சுழலி-18
மூன்றாம் நாள் – முகை
யாளியின் உடலிலிருந்து வெளிப்பட்ட ஒளிக்கீற்றினைக் கொண்டு, வழியினைத் தொடர்ந்தனர்.
மீண்டும் நீண்டதொரு பயணம். சாலை மார்க்கமாக சென்றால் அறிவு சொன்னதுபோல் இந்நேரம் சென்றிருக்கலாம்தான். ஆனால், எதுஎது எங்கெங்கு கிடைக்குமோ, அதுஅது அங்கங்குதான் கிடைக்கும் என்பது தான் விதி. இது பயணத்திற்கு மட்டுமல்ல, பலரது வாழ்க்கைக்கும் தான் என்பதை தற்போது உணர்ந்திருந்தனர் அனைவரும்.
ஒளியின் முடிவில் பெருத்த உடலோடு ஒரு மலைப்பாம்பு இருந்தது. அதனையொட்டி சில குட்டிகளும் இருக்க, அனைவரும் அப்படியே நின்றனர்.
“இது என்னடா, இத்தா பெருசு இருக்கு?” வாயைப் பிளந்தான் அன்பு. அது சிலைபோல் ஆடாமல் அசையாமல்தான் இருந்தது. ஆனால், நிச்சயம் ஒருவரை விழுங்கும் என்பது பார்த்தவுடன் தெரிந்தது.
“இது ஆசியவகை மலைப்பாம்புதான். ஆனா, இவ்ளோ பெருசு வளர வாய்ப்பு இல்ல. அநேகமா இந்த சுரங்கம் ரொம்ப வருசத்துக்கு முன்னாடி உருவாகியிருந்துச்சுன்னா உள்ளேயே இருக்க வாய்ப்பு இருக்கு. இது நெருக்குனா, உடனே மூச்சு நின்னுடும். அந்தளவுக்கு அதோட பிடி இறுக்கமா இருக்கும்” அங்கை விவரத்தை சொன்னாள்.
“அட நீ வேற ஏன் அங்கை? இருக்குற பயத்துல இப்போ இந்த விவரம்லாம் தேவையா?” ஆயாசமாக இருந்தது ஆருத்ராவிற்கு.
“இதுவும் முன்னாடி இருந்த மாதிரி ஏதாவது வில்லங்கம் புடிச்சு கேட்குமோ?” அன்பு சொல்லி வாயை மூடவில்லை, அந்த பாம்பு நெளிந்து தெளிந்தது.
“பல வருடங்களாக மானுடர்களின் வருகைக்குக் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் எனது பிள்ளைகளைக் காண வேண்டும். அதற்கு உங்களின் உதவி எனக்கு வேண்டும்”
“ரைட்ரா. இப்போ இது என்ன டாஸ்க்கு வச்சி இருக்கோ?” என்று புலம்பியவன் அங்கையின் முறைப்பில் அமைதியானான் பேரன்பு.
“என்ன செய்யணும்?” கேட்டான் சிவரஞ்சன்.
“நான், இந்த பெருத்த உடலை அசைக்க இயலாது நீண்ட நெடுங்காலமாய் ஒரே இடத்தில் இருக்கின்றேன். செந்தூரனைத் தடுக்க செல்லும்போது, அவனின் ஏவல்கள் மூலம் என்னைக் கட்டிவைத்துவிட்டான். கட்டுகளை அவிழ்க்க முயலும்போது, மந்திரத்தின் வாசகம் பிழையானதால், எனக்கிந்த நிலை. உன் கையில் இருக்கும் சுவடியின் இறுதிப்பக்கத்தை நீ எனக்கு தாரைவார்க்க வேண்டும். அதில் எனக்கான மாற்றுவழி இருக்கிறது. எனது சாபம் நீங்கினால் நீங்கள் கேட்டதை நான் தந்தருள்வேன்.” என்றது.
“அது கொடுத்துட்டா, அடுத்து நம்மளால சரியான வழில போக முடியாது. இல்ல ரஞ்சன் நாம வேற வழி யோசிக்கலாம்” முதன்முறையாக அவனிடம் பேசினாள் அங்கை.
அதில் மலர்ந்தாலும், அவன் மனமோ வேறுவிதமா திட்டமிட்டது. சித்தரையும் சொக்கனையும் திரும்பிப் பார்த்தான். அவர்கள் ஏதும் பேசவில்லை. அதிலேயே அவன் புரிந்துக்கொண்டான், தனது முடிவினை அவர்கள் எப்படியேனும் ஏற்றுக்கொள்வார்கள் என்று.
நீண்ட பெருமூச்சொன்றை விட்டவன், “சரி, நான் இந்த சுவடிகள்ல உனக்கு தாரைவார்க்குறேன். வாக்கு மாறாமா நான் என்ன கேட்டாலும் நீ தரணும்” மீண்டுமொருமுறை உறுதிப்படுத்திக்கொண்டான்.
“வாக்கு தருகிறேன். நீ என்னக் கேட்டாலும் நான் உனக்கு அதை நல்குவேன்” என்றது அந்த மலைப்பாம்பு.
ஊற்றுக்குவளை நீரால் சுவடிகளை சுத்தம்செய்து, அதனை மலைப்பாம்பின் அருகில் வைத்தான் சிவரஞ்சன்.
திடீரென்று அதில் ஏற்பட்ட ஒளிக்கீற்று பாம்பின் உடல்முழுதும் பரவியது. இதுவரை எந்தவித அசைவில்லாமல் இருந்தது, சட்டென்று தனது பழைய நிலைக்கு மாறியது.
தன்முன் ஆளுயுரத்திற்கு நின்றதை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் வால் சுவடிகளை இறுகிப் பிடித்திருந்தது. ஆக, உபாயம் சுவடிகளில் இருக்கும் மந்திரமல்ல, சுவடிதான் என்ற யூகம் மெய்யாகிவிட்டது.
மெல்ல ஊர்ந்து சென்று, தனது குட்டிகளைப் பார்த்தது. அதன்மேலும் சுவடியின் ஒளிபட, உயிர் இறக்கும் தருவாயில் இருக்கும் குட்டிகள் பிழைத்து தாயின் மடிசேர்ந்தன.
“இரக்கம் என்னும் தயாள குணமுடையவனே! ஈசனின் அருள் பரிபூரணமாய் கிட்டட்டும். உருவத்தில் பெருத்தவளாய் இருந்தாலும், உள்ளத்தில் நானும் தாய்தான் என்பதை உணர்ந்து, எனக்கு நீ செய்த இந்த உதவியை என் சந்ததிகள் வரை உனக்கு கடமையாற்றும் என்று உனக்கு வாக்கு மொழிகிறேன். கேள், உனக்கு என்ன வேண்டும்?”
“நீங்க கேட்ட உதவிய நான் செஞ்சிட்டேன். இப்போ எனக்கு அந்த சுவடி திரும்ப வேணும். அதுதான் இப்போ எங்களுக்கு இருக்குற ஒரே வழிக்காட்டி”
“நீ புத்திசாலிதான். பொன்னோ, பொருளோ, அல்லது செந்தூரனை அழிக்க உதவியோ நீ நாடாமல் விட்டதைப்பிடிக்க எண்ணும் எண்ணமே வெற்றிக்கு வழிவகுக்கும். இதை நீ வைத்துக் கொள். ஊற்றுக்குவளையின் நீரால் என் பாவங்கள் விலகியது. அதற்கு கைம்மாறாக இந்த குவளையை நீ வைத்துக்கொள். இது உனக்கானது. செந்தூரனின் சக்தியை கட்டிவைக்கும் ஆற்றல் இதிலிருக்கும் மூலிகை நன்னீருக்கு உண்டு. என்றும் ஈசன் துணைபுரிவான்” என்றுவிட்டு, தனது குட்டிகளோடு அவ்விடம் விட்டு அகன்றது.
மூன்றாம் நாள் துவங்க இன்னும் சில மணித்துளிகளே இருக்க, உடலைத் தூய்மை செய்துக்கொண்டு நள்ளிரவிற்கு காத்திருந்தனர்.
சொக்கன் சுவடியில் இருந்ததை வாசித்தான். “மனத்தில் இருக்கும் குழப்பம் தகர்ந்து, மந்தி உருவம் பதித்த கல்லில் மத்திமமாய் இருக்கும் சிறு வழியொன்று அகக்கண்ணில் அகப்படும். அப்பனும் பிள்ளையும் ஒன்றாய் திறக்க, தேவியவளின் பாதம் பணியலாம். விடையை அறிந்து வினையை எதிர்த்தால், விதியை மதியால் வெல்லலாம்”
அனைவரும் குழப்பத்தில்தான் இருந்தனர். அப்பன், பிள்ளை யார் என்றே அந்த குழப்பம்.
சிவரஞ்சனின் சுவடி ஒளிவீசியது.
“உண்மை வெளிப்படுத்த தயக்கம் கொள்ளாது,
உடனடியாய் தீர்வு காணும் நேரமிது.
பாதை திறந்ததும், படைகள் விலகும்.
பெரும்படைகள் சூழும்!
காவல்பரணை காக்கும் படைகள்,
காரிகையின் உடன் செல்லும்.
மாற்றுவழியில் பாதம் பதித்தால்,
மண்ணடியில் தோன்றும் மந்திரமாலை”
இந்தமுறை சட்டென்று வரிகளை யாராலும் புரிந்துக் கொள்ள முடியவில்லை. என்ன உண்மை, யார் சொல்ல வேண்டும் என்று ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரம் சித்தரும் தியானத்தில் அமர்ந்தார். பின், மனம் அமைதியாக கண்களை திறந்தவர், “சிவரஞ்சா, அங்கை. இங்கே வாருங்கள். நான் சொல்ல போகும் செய்தி, அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், காலமறிந்து நீங்கள் செயல்பட வேண்டும். நான் பிரபஞ்சன்”
அவர் சொன்னதைக் கேட்டவுடன் அனைவருக்கும் பேரதிர்ச்சி. அங்கையையும், சிவரஞ்சனும் திகைப்பிலிருந்து வெளிவரவில்லை. அதன்பின் அவர், விபத்திற்கு பிறகு நடந்த நிகழ்வுகளை விளக்கிட, அங்கை கதறிவிட்டாள். சிவரஞ்சனுக்கோ மொழி மறந்தநிலை.
நிலையை உணர்ந்தவன், “நாம இப்போ இந்த கதவ திறக்கலாம். அதுக்கு அப்ரோம் எப்டியாவது காவல்பரண் தாண்டி போகணும். அதுக்கு அப்ரோம் வள்ளி வழிகாட்டுவாங்கன்னு நம்புறேன்” என்றான் சிவரஞ்சன். அவனின் இந்த பதில் ஒருநிமிடம் சித்தரை ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது.
பிறையோ ஆதரவாக சிவரஞ்சனை அணைத்துக்கொண்டான். பின், குறிப்பில் சொல்லப்பட்டதுபோல், அனைவரும் பெரிய பாறையை கண்டறிந்து, அந்த குரங்கு அச்சில் சித்தரும் சிவரஞ்சனும் இணைந்து கையை வைக்க, மீண்டுமொரு பெருத்த சத்தத்துடன் பாதை தெரிந்தது.
கல்வராயன் மலையின் காட்டில் அனைவரும் காலடி எடுத்து வைத்தனர்.
….
காளிங்கன், யாழ்நிலாவை அழைத்துக் கொண்டு காவல்பரணை அடைந்திருந்தான். அங்கதினிக்கு புரிந்துபோனது, இனி நம்மால் அவளை பின்தொடர்வதை தவிர்த்து வேறெதுவும் செய்ய இயலாது என்று. ஆகவே, மஞ்சரியின் உத்தரவின்பேரில் நிலாவை கண்ணுக்குள்ளேயே வைத்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் அங்கு வந்துசேர்ந்தாள் நீலா.
“காளிங்கா, படைகளை ஒன்று திரட்டு. அனைவரும் கல்வராயன் மலைக்கு வந்துவிட்டனர். செந்தூரனின் உடலைக் கண்டறிவதற்குள் அனைவரையும் நம் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இல்லையேல், அந்த வள்ளி முந்திக்கொள்வாள். இவள் செந்தூரனை அடையும்வரை, வசியத்திலேயே வைத்திரு” என்று அனைத்துக் கட்டளைகளையும் விதித்தவள், தன் பச்சை பளிங்கு கண்களை உருட்டினாள்.
அவளின் உத்தரவின்படி, காளிங்கனின் படை திரண்டுவிட்டது. அனைத்தும் கருநாகங்கள்.
“சுரங்கக் கோவிலிலிருந்து வெளிவரும் ஒருவரும் வனத்திற்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாது. இடையில் யார் வந்தாலும், அவரின் உயிரும் நஞ்சாகட்டும். புறப்படுங்கள்” என்றான் காளிங்கன்.
அங்கதினிக்கு உள்ளம் பதைபதைத்து விட்டது. இங்கு யாழைக் காப்பதா, இல்லை, அங்கு தன் குலத்தையும் சேர்த்துகாக்க போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு உதவுவதா? என்று மனம் இருபக்கமும் தவித்தது.
அப்போது அங்கதினி எதிர்பாராமல் ஒன்று நடந்தது. யாழ் கண்விழித்தாள். காளிங்கன் படை திரட்டுவதில் குறியாய் இருக்க, நீலாவோ செந்தூரனுக்கு தேவையான விசயங்களை திரட்டுவதில் திண்ணமாய் இருந்தாள்.
யாழின் கையில் சொக்கன் கொடுத்த மூலிகை இருந்தது. அதனை யாரும் அறியாவண்ணம் வாயில் போட்டவள், மருந்தின் வீரியத்திலும் தன்னவனின் எண்ணத்திலும் மீண்டெழுந்தாள் யாழ்நிலா.
சுற்றும்முற்றும் பார்த்தவள், அருகில் யாரும் இல்லாதது அறிந்து, மெதுவாக அங்கிருந்து நகர்ந்தாள். இது அங்கதினியே எதிர்பார்க்காத ஒன்றுதான். திடமான மனதும், காதல் கொண்டவனின்மீது நம்பிக்கையும் இருந்தால், இந்த பெண்கள்தான் எத்தனை பெரிய செயலையும் எளிதில் செய்துவிடுகின்றனர்.
யாழ், காவல்பரணை விட்டு மெல்ல கீழிறங்க, அவள்முன் வந்தாள் அங்கதினி.
யாழிற்கு அங்கதினி பற்றி தெரியாததால் பயந்துதான் போனாள்.
“பயப்படவேண்டாம். நான் உன்னைக் காத்திடவே உடனிருக்கிறேன். மஞ்சரியம்மாதான் என்னை அனுப்பி வைத்தார். வா, என்னோடு. அவர்கள் மீண்டும் வருவதற்குள் நாம் இங்கிருந்து செல்ல வேண்டும்” என்றாள் அங்கதினி.
மஞ்சரி என்ற பெயரைக் கேட்டவுடன் அரை நம்பிக்கைக்கு வந்தவள், தற்போது அந்த இடத்தைவிட்டு வெளியேற வேறு வழியும் இல்லாததால் அங்கதினியை தொடர்ந்தாள்.
…..
அனைவரும் சுரங்கத்தை வெளியே வந்ததும், எதிர்ப்பட்டாள் வள்ளி. யாரும் எதுவும் பேசவில்லை.
“கையில இருக்குற பொருள எல்லாம் பத்திரமா வச்சுக்கோங்க அல்லாரும். இங்கருந்து காட்டுக்கோவிலுக்குள்ள போய்ட்டா, அதுங்களால அங்க வர முடியாது. நாம அடுத்த வேலைய செஞ்சிடலாம். வெரசா என் பின்னாடி வாங்க”
அவளின் நடைக்கு இவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. சித்தர் மட்டுமே அவளுக்கு இணையாய் நடந்தார்.
“எல்லாம் திட்டத்தோட நடக்குற மாதிரி இருக்கு. ஆனா, அதுலாம் என்ன திட்டம்னு தான் எனக்கு புரியல” புலம்பினாள் ஆரு.
“நாங்க மட்டும் தெரிஞ்சிக்கிட்டு போறோம் பாரு. சொக்கன், சிவா, அந்த சித்தர் தவிர வேற யாருக்கும் என்னன்னு முழுசா தெரியல. இதுல, இப்போ நமக்கு பாதுகாப்புக்குன்னு இருந்த பாம்பு படையும் காணோம். ஆனா, பெருசா ஏதோ நடக்கப் போகுதுன்னு மட்டும் தெரியுது” பேசிக்கொண்டே தொடர்ந்தான் அறிவு.
“ஆமா, நானும் ரொம்ப நேரமா உன்ன கவனிக்குறேன். ஏன், அடிக்கடி திரும்பிப் பாத்துட்டே வர?”
மீண்டும் திரும்பிப் பார்த்தான், மஞ்சள் முகம் புன்னகையில் விரிய பாந்தமாய் நடந்து வந்துக் கொண்டிருந்தாள் மஞ்சரி.
“நான் என்னன்னு சொன்னா நம்பவா போற?”
“இப்போ நடக்குற விசயம்லாம் பாத்தும் நான் நம்பலன்னா எப்டி. சொல்லு, நம்பித்தான் ஆகணும்”
“நம்ம பின்னாடி ரொம்ப நேரமா ஒரு ஆவி வந்துட்டு இருக்கு. அநேகமா அது மஞ்சரியா இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு.”
“அடேய், என்னடா சொல்ற? எப்போல இருந்து?” பயத்துடன் கேட்டாள் ஆரு.
“மலை உச்சில இருக்கப்போல இருந்து தான். அது ரொம்ப நேரமா நம்ம கூட தான் வருது. ஆனா, எப்பப்பாரு சிரிச்சிக்கிட்டே இருக்கு. அதான் லைட்டா அல்லு விடுது” என்றான் மீண்டும் திரும்பிப் பார்த்து. அவளின் புன்னகை இன்னும் அகலமாய் விரிந்தது.
ஆருத்ராவும் இரண்டு முறை திரும்பிப் பார்த்தாள். ஆனால், அவளின் கண்களுக்கு ஒன்றும் புலப்படவில்லை. அறிவு பொய் சொல்கிறானோ என்று கூடத் தோன்றியது. ஆனால், அவனின் காப்பிற்கு தான் அருவம் தெரியும் என்பதால் அவனின் கைகளைப் பற்றியபடியே நடந்தாள்.
அவனும் ஏதும் பேசாது கையைப் பிடித்தபடி நடக்க, அதனைக் கண்ட அன்பு விழித்தான்.
“இங்க என்ன படமா ஓடுது? முன்னாடி பாத்து நடடா.” அவன் தலையில் தட்டினான் அறிவு.
“இங்க நம்மள சுத்தி நடக்குற விசயம் என்ன? இவனுங்க பன்ற அலும்பல் என்ன? அவன்அவன் உசுரோட வீடு போய் சேருவானான்னு இங்க தெரியல. இதுல எப்டிதான் கரெக்ட் பன்றானுங்களோ? அந்த அங்கை, பாத்த உடனே ப்ரபோஸ் பண்ணவன்கிட்ட விழுந்துட்டா. சொக்கன் பய, வந்ததும் அந்த யாழ் புள்ள கிட்ட ரூட் விட்டான். தோ, இப்போ இந்த அறிவும் ஆருவோட கைய பிடிச்சிட்டு வரான். இவனுங்க ஏதோ ஜாலியா டிரிப்புக்கு வந்தவனுங்க மாதிரி சுத்துறானுங்க. எனக்கு மட்டும் தவளக்கிட்ட கோத்து விட்டு வேடிக்க பாருங்க” புலம்பித்தள்ளினான் அன்பு.
சுரங்கத்தின் வாயிலில் வெகுநேரமாக காத்துக் கிடந்தன காளிங்கனின் படைகள்.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
17
+1
2
+1
கதையே முடிக்கிற ஸ்டேஜுக்கு வந்துருச்சு இன்னமும் புதிர் வந்துகிட்டே இருக்கு 🙄🙄🙄