சுழலி-14
அனைவரும் அங்கிருந்த சுனை ஒன்றிற்கு அருகில் வர, கிட்டத்தட்ட பொழுது சாய்ந்த நேரமாகிவிட்டது. அனைவருக்கும் பசி என்பது அப்போதுதான் தெரிந்தது.
“எனக்கு செமயா பசிக்குது. இங்க ஏதாவது சாப்ட கிடைக்குமா?” ஆரு கேட்டாள்.
அங்கை தன் பையில் இருந்த ரொட்டி துண்டுகளை எடுத்தாள்.
“அவசரத்துக்கு தேவப்படும்னு பேசிக் ஃபுட் மட்டும் தான் பேக்ல எடுத்துட்டு வந்து இருக்கேன். எல்லாரும் ஷேர் பண்ணிக்கலாம்” என்றவள், சுனை அருகே நீர் பிடிக்க சென்றாள். அவளின் பின்னோடே பிறையும் சென்றான்.
…….
யாழ் அந்த நிர்மலாமான வானத்தையே வெறித்துக் கொண்டிருந்தாள். அதனைப் பார்த்த சொக்கனிற்கு மனது பிசைந்தது.
“யாழ்” அவளின் அருகே சென்றான்.
அவனை திரும்பிப் பார்த்தவள், பதிலேதும் கூறாமல் மீண்டும் அந்த வானத்தை வெறித்தாள். சிறிது நேரம் அவளையே பார்த்திருந்தவன், அந்த வானத்தைப் பார்த்து பேசினான்.
“சில நேரங்கள்ல, நம்மள சுத்தி நம்மள அறியாம பல விசயங்கள் நடக்கும். அதுக்கும் நமக்கும் சம்மந்தம் இல்லாத மாதிரிதான் தோணும். ஆனா, ஏதோ ஒரு வகைல நாம அதோட சம்மந்தப்பட்டு இருப்போம். அப்டித்தான், இப்போ இங்க இருக்குற எல்லாருமே. நீ இந்த கட்டுக்கதைலாம் நம்புறீயா இல்லயான்னு எனக்கு தெரியாது. ஆனா, இங்க நீ வந்ததுக்கு காரணம், உன்னால ஒரு விசயம் நடக்கப் போகுது. அது நல்லதா கெட்டதான்னு விதிதான் முடிவு பண்ணும். அது எதுவா இருந்தாலும், கடவுள மட்டும் மனசுல நினச்சிக்கிட்டு இரு. உன்னோட நல்ல குணத்த என்னைக்கும் விட்டுடாத. அது பல பேரோட உயிருக்கும் ஆபத்தா அமையலாம். நான் இப்போ சொல்றது கூட உனக்கு புரியாம இருக்கலாம். ஆனா, போகப்போக நான் ஏன் இத சொன்னேன்னு நீ கண்டிப்பா புரிஞ்சிப்ப.” என்றவன், அமைதியாக அமர்ந்துக் கொண்டான்.
யாழிற்கு அவன் பேசியது அனைத்தும் ஏதோ உணர்த்துவது போல்தான் இருந்தது. தனக்குள் இருக்கும் குழப்பத்தை கேட்டுவிடலாமா என்று கூட அவளுக்கு தோன்றியது. ஆனால், அதனை சொல்ல மற்றொரு மனம் தடுத்தது. தனது காதலை சொன்னபோது கூட அவன் தன்னை பைத்தியம் என்று தானே சொன்னான். இப்போது இதனையெல்லாம் சொன்னால் கண்டிப்பாக அனைவரும் அப்படித்தான் நினைப்பார்கள் என்றே அவளின் மனம் அவளை குழப்பிச் சென்றது.
…..
சுனை நீரில் தண்ணீர் புட்டிகளை நிரப்பிக் கொண்டிருந்தாள் அங்கை. மெதுவாக அங்கே சென்று, சில்லென்ற தண்ணீரை அவளின் முதுகில் தெளித்தான் பிறை.
“ஏய்!” துள்ளிக் குதித்தவள், உடனே சுதாரித்துவிட்டாள்.
“என்ன பிறை? ஒரு நிமிசம் பயந்துட்டேன்”
“யாரு, நீ? பாம்பயே அசால்ட்டா பிடிக்குறவ, இந்த தண்ணீக்கு பயப்படுறீயா?”
“இந்த சிச்சுவேசன்லயும் எப்படி நீங்க சிரிக்குறீங்கன்னுதான் புரியல” என்றவள் தான் நிரப்பிய இரண்டு புட்டிகளை அவனிடம் கொடுத்துவிட்டு, மற்றொன்றை நிரப்ப ஆரம்பித்தாள்.
“எனக்கும் உள்ளுக்குள்ள பயம் இருக்கு அங்கை. ஆனா, என்ன ஆனாலும் யாருக்கும் எதுவும் ஆக விடமாட்டேன்ங்குறதுல நான் உறுதியா இருக்கேன். அதையே மனசுல போட்டுட்டு இருந்தா கண் முன்னாடி இருக்குற விசயம் கூட தெளிவா தெரியாது” மனதை தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லாமல் சொன்னான் பிறை.
“சரி, நான் ஒன்னு கேட்கவா?”
“என்ன அங்கை?”
“ரொம்ப அர்ஜன்ட். இங்க எப்டி?” பாதியிலேயே நிறுத்தினாள்.
“கொஞ்ச நேரம் இரு” என்றவன் கார்த்திகேயனை அழைத்துக்கொண்டு மறைவான ஒரு இடத்திற்கு சென்றான்.
சமதள இடத்தில் இருக்கும் புற்கள், செடிகளை அகற்றிவிட்டு, பத்து இடங்களில் சிறிது இடைவெளியோடு ஒரு முழத்திற்கு குழித் தோண்டினர் இருவரும். அதில் சில இலை தழைகளைப் போட்டு, தற்காலிகமாக உபாதைகளை நீக்க ஒரு உபாயத்தை உருவாக்கினர். இது அவர்கள் பயிற்சியின் போது கற்றுக்கொண்டது.
பிறை, அங்கையிடம் இடத்தைக் காட்ட, முதலில் அங்கையும், ஆருவும் சென்று வந்தனர். பின், சுனை நீரில் கை, கால்களை சுத்தம் செய்துக் கொண்டவர்கள் ரொட்டிகளை உண்ண ஆரம்பித்தனர். மற்றவர்களும் இருவர் இருவராக செல்ல, அறிவுதான், பொறுமையாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தான்.
“ஏன்டா, ரொம்ப அர்ஜன்ட்டா? ஹீரோயின் மாதிரி மெதுவா நடக்குற?” கிண்டலாகக் கேட்டான் அன்பு.
“நீ ஏன் சொல்ல மாட்ட? இவ்ளோ நேரம் இங்க ஒரு மலப்பாம்பு படுத்துக்கிடந்ததுடா. அத மெதிக்காம போணும். நின்னா, என் கன்ட்ரோல் மீறி, டேங்க் வெடிச்சிடும். அதான், இப்டி நடக்குறேன்.” கடுப்புடன் சொன்னான். அதன்பிறகு அன்பு வாயைத் திறக்கவேயில்லை.
யாழ் மட்டும் தன் நிலையில் இருந்து மாறவேயில்லை. பிறை, அங்கைக்கு கண்காட்ட, ரொட்டித் துண்டுகளை எடுத்துக் கொண்டு அவளின் அருகில் சென்றாள்.
“இத சாப்டு. அதுக்கு அப்ரோம் நாம எப்போ சாப்டுவோம் தெரியாது”
“இல்ல, எனக்கு வேணாம்”
“ஏன்?”
“வேண்டாம்னா விடேன். சும்மா இம்ச பண்ணிக்கிட்டு” கத்திவிட்டாள் யாழ். இதற்குமுன் இப்படியெல்லாம் அவள் பேசியதே கிடையாது.
அங்கையிடமிருந்து ரொட்டியை வாங்கியவன், “யாழ், சாப்டு” என்று அவளின் கையில் திணித்தான் சொக்கன்.
எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டவள், உண்ண ஆரம்பித்தாள்.
“இந்த டிராக் எப்போல இருந்துடா ஓடிட்டு இருக்கு?” அன்பு கன்னத்தில் கைவைத்தவாறு கேட்டான்.
“யாழ், வந்தப்போவே நீ கவனிக்கலயா? சொக்கன்தான் அவக்கிட்ட போய் பேசிட்டு இருந்தான்” என்றான் அறிவு.
அங்கிருந்த வந்த அங்கை, “ரெண்டு பேரும் ஒரே காலேஜ்தான். அடிக்கடி காலேஜ் போறப்போ சொக்கன நான் பாத்து இருக்கேன்.” என்றவள், இருவரையும் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளின் பார்வையை கவனித்தவன், “சொக்கன், நல்லவன்தான் அங்கை” தன் உடன்பிறந்தவன்மேல் எந்த கலங்கமும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தான் பிறை.
“ம்ம்” அதன்பிறகு எதுவும் பேசவில்லை.
நிலவியிருந்த அமைதியை ஆருத்ராதான் கலைத்தாள்.
“அடுத்து நாம என்ன செய்றது? உச்சில குன்று இருக்கும்னு சொல்லி இருக்கு. ஆனா, இங்க அப்டி எதுவும் இங்க இல்லயே?” கேள்வியுடன் சொக்கனையும் பிறையையும் பார்த்தாள்.
அதுவரை அமைதியாக இருந்த அந்த வயதானவர், “முதல்நாளே முடிவு வராது. இன்று உச்சிக்கு வரும் வரை மட்டும்தான் உத்தரவு. அடுத்து நள்ளிரவுதான் புலப்படும். நீங்கள் இருவர்மட்டும் உறங்காது இறைவனை தொழ வேண்டும். அனைவரும் ஓய்வெடுக்க ஏற்பாடு செய்யுங்கள்” முதல் இரண்டு பேரான சொக்கனையும் சிவரஞ்சனையும் குறிப்பிட்டவர், இறுதியாக கார்த்திகேயனிடம் பணியை ஒப்படைத்தார்.
அவர் சொன்னதுபோல், கார்த்திகேயனுடன் பிறை, அறிவு சேர்ந்து, கூடாரம் அமைக்க பொருட்களை எடுத்து வர கிளம்பினர். சொக்கனும், சிவரஞ்சனும் அந்த ஓலைச்சுவடிகளின் தோன்றிய குறிப்புகளை மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருந்தனர்.
அங்கையும் ஆருத்ராவும் அந்த இடத்தை சுத்தம் செய்ய, அன்பு ஒரு வழியாக வரைபடத்தை ஒழுங்கு செய்து முடித்தான். யாழ்தான் எதிலும் கலந்துக் கொள்ளாமல் அமைதியாக இருந்தாள். அனைத்தையும் அந்த பெரியவர் கவனித்தார் தான். ஆனால், எதுவும் பேசாது மனத்திற்குள் நமசிவாய நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார்.
வேலைகள் அதன்பாட்டிற்கு நடக்க, நேரம் கடந்ததாலும், பயணக் களைப்பினாலும் கூடாரம் அமைத்தவுடன் அனைவரும் உறங்க சென்றனர்.
இப்படியே அமர்ந்திருந்தாள் குழப்பம்தான் மிஞ்சும் என்றுணர்ந்த யாழ், அமைதியாக அவளும் சென்றுப் படுத்துக் கொண்டாள்.
“நீங்கள் இருவரும் என்னுடன் வாருங்கள். பிறை, நீ காவலுக்கு இருக்க வேண்டும்” என்று பிறையை காவலுக்கு நிறுத்திவிட்டு சொக்கன் மற்றும் சிவரஞ்சனுடன் சுனைக்கு அருகில் சென்றார் அவர்.
மணி பத்து. இன்னும் இரண்டு மணிநேரத்தில் அடுத்த குறிப்பு வந்துவிடும். அதற்குள் இருவரும் குளித்து இறைவனை தரிசித்து இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் அழைத்து சென்றார்.
….
பிறை ஒரு கல்லில் அமர்ந்து இருக்க, அவனருகே வந்தாள் அங்கை.
“பிறை”
“ம்ம்”
அவனின் ம்ம் என்ற பதிலுக்கு எதுவும் இவள் மறுமொழி கூறவில்லை. அமைதியாக அவனின் கைகளோடு தன் கையை கோர்த்து அமர்ந்துவிட்டாள்.
பல நேரங்களில் ஆயிரம் மொழிகள் சொல்லும் பதில்களை, ஒற்றை அணைப்பும், சிறிது நேர கைகளின் பிணைப்பும் சொல்லிவிட்டு சென்றுவிடும். நமக்கு பிடித்தவரின் ஸ்பரிசங்கள் என்றுமே மாயைதான். அதைதான் உணர்த்திக் கொண்டிருந்தாள் அங்கை தன்னவனுக்கு.
பிறையின் பிணைப்பும் சற்று இறுகியது. அவனின் மனது எதையோ நினைத்து பயந்துக் கொண்டிருந்ததை அங்கை உணர்ந்தாள்.
“எதுவும் ஆகாது பிறை. எதுவானாலும் பாத்துக்கலாம்”
“இந்த ஒன்பது பேரோட உயிருக்கும் நான்தான் பொறுப்பு அங்கை. குறிப்பு எடுக்கப் போறப்போ எல்லையம்மன் கோவில்ல அசீரிரி அப்டித்தான் சொல்லுச்சு. ஆனா, கண்டிப்பா ஒரு உயிர் பலி இருக்குன்னு முதல் குறிப்புல சொல்லி இருக்கு. அதான் மனசு ஒரு மாதிரி இருக்கு”
“எனக்கு புரியுது. அது யாரா இருந்தாலும் கஷ்டமாதான் இருக்கும். ஆனா, எனக்கு என்னமோ இதுக்கும் கண்டிப்பா வழி இருக்கும்னு தான் தோணுது. நம்பிக்க வை. நம்மளோட எண்ணங்கள்தான் நமக்கு என்னைக்கும் உறுதுணை. நம்புவோம்.”
“எப்டி நீ இப்டி இருக்க?”
அவனின் சொல்லில் சிரித்தவள், “எப்டி இருக்கேன்?”
“இப்டி, அன்பா? என்னை இன்னைக்குதான் உனக்கு தெரியும். பாத்த உடனே எனக்குள்ள வந்துட்ட. அதுக்குள்ள நம்ம லைஃப்ல என்னென்னவோ நடந்துடுச்சு. இன்னும் என்ன நடக்கப் போகுதுன்னும் நமக்கு தெரியாது. ஆனா, எதுவுமே தெரியாம எனக்கு நம்பிக்க கொடுத்து, தோ, இப்டி கைய பிடிச்சு உட்காந்துட்டு இருக்க? எப்டி அங்கை?”
“நிஜமா எனக்கும் தெரியல. ஆனா, என்னைக்கும் உன்கூடவே இருக்கணும்னு மனசு சொல்லிக்கிட்டே இருக்கு. எந்த சூழ்நிலைலயும் உன்னை விட்டு போய்டக் கூடாதுன்னு மூளை சொல்லிட்டு இருக்கு. ரெண்டும் ஒரே விசயத்த சொல்றதுனாலயோ என்னவோ ஆணித்தரமா பதிஞ்சிடுச்சு.” அவளின் பதிலில் தன் மீதான பேரன்பை உணர்ந்தான் பிறை.
…..
சொக்கனும் சிவரஞ்சனும் நீராடிவிட்டு வந்தனர். அதற்குள் அந்த பெரியவர், களிமண்ணில் ஒரு சிவலிங்கத்தை செய்து வைத்திருந்தார். அருகே மலர்களும் இருந்தது.
“ஓம் நமசிவாய நாதனே போற்றி!
ஓம் நமசிவாய பரமனே போற்றி!
ஓம் நமசிவாய பிரபஞ்சனே போற்றி!
ஓம் நமசிவாய திருநீலகண்டனே போற்றி!
ஓம் நமசிவாய பிறைசூடியே போற்றி!
ஓம் நமசிவாய சொக்கநாதனே போற்றி!
ஓம் நமசிவாய என்னுளிருப்பவனே போற்றி!
ஓம் நமசிவாய சிந்தைதெளிவிப்பவனே போற்றி!
ஓம் நமசிவாய போற்றி! போற்றி! போற்றி!” என்று இறைவனை தொழுதுக் கொண்டிருந்தார்.
அவரோடு இருவரும் இணைந்துக் கொண்டனர். மூவரும் பின், உச்சிக்கு வர, பிறையையும் அங்கையையும் தவிர மற்றனைவரும் உறங்கியிருந்தனர்.
“இன்னும் ஒரு மணித்தியாளங்கள் இருக்கிறது. ரஞ்சா, அதற்குள் அனைவருக்கும் நீ அறிந்தவற்றை அறிவித்துவிடு” என்று தியானத்தில் அமர்ந்தார் அவர்.
“பிறை, எல்லாத்தையும் எழுப்பு” என்றவாறு கூடாரத்திற்குள் சென்றவன், சம்மணமிட்டு அமர்ந்து அந்த சுவடிகளை எடுத்தான். சொக்கனும் அவனருகில் அமர்ந்துக்கொண்டான். இருவரின் உடல்மொழிகளும் வேறுபட்டதாய் தோன்றியது. அனைவரும் எழுந்திட, சிவரஞ்சன் கூறத் தொடங்கினான்.
“எல்லாரும் கவனமா கேட்டுக்கோங்க. இது என்னோட அப்பாவோட ஓலைச்சுவடி கிடையாது. இது அவரும் மஞ்சரியும் சேர்ந்து எழுதின ஓலைச்சுவடி. இப்போ நாம எங்க போறோம், எதுக்கு போறோம்னு தெரியாம இருந்ததுக்கு எல்லாத்துக்கும் குறிப்பு மூலமா பதில் தரது இந்த சுவடிகள்தான். சொக்கன் கோவில்ல இருந்து எடுத்துட்டு வந்த சுவடிகள் எல்லாமே வெறும் கேள்விகள் தான். அதுக்கான விடை கண்டுபிடிக்குற வழி என்கிட்ட இருக்க சுவடிகள்ல தான் இருக்கு. நீங்க எல்லாரும் நினைக்குற மாதிரி மஞ்சரி சாகல. இங்க நம்மளோடதான் இருக்காங்க”
அனைவரும் அவனின் பேச்சில் ஸ்தம்பித்து இருந்தனர்.
வாயிலில் சிரிப்போடு தியான நிலையில் அமர்ந்திருந்தாள் மஞ்சரி.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
16
+1
2
+1
எத மஞ்சரி சாகலையா என்னடா இப்படி ஒரு ட்விஸ்ட்டு 🙄🙄
ஒவ்வொரு எபியும் ரொம்ப சஸ்பென்ஸ் ஓட நகருது செம 👌👌👌
Thank you ka. next epi poduren