சுழலி – 1
கல்லூரி மாணவர்கள் அனைவரும் பதற்றத்துடன் அந்த வகுப்பறைக்கு வெளியே நின்று கொண்டிருக்க, இன்னும் ஒரு படி மேல் பயபந்தைத் தொண்டையில் இருத்தி நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் யாழ் நிலா.
உள்ளே நான்கு மீட்டர் நீளம் கொண்ட ஓலைப் பாம்பைப் பொறுமையாகப் பிடித்துக் கொண்டிருந்தாள் இவளின் சகோதரி அங்கையற்கண்ணி. மேசைகளுக்கு நடுவே புகுந்து விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த அந்தப் பாம்பின் வாலை ஒரு வழியாகப் பிடித்து விட்டாள் அங்கை.
பேரன்பு பாம்பு பிடிக்கும் நீண்ட கருவியினை அங்கையிடம் கொடுக்க, மெதுவாக அதனின் தலையை அதில் சிக்க வைத்தவள் அதன் வாயை அழுத்திப் பிடித்தவாறு தூக்கினாள்.
அதனைப் பேரன்பு வைத்திருந்த பொறிப்பையில் மெதுவாக விட்டவள், பையை இறுக்கக் கட்டிவிட்டாள். இன்னும் ஏதாவது அங்கிருக்குமா என்று ஒருமுறை அவ்விடத்தை நன்கு ஆராய்ந்த பிறகே வகுப்பறையை விட்டு வெளியே வந்தனர் பேரன்பும் அங்கையும். இதுவரை அவர்கள் செய்த அனைத்தையும் காணொளியாகத் தனது கைப்பேசியில் எடுத்துச் சேமித்துக் கொண்டான் அறிவு.
“இங்க வேறெதுவும் இருக்கான்னு ஒன்ஸ் பாத்துடு அன்பு. நான் ஜீப்க்குப் போறேன். அறிவு வா.” என்று அழைத்தபடி வெளியே வந்தாள் அங்கையற்கண்ணி.
“அக்கா, புடிச்சிட்டியா?” பயம் இன்னும் குறையாமல் வந்து கேட்டாள் யாழ்.
“புடிச்சிட்டேன். ஏன், பாக்குறீயா?”
“ஐயோ, வேண்டவே வேண்டாம். அது என் கால் மேல ஏறிப் போனது இப்போ நினச்சா கூட ஒரு மாதிரி உடம்புலாம் சிலுக்குது.”
மெலிதாகப் புன்னகைத்தவள், “இரு இத வச்சிட்டு வரேன்” என்று பாம்பு இருக்கும் பையைத் தனது ஜீப்பில் வைத்து விட்டு வந்தாள்.
பேரன்பு உள்ளிருந்து மீண்டும் அங்கையை அழைத்தான்.
“அங்கை”
“அறிவு கேமரா ஆன்ல வச்சிக்கோ” என்று அவனுக்கு உத்தரவிட்டவள் மீண்டும் வகுப்பறைக்குள் நுழைந்தாள்.
“என்னாச்சுடா”
“இங்க ரெண்டு பாம்போட சட்ட இருக்கு. ஒன்னு இதுன்னாலும், இன்னொன்னு இங்கதான் இருக்கணும். அது மட்டும் இல்ல, இங்க பாரு முட்டை போட்டு இருக்கு.”
“என்ன, முட்ட போட்டு இருக்கா? வாவ். எத்தன?”
“ஒரு பத்து இருக்கும் போல”
“உடனே ப்ரிசர்வ் பண்ணணும். காட்டுல விட்டுடலாம்.”
“இல்ல, அங்கை. ரேஞ்சர் கிட்ட கொடுத்துடலாம். லாஸ்ட் டைம்மே கணக்கெடுக்குறப்போ நாம புடிச்சுக் கொண்டு வந்தத ஏன் சேர்க்கலன்னு கேட்டாரு. கார்ட் மணி அண்ணாதான் அடுத்து ஏதாவது புடிச்சா வந்து என்ட்ரி போட்டுட்டு அப்ரோம் உள்ள விட்டுடச் சொன்னாரு.”
“சரிடா. அறிவு, வெளிய யாழ் இருப்பா வரச் சொல்லு” என்றபடி அதன் முட்டைகளை ஆராய்ந்தாள் அங்கை.
“நேத்துத்தான் போட்டிருக்கும் போல. இன்னும் குட்டிகள் வெளியே வர ரெண்டு நாள் ஆகலாம்.”
பயத்துடனேயே வந்தாள் யாழ். “என்னக்கா,இன்னும் இருக்கா என்ன?”
“அறிவு கேமராவ அவகிட்ட கொடுத்துட்டு ஜீப்குள்ள எக் பிரிசர்வ் கிட் இருக்கும்ல எடுத்துட்டு வா. யாழ் வீடியோவ ஒழுங்கா கவர் பண்ணு. பயந்து போன கீழப் போட்டுடாத. இங்க எந்தப் பாம்பும் இல்ல. ஜஸ்ட் முட்டைங்க தான். அது எடுக்குற வரைக்கும் சரியா கவர் பண்ணு.” என்றவளின் கட்டளைக்குச் சம்மதமாய்த் தலையாட்டினாள். ஆனாலும் உள்ளுக்குள் அந்தப் பயம் இன்னும் இருக்கத்தான் செய்தது.
அறிவு தேவையான பொருட்களை எடுத்து வர, அங்கை அதில் பொறுமையாகப் பத்து முட்டைகளையும் எடுத்துப் போட்டாள். பின், மூவரும் மீண்டும் ஒருமுறை மற்றொரு பாம்பு இருக்குமா என்று தேட, எதுவும் கிடைக்கவில்லை.
யாழ் கைபேசியைக் கொடுத்ததும் அவசரமாக வெளியே வந்துவிட்டாள்.
“என்ன அங்கை, உன் தங்கச்சி இப்படிப் பயப்படுறா?” முட்டைகள் அடங்கிய பையை எடுத்துக் கொண்ட பேரன்பு கேட்டான்.
“எல்லாருக்கும் இருக்குற பயம்தான. அவ முன்னாடி எதுவும் சொல்லாத அழுதுடுவா.”
மூவரும் வெளியே வந்தனர். அப்போது அந்தக் கல்லூரி முதல்வர் வர, அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாள் அங்கை.
“சார், ரெண்டு இருந்துருக்கு. ஆனா, ஒன்னுதான் புடிச்சிருக்கோம். ஒரு டூ ஹவர் பர்மிசன் கொடுத்தீங்கன்னா காலேஜ் சரவுண்டிங்க் செக் பண்ணிடலாம். ஏன்னா, இந்த வகையான பாம்புங்க எப்போவும் கூட்டமாதான் வாழும். பத்து முட்ட வேற எடுத்து இருக்கோம்.”
“என்ன அங்கை சொல்ற? பத்து முட்டையா? சரி, வெக்கேசன் முடிஞ்சு இப்போதான ஓப்பன் பண்ணோம். அதுனால கூட இருக்கலாம். இன்னும் ஒன் ஹவர்தான் க்ளாஸ். பட், பரவால்ல நான் க்ளாஸ்சஸ் கேன்சல் பண்ணச் சொல்லிடுறேன். நீங்க அது என்னன்னு பாத்துட்டு முடிஞ்ச அளவு கிடச்சா பிடிச்சிடுங்க.”
“நீங்க பயப்படுற மாதிரி இல்ல சார். இந்த வகைப் பாம்புங்களுக்கு விசம் கிடையாது. அப்டியே கடிச்சாலும், வலிதான் இருக்கும். நாங்க செக் பன்றோம். தாங்க் யூ சார்”
“அன்ட், அங்கை!”
“சொல்லுங்க சார்”
“நாளைக்கு ப்ரீயா இருந்தா, ஜூ டிபார்ட்மென்ட் ஸ்டுடன்ஸ்க்கு ஒரு க்ளாஸ் எடுக்க முடியுமா? செர்பன்ட்ஸ் பத்தி. ஒரு அவார்னஸ் மாதிரியும் இருக்கும்ல?”
“ஓகே சார், டைம் பாத்துட்டு நான் ஈவ்னிங்க் கால் பன்றேன்.” என்று விடைபெற்றாள்.
அனைத்து மாணவர்களும் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். யாழ்தான் அங்கையிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
“இதுலாம் தேவையா அக்கா?”
“எதுலாம்?” தான் சேகரித்த பாம்பு முட்டைகளைப் பத்திரப்படுத்திக் கொண்டே பேசினாள் அங்கை. பேரன்புவும் அறிவும் இன்னும் சிலரோடு அந்தக் கல்லூரியின் அடர்ந்த புற்கள் இருக்கும் பகுதியில் மற்ற பாம்புகளைக் தேடிக் கொண்டிருந்தனர்.
“தெரியாத மாதிரி கேட்காதக்கா. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நீ இப்படிச் செய்றது கொஞ்சம் கூடப் பிடிக்கல. நீ நம்ம வீட்டுக்கு வந்து எத்தன நாள் ஆச்சுன்னு தெரியுமா?” கண்கள் கலங்கி இருந்தன யாழ் நிலாவிற்கு.
“இது எனக்குப் பிடிச்சுருக்கு யாழ். இதுக்கு மேல நான் என்ன சொன்னாலும் உனக்குப் புரியாது. அதுசரி, நீ என்ன ஃபாரஸ்டரி எடுத்து இருக்க? உனக்கு ஜியாலஜில தான இன்ட்ரெஸ்ட்?” முட்டைகளை அப்புறப்படுத்தியவள் இந்தக் கேள்வியைக் கேட்டாள்.
ஒரு நிமிடம் இந்த நேரடி கேள்வியில் தடுமாறித்தான் போனாள் யாழ்.
“அது… அது உனக்கு எப்டி இது பிடிச்சு இருக்கோ. எனக்கும் ஃபாரஸ்டரி புடிச்சு இருக்கு. அதான்”
“நல்லா சமாளிக்குற. எனிவே, ஒழுங்கா படி. அன்ட், ஒன் திங்க். ஃபாரஸ்டரி புடிச்சா மட்டும் போதாது, எதப் பாத்தும் பயப்படாம இருக்கணும்.”
அப்போது பேரன்பு சிறுசேணி (Walky Talky) மூலம் அழைத்தான்.
“எமர்ஜன்சி! எமர்ஜன்சி! காலேஜ் பின் கேட் பக்கம் பெரிய இராஜநாகம் இருக்கு. ஐ ஆம் ரிப்பீட். எமர்ஜன்சி”
அழைப்பைக் கேட்ட அறிவும் அங்கையும் உடனே அவ்விடம் விரைந்தனர்.
மாலைப் பொழுதும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்தது. இன்று அமாவாசை வேறு. வெளிச்சம் சிறிதும் இருக்காது என்று உணர்ந்திருந்தாள் அங்கை.
“யாழ், அந்த கிட் எடுத்துக்கிட்டு என்கூட வா. அன்ட் அகைன் வீடியோ ரெக்கார்ட்டு பண்ணணும்” என்று அவளை அழைக்க, அவளுக்கோ பயத்தில் நாக்கு உலர்ந்து போனது.
“ஏய் யாழ், என்ன நின்னுட்டு இருக்க? அதுலாம் எடுத்துட்டு வா.” என்றவாறு அங்கை முன்னே சென்றாள்.
‘ஐயோ, இவளோட அட்வென்ஜர்ஸ்க்கு என்னைப் பலிகாடா ஆக்கப் பாக்குறாளே. ஓலப்பாம்புக்கே அல்லு விட்டுருச்சு. இப்போ இராஜநாகம்னுல சொல்றாங்க. கொத்துன உடனே செத்துடுவாங்களேகடவுளே, நான் உசுரோட வீடு போய்ச் சேரணும். காப்பாத்து’ பயத்துடனேயே அவளும் விரைந்தாள்.
புதரின் மறைவில் அதன் கண்களோ பளிங்குபோல் மின்னின. கிட்டத்தட்ட பத்து அடி நீளம் இருக்கும் இராஜநாகம். அதுவும் பேரன்பு ஒற்றையாளாக அதன்முன் நின்று கொண்டிருந்தான். அறிவும் அங்கையும் வந்துவிட்டனர்.
“அறிவு ரேன்ஜருக்குக் கால் பண்ணு” என்றபடி பொறி வைக்க ஏற்பாடு செய்தாள் அங்கை.
நடக்கும் அனைத்தையும் தன்னிடம் இருந்த கைப்பேசி மூலம் காணொளியாக எடுத்துக் கொண்டிருந்தாள் யாழ். அங்கை குழுவின் மற்ற நபர்களும் வந்துவிட்டனர்.
அறிவும் வெகுநேரமாக வனத்துறை அதிகாரிக்கு அழைத்துக் கொண்டிருந்தான். அவனின் நேரமோ என்னவோ கைப்பேசிச் சமிக்ஞை ஒரு கோடுதான் காட்டிக் கொண்டிருந்தது.
அங்கை குழு தங்களின் அனுபவத்தில் தற்போதுதான் இத்தனை பெரிய இராஜநாகத்தைக் காண்கிறார்கள். அதிகபட்சம் இது 12 அடி வளரும் என்றாலும் இந்த மலைப்பகுதிகளில் 5 அடி 6 அடி தான் இவர்களின் கண்களில் சிக்கும். அது மக்கள் வசிக்கும் பகுதியாக இருந்தால் பிடித்துக் காட்டில் விட்டுவிடுவார்கள்.
அங்கையற்கண்ணி இருபத்தைந்து வயது நிரம்பிய அரிவை. இயற்கை மீது அலாதி பிரியம். அதுவும் அழிந்து வரும் உயிரினங்களின் ஒன்றான பாம்புகளின் மீது ஏனோ பிடித்தம் அதிகம். ஆனால், அவளின் இந்தப் பிடித்தம் பெற்றோர்களுக்கு அச்சத்தையும் கோபத்தையும்தான் ஏற்படுத்தியது.
புதருக்குள் இருந்த இராஜநாகம் உணவாக அந்த வகுப்பறைக்குள் இருந்து வெளியேறிய பாம்பைத்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அப்போதுதான் பேரன்பு அதனைப் பார்த்தான். அது உண்டு முடிக்கும் வரை அமைதி காத்தவன், அதன் பிறகே மற்றவர்களை அழைத்தான். இருட்டத் தொடங்கிவிட்டது. ஆனால், அதனை இன்னமும் பிடிக்க முடியவில்லை. எப்போதும் யார் ஒருவர் பாம்பைப் பார்க்கின்றனரோ அவரே அதனைப் பிடிப்பர். இதில் யாரும் தலையிடக் கூடாது என்பது அங்கை குழுவின் பரஸ்பர முடிவு. அதனாலேயே பேரன்பு பிடிக்கட்டுமென மற்ற வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அங்கை பொறியைச் சரியாக அமைத்துவிட்டாள். அறிவும் வனத்துறைக்கு தகவல் அனுப்பிவிட்டு அவ்விடம் வந்தான்.
ஏனோ, பேரன்பிற்கு அதனின் சீற்றத்தைக் கண்டு உள்ளுக்குள் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. இதற்குமுன்னும் ஐந்தடி இராஜநாகத்தை இவன்தான் பிடித்திருந்தான். ஆனால், அதனைவிட இது இரண்டு மடங்கு பெரியதுதான். உள்ளுக்குள் ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது.
“அன்பு, கை நடுக்கத்தக் காட்டிடாத. உன்னோட பலவீனம் தெரிஞ்சா அது படையெடுக்க ஆரம்பிச்சுடும். பொறி வச்சிட்டேன். நீ அப்படியே அதோட வாலப் புடிச்சுக் கேட்சிங்க் ஸ்டிக்ல தலைய ஹோல்ட் பண்ணு.” தொடர்ந்து அவனின் பதற்றத்தைக் குறைக்கும் பொருட்டுப் பேசிக்கொண்டிருந்தாள்.
பேரன்பின் இதயத் துடிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. பாம்புகளுக்கு 90 டிகிரி பார்வை கோணம் உண்டு. மேலும், அவை அனைத்தையும் உன்னிப்பாகக் கவனிக்கும் தன்மை கொண்டவை. தாம் தாக்கப்படப் போகின்றோம் என்ற சிறிய அச்சம் ஏற்பட்டாலே அவை எதிர் தாக்குதல் செய்யத் தயாராகிவிடும்.
பேரன்பு பிடித்திருந்த அந்த இராஜநாகமும் வெகுநேரமாகப் பேரன்பைத்தான் பார்த்துக் கொண்டிருந்தது. சொல்லப் போனால், அது தாக்குவதற்கான சரியான தருணத்தை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம். அதுவும் இருட்டில் கருநாகம் படையெடுத்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே எச்சில் விழுங்கச் செய்கிறது.
அன்பின் கைகள் நடுக்கம் கொண்டன. அவனின் பிடி தளர ஆரம்பித்தது.
“அன்பு என்னடா பண்ற? விட்றாத. ஹோல்ட் பண்ணு.”
“அங்கை” என்றபடி மயங்கி விழுந்தான் பேரன்பு.
தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
13
+1
18
+1
2
+1
படிக்கும்போதே ரொம்ப பயமா இருக்குடா பாம்புகளை கொண்டு வந்து இருக்க ஐயோ அன்பு மயங்கிவிட்டான்
அடுத்து என்ன நடக்க போகுதோ 🙄🙄
ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும் போல
சூப்பர் அருமையான ஆரம்பம் 👌👌👌
Thank you ka.. next ud nalaiku varum
அருமையான ஆரம்பம்
Thank you kaa