Loading

சுழலி-16

“யாழ் எங்க இருக்க?”

“யாழ்?”

அங்கையும், பிறையும் ஒருபக்கம் அமர்ந்திருக்க, மற்றவர்கள் யாழைத் தேடிக் கொண்டிருந்தனர்.

சிவரஞ்சனிற்கு உள்ளுக்குள் எரிச்சல்தான் வந்தது. ஆரம்பத்திலிருந்தே அவளின் நடவடிக்கை எதுவுமே சரியில்லை. ஆனால், அதைப்பற்றி யோசிக்கக் கூட எவருக்கும் நேரமில்லை. இப்போதுவேறு எங்கு சென்றாளோ? ஏதேனும் ஆகியிருக்குமோ? என்றுதான் அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

“நிலா, எங்க இருக்க நிலா? தப்பு பண்ணிட்டேன். உன் கூடவே இருந்து இருக்கணும். நிலா… எங்க நிலா இருக்க? நிலா…” கத்திக் கத்தி சொக்கனின் தொண்டை நீர் வற்றியது. உள்ளுக்குள் முற்றிலும் உடைந்துப் போனான் அவன். அவர்களோடு பாம்புகளும் யாழைத் தேடிக்கொண்டிருந்தன.

……

மறுபக்கம் அங்கையின் நிலையோ இன்னும் துயரமாக இருந்தது.

“அவள நான் பாத்து இருக்கணும் பிறை. இப்டி விட்டுட்டேன். அப்பா, அம்மா கேட்டா நான் என்ன பதில் சொல்றது? அப்பாவுக்கு அவன்னா உயிர் பிறை. அவளுக்கு ஒன்னும் ஆகியிருக்காதுல?” தேம்பியபடியே கேட்டாள்.

“ஒன்னும் ஆகியிருக்காது. நீ அழாத அங்கை. இங்கதான் எங்கயாவது போயிருப்பா. வந்துடுவா”

“இல்ல பிறை, எனக்கு என்னமோ உள்ளுக்குள்ள பயமா இருக்கு. அவளாதான் இங்க வந்தா. எப்டி வந்தா? அவ ஏன் சுவடிகள்ல எடுத்துட்டு வரணும்? அதுவும் சிவரஞ்சன் கிட்ட ஏன் கொடுக்கணும்? அவளுக்கு மட்டும் ஏன் இப்டி நடக்கனும்? அந்த செந்தூரன் யாரு? இவளுக்கு எப்டி அந்த பேர் தெரியும்? மண்டயே வெடிச்சிடும்போல இருக்கு. மஞ்சரிக்கும் எங்களுக்கும் என்ன சம்மந்தம்? யாழ்ல யாரு வசியப்படுத்துனா? இங்க இருந்து போறதுக்குள்ள ஒரு உயிர்பலி ஆகும்னு சொல்லப்பட்டு இருக்கு. கடவுளே, யாழுக்கு எதுவும் ஆகிடக் கூடாது” தொடர்ந்து புலம்பிக்கொண்டே இருந்தாள். அவளின் நிலையைக் காண, பிறைக்கு உள்ளுக்குள் மனது பிசைந்தது.

“நீ இங்கயே இரு அங்கை. நானும் போய் தேடுறேன்” என்று எழுந்தவனை சித்தர் அமர வைத்தார்.

“இல்லை, இனி நீ அங்கையை விட்டு ஒரு வினாடிக்கூட பிரியக்கூடாது. அந்தப் பெண்ணிற்கு எதுவும் நேராது. அனைவரும் வந்தபிறகு நாம் மீண்டும் பயணத்தைத் தொடர வேண்டும்”

அவரின் சொல்கேட்டவுடன் அங்கைக்கு அப்படியொரு கோபம்.

“என்ன? என் தங்கச்சி இல்லாம இந்த இடத்தவிட்டு ஒரு அடிக்கூட நான் நகரமாட்டேன். என்ன பெரிய பயணம், முதல்ல எங்கள சுத்தி என்ன நடக்குதுன்னு பாதி புரியல. இதுல இவ இப்போ காணோம். அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு, இங்க இருக்க யாரையும் நான் சும்மா விடமாட்டேன்” கத்தித் தீர்த்தாள்.

“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை நிரூபிக்கிறாய் மகளே! வள்ளியின் வாக்கு உனக்கு நினைவில்லையா? பிறை, இனி நான் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் இங்கிருக்கும் அனைவருக்கும் ஆபத்து. உணர்ந்து செயல்படு. அனைவரின் உயிர்க்கும் நீயே பொறுப்பாவாய். உன் துணைவியானவளுக்கு புரியவை.” என்றவர் தியானத்தில் அமர்ந்துவிட்டார்.

அவரால் உணர முடிந்தது. அந்த இடத்தை செந்தூரனின் வீரர்கள் தொடர்ந்துக் கொண்டிருந்தனர். எவ்வளவு விரைவாக சுரங்கத்திற்குள் நுழைய முடியுமோ, அவ்வளவு விரைவாக சென்றால்தான், அவன் வெளிவருவதற்குள் செய்யவேண்டிய ஆயத்த பணிகளை செய்து முடிக்க முடியும்.

….

இவர்களின் தேடுதலுக்கான யாழ், கருநாகத்தின் பிடியில் சிக்கிக்கொண்டிருந்தாள் மயக்கநிலையில்.

“இவளை என்ன செய்யப் போகிறாய்?”

“இவள்தான் நமக்குத் திறவுகோல் காளிங்கா! சுகிதேவி கன்னிப்பெண்ணைத் தீண்டிவிட்டாள். இனி அவளால் நமக்கு ஒரு பயனும் இல்லை. இவளை வைத்துத்தான் செந்தூரனை நாம் வெளியே கொண்டு வர இயலும்”

“மஞ்சரி வந்துவிட்டால்?” தனது வாலால் காளிங்கன் நாகத்தை விசிறியடித்தாள் நீலா.

“இனியொருமுறை அவளின் பெயரை உச்சரிக்காதே. கண்முன் நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறாள் அவள். தோழியாய் பாவித்து வந்தேன், இன்றோ எனக்கு துரோகியாய் மாறியிருக்கிறாள். இந்த மானுடர்களே இயற்கைக்குத் துரோகிககள்தான். செந்தூரன் வெளிவந்த மறுநிமிடம், அவனுக்குத் தேவையானதை கொடுத்துவிட்டு, நம் இனத்தோடு கொல்லிப்பாவையை சரணடைய வேண்டும். இதை விடுத்து வேறு எவ்வழியும் நம்மைக் காக்க இல்லை. இவளை உன் காவலில் வைத்துக் கொள். அவர்களின் பயணம் ஆரம்பித்தவுடன், நாமும் கல்வராயன் மலைக்கு செல்ல வேண்டும்” என்றபடி யாழை பார்த்து சீறிவிட்டு சென்றாள் நீலா என்னும் கருநாகப்பாவை.

….

ஜருகுமலை உச்சி.

அனைவரும் களைத்துப் போய் வந்தனர். சொக்கன் கண்கள் இரண்டும் இரத்த சிவப்பாய் இருந்தது. மனம் முழுக்க யாழ்நிலா ஒருவளே வியாபித்து இருந்தாள்.

சித்தர் சொன்னதை பிறை அனைவரிடமும் சொன்னான். சொக்கனை தவிர, மற்றெவருக்கும் அவரை எதிர்த்துப் பேச துளியும் நா எழவில்லை.

“யாழ், இல்லாம நாம மட்டும் எப்டி? நீங்க எல்லாரும் போங்க. நான் மறுபடியும் அவளத் தேடிப் போறேன்” என்று கிளம்ப எத்தனித்தான்.

“பந்தம் என்னும் மாயையிலிருந்து வெளியே வா சொக்கா. இங்கு அனைவரின் உயிரை விடவும் அந்த பெண்ணின் உயிர் அவனுக்கு முக்கியம். அவளுக்கு ஒன்றும் ஆகாது. இந்த சுவடிகள் உன் கைகளுக்கு மட்டுமே அடங்கும். ஆலயத்தில் அளித்த வாக்கினை மறந்துவிட்டாயா? வாசுகி படை உன் சொல்லுக்காகவே இங்கிருக்கிறது. நீ அவளைத்தேடி சென்றாயானால், இங்கு அனைவரின் உயிரும் ஏதோ ஒரு வகையில் சென்றுவிடும். சிவனை தொழுது, சித்தம் தெளி. அங்கை, திறவுகோலை எடுத்துக்கொள். அனைவரும் புறப்படுங்கள்”

அறிவு மஞ்சரியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் இருந்தும் ஏன் யாழ் தொலைந்துபோனாள்? அவனுக்கும் அவள் ஒரு தங்கைபோலத் தான். அங்கை வாய்விட்டு அழுதுவிட்டாள், சொக்கன் கதறிவிட்டான். ஆனால், அறிவால் எதையும் செய்ய முடியவில்லை. மஞ்சரியைத்தான் பார்த்தபடி நடந்தான்.

“அங்க என்ன பாத்துட்டு இருக்க அறிவு? எல்லாரும் போறாங்க வா” அவனை அழைத்துச் சென்றாள் ஆரு.

அங்கை மற்றும் பிறை இருவரும் சேர்ந்து திறவுகோலை செலுத்த, கற்கதவுகள் திறந்தன. அனைவரும் உள்ளே செல்ல, சிறிய படைகள் மட்டும் உள்ளே சென்றன. மற்றவை கல்வராயன் மலைக்கு மாற்று வழியில் புறப்பட்டன.

“அனைவரும் இங்கேயே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். பொழுது புலர்ந்தபின் வெளிச்சத்தில் செல்லலாம்” என்றதும் அனைவரும் ஆங்காங்கே அமர்ந்துவிட்டனர். அந்த இடத்தில் அருகில் இருப்பவர் கூட சற்ற உற்றுப்பார்த்தால்தான் தெரியும் நிலை. அதனாலேயே சித்தர் அனைவரையும் அமரும்படி சொல்லிவிட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

…..

நீலா உள்குகைக்குள் சென்றிருக்க, வெளியே காளிங்கன் காவல் இருந்தான். கண்விழித்த யாழ், பயத்தில் நடுங்கிதான் போனாள். வாயைத்திறந்து கத்தக் கூட வழியில்லை அவளுக்கு. அந்த குகைக்கு எதிரில் இருந்த பெரிய மரத்தில் குட்டி இராஜநாகம் நடக்கும் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தது. அதன் கண்வழியே அனைத்தும் மஞ்சரியின் எண்ணவலைக்குள் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.

“அங்கதினி, யாழ் இனி உன் பொறுப்பு. அவளின் மெய்யும் உயிரும் செந்தூரனிடம் சேரக்கூடாது.” குகைக்குள் இருந்த மஞ்சரி சொல்ல, அங்கதினி என்னும் குட்டி இராஜநாகம் செவிமடுத்து யாழின் பொறுப்பை ஏற்றது.

பொழுது விடிந்தது.

ஒவ்வொருவரும் எழ, சித்தர் முன்னே சென்றார். அவரைத் தொடர்ந்து மற்ற அனைவரும். நெடுந்தொலைவாக அந்த பாதை சென்றுக் கொண்டே இருந்தது.

ஆங்காங்கே மரத்தின் வேர்களும், விசப் பூச்சிகளும் இருக்கத்தான் செய்தன. அனைவருக்கும் அடுத்து என்ன நடக்கும் என்ற பயம் இருந்தாலும், வழித்தவறி சென்றிடக் கூடாது என்பதிலும் கவனம் இருந்தது. மதியத்திற்குமேல் ஆகிவிட்டது. அனைவருக்கும் தாகம் அதிகமாகியிருக்க, அன்பு அங்கு சுரந்துக் கொண்டிருக்கும் ஊற்றிற்கு அருகில் சென்றான்.

கைகளை குவித்து நீரைப் பிடிக்கும் சமயத்தில், “அந்த தண்ணீய தொடாத! உனக்குத் தண்ணீ வேணும்னா நான் கேட்குற விடுகதைக்கு பதில் சொல்லு” என்று ஒரு தவளை முன்னே வந்தது.

“அம்மே, ஆத்தாடி!” இவன் துள்ளிக் குதித்து நகர்ந்தான்.

“தவள பேசுது?” ஆருத்ரா அதிசயமாகக் கேட்டாள்.

“இது ஒரு மாய சுரங்கம். யாரும், இதை குறிப்பில்லாமல் கடந்துவிட முடியாது. இதற்குள் பல்லாயிரக்கணக்கான வழிகளும், நம்மைக் குழப்பும் மாயங்களும் நிறைந்து இருக்கின்றன. அவற்றையெல்லாம் கடந்துதான் நாம் கல்வராயன் மலைக்கு செல்ல இயலும்” என்றார் சித்தர்.

“இதுக்கு நாம ஜீப்லயே போயிருக்கலாம். இந்நேரம் மலைக்கு ரீச் ஆகியிருப்போம்” என்றான் அறிவு.

“சேர வேண்டிய இடம் முக்கியமல்ல, அதற்கு நாம் தேர்ந்தெடுக்கும் பாதைதான் முக்கியம். வழியில் தேவைப்படும் பொருட்களை எடுத்துக் கொள்ளாமல் பயணம் மேற்கொண்டால் அனுபவமில்லாத வாழ்க்கை ருசியற்றுப் போய்விடும். அதனை வரவழைத்தவன் நீ, அதன் கேள்விக்கு விடைக் கூறு” அறிவிடம் ஆரம்பித்து, அன்புவிடம் முடித்தார் சித்தர்.

தன் பெருத்த வாயை திறந்து திறந்து முடிக்கொண்டிருந்தது பச்சைத் தவளை. அதிலிருந்து துர்நாற்றம் வேறு வீசிக்கொண்டிருந்தது.

முகத்தை சுழித்தவன், “என்ன விடுகதை? கேளு” என்றான்.

“வாயை அகல திறந்திருக்கும், ஆனால் மூடவும் பேசவும் முடியாது. எது போட்டாலும் விழுங்கிக் கொள்ளும். ஆனால், அதுக்கு பசி தீராது. உனக்கும் அது தேவைப்படும், ஆனால் எடுக்க முடியாது. அது என்ன?”

“எதே?” தவளை கேட்ட கேள்வியில் அனைவரும் விழித்தனர். சொக்கனுக்கு எதுவோ புரிபடுவதுபோல் இருந்தாலும் விடையை அன்புதான் சொல்ல வேண்டும் என்பதால் அமைதிக் காத்தான்.

“பதில் சொல்லு. இல்லன்னா, இங்க இருந்து யாரும் போக முடியாது.” என்ற தவளைக் கத்தியது.

“வாய திறந்திருக்கும். ஆனா பேச முடியாது. ஒருவேள முதலயா இருக்குமோ? ச்சே, அப்டின்னாலும் அதுக்குள்ள எது போட்டாலும் பசி தீரும். எனக்கும் அது தேவப்படும் ஆனா எடுக்க முடியாது.’ யோசித்தவன், எதிரே இருந்த நீரைப்பார்த்தான். “அட இதெப்டி மறந்தேன். உன்னோட விடுகதைக்கு விடை, பானை. என்ன சரியா?”

“எப்டிடா?” அதிசயித்துக் கேட்டான் அறிவு.

“வாய திறந்து இருக்கும். பேச முடியாது. மூட முடியாது. அதுக்குள்ள எது போட்டாலும் முழுங்கும். ஆனா, அதுக்கு பசி தீராது. அப்போ அது பாத்திரம்தான். இப்போ நமக்கு தண்ணீ தேவ. ஆனா, இது நம்மள எடுக்கவிடல. சோ, அதுக்கு ரிலேட்டடாதான் இருக்கும். என்ன தவளை, பானை தான?”

“சரி, சரி. ஏதோ இல்லாத அறிவ வச்சிக்கிட்டு, சரியா பதில் சொன்ன. இதோ, உனக்கான பொருள்.”

அவனின் விடையைக் கேட்ட தவளை, தனது வாயைத் திறந்து அதிலிருந்து ஒரு குவளையை எடுத்துத் தந்தது.

“இந்தா, இதுல ஊத்து தண்ணீய புடிச்சுக்கோ. ஆபத்து காலத்துல இதுல இருக்குற தண்ணீ உயிர் காக்கும்.” என்ற தவளை தத்தித் தாவி மறுபக்கம் சென்றது.

அன்பு நீரைப் பிடிக்கப் பிடிக்க அது நிரம்பிக்கொண்டே இருந்தது.

அப்பொழுது சிவரஞ்சனின் பையில் இருந்து ஒரு ஒளி வீச, அந்த சுவடி மிளிர்ந்துக் கொண்டிருந்தது.

அதில், அந்த குவளையின் படம் வரையப்பட்டு, அதற்கான விளக்கமும் குறிப்பிடப்பட்டிருந்தது.

“ஊற்றுக்குவளை என்னும் உயிர்காப்பான்,

தருவான் பச்சைநிற வாயன்.

ஒருமுறை உள்ளே சென்ற பொருள்,

சுரந்துக் கொண்டே இருக்கும்,

உடையவன் போதும் என்று சொல்லும்வரை.

உரிய நேரத்தில் பயன்படத்தினால்,

உபயம் அளித்து உடனிருக்கும்”

நடந்தே பொழுது நகர, அந்த நேர்பாதையில் நான்கு வழிப் பாதைகள் பிரிந்தது. அனைவரும் அதன் தொடக்கத்தில் நிற்க, “இங்கேயே நள்ளிரவு வரை அமருங்கள்.” என்றதும், அப்படியே அனைவரும் அமர்ந்தனர்.

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
16
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. ரொம்ப புதிராவே போயிட்டு இருக்கு சீக்கிரமா எல்லாத்துக்கும் விடை கொடுடா காத்திருக்க முடியல