சுழலி-17
இரண்டாம் நாள் – நனை
நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்தது.
“இங்க எங்க போய், நாங்க குளிக்கிறது? சிவலிங்கத்த எப்டி பிரதிஷ்டை செய்றது?” தனக்குத் தோன்றிய கேள்வியைக் கேட்டான் சொக்கன். சிவரஞ்சனுக்கும் அதே எண்ணம்தான்.
“அதற்குத்தான் ஊற்றுக்குவளை. அதைக் கொடு” என்று அன்புவிடமிருந்து வாங்கியவர், அதிலிருந்த நீரை இருவரின் தலையிலும் ஊற்றினார். உடல்முழுவதும் நீர் பரவிட, அவர்களையே அறியாமல் ஒரு புத்துணர்ச்சி வந்ததுபோன்ற உணர்வு.
அருகிலிருந்த களிமண்ணில் அந்த நீரை வைத்து உள்ளங்கையளவு சிவலிங்கத்தை உண்டாக்கினார். பின். சிவனுக்குரிய மந்திரங்கள் சொல்லி முன்னே செய்ததுபோல் அவரை வணங்கித் தொழுதனர் அனைவரும். அனைவருக்கும் எப்படியாவது இங்கிருந்து செல்ல வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. சொக்கனும், அங்கையும் யாழிற்கு எதுவும் ஆகிடக் கூடாது என்றுதான் துடித்தனர்.
….
யாழ் கண்களைத் திறந்தாள். அவளின் முன்னே இரண்டு பெரிய நாகங்கள் இருக்க, பயத்தில் கண்கள் இரண்டும் இருண்டது.
பயத்தில் அவளின் நா மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. பேச்சே வரவில்லை யாழ்நிலாவிற்கு. அச்சத்தில் மேனி முழுவதும் வியர்த்து வழிந்தது.
“காளிங்கா! அவர்கள் சுரங்கத்தின் மையத்தை அடைந்துவிட்டனர். இன்னுமொரு நாள் பயணத்தில் கல்வராயன் மலையை அடைந்துவிடுவார்கள். அதற்குள் நாம் விரைந்து செல்ல வேண்டும். அவளை அழைத்துக் கொண்டு காவல் பரணிற்கு செல். அவர்களுக்குமுன் நாம் சென்றிருக்க வேண்டும்”
அனைத்தையும் அங்கதினி என்னும் நம் குட்டி இராஜநாகம் கேட்டுக்கொண்டிருக்க, சடுதியில் மரத்திலிருந்து தாவி அவர்கள்முன் தோன்றினாள்.
“அங்கதினி?” நீலாவின் பச்சை பளிங்கு கண்கள் மிளிர்ந்தது.
“என்னை இன்னும் நினைவு வைத்திருக்கிறீர்களே! அதிசயம்தான் அத்தையாரே!”
“இதெப்படி சாத்தியம்? காளிங்கா நீ மணிக்கொடியை கொன்றுவிட்டாய் என்றுதானே கூறினாய்?” கோபமாக காளிங்கன்பக்கம் திரும்பினாள்.
அவனுக்கும் இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அங்கதினி மணிக்கொடியின் கருவில் வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவளைக் கொல்ல காளிங்கனை அனுப்பினாள் நீலா. ஆனால், விதியின் செயலால், மணிக்கொடி என்று நினைத்து மற்றொரு இராஜநாகத்தை கொன்றுவிட்டான் காளிங்கன். அதையே மணிக்கொடியென்று நீலாவிடம் கூறி நம்பவைத்துவிட்டான். (மணிக்கொடி நாம் முதல் அத்தியாயத்தில் பார்த்த பெரிய இராஜநாகம் தான்.)
“நான் கொன்றுவிட்டேன் நீலா. எனக்கும் ஒன்றும் புரியவில்லை.” கிலிப்பிடித்துவிட்டது. நீலாவின் கனல் பார்வைக்கு ஆளானாள் உயிர் உடலில் மிஞ்சாது என்பது அவன் அறிந்ததே.
“அப்படியா மாமா அவர்களே? துணைவியின் சொல்லிற்கு அத்தனை மதிப்போ? உடன்பிறந்த தங்கையையே கொல்லத் துணியும் அருமையான தமையன்தான் நீங்கள். அது இருக்கட்டும்? இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள்?”
அங்கதினியின் ஒவ்வொரு பேச்சும் நீலாவிற்கு கடும்கோபத்தை ஏற்படுத்தியது. நேரம்வேறு சென்றுக் கொண்டிருக்க, நடுவில் இவள்வேறு வந்து பேசிக்கொண்டிருக்கிறாள் என்றே அந்த கோபம். நீலா நினைத்தாள் அங்கதினியை ஒரே பிடியில் உயிர்வதை செய்ய இயலும். ஆனால், அங்கதினியின் உயிர் செந்தூரனுக்கு சொந்தம். அதனை இவள் செய்தால், மற்றொரு சாபத்திற்கு ஆளாகிவிடுவாள் என்றே அமைதிகாத்தாள். அனைத்தும் அறிந்துதான் அங்கதினி தற்போது அவளை தாமதப்படுத்திக்கொண்டிருக்கிறாள்.
“வீணாகப் பேசி, உயிரை மாய்த்துக் கொள்ளாதே. சிறு பெண்ணாக இருக்கிறாய். மீண்டுமொரு பிறப்பு எடுத்து வந்திருக்கிறாய். இம்முறை, அத்தையிடமிருந்து எந்த சலுகையையும் எதிர்நோக்க முடியாது. நினைத்தேன் என்றால் இந்நிமிடம் நீ மாண்டிருப்பாய்”
“ஆனால், உங்களால்தான் நினைக்க முடியாதே என் அருமை அத்தையாரே! கண்முன்னே என் அன்னை தந்தையை கொன்றுவிட்டு இந்த பிறப்பிலும் என் அன்னையை கொல்லத் துணிந்த உங்களை என்ன செய்யலாம்? ஆலயத்திலேயே என் பெற்றோர்களை சமாதியாக்கிவிட்டு நீங்கள் மட்டும் நடமாடினால் அது எவ்விதத்தில் நியாயமாகும்? இன்றும் நான் அதே அங்கதினிதான். ஆனால், இம்முறை என் கடமை தவறாமல் எனக்கிட்ட கட்டளையை செய்துமுடிப்பேன்.” என்று ஒரே தாவலில் நீலாவின் கழுத்தில் தாவினாள். நான்கடி அங்கதினிக்கு பன்னிரெண்டு அடி நீலாவை சமாளிப்பது பெரும்போராட்டாமாய் இருந்தது. இதில், வாசுகியின் படையும் வந்துவிட்டது.
இராஜநாகத்திற்கு உணவே மற்ற சிறு பாம்புகள்தான் என்பது இயற்கை. ஆனால், அனைத்தும் ஒன்றிணைந்தால் எதிரியாளியின் நிலை என்னவாகும் என்பதற்கு இதுவே சாட்சி. காளிங்கனும் நீலாவும் பெருத்த படையை சமாளிக்க சற்று தடுமாறினர்.
ஆனால், நீலா சாதாரணமவள் அல்லவே! தன் ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி ஒரே புரட்டில் தன்னை சூழ்ந்திருக்கும் அனைத்து பாம்புகளையும் தூர வீசினாள். அங்கதினியும் மரத்தில் மோதி கீழே விழுந்தாள்.
“காளிங்கா! அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு உடனே காவல் பரண் செல்!”
அவளின் கட்டளைக்கிணங்கியவன், யாழிற்கு வசியமருந்துக் கொடுத்து குகையின் இன்னொரு வாயிலின் மூலம் காவல்பரண் என்னும் இடத்திற்கு விரைந்தான். அங்கிருந்து கல்வராயன் மலைக்கு செல்வது இன்னும் நேரம் குறைவு என்பதாலேயே அவ்வழியை தேர்ந்தெடுத்தாள் நீலா.
மற்ற பாம்புகளின் தாக்குதலுக்கு நீலா எதிர்தாக்குதல் நடத்திக் கொண்டிருக்க, அவளறியாவண்ணம் காளிங்கனை பின் தொடர்ந்தாள் அங்கதினி.
….
நள்ளிரவு.
இரண்டு ஓலைச்சுவடிகளும் ஒளி உமிழ்ந்து, பிணைந்து பின் அவரவர் கைகளில் வந்தடைந்தது.
அனைவரும் எந்த வழியாக இருக்கும் என்று குறிப்பைக் கேட்க கவனமாகினர்.
“நாற்றிசை நன்வழி நல்கிடுமா? அல்லது ஓர்வழி மட்டும் உபயம் அளித்திடுமா? சிவனின் காப்பு சிறந்தவழிக் காட்டும். சிற்றோடை ஒன்று ஓசையோடு செல்லும். வழியில் ஆயிரம் மாயைகள் தோன்றும். நான்கடியில் கிடைக்கும் சூலம் காக்கும். எடுத்தவுடன் கையில் மகரயாளித்தாக்கும். சேயோன் விளையாட்டில் தேடுங்கள் பலவும்”
“அறிவு இங்க வா. உன் கண்ணுக்கு எதாவது தெரியுதா?” என்றுக் கேட்டான் சிவரஞ்சன்.
“பாம்பு இருக்கு. அதான் தெரியுது. நீங்க எத கேட்குறீங்க?” மஞ்சரியை ஓரக்கண்ணால் கண்டவாறே சொன்னான்.
“இந்த நாலு வழில எதுல போகணும்னு சிவன்காப்பு தான் சொல்லும்னு போட்டு இருக்கு. நீ தான் பாத்து சொல்லணும்”
“எனக்கொன்னும் தெரியல.” அவனுக்கு ஆயாசமாக இருந்தது. எப்படியாவது சென்றுவிடலாம் என்று பார்த்தால், பூதம்போல் ஒவ்வொன்றாகக் கிளம்பிக் கொண்டிருந்தது.
“மனதை நிலைப்படுத்து. நீ எண்ணுவது கண்ணிற்கு அகப்படும் அறிவு” சித்தர் சொல்லுக்கு அவனால் மறுப்பேதும் சொல்ல இயலவில்லை.
அமைதியாக கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்தினான்.
சிவரஞ்சனின் சுவடி ஒளிர்ந்தது. அதனைக் கையில் எடுத்தவன், குறிப்பைப் படித்தான்.
“மெய்யில் சிவப்புமச்சம் தாங்கிய,
கன்னிமகள் ஒருத்தி,
கைகளை இருத்தி,
ஓடையோடு ஓசையெழுப்பிட,
உள்ளிருந்து வருமாம்
உள்ளகன்ற வால்.
யாளியின் திறனும்
யாக்கையின் மேனியும்
யாவருக்கும் அஞ்சாமல்
மோதிடும் தருணம்,
யாளி ஒளி வழிநடத்தும்
முகை உருவாகும்”
இப்போது அனைத்தும் அனைவருக்கும் விளக்காமலே புரிந்தது.
“ஆனா, என்னோட உடம்புல சிவப்பு மச்சம் எங்கயும் இல்லையே” உறுதியாக சொன்னாள் அங்கையற்கண்ணி.
அனைவரும் இது என்னடா சோதனை என்பது போல் இருக்க, சிவரஞ்சன் யோசனையோடு ஆருத்ராவைப் பார்த்தான்.
அவளும் சட்டென்று சிவரஞ்சனைப் பார்த்தவள் ‘வேண்டாம்’ என்பதுபோல் தலையசைத்தாள்.
“ஆரு, நமக்கு வேற வழியில்ல. உன்னோட கழுத்துல சிவப்பு மச்சம் இருக்குதான?”
அப்போதுதான் பிறைக்கும் அது நினைவு வந்தது. “ஆமா, ஆரு? நீதான் இத செய்யணும்”
“இல்ல பிறை. நோவே. கண்டிப்பா என்னால முடியாது. அதுல என்னன்னமோ சொல்லுது. யாளின்னா பெருசா இருக்கும்னு நான் கேள்விப்பட்டு இருக்கேன். இவனும் எனக்கு போட்டோலாம் காட்டியிருக்கான். கண்டிப்பா என்னால முடியாது” மறுத்தாள் ஆரு.
“ஆனால், இதை உன்னைத்தவிர வேறு யாராலும் செய்ய இயலாது. நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் காரணத்தோடுதான் இருக்கிறது. அனைவரும் விரைந்து செயல்படுங்கள். தாமதிக்கும் சிறுதுளி நிமிடமும் அனைவரின் உயிர்க்கும் ஆபத்து நேரிடலாம்” என்றார் சித்தர்.
ஆரு பெரிய மூச்சொன்று இழுத்துவிட்டு, அந்த நீரோடைக்குள் கையை விட்டாள். அதற்குள் அறிவு அந்த நீரோடையின்மேல் காப்பினை காட்டிட, சிறு வெளிச்சம் ஒன்று இடதுப்பக்க இருக்கும் வழியினை சுட்டிக் காட்டியது. ஓடையும் ஓசையோடு அங்குதான் பாய்ந்துக் கொண்டிருந்தது.
ஆருவின் கைகளுக்கு அது அகப்பட்டது. ஆம், கைப்பிடி உள்பக்கமாய் சற்று வளைந்திருந்தாலும் கம்பீரமாய் மிளிர்ந்தது மரகத வாள். அதனை இலாவகமாகப் பிடித்தாள் ஆரு. ஒருநிமிடம் அவள் யாரோவாக மாறிப்போனாள்.
அத்தனை பெரிய வாளை, அசாதாரணமாக கையிலேந்தியிருந்தாள் ஆருத்ரா. அனைவரும் அவளோடு அறிவைப் பின்தொடர, அறிவின் கால்களுக்கு ஏதோ அகப்பட்டது.
வேடனான வேலவனின் வேல்தான் அது. குன்றின் அருகில் கிடைத்த சிறிய வேலினை விட, இது சற்று பெரியதாக இருந்தது. அதுவரை அந்த குகையில் கேட்டுக் கொண்டிருந்த வினோதமான சப்தம், இந்நொடி கேட்கவில்லை. ஏதோ ஒரு அமைதி நிலவியதுபோல் உணர்வு. அந்த அமைதியும் பயத்தைதான் ஏற்படுத்தியது.
அறிவு குனிந்து அந்த வேலை ஆராய்ந்துக் கொண்டிருக்க, அவனுக்கு அருகில் யாரோ மூச்சு விடும் சப்தம்.
அனைவரும் ஒரடி பின்னே எடுத்து வைத்திருந்தனர். அன்பு எச்சிலை விழுங்கியபடி பேசினான். “அ… அறிவு…. நிமிந்து பாருடா” அறிவு மெதுவாக தன் தலையை நிமிர்த்திப் பார்க்க, பெரிய மகரயாளி தன் கூரிய பற்களால் அவனையே வெறித்துக் கொண்டிருந்தது. அங்கு அறிவு மற்றும் ஆருத்ராவை தவிர்த்து வேறுயாரும் அதன் கண்களுக்கு தெரியவில்லை.
தன் பெரிய கால்களை மேலே தூக்கி அறிவை மிதிக்க வர, அதன் இடதுப்பக்கமாய் உருண்டு விழுந்தான் அறிவு.
“ஆரு, என்ன வேடிக்க பாத்துட்டு இருக்க? போ! போய் அவன காப்பாத்து”
“என்ன? நானா? டேய், எத்தா பெருசு இருக்கு பாத்தீயா? சத்தியமா என்னால முடியாது. நான் போக மாட்டேன்”
அவள் மரகத வாளினை இப்படி அப்படி ஆட்டியாட்டி பேச, யாளி தற்போது ஆருத்ராவை நெருங்கியது.
சட்டென்று குனிந்து அதன் வால் பக்கம் சென்றவள், பக்க சுவற்றில் கால் வைத்து, அதன் தலையில் அமர்ந்தாள்.
நிமிடத்தில் நடந்த இந்த நிகழ்வையும் அவளின் கையிலிருந்த வாளினையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள் ஆரு.
“ஏய், அப்படிதான். உடனே அத கொன்னுடு” கத்தினான் அன்பு.
அவளோ யாளின் தலையில் அமர்ந்துக் கொண்டு பேந்தபேந்த விழித்துக் கொண்டிருந்தாள்.
அந்த யாளியோ ஒருபக்கம் நிற்க இயலாமல் ஆருத்ராவை கீழே தள்ள முயன்றுக் கொண்டிருந்தது.
அவள் வாளினை இறுக்கிப் பிடிக்க, வாளின் முனையோ யாளியின் தலையை பதம் பார்த்தது.
பெருத்த சத்தத்துடன் அந்த மகர யாளி கீழே விழுந்தது. அதன் உடலிலிருந்து நரம்புகள் ஒன்றிணைந்து பெரிய சங்கிலி ஒன்று உருவாகி அது அப்படியே ஆருத்ராவின் கைகளில் விழுந்தது. சற்று நேரத்திலேயே அது அவளின் உடலோடு ஒன்றிப் போனது.
“என்னடா இப்போ நடந்துச்சு?” அதிர்ச்சி விலகாமல் கேட்டாள் ஆருத்ரா.
“வந்த, வாள எடுத்த யாளிய போட்டுத்தள்ளிட்ட. இப்போ ஒரு சங்கிலி ஒன்னு வந்துச்சே. அது அப்படியே உன் உடம்புல ஒட்டிக்கிச்சு” என்றான் அன்பு.
அவள் மற்றவர்களை அப்படியா என்பதுபோல் பார்க்க, புன்னகையோடு அவளருகில் வந்த சித்தர், “சில விசயங்கள் நம் ஜீவான்மாவோடு கலந்திருக்கும். அதனை யாராலும் எதனாலும் மாற்ற இயலாது. இந்த சங்கிலி தக்க சமயத்தில் உனக்கு உதவும்.” என்றார்.
யாளியின் உடலிலிருந்து ஒரு ஒளிவெள்ளம் ஊற்றெடுக்க, அதுவே சரியான பாதைக்கு வழிக்காட்டியது.
இப்படியே அடுத்த நாளும் தொடங்கியது.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
20
+1
1
+1