சுழலி-11
கார்த்திகேயனும் அங்கையும் தேவையான பொருட்களை வாங்க சென்றுவிட, ஆரு, யாழுக்கு துணையாக அமர்ந்திருந்தாள். சிவரஞ்சனும் அன்புவும் சிரத்தையாக அந்த சுவடியில் இருக்கும் விசயத்தை அறிய முயன்றுக் கொண்டிருந்தனர். அறிவு, பிறை மற்றும் சொக்கன் மூவரும் கிராமத்திற்கு புறப்பட்டனர்.
“இப்டியே கொஞ்ச தூரம் போனா மணி அண்ணா வீடு வந்துடும் அறிவு. நீங்க போய் அவர கூட்டிட்டு ஜீப் எடுத்துட்டு வந்துடுங்க. நாங்க கோவிலுக்கு போறோம்” என்றான் பிறை.
“சேஃபா போய்ட்டு வாங்க.” என்றவன் அவன் கையில் சிறுசேணி (Walky-Talky)யை அளித்தான்.
மற்ற இருவரும் புரியாமல் பார்க்க, “இது அஞ்சு கிலோமீட்டர் சரவுண்டிங்க் வரைக்கும் வொர்க் ஆகும். எப்டியும் கோவிலும் கார்த்தி சார் வீடு அன்ட் ஜீப் இருக்குற இடம் எல்லாம் பக்கத்துலதான் இருக்கு. எதாவது நடந்துச்சுன்னா உடனே கூப்டுங்க.” என்று விளக்கம் அளித்தான்.
பிறை புன்னகையோடு வாங்கிக் கொள்ள, அறிவு தன் வழியில் பயணித்தான்.
சொக்கனும் பிறையும் மௌனமாக நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். இன்னும் இரண்டு கொண்டை ஊசி வளைவுகளை கடந்தால் எல்லைக் கோவில் வந்துவிடும்.
அந்த மௌனத்தை பிறைதான் கலைத்தான். “உனக்கெப்டி யாழ தெரியும்?”
“அவ என்னோட ஜீனியர்.”
“அவ்ளோதானா?”
“அவ்ளோதான்” என்றவாறு முன்னே நடக்கலானான்.
சொக்கனுக்கு உள்ளுக்குள் ஏகப்பட்ட கோபம் இருந்தது. என்னதான் நடந்து இருப்பினும் அவனிடம் சொல்லாமல் சென்றுவிட்டான் பிறை. எப்படி தன்னை மறந்து அவன் போகலாம் என்ற ஆதங்கம் சொக்கனின் மனதில் ஆறாமல் இருக்கிறது. அதை பிறையும் உணர்வான்தான். ஆனால், பேச இது நேரமில்லை என்று அமைதியாக அவனை பின் தொடர்ந்தான்.
இவர்களுக்குத் தெரியாமல் இவர்களை பின் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்தது அந்த குட்டி இராஜநாகம்.
திடீரென்று சொக்கனின் முன் ஒருவர் எதிர்ப்பட்டார். சொக்கன் பயந்து பின்னே வர, இருவரையும் கூர்ந்து நோக்கினார் அவர்.
“யாருங்கய்யா நீங்க? இதுக்கு முன்னாடி ஊருல பாத்தது இல்லயே” சொக்கன் கேள்வியாய் வினவ, பதிலேதும் பேசாதவர் தன் தோள்பையில் இருந்து சிறு மலர்களை எடுத்தார்.
“வாயில் சிறிது மென்றும்
உடலில் சிறிது தேய்த்தும்
தலையில் சாறு பிழிந்தும்
பின்னே திரும்பிப் பார்க்காமல்
பித்தனை நினைத்துக் கொண்டு
முன்னே செல்வாயெனில்
முடித்துவிடலாம் காரியத்தை” என்று சிறிது காந்தள் மலர்களை அவன் கையில் திணித்துவிட்டு நடந்தார்.
“நீங்க யாருங்கய்யா?” இந்த முறை பிறை கேள்வி கேட்க, சொக்கன் அந்த பூக்களை பத்திரப்படுத்தினான்.
“அனைத்திற்கும் விடை பகர்ந்தால் விளையாட்டு சுவாரஸ்யமாகாது. வேகம்… வேகம்… விரைந்து செல். எனக்கவனிட்ட கட்டளை செவ்வனே செய்தேன். நீ அவளோடு வா… முழுநிலவு அன்று முடிந்தால் சந்திப்போம். விரைந்து செல்” அவர் சற்றும் திரும்பிப் பார்க்காமல் வந்த கடமை முடிந்ததென சென்றுவிட்டார்.
சருகுகள் உரசும் சத்தம் கேட்க, பிறை திரும்ப முயற்சித்தான். அவனைத் தடுத்த சொக்கன், “அவர்தான் பின்னாடி பாக்க வேண்டாம்னு சொல்லிட்டு போறாருல. பாக்காத. இந்தா இத கொஞ்சம் வாயில போட்டுக்கோ. அப்டியே சாறு எடுத்து கை கால் முகம்ல தேச்சிக்கோ. நட வேகமா.” அண்ணனுக்கு அறிவுரை வழங்கியவன், அந்த பெரியவர் சொல்படி நடந்துக் கொண்டே அனைத்தையும் செய்து முடித்தான். சிறிது மலர்கள் அவன் சட்டைக்குள் சேகரித்தும் வைத்துக் கொண்டான்.
எல்லையம்மன் கோவில்.
அலங்கார ரூபினி, பிரம்மாண்ட நாயகியாய் அந்த எல்லையைக் காக்கும் காவல் தெய்வமாய் வீற்றிருந்தாள் மாரியம்மன். மஞ்சள் சீலை உடுத்தி நெற்றிநிறைய குங்குமிட்டு அவள் தலையில் வீற்றிருக்கும் ஐந்து தலை நாகம் முதல் அவளின் திருப்பாதங்கள் வரை எலுமிச்சை மாலை தொங்கிக் கொண்டிருந்தது. வாசலிலேயே இராஜநாகம் நின்றுவிட, உச்சி வெயில் நெருங்கும் நேரமாதலால் யாரும் அந்தப்பக்கம் வரவில்லை. வெளியில் நின்று இறைவியை மனதார இருவரும் தொழுதனர்.
“நீ வெளியவே இருண்ணா. நான் சுவடிய எடுத்துட்டு வரேன். நான் திரும்பி வர வரைக்கும் என்ன நடந்தாலும் இந்த இடத்த விட்டு போகக் கூடாது.” என்று உத்தரவாக மொழிந்து விட்டு கருவறைக்குள் நுழைந்தான் சொக்கன்.
சிறிது விளக்கு வெளிச்சமே அந்த இடத்தை பிரகாசமாகக் காட்டியது. அன்னை சிலையின் பின்புறம் வந்தவன், அதை சிறிது நகர்த்தினான். இங்கு இவர்கள் வேலையில் ஈடுபட, கார்த்திகேயன் வீட்டை சுற்றி காற்று பலமாக வீசியது.
யாழ் எதிலோ சிக்குண்டவள் போல் அரற்றினாள். அவள் காதில் யாரோ பேசுவது யாழுக்கு மட்டும் கேட்டது. “எழுந்துக் கொள் நிலவே… அவர்களை விடாதே… வா… அவர்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்… விடாதே… போ… அவர்களை எடுக்க விடாமல் தடு” அவளின் மூளை மறுத்து விடுவது போல் அந்த குரலிலேயே சிக்குண்டு விட்டது.
“ஆஆஆஆ…. இல்ல நான் வரேன், இப்போவே வரேன்… ஆஆஆஆ…. விடமாட்டேன். அவனுங்கள எடுக்க விடமாட்டேன். போறேன். போறேன்” என்று அவள் கத்த, ஆருத்ரா பயந்து போனாள். சத்தம் கேட்டு சிவரஞ்சனும் அன்புவும் ஓடிவந்தனர்.
சிவரஞ்சன் ஓரளவுக்கு அந்த சுவடியை புரிந்துக் கொண்டமையால், யாழ் வசியத்திற்கு கட்டுப்பட்டிருக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டான்.
“யாழ்… இங்க பாரு. ஒன்னுமில்ல. நீ இப்போ கார்த்தி வீட்ல இருக்க. எங்கயும் போகக் கூடாது” சிவரஞ்சன் அவளிடம் பேச்சுக் கொடுக்க, அவள் திமிரிக் கொண்டிருந்தாள்.
அப்போதுதான் அன்பு யாழின் கையில் இருக்கும் பொருளைக் கவனித்தான்.
“ப்ரோ, இது அந்த சுவடில பாத்த மூலிகை மாதிரியே இருக்கு”
சிவரஞ்சனும் அதை அப்போதுதான் கவனித்தான். சட்டென்று ஏதோ மூளையில் இடர, அந்த மூலிகையை வலுக்கட்டாயமாக யாழின் வாய்க்குள் திணித்தான். அவள் அதை விழுங்க மறுக்க, “ஆரு, தண்ணீய எடு” என்றவனின் சொல்லின்படி நீரை யாழுக்குப் புகட்டினாள் ஆரு.
இருமலுடன் அந்த மூலிகையை முழுங்கினாள் யாழ்நிலா. அவளின் திமிரல் மட்டுப்பட்டது. வெளியே காற்றும் நின்றது. அதுவரை வெளியே இருந்த மரத்தில் தன் வாலால் கிளையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டிருந்த பெரிய இராஜநாகம் ஒன்று, இரண்டு முறை நாக்கை நீட்டி, வீட்டை ஒரு முறை பார்த்துவிட்டு ஊர்ந்து சென்றது.
…….
கார்த்திகேயனும் அங்கையும் பொருட்களை வாங்கிக் கொண்டு அவனின் மேலதிகாரியிடமும் பத்து நாட்கள் விடுப்பு சொல்லிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டனர்.
ஜருகுமலை அடிவாரம் அடையும்முன் ஜீப் திடீரென வேகம் எடுத்தது. ஜீப்பின் விசை நிறுத்தி தனது வேலையை நிறுத்தம் செய்ய, கார்த்தி எத்தனை முயன்றும் அதனைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
….
எல்லையம்மன் கோவிலில் அம்மன் சிலையை நகர்த்தியவனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. சிலைக்குப் பின்னே சிறிதாக படிக்கட்டு ஒன்று போக, தனது அலைபேசியில் வெளிச்சத்தை ஒளிரவிட்டபடி உள்ளே இறங்கினான் சொக்கன். பிறை வாயிலிலேயேக் காத்துக் கொண்டிருந்தான். அவனின் மனது ஓயாமல் அடித்துக் கொண்டிருந்தது.
‘கடவுளே, ஏன் என்னோட மனசு இப்டி அடிச்சுக்குது தெரியல. யாருக்கும் எதுவும் ஆகிடக் கூடாது.’ எல்லையம்மனிடம் வேண்டிக்கொண்டான்.
மெதுவாக அந்த படிக்கட்டில் இறங்கினான் சொக்கன். கும்மிருட்டாக இருந்தது. சிறிது தூரத்தில் காலில் ஏதோ இடற, ஒளியை ஒளிர விட்டு பார்த்தவனின் கண்கள் அகலமாக விரிந்தது. அங்கு பல உயரங்களில் புற்று இருந்தது. ஒரு பாம்பைப் பார்த்தாலே சாதாரணமாக அனைவருக்கும் பயம் துளிர்விடும். ஆனால், அங்கு கண்ணிற்கு எட்டும் தொலைவிற்கு புற்றுகளே நிறைந்து இருந்தது. புதிதாக உணர்ந்த வெப்ப வீச்சினால் புற்றிலிருந்து வெளியே வந்தன பாம்புகள். நாகம், சாரை, கட்டுவீரியன், கண்ணாடிவீரியன் என கிட்டத்தட்ட நூற்றிற்கும் மேற்பட்ட பாம்புகள் புற்றிலிருந்து வெளியே வந்தன.
சொக்கனிற்கு உள்ளுக்குள் பயபந்து உருண்டது. ஒன்று தீண்டினாலும் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. இத்தனை பாம்புகள் தீண்டினால் என்னவாகும் என்று நினைக்கவே அவனுக்கு தலை சுற்றியது. அப்போது கிங்கிணி சிரிப்போடு சேர்ந்து கொலுசொலியும் கேட்டது.
அந்த இடத்தில் காற்று குறைவாக இருப்பதையும் அவனால் உணர முடிந்தது. அதிகபட்சம் இரண்டு மணி நேரம். அதன்பிறகு சுவாசத்திற்கு அவன் வெளியே வந்தே ஆக வேண்டும்.
தனது சட்டைப்பையில் வைத்திருந்த காந்தள் மலர்களை மீண்டும் நசுக்கி கை கால்களில் தேய்த்தவன் வாயில் போட்டுக் கொண்டான். அது ஒரு நச்சு முறிவு மலர் என்பது அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான்.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் புற்றிலிருந்து வெளிவந்த பாம்புகள் அனைத்தும் புற்றின் முகப்பிலேயே தான் இருந்தது. எதுவும் புற்றைவிட்டு கீழிறங்கி வரவில்லை.
அனைத்தையும் கிரகித்தவன், அங்கேயே அமர்ந்து வாசி யோகம் மூலம் தனது சுவாசத்தினை கட்டுப்படுத்தினான். வலப் பக்க சுவாசத்தை இலாவகமாக மாற்றி இடதுப்பக்கம் கொண்டு வந்தவன், நாக வசிய காப்பினை உச்சரிக்கத் துவங்கினான்.
மொத்தம் பதினைந்து புற்றுகள் இருந்தது. முதல் புற்றிலிருந்து ஒரு நாகம் வெளியே வந்து அவன்முன் படமெடுத்தது. ஆனால், எதையும் கருத்தில் கொள்ளாதவன் முழுவதுமாக வசிய காப்பினை உச்சரித்து முடித்து அங்குள்ள பாம்புகளை தன்வசியமாக்கினான். அனைத்தும் அவன் எண்ணியபடியே நடக்க, அவன்முன்னே நாகம் வழிகாட்டியாக சென்றது. ஒவ்வொரு புற்றிருக்கும் கீழே ஒவ்வொரு ஓலைச்சுவடிகள் இருக்க, கடவுளை மனதார வேண்டியவன் ஒவ்வொன்றாக எடுத்து சேகரித்துக் கொண்டான்.
இறுதியாக பதினைந்தாவது புற்றுக்கு அருகில் சென்றவன் அதனை எடுக்கும்முன் ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்தான். இரண்டு பெரிய இராஜநாகங்கள் பிண்ணிபிணைந்து இருந்தது போல் ஒரு கற்சிலை இருந்தது. நன்றாக உற்றுப் பார்த்த பிறகு தான் தெரிந்தது அது சிலை அல்ல, உண்மையான நாகங்கள் என்று. அதன் வால் முடியும் இடத்தில் தான் ஓலைச்சுவடி இருந்தது. இப்போது என்ன செய்வது என்று குழப்பத்தில் இருந்தான்.
….
வெளியே காற்று பயங்கரமாக வீசியது. ஏதோ ஒன்று எல்லைக்கோவிலை தாக்க முற்படுவது போல் தோன்றியது. ஆனால், கோவிலின் சூலம் இருக்கும் இடத்தைத் தாண்டி எதனாலும் வர முடியவில்லை.
குட்டி இராஜநாகம் பிறையின் அருகில் வர, ஒரு நிமிடம் அதனைப் பார்த்து பயந்தவன் கண்களை மூடி வசிய காப்பினை உச்சரிக்க துவங்கினான்.
“உனது வசியம் எதுவும் இவளுக்கு தேவையில்லை பிறை. என்னின் மறுஉருவமாய் இருப்பவள். உனக்கு துணையாய் என்றும் உடனிருப்பவள். அவள் வழி சொல்ல நீ செல். உன் சகோதரனுக்கு ஒன்றும் நேரிடாது. அவன் என் பொறுப்பு. செந்தூரன் விழித்த மூன்றாம் நாள் ஒருவரின் உயிர் பலியாகும். நவ உயிர்களும் இனி உன் பொறுப்பு. செய்ய வேண்டியவற்றை பந்தபாசம் துறந்து செய்து முடி. பித்தன் ஒருவன் வருவான், பித்தம் தெளிந்து செல்வான். சொக்கன் அவன் சொல் கேட்டு நடப்பாயெனில் சொன்ன சொல் காப்பாற்றலாம். உயிர் வதையை தடுக்கலாம். காற்றின் வேகம் குறைந்த பின் நின் உயிர்கள் இவ்விடம் வந்து சேரும்” வார்த்தைகள் மட்டுமே கேட்டது.
அவன் கேட்ட வார்த்தைகளையே ஆராய்ந்துக் கொண்டிருக்க, அந்த குட்டி இராஜநாகம் அவனை உறுத்துப் பார்த்தது. பின், அவனருகிலேயே சுருண்டு படுத்துவிட்டது. பிறைக்கு ஏனோ அதனைத் தூக்க வேண்டும் என்று மனது உந்த, உள்ளுக்குள் இருக்கும் சிறிது பயத்தால் அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.
அவன் அறிந்திருக்க மாட்டான், மஞ்சரியோடு தியானத்தில் இருக்கும் போது பல இராஜநாகங்கள் தன்மேல் ஏறி விளையாடியதை.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
20
+1
2
+1
செம்ம ரைட்டிங் டா சூப்பர் 👌👌