கும் மற்றுமொரு வாய்ப்பு தருகிறேன். இந்த இடத்தை விட்டு, புறப்பட்டு உடனே கொல்லிமலைக்கு புறப்படுங்கள். இல்லையேல், அவனின் அழிவு, அவனைச் சார்ந்தவர்களுக்கும் நிகழும்”
“மிக அருமை, என் அருமைத் தோழியே! துரோகம் புரிந்து துயிலினை துறந்து உயிருக்காக ஓடிய நாட்களை மறந்துவிட்டாயோ? நீ வாய்ப்பை பற்றி பேசுகிறாயா?” அவ்விடம் வந்தாள் நீலா.
“துரோகமா? யாருக்கு யார் செய்தது துரோகம்? தங்களின் பேராசைக்காக ஒரு ஊரையே அழிக்க நினைத்ததும், உயிர்வதை செய்ய துணிந்ததும் நட்பிற்கு நீ செய்த துரோகம். அவனைத் தடுத்து, அடைத்து வைத்தது நான் செய்த துரோகமா? இருக்கட்டும். செந்தூரன் வெளியே வரப்போவதில்லை. அப்படியே வந்தாலும், மொத்தமாக இந்த உலகத்தை விட்டேதான் செல்லப் போகிறான். நீ உன் இனத்தைக் காக்க ஆக வேண்டிய முயற்சிகளை செய்துக் கொள். நான் வருகிறேன்” அவ்விடம் விட்டு மறைந்தாள் மஞ்சரி.
…..
வனத்தின் நடுப்பகுதி. மூன்றாம் நாள் மாலை. இரண்டாம் நாளிலிருந்து நீரைத் தவிர உண்ண நேரமுமில்லை. சுரங்கத்தில் உணவும் இல்லை. மேலும், அப்போதைய நிலைமை யாரையும் வேறு எதையும் யோசிக்கவும் விடவில்லை. தற்போது, சற்று ஆசுவாசமாக உணர்ந்தனர்.
“சாமிங்களா, யாரு எதுக்கும் பயப்படாதீங்க. இந்த பக்கம் எதுவும் வராது. இனிமே அவன் எந்திரிச்சு வர வரைக்கும் உடம்பயும் மனசயும் திடகாத்திரமா வச்சுக்கனும். நான் உங்களுக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்” என்று நகர்ந்தாள். அதன்பின்னே மற்றவர்களுக்கும் வயிறு என்று ஒன்று இருக்கிறது என்ற எண்ணமே வந்தது.
அனைவரும் அப்படியே அமர்ந்தனர். அங்கை அந்த சித்தரையே பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னை விட்டு பிரிந்துவிட்டார் என்று நினைத்திருந்த தனது குரு தற்போது தன்னாலேயே கண்டுக்கொள்ள இயலாத ஒருவராக கண்முன் நிற்கிறாரே என்று உள்மனம் தவித்தது. மேலும், அவர் பட்ட மரணப் போராட்டம் கேட்க கேட்க ஈரக்குலை நடுங்கியது.
கார்த்திகேயனின் தொடக்கத்தில் இருந்து, இப்போது வரை நடந்தவற்றை அசைப்போட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு இதுபோன்ற விசயங்களிலெல்லாம் அறவே நம்பிக்கை கிடையாது. ஆனால், அவனும் இதில் ஒருவனாய் யாரென்று தெரியாத ஒரு எதிரிக்காக போராடிக் கொண்டிருக்கிறான்.
இதனையெல்லாம் யோசித்தவாறே, கையில் கிடைத்த குச்சியால் மண்ணைக் கிளறிக் கொண்டிருந்தான் கார்த்திகேயன். அப்போது அவனின் கண்ணிற்கு பளபளவென்று ஒரு கல் தோன்றியது. இன்னும் சற்று அவன் ஆழத் தோண்ட, அவனின் கையில் சிக்கியது மந்திரமாலை.
….
நீலா கடும்கோபத்தில் இருந்தாள். இப்போது தான் தனது குகைக்கு வந்தவள், தியானத்தில் அவர்களுக்கு மந்திரமாலை கிடைத்ததைப் பார்த்தாள், கூடவே யாழும் அங்கு இல்லாதது தனது திட்டமெல்லாம் பாழாய் போனதை எண்ணி அந்த குகையே அதிரும் அளவிற்கு கத்தினாள்.
“எனது ஒவ்வொரு செயலிலும் குறுக்கே வந்து மீண்டும் மீண்டும் என் கோபத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறாய் மஞ்சரி. இனியும் பொறுத்திருப்பது என்பது வீண். காளிங்கா, உடனே அந்த பெண்ணை கண்டுபிடிக்க படைகளை அனுப்பு. நான் வேள்வியைத் துவங்குகிறேன்.”
வேள்விக்கான பொருட்களை எல்லாம் மற்ற பாம்புகள் எடுத்து வந்து கொடுத்தன. நீலா தனது முழு சக்தியையும் திரட்டி மனித உருவெடுத்தாள். அவள் வம்சத்திலேயே பல வருடங்களாக உயிரோடும் அதே சக்தியோடும் இருப்பது நீலா மட்டுமே. மற்றவை அனைத்தும் எம்பெருமானிடம் பெற்ற சாபத்தால் தனது சக்திகளை இழந்து சாதாரண பாம்புகளாக இருந்தன. இவர்களின் சாபத்திற்கு ஒருவகையில் செந்தூரனும் காரணமாவான். அது தெரிந்தும் நீலா அவனுக்கு உதவிடும் நோக்கில் இருக்கிறாள் என்பது தான் இங்கு காளிங்கனே அறியாத புதிரான கேள்வி.
பெரிய பெரிய கற்களை எடுத்து வைத்தவள், வேள்விக்கான நேரம் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தாள்.
….
அங்கதினி யாழை சரியாக வனத்தின் எல்லைக்குள் கொண்டு வந்து விட்டது.
“இங்கிருந்து சிறிது தூரம் நடந்தால் உன்னுடன் வந்தவர்களின் இருப்பிடத்தை அடைந்துவிடலாம். இனி அவர்கள் உன்னைப் பார்த்துக் கொள்வார்கள். நான் எல்லையிலேயே இருக்கிறேன் என்று பிறைக்கு தெரிவித்துவிடு” என்றபடி அங்கிருந்த மரத்தில் ஏறினாள்.
அந்த இராஜநாகத்தையே சிறிது நேரம் பார்த்திருந்தவள், வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
“அங்கை… சொக்கா… அன்புண்ணா….” கத்திக் கொண்டே நடந்தாள் யாழ்நிலா.
அவர்கள் வனத்திற்கு நடுவில் இருப்பதால் இவளின் குரல் இன்னும் அவர்களை எட்டவில்லை. இவளும் விடாமல் தொடர்ந்து அழைத்துக் கொண்டே முன்னேறி நடந்தாள்.
அப்போது திடீரென காற்று பலமாக வீசியது. இராட்சத காற்றாக இருந்தது.
“எங்கு செல்கிறாய்? நீ எனது அடிமை. மறந்துவிட்டாயா? வா… என்னைத் தேடி வா… உன் குருதி சிந்தி, என் ஆன்மாவினை வெளியேற்று. வா…” காட்டமான ஒரு குரல் அவளை வெகுவாக இழுத்தது.
இன்னொரு பக்கம் மஞ்சரி கத்தினாள். “அந்த குரல்ல உன்னோட காதுல வாங்கிக்காத நிலா. உடனே, காட்டுக்குள்ள போ. நீ அவன்கிட்ட போகக் கூடாது. அங்க, அங்கை உனக்காக காத்துட்டு இருக்கா. போ, வேகமா”
பாவம் யாழ்தான், இரு காதுகளையும் அழுத்திக் கொண்டு இரண்டு குரல்களும் தன்னை தாக்காவண்ணம் இருக்க பிரம்மபிரயத்தனப்பட்டாள்.
“சொக்காஆஆஆஆஆ என்னை வந்து கூட்டிட்டு போடாஆஆஆ” அவளின் அந்த கத்தலுக்கு காட்டே அதிர்ந்து அடங்கியது.
….
“என்ன குரல் அது? யாரோடது?” பிறைதான் முதலில் கேட்டான்.
சொக்கனும் அங்கையும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, இருவரும் ஒரே குரலில் “யாழ்” என்றனர்.
அப்போதுதான் கார்த்திகேயன் கையில் இருந்த மந்திரமாலையை அனைவரும் கவனித்தனர்.
“இது…?” சிவரஞ்சன் சந்தேகமாகக் கேட்க,
“அந்த குறிப்புல சொல்லப்பட்ட மந்திரமாலையா?” பிறை யோசனையோடு அவனின் சந்தேகத்தை உறுதிசெய்தான்.
“ஆம், அதேதான். இது இனிமே கார்த்திகேயனின் பொறுப்பு. எக்காரணத்தைக் கொண்டும், எந்தவித இடையூறு வந்தாலும் இதனை நீ யாரிடமும் கொடுக்கக் கூடாது. என்றும் இது உன் கழுத்திலேயே இருக்க வேண்டும். அவசியமான நேரத்தில், அதுவே அனைவரையும் காப்பாற்றும்” என்றார் சித்தர்.
கார்த்திகேயன் எதுவும் பேசாது அந்த மாலையை கழுத்தில் அணிந்துக் கொண்டான். பின், சித்தரோடு அங்கை, பிறை, ஆரு இருக்க மற்ற அனைவரும் யாழைத் தேடி புறப்பட்டனர்.
யாழ் வேகமாக வந்துக் கொண்டிருந்தாள். மற்றவர்களும் குரல் வந்த திசையை தோராயமாக கணித்து அவளை நெருங்கிக் கொண்டிருந்தனர்.
“யாழ்…” தூரத்தில் சொக்கன் குரலைக் கேட்டதும், இத்தனை நேரம் எங்கிருந்ததோ அத்தனை பலம் வந்ததுபோல் உணர்ந்தாள். தன் வேகத்தை இன்னும் கூட்டியவள் முடிந்தவரை வேகமாக நடந்தாள்.
நேரம் சென்றுக் கொண்டே இருந்தது. பொழுது அதற்குள் மறைய தொடங்கியது.
வேகமாக வந்த யாழ், பாறைத் தடுக்கி சரிவில் விழத் தொடங்கினாள். தொலைவில் இருந்து வந்துக் கொண்டிருந்த சொக்கன் அவளைப் பார்த்துவிட, “யாழ்…” என்று கத்தியபடியே அவளைத் தொடர்ந்தான்.
சடசடவென்று வேகமாக பள்ளத்திற்கு வந்துவிட்டாள் யாழ் நிலா. பிடிப்பிற்காக சட்டென்று ஒரு கிளையை இறுகப்பற்றியவள் பின்னர்தான் கீழே பார்த்தாள்.
யாழ் தற்போது இருபத்திரெண்டாம் கொண்டை ஊசி வளைவின் உள்ளே இருக்கும் வனப்பகுதியின் முடிவில் தொங்கிக் கொண்டிருந்தாள்.
சொக்கன் வேகமாக வந்து அவளின் கரத்தைப் பிடித்து இழுக்க, இரண்டு நாட்கள் சாப்பிடாததும், தொடர்ந்து மயக்கத்தில் இருந்ததும் யாழை பலமிழக்க செய்திருந்தது.
“யாழ், கைய விட்றாத. அப்டியே பிடிச்சு மேல வா. யாழ்” தொடர்ந்து அவளிடம் பேச முயற்சி செய்துக் கொண்டே இருந்தான்.
இருட்டிக் கொண்டே வந்தது.
“என்னை விட்றமாட்டில?” கண்களில் பயம் அப்பிக் கிடக்க, அதையும் மீறி காதல் வெளிப்பட்டது.
“விட்டுட மாட்டேன் நிலாம்மா. என் கைய விடாம புடிச்சுக்கோ.” அவனும் சிறிய கிளை ஒன்றினைத்தான் பிடித்திருந்தான். தொடர் பயணமும் உடலும் களைத்திருந்ததால் அவனாலும் சரியாக பிடிக்க முடியவில்லை.
தன் பலத்தை எல்லாம் ஒன்று திரட்டி அவளை மேலே இழுக்க, அந்த கிளை வழுக்கிக் கொண்டு சென்றது.
இன்னும் சிறிது அவளை இழுத்தால் அவ்வளவுதான் அந்த கிளை மொத்தமும் அறுந்துவிடும். இருவரும் உயிர் பிழைப்பது என்பது கேள்விக்குறிதான்.
அவ்விடத்திற்கு மஞ்சரி முதலில் வந்துவிட்டாள். அவள் சக்தி கொண்ட அருவமாய் இருந்தாலும், இந்த இடத்தில் மானிடர்களைப் போல மட்டுமே அவளால் செயல்பட முடியும். ஆகவே, மஞ்சரியால் தற்போது ஒன்றும் செய்ய முடியவில்லை.
“கார்த்திண்ணா…. அன்புண்ணா” கத்தினான் சொக்கன்.
அந்த கிளைவேறு அறுபட தொடங்கியது. காற்றின் வேகமும் அதிகரிக்கத் துவங்க, இவனின் குரல் அவர்கள் யாருக்கும் கேட்கவில்லை.
நேரம் சென்றுக் கொண்டேயிருந்தது. நான்காம் நாள் சுவடிக் குறிப்பு மிகவும் முக்கியம் என்பதை முன்னரே சித்தர் சொல்லியிருந்தார். அதற்குள் இவளையும் காப்பாற்றிவிட்டு, ஈசனை தொழுதிருக்க வேண்டும். வழிபாட்டில் சிறிய தவறு ஏற்பட்டாலும் குறிப்புகள் நமக்கு விளங்காது.
கிளையின் பிசிறுகளால் கை வேறு எரிச்சலை தந்தது. அதை அப்படியே விட்டுவிடலாம் என்றேத் தோன்றியது.
….
நீலா வெகு சிரத்தையாக வேள்விக்கு அனைத்தையும் தயார் செய்துவிட்டாள். இனி, நள்ளிரவு மட்டும் வந்துவிட்டால் வேள்வியை துவங்கி விடலாம்.
“காளிங்கா, அந்த பெண்ணை உன்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. அதே வயதுடைய ஒரு கன்னிப்பெண்ணை தற்போது பழிக் கொடுத்தால்தான், அந்த உதிரத்தின் துளிகள் செந்தூரனை விழிக்க வைக்கும். நள்ளிரவிற்குள் சென்று கன்னிக் கழியாத ஒரு கன்னிப் பெண்ணை அழைத்து வா. செல்” காளிங்கனிற்கு கட்டளையிட்டவள், ஒருவேளை அந்த திட்டம் செயலற்று போனால் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவளின் மனக்கண்ணில் செந்தூரனும் மஞ்சரியும் கைகள் கோர்த்து, கூடிக் குலாவிய நாட்கள் வந்து சென்றது.
“இன்னும் சொச்சக் காலம் நீ மட்டும் அமைதியாக இருந்திருந்தால் இந்நேரம் செந்தூரனின் ஆட்சியில் அனைத்தும் நடந்திருக்கும் மஞ்சரி. காதல் என்னும் சுழலில் அவனை சிக்க வைத்துவிட்டு அவனின் பிள்ளைகளையும் அவனிடமிருந்து பிரித்து செந்தூரனின் கோபக் கனலுக்கு ஆளாகிவிட்டாய். காதல் என்னும் பெயரால் ஏமாற்றிவிட்டு சென்றுவிட்டாய் மஞ்சரி. ஏ காதல் சுழலி, வேள்வி முடியும் தருவாயில் செந்தூரன் வெளிப்படுவான். அவனுக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு முழு நிலவில் உன்னை அடைவான்” உரக்கக் கத்தினாள் நீலா. அவளின் பச்சை நிற பளிங்குக் கண்கள் மின்னி மறைந்தது.
….
சொக்கன் கண்ணில் பயத்தை விட, அனைவரையும் இன்னலில் சிக்க வைத்துவிட்டு நாம் செல்கிறோமே என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. அந்த கிளை அறுபட்டுவிட, அதற்குள் தனது வாலால் சொக்கனை இறுகப் பிடித்தாள் மணிக்கொடி, பெரிய இராஜநாகம்.
பெரிய மரத்தண்டில் தனது உடலை பிணைத்து, சொக்கனுக்கு கயிறாக தனது வாலை நீட்டினாள் மணிக்கொடி.
சட்டென்று அவளின் வாலைப் பிடித்து, யாழையும் மேலேக் கொண்டு வந்திருந்தான்.
இருவரும் மூச்சுவாங்க நின்றிருக்க, நிதானத்திற்கு வந்த யாழ், மணிக்கொடியைப் பார்த்து பயங்கரமாகக் கத்தினாள்.
“அச்சப்பட வேண்டாம். நான் அங்கதினியின் தாயார் மணிக்கொடி.” சொக்கனுக்கும் யாழுக்கும் பெரிதாய் எந்த அச்சமும் இல்லை. அவன் எல்லைக் கோவிலில் சிலை நாகம் பேசியதிலிருந்தே அவன் அனைத்தையும் எதிர்பார்த்திருந்தான்.
அங்கதினியுடன் சிறிது நேரம் இருந்ததனால் யாழும் பயப்படவில்லை. அவள், இவளை நீலா என்று நினைத்தே அதிர்ந்து கத்தினாள்.
“காலம் சென்றுக் கொண்டிருக்கிறது மஞ்சரி. அங்கு நீலா வேள்வியைத் துவங்கி விட்டாள். விரைந்து அனைத்து பொருட்களையும் ஒன்று சேருங்கள். கன்னிப் பலி ஏற்படுவதற்குள் நான் வேள்வியைத் தடுக்க வேண்டும்” என்ற மணிக்கொடியின் சொல்லுக்கு சரியென்று தலையசைத்தவள், அறிவைக் காண சென்றாள். அவள் பேசக்கூடிய ஒரே ஆள் தற்போது அறிவு மட்டுமே.
சொக்கனும் யாழும் செல்லும் மணிக்கொடியையே பார்த்திருக்க, மஞ்சரியின் சொல்படி அவ்விடம் விரைந்தனர் மற்ற நால்வரும்.
பின், அறுவராக வனத்தின் மையத்திற்கு சென்றனர்.
நான்காம் நாள் தொடங்கியது.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
16
+1
1
+1