Loading

அத்தியாயம் 4

 

ஆணையர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்த வல்லபியின் வாகனம் மகதியின் வீட்டை நோக்கி வேகமெடுத்தது.

 

“பிரகாஷ், அந்த பொண்ணோட பாடியை அட்டாப்சிக்கு எடுத்துட்டு போயாச்சு தான?” என்று உறுதிபடுத்திக் கொண்ட வல்லபி, மனதிற்குள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.

 

அதற்கிடையே பிரகாஷ் தனக்கு வந்த அழைப்பை எடுத்து பேசிவிட்டு, வல்லபியிடம், “மேம், மகதியோட பேரண்ட்ஸ் ஜி.ஹச்சுக்கு வந்துட்டாங்களாம்.” என்று கூற, “அங்க ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் முடிச்சுட்டு ஸ்டேஷன் வர சொல்லுங்க.” என்றாள் வல்லபி.

 

அதற்குள் மகதியின் வீடு வந்திருக்க, இப்போது அங்கு ஆள் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்து. வெளியில் காவலுக்கு நின்றிருந்த காவலர் வணக்கம் செலுத்த, ஒரு தலையசைப்பில் அதை ஏற்று உள்ளே சென்றாள்.

 

அவளுடன் தீபனும் இணைந்து கொண்டான்.

 

“மேம், அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேனோட சேர்த்து இங்க இருக்க எல்லாருக்கிட்டயும் விசாரிச்சாச்சு. எல்லாருமே மகதி ரொம்ப அமைதியான பொண்ணுன்னு தான் சொல்றாங்க. அந்த பொண்ணு அவ்ளோவா வெளிய வரவே மாட்டாங்களாம். காலேஜ், வீடுன்னு தான் இருப்பாங்களாம். அவ்ளோவா பேசவும் மாட்டாங்களாம். வாட்ச்மேன் கிட்ட சந்தேகப்படுற மாதிரி யாரும் வந்தாங்களான்னு விசாரிச்சேன். அப்படி யாரும் வரலன்னு சொல்றாரு. அன்னைக்கு மகதியை தேடி, அவங்களோட ஃபிரெண்டு வந்ததாவும், அவங்க வீட்டுக்கு வந்துட்டாங்களான்னு கேட்டுட்டு மட்டும் போயிட்டதாவும் சொன்னாரு.” என்றான் தீபன்.

 

ஏதோ தோன்ற, அவள் நேராக சென்று நின்றது அந்த அப்பார்ட்மெண்ட்டின் காவலாளி ராஜதுரையின் முன்பு தான். கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வயதிருக்கும் அந்த ராஜதுரைக்கு.

 

வல்லபியை கண்டதும் சாதாரண மக்களுக்கு உண்டாகும் சிறு பதற்றதுடனே, “மேடம், நான் அப்போவே எல்லாமே சொல்லிட்டேனே.” என்று கூற, “எனக்கு சில சந்தேகம் இருக்கு. அதை கேட்கத்தான் வந்தேன்.” என்றவள், “அன்னைக்கு மகதியோட ஃபிரெண்டு வந்ததா சொன்னீங்களே, யாரு அது?” என்று வினவினாள்.

 

“அந்த பையன் பேரு… ஏதோ… சந்தோஷ்னு நினைக்கிறேன். இதுக்கு முன்னாடி நிறைய முறை வந்துருக்கான். ஆனா வீட்டுக்குள்ள எல்லாம் போக மாட்டான். ரெண்டு பேரும் கார்டன்ல தான் பேசுவாங்க.” என்ற ராஜதுரையோ, ஏதோ தோன்றியவராக, “அவன் ரொம்ப நல்ல பையன் மேடம்.” என்று பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

 

“அதெல்லாம் விசாரணைல தான் தெரியும். சரி, உங்க ட்யூட்டி டைம் எப்படி? நைட்டும் நீங்க வேலை பார்ப்பீங்களா?” என்று வல்லபி வினவ, “இல்ல மேடம். நைட்டு வேற ஒருத்தன் வருவான். ஆனா, இன்னைக்கு காலைல அவனையும் காணோம். எங்கேயாவது குடிச்சுட்டு கிடப்பான்னு நினைக்கிறேன்.” என்றான்.

 

அதில் அவள் தீபனை முறைக்க, அவனோ வேகமாக, “இதை ஏன் என்கிட்ட சொல்லல?” என்று ராஜதுரையை வினவ, “நீங்க இதை கேட்கவே இல்லையே!” என்று கூறினார் அவர்.

 

‘இதான் நீ விசாரிச்ச லட்சணமா?’ என்றவாறு வல்லபி தீபனை முறைக்க, அவனோ என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றான்.

 

“இங்க இருக்க சிசிடிவி ஃபூட்டேஜ் வாங்கியாச்சா?” என்று அவள் வினவ, தீபனோ விழித்துக் கொண்டே, “சிசிடிவி ரிப்பேராகி ஒரு வாரமாச்சாம் மேம்.” என்றான்.

 

அவளோ ராஜதுரையிடம் திரும்ப, “மேடம், இந்த அப்பார்ட்மெண்டோட செக்ரெட்டரி லீவுக்கு எங்கேயோ போயிருக்காரு. அவரு இங்க வந்ததும் பார்க்குறேன்னு சொன்னாரு.” என்றார் தலையை சொரிந்து கொண்டே.

 

வல்லபியோ ஏமாற்றத்தில் இருபுறமும் தலையை ஆட்டிக் கொண்டவள், தீபனிடம் திரும்பி, “இவரோட போய் அந்த நைட் வாட்ச்மேனை தேடி கூட்டிட்டு வர வேண்டியது உங்க பொறுப்பு.” என்று வார்த்தைகளை கடித்து துப்ப, எங்கு அங்கு நின்றால் தனக்கும் அதே நிலையாகி விடுமோ என்று பயந்த தீபனோ அங்கிருந்து சென்று விட்டான்.

 

“யூஸ்லெஸ்…” என்று திட்டியபடியே வீட்டிற்குள் சென்றவளை, ‘நல்லவேளை நம்மள மறந்துட்டாங்க.’ என்ற நிம்மதியுடன் பின்தொடர்ந்தான் பிரகாஷ்.

 

வீட்டிற்குள் சென்றவள், கையுறைகளை மாட்டிக் கொண்டே படுக்கையறையை சுற்றிலும் பார்த்தாள்.

 

தரையில் இறந்த உடல் கிடந்ததற்கு அடையாளமாக சாக்பீஸ் கோடுகள் இருக்க, அதை சுற்றி மஞ்சள் நிற தடுப்பான் போடப்பட்டிருந்து.

 

அனைத்தையும் பார்த்தவளின் விழிகள் சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்த மகதியின் புகைப்படத்தில் ஒரு நிமிடம் முழுதாக நிலைக்க, ஏனோ அந்த பெண்ணின் முகம் அவளுக்கு வேறு யாரையோ நினைவு படுத்தியது.

 

தலையை குலுக்கி அவ்வுணர்விலிருந்து வெளிவந்தவள், மீண்டும் அந்த அறையை பார்வையால் அலச ஆரம்பித்தாள்.

 

அதே சமயம் பிரகாஷ் அங்கிருந்த மேஜையினை சோதித்து கொண்டிருந்தான். உள்ளே படிப்பு சம்பந்தமான புத்தங்கங்களும் குறிப்புகளும் தான் இருந்தன. அதில் எதுவும் கிடைக்காததால், அலமாரியை சோதிக்க சென்றான்.

 

வல்லபியோ கட்டிலருகே சென்றவள், ஏதோ தோன்ற அங்கிருந்த தலையணையை தூக்கி பார்க்க, அங்கு அவளுக்காகவே காத்திருந்தது போல வீற்றிருந்தது அந்த டைரி.

 

புருவ சுருக்கத்துடன் அதை எடுத்தவள், நிதானமாக படிக்க அவகாசம் இல்லாததால், வேகமாக புரட்ட, அதில் வெறும் ஓவியங்களாகவே இருந்தன. அதுவும் பெண்களின் அணிகலன்கள், உடைகள் என பென்சில் ஸ்கெட்ச்சுகளாகவே இருந்தன. அவையனைத்தும் மகதியின் கைவண்ணங்கள் என்பதை பறைசாற்ற, ஒவ்வொரு பக்கத்திலும் அவளின் கையெழுத்தும் இருந்தது.

 

டைரியில் மகதியை பற்றி ஏதாவது துப்பு கிடைக்கும் என்று எண்ணிய வல்லபிக்கு, அந்த ஓவியங்களை பார்த்ததும் ஏமாற்றமாகவே இருந்தது. இருப்பினும், ஏதோ ஒரு உந்துதலால், அதை எடுத்து வைத்துக் கொண்டாள்.

 

அப்போது பிரகாஷோ, “மேம், கப்போர்ட், டேபிள் எல்லாம் செக் பண்ணியாச்சு. எதுவும் கிடைக்கல மேம்.” என்றான்.

 

“ஹ்ம்ம், மகதியோட லேப்டாப், மொபைல் எல்லாம் நம்ம கஸ்டடில தான இருக்கு?” என்று வல்லபி வினவ, பிரகாஷும் அதற்கு ஆமோதிப்பாக பதிலளிக்க, “இனி, அதுல இருந்து தான் ஏதாவது லீட் எடுக்கணும்.” என்று கூறிவிட்டு வல்லபி வெளியே வர, அவர்களின் அடுத்த பயணம் காவல் நிலையத்தை நோக்கி இருந்தது.

 

*****

 

காவல் நிலையத்தை அடைந்ததும் முதல் வேலையாக, மகதியின் மடிக்கணினியையும் அலைபேசியையும் ஆராயும் வேலையை கையில் எடுத்தனர் வல்லபியும் பிரகாஷும்.

 

அதற்குரிய நிபுணர்களை வைத்து மடிக்கணினியையும் அலைபேசியையும் கடவுச்சொல் இல்லாமலேயே திறந்தவர்களுக்கு, அதிலிருந்த அனைத்து பயன்பாடுகளும் எவ்வித பூட்டுக்களும் இல்லாமல் திறந்தே இருந்ததால், அதை ஆராய்வது பெரிய சவாலாக இல்லை.

 

மகதியின் அலைபேசியை ஆராய்ந்து கொண்டே, “பிரகாஷ், மகதியோட லாஸ்ட் ஒன் மன்த் ப்ரவ்சிங் ஹிஸ்டரியை செக் பண்ண சொல்லுங்க. நீங்க லாப்டாப்ல இருக்க டாக்குமெண்ட்ஸ், ஃபோட்டோஸ் எல்லாமே செக் பண்ணுங்க. ஒரு சின்ன டீடெயில் கூட மிஸ் பண்ணக்கூடாது.” என்றுவிட்டு அலைபேசியில் மூழ்க ஆரம்பித்து விட்டாள்.

 

முதலில் அதிலிருந்த பயன்பாடுகளை எல்லாம் பார்வையிட்டவள், முகநூலை திறக்க, கடவுச்சொல்லே கேட்காமல் உள்ளே சென்று விட்டது.

 

அதிலிருந்த போஸ்ட்டுகளை ஒவ்வொன்றாக பார்வையிட்டவளின் விழிகள் தெறித்து விடுமளவுக்கு விரிந்தன அந்த போஸ்ட்டை கண்டு.

 

“மாடர்ன் டான்ஸ் ஸ்டுடியோ” என்ற பெயர் பலகையின் புகைப்படமே அது. அதை வெளியிட்டிருந்தது அதே பெயரில் துவங்கப்பட்ட அந்த நடனக்குழுவின் கணக்கு தான்.

 

‘மகதிக்கும் இந்த டான்ஸ் குரூப்புக்கும் என்ன சம்பந்தம்?’ என்று யோசித்தவளின் மூளை எதையோ யூகிக்க, வேகமாக மகதியின் முகநூல் நட்பு பட்டியலை ஆராய்ந்தாள்.

 

வெகு நேரம் தேட வைக்காமல் அவள் பார்வைக்கு கிடைத்தது அந்த பெயர்.

 

“ஆராதியா சிவகுரு” – என்ற பெயருடன் இருந்த புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தது, சற்று நேரத்திற்கு முன்னர் பிரகதீஷ்வரன் காட்டிய புகைப்படத்தில் வெட்டுக் காயங்களுடன் இருந்த அதே ஆராதியா தான்.

 

‘நான் நினைச்சது சரி தான்.’ என்று வழக்கில் கிடைத்த துப்பினால் சிறிது உற்சாகம் ஏற்பட, அதை பகிர்ந்து கொள்ள அவள் தேடிய முதல் நபர் பிரகதீஷ்வரனே தான்.

 

தன் உள்ளுணர்வு சரியாக தான் இருக்கும் என்று காட்ட நினைத்தாளா, இல்லை வழக்கின் முக்கிய புள்ளியை கண்டுபிடித்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள எண்ணினாளா என்பது அவளுக்கே வெளிச்சம்!

 

ஆனால், அவளின் உற்சாகம் எல்லாம் அவனின் நக்கல் பேச்சில் வடிந்து போக, உள்ளுக்குள் கோபம் பொங்கியெழ ஜெகதீஷுக்கு அழைத்தாள்.

 

அழைப்பு ஏற்கப்பட்டதும், “ரெண்டு கேஸுக்கும் இருக்க கனெக்ஷனை கண்டுபிடிச்சாச்சு. அதை உங்க சாருக்கிட்ட சொல்லி, இங்க வர சொல்லுங்க.” என்று பல்லைக் கடித்தபடி கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டாள்.

 

*****

 

அடுத்த அரை மணி நேரத்தில், பிரகதீஸ்வரனின் வாகனம் அந்த காவல் நிலையத்தை வந்தடைந்தது.

 

ஜெகதீஷ் நேராக பிரகாஷிடம் சென்று, “என்னய்யா, விசாரணை எந்தளவுல இருக்கு?” என்று வேண்டுமென்றே கேட்க, அவனை முறைத்த பிரகாஷோ, “ஏன், அதை நீயே மேம் கிட்ட கேளேன்.” என்றான்.

 

“எப்பா, ஆளை விடு சாமி. ஃபோன்லேயே பல்லைக் கடிக்கிறாங்க. நேர்ல என்னையே ஏதாவது செஞ்சாலும் ஆச்சரியப்படுறதுக்கு எதுவுமில்ல.” என்று ஜெகதீஷ் ஜகா வாங்கினான்.

 

“இன்னைக்கு அவங்க மூட் என்னவோ மாறிட்டே இருக்கு. ஸ்டேஷன் வந்தப்போ கொஞ்சம் நல்லா இருந்த மாதிரி தான் இருந்துச்சு. ஏதோ ஒரு ஃபோன் கால் பேசுனாங்க. யாருக்கிட்ட பேசுனாங்கன்னு தெரியல, உடனே ஆங்கிரி மோடுக்கு போயாச்சு.” என்று பிரகாஷ் கூறிக் கொண்டிருக்கும்போதே, பிரகதீஷ்வரன் இருவரருகே வர, ஜெகதீஷோ பிரகாஷின் காதில், “வேற யாரு, இவருக்கிட்ட தான் பேசியிருக்கணும்.” என்று முணுமுணுத்தான்.

 

அதன்பிறகென்ன கப்சிப் தான்!

 

“என்னை வர சொல்லிட்டு உங்க மேடம் எங்க போயிட்டாங்க?” என்று பிரகதீஸ்வரன் பிரகாஷிடம் வினவ, “மகதியோட பேரண்ட்ஸ் கிட்ட விசாரிச்சுட்டு இருக்காங்க சார்.” என்றான் அவன்.

 

“ஓஹ் ஓகே, நானும் ஜாயின் பண்ணிக்குறேன்.” என்று கூறிவிட்டு, அவன் விசாரணை நடக்கும் இடத்திற்கு சென்றுவிட, ‘இன்னைக்கு இன்னும் எத்தனையை பார்க்கணுமோ!’ என்ற பதற்றத்துடன் மற்ற இருவரும் பின்தொடர்ந்தனர்.

 

உள்ளே பிரகதீஷ்வரன் நுழைந்ததும், தன் அனுமதி இல்லாமல் யாரது வருவது என்று கோபத்துடன் திரும்பினாள் வல்லபி.

 

அங்கு அவளுக்கான நக்கல் சிரிப்புடன் நின்ற பிரகதீஷ்வரனோ, “யூ கன்டின்யூ.” என்றவன் வல்லபியினருகே இருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள, மற்ற இருவரும் வெளியே நின்று கொண்டனர்.

 

“இது என் இன்வெஸ்டிகேஷன்.” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் வல்லபி கூற, “எஸ், நான் இல்லன்னு சொல்லவே இல்லையே!” என்றான் அவனும் அவளைப் போலவே.

 

அவளோ அவனை முறைத்தபடி பார்க்க, அவனோ அவளை கண்டுகொண்டால் தானே! அவன் முகம் அவர்களுக்கு முன், ‘என்ன நடக்கிறது இங்கே?’ என்ற ரீதியில் பார்த்துக் கொண்டு இருந்தவர்களை தான் நோக்கியபடி இருந்தான்.

 

‘திமிரு பிடிச்சவன்.’ என்று மனதிற்குள் நினைத்துவிட்டு, எதிரே இருந்த மகதியின் பெற்றோரான மகேஸ்வரன் – அம்பிகா தம்பதியிடம், “நீங்க சொல்லுங்க.” என்றாள்.

 

“இன்னும் சொல்ல என்னங்க இருக்கு?” என்று மகேஸ்வரன் கோபமாக வினவ, அவரை ஒரு பார்வை பார்த்த அம்பிகாவோ, “இருக்குங்க மேடம். என் பொண்ணு டிப்ரஷன்ல இருந்துருக்கா. அதுவே இவருக்கு தெரியாது. ஏன், எனக்கு கூட இத்தனை வருஷம் தெரியல. என் பொண்ணை பத்தி எதுவுமே தெரியல.” என்று அழுக ஆரம்பித்தார்.

 

சில நிமிடங்கள் அந்த இடம் மௌனமாக இருக்க, அம்பிகாவே பேச ஆரம்பித்தார்.

 

“மகதி பிறந்த ரெண்டு வருஷத்துலயே, ஃபினான்சியலா கொஞ்சம் பிராபிளம் வர, ரெண்டு பேருமே வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுச்சு. அப்போவே அவளை கவனிக்காம போயிட்டேன். கவனிச்சு பார்க்கும்போது வருஷங்கள் பல ஓடிடுச்சு. அவளும் காலேஜ் போயிட்டா. அதுக்கப்பறம் அவ என்கிட்ட ஒட்டவே இல்ல. ஒருமுறை நானா காலேஜ் போனப்போ, அங்க இருந்த அவளோட பிரெண்டு சந்தோஷ் சொல்லித்தான், அவ கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி டிப்ரஷன்ல இருந்ததும், அதை கொஞ்சம் கொஞ்சமா அவளே சமாளிச்சதும் தெரிய வந்துச்சு. இத்தனைக்கும், அப்போ அவ எங்க கூட வீட்டுல தான் இருந்தா.” என்று சொல்லி மீண்டும் கண்ணீர் வடித்தார் அம்பிகா.

 

அப்போது மகேஸ்வரனோ, “அவளுக்கு பாய் பிரெண்டு இருந்துருக்கான்னு எதுக்கு என்கிட்ட சொல்லவே இல்ல?” என்று கோபமாக வினவ, “சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க? அவளை காலேஜுக்கே போக விடாம தடுத்துருப்பீங்க! அங்கயாச்சும் அவளுக்கு பிடிச்ச மாதிரி இருக்கட்டும்னு தான் சொல்லல.” என்று சண்டையிட்ட அம்பிகா, “நீங்களும், உங்க சந்தேக புத்தியும்!” என்று முணுமுணுக்க, அவையனைத்தையும் வல்லபியும், பிரகதீஷ்வரனும் கவனித்துக் கொண்டு தான் இருந்தனர்.

 

“இன்னொரு முறை அவ காலேஜ்ல இருந்து கால் வந்துச்சு, அவ மயங்கி விழுந்துட்டான்னு. அங்க போய் விசாரிச்சதுல, அவ சரியா சாப்பிடாததால மயங்கியிருக்கான்னு தெரிய வந்துச்சு. அதே சமயம், எனக்கு வேலை பளுவும் அதிகரிக்க, என்னால அங்க இருந்து அவளை பார்த்துக்க முடியல. அப்போ தான் பக்கத்து வீட்டுல இருந்த துளசிதாஸ் சாரும் அவரோட மனைவியும், மகதியை பார்த்துக்குறதா சொன்னாங்க.” என்றார் அம்பிகா.

 

“ஹ்ம்ம், வேலையை விட பொண்ணு முக்கியம்னு நினைச்சுருந்தா, நீங்களே அவங்களை பார்த்துருந்துக்கலாம்.” என்று வல்லபி ஏதோ ஒரு நினைவில் கூறிவிட, அத்தனை நேரம் எவ்வித பாவனையும் வெளிக்காட்டாத பிரகதீஷ்வரனோ, திரும்பி அவளை முறைத்தான்.

 

“உண்மை தான். இப்போ தான அது புரியுது, நானே அவளை  பார்த்துருந்துருக்கணும்.” என்று தேம்பிக் கொண்டே கூறினார் அம்பிகா.

 

அந்த பேச்சை நீடிக்க விடாதவனாக, “உங்களுக்கு யாரு மேலயாவது சந்தேகம் இருக்கா?” என்று பிரகதீஷ்வரன் விசாரிக்க, அம்பிகா பதில் கூறுவதற்கு முன்பே முந்திக் கொண்டு, “அந்த பிரெண்டுன்னு ஒருத்தனை சொன்னாளே, அவன் மேல தான் சந்தேகமா இருக்கு.” என்றார் மகேஸ்வரன்.

 

அம்பிகா அவரை முறைக்க, வல்லபி கூட அவரை ஒரு மாதிரி பார்த்தாள்.

 

அப்போதும் எவ்வித உணர்வையும் வெளிக்காட்டாதவனாக, “நீங்க தான் அந்த பையனை இதுக்கு முன்னாடி சந்திச்சதே இல்லையே, எப்படி அவன் மேல உங்களுக்கு சந்தேகம் வருது?” என்று கேட்டான் பிரகதீஷ்வரன்.

 

முதலில் அவன் கேள்வியில் என்ன சொல்வதென்று தெரியாமல் தயங்கிய மகேஸ்வரனோ, “அதான் இப்போ எங்க பார்த்தாலும் நியூஸ் வருதே, பிரெண்டுங்கிற பேர்ல பழகி, ஏமாத்தி, கொலை பண்றாங்கன்னு!” என்று சமாளிக்க பார்க்க, “அப்பா பொண்ணை கொலை பண்ணிட்டாங்கன்னு கூட தான் நியூஸ் வருது!” என்று முணுமுணுத்தாள் வல்லபி.

 

அவள் காதுக்கு மட்டும் கேட்கும் வகையில், “வாட் ஆர் யூ டூயிங் வல்லபி?” என்று பல்லைக் கடித்தான் பிரகதீஷ்வரன்.

 

அதற்கெல்லாம் அசராமல் அமர்ந்திருந்தாள் வல்லபி. ஒரு பெருமூச்சுடன் மீண்டும் மகேஸ்வரனை நோக்கி அவன் திரும்ப, “எங்களுக்கு யாரு மேலயும் சந்தேகம் இல்ல சார். சந்தேகப்படுற அளவுக்கு எங்க பொண்ணு கூட நாங்க க்ளோஸாவும் இல்ல.” என்று அம்பிகாவே கூறினார்.

 

“ஓகே ஃபைன். இன்னைக்கு இதோட முடிச்சுக்கலாம். வேணும்னா திரும்ப உங்களை விசாரிக்க வேண்டியதிருக்கும்.” என்று பிரகதீஷ்வரன் அவர்களை வழியனுப்புவது போல எழுந்திருக்க, “இவன் யாரு என் இன்வெஸ்டிகேஷனை முடிச்சு வைக்க?” என்று கோப மிகுதியில் சற்று சத்தமாகவே முணுமுணுத்தாள்.

 

முன்னே சென்று கொண்டிருந்த தம்பதியருக்கு கேட்காவிட்டாலும், பிரகதீஷ்வரனின் செவிகளில் தப்பாமல் விழுந்தன அவளின் வார்த்தைகள்.

 

அவர்கள் வெளியே சென்றதும் திரும்பி வல்லபியை முறைத்தவனோ, “டோன்ட் யூ ஹாவ் எனி சென்ஸ்? இன்வெஸ்டிகேஷன்ல எமோஷன்ஸை காட்ட கூடாதுன்னு தெரியாதா? நீ யாரு அவங்களை ஜட்ஜ் பண்ண? உன் ஃபீட்பேக் எல்லாம் அவங்க கேட்டாங்களா?” என்று அவள் பேசுவதற்கே இடம் கொடுக்காமல் திட்ட, அவள் செய்தது தவறு என்று புரிந்ததால், அமைதியாகவே இருந்தாள் வல்லபி.

 

ஆனால், பிரகதீஷ்வரனோ ஆத்திரத்தில், “இதுக்கு தான் அன்னைக்கே சொன்னேன், நீ போலீஸாகாவே ஃபிட் இல்லன்னு.” என்று சொல்லிவிட, அவளின் லட்சியத்தை பற்றி பேசினால் சும்மா இருப்பாளா வல்லபி?

 

“ஹலோ, அதை சொல்றதுக்கு நீங்க யாரு? உங்க ஃபீட்பேக்கையும் இங்க யாரும் கேட்கலை! நான் எப்படி ஒர்க் பண்றேன்னு என்னோட ஹையர் அஃபிசியல்ஸ் சொன்னா போதும்.” என்று எகிறியவள், “மனசாட்சியை கழட்டி வச்சுட்டு, குற்றவாளியை ரிலீஸ் பண்றவருக்கு எங்க எமோஷன்ஸ் எல்லாம் இருக்கப் போகுது?” என்றும் கூறினாள்.

 

இதோ, இருவருக்குமிடையே மீண்டும் சண்டை மூண்டு விட, அந்த அறையிலிருந்து வெளியேறிய இருவரும் ஆளுக்கொரு திசையில் முறைத்துக் கொண்டே செல்ல, அதைக் கண்ட இரு ஜீவன்களும் தான் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர்.

 

இவர்களில் சண்டைக்கு இடையே, இவ்வழக்கு சிக்கலாகுமா, இல்லை இவ்வழக்கினால், இவர்களின் சண்டை இன்னும் சிக்கலாகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
9
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்