சுழலி-12
சொக்கன் குழப்பத்தில் நின்றுக் கொண்டிருக்க, பின் ஒரு முடிவெடுத்தவனாய் மீண்டும் வசிய காப்பு சொல்ல ஆரம்பித்தான். ஆனால், எந்த மாற்றமும் அங்கு நிகழ்ந்தது போல் தெரியவில்லை. இருந்தும் முயற்சியை விடாது கண் மூடி தியானத்தில் அமர்ந்தான்.
சிலையென சமைந்த இராஜநாகங்களில் ஒன்று பேசியது. “வீண் பிரயத்தனம் செய்யாதே மானுடா. உன் வசியம் ஏதும் எங்களிடம் பழிக்காது. காவல் வீரர்களை நீ வசியமாக்கிடலாம். ஆனால், இந்த தலைமைக் காவலாளிகளை நீ ஒன்றும் செய்திட இயலாது. நீண்ட நெடுங்காலமாய் பிரிவொன்று நிகழாது பிண்ணிப்பிணைந்து கிடக்கின்றோம் நானும் என் மனைவியும். எங்கள் பாதுகாவலில் இருக்கும் இந்த சுவடியை நீ எடுக்க முடியாது. கிடைத்தது வரை எடுத்துக் கொண்டு சென்றுவிடு. உயிராவது மிஞ்சட்டும்”
“இல்ல, இத எடுக்காம என்னால போக முடியாது. ஒன்பது உயிர் இக்கட்டுல மாட்டியிருக்கு. இந்த சுவடில இருக்குற குறிப்ப வச்சு தான் அவன் எழுந்து வரதுக்குள்ள நாங்க அவன அங்கேயே அழிக்க முடியும். அதுக்கு நீங்க தான் எங்களுக்கு உதவி செய்யணும்.”
“அதற்கு கைமாறாக நீ என்ன செய்திடுவாய்?”
“நீங்க என்ன சொன்னாலும் நான் செய்றேன்.”
“வாக்கு பகர்.”
“பாராளும் நாயகி, இதுவரைக்கும் எங்க குலத்த காத்துட்டு வர எல்லையம்மன் சன்னதில இருக்கேன். பொய் சொல்ல மாட்டேன். நீங்க கேட்குற விசயம் என்னால செய்ய முடியுறதா இருந்தா கண்டிப்பா நான் செய்வேன்”
“புத்திசாலி. இன்றிலிருந்து பதினைந்தாம் நாள் உனக்காக நாங்கள் காத்துக் கொண்டிருப்போம். நீ சென்ற காரியத்தில் எந்த தடை வந்தாலும் பித்தன் நல்கும் வில்வத்தை நீ எங்களுக்கு தாரைவார்க்க வேண்டும்.”
“சரி. நான் உயிரோட திரும்பி வந்தா கண்டிப்பா வில்வத்தை கொண்டு வந்து சேர்ப்பேன். வாக்கு தரேன். நீங்களும் எனக்கு ஒரு வாக்கு தரணும்.”
“உதவி போதாதென்று மற்றுமொரு வாக்கு. கேள்”
“நான் எந்த விசயத்துக்கு போறேனோ அது எந்த தடங்கலும் இல்லாம நல்ல படியா முடியணும். உங்க காவலர்கள்ல எனக்கும் என்ன சுத்தி இருக்குறவங்களும் எந்த பிரச்சனையும் வராம பாத்துக்க நீங்க அவங்கள என்னோட அனுப்பி வைக்கணும்”
“அது விதியின் கையில் இருக்கிறது. நீ செல்லும் காரியம் எந்த முடிவை நல்கும் என்று எனக்கு தெரியாது. தெரிந்தாலும், அதனை கூறும் அனுமதி எனக்கு இல்லை. ஆனால், என்னுடைய காவலர்களை அனைவரையும் உன்னோடு அனுப்பி வைக்க இயலாது. என் கட்டளையின் பேரில் சிலர் உன்னோடு வருவார்கள். அவர்கள் யாரும் உன்னைத் தவிர வேறு எவர் கண்ணிற்கும் காட்சியாகமாட்டார்கள். அவர்களை உன்னோடு அனுப்பி வைக்க வாக்கு பகர்கிறேன். நீ வாக்கு தவறும்பட்சத்தில் உன்னோடு சேர்ந்து அனைவரும் மடிவார்கள் என்பதையும் நினைவில் கொள். சுவடியை பெற்றுக் கொள். அதிலிருக்கும் சிறப்பு வாய்ந்த செய்திகளை உணர்ந்து கொள்வாயெனில் வெற்றி உனதே.”
“ரொம்ப நன்றி.” சட்டென்று தியானத்தில் இருந்து கண் விழித்தான். தூசு படிந்த சுவடிகள் தற்போது பொன்னிறத்தில் காட்சியளித்தது. அதனை எடுத்தவுடன் வெளியே கோரமாக வீசிக் கொண்டிருந்த காற்று ஓய்ந்து போனது.
சுவடிகளை கண்களில் ஒற்றிக் கொண்டவன் அனைத்தையும் பத்திரப்படுத்தினான்.
….
இங்கே கார்த்தி அங்கையின் வண்டி பெருத்த சத்தத்தோடு வேப்பமரத்தில் முட்டி நின்றது. இருவருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. திடீரென்று நிகழ்ந்த செயலில் சற்று அதிர்ந்திருந்தனர். கார்த்திதான் உடனே நிதானத்திற்கு வந்தான். அங்கையின் அறிவுறுத்தலின்பேரில் உடனே அறிவிற்கு அழைக்க, இன்னொரு ஜீப்பை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தான். இருவரையும் ஏற்றிக் கொண்டவன் விரைந்து வீட்டிற்கு வந்தான். நால்வரும் கூடத்தில் அமர்ந்திருக்க, யாழ் தான் எதையோ வெறித்துக் கொண்டு இருந்தாள்.
சிவரஞ்சனும் அன்புவும் சுவடியை வாசித்து அதில் புரிபடாத குறிப்புகளுக்கு பொருள் தேடிக் கொண்டிருந்தனர். ஆருத்ரா யாழை வேடிக்கைப் பார்த்தவாறு கண்களில் பீதியுடன் அமர்ந்திருந்தாள்.
மூவரும் யோசனையோடு உள்ளே செல்ல, பின்னாடியே பிறையும் சொக்கனும் வந்து சேர்ந்தனர். பிறையை பின் தொடர்ந்து வந்த அந்த குட்டி இராஜநாகம் வாசலிலேயே இருந்துக் கொண்டது.
அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட, பிறையை பார்த்ததும் அங்கை அவனை சென்று அணைத்துக் கொண்டாள்.
“அங்கை என்னடா?”
அவனின் கசிந்துருகிய அழைப்பு அவளுள் ஆயிரம் பரவசத்தைக் கொடுத்தது.
“உங்களுக்கு ஒன்னும் இல்லயே? குறிப்பு கிடச்சுதா?”
பிறை சொக்கனை பார்க்க, அவன் தலையை மட்டும் அசைத்தான். ஆருத்ரா வீட்டில் நடந்ததை சொல்லிக் கொண்டிருக்க, அவளைத் தொடர்ந்து கார்த்தியும் பிறையும் கூட கூறினர். அப்போது அறிவு எதேர்ச்சையாக வெளியே பார்க்க பெரிய பாம்பு படையே வீட்டைச் சுற்றி இருந்தது.
“அய்யய்யோ இவ்ளோ பாம்பு எப்டி வந்துச்சு?” அனைவரும் வெளியே பார்க்க, சொக்கனுக்கும் அதிர்ச்சி என்றாலும் மனதில் சற்று நிம்மதி பரவியது. ஆனால், மற்றவர்களுக்கு எதுவுமே கண்ணிற்கு தெரியவில்லை.
“என்னடா, நீ போன இடத்துல எத பாத்து பயந்த? இங்க பாம்புலாம் இல்லடா?” அன்பு பயந்தவாறு சொன்னான்.
“உங்களுக்கு தெரியலயா? எவ்ளோ பாம்பு இருக்கு பாருங்க” அனைவரும் அவனை சந்தேகமாய் பார்க்க, பிறை அப்போது தான் கவனித்தான்.
“இந்த காப்பு உன் கைல எப்டி வந்துச்சு? யார் குடுத்தா அறிவு?” அனைவரும் அதனைப் பார்க்க, சிவரஞ்சனும் அன்புவும் மட்டுமல்ல சொக்கனும் அதிர்ந்தான்.
“நான் மணி அண்ணாவ பாக்கப் போனப்போ ஒருத்தர் வழில என்னை நிறுத்தி கைல திணிச்சிட்டு போய்ட்டாரு. நான் எவ்ளோ கூப்டும் அவர் மறுபடியும் வரல. அத கழட்ட போன சமயம், கார்த்தி சார் போன் பண்ணவும் ஜீப் எடுத்துட்டு வந்துட்டேன்” என்று சொன்னான்.
“இது ஓலைச்சுவடில பாத்த காப்பு தான?” அன்புவின் உதடுகள் தானாய் முணுமுணுக்க, அவன் சொன்னது அனைவரின் காதிலும் விழுந்தது.
அப்போது சொக்கன், தான் கொண்டு வந்த அனைத்து ஓலைச் சுவடிகளையும் இருக்கையில் வைக்க, முதல் சுவடியை எடுத்ததும் அது தானாய் சிவரஞ்சன் கையில் இருந்த சுவடியோடு ஒன்றிக் கொண்டது. அனைவரும் அதனை வாய பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, யாழின் நிலை மட்டும் மாறவில்லை.
சொக்கன் அந்த சுவடியைக் கையில் எடுத்தவன் வாசிக்கத் துவங்கினான்.
“மருதையின் நாயகியின் துணைவனின் திருநாமம் கொண்டவன் நீ. அனைத்து சுவடிகளுக்கும் காவலன் நீ. மூவைந்து தினம் பயணமாம். மலரின் வாழ்க்கைப் பயணம் தொடங்கும் நாள் முதல் நாளாம். பன்னிரெண்டாம் நாள் வெளியேறும் தருணம், ஆட்டம் மூன்று நாள் தொடருமாம். ஒவ்வொரு நாள் நள்ளிரவும் சுவடிகள் ஒளிருமாம், கேள்விகளுக்கு விடைகள் கிடைக்குமாம். முக்கண்ணுடையோன் வழிகாட்ட, சேயோன் உறுதுணையாக துவங்கட்டும் நவமனிதர்களின் பயணம். கையில் சுவடி கிடைத்த நாளே முதல் நாள். முக்கன்னியர்களின் குருதி சிந்துவதை தவிர்க்க பித்தன் சொல் கேட்டு நடக்க, வாசுகி துணை நிற்பாள். செந்தூரன் வெளிவரும் நாள் ஒரு உயிர் பழியாகும். கல்வராயன் மலையில் வழி சொல்வாள் வள்ளி. முழுநிலவு நாளன்று அடைக்காவிடில் அழிந்துவிடும் அனைத்து சக்திகளும். உச்சி மலைக் கோவிலின் அடியில் குன்று இருக்குமாம். அதனடியில் சுரங்கம் செல்லுமாம். அதுவே பயணத்தின் தொடக்கமாம்”
அவன் அதனைப் படித்து முடித்ததும், அனைவரும் யோசனையில் ஆழ்ந்தனர்.
“அப்போ, நாம இன்னைக்கே கிளம்பணுமா?” அறிவு யோசனையாகக் கேட்டான்.
“இதுல சொல்லியிருக்குறது படி பாத்தா, சொக்கனுக்கு சில விசயங்கள் ஏற்கனவே தெரிஞ்சு இருக்குன்னு தானே அர்த்தம்?” அங்கை கேள்வியோடு அவனைப் பார்த்தாள்.
சொக்கன் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, பிறையும் அவனை கேள்வியாக நோக்கினான்.
“பதில் சொல்லுடா. உனக்கு அப்போ ஏதோ தெரிஞ்சு இருக்கு?” கார்த்திகேயன் கேட்டான்.
“தெரியும் தான். ஆனா, சில விசயங்கள் உங்களுக்கு தெரியாம இருக்குறது தான் நல்லது. சரியான நேரம் வரப்போ சொல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலை வந்துச்சுன்னா சொல்றேன். இப்போ நாம உடனே கிளம்பணும். நேரம் ரொம்ப குறைவா இருக்கு”
அவனின் பதிலில் இன்னும் சொல்ல முடியாத விசயங்கள் உள்ளன என்று அனைவரும் புரிந்துக் கொண்டனர். இதுவே எதுவும் நடக்காமல் சாதாரணமாக அனைவரும் இருந்திருந்தால் அவனை உண்டில்லை என்றே செய்திருப்பார்கள். ஆனால், ஒவ்வொரு நிமிடமும் அவர்களுக்கு ஏதோவொரு அதிர்ச்சியை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. அதனாலேயே அவனது சொற்களை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.
இவர்களுக்கு மாறாக யாழ்தான் கடும் யோசனையில் இருந்தாள். அவளுக்கு தனக்கு என்ன நடக்கிறது? தன்னை சுற்றி என்ன நடக்கிறது? என்று ஒன்றுமே புரியவில்லை. தான் எப்படி இங்கே வந்தோம்? ஏன் இப்போது இவர்களோடு செல்கிறோம்? சொக்கன் எந்த ஆபத்தில் சிக்கிக் கொள்ள போகிறான்? எதுவுமே அவளுக்கு புரிபடவில்லை.
வீட்டில் தான் இருந்தோம், இங்கு எப்படி வந்தோம் என்று கூட அவளுக்கு தெரியவில்லை. ஆழ்ந்த யோசனையில் இருந்தவள் அங்கையின் அழைப்பில்தான் நடப்பிற்கு வந்தாள்.
“யாழ்”
“ஹான், அங்கை?”
“வீட்டுக்கு போன் பண்ணி, கேம்ப் இருக்குன்னு சொல்லிடு. பிரின்சிபால் கிட்ட நான் ஆல்ரெடி உனக்கு மெடிக்கல் லீவ் சொல்லிட்டேன். இருக்குற திங்க்ஸ்லாம் பாத்துக்கோ. வேற ஏதாவது தேவைன்னா சொல்லு போறப்போ வாங்கிக்கலாம்.”
“ம்ம், சரி.” என்றவள், இருக்கும் பொருட்களை ஆராய ஆரம்பித்தாள்.
“இப்போ நமக்கு ஜீப் அவசியம் இல்லன்னு நினைக்குறேன்” என்ற அன்பை அனைவரும் கேள்வியாகப் பார்த்தனர்.
“என்ன ஏன் அப்டி பாக்குறீங்க? அதுல தான் தெளிவா போட்டு இருக்கே. சுரங்கவழில போணும்னு. அப்போ நாம அத வேற கண்டுபிடிச்சுல போணும்.”
“அப்பப்போ இவன் அறிவா பேசுறான் அறிவு” அறிவின் காதைக் கடித்தாள் ஆரு.
அவளுக்கு சிரிப்போடு தலையசைத்தவன், “அன்பு சொல்றதும் சரி. இப்போ அத எப்டி கண்டுபிடிக்க? உச்சில இருக்குன்னு சொல்லி இருக்கு. அங்க கோவில் இருக்கா?” என்றுக் கேட்டான்.
“அந்த இடம் எனக்கு தெரியும். மஞ்சரிக் கூட நான் போய் இருக்கேன். ஆனா, அங்க சுரங்கம் இருக்குமான்னு தெரியல” என்றான் பிறை யோசனையோடு.
“அதுலாம் இருக்கட்டும், இங்க இவ்ளோ பாம்பு இருக்குறப்போ எப்டி வெளில போறது?” முதலில் தான் கேட்ட கேள்வியை மீண்டும் கேட்டான் அறிவு.
அவன் கையிலிருந்த காப்பு கண்ணுக்கு அகப்படாத விசயங்களை காட்டியதனால், தற்போது நாகங்களை அவனால் காண முடிந்தது.
“அது நம்மள ஒன்னும் செய்யாது. நம்மளோட பாதுகாப்புக்காக அம்மன் கோவில்ல இருந்து சில நாகங்கள் வந்து இருக்கு” என்ற சொக்கன், கோவிலில் நடந்ததை பாதி மட்டும் உரைத்தான். அவன் வாக்கு கொடுத்ததையும், அதனால் தான் தமது காவலுக்கு பாம்புகள் வந்திருப்பதையும் அவன் உரைக்கவில்லை. பின்னே, சூழ்நிலை எப்படி மாறும் என்று யாருக்கும் தெரியாது. அதனால் இதனை மட்டும் மறைத்துவிட்டான். ஆனால், இதுவே இறுதிநாளில் இக்கட்டான நிலைக்கு தள்ளிவிடும் என்பதை அவன் எண்ணியிருக்கவில்லை.
அனைவருக்கும் அனைத்தும் கேட்டு உள்ளுக்குள் பயம் எழுந்தாலும், ஏதோ ஒரு நம்பிக்கை துளிர்விடத்தான் செய்தது. அதனால், பயத்தை ஓரம்தள்ளிவிட்டு புறப்பட்டனர்.
அறிவு தான் கண்ணால் கண்டுவிட்ட அனைத்தையும் கிலியோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் தோளில் கை வைத்த அன்பு, “எத்தன பாம்புடா இருக்கு? என்னென்ன இருக்கு?”
“ஏகப்பட்டது இருக்குடா. ஆனா, எல்லாமே விசப்பாம்புக தான். ஒன்னு போட்டாலும் பொட்டுன்னு போய்டுவோம்.”
“நீயாவது அத பாக்குற. எங்க கால வைக்கணும், வைக்கக் கூடாதுன்னு தெரியும். ஆனா, நாங்கலாம். எதுலயாவது கால வச்சு, அது கடிச்சா கூட எங்களுக்கு தெரியாதுடா” பயத்தில் பேசிக் கொண்டிருந்தான் அன்பு.
“இதுங்க நம்மளோட பாதுகாப்புக்கு தான். யாரயும் எதுவும் செய்யாது. தேவையானதுலாம் எடுத்துக்கிட்டாச்சு. நானும் முன்னாடியும், அறிவு அண்ணா பின்னாடியும் போறோம். எங்கள ஃபாலோ பண்ணிட்டே வாங்க.” என்றான் சொக்கன்.
“நான் பின்னாடியா?” என்று அவன் அதிர்ந்தாலும் மற்றவர்களின் பாதுகாப்பிற்காக செல்வதென முடிவெடுத்தான். அவனுக்குத் துணையாக ஆருத்ராவும் அவனோடு இணைந்துக் கொண்டாள்.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
17
+1
3
+1
ஒவ்வொரு குறிப்பு அருமை👌👌 அடுத்து என்னன்னு திக்கு திக்குன்னு இருக்கு 😔😔