Loading

சுழலி-15

“என்ன சொல்ற சிவா? மஞ்சரி இங்க இருக்காங்களா?” அதிர்ச்சியோடு கேட்டான் பிறை.

“முதல்ல நான் சொல்றத எந்த ஒரு குறுக்கு கேள்வியும் இல்லாம எல்லாரும் கேளுங்க. இதுல யாருமே சம்மந்தபடாத மாதிரிதான் தெரியும். ஆனா, நாம ஒன்பது பேருமே தேர்ந்தெடுக்கப்பட்டவங்கதான். அதுனாலதான் நாம இப்போ இங்க இருக்கோம். இந்த சுவடிகள் அப்பாவும் மஞ்சரியும் சேர்ந்து அவங்க கண்டுபிடிச்ச விசயத்த எழுதி இருக்காங்க. முதல்ல இந்த சுவடில இருந்தது சில படங்கள்தான். அதுல விளக்கங்கள் எதுவும் இல்ல, இல்லன்னு சொல்றது விட, எங்க கண்ணுக்கு தெரியல. முதல்ல அதுல இருந்தது பெரிய இராஜநாகங்கள்தான். இரண்டும் பிண்ணிப்பிணைந்து இருந்தது. அது எல்லையம்மன் கோவில்ல சொக்கன் பார்த்த அதே நாகம்தான்ங்குறது என்னோட கணிப்பு. அடுத்து ஒரு மூலிகை இருந்தது. அது நாங்க யாழோட கைல பாத்தோம். அப்ரோம்தான் தெரிஞ்சது அது சொக்கன் யாழுக்கு கொடுத்தது.

அதுக்கு அப்ரோம் பாத்தது அறிவு கைல போட்டு இருக்க காப்பு. இது ஒரு சிவன்காப்பு. இது கண்ணுக்கு தெரியாத அருவமான விசயங்கள்ல கண்ணுல காட்டும். அதுனால தான் சொக்கனுக்கு மட்டுமே தெரியுற பாம்புகள் அறிவோட கண்களுக்கும் தெரியுது. அடுத்து, அதுல இருந்த படம் காந்தள் மலர். அது நான் முன்னாடியே சொன்ன குறிப்போட இருந்தது. இன்னொரு விசயம், சொக்கனோட சுவடில இருக்குற குறிப்பு நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்குதான் தெரியும். அதுல இருக்க வினாக்குறிப்ப நாம தெரிஞ்சிக்கிட்டதுக்கு அப்ரோம் தான், இதுல விடைக்குறிப்பு உருவாகும். அதுவும் குறிப்புதான். அதாவது சில விசயங்கள் மட்டும் தான் அதுல இருக்கும். அதுக்கு அடுத்து நாம என்ன செய்யணும்ங்குறது நம்ம கைலதான் இருக்கு. இப்போ நம்ம கூட இருக்காரே அந்த பெரியவர், அவர் சித்தருங்குறது என்னோட கணிப்பு. நம்மள இங்க பாக்க வரப்போ ஒரு பாட்டு பாடுனாரே, அதுக்கூட இந்த ஓலைச்சுவடில இருக்கு.

இனிமே, எல்லாம் அந்த விதியோட கைல தான் இருக்கு. விதியயும் மதியால வெல்லலாம்னு கேள்விப்பட்டு இருப்போம். இது அதுக்கான தருணம்.”

அனைத்தையும் கேட்ட பிறை மீண்டும் அதே கேள்விக்கு வந்தான். “மஞ்சரி?”

“அவங்க இங்கதான் இருக்காங்க. அவசியமான நேரத்துல அவங்க வருவாங்க. அதுக்கு மேல நான் எதுவும் சொல்லக் கூடாதுங்குறது அவரோட கட்டளை.” என்று சித்தரைக் கைக்காட்டி சொல்லி முடித்தான் சிவரஞ்சன்.

“இன்னும் உங்களுக்குள்ள பல கேள்விகள் இருக்கலாம். அதுக்கு முன்னாடி நான் சொல்ல வேண்டிய விசயத்த பத்தி சொல்லிடுறேன். நாம இப்போ கல்வராயன் மலைக்கு போறதுக்கான காரணம், வெளிய வரத் துடிக்கும் ஒரு ஆன்மாவ அடக்கத்தான். அவன் பேரு” என்று சொக்கன் தனது வார்த்தைகளை முழுமையாக முடிப்பதற்குள்,

“செந்தூரன்” யாழ் அந்த பெயரை சொன்னாள். அனைவரும் அவளையே பார்த்திருக்க, சொக்கன் இவளுக்கு எப்படி தெரிந்தது என்று அதிர்ந்தான். விரைந்து அவ்விடம் வந்தார் பெரியவர்.

“நேரம் நெருங்கிவிட்டது. சுவடிகளை கையிலெடுத்துக் கொண்டு என்பின்னே வாருங்கள்.” என்றவர், சற்று நிதானித்து தனது தோள்பையில் இருந்த பிடி சாம்பலை யாழின் நெற்றியில் பூசினார்.

எதிலிருந்தோ விடுபட்டது போல் தெளிந்தாள் யாழ்நிலா. அனைவரையும் கண்களில் ஒளி மின்னப் பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்சரி.

சொக்கனும் சிவரஞ்சனும் அவரோடு செல்ல, ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குமேல் அனைவரையும் நிறுத்திவிட்டு மூவர் மட்டும் முன்னே சென்றனர்.

அங்கு வேலவனின் வேல் பதித்த ஒரு பாறை இருந்தது. அந்த மலையுச்சியில் அதைப் பார்த்ததால் குன்றின் அமைப்பு போல் காட்சியளித்தது.

சரியாக மணி நள்ளிரவு பன்னிரெண்டு. குன்றிற்கு அருகே உள்ளங்கை அளவு ஒரு வேல் கீழே கிடந்தது. அந்த பெரியவர் அதனை எடுத்துக் கொள்ள, இருவரின் கையில் இருந்த சுவடிகளும் சிறிது அடிதூரம் உயர்ந்து, ஒன்றோடு ஒன்று இணைந்தன. பின், பிரிந்து, பழையபடி சொக்கன் கையிலும், சிவரஞ்சன் கையிலும் வந்துவிட்டன.

“இருவரும் குறிப்புகளை வாசியுங்கள்.” பெரியவர் சொல்ல,

“காளிங்கனின் கண்பட்டு, சுழலியாக மாறாதவள். கண்ணியின் பெயர்பெற்ற கன்னியின் கைத்தடமும், ஐந்தெழுத்து நாமம் கொண்டு, பெயரிலேயே பிறையை உடையவனின் கைத்தடமும் ஒன்றிணைந்து குன்றில் பட, துகள்கள் குருதியாகும் முன்னே, கைப்பற்ற வேண்டும் திறவுகோலை. கிடைக்கவேண்டியது அகப்படுமாயின், அதிசயித்துப் போகாமல் அருந்த வேண்டும் நஞ்சை!” சொக்கன் வாசித்து முடித்தான்.

அனைவரும் அவ்விடம் வந்தனர். அவர்களுக்கு சற்றுத் தொலைவில் பாம்புகள் நின்றுவிட்டன. இந்த இடத்திற்கு அவைகளால் வர இயலவில்லை. அதனைக் கவனித்த அறிவு, “ஏன் அந்த பாம்புகள் இங்க வரல?” சந்தேகத்துடன் கேட்டான்.

“சில விசயங்கள் நம்மைவிட, அவைகளுக்கு எளிதில் புரிந்துவிடும். இந்த குறிப்பினை அறிந்து விரைந்து செயல்படு சொக்கா” கட்டளையிட்டார் அவர்.

சிறிது நேரம் யோசித்தவன், “பிறை, நீயும் அங்கையும் இப்டி வாங்க” என்றழைத்தான். சிவரஞ்சனுக்கும் அப்போதுதான் அந்த குறிப்பு புரிந்திட, உடனே தனது சுவடிகளை எடுத்தான்.

“சுழல் காற்று வீசிட,

மின்னல் ஒளி தந்திட,

நஞ்சு முறிப்பான் சுனையடியில்,

நடுநிசியில் மிளிர்ந்திடும்.

நவமனிதரில் ரஞ்சிதமே!

குண்டலினி சக்தி

குறித்த நேரத்தில் வெளிப்படுமே!

கண்ணியவளின் கரம்பட்டதும்,

நஞ்சை உடலில் வாங்கிக்கொள்வாள்.

உட்செலுத்து முறிப்பானை,

முறிந்துவிடும் நஞ்சும்,

திறந்துவிடும் கதவும்.!” அதில் இருந்ததை மனதிற்குள் உருப்போட்டவன், யோசனையோடு சித்தரைப் பார்த்தான். அவரோ சிரித்துக் கொண்டு நின்றிருந்தார்.

சொக்கன் “இந்த பாறைல நல்லா பாருங்க, இங்க ரெண்டு உள்ளங்கை அச்சு இருக்கு. அதுல நீங்க உங்க கைய வைக்கணும். அதுக்கு அப்ரோம் திறந்தவுடனே, உள்ள இருக்க சாவிய எடுக்கணும். கவனம், ரெண்டு பேரோட ரத்தமும் சிந்தக்கூடாது.” என்றவன் சிவரஞ்சனை திரும்பிப் பார்த்தான்.

அவனின் பார்வையை உணர்ந்தவன், “நான் உடனே சுனைக்குப் போறேன். மத்தவங்க ஜாக்கிரதயா இருங்க” என்று விரைந்தான் சுனைக்கு. அவன் பின்னோடே சித்தரும் வந்தார்.

குன்றில் மற்றவர்களுக்கு துணையாய் அருவமாய் நின்றிருந்தாள் மஞ்சரி. பாம்புகள் இல்லையென்று ஆசுவாசமாய் உணர்ந்த அறிவு, அப்போதுதான் மஞ்சரியைக் கவனித்தான். அவளின் முகசாயலைக் கண்டு ஒரு நிமிடம் ஸ்தம்பித்துத்தான் போனான். மஞ்சரியையும் தனக்கு முன்னே இருப்பவளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தவன், சொக்கன் பேசியதில் திரும்பினான்.

“எல்லாரும் கொஞ்சம் இந்த பாறைய விட்டுத் தள்ளி நில்லுங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல என்னவேணா நடக்கலாம். யாரும் யாரோட கையயும் விட்டுடாதீங்க” அவன் சொல்லி வாயை மூடவில்லை, காற்று பலமாக வீசியது.

அங்கையும், பிறையும் மனதில் கடவுளை வேண்டிக்கொண்டு அந்த அச்சில் தங்களது உள்ளங்கையை வைக்க, அவர்கள் கைப்பட்டதும் பாறை அசைந்தாடியது. பெருத்த சத்தம் அவ்விடத்தில். சிறிதான நிலநடுக்கம் வந்தது போல் இருந்தது.

மலையுச்சியில் இருந்த அனைவரும் அதனை உணர்ந்தனர்.

…..

“அவர்கள் தொடங்கிவிட்டார்கள். உடனே, சுனைக்கு சென்று நஞ்சு முறிப்பானை எடுக்க வேண்டும். வா” என்று சிவரஞ்சனை இழுத்துக் கொண்டு சென்றார் சித்தர்.

சிவரஞ்சனால் அந்த சரிவில் அவருக்கு ஈடாக இறங்க முடியவில்லை. அவரோ காற்றிற்கு ஈடாக பறந்தார் என்றே சொல்ல வேண்டும். முன்பிருந்த சமவெளிக்கு வந்துவிட்டனர் இருவரும்.

அங்கு எந்த மூலிகையும் சிவரஞ்சனின் கண்களுக்கு அகப்படவில்லை.

“இங்க, எங்கன்னு மூலிகைய தேடுறது. அது எப்டி இருக்கும்?” என்று அவன் பேசிக்கொண்டே திரும்ப, அந்த சித்தரோ நிலத்திலிருந்து நான்கடி மேல்நோக்கி அந்தரத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார்.

“ஆத்தாடி” நெஞ்சைப் பிடித்துக் கொண்டு இரண்டடி பின்னே சென்றான்.

“ரஞ்சா! சுனைக்கு அடியில் ஒரு குழிபோல் இருக்கும். அதில் சிறிய புற்று ஒன்று இருக்கிறது. அதில்தான் மூலிகை இருக்கிறது. விரைந்து எடு” தனது குண்டலினி சக்தியை ஒன்று திரட்டி, மூலிகை இருக்குமிடத்தை அறிந்தார் சித்தர்.

அவர் சொன்னதுபோல் அவன் சுனைக்கு அடியில் பார்க்க, சுனைநீரையொட்டி சிறு புற்று ஒன்று இருந்தது.

அந்த கும்மிருட்டில் புற்றுக்குள் இருக்கும் மூலிகை தங்க நிறத்தில் ஜொலித்தது. புற்றுக்குள்ளே இரண்டு இராஜநாகக் குட்டிகள் இருக்க, அதனைக் கண்டவன் பயத்தோடு சித்தரைப் பார்த்தான்.

“பயப்படாமல் எடு.” கண்களை மூடியபடியே சொன்னார்.

எச்சிலை விழுங்கியபடி அவன் புற்றுக்குள் கையை விட, இரண்டு நாகங்களும் சீறின. ஆனால், அவனை தீண்டவில்லை. மெதுவாகக் கையை விட்டவன், அந்த மூலிகையை எடுத்தான். அவன் கைகளில் ஒளிவீசிக் கொண்டிருந்தது நஞ்சறுப்பான் மூலிகை. மெதுவாக சித்தர் கீழிறங்க, இருவரும் உச்சிக்கு விரைந்தனர்.

….

பாறைக்கு அருகில் இன்னொரு பெரிய பாறை நகர்ந்தது. அனைவரின் கவனமும் அங்கே செல்ல, நடுவில் மறைந்த யாழை அனைவரும் கவனிக்கத் தவறினர்.

பெருத்த சத்தத்தோடு பாறை பிளவு ஏற்பட, உள்ளிருந்து கதவு ஒன்று வெளிப்பட்டது. அதற்குண்டான திறவுகோல், பழைய பாறையில் இருந்தது.

“இதுதான் நாம போகப் போற சுரங்கமா?”

“ஆமா. பிறை, உடனே சாவிய எடு.”

சொக்கன் சொன்னதைக் கேட்ட பிறை, தனது கைகளை அங்கையிடமிருந்து பிரித்து விட்டு சாவியை எடுக்கச் செல்ல, அங்கை என்ன உணர்ந்தாளோ அவனைத் தள்ளிவிட்டு சாவியினை எடுக்க முனைந்தாள். சாவியைத் தொட்டவுடன், “ம்மா” என்று அலறியபடி கைகளை பிடித்துக் கொண்டு விழுந்தாள் அங்கையற்கண்ணி.

அனைவரும் அவசரமாக அவளருகே வர, பாறைக்குள்ளிருந்து சீற்றலுடன் வெளியே வந்தது வெள்ளை இராஜநாகம்.

சிவரஞ்சனும் சித்தரும் வந்துவிட்டனர். “அந்த மூலிகைகளை நசுக்கி, உடனே அவளுக்கு புகட்டு. கடிப்பட்ட இடத்தில் நான்கு சொட்டுக்கள் விடு” என்று உத்தரவிட்டவர், அந்த வெள்ளை இராஜநாகத்திடம் சென்றார்.

“என்னை இப்படி பாவத்திற்கு ஆளாக்கிவிட்டீர்களே! கன்னிப் பெண்ணை தீண்டினால் இருக்கும் சாபத்தில் இருந்து என்னால் என்றைக்கும் வெளிவர முடியாது. அதனை உணர்ந்தும் ஏன் இப்படி செய்தீர்கள்?” ஆவேசத்துடன் வெள்ளை நாகம் சீறியது.

“நீ சாபவிமோச்சனம் பெறக் கூடாது என்பது அவனின் சித்தமானால், என்னால் என்ன செய்ய இயலும் தேவி? தூயமனதுடன் இணைக்காக உயிர் துறக்க எண்ணிவிட்டாள். அதுவே அவர்களின் ஆயுள்பலத்தை இன்னும் கூட்டிவிட்டது. நீ விமோச்சனம் பெற்றால் செந்தூரனின் விசுவாசியாகத்தானே இருக்கப் போகிறாய்? அதுனாலேயே அது தடுக்கப்பட்டது.”

“இல்லை, நான் இனி அவனுக்கு விசுவாசி அல்ல. என்று என் கைவிட்டு இந்த திறவுகோல் செல்கிறதோ ஒன்று அது எனக்கு விமோசன நாளாக இருக்கும், இல்லையேல் இறுதிநாளாக இருக்கும் என்று அவனே சொல்லிவிட்டுத்தான் கட்டுக்குள் அகப்பட்டான். இன்றிலிருந்து ஊன், உறக்கமின்றி நான் என்னையே அழித்துக் கொள்ளப் போகிறேன். உடல் சுருண்டு, நஞ்சு வற்றி நான் படும் ஒவ்வொரு வேதனையும் செந்தூரனின் பலத்தை இழக்க செய்யும். இப்பிறப்பில் நான் செய்யவிருக்கும் ஒரே நல்காரியம் இதுவென எண்ணி விடைபெறுகிறேன். இனியொரு பிறப்பிலும் நான் இதே பிறவியெடுப்பேன் என்றால், நல்காரியம் புரிய மட்டுமே மானுட உருவம் கொள்வேன் என்று வாக்கு தருகிறேன். செல்கிறேன்” என்று அங்கிருந்து மறைந்தது.

இருவரும் பேசியதை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான் அறிவு. சித்தர் அவனை பார்க்க, எதுவும் தெரியாதவன்போல் கவனத்தை அங்கையிடம் செலுத்தினான்.

“அவள் பிழைத்துவிட்டாள். இனியொன்றும் நேராது. பயம் வேண்டாம் பிறை” என்று அவனின் தோளில் தட்டியவர்,

“இனி, பயணம் மிகக் கடுமையாக இருக்கும். அனைவரும் தயாராக இருங்கள்” என்றார்.

“யாழ்? யாழ் எங்க?” என்று அன்பு கேட்க, அப்போதுதான் மற்றவர்களும் கவனித்தனர்.

யாழ் எங்கே?

தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
17
+1
2
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. ஏம்மா அங்கை உன் காதலுக்கு ஒரு அளவே இல்லையா இப்படியா பாம்பு கிட்ட கையை குடுத்து கடி வாங்குவ?அடேய் யாழ் எங்கடா போனா?