சுழலி-13
முதல் நாள் பயணம்: அரும்பு.
அனைவரும் சொக்கனின் வார்த்தையை நம்பி புறப்பட தயாராகினர். கார்த்தியின் வீட்டிலிருந்து இடது புறம் செல்லும் ஒரு ஒத்தயடி பாதை வழியாக, முதல் நாள் பயணத்தை அனைவரும் தொடங்கினர்.
சொக்கன் சொன்னது போல், முதலில் சொக்கனும் கார்த்திகேயனும் முன்னே நடக்க, அவர்களுக்கு பின் பிறையும், அங்கையும் வந்தனர். அவர்களுக்கு பின், யாழும், அவளைத் தொடர்ந்து அன்புவும் சிவரஞ்சனும் வந்துக் கொண்டிருந்தனர். இறுதியாக கண்களில் ஒருவித அச்சத்துடன் வந்தான் அறிவு, அவனோடு ஆருத்ராவும்.
சிவரஞ்சன்தான் யோசனையோடு மீண்டும் அந்த சுவடிகளை ஆராய்ந்துக் கொண்டிருந்தான்.
“இன்னும் என்னடா பண்ணீட்டு இருக்க?” கேள்வியுடனே அவனருகில் வந்தாள் ஆரு.
அனைவரையும் ஒருமுறை பார்த்தவன், குரலை சற்றுத் தாழ்த்தி “ஆரு, டென்சன் ஆகாத. இந்த சுவடில இருக்குறத நான் முழுசா படிச்சிட்டேன். ஆனா, அது யாருக்கும் தெரிய வேண்டாம். ஏன்னா, இந்த பயணம் முடியுறப்போ கண்டிப்பா யாராவது ஒருத்தர் உயிரோட இருக்க மாட்டாங்க. இந்த விசயம் சொக்கனுக்கும் தெரியும். இன்னும் பல விசயங்கள் அவனுக்கு தெரிஞ்சு இருக்கு. அதான் அமைதியா இருக்கான். இதுக்குலாம் என்ன காரணம்னு எனக்குத் தெரியல. ஆனா, ஏதோ விபரீதம் நடக்கப் போகுதுன்னு எனக்குத் தோணுது.” தன் மனதில் இருந்ததை மறைக்காமல் ஆருத்ராவிடம் உரைத்தான் சிவரஞ்சன். அனைத்தையும் கேட்ட ஆருத்ராவிற்கு உள்ளுக்குள் பயம் எழுந்ததுதான்.
“நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியல. நாம ஏன் இதுல மாட்டிட்டு இருக்கோம்னு தெரியல. இதுல நீ வேற என்னன்னமோ சொல்லி பீதிய வேற கிளப்புறடா. உனக்கு என்ன தெரியுதோ, அத கொஞ்சம் முன்னாடி போறானுங்க பாரு, நமக்கு ப்ரென்டா வாக்கப்பட்ட ஒருத்தனும் அவனோட தம்பியும், அவனுங்க கிட்ட சொல்லு. இல்லயா, பேசாம வா. இருக்குற டென்சன்ல இவன் வேற.” என்றவள் அமைதியாய் அறிவோடு இணைந்துக் கொண்டாள்.
“எனக்கு ஒரு டவுட் சிவா ப்ரோ” சுவடியில் கவனத்தை செலுத்தியிருந்தவனிடம் கேட்டான் அன்பு.
“என்ன டவுட்டு?”
“பதினஞ்சு நாளுன்னு சொக்கன் சொன்னான். அப்போ சாப்பாடுக்கு என்ன பன்றது? அதக் கூட விடுங்க, காட்டுக்கு தான் போறோம், ஏதாவது கிடைக்கும்னு வச்சிக்கலாம். மத்த உடல் உபாதைகளுக்கு? ஆத்திரத்த கூட அடக்கிடலாம். ஆனா, பிஸ், பிஸ்லாம் முடியவே முடியாது. அப்ரோம், குளிக்காம பதினஞ்சு நாள் இருக்கணுமா?” தனக்குத் தோன்றிய அதிமுக்கியமான கேள்வியைக் கேட்டான்.
இந்த கேள்வி அன்புவிற்கு மட்டுமல்ல, ஆருவிற்கும் இருந்தது. மற்றவர்களுக்கு அடுத்து என்ன நடக்குமோ என்ற கவலை இருந்தாலும், இந்த கேள்விகள் நிதர்சனத்தை உணர்த்தியது.
“உனக்கு சீரியஸ்சாவே பேச வராதாடா?” கடுப்புடன் கேட்டான் சிவரஞ்சன்.
“ப்ரோ, இதுவும் முக்கியம்தான். நான் ஒன்னும் எனக்கு மட்டும் கேட்கல. லேடீஸ்லாம் இருக்காங்க. எல்லாருக்கும் சேர்த்து தான் கேட்குறேன்”
“வா, எதாவது செய்யலாம்” தற்போதைக்கு அந்த பேச்சை முடித்துவிட்டான்.
யாழ், அமைதியாக கால்போன போக்கில் முன்னே இருந்தவர்களை பின்பற்றி நடந்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு மனது முழுக்க ஆயிரம் கேள்விகள். ஜருகுமலைக்கு வந்ததிலிருந்து ஏதோ மனதிற்கு நெருக்கமான ஒன்று கைவிட்டு சென்றதாய் மனது அடித்துக் கொண்டிருக்கிறது. அது என்னவென்று அவளுக்குதான் புரியவில்லை.
பிறையும் சொக்கனும் சுவடியை ஆராய்ந்துக் கொண்டே இருபதாம் கொண்டைஊசி வளைவிற்கு வந்தனர். அங்கை, அறிவு, அன்புவிற்கு இதுபோல் பயணம் பழக்கப்பட்டதனால் சிறிது சோர்வுதான் இருந்தது. சொக்கனுக்கும் பிறைக்கும் கூட அவ்வளவு சோர்வில்லை, இது அவர்கள் பிறந்து வளர்ந்த இடம் என்பதால். கார்த்திகேயன் வனக் காவலன் என்பதனால் அவனுக்கும் இது பழக்கப்பட்ட ஒன்றே.
சிவரஞ்சனும் தொல்பொருள் ஆய்வாளர் என்பதனால், அவனின் வேலையே இப்படித்தான் இருக்கும்.
ஆனால், யாழும் ஆருவும் மிகவும் சோர்ந்துபோயினர். ஆரு, மருத்துவர் என்பதால் இதுபோல் அவள் எங்கும் சென்றதில்லை. யாழுவும் அப்படியே. அங்கையின் செயலால் சாரதி யாழை அதிகம் வெளியே அனுப்பவேமாட்டார். ஆனால், ஒரே நாளில் உடலும் மனமும் சோர்ந்ததுபோல் இருந்தாள் யாழ்நிலா.
“கைய்ஸ்! கொஞ்சம் உட்காந்துட்டு போலாமா? என்னால முடியல.” தன் இருகைகளையும் கால் முட்டியில் தாங்கியபடி சொன்னாள் ஆருத்ரா.
அனைவரும் தத்தமது பைகளை கீழே வைத்துவிட்டு அமர்ந்தனர். அறிவு சுற்றிமுற்றி பார்க்க, ஆங்காங்கே மரத்தில் நாகங்கள் தொங்கிக் கொண்டிருந்தன.
‘ஆத்தி, மேல பாக்காதடா அறிவு. இத்தனையும் ஒன்னா பாத்து நான் இன்னும் மயக்கடிச்சு விழாம இருக்குறது அதிசயம்தான்’ என்று உள்ளுக்குள் எண்ணிக்கொண்டவன், அன்பு குடித்துக் கொண்டிருந்த நீரை வாங்கிக் குடித்தான்.
அனைவரும் அந்த இயற்கையை இரசித்தபடி அமர, சிவரஞ்சனும் சொக்கனும் தங்கள் கைகளில் இருந்த ஓலைச்சுவடிகளை ஆராய்ந்துக் கொண்டிருந்தனர்.
“பிறை, இன்னும் எவ்ளோ தூரம் போகணும். அந்த குன்று எங்க இருக்கு?” பிறையிடம் கேட்டான் கார்த்தி.
“அவ்ளோ சீக்கிரம் அத கண்டுபிடிக்க முடியாதுண்ணா. சில ரகசிய வழிலாம் இதுல இருக்கு. எனக்கு இந்த மேப்ல சில இடம் புரியவே இல்ல. இதுல இருக்க இடம்லாம் இங்கதான் குறிக்குதுன்னு புரியுது. ஆனா, உறுதியா என்னால சொல்ல முடியல.” தம்பியான சொக்கன் பதிலளித்தான். சொக்கன் சொன்னவற்றை கவனித்த அங்கை, அன்புவை அழைத்தாள்.
“சொல்லு அங்கை”
“சொக்கன், கொஞ்சம் அந்த சுவடியை கொடுக்குறீங்களா? கார்த்தி சார், நீங்க எப்பவுமே ஃபாரஸ்ட் மேப் வச்சி இருப்பீங்கள அதுவும் வேணும்” என்று இரண்டையும் வாங்கிய அங்கை, அதனை அன்புவிடம் கொடுத்தாள்.
அவளின் செய்கையிலேயே அன்புவிற்கு புரிந்துவிட, வரைபடங்களை ஒன்றிணைத்து, தான் செய்ய வேண்டியதை செய்தான்.
“என்ன பண்ண போறீங்க ரெண்டு பேரும்?” யோசனையுடன் கேட்டான் சொக்கன்.
“அன்புவுக்கு மேப்பாலஜி தெரியும். அவன் பழைய மேப்பயும், இப்போ இருக்குற மேப்பயும் வச்சு எக்சாட்டா எப்டி போகணும்னு கண்டுபிடிச்சிடுவான்” அங்கை பதிலளித்தாள்.
அன்பு அதனை சரியாக அமைத்துக் கொண்டிருக்க, காற்றில் ஒருபாடல் வந்துக் கொண்டிருந்தது. அந்த பாடலைக் கேட்டு சிவரஞ்சன்தான் திகைத்தான்.
“சடசடசட சட்சட்சட
படபடபட பட்பட்பட
தடதடதட தட்தட்தட
சடாமுடியானவன் சடையினில்
நாகம் தரித்தவன்!
சடாமுடியானவன் சடையினில்
நாகம் தரித்தவன்!
துணை நிற்பான் அவன்
துணை நிற்பான்!
வேடுவனின் வேந்தனவன்
அப்பனுக்கே சுப்பனவன்!
வேடுவனின் வேந்தனவன்
அப்பனுக்கே சுப்பனவன்!
உருவம்தொக்கி உடனிருப்பான்!
செல்லும் தூரம் இன்னுமிருக்க,
இதற்கே சோர்ந்தால் பலனிருக்குமா?
வாசுகி புடை சூழ,
வனமகன் துணையிருக்க,
பித்தன்நான் வழிகாட்ட,
தொடங்கியதே பயணமும்
முடிவாகும் அவன் இறுதிநாளும்” என்று பாடிக்கொண்டே ஒருவர் அங்கு வந்தார்.
அவர் பாடின பாடல் தற்போது சிவரஞ்சன் கையில் இருக்கும் ஓலைச்சுவடியில் இருந்தது.
அனைவரும் அவரைக் குழப்பத்துடன் பார்க்க, சிவரஞ்சன் மட்டும் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தான். சட்டைக் கிழிந்து, கையில் திருவோடு ஏந்தியிருக்கும் வெளித்தோற்றம், ஆனால், முகமோ தெளிவாக, பொலிவுடன் இருந்தது.
“என்ன இப்படியே அமர்ந்திருந்தால், தானாக வந்திடுமோ? ஓய்வெடுக்க நேரமில்லை. இந்த மலரை உடலில் தேய்த்துக் கொள்ளுங்கள், இரண்டு கைகளிலும் நசுக்கி அதன் உருண்டையை தொண்டைக் குழிக்குள் வைத்து விழுங்கிவிடுங்கள். பொன்னான காலத்தை பொழுதாக கழிக்காமல் விரைந்து செயல்பட்டால் விதியும் நம் கைவசம்” குழப்பத்தில் இருந்த அனைவரும் சற்று தெளிந்ததுபோல் இருந்தனர். இதில் நிம்மதி பெருமூச்சு விட்டது என்னவோ சொக்கன்தான்.
அனைவரும் அந்த மலர்களை வாங்கிக் கொண்டனர். சிவரஞ்சன் சுவடியில் பார்த்தான், அது காந்தள் மலர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அன்பு அதனைக் கையில் வாங்கியவுடன், “இது டைகர் க்ளோவ் ஆச்சே. ஜருகுமலைல இந்த பூ கிடைக்க வாய்ப்பே இல்ல” தன் தாவரவியல் அறிவை வைத்து சொன்னான்.
அனைவரும் கேள்விப் பார்வையுடன் அந்த வயதானவரை பார்க்க, அவர் புன்னகையோடு தன் திருவோடை துடைத்துக் கொண்டிருந்தார்.
“இந்த பூவ பத்தி சுவடில போட்டு இருக்கு” என்ற சிவரஞ்சனின் வாக்கியத்தில் அனைவரும் அவனைப் பார்த்தனர். சொக்கனும் பிறையும் எதுவும் சொல்லாமல் அதனை கையில் தேய்த்துக் கொண்டு, வாயில் போட்டுக் கொள்ள, மற்றவர்கள் விசயம் அறியாமல் அதனை உண்ண மறுத்தனர்.
“என்ன போட்டு இருக்கு?” அறிவு கேட்டான்.
“சேவர்கொடியோனின் செங்குன்றத்தில்
கார்காலம் கனிந்துவிட்டால்,
கார்முகிலன் நெகிழ்ந்து,
மாரியைப் பொழிப்பான்,
காந்தளோ அரும்பிலிருந்து மலராகும்” என்று அதிலுள்ள வரிகளை படித்தான் சிவரஞ்சன்.
“இதே மாதிரி ஒரு வரிய நான் வேற எங்கயோ படிச்சு இருக்கேன்.” என்று தீவிரமாக யோசித்தான் பிறை.
“இதே பொருளோட சங்க இலக்கியத்துல ஒரு பாட்டு இருக்கு. பரிபாடல்னு நினைக்குறேன்” தனது எண்ணத்தை சொன்னாள் அங்கை.
“எக்சாட்லி, ‘நீர்அயல் கலித்த நெரி முகைக் காந்தள், வார்குலை அவிழ்ந்தவள் இதழ் நிரைதொறும்’ அப்டின்னு வரும். அதாவது, முருகன் இருக்குற குன்றத்துல கார்காலம் அதாவது ஆவணி, புரட்டாசி மாசத்துல மேகங்கள் ஒன்னா சேர்ந்து மழைய தரும். அப்போ நீர் நிலைகளுக்குப் பக்கத்துல இந்த மலர்கள் பூக்கும். இதான் இதோட அர்த்தம். அதே அர்த்தம்தான் இப்போ இந்த பாட்டும் சொல்லுது.” சரியாக சொன்னான் பிறை. அதனை சிவரஞ்சனும் ஒப்புக் கொண்டான்.
“அப்போ, இந்த பூலாம் கண்டிப்பா குன்றுக்கிட்ட இருந்துதான் எடுத்து இருக்கணும். இந்த காந்தள் மலர், பாம்பு விரட்ட கிராமத்துல பயன்படுத்திட்டு வராங்க. ஊருக்குள்ளயும் முன்னலாம் இதோட கிழங்கயும், வேரயும் வாசல்ல சுத்தி போட்டு வைப்பாங்க.” என்றான் சொக்கன்.
“ஆமா, இது ஒரு நஞ்சு முறிவு மருந்து. இத முன்னாடியே நாம கொஞ்சம் அளவுக்கு அதிகமா எடுத்துக்குறப்போ விசப் பூச்சி, தேள்கடி, பாம்பு கடில இருந்து நம்மல காப்பாத்தும்” அன்பு சொல்லி முடித்தான்.
“நம்பிக்கையென்பது பட்டறிவு அடிப்படையாய் வருமாயின், அனைத்திற்கும் ஆதாரம் தேடும் உலகமிது. புறப்படுங்கள்” சிரித்தபடி சொன்னவர் முன்னேறினார்.
அனைவரும் மலையுச்சியை அடைந்தனர்.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
16
+1
2
+1
செம்மடா ரொம்ப அருமையா நகருது கதை 👌👌👌
Thank you ka