Loading

அத்தியாயம் 5

 

கலந்துரையாடல் அறையில் அமர்ந்திருந்தனர் அந்த நால்வரும். அவர்களில் பிரகதீஷ்வரனும் வல்லபியும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, அவர்களை காலில் விழாத குறையாக அழைத்து வந்த ஜெகதீஷும் பிரகாஷும், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர்.

 

ஜெகதீஷ் கண்ணைக் காட்ட, பிரகாஷ் செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

 

“சார், மகதியோட சோசியல் மீடியா அக்கவுண்ட்ஸ், லேப்டாப் எல்லாம் செக் பண்ணப்போ, அவங்களும் ஆராதியாவும் ஃபிரெண்ட்ஸ்னு தெரிய வந்துருக்கு. அவங்க ரெண்டு பேரோட ஃபோட்டோஸ் அவங்க லேப்டாப்ல தனி ஃபோல்டர்ல சேவ் பண்ணிருக்காங்க. அப்பறம் அந்த “மாடர்ன் டான்ஸ் ஸ்டுடியோ”வோட அஃபிசியல் பேஜ்ஜையும் ஃபாலோ பண்ணிருக்காங்க. இது ஆராதியா அவங்க ஃபிரெண்டுங்கிறதாலயா, இல்ல அங்க இருக்க வேற யாரோட பழக்கத்துனாலயான்னு இனி தான் விசாரிக்கணும்.” என்று கூறினான் பிரகாஷ்.

 

அவன் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்த மற்ற இருவரும், வல்லபியிடமிருந்து அழைப்பு வந்தபோதே, இதை யூகித்திருந்தனர்.

 

“குட் ஜாப் பிரகாஷ்.” என்று பிரகதீஷ்வரன் பிரகாஷை பாராட்ட, அவனோ, ‘ஐயையோ, இந்த மனுஷன் திரும்ப திரும்ப கோர்த்து விடுறாரே!’ என்று மனதிற்குள் அலறியவன், வல்லபியை பார்க்க, அவளின் மனம் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்ததை முகம் கண்ணாடியாக காட்டியது.

 

அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் பிரகாஷ் அமைதியாக இருக்க, பிரகதீஷ்வரனோ அவனிடமிருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்காதவன் போல பேச ஆரம்பித்தான்.

 

“நான் கெஸ் பண்ண மாதிரி, இந்த ரெண்டு கொலைகளுக்கும் எஸ் கில்லருக்கும் சம்பந்தம் இருக்கு. அதைப் பத்தி அந்த கில்லர் கிட்டயே நேர்ல விசாரிச்சா, இன்னும் நிறைய டீடெயில்ஸ் கிடைக்கலாம். சோ, நானும் ஜெகதீஷும் நாளைக்கு கோயம்புத்தூர் போறோம்.” என்றான் பிரகதீஷ்வரன்.

 

அதுவரை அமைதியாக இருந்த வல்லபியோ, “நானும் வரேன்.” என்று கூற, மற்ற மூவரும் அவளை தான் பார்த்திருந்தனர்.

 

வல்லபிக்கோ வழக்கை விசாரிக்கும் ஆர்வத்தை விட, எப்படி பிரகதீஷ்வரன் தன் விசாரணைக்கிடையே வந்தானோ, அதே போல அவளும் அவன் விசாரணையில் மூக்கை நுழைக்க வேண்டும் என்ற போட்டி மனப்பான்மையே அதிகமாக இருந்தது.

 

அதை சரியாக புரிந்து கொண்ட பிரகதீஷ்வரனோ இருபக்கமும் தலையை ஆட்டியபடி, “ஓகே ஃபைன், நாளைக்கு ஏர்லி மார்னிங் நாலு மணிக்கு கிளம்பனும்.” என்று அவளை பார்த்துக் கொண்டே கூற, அவன் கூறியதில் சிறிது அதிர்ந்தாலும், அவள் முடிவிலிருந்து பின்வாங்குவதாக இல்லை.

 

அங்கிருந்து கிளம்பும்போது அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில், “மார்னிங் ரெடியா இரு தூங்குமூஞ்சி!” என்று கூறிவிட்டு செல்ல, வெளிப்படையாக திட்ட முடியாத கடுப்பில் கோபத்தை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள்.

 

அவளையே பார்த்துக் கொண்டிருந்த பிரகாஷிடம், “என் மூஞ்சிலயா இன்வெஸ்டிகேஷன் பண்ண போறீங்க? மகதியோட காலேஜ் ஃபிரெண்ட்ஸை விசாரிக்கணும்னு சொன்னேன்ல. அதுக்கு ஏற்பாடு பண்ணியாச்சா?” என்று வினவ, அதில் பதறிய பிரகாஷோ, “காலேஜ்ல பேசிட்டேன் மேம். இன்னைக்கு ஒர்கிங் டேனால, நாம டேரக்ட்டா போய் விசாரிக்கலாம்.” என்றான்.

 

“ம்ம்ம், கிளம்பலாம்.” என்ற வல்லபி, தன் விசாரணையை துவங்க சென்றாள்.

 

*****

 

வாகனத்தில் சென்று கொண்டிருந்த பிரகதீஷ்வரனோ ஜெகதீஷிடம், “நாளைக்கு நானும் உன் மேடமும் போறோம் ஜெகா. நீயும் பிரகாஷும் அந்த டான்ஸ் ஸ்டுடியோல இருக்க எல்லாரையும் விசாரிங்க.” என்று கூற, ‘நல்லவேளை, அவங்க சண்டைக்குள்ள என்னை இழுக்கல.’ என்று ஒருபக்கம் நினைத்தாலும், ‘இப்போ எதுக்கு, என்னை கழட்டி விடுறாரு?’ என்றும் யோசிக்க தூண்டியது ஜெகதீஷிற்கு.

 

அவனிடமிருந்து எந்த பதிலும் வராமல் போனதால், “உன் மைண்டுக்குள்ள என்ன யோசிக்கிறன்னு தெரியுது மேன். இது மட்டும் உன் மேடமுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு யோசிச்சுக்கோ.” என்று பிரகதீஷ்வரன் நக்கலாக கூற, அதில் ஜெகதீஷ் தான் அதிர்ந்து போனான்.

 

அவனின் வாயை அடைத்த திருப்தியுடன் வாகன ஓட்டுனரிடம், “ராஜா, என்னை வீட்டுல இறக்கி விட்டு, இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு வந்து பிக்கப் பண்ணிக்கோ.” என்றவன், “ஜெகா, நீயும் ரெஸ்ட் எடுத்துட்டு வா. டான்ஸ் ஸ்டுடியோக்கு ஒரு விசிட் போவோம்.” என்றபடி, அவன் வீட்டில் இறங்கினான்.

 

அவன் மற்ற இருவருக்கும் தலையசைத்து வீட்டிற்குள் செல்லும்போதே அலைபேசி ஒலியெழுப்ப, அதில் தெரிந்த பெயரில் அவன் நடை அங்கேயே தேய்ந்தது.

 

அழைப்பை ஏற்றதும், “எஸ் சார்.” என்று பிரகதீஷ்வரன் விறைப்பாக கூற, “இப்போ உன் சார் இல்ல பிரகா, மாமாவா தான் பேசுறேன்.” என்றது மகாதேவே தான்.

 

“ஹ்ம்ம், சரி சொல்லுங்க மாமா, என்ன விஷயம்?” என்று அவனும் கேட்க, “என்ன தான் நடக்குது உங்க ரெண்டு பேருக்குள்ள? அந்த சண்டையை இன்னுமா பிடிச்சுட்டு தொங்கிட்டு இருக்கீங்க? அதுவும், இன்வெஸ்டிகேஷன் போயிட்டு இருக்கும்போதே சண்டை போடனுமா?” என்று வினவினார் அவர்.

 

“உங்க ஸ்பை உங்களுக்கு ரொம்ப விசுவாசமா இருக்கான் போல.” என்றவனோ, ஒரு பெருமூச்சுடன், நடந்ததை கூறி, “அப்பவும் சரி, இப்பவும் சரி, அவகிட்ட நான் சொல்றதெல்லாம், கேஸ்ல சென்டிமென்ட்டா அட்டாச் ஆகாதன்னு தான். ஆனா, எங்க கேட்குறா உங்க பொண்ணு?” என்றவன், இத்தனை விளக்கம் தர வேண்டியதாக இருக்கிறதே என்று புருவத்தை நீவிக் கொண்டான்.

 

“அவ தான் என் பேச்சை கேட்க மாட்டான்னு, உன்னை தனியா கூப்பிட்டு சொன்னா, நீயும் என் பேச்சை மதிக்க மாட்டிங்குற!” என்றவரோ, “நீங்க இப்படி சண்டை போட்டு கேஸ்ல கோட்டை விட்டா, ரெண்டு பேர் மேலயும் ஆக்ஷன் தான் எடுக்க வேண்டியதா இருக்கும்.” என்று கூற, “மாமா…” என்று ஏதோ கூற வந்தவனை, “இப்போ உன் ஹையர் ஆஃபிசர் தான்!” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தார்.

 

“க்கும், பொண்ணு கிட்ட பேச முடியலை, என்னை போட்டு படுத்திட்டு இருக்காரு. இவரை மாதிரி தான, இவரோட பொண்ணும் இருக்கும்!” என்று முணுமுணுத்தபடி வீட்டிற்குள் நுழைய முற்பட, அங்கு அவனின் அன்னையோ தந்தையை விரட்டிக் கொண்டிருந்தார்.

 

“உங்க பையன், கொஞ்சமாச்சும் என்னை மதிக்கிறானா? ஒரு கல்யாணத்தை பண்ணி, லைஃபை ஜாலியா என்ஜாய் பண்ணாம, எப்போ பார்த்தாலும் கேஸ் கேஸ்னு சுத்திட்டு இருக்கான்.” என்று உமையாள் ஹை-டெசிபலில் கூற, மனைவி பேச்சிலிருந்து தப்பிக்க, காலையில் வந்த நாளிதழை அப்போது தான் புதிதாக படிப்பது போல உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்த சிவநேசனோ, “கல்யாணம் பண்றதுக்கும் ஜாலியா இருக்குறதுக்கும் என்ன சம்பந்தம் உமா?” என்று வினவினார்.

 

கணவரின் பேச்சு புரியாதவரா உமையாள்?

 

“எது?” என்று உமையாள் வினவ, “அதில்ல மா, கல்யாணம் பண்ணா தான் ஜாலியா இருக்கலாமா? பிடிச்ச வேலை செஞ்சாலும் ஜாலியா இருக்கலாம்னு சொல்ல வந்தேன்.” என்று சமாளித்து விட்டார் சிவநேசன்.

 

“க்கும், நீங்க மட்டும் ஒரு எலெக்ட்ரானிக் கடையை வச்சுட்டு, சும்மா சும்மா வீட்டுக்கு வந்து ரெஸ்ட் எடுக்குறீங்க, என் பையன் மட்டும் ராத்திரி பகலா வேலை செய்யணுமா? இதுல, அப்பப்போ கொலை மிரட்டல் எல்லாம் வருது. என்ன வேலையோ!” என்று அங்கலாய்த்தார் உமையாள்.

 

“அடிப்பாவி, ஒருநாள் மதியம் வரலைன்னாலும், ஃபோன் போட்டு ‘எப்போ வருவ’ன்னு தொல்லை பண்ணி, வீட்டுக்கு வர வச்சுட்டு, இப்போ நான் என்னவோ சும்மா வந்து உட்கார்ந்து இருக்குற மாதிரி பேச்சை பாரு!” என்று முணுமுணுத்த சிவநேசனோ, “என்னமோ, நான் தான் அவன் போலீஸாகனும்னு அடம்பிடிச்ச மாதிரி பேசுற!” என்று சத்தமாக கூறினார்.

 

“ஹ்ம்ம், அதுக்கு காரணம் உங்க ஃபிரெண்டு தான்!” என்று கூறிய உமையாளை கிண்டலாக பார்த்த சிவநேசன், “பாராட்டுற நேரமெல்லாம், உன் அண்ணன்! திட்டுற நேரம் மட்டும் என் ஃபிரெண்ட்டா? சரி, இப்போ என்ன தான் பண்ணனுங்கிற?” என்றார்.

 

“அவனுக்கு கல்யாணம் ஆகணும். அதான், அவனையும், அவன் வேலையையும் புரிஞ்சுக்குற மாதிரி பொண்ணா தான பார்த்துருக்கேன்.” என்று உமையாள் வினவ, “எது? உன் அண்ணன் பொண்ணா?” என்றார் சிவநேசன்.

 

அதுவரை, அவர்களின் சம்பாஷனைகளை நமுட்டுச் சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த பிரகதீஷ்வரனோ, “க்கும், நல்லா புரிஞ்சுப்பா என்னை!” என்றபடி உள்ளே வந்தான்.

 

“டேய், நீ எப்போ வந்த?” என்ற உமையாளோ, அவன் கூறியதைக் கேட்டு, “பின்ன, அவளும் போலீஸ் நீயும் போலீஸ். ரெண்டு பேருக்கும் பொருத்தம் எல்லாம் பக்காவா இருக்கு. நீ மட்டும் ஓகே சொன்னா…” என்று பேசிக் கொண்டே போனவரை இடையிட்ட அவரின் மைந்தனோ, “ம்மா, முதல்ல உங்க அண்ணன் பொண்ணு அந்த அருக்காணி கிட்ட கேட்டீங்களா? சும்மாவே, நாலைஞ்சு அணு உலையை உள்ள வச்ச மாதிரி, புசுபுசுன்னு மூச்சு விட்டுகிட்டு இருப்பா. இதுல, என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டீங்கன்னு வைங்க, அத்தைன்னு கூட பார்க்காம, கண்ணாலேயே பஸ்பம் ஆக்கிடுவா. வீணா, பகல் கனவு காணாம, போய் சாப்பாடு எடுத்து வைங்க.” என்று தன்னறைக்கு சென்று விட்டான்.

 

அத்தனை நேரம் அமைதியாக இருந்த மனைவியை சீண்ட வேண்டி, “என்ன உமா, உன் பையன் இப்படி சொல்லிட்டு போறான்.” என்க, “ஹ்ம்ம், அவன் சொல்ற மாதிரி தான அந்த ராங்கியும் இருக்கா! அன்னைக்கு பேச்சுவாக்குல ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு பேசுனதுக்கு, தைய்யாதக்கான்னுல குதிச்சா. ஹ்ம்ம், யாருக்கு யாருன்னு எழுதிருக்கோ!”என்று புலம்பியவாறே மகனுக்கு உணவு எடுத்து வைக்க சென்றார்.

 

*****

 

அதே சமயம், மகதியின் கல்லூரியில் விசாரித்துக் கொண்டிருந்த வல்லபிக்கோ இறுமல் வந்தது.

 

ஏற்கனவே, கடுப்பில் இருந்தவள், இறுமலில் தொண்டை எரிய ஆரம்பித்தது.

 

இதுவரை, அவர்கள் விசாரித்த வரை, உருப்படியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பது தான் அவளின் கடுப்பிற்கான காரணங்களுள் ஒன்று!

 

மகதியுடன் படிப்பவர்களை விசாரித்த வரை, மகதி யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டாள் என்பதும், அவளுக்கென்று நண்பர்கள் யாரும் இல்லை என்பதும் தான் பலரின் கூற்றாக இருந்தது.

 

“மேம், என்னை பொறுத்தவரை அவ ஒரு அட்டென்ஷன் சீக்கர். அமைதியா உம்முன்னு இருந்தா, எல்லாரோட அட்டென்ஷனையும் கிராப் பண்ணிடலாம்னு நினைப்பு போல. முக்கியமா பசங்க கிட்ட பேசவே மாட்டா. ஏதோ அதிசயமா அந்த சந்தோஷ் கிட்ட மட்டும் பேசுவா. அப்படி என்ன இருக்கோ அவகிட்ட, அந்த சந்தோஷ் அவளை பேச வைக்க கிட்டதட்ட ரெண்டரை வருஷமா, பின்னாடியே அலைஞ்சான்.” என்று தன் முன் அமர்ந்து கூறிக் கொண்டிருந்த அந்த பெண்ணை பார்த்த வல்லபிக்கு, அவளின் பேச்சினால், உள்ளுக்குள் கோபம் இருந்தாலும், பிரகதீஷ்வரன் சொன்னது நினைவு வர அமைதியாக, தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டாள்.

 

அவளை செல்லுமாறு கூறிவிட்டு பிரகாஷிடம் திரும்பிய வல்லபியோ, “இன்னும் எவ்ளோ பேரு இருக்காங்க பிரகாஷ்?” என்று வினவ, “சந்தோஷ் மட்டும் இன்னைக்கு லீவாம் மேம். அவனை தவிர மத்த ஸ்டுடெண்ட்ஸ் எல்லாரையும் விசாரிச்சாச்சு.” என்றான் பிரகாஷ்.

 

“சந்தோஷா? அவன் தான அப்பார்ட்மெண்ட்டுக்கு வந்ததா வாட்ச்மேன் சொன்னாரு?” என்றவளின் சந்தேகப்பார்வை, இதுவரை பார்க்காத சந்தோஷின் மீது படிந்தது.

 

அடுத்தக்கட்ட விசாரணையாக மகதியின் ஆசிரியர்களையும்,  அந்த கல்லூரியின் முதல்வரை விசாரிக்க ஆரம்பித்தனர்.

 

“ஹாய் மேம், நான் தான் மகதியோட கிளாஸ் ஸ்டாஃப். எல்லாரும் சொல்லிருப்பாங்க, மகதி ஒரு இன்ட்ரோவர்ட்னு. ஆமா, அவ இன்ட்ரோவர்ட் தான். ஆனா, லாஸ்ட் ஒரு ஆறு மாசத்துல அவகிட்ட நல்ல சேஞ் தெரிஞ்சுது. யாரை பார்த்தாலும், தலையை குனிஞ்சுட்டு அமைதியா கடந்து போற பொண்ணு, அப்போலயிருந்து முகத்தை பார்த்து சிரிக்க ஆரம்பிச்சா. நானும், இது ஒரு நல்ல சேஞ்சாச்சேன்னு சந்தோஷப்பட்டு, அவளை கூப்பிட்டு கூட பேசினேன். அவளை புரிஞ்சுகிட்ட ஒரு ஃபிரெண்டு கிடைச்சதா அன்னைக்கு என்கிட்ட சொன்னா. நானும், அவளை விஷ் பண்ணி அனுப்பி வச்சேன். ஆனா, இப்படி ஆகும்னு நினைச்சு பார்க்கல. மச், நல்ல பொண்ணு அவ. அவளுக்கு இப்படியாகி இருக்க வேண்டாம்.” என்று வருத்தப்பட்டார் அந்த ஆசிரியர், மாலதி.

 

வல்லபியின் மனமோ, மாலதி கூறிய அந்த ஆறு மாத கணக்கையும், சந்தோஷையும் இணைத்து பார்த்துக் கொண்டிருந்தது.

 

கல்லூரி முதல்வரிடமும் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்பினர் இருவரும்.

 

வாகனத்தில் செல்லும்போது, “பிரகாஷ், அந்த சந்தோஷ் அட்ரஸ் வாங்கியாச்சுல? இப்போ அங்க போவோம்.” என்று கூற, அதற்கு பதில் சொல்லாமல் பிரகாஷோ அவன் அலைபேசியை நோக்கிக் கொண்டிருக்க, அவனை முறைத்தாள் வல்லபி.

 

சற்று நேரம் சத்தமில்லாமல் மௌனமாக இருக்க, தன் வேலையை முடித்து நிமிர்ந்த பிரகாஷுக்கு அப்போது தான் வல்லபி தன்னை முறைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

 

“ஹையோ மேம்!” என்று அவன் வெளிப்படையாகவே பதற, “என்ன பிரகாஷ், உங்க ஸ்பை வேலையை பக்காவா முடிச்சுட்டீங்களா?” என்று கோபமாக வினவினாள் வல்லபி.

 

அதில் பிரகாஷ் தலை குனிய, வில்லை விடுத்து அம்பை திட்டி என்ன பயன் என்று எண்ணிய வல்லபி, “நீங்க என்ன வேணுமோ பண்ணுங்க. ஆனா, அது என் கேஸை எந்த வகைலயும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாது.” என்று கட்டளையிட்டு விட்டு திரும்பிக் கொண்டாள்.

 

அவள் மனமோ, ‘ஏன் தான், இந்த அப்பாக்கு என்மேல நம்பிக்கையே இல்லயோ!’ என்று அலுத்துக் கொண்டது.

 

*****

 

எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும் டான்ஸ் ஸ்டுடியோ, முந்தின சம்பவத்திற்கு பின்னர் வெறிச்சோடி இருந்தது.

 

உள்ளே, சாத்விக் மட்டும் ஆராதியா விழுந்திருந்த இடத்தை வெறித்து பார்த்தபடி இருந்தான்.

 

அதனை பிரகதீஷ்வரனின் கண்கள் குறித்துக் கொண்டது.

 

“ஹாய் சாத்விக், நீங்க மட்டும் தான் இருக்கீங்களா?” என்று ஜெகதீஷ் வினவ, சற்று அதிர்வுடன் திரும்பிய சாத்விக்குக்கு இரண்டொரு நொடிகள் எடுத்தது இயல்பு நிலைக்கு திரும்ப.

 

“சாரி சார், சட்டுன்னு பேச்சு சத்தம் கேட்டதும் ஜெர்க்காகிட்டேன்.” என்று சாத்விக் கூற, பிரகதீஷ்வரனோ, “ரிலாக்ஸ் சாத்விக். கொலை நடந்த இடத்துல தனியா இருந்தா, இந்த மாதிரி பேனிக்ஸ் எல்லாம் வரது நார்மல் தான்.” என்று முன்னிருந்தவனை கூர்மையாக அளவிட்டபடியே கூறினான்.

 

அதற்கு சாத்விக் எப்படி வினையாற்றுவது என்று தெரியாமல் விழிக்க, “ஓகே சாத்விக், நாங்க ஒரு முறை இந்த ஸ்டுடியோவை சுத்தி பார்க்கலாம்னு இருக்கோம்.” என்று பிரகதீஷ்வரன் கூற, “ஸ்யூர் சார்.” என்றான் அவனும்.

 

அதன்பிறகு, பிரகதீஷ்வரனும் ஜெகதீஷும் அந்த இடத்தையே அலசிக் கொண்டிருந்தனர்.

 

சாத்விக்கோ இருவரையுமே சுற்றி வந்து கொண்டிருக்க, இம்முறை ஜெகதீஷுக்கும் அவன்மீது சந்தேகம் உண்டானது. அதை பிரகதீஸ்வரனுக்கு கண்ஜாடையில் சொல்ல, அவனும் கண்களை மூடி ஆமோதித்தான்.

 

சுமார் இருபது நிமிடங்கள், அந்த இடமே மௌனத்தில் ஆழ்ந்திருக்க, அப்போது தான் வாயை திறந்தான் பிரகதீஷ்வரன்.

 

“ப்ச், இவ்ளோ நேரம் தேடுறோம், ஒண்ணுமே கிடைக்கலயே. ஜெகா, மர்டர் வெப்பன் கூட இன்னும் கண்டுபிடிக்கலைல.” என்று அவன் வாய் பேசினாலும், கண்கள் என்னவோ சாத்விக்கை தான் வட்டமடித்தன.

 

“நோ சார். நாம அவ்ளோ கேர்லெஸா இருக்கோமா, இல்ல கில்லர் ரொம்ப இன்டலிஜெண்ட்டா இருக்கானான்னு தெரியலையே.” என்று ஜெகதீஷும் பிரகதீஷ்வரனுக்கு ஏற்றார் போல பேசினான்.

 

ஆனால், சாத்விக்கிடமோ இருவரும் எதிர்பார்த்த எந்த எதிர்வினையும் இல்லை.

 

‘நாம தப்பான ஆளை சந்தேகப்படுறோமோ?’ என்று ஜெகதீஷ் மனதிற்குள் நினைக்க, பிரகதீஷ்வரனோ சாத்விக்கிடம், “ஒரு ஹெல்ப் சாத்விக், கீழ டிரைவர் இருப்பாரு. அவருக்கிட்ட காஃபி வாங்கிட்டு வர சொல்றீங்களா? ஒரே ஹெட்டேக்கா இருக்கு. உங்களுக்கும் சேர்த்து சொல்லுங்க.” என்றுவிட்டு, “வா ஜெகா, நாம அதுக்குள்ள நம்ம அப்சர்வேஷனை நோட் பண்ணிடுவோம். மகாதேவ் சார் ரிப்போர்ட் கேட்டாருல.” என்று ஜெகதீஷிடம் முடித்தான்.

 

சாத்விக்கோ தயக்கத்துடன் வெளியே செல்ல, “சார், இவனை சந்தேகப்படுறது சரியா தப்பான்னு தெரியலையே. ஒருநேரம் திருதிருன்னு முழிக்கிறான், நாம எதிர்பார்க்குற நேரம் கல்லுகூண்டு மாதிரி இருக்கான்.” என்று ஜெகதீஷ் கூறினான்.

 

“போலீஸ்னா எல்லாரையும் சந்தேகப்படனும் ஜெகா. இதுல சரி தப்புன்னு எதுவும் இல்ல.” என்று கூறிய பிரகதீஷ்வரனோ, ஆராதியா கொலையுண்ட இடத்திற்கு அருகிலிருந்த கண்ணாடி சுவரை பிடித்தபடி கீழே அமர்ந்தவன், சுவருக்கும் தரைக்கும் இடையே இருக்கும் சிறு இடைவெளிக்குள் ஒரு காகிதத்தை விட்டு, சரட்டென்று வெளியே தள்ள, அவர்களின் பார்வையில் தட்டுப்பட்டது இரத்தக்கறை படிந்த கத்தி.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
8
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்