சுழலி-10
வாயிலில் யாழ் நின்றதைப் பார்த்து யார் அதிர்ந்தனரோ இல்லையோ அங்கையும் சொக்கனும் பெரிதாக அதிர்ந்தனர்.
“யாழ்?” என்று அங்கையும்,
“நிலா?” என்று சொக்கனும் ஒரு சேர அழைக்க, இருவரையும் அலட்சியம் செய்தவள் வந்து நின்றது சிவரஞ்சன் முன்புதான்.
“இதுல நீங்க கேட்ட ஓலைச்சுவடிகள் இருக்கு” எதற்கோ கட்டுப்பட்டவள் போல, ஒரு பையை சிவரஞ்சனிடம் கொடுத்தவள் மயங்கி சரிந்தாள்.
அங்கைதான் பதறியடித்துக் கொண்டு வந்தாள். “யாழ், எழுந்திரிடி. யாழ், யாழ்.. என்ன ஆச்சு?” அவளை எழுப்ப முயல, யாழிடம் எந்த மாற்றமும் இல்லை. அறிவு அவளின் முகத்தில் தண்ணீர் தெளிக்க, அங்கை சிவரஞ்சனின் சட்டையைப் பிடித்திருந்தாள்.
“என்னடா பண்ண என் தங்கச்சிய? அவ எப்டி இங்க வந்தா? என்னக் கேட்ட அவக்கிட்ட? பதில் சொல்லு” வெறிப்பிடித்தவள் போல் அவள் கத்தினாள்.
சொக்கன் விரைந்து சமையலறைக்கு சென்று, மிளகாய் நெடியை ஏற்படுத்தி யாழின் முகத்தினருகே காட்டினான்.
நெடி மூக்கில் ஏறியதும், இருமலோடு கண்விழித்தாள் யாழ்நிலா. “க்கும்… நான்… நான் இங்க எப்டி வந்தேன்?” தலையைப் பிடித்துக் கொண்டு அவள் கேட்ட கேள்வியில் அனைவரின் பார்வையும் சிவரஞ்சன் மீதுதான் இருந்தது.
“சத்தியமா நான் யாழ்ல ஒன்னும் பண்ண சொல்லல. இது என்னதுன்னு கூட எனக்கு தெரியாது. பிறை நீயாவது நம்புடா. நானும் உங்ககூடதான்டா இருக்கேன். எனக்குமே ஒன்னும் புரியல” அவனின் கண்கள் பொய் பகரவில்லை என்பதை கார்த்திகேயன் உணர்ந்தான்.
“அங்கை, நேத்துதான் அவன் இங்க வந்தான். இங்க வந்ததுல இருந்து நாம எல்லாரும் ஒண்ணாதான் இருக்கோம். சிவரஞ்சன் எதுவும் செஞ்சிருக்கமாட்டான்.” கார்த்திகேயன் அங்கையை சமாதானம் செய்தான்.
“அப்ரோம், இவ எதுக்கு வந்தா? அதுவும் இவன் கொண்டு வர சொன்னதா ஒரு பைய குடுக்குறா? எல்லாரும்தான பாத்தீங்க, இப்போ இல்லன்னு சொன்னா என்ன அர்த்தம்? கடவுளே, என்ன சுத்தி என்ன கருமம்டா நடக்குது?” கத்தித் தீர்த்தாள்.
“ஆரு, யாழ்ல படுக்கவை. இப்போ நான் சொல்லப் போறது எந்த அளவுக்கு நீங்கலாம் நம்புவீங்கன்னு எனக்கு தெரியல. பட், இது என்னோட ஆழ்மனசுல பதிஞ்ச விசயம். என் கண்ணால நான் பாத்த விசயம்.” பிறை சொல்லத் துவங்கினான்.
‘ரைட்டு, ஏதோ ப்ளாஸ்பேக் ஆரம்பிக்க போறானுங்க. ஆத்தா மாரியத்தா உன் புள்ளய பத்திரமா காப்பாத்து ஆத்தா’ மனதில் பயத்துடன் கவனிக்கலானான் அறிவு.
“மஞ்சரி… எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து அவங்க அந்த எல்லைக் கோவில்ல தான் இருப்பாங்க. அவங்க குறி சொல்ற கூட்டத்த சேர்ந்தவங்கன்னு ஊர்க்காரங்க அடிக்கடி சொல்லுவாங்க. கோவில் விசேசம் வந்தாலும் எல்லாத்தயும் எடுத்துக்கட்டி செய்றது இவங்களாதான் இருக்கும். அவங்க அடிக்கடி எங்கயோ போய்ட்டு வருவாங்க. அது எங்கன்னு அம்மைக்கு மட்டும் தெரியும். ஒருநாள் நடுராத்திரில அவங்க கோவில்ல மயங்கிக் கிடக்குறத ஐயன் பாத்துட்டு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனாங்க. அப்போதான் தெரிஞ்சது அவங்க ப்ரக்னன்டா இருக்குறது. இப்போதான் இங்க கிராமத்துக்கு கிளினிக், ஸ்கூல், ரோடு, கரென்ட்லாம். இதுக்கு முன்னாடி எதுவுமே கிடையாது. எங்களுக்கு எது வேணும்னாலும் இங்க இருந்து சிட்டிக்கு போயாகனும். டாக்டர் அப்டி சொன்னதும் யாருக்கும் என்ன செய்றதுன்னு தெரியல. காரணம், மஞ்சரிக்கு கல்யாணம் ஆகல. ஊரே அவங்கள ஒதுக்குச்சு. திடீர்னு ஒருநாள் பூசாரி சாமியாடி மஞ்சரி ஊரக் காப்பாத்த வந்தவங்கன்னும், அவங்க கருத்தரிச்சுதுனால இனிமே ஊருக்கு நல்லதே நடக்கும்னும் சொல்ல, ஒதுக்குன அதே மக்கள் விழுந்து விழுந்து கவனிக்க ஆரம்பிச்சாங்க. ஐயனும், அம்மையும் ஆரம்பத்துல இருந்தே அவங்கள கவனிச்சிக்கிட்டதுனால அவங்கள தவிர வேற யார் எது கொடுத்தாலும் அவங்க வாங்க மாட்டாங்க. எல்லைக் கோவில்ல விட்டு யார் வீட்டுக்கும் போகவும் மாட்டாங்க.
இந்த ஊர் மக்கள் எல்லாரும் படிக்கணும்னு மஞ்சரி ரொம்ப ஆசப்பட்டாங்க. ஏன்னா, மஞ்சரி ஒரு ஆர்க்கியாலஜிஸ்ட். அதுவும் எங்களுக்கு அவங்க இறந்ததுக்கு அப்ரோம் தான் தெரிஞ்சது. ரொம்ப நேரம் அவங்க கோவில் கருவறைலதான் இருப்பாங்க. என்ன பன்றாங்க, ஏது பன்றாங்கன்னு யாருக்கும் எதுவும் தெரியாது. அவங்களுக்கு டெலிவரில பெண் குழந்த பொறந்துச்சு.
மஞ்சரி, எனக்கும் சொக்கனுக்கும் நிறய விசயங்கள் சொன்னாங்க. பாம்புகள் பத்தின விசயமாகட்டும், பழங்கால கதைகள், ஒரு குகைகுள்ள மாட்டிக்கிட்டா என்ன செய்யணும், விசமுறிவு மருந்துலாம் எப்டி பயன்படுத்தணும், மலை ஏறுறப்போவும், தண்ணீக்கு அடிலயும் எப்டி மூச்சு பிடிச்சிக்கிட்டு இருக்கணும்னு நிறய. என்னைவிட, சொக்கன்தான் அவங்களுக்கு இன்னும் நெருக்கம். அவனுக்கு இன்னும் நிறைய சொல்லிக் கொடுத்தாங்க. அப்ரோம் ஊர் மக்கள் கிட்ட பேசி, எல்லாரயும் ஸ்கூலுக்கு அனுப்ப ரொம்ப பாடுபட்டாங்க. சில வருசங்கள் அப்ரோம் அவங்களே வந்து ஐயன்கிட்ட எல்லைக் கோவில் அம்மனுக்கு விழா எடுக்கணும். பெரிய ஆபத்து ஊருக்குள்ள வரப்போகுதுன்னு சொன்னாங்க. அப்போ விழா எடுத்தப்போ மறுபடியும் சாமியாடி வந்து, பிரச்சனையே மஞ்சரியோட பொண்ணாலதான் வரப்போகுது. உடனே அவள இந்த ஊரவிட்டு விரட்ட சொல்லி சொன்னாங்க.
சாமியாடி முடிஞ்ச உடனே காட்டுத்தீ வேகமா பரவுச்சு. எங்க இருந்து தீப்பிடிச்சதுன்னே தெரியல. அப்போ பெரிய இராஜநாகம் ஒன்னு சாமியாடின பூசாரிய கொத்திடுச்சு. அடுத்து அது என்னை நோக்கி வரப்போ மஞ்சரி அதக் கண்ண பாத்து ஏதோ பேசுனாங்க, அது வேகமா காட்டுக்குள்ள போயிடுச்சு. அவங்க பொண்ண கூட்டிக்கிட்டு வேகமா காட்டுக்குள்ள போனாங்க. ஊர் மக்கள்ல சில பேர் மஞ்சரி செஞ்ச விசயத்த பாத்ததும், அவங்க ஏதோ மாயமந்திரம் செய்றவங்கன்னு சொல்லி துரத்த ஆரம்பிச்சிட்டாங்க. கடைசியா அவங்க பாத்தது அந்த மரத்துகிட்டதான். அதுக்கு அப்ரோம் திடிர்னு காணமா போய்ட்டாங்க.
கொஞ்ச நாளுக்கு அப்ரோம் கல்ராயன் மலையில இருக்குற சில பேர், ஊருக்கு வந்து, மஞ்சரி போட்டோ காட்டி இந்த பொண்ணு இந்த கிராமத்து சேர்ந்தவங்க. இப்போ கல்ராயன் மலைல இறந்துட்டாங்கன்னு சொன்னதும் யாருக்கும் என்ன செய்றதுன்னு தெரியல.
எனக்கும் சொக்கனுக்கும் அவங்க சொல்லிக் கொடுத்த ஒவ்வொரு விசயமும் அத்துப்படி. ஒருநாள் சொக்கன் எல்லைக் கோவில்ல இருந்தப்போ தான், அம்மன் கருவறைக்கு பின்னாடி ஏதோ வெளிச்சம் வர மாதிரி இருக்குன்னு போய் பாத்தான். அங்க பெரிய இரண்டு இராஜநாகங்கள் பல ஓலைச்சுவடிகள்ல பாதுகாத்துட்டு இருந்தது. மஞ்சரி சொக்கனுக்கு சொல்லிக் கொடுத்த முக்கிய விசயங்கள்ல ஒன்னு ஜீவராசிகள் வசியம். அதவச்சு, அவன் அந்த பாம்பு பக்கம் போனாலும், அந்த ஓலைச்சுவடிகள்ல எடுக்க முடியல.
இதுல முக்கியமான விசயம், இப்போ குறி சொல்ல வந்த வள்ளியம்மா தான், என்னை ஒருநாள் கல்வராயன் மலைக்கு கூட்டிட்டு போனாங்க. அங்க மஞ்சரியோட கல்லறை இருந்தது. மஞ்சரிய புதச்ச இடம்தான் அது. அவங்க கனவுல நான் வந்து அவங்களுக்கு ஈமக் காரியம் செய்யனும்னு சொல்லி இருக்காங்க. அத செய்யவும் வச்சிட்டாங்க. நான் அத செஞ்சதுனால எங்க ஊரே என்னை ஒதுக்கி வச்சிட்டாங்க. அப்போதான் கார்த்தி அண்ணா இங்க ஃபாரஸ்ட் ரேன்ஞ்சர்ரா வந்தாரு. அவருக்கு ஓரளவு என்ன நடந்ததுன்னு புரிஞ்சதுக்கு அப்ரோம் எவ்ளோ எடுத்து சொல்லியும் என் ஐயன் என்னை வீட்டுக்குள்ளயே விடல. அந்த காட்டுத்தீனால எவ்ளோ பேர் இறந்துட்டாங்க. பல பயிர்கள் நாசமா போச்சு. அதுக்கு காரணம் மஞ்சரிதான்னு இன்னமும் நம்பிட்டு வராங்க. அதுனால நான் செஞ்சது தப்புன்னுதான் அவங்களுக்கு தோணுது. அப்போ கார்த்தி அண்ணாதான் என்னை மேல படிக்க வச்சது. அவரு பொறுப்புலதான் நான் இன்னமும் இருக்கேன்.
இதுக்கு முன்னாடி நடந்த விசயம் இதுதான். நேத்து அவங்கள பாத்ததும், இன்னைக்கு எனக்கு கேட்ட குரலும் கண்டிப்பா மஞ்சரியோடதுதான். நான் உறுதியா சொல்லுவேன். வள்ளியம்மா சொன்னது வச்சு பாத்தா எல்லைக் கோவில்ல இருக்குற ஓலைச்சுவடிகள்தான் குறிப்புகளா இருக்கணும். அதுவும் அது சொக்கனால மட்டும்தான் எடுக்க முடியும்னு மஞ்சரி சொன்னாங்க” இதுவரை நடந்ததையும், இனி செய்ய வேண்டியதையும் ஒரே மூச்சாக சொல்லி முடித்தான் பிறை.
அங்கே குண்டூசி விழுந்தாலும் பெருத்த சத்தம் கேட்கும், அப்படியொரு அமைதி நிலவியது.
அனைத்தையும் கேட்ட அங்கை, அவர்கள் காட்டில் இருந்த போது கேட்ட தாலாட்டு பாடலையும், அதன்பின் கேட்ட குரலையும் சொன்னாள்.
இதைக் கேட்டவுடன் சொக்கன் யோசனையில் ஆழ்ந்தான். சிவரஞ்சன் அருகில் இருந்த ஓலைச்சுவடிகளை எடுத்தவன், “இது கோவில்ல இருக்குற குறிப்புகள் இல்ல. இதுல வேற என்னமோ இருக்கு” என்றான்.
அங்கை அதனை வாங்கிப் பார்த்தவள் மீண்டும் அதிர்ந்தாள். “இது பிரபஞ்சன் அங்கிள் கலெக்ட் பண்ண ஸ்பெசிமன் காப்பி. என்னோட ரூம்ல இருந்து யாழ் எடுத்துட்டு வந்து இருக்கா.”
“அத நான் படிக்கலாமா?” தயங்கியபடியே கேட்டான் சிவரஞ்சன். அங்கை அவனை முறைக்க, பிறைதான் மீண்டும் பேசினான்.
“கொடு அங்கை. அவன் ஆர்க்கியாலஜிஸ்ட். இப்போ அவன் உதவி நமக்கு தேவை.” என்றதும், ஏதும் பேசாதவள் இருக்கையில் வைத்துவிட்டு நகர்ந்துவிட்டாள்.
அறிவு யோசனையில் இருக்க, அன்புதான் புலம்பிக் கொண்டிருந்தான்.
“நேத்து நைட்டே சொன்னேன். இது ஏதோ மர்மமா இருக்குன்னு கேட்டியா? ஒருவேள அந்த பாம்புகள் எல்லாம் இச்சாதாரி நாகமா இருக்குமோ? நம்மள மாதிரியே உருவம் எடுத்து பழிவாங்குமோ? அந்த மஞ்சரி பேயாடா? அங்கைக்கு மட்டும் எப்டிடா அந்த வாய்ஸ் கேட்குது?”
“அதுவந்து அன்பு…” அறிவு ஆரம்பிக்க, கை நீட்டி தடுத்தவன் “எதுவா இருந்தாலும் இந்த காதுபக்கம் வந்து சொல்லு. ரொம்ப நேரமா காது கொய்ங்குது. அப்டி அடிச்சு வச்சியிருக்காடா அவ” மறுபடியும் புலம்பினான்.
அன்பின் மறுபக்கம் வந்தவன், “கொஞ்ச நேரம் புலம்பாம இருடா. அங்கை கேட்டா இன்னொரு காதும் போய்டும்” என்றான்.
“நாயே, இத சொல்லதான் என்னை சுத்திட்டு வந்தீயா? இருடி உன்னையும் அடி வாங்க வைக்கல நான் பேரன்பு இல்ல”
“டேய், அங்க என்னடா நீங்கபாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கீங்க?” அங்கைதான் கடுப்போடு கேட்டாள்.
“அய்யோ, ஒன்னுமே இல்ல அங்கை. சும்மா பேசிட்டு இருந்தோம். யாருக்கும் பசிக்கலயா?” அறிவார்ந்த கேள்வியை அன்பு கேட்டான்.
“ஹப்பா, உனக்காவது தோணுச்சே. பிறை, சீரியஸ்ஸா செமயா பசிக்குது. நானும் அறிவும் சேர்ந்து சமச்சிட்டோம். சாப்புட்டு அடுத்து என்னன்னு யோசிக்கலாமா?” ஆரு கேட்டாள்.
அப்போதுதான் மற்றவர்களுக்கும் வயிறு என்று ஒன்று இருக்கிறது என்பதே தெரிந்தது.
அனைவரும் சரியென்க, உணவு பதார்த்தங்களை எடுத்து வந்தனர் இருவரும். மனதும் புத்தியும் அதீத குழப்பத்தில் இருந்தால் உடலும் சோர்ந்துவிடும். முதலில் அதற்கு வேறு வேலையை கொடுக்க வேண்டும். உண்டு உறங்கி நம்மை நாம் தயார்படுத்திக் கொண்டால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சரியாக நம்மால் யோசிக்க முடியும் என்பது உளவியல் கருத்து. அனைவரும் பசிக்கு உணவருந்தி முடித்தனர்.
கார்த்திகேயன் தெளிவான திட்டம் ஒன்றை கூறினான். “எப்டியும் எல்லாரும் கல்வராயன் மலைக்கு போகத்தான் போறோம். சோ, எல்லாரும் டிரக்கிங்க்கு தேவையானது எடுத்துக்கணும். வீட்ல என்ன சொல்லணுமோ சொல்லிடுங்க. எதோ ஒரு விதத்துல இப்போ ஒன்பது பேருமே இதுல ட்ராப் ஆகியிருக்கோம். வள்ளியம்மா சொன்ன குறிலயும் சரி, பிறைக்கு கேட்ட குரல்லயும் சரி ஒன்பது பேருன்னும் குறிப்பும் வந்து இருக்கு. சோ, இதுல கண்டிப்பா யாழும் தான் இருக்கா. பிறையும் சொக்கனும் எல்லைக் கோவில்ல இருக்குற குறிப்ப எடுக்கட்டும். அன்புவும் சிவரஞ்சனும் இந்த ஓலைச்சுவடில என்ன இருக்குன்னு பாருங்க. நானும் அங்கைவும் டிரக்கிங்க் தேவயான திங்க்ஸ் வாங்கிட்டு வந்துடுறோம். ஆருத்ரா நீ யாழப் பாத்துக்கோ. அறிவு ஒரு ஜீப் கண்டிப்பா போதாது. சோ, இன்னொரு ஜீப் மணிய கூட்டிட்டு போய் பிறை நிறுத்தியிருக்க இடத்துல இருந்து எடுத்துட்டு வந்துடு.
எல்லாருக்கும் ஓகேவா? இதுல யாருக்காவது உடன்பாடு இல்லன்னாலும் ஒத்துக்கிட்டுதான் ஆகணும்.” தெளிவாகக் கூறி முடித்தான் கார்த்தி.
அனைவருக்கும் இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அன்புதான் வழக்கம் போல மனதிற்குள் புலம்பித் தீர்த்தான். ‘என்னை ஏன்டா இவன் கூட கோர்த்து விட்டுப் போறீங்க?’ புலம்ப மட்டுமே முடிந்தது.
பிறையும் அங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, சொக்கன் யாழ் இருந்த அறைக்குள் சென்றான். சிவரஞ்சன் சிறிது நேரம் அங்கையை பார்த்தவன், அன்பை அழைத்துக் கொண்டு, தான் இருந்த அறைக்குள் முடங்கினான். அறிவு தன் வீட்டிற்கு அழைத்து பேச வெளியே சென்றுவிட்டான். அந்த இடத்தில் கார்த்தியும் ஆரு மட்டுமே தனித்து இருந்தனர். ஆரு மெதுவாக கார்த்தியின் அருகில் வந்தவள், “கொஞ்சம் அந்தப்பக்கம் வாங்க” என்றழைத்தாள்.
“என்ன?”
“சார், வாங்க சார். லவ்வர்ஸ் கண்ணுலயே கவி பாடிட்டு இருக்காங்க. நாம மட்டும்தான் டிஸ்டர்பென்ஸா நிக்குறோம்” என்று சமையலைறைக்குள் அழைத்து சென்றுவிட்டாள்.
“அங்கை…” அவன் ஓர் அடி எடுத்து வைக்க, அவள் இரண்டடி பின் சென்றாள்.
சிரித்துக் கொண்டவன், “பிடிக்கலயா அங்கை? கோபமா?” மென்மையாகக் கேட்டான். தான் இத்தனை மென்மையானவனா என்ற சந்தேகம் பிறைக்கே எழுந்தது.
“கோபம் வந்தா இந்நேரம் என் முன்னாடி நின்னு நீங்க பேசி இருக்க மாட்டீங்க பிறை. உங்கள இதுக்கு முன்னாடி எங்கயோ நான் பாத்து இருக்கேன். அதுவும் இல்லாம என்னமோ இந்த பொறுமை என்னை கட்டிப் போடுது. இதை பிடித்தம்னு சொல்றதா இல்ல, என்ன சொல்றதுன்னு தெரியல. ஆனா, நீங்க சொன்னதுக்கு என்னால மறுப்பு சொல்ல முடியல.” நிதானமாய் அதே சமயம் தன் மனதில் இருப்பதையும் உணர்த்தினாள் பெண்ணவள்.
சிரித்தவன், “சேஃபா இரு. நான் சீக்கிரம் வந்துடுறேன்” என்றான் அவள் அருகில் நெருங்கி.
அவள் இன்னும் சற்று அவனை நெருங்கி அவனின் கைப்பிடித்தவள், “நீங்களும்தான். ஜாக்கிரத.” இரண்டு வார்த்தைதான் கயலவள் மொழிந்தாள், ஆனால் கண்கள் ஆயிரம் பத்திரம் சொல்லியது.
அறைக்குள் யாழின் கைகளை பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் சொக்கன்.
“எதுக்கு யாழ் இப்படி செஞ்ச? உன்ன யார் இங்க வர சொன்னது?” வார்த்தைகளில் மட்டுமே கோபம் இருந்தது.
“எனக்கு என்ன நடந்ததுன்னு தெரியல. ஆனா, நீ ஆபத்துல இருக்கன்னு மட்டும் என்னோட உள்மனசு சொல்லிக்கிட்டே இருந்தது. நேத்து அந்த இராஜநாகத்த பாத்ததுல இருந்து நான் நானாவே இல்லடா. என்னோட உயிரும் இதுல மாட்டியிருக்குன்னு இப்போதான் புரியுது. இப்போ கூட என்னோட காதல நீ ஏத்துக்க மாட்டல?” கண்ணீருடன் கேட்டவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்தவன், அவளை நெருங்கி நெற்றியில் முத்தமிட்டான்.
“என்னைத்தாண்டி தான் எதுவா இருந்தாலும் உன்ன நெருங்கும். பத்திரமா இரு. இத வச்சிக்கோ. எதாவது உன்னோட கண்ணுக்கு தெரிஞ்சா, உடனே இத வாயில போட்டுக்கோ” என்று கையில் ஒரு மூலிகையை திணித்தவன், “நான் சீக்கிரம் வந்துடுறேன்” என்று வெளியேறினான். அதற்குள் அறிவும் உள்ளே வந்துவிட, ஆருவும் கார்த்திகேயனும் கூடத்திற்கு வந்தனர்.
“கிளம்பலாம்” என்று வந்தான் சொக்கன். அனைவரும் அவரவர் செய்ய வேண்டிய விசயங்களை நோக்கி செல்ல தயராகினர்.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
16
+1
2
+1
சொக்கன் யாழ்நிலா ரெண்டு பேரும் என்ன ரொம்ப நல்லா பழகி காதலிச்சவங்க மாதிரி பேசிட்டு இருக்காங்க இவங்களுக்கு ஏதாவது தனி ஃப்ளாஷ்பேக் இருக்கா??