Loading

அத்தியாயம் 6

 

கண்முன் கிடந்த கத்தியை சிறு அதிர்வுடன் பார்த்த ஜெகதீஷின் முதல் எண்ணம் என்னவோ, ‘இவரு எப்போ எப்படி இந்த கத்தியை கண்டுபிடிச்சாரு?’ என்பது தான்.

 

அவனின் சிந்தனையை தடை செய்வது போல, “ஜெகா, நாம மர்டர் வெப்பனை கண்டுபிடிச்சுட்டோம்னு சாத்விக்குக்கு இப்போ தெரிய வேண்டாம். அவன் வரதுக்குள்ள, இதை எவிடன்ஸா கலெக்ட் பண்ணிக்கோ.” என்று கட்டளைகளை பிறப்பித்தான் பிரகதீஷ்வரன்.

 

தன் பணியை செய்து கொண்டிருந்த ஜெகதீஷோ மனதிற்குள், ‘இதுக்காக தான் காஃபி வேணும்னு அவனை வெளிய அனுப்புனாரா?’ என்று கேட்டுக் கொண்டான்.

 

அடுத்த இரண்டு நிமிடங்களில் கைகளில் இரு காகித கோப்பைகளுடன் உள்ளே நுழைந்தான் சாத்விக்.

 

“சார், நான் போறதுக்கு முன்னாடியே உங்களுக்காக காஃபியை ஃபிளாஸ்க்ல வாங்கி வச்சுருந்தாரு உங்க டிரைவர்.” என்று சாத்விக் கூற, “ஓஹ், ஆமா இது நான் ரெகுலரா காஃபி குடிக்கிற டைம்.” என்று சிரித்தவாறு கூறிய பிரகதீஷ்வரனோ, சாத்விக்கிடமிருந்து அந்த காகித கோப்பைகளை கவனமாக வாங்கிக் கொண்டான்.

 

ஜெகதீஷோ அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல், தன்னிச்சையாக சாத்விக்கிடமிருந்து மற்றொரு கோப்பையை வாங்கிக் கொண்டான்.

 

“நீங்களும் காஃபி குடிங்க சாத்விக். ராஜா உங்களுக்கு ஆஃபர் பண்ண மறந்துட்டானா?” என்று குளம்பியை பருகிக் கொண்டே பிரகதீஷ்வரன் வினவ, “நோ நோ சார், அவரு எனக்கும் கொடுத்தாரு தான். ஆனா, நான் இந்த டைம்ல குடிக்க மாட்டேன்.” என்று மறுத்த சாத்விக், என்னதான் இயல்பாக இருப்பதை போல காட்டிக் கொண்டாலும், அவனின் கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டு தான் இருந்தன.

 

சற்று நேரத்தில், “ஓகே சாத்விக். இங்க செக் பண்ணிட்டோம். க்ளூஸ் எதுவும் கிடைக்கல.” என்று ஏமாற்றமாக கூறியவன், “நீங்க எனக்கு இன்னொரு ஃபேவர் பண்ணனுமே. நாளைக்கு ஜெகா உங்க டான்ஸ் ஸ்டுடியோ மெம்பர்ஸ் எல்லாரையும் டீப்பா ஒரு இன்வெஸ்டிகேஷன் பண்ண வருவான். எல்லாம் ரெக்கார்ட்ஸுக்காக தான். நீங்க தான் உங்க டீமை கான்டேக்ட் பண்ணி இங்க வர வைக்கணும். இந்த ஹெல்ப்பை பண்ணுவீங்களா?” என்று பிரகதீஷ்வரன் கூற, “ஸ்யூர் சார். எனித்திங் ஃபார் ஆரா.” என்ற சாத்விக்கின் குரல் இறுதி வாக்கியத்தில் தேய்ந்து தான் ஒலித்தது.

 

சாத்விக் நினைவுகளில் மூழ்கி இருக்க, பிரகதீஷ்வரன் அவனை கூர்ந்து பார்த்ததையோ, அந்த காகித கோப்பையை குப்பையில் போடாமல், தனியே எடுத்து வைத்துக் கொண்டதையோ கவனிக்க தான் இல்லை.

 

பிரகதீஷ்வரனும் ஜெகதீஷும் வாகனத்தில் ஏறி அங்கிருந்து கிளம்பியதும், சாத்விக் அவசரமாக யாருக்கோ அழைக்க, அதையும் ரியர் வியூ கண்ணாடியின் வழியே பார்க்கத்தான் செய்தான் பிரகதீஷ்வரன்.

 

பின்னர், தன் வாகன ஓட்டுநரிடம் திரும்பி, “வெல் டன் ராஜா.” என்றவன், ஜெகதீஷிடம், “ஜெகா, இந்த பேப்பர் கப்ல என்னோட ஃபிங்கர்பிரிண்ட் தவிர இருக்க இன்னொரு ஃபிங்கர்பிரிண்ட் சாத்விக்கோடது. இதையும் கத்தியையும் லேப்ல கொடுத்து செக் பண்ண சொல்லு.” என்றான் பிரகதீஷ்வரன்.

 

ஜெகதீஷோ ராஜாவை அவன் பாராட்டியபோதே என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்தவனாக, ‘எப்போ, எப்படி இதை பண்ணாரு?’ என்ற யோசனையிலேயே அந்த பயணத்தை தொடர்ந்தான்.

 

*****

 

வல்லபியின் வாகனம் அந்த சிறிய அப்பார்ட்மெண்ட் கட்டிடத்திலிருந்து புழுதியை கிளப்பியவாறு கிளம்பியது.

 

அந்த வாகனம் கக்கும் கரும்புகையை போல தான் வல்லபியும் தன் எரிச்சலை மற்றவர்களிடம் கக்கிக் கொண்டிருந்தாள்.

 

பிரகதீஷ்வரனின் மீதிருந்த கடுப்பு, விசாரணை நடந்த.விதம், கல்லூரியில் எவ்வித துப்பும் கிடைக்காதது போன்ற கடுப்புகளின் பட்டியலில், இப்போது சந்தோஷ் அவன் சொந்த ஊருக்கு சென்றதும் சேர்ந்து கொள்ள, அதன் காரணமாக உண்டான எரிச்சல் தான் அது.

 

“பிரகாஷ், நம்ம கான்ஸ்டேபில்ஸ் ரெண்டு பேரை மஃப்டில, சந்தோஷோட சொந்த ஊருக்கு போக சொல்லுங்க. அங்க சந்தோஷோட ஆக்டிவிட்டீஸை கவனிச்சு உங்களுக்கு ரிப்போர்ட் பண்ண சொல்லுங்க. ஏதாவது உங்களுக்கு தப்பா தெரிஞ்சா மட்டும், அவனை கஸ்டடில எடுத்தா போதும்.” என்று பிரகாஷுக்கான பணிகளை சொல்லிவிட்டு நிமிர, அவளின் அலைபேசியில் செய்தி வந்ததற்கான ஒலி கேட்டது.

 

பிரகதீஷ்வரன் தான், ‘எஸ் கில்லர்’ பற்றி அஷோக்கிடம் வாங்கிய கோப்பில் சில பகுதிகளை மட்டும் புகைப்படம் எடுத்து அனுப்பியிருந்தான்.

 

இப்போது அவளின் கவனம் அதில் பதிய, அதனால் சற்று நிம்மதியடைந்தது என்னவோ பிரகாஷ் தான்!

 

அன்றைய நாள் வல்லபிக்கு அந்த கோப்பிலேயே கழிய, இரவு நேரத்தில் தான் வீட்டிற்கு வந்திருந்தாள்.

 

உணவு மேஜையில் ஏற்கனவே அவளின் தந்தை மகாதேவ் அமர்ந்திருக்க, திகம்பரியோ அவருக்கு பரிமாறிக் கொண்டிருந்தார்.

 

ஏதோ நினைவில் வல்லபியும் அங்கு வந்து அமர, அவளின் பெற்றோர்களோ ஆச்சரியமாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

அவர்களின் ஆச்சரியத்திற்கு காரணம், கடந்த ஒரு வருடமாக தந்தைக்கும் மகளுக்கும் உண்டான பிணக்கினால், வீட்டில் அவர் இருக்கும் இடத்தில் கூட நில்லாமல் ஓடுபவள், இன்று அவரருகிலேயே அமர்ந்ததே ஆகும்.

 

கணவனின் கண்ணசைவில் திகம்பரி மகளிடம், “வல்லபி, என்னாச்சு? எதுக்கு இவ்ளோ குழப்பம்?” என்று வினவ, “ம்ச், காலைல சொன்ன கேஸ் தான். இதுவரை உருப்படியா எந்த க்ளூவும் கிடைக்கல.” என்று வல்லபி சொல்லிக் கொண்டே திரும்ப, அப்போது தான் அங்கு அமர்ந்திருந்த மகாதேவை பார்த்தாள்.

 

சட்டென்று எழுந்தவள் அங்கிருந்து கிளம்ப, “பரி, உன் பொண்ணு கிட்ட ரொம்ப டென்ஷனாக வேண்டாம்னு சொல்லு.” என்று மனைவியிடம் கூறினார் மகாதேவ்.

 

அதைக் கேட்டதும் ஒரு நக்கல் சிரிப்புடன், “என்ன பண்றது மா, என் ஹையர் அஃபிசியல் ‘கெட் மீ சம்திங்’னு சொல்லி சொல்லியே டென்ஷன் பண்றாரு. இதுல, நான் எங்க போறேன், என்ன பண்றேன்னு வேவு பார்க்க ஸ்பை வேற வச்சுருக்காரு.” என்று கூற, திகம்பரியோ கணவனை திரும்பி, ‘என்ன இது?’ என்று பார்த்து வைத்தார்.

 

இருவரின் பார்வை பரிமாற்றங்களில் கவனம் கொள்ளாத வல்லபியோ, “ம்மா, நாளைக்கு ஏர்லி மார்னிங் கேஸ் விஷயமா கோயம்புத்தூர் போறேன்.” என்று அறிவிப்பு போல கூற, மகாதேவிற்கு பிரகதீஷ்வரன் மூலம் இவ்விஷயம் தெரிந்தாலும், வல்லபி செல்வது புது தகவல் தான்.

 

“எது நாலு மணிக்கா? எழுந்துடுவியா டி?” என்று திகம்பரி வினவ, அவரை முறைத்தவள், “அவரோட செல்ல பிள்ளை கிட்ட வந்து பிக்கப் பண்ண சொல்லிடுங்க.” என்று கூறிவிட்டு அறைக்கு சென்று விட்டாள்.

 

திகம்பரி மகாதேவை பார்க்க, அவரோ, “இங்க சண்டை போடுறது பத்தாதுன்னு அங்க போயும் சண்டை போட போறாங்க!” என்று முணுமுணுக்க, “ப்ச், நல்ல வார்த்தையே வராதா?” என்று திட்டினார் திகம்பரி.

 

“நான் என்ன கற்பனையாவா சொல்றேன்? நடக்குறதை தான சொல்றேன். சரி விடு, இந்த கேஸ்னால, ரெண்டு பேரும் சண்டையை விட்டு சமாதானமானா நல்லது தான்!” என்றார் மகாதேவ்.

 

“க்கும், சின்ன வயசுல அடிச்சுக்கிட்டாலும், எக்ஸாம், டிரெயினிங் அப்போலாம் நல்லா தான் பேசிட்டு இருந்தாங்க. திடீர்னு யாரு கண்ணு பட்டுச்சோ, இப்போ திரும்ப சண்டை போட்டுட்டு இருக்காங்க. இவ வேற சாப்பிடாம ரூமுக்கு போயிட்டா!” என்று திகம்பரி புலம்பியபடி, மகளின் அறைக்கு உணவை எடுத்துச் செல்ல, மகாதேவோ இருவருக்குமிடையே ஏற்பட்ட சண்டையின் காரணத்தை நினைத்து பார்த்து பெருமூச்சு விட்டார்.

 

*****

 

அதிகாலை நான்கு மணி…

 

வெள்ளை நிற போலீரோ முன்விளக்கை எரியவிட்டபடி வல்லபியின் வீட்டிற்கு முன்னே நிற்க, அதற்காகவே காத்திருந்ததை போல, உள்ளே ஏறி அமர்ந்தாள் வல்லபி.

 

“பரவாலையே, அதுக்குள்ள எழுந்துட்ட? நான் தான் வந்து தண்ணி தெளிச்சு எழுப்பி விடணும்னுல நினைச்சேன்!” என்று பிரகதீஷ்வரன் கேலி செய்ய, திரும்பி அவனை முறைத்தவள், மீண்டும் தலையை திருப்பிக் கொண்டாள்.

 

அவள் தூக்க கலக்கத்தில் இருப்பதால் தான் பதில் பேசவில்லை என்பது பிரகதீஷ்வரனுக்கும் தெரியும் என்பதால் தான் இந்த கேலி!

 

பால்கனியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மகாதேவிற்கு தலையசைப்பை கொடுத்துவிட்டு, வாகனத்தை விமான நிலையம் நோக்கி செலுத்தினான் பிரகதீஷ்வரன்.

 

******

 

“ஹே, தூங்குமூஞ்சி எந்திரி.” என்று உலுக்கியதும் தான் நிகழ்வுக்கு வந்தாள் வல்லபி.

 

ஆம், அந்த ஒரு மணி நேர விமான பயணம் முழுவதையும் தூக்கத்திலேயே கழித்திருந்தாள் வல்லபி.

 

தன்னிலை வந்ததும் முதலில் அவளுக்கு நினைவு வந்தது என்னவோ, ஆறு பத்து விமானத்திற்கு நான்கு மணிக்கெல்லாம் தன்னை அழைத்து வந்தது தான். அதற்காக விமான நிலையத்தியிலேயே அவனுடன் சண்டை போட்டாயிற்று. இருப்பினும், இப்போதும் முகம் திருப்பிக் கொண்டாள்.

 

“க்கும், ஒரு தேங்க்ஸ் கூட இல்ல. பேசாம ஃப்லைட்லேயே இருக்கட்டும்னு விட்டுட்டு போயிருக்கணும்.” என்று பிரகதீஷ்வரன் முணுமுணுப்பது கேட்டாலும், எதுவும் பேசவில்லை அவள்.

 

கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து வெளியே வர கால் மணி நேரமானது. வெளியே அவர்களுக்கான வாகனம் காத்திருக்க, அவர்களின் அடுத்த பயணம் கோயம்புத்தூர் மத்திய சிறைச்சாலையை நோக்கி இருந்தது.

 

இதோ, ஒரு மணி நேரத்தில் அனைத்து செயல்முறைகளையும் முடித்துவிட்டு, ‘எஸ் கில்லர்’ என்றழைக்கப்படும் விஷ்ணுவர்தனின் முன் அமர்ந்திருந்தனர் இருவரும். அவர்களுடன் அஷோக்கும் இணைந்து கொண்டான்.

 

“’எஸ் கில்லர்’ ரைட்? ஏன் இந்த பேரு?” என்று பிரகதீஷ்வரன் வினவ, விஷ்ணுவோ ஒருமுறை மூவரையும் பார்த்துவிட்டு குனிந்து கொண்டான்.

 

“கேட்குற கேள்விக்கு ஒழுங்கா பதில் சொல்லு.” என்று அஷோக் மிரட்ட, அப்போதும் அதே பார்வை தான் விஷ்ணுவிடம்.

 

அதில், கோபம் இல்லை, பயம் இல்லை, குழப்பம் இல்லை, எவ்வித பாவமும் இல்லை! சற்றே வெறித்த பார்வை மட்டுமே!

 

“இங்க பாரு விஷ்ணு, ஒவ்வொரு சீரியல் கில்லருக்கும் பாஸ்ட்ல விரும்பத்தகாத நிகழ்வுகள் இருக்கும். அதனால பாதிக்கப்பட்டவங்க தான், இந்த மாதிரி சைக்கோத்தனமான சீரியல் கில்லிங்ல ஈடுபடுறாங்க. ஆனா, உன்னோட பாஸ்ட் என்னன்னு நீ இதுவரை வாயவே திறக்கல. ஏன்?” என்றான் பிரகதீஷ்வரன்.

 

அதைக் கேட்ட விஷ்ணு என்ன நினைத்தானோ, மென்சிரிப்புடன், “உங்களுக்கு என்கிட்ட என்ன பதில் வேணுமோ அதுக்கான கேள்வி மட்டும் கேளுங்க சார். எதுக்கு தேவையில்லாம என் பாஸ்ட் பத்தி குடைஞ்சுட்டு இருக்கீங்க?” என்றான்.

 

அவனின் பதில் கேள்வியில் பிரகதீஷ்வரன் புருவம் உயர்ந்தாலும், “எங்களுக்கு உன்கிட்ட என்ன தேவை இருக்கப் போகுது?” என்று வினவினான்.

 

“அதை நீங்க தான் சொல்லணும். அப்படி தேவையில்லாம, எதுக்கு ஒரு ஆயுள் தண்டனை கைதியை பார்க்க வரனும்?” என்று வினவினான் விஷ்ணு.

 

‘ஹீ இஸ் இண்டலிஜெண்ட். மென்டல் ஹெல்த் சரியில்லனு தண்டனைல இருந்து தப்பிச்சுருக்கலாம். ஆனா, அதை பண்ணல ஏன்?’ என்று உள்ளுக்குள் பல கேள்விகள் எழுந்தாலும், அதை கேட்கவில்லை பிரகதீஷ்வரன்.

 

அதே சமயம் வல்லபியோ, “ஹீ இஸ் டேஞ்சரஸ். ஆனா, அவன் கேட்குறதும் சரிதான? இந்த அவசரத்துக்கு பொறந்தவன், நேரா விஷயத்துக்கு வராம, எதுக்கு சுத்தி வளைச்சுட்டு இருக்கான்?’ என்று நினைத்தாள்.

 

“ஓஹ், இவ்ளோ தெரிஞ்ச உனக்கு, நாங்க எதுக்கு உன்னை தேடி வந்துருக்கோம்னு தெரிஞ்சுருக்குமே.” என்று பிரகதீஷ்வரன் கூற, “ஹ்ம்ம், பேப்பர் பார்த்தேன். எவனோ என்னை மாதிரியே கொலை செஞ்சுருக்கானாமே.” என்ற விஷ்ணுவின் குரலில் இருந்தது கண்டிப்பாக நக்கலே தான்.

 

பிரகதீஷ்வரன் எதையும் சொல்லாமல், அவன் முன்பு சில புகைப்படங்களை எடுத்து போட, விஷ்ணுவும் அவற்றை எல்லாம் பார்த்தான்.

 

“பரவாலையே, என்னை மாதிரியே எல்லாம் பண்ணியிருக்கான். ஆனா, அந்த காடுசியஸ் சிம்பல்ல மட்டும் சொதப்பிட்டான்.” என்று பிரகதீஷ்வரன் கணக்கிட்டதை அப்படியே கூற, அவனை தவிர மற்ற இருவருக்குமே அதிர்ச்சி தான்.

 

“அப்போ அது டாக்டருக்கான காடுசியஸ் சிம்பிலா?” என்று வல்லபி திகைப்புடன் வினவ, “ஆமா, அதுல இருந்து இன்ஸ்பயரான இந்த எஸ் கில்லரோட சிக்னேச்சர். ‘தி சிம்பல் ஆஃப் சேவியர்’! எஸ் ஃபார் சேவியர்!” என்று கண்கள் மின்ன பேசினான் விஷ்ணு. நிச்சயமாக அவன் வெளிப்படுத்தியது பெருமை உணர்வே ஆகும்.

 

“ஓஹ், அப்போ மக்களை காப்பாத்த தான் அவங்களை கொலை பண்ணியா?” என்று புரிந்து கொண்டதை போல பிரகதீஷ்வரன் வினவ, அதுவரை அவ்விஷயத்தை பற்றி வாய் திறக்காமல் இருந்த விஷ்ணு, இப்போது ஏதோ ஒரு உணர்வில் பேசிவிட்டதால் சற்று அதிர்ந்து தான் போனான்.

 

பின் சில நிமிடங்கள் கழித்து, “ஆமா, உயிரோட இருந்து பொய், களவு, சூது, கொலை, கற்பழிப்புன்னு பஞ்சமா பாவங்கள் பண்ணி அவங்களோட ஆன்மாக்களை சிதைக்கிறதுல இருந்து காப்பாத்த தான் கொன்னேன்.” என்று நெஞ்சை நிமிர்த்தி கூறினான் விஷ்ணு.

 

‘இது என்ன முட்டாள்தனம்?’ என்று எண்ணிய வல்லபியோ, “ஓஹ், அப்போ நீ மட்டும் என்ன புண்ணிய காரியம் பண்ணிருக்கியா? நீயும் கொலை தான செஞ்சுருக்க?” என்று சூடாக கேட்டாள்.

 

அவளை நோக்கி புன்னகைத்தவன், “ஆமா, நானும் பாவம் தான் செஞ்சுருக்கேன். அதுக்கான, தண்டனை என்னை தேடி வரப்போ ஏத்துக்கிட்டேனே. தண்டனை கிடைக்கும்னு தெரிஞ்சும் மத்தவங்களுக்கு உதவி செஞ்சது எனக்கு பெருமை தான்!” என்றான்.

 

அதைக் கேட்டதும், விஷ்ணுவுக்கு மனதளவில் நிச்சயமாக பிரச்சனை இருக்கிறது என்பது அங்கிருந்த மூவருக்கும் புரிந்தது.

 

‘நான் தான் கடவுள்’ என்றும், ‘என்னை எல்லாரும் பூஜிக்க வேண்டும். இல்லை என்றால், உங்களை பாவம் பீடிக்கும்.’ என்றும் மக்களிடையே பரவி வரும் பைத்தியக்காரத்தனங்களுள் ஒன்று தான் இந்த மனநிலை.

 

தன்னை தவிர யாரும் இவ்வுலகில் நல்லவர்கள் இல்லை என்ற ஒருவித சுயநல எண்ணத்தின் வெளிப்பாடு இது.

 

முன்னரே கண்டுபிடித்து சரியான சிகிச்சை எடுத்திருந்தால், அந்த இருபதுக்கும் மேற்பட்ட கொலைகளை தடுத்திருக்கலாமோ என்னவோ!

 

விஷ்ணு கூறியதைக் கேட்ட வல்லபியோ, “ரிடிகுலஸ்.” என்று வெளியே சென்றுவிட, அதை ஒரு பெருமூச்சுடன் பார்த்த பிரகதீஷ்வரனோ மீண்டும் விசாரணையில் ஈடுபட்டான்.

 

“நான் கேள்விப்பட்டது வரை சீரியல் கில்லர்ஸ் அவங்க செஞ்ச ஒவ்வொரு கொலையையும் ரசிப்பாங்களாமே. அப்படியா?” என்று வினவினான் பிரகதீஷ்வரன்.

 

“கொலையை இல்ல, கொலை செஞ்ச விதத்தை ரசிப்போம். ஒரு ஓவியன் எப்படி தான் வரைஞ்ச ஓவியத்தை, அது வெளிப்படுத்துற கலைநயத்துக்காக ரசிப்பானோ, நாங்களும் அப்படி தான் ரசிப்போம். அந்த கொலை செஞ்ச ஆயுதம், ஓவியனோட தூரிகை போல. எப்பவும் அதை எங்களோட தான் வச்சுருப்போம். ஒவ்வொரு கொலையும் எங்க பேரை கொண்டு அங்கீகரிக்கப்படனும்னு தான் எங்களுக்கான சிம்பலை விட்டுட்டு போவோம். இன்னும் சிலர், அவங்க தனிப்பட்ட கலெக்ஷன்ல அந்த விக்டிமுக்கு சொந்தமான பொருளை வைக்க எடுத்துட்டு போவாங்க.” என்று தொடர் கொலையாளிகளுக்கான இலக்கணங்களை எடுத்துரைக்க, அவற்றை எல்லாம் உன்னிப்பாக கவனித்தான் பிரகதீஷ்வரன்.

 

தனக்கு தேவையான தகவல்கள் இதிலேயே கிடைத்துவிட, அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானான் பிரகதீஷ்வரன். தன் அலைபேசியில் அதுவரை பதிவு செய்ததை சரி பார்த்து சேமித்துவிட்டு நிமிர, “சார், எனக்கு என்னமோ, இது சீரியல் கில்லிங் மாதிரியும் தெரியல, வெல் பிளான்ட் கொலை மாதிரியும் தெரியல. திட்டமிட்டதை சொதப்புன கொலை மாதிரி தான் தெரியுது.” என்று விஷ்ணு கூற, “ஐ க்னோ.” என்று கூறிவிட்டு வெளியேறினான் பிரகதீஷ்வரன்.

 

வெளியே வந்ததும், “டேய், என்னடா நடக்குது உள்ள? அவன் என்னவோ ப்ராஃபெட் மாதிரி பேசுறான். நீ அவன்கிட்ட இன்டர்வியூ எடுக்குற மாதிரி கேள்வி கேட்குற.” என்றான் அஷோக்.

 

“ஹ்ம்ம், சீரியல் கில்லர் பத்தி புக் எழுதப் போறேன். அதான் டீடெயில்ஸ் கலெக்ட் பண்றேன்.” என்று நக்கலாக கூறிவிட்டு நடக்க, அங்கு நின்றிருந்தாள் வல்லபி.

 

அவளைக் கண்டதும் பிரகதீஷ்வரன் முறைக்க, அவளோ அதை பொருட்படுத்தவே இல்லை.

 

“ஒரு ஏ.சி.பி இப்படி தான் இன்வெஸ்டிகேஷன்ல பாதில எழுந்து போறதா?” என்று அவன் பல்லைக் கடிக்க, “பிரகதீஷ்வரன்ங்கிற, தி கிரேட் ஏ.சி.பி, இன்வெஸ்டிகேட் பண்றது பத்தாதா? நானும் இருக்கணுமா என்ன?” என்று கிண்டலாக பதில் கூறினாள் அவள்.

 

“ஷப்பா, உங்க சண்டையை அப்பறம் போடுங்க. வாங்க சாப்பிட போவோம்.” என்று சண்டையை தற்காலிகமாக தடுத்து, அவர்களை இழுத்துக் கொண்டு போனான் அஷோக்.

 

உணவு உண்ணும் வேளையிலேயே, பிரகதீஷ்வரன் அலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்ததை செவிப்பொறி உதவியுடன் கேட்டாள் வல்லபி.

 

அவளுக்கும் முதலில் அஷோக்குக்கு ஏற்பட்ட அதே சந்தேகம் தான் ஏற்பட்டது. ஆனால், மீண்டும் கேட்டபோது தான் அது விளங்கியது.

 

“சோ, இது சீரியல் கில்லிங் இல்ல. ஏதோ முன்பகை காரணமா தான் இந்த ரெண்டு கொலைகளும் நடந்துருக்கு, அப்படி தான?” என்று எதையோ கண்டுபிடித்த உற்சாகத்துடன் வல்லபி கேட்க, “பரவாலையே, தூக்கம் முழுசா போயிடுச்சு போல. யோசிக்கவெல்லாம் செய்ற.” என்றான் அப்போதும் கேலிக்குரலில்.

 

அவனை முறைத்தவளின் அலைபேசி ஒலிக்க, அவளின் கவனம் அதில் திரும்பியது. அழைத்தது என்னவோ பிரகாஷ் தான்.

 

“மேம்.” என்றவனின் குரலே பரபரப்பாக இருக்க, கடிகாரத்தில் மணியை பார்த்துக் கொண்டே, “என்ன பிரகாஷ், டான்ஸ் ஸ்டுடியோக்கு அதுக்குள்ள போயாச்சா? எனி க்ளூஸ்?” என்று வினவினாள்.

 

“ஸ்டுடியோக்கு இன்னும் போகல மேம். பட், வீ ஹேவ் சம்திங். மகதியோட சோசியல் அக்கவுண்ட்ஸ் ஃபுல்லா செக் பண்ணப்போ, சில டெலீடட் மெசேஜஸ் ரெக்கவர் பண்ணோம். அந்த மெசேஜஸ், ஆராதியா அனுப்புனது தான். அதை எல்லாம் பார்த்தா, அவங்க சூசைட் பண்ற மூட்ல இருந்துருக்காங்கன்னு நினைக்க தோணுது.” என்றான் வேகவேகமாக.

 

“வாட்? சூசைட்டா?” என்று அதிர்வுடன் கேட்ட வல்லபியோ, “குட் ஃபைண்ட் பிரகாஷ். டிக் டீப்பர். நாங்க சீக்கிரம் வரோம்.” என்று சொல்லிக் கொண்டே பிரகதீஷ்வரனை பார்க்க, அவனுக்கும் ஜெகதீஷிடமிருந்து தகவல் வந்திருக்கும் போல, அவளை பார்த்து தலையசைக்க, இருவரும் அடுத்தக்கட்ட விசாரணைக்காக கிளம்பினர்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்