Loading

அத்தியாயம் 1

மேற்கு தொடர்ச்சி மலைகளினால் முப்பக்கமும் சூழப்பட்டு, கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் ரம்மியமான இயற்கை காட்சிகளும், கண்களுக்கு குளிர்ச்சியாக பச்சை பசேலென்ற வயக்காடுகளும், சுவாசிக்கும் இடமெல்லாம் மண்வாசமும், மேனியை தழுவி செல்லும் இதமான குளிர்காற்றும் என உள்ளம் மற்றும் உடல் இரண்டிற்கும் பார்த்ததும் புத்துணர்ச்சி தரக்கூடியதாக அமைந்த காட்சிகளை ரயிலில் அமர்ந்தபடி விழிகள் அகல பார்த்தவனின் செவ்விதழ்கள் தானாகவே,

“அமேசிங்” என்று மெய்மறந்து உச்சரித்தன.

நிமிட நேர பயணத்திற்கு பிறகு ரயில் “செங்கோட்டை” என்று பெயர் பதாகை தாங்கிய ரயில் நிலையத்தில் நிற்க இன்னுமே அவ்வூர் அழகில் மயங்கிய மயக்கதினோடே காலடி எடுத்து வைத்தான் அவன்.

கடந்து செல்லும் மனிதர்கள் யாவரின் கவனமும் ஓரிரு நொடிகள் அவனிடத்தில் தேங்கியபடியே இருக்க இதெல்லாம் கடந்த ஒரு வாரத்தில் அவனுக்கு பழக்கப்பட்டது தான் என்றதால் அதனைப் பெரிதாக சட்டை செய்யாமல் தனது உடைமைகள் அடங்கிய மேற்கத்திய பெட்டியான ட்ராலியைத் தள்ளியபடி ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் வந்து நின்றவன் ஒரு ஆட்டோவில் ஏறிக்கொண்டான்.

ஊரின் எல்லையில் அமைந்திருந்த “ராக்காயி தேநீர் கடை” அவனின் கண்ணில் பட அங்கேயே ஆட்டோவில் இருந்து இறங்கிக் கொண்டான். கடையை நோக்கி வந்தவன் தனக்கொரு தேநீரை சொல்லும் பொருட்டு வாயைத் திறக்க அதற்குள்,

“எம்மா தேனு.. தமிழை கூப்பிடு” என்று பெரியவர் ஒருவர் சிலரோடு சேர்ந்து கூட்டமாக வந்து அங்கு தேநீர் ஆற்றிக் கொண்டிருந்த பெண்ணான தேன்மொழியிடம் கூற அதில் மிரண்டவள்,

“தமிழக்கா..” என்று அழைத்தாள் பதறியபடி.

வந்த அந்த புதியவனுக்கு ஏதோ ஒரு பிரச்சனை நடக்க போகிறது என்று தோன்ற ஓரமாக அமர்ந்து வேடிக்கைப் பார்க்கலானான். அந்நேரம் கடையில் இருந்த வானொலியில்,

“அடுத்ததாக ஒலிக்க போற பாடல் லப்பர் பந்து திரைப்படத்தில் இருந்து சில்லாஞ்சிருக்கியே எனும் பாடல்” என்றபடி அந்த பாடல் ஒலிக்க ஆரம்பித்திருந்தது.

“இதோ வரேன்ட்டி..” என்றபடி உள்ளே இருந்து குரல் மட்டும் கொடுத்தவள் பாவாடை தாவணி சகிதம் கைகளில் வடை மாவு பிசைந்திருந்த தடத்தோடு அவள் வெளியே வரவும்,

சொல்லாம என் மனச புழிஞ்சிபுட்டியே
உள்ளார ஓடி வந்து ஒரஞ்சிபுட்டியே கண்ணால…
கண்ணால மோதி என் முன்னால போற
பந்தாவா என்ன நீ பந்தாடா வார
என் உசிரெடுத்து இப்போ தாரேன்
தேதி சொல்லேன்டி
சில்லாஞ்சிருக்கியே
என்ன கொல்லுற அரக்கியே

எனும் வரிகள் ஒலிக்க ஏனோ அவளுக்கான வரிகளாகவே அமைந்தது. அதனை அந்த ஆடவன் உணர்ந்தானோ என்னவோ அது அவனுக்கு தான் வெளிச்சம். ஆனால் வந்தவளை மெய்மறந்து பார்த்திருந்தான்.

வெளியே ஊர் பெரியவர்களில் சிலர் நிற்பதைக் கண்டவளுக்கு அவர்கள் எதற்காக வந்திருகிறார்கள் என்று புரிய கடைக்கு வெளியே இருந்த தண்ணீர் தொட்டியில் கையைக் கழுவியவள் தன் முந்தானையில் துடைத்தபடி சாவகாசமாக வந்து நின்றாள் அவர்கள் முன்.

“சொல்லுங்க பெரியவரே” என்றிட,

“இங்க பாரு தமிழு. இத்தனை வருஷமா இந்த ஊருல இருக்க. நம்ம பழக்கவழக்கம் எல்லாம் உனக்கு தெரியும் தானே. இப்படி அந்த புள்ளைய வேலைக்கு வச்சுருக்குறது உனக்கே நல்லா இருக்கா?” என்று கேட்க தேன்மொழிக்கு கண்கள் குளமாகியது.

அங்கு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தன் ஏழு மாத குழந்தையைத் தூக்கிக்கொண்டு கண்களைத் துடைத்தபடி விசும்பலோடு உள்ளே சென்றுவிட்டாள். அதனைக் கண்டவள்,

“ஏட்டி தேனு! எங்க ஓடுற? முதல்ல எதிர்த்து நின்னு பேச கத்துக்கோட்டி” என்று கூறியவளின் பேச்சு காற்றோடு கலந்திருந்தது. அந்த ஆத்திரத்தில்,

“எனக்கு நல்லா இருக்கே.. அதனால தான் அவளை வேலைக்கே வச்சேன்.” என்று கண்களில் நிமிர்வோடும் ஒருவித கேலியோடும் கூற, அதில் அந்த பெரியவரின் முகம் கன்றியது.

“இந்த எகத்தாளமா பேசுறத எல்லாம் வெளிய வச்சுக்க. ஒழுங்கா கேட்கிறதுக்கு பதில் சொல்லு”

“இப்போ என்ன பதில் வேணும் உங்க எல்லாருக்கும்.” என்று சத்தமாக கேட்க மற்றொருவரோ,

“எந்த ஒரு நல்ல காரியமா இருந்தாலும் ஊர் எல்லையைத் தாண்டி தான் போறோம். கல்யாணம் காட்சின்னு வச்சா கூட, உன் கடைல வந்து டீ குடிச்சுட்டு தான போறோம். அப்படி இருக்க இப்படி அமங்கலியை வேலைக்கு வச்சு அவ முகத்துல முழிச்சுட்டு எப்படி மத்த காரியத்தை செய்றது? இது உன் வியாபாரத்தையும் தானே பாதிக்குது.” என்று நாசுக்காக பேசுகிறேன் என்ற பேர்வழி அவளின் நாடி நரம்பைப் புடைக்க வைத்திருந்தார்.

“உங்க பொஞ்சாதி செத்து ரெண்டு வருஷம் ஆகுதே. நீங்க ஊருக்குள்ள திரியாம தான் இருக்கீங்களா? இல்ல கல்யாணம் காட்சிக்கு எல்லாம் போகாம தான் இருக்கீங்களா?” என்று ஒரே போடாக போட்டு விலாச அதில் கூட்டத்தில் சலசலப்பு.

“விதண்டாவாதமா பேசிக்கிட்டு திரியுற புள்ள நீ” என்று மற்றுமொருவர் கூற,

“அவ சரியா தான் பேசிட்டு இருக்கா. விதண்டாவாதமா பேசுறது நீங்க தான்” என்றபடி அங்கு வந்து சேர்ந்தான் நேத்ரன். அவளின் ஆருயிர் தோழன்.

“தம்பி நாங்க அவகிட்ட தான் பேசிட்டு இருக்கோம். நீங்க இதுல தலையிடாதீங்க.”

“கேட்க ஆள் இல்லைங்குற தைரியத்துல தான அவளை இப்படி கேள்விக் கேட்டுட்டு இருக்கீங்க எல்லாரும். நான் இருக்கேன் அவளுக்கு.” என்றிட வந்த அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு,

“பேசி பிரயோஜனம் இல்லை. இதெல்லாம் எங்க கொண்டு போய் முடிய போகுதோ?” என்று கூறியபடி சலசலத்த கூட்டம் கலைந்திருந்தது.

‘என்ன இவனுங்க? நிஜமாவே நமக்கு பயந்து தான் போயிட்டானுங்களா? பரவாயில்லையே இந்த ஊருக்குள்ள நமக்குன்னு பவர் இருக்கு போலயே. நமக்கு தான் புரியலயோ?’ என்று நினைத்தவன் தன்னைப் பெரிய வீரனாக நினைத்தபடி மீசையை முறுக்கிவிட கெக்கபெக்கவென சத்தம் கேட்டது.

‘இதென்ன நான்சிங்கா ஒரு சத்தம்’ என்று நினைத்தபடி தன் பக்கவாட்டில் திரும்ப தமிழ் தான் சிரித்துக் கொண்டிருந்தாள்.

“ஹே மென்ட்டல்.. எதுக்குட்டி இப்போ சிரிக்குற நீயு?” என்று புருவம் சுருக்கி நேத்ரன் கேட்க,

“டேய் நேத்து.. உன்னையெல்லாம் ஒரு ஆளா மதிச்சு எதிர்த்து பேசாம போறாங்களே. அதை நினைச்சு சிரிச்சேன்டே” என்றவள் மீண்டும் சிரிக்க,

“பார்த்த தானே ஐயாவோட பவரை” என்றவன் காலரைத் தூக்கிவிட,

“ஆமா ஆமா ஐயாவோட பவர் தான். ஆனா இதெல்லாம் ருத்ரமூர்த்தி ஐயாவோட பவர்” என்றிட,

“சரி நீ மூடு. என் தாத்தாவோட பவர்ல எனக்கும் பங்கு இருக்குன்னு நினைச்சுக்குறேன்.” என்றவன் மீண்டும் வீரன் போன்று நிற்க அவன் நின்ற கோலத்தில் மீண்டும் சிரிப்பு தான் வந்தது அவளுக்கு.

“ஐம் யுவர் பெஸ்டு பிரண்ட்” என்றவன் பாவமாக முழிக்க,

“இருந்துட்டு போ”

“உன் உயிர் நண்பன் நேத்து சொல்றேன். சிரிக்காதட்டி ப்ளீஸ்” என்றிட மேலும் மேலும் சிரித்தவள்,

“நேத்து சொல்றியா… நாளைக்கு வேணா வந்து சொல்லுடே” என்றவள் அவள் அவனை அழைக்கும் பிரத்யேக அழைப்பைக் கிண்டல் செய்ய,

“ஏட்டி கோட்டிக்காரி. அது நீ வச்ச பேரு தான்” என்றவன் உதட்டை சுளித்தான். சிரித்தபடி எதேச்சையாக திரும்பியவளின் கண்ணில் அப்பொழுது தான் பட்டான் அந்த புதியவன். தமிழை தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏலே யாரு இது? ஊருக்கும் ஆளுக்கும் சம்மந்தம் இல்லாம” என்றபடி அவள் நேத்ரன் காதைக் கடித்தாள். அவனோ,

“தெரியலையேட்டி. ஊர சுத்தி பார்க்க வந்த வெளிநாட்டுக்காரரா இருப்பாரோ?”

“இருக்குமோ?”

“இரு நான் போய் விசாரிக்கிறேன்” என்று இரண்டடி முன்னே எடுத்து வைத்தவன்,

“இங்கிலீஷ் நல்லா பேச தெரியணுமே பக்கி அதுக்கு” என்று அவள் கூறவும் எடுத்து வைத்த அடிகளை பின்னே வைத்து,

“ஆமா தான். அப்போ நீயே போய் பேசு. நான் உனக்கு துணைக்கு வந்து நிக்கிறேன்” என்க,

“நீ? எனக்கு? அதுவும் துணைக்கு?” என்று நிறுத்தி நிறுத்தி அவள் கேட்க, அவனோ அவள் கேட்க கேட்க ஆம் என்பது போல கண்களை மூடி தலையசைத்துக் கொண்டே இருக்க,

“த்தூ.. மூடிட்டு வா” என்றவள் அந்த புதியவனை நோக்கி நடந்தாள். செல்லும் வழியிலேயே அவனை கண்களால் அளவெடுத்தாள்.

வாட்டசாட்டமான தேகம், இளஞ்சிவப்பு நிறம், பிரவுன் நிற கேசம், விரிந்த நெற்றி, கவர்ந்திழுக்கும் பழுப்பு நிற கண்கள், கூர்நாசி, ட்ரிம் செய்யப்பட்ட தாடி, சிவந்த உதடுகள் என அவனது அடையாளங்கள் அனைத்தும் அவன் வெளிநாட்டை சேர்ந்தவன் என்று கூறாமல் கூறியது.

“ஹலோ பாஸ். ஹூ ஆர் யூ?” என்றவள் அவன் முன் வந்து நிற்க அவள் வந்ததும் அதுவரை அமர்ந்திருந்தவன் எழுந்து நிற்க, அவளோ அவனை அண்ணாந்து பார்க்க வேண்டிய நிலை தான். அவனின் நெஞ்சுவரை தான் இருந்தாள் அவள். இரண்டடி பின்னே வந்த பின்பு தான் அவன் முகத்தைக் காண முடிந்தது அவளுக்கு. அவளின் செயலைக் கண்ட நேத்ரன் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்கலானான். சிரித்தவனின் காலில் ஒரு மிதி மிதித்தவள் மீண்டும் அந்த புதியவனை பதில் வேண்டி நோக்க அவனோ,

“யாஷ்” என்றான் தன் வசீகர குரலில். பெயரைக் கேட்டு புருவத்தை உயர்த்தியவள்,

“ஓஹோ! பார் வாட் பர்ப்போஸ், ஆர் யூ ஹியர்?” என்று கேட்டவளை புருவம் விரித்து அவன் பார்க்க அதனைப் புரிந்துக் கொண்டவள்,

“யூ டோன்ட் க்னோ தமிழ், ரைட்?” என்று அவள் கேட்க அவனோ அவளையே சுவாரசியமாய் பார்த்தவன் அவள் கேட்டதற்கு ஆம் என்றான்.

“டோன்ட் வொர்ரி. யூ க்னோ ஒன் திங்? ஐம் அ பிஏ டிகிரி ஹோல்டர் இன் இங்க்லீஷ். யூ கேன் ஆஸ்க் எனி ஹெல்ப் ப்ரம் மீ.” என்றிட அதில் சிரித்தவன் சரியென்பது போல கண்களை மூடி திறந்தான். அவளோ நேத்ரனிடம்,

“என்னடா இவரு எதைக் கேட்டாலும் வாயை திறக்கம பதில் சொல்லுறாரு. ஒருவேளை என் அளவுக்கு அவருக்கு இங்க்லீஷ் அறிவு இல்லையோ?” என்று கேட்க அதனைக் கேட்ட நேத்ரன்,

“ஏட்டி இது உனக்கே ஓவரா தெரியலையா?” என்றிட அவளோ அவனிடமே அதனைக் கேட்டுவிட்டாள்.

“வொய் ஆர் யூ நாட் ஒப்பனிங் யுவர் மௌத்? ஆர் யூ ஷுயர் தட் யூ க்னோ இங்க்லீஷ்?” என்று கேட்க அதில் அவளை ஏறயிறங்க பார்த்தவன்,

“ஆக்சுவலி..” என்று ஆரம்பித்து அதன் பிறகு ஆங்கில புலமையில் ராக்கெட் வேகத்தில் பேச அந்த அக்சுவலியை தவிர்த்து அவளுக்கு எதுவுமே புரியவில்லை. அவள் முழிக்க, நேத்ரன் சிரிக்க, யாஷோ உதடுமடித்து அளவாய் சிரித்தபடி அவளை பார்த்தான். சிரித்ததோடு நில்லாமல்,

“பிஏ டிகிரி ஹோல்டர் இன் இங்கிலீஷ்?” என்று சந்தேகமாய் கேட்டு வேறு அவளை அசிங்கப்படுத்த அதில் அசடு வழிய பார்த்தவள்,

“ஐ கேன் அன்டர்ஸ்டேன்ட், ஒன்லி இப் யூ ஸ்பீக் ஸ்லோலி” என்றிட அவனோ,

“இன்ட்ரெஸ்டிங் கேர்ள்” என்று முனுமுனுத்தவன்,

“பை தி வே, வாட்ஸ் யுவர் ஸ்வீட் நேம்?” என்று கேட்க நேத்ரனோ,

“தமிழ்ஜோதி” என்று இழுத்தபடி கூற அவனை கைமுஷ்டியால் குத்தியவள்,

“ஐம் தமிழ்” என்றிட நேத்ரனோ,

“ஹாய் ப்ரோ ஐம் நேத்ரன்” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“ஓ நைஸ் டு மீட் யூ” என்றவன் நேத்ரனை அணைத்து விடுவித்தவன் அடுத்து தமிழையும் அணைத்து விட்டான். அதற்குள் உள்ளே குழந்தை அழுகும் குரல் கேட்டு வேகமாக நேத்ரன் கடையினுள் சென்றுவிட நேத்ரன் அதனை கவனிக்கவில்லை. இதனை எதிர்பர்க்காதவள் ஒருகணம் ஸ்தம்பித்து நிற்க, நொடியில் தன்னை மீட்டவள் சுற்றி யாரேனும் கவனித்தார்களா என்று நோட்டம் விட நல்லவேளை யாருமில்லை. அவள் செயலில் புரியாமல் முழித்தவன்,

“வாட்?” என்றிட அவளோ,

“திஸ் இஸ் நாட் அவர் கல்ச்சர்” என்று முறைத்தபடி கூற அவனோ,

“ஓஹோ.. ஒகே ஒகே” என்றான்.

“கொய்யால.. ஒரு சாரி கேட்டா குறைஞ்சு போயிருவியா?” என்று அவனுக்கு தமிழ் தெரியாது என்ற தைரியத்தில் சத்தமாகவே திட்ட அவன் மீண்டும், “வாட்?” என்று கேட்க அவளோ,

“நத்திங் நத்திங்” என்று வராத சிரிப்பை வரவழைத்துக் கூறினாள். அப்பொழுது அங்கு வந்து நின்றார் நேத்ரனின் தந்தையும் ஊரில் பெரிய தலைக்கட்டுமான மந்திரமூர்த்தி.

“வாங்க வாங்க. வணக்கம் தம்பி. எப்படி இருக்கீங்க?” என்றவர் நலம் விசாரிக்க,

“நான் ரொம்ப நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?” என்று யாஷ் சரளமாக தமிழில் கேட்க, அதனைக் கேட்ட தமிழின் வாய் தானாக பிளந்தது. அவளின் பாவனையை அவனும் கண்டுக் கொண்டான் தான்.

“ஏன் இங்க நிக்குறீங்க? நம்ம வீடு அங்க இருக்கு.” என்றவர் அவனுக்கு முன் செல்ல பிளந்து நின்றிருந்தவளின் வாயை தன் ஆட்காட்டி விரல் கொண்டு அவளின் நாடியைத் தொட்டபடி மூடியவன்,

“யாஷ், எம்.ஏ., தமிழ் லிட்டரேச்சர்” என்றவன் கண்ணடித்து சிரித்தபடி அவளைக் கடந்து சென்றான்.

செல்லும் அவனையே விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளை நேத்ரனின் குரல் தான் நிகழுக்கு அழைத்து வந்தது.

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
21
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்