Loading

அத்தியாயம் 3

 

மகாதேவ் வல்லபியிடம் சில புகைப்படங்களை காட்ட, அதைக் கண்டவளுக்கு சட்டென்று புரிந்து போனது, தன் வழக்கிற்கும் இந்த மரணத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்பது.

 

காரணம், அந்த புகைப்படத்தில் ஆராதியாவின் இறந்த உடல் இருந்த தோற்றமும், உடலிலிருந்த வெட்டுக் காயங்களும், மகதியின் இறந்த உடலில் இருந்ததைப் போலவே இருந்தன.

 

ஒரே வித்தியாசம், மகதியின் கழுத்து பின்பக்கமாக சரிந்திருந்ததே ஆகும். வேறு வித்தியாசங்கள் எல்லாம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் தெரிய வரும்.

 

அதை பார்த்த பின்பே வல்லபி மகாதேவிடம், “இவை இரட்டை கொலைகளா?” என்று கேட்டிருக்க, அதற்கு பிரகதீஸ்வரனோ, “ரெண்டோட நிக்காது. சீரியல் கில்லிங்கா கூட இருக்கலாம்.” என்றிருந்தான்.

 

அதைக் கேட்டதும் அந்த இடமும் கணமும் சற்று தீவிரமாக மாறியிருந்தது.

 

அவன் கூறுவதற்கான காரணங்களை அவள் அறிய விழைந்தாலும், அவனிடம் தான் சென்று கேட்பதா என்ற எண்ணத்தில் அமைதியாக இருந்தாள் வல்லபி.

 

அதை உணர்ந்தானோ என்னவோ, அவனும் மகாதேவை பார்த்தபடி, “விக்டிம்ஸ் ரெண்டு பேரோட உடம்புலயும் ரெண்டு ‘எஸ்’ பின்னியிருக்க மாதிரி வெட்டுக்காயம் இருக்கு. ஆராதியாவோட கால்லயும், மகதியோட கைலயும் இருக்கு.” என்றவன் இரு புகைப்படங்களையும் காட்ட, வல்லபியோ தன் வழக்கில் தான் கண்டு கொள்ளாததை அதற்குள் அவன் கண்டு கொண்டான் என்ற கடுப்பில் பிரகாஷை முறைத்தாள்.

 

அவற்றை எல்லாம் ஓரக்கண்ணில் பார்த்தாலும் தன் விளக்கத்தை தொடர்ந்தான் பிரகதீஷ்வரன்.

 

“இதே மாதிரி கொலைகள் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வேற ஊர்லயும் நடந்ததா கேள்விப்பட்டுருக்கேன். அதைப் பத்தி தெரிஞ்சுக்க, அந்த  கில்லாரோட கேஸ் ஃபைலை இப்போ பார்த்துட்டு இருக்கேன். ஆனா, இதுல இருக்க சிக்கல் என்னன்னா, அந்த கில்லர் இப்போ ஜெயில்ல தான் இருக்கான்.” என்று கூறி பிரகதீஷ்வரன் நிறுத்த, “அப்போ, அந்த கில்லரை மாதிரியே வேற ஒருத்தர் இந்த கொலைகளை செய்றாங்கன்னு சொல்ல வரீங்களா?” என்று வினவினாள் வல்லபி.

 

“ஆமா, அந்த கில்லரோட கில்லிங் ஸ்டைல்ல அடிப்படையா வச்சு தான் நிச்சயமா இந்த ரெண்டு கொலைகளும் நடந்துருக்கு.” என்றான் பிரகதீஷ்வரன்.

 

மகாதேவ் இருவரிடமும், “இப்போ உங்களுக்கு சிஷுவேஷன் புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன். இந்த ரெண்டு கொலைகளையும் இன்னும் கொஞ்ச நேரத்துல மீடியா அலச ஆரம்பிச்சுடுவாங்க. அதுக்கப்பறம், நம்ம மேல பிரஷர் போட ஆரம்பிச்சுடுவாங்க. அதுக்குள்ள, கெட் மீ சம்திங். உங்க உள்ளுணர்வுகளை வச்சு மட்டும் நாம கொலையாளியை நெருங்க முடியாது. சாலிட்டான எவிடன்ஸை கொண்டு வாங்க. நாம சீக்கிரமா குற்றவாளியை கண்டுபிடிச்சா தான், அடுத்தடுத்த கொலைகளை தடுக்க முடியும்.” என்று கூறினார்.

 

இருவரும் வெளியேற எத்தனிக்க, “ரெண்டு பேரும் சேர்ந்து தான் இந்த கேஸை ஹேண்டில் பண்ணப் போறீங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சண்டை போட்ட மாதிரி இல்லாம, சீக்கிரமா இந்த கேஸை முடிப்பீங்கன்னு நம்புறேன். ப்ரூவ் மீ ரைட்.” என்று மகாதேவ் இருவருக்கும் பேச்சிலேயே கொட்டு வைக்க, அவரை முறைத்த வல்லபி முன்னே சென்று விட, பிரகதீஷ்வரன் தேங்கி நின்றான்.

 

வெளியே வந்த வல்லபி எதையோ முணுமுணுத்துக் கொண்டே நிற்க, அவளிடம் பேசவே தயங்கினான் பிரகாஷ்.

 

அப்போது அங்கு வந்த ஜெகதீஷ் பிரகாஷிடம் கண்ணைக் காட்டி அருகே வர சொல்ல, பிரகாஷும் வல்லபியின் கவனம் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்ததும் தான் அங்கிருந்து நகர்ந்தான்.

 

“என்ன மேன், இந்க் பக்கம் வந்துருக்கீங்க? அதுவும், உங்க மேடமும் வந்துருக்காங்க. இரு இரு, அவங்க முகத்துல எள்ளும் கொள்ளும்  வெடிக்கிறதை பார்த்தா, மகாதேவ் சாரு கிட்ட நல்லா டோஸ் வாங்கிட்டு வந்த மாதிரி இருக்கே. உள்ள எங்க சாரும் இருக்காரு போலயே!” என்றான் ஜெகதீஷ்.

 

“அட நீ வேற ஏன்யா அதையே ஞாபகப்படுத்துற? இவங்க ரெண்டு பேருக்கு இடையில நம்மளும் மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியதா இருக்கு!” என்று முணுமுணுத்த பிரகாஷ், வழக்கை பற்றியும் கூறினான்.

 

பிரகதீஷ்வரன் மற்றும் வல்லபி இடையே என்ன பிரச்சனை என்று முழுதாக தெரியாமல், அவர்கள் இருவருக்குமிடையே உருளும் இரு தலைகளில் ஒரு தலை ஜெகதீஷ் உடையது என்றால், மற்றொன்று பிரகாஷினுடையது.

 

பிரகாஷ் கூறியதைக் கேட்ட ஜெகதீஷோ, “என்ன இது சீரியல் கில்லரோட வேலையா? அதை இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இன்வெஸ்டிகேட் பண்ணப் போறாங்களா?” என்று வாயை பிளக்க, அப்போது சரியாக அங்கே வந்தாள் வல்லபி.

 

“இங்க என்ன சீரியஸ் டிஸ்கஷன்? அவங்க ஏரியால நடந்த மர்டர் பத்தி கேட்டாச்சா பிரகாஷ்?” என்று வல்லபி வினவ, “அது… மேம்… நம்ம கேஸ் பத்தி சொல்லிட்டு இருந்தேன். அடுத்து, அவங்க கேஸ் டீடெயில்ஸ் பத்தி விசாரிக்கிறதுக்குள்ள…” என்று அவசரப்பட்டு வாயை விட்டு, பின்பு சுதாரித்து நிறுத்தினான் பிரகாஷ்.

 

“ஹ்ம்ம், அதுக்குள்ள நான் வந்துட்டேனா?” என்று நக்கலாக வினவினாள் வல்லபி.

 

‘இப்போ ஆமான்னு சொல்றதா, இல்லன்னு சொல்றதா!’ என்று யோசித்த பிரகாஷ் ஜெகதீஷை பார்த்து உதவி செய்யுமாறு கண்களாலேயே சைகை செய்தான்.

 

ஜெகதீஷோ, ‘யாரு மேல இருக்க கோபத்தையோ இவன் மேல காட்டுறாங்க! நாம நம்ம சாருக்கிட்ட இப்படி மாட்டிக்காம எஸ்கேப்பாகிடனும்.’ என்று திட்டம் போட்டுக் கொண்டிருந்தான்.

 

அதே சமயம், பிரகாஷை காப்பாற்றவும், ஜெகதீஷின் திட்டத்தில் மண்ணள்ளி போடவும் அங்கு வந்து சேர்ந்தான் பிரகதீஷ்வரன்.

 

“உங்களுக்கு என்ன டீடெயில்ஸ் வேணுமோ, அதை நீங்களே என்கிட்ட கேட்கலாம் மிஸ். வல்லபி.” என்று தன் அமர்த்தலான குரலில் பிரகதீஷ்வரன் கூற, அவனை முறைத்து பார்த்தவளோ, “நான் யாருக்கிட்ட கேட்கணும்னு நீங்க சொல்லித்தர வேண்டாம் மிஸ்டர். பிரகதீஷ்வரன்.” என்று அவளும் அலட்சியமாக கூறினாள்.

 

பின்பு பிரகாஷிடம் திரும்பி, “அந்த பொண்ணோட பேரண்ட்ஸுக்கு தகவல் அனுப்பியாச்சா? அந்த பொண்ணு படிச்ச காலேஜ்ல விசாரிக்கணும். அவங்க ஃபிரெண்ட்ஸ், ப்ரொஃபெசர்னு எல்லாரையும் விசாரிக்கணும்.” என்று தன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் மூழ்கிப் போக, அவளின் படபடப்பை கண்ட பிரகதீஷ்வரனோ, ‘இன்னும் இந்த படபட பட்டாசு மாறவே இல்ல.’ என்று நினைத்துக் கொண்டு, ஜெகதீஷிடம் கண்ணைக் காட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

 

ஜெகதீஷும் புரிந்தது போல, “மேம், கேஸ் டீடெயில்ஸை டிஸ்கஸ் பண்ணலாமா?” என்று வல்லபியிடம் வினவ, அப்போது தான் பிரகதீஷ்வரன் அங்கில்லாததைக் கண்டாள் அவள்.

 

“ஏன் அதை அந்த அவசரக்குடுக்கை டிஸ்கஸ் பண்ண மாட்டானாமா?” என்று பொறுமிக் கொண்டவள், சற்றுமுன் தான் அதற்கு அவனிடம் மறுப்பு தெரிவித்தாள் என்பதை வசதியாக மறந்து விட்டாள்.

 

“ம்ம்ம், டிஸ்கஸ் பண்ணலாம்.” என்று வல்லபி கூறியதும், ஜெகதீஷ் கொலையை பற்றிய தகவல்களை கூறினான்.

 

அவன் கூறியவற்றை கிரகித்த வல்லபியோ, ‘இதுவரை இவ்ளோ தான் கண்டுபிடிச்சுருக்கீங்களா?’ என்ற பார்வையை செலுத்த, ‘அடப்பாவமே! ஒரு கேப் கூட விடக்கூடாது போலயே!’ என்று நினைத்த ஜெகதீஷ் மீண்டும் தொடர்ந்தான்.

 

“அங்க இருந்த எல்லாருக்கிட்டயும் முதற்கட்ட விசாரணையை முடிச்சுட்டோம். ஆராதியா அன்னைக்கு ஸ்டுடியோ வந்ததுல இருந்தே அப்செட்டா இருந்ததா சொல்றாங்க. லவ் மேட்டர்னு சொல்றாங்க. ஆனா, அங்க இருக்க யாருக்கும் அவங்களோட லவர் யாருன்னு தெரியலையாம்.” என்றவன், அடுத்து அவளின் கேள்வி என்னவாக இருக்கும் என்பதை யோசித்து, “ஆராதியாவோட டெட் பாடியை அட்டாப்ஸிக்கு அனுப்பிருக்கோம். போன் கால்ஸ், மெசேஜ் எல்லாத்தையும் டிராக் பண்ண சொல்லிருக்கோம். அந்த பொண்ணோட பேரண்ட்ஸ் இப்போ ஸ்டேஷனுக்கு வந்துருக்காங்க. அதை சார் கிட்ட சொல்ல தான் வந்தேன்.” என்றும் சொல்லி முடித்தான்.

 

அவன் கூறியவற்றை கவனமாக கேட்டுக் கொண்டவளின் மனம், இரு கொலைகளுக்கும் கொலையுண்ட விதத்தை காட்டிலும் வேறு வகையிலும் தொடர்பு இருக்கக் கூடுமோ என்று சிந்திக்க ஆரம்பித்தது.

 

வெளியிலோ, “ஏன், உங்க சார் இல்லாம உங்களால தனியா விசாரிக்க முடியாதா?” என்று வினவியவள், தன் வாகனம் நோக்கி நடந்தாள்.

 

“க்கும், உங்க மேம் ரொம்ப தான் கேலி பேசுறாங்க. சொல்லி வை, எங்க சார் கூட தான் கேஸை இன்வெஸ்டிகேட் பண்ணனும்.” என்று ஜெகதீஷ் கூற, அவனை கேலிச் சிரிப்புடன் பார்த்த பிரகாஷோ, “ஏன் அதை நீயே சொல்றது!” என்று கிண்டல் செய்தான்.

 

“ஆனாலும், இந்த கேஸ் முடியுற வரை நம்ம பாடு தான் திண்டாட்டமா இருக்கும். இப்போ என்னை நல்ல பார்த்துக்கோ, இந்த கேஸ் முடியுறப்போ இதே நிலைமைல நான் இருந்தா அதுவே பெரிய அதிசயம் தான்.” என்று புலம்பினான் ஜெகதீஷ்.

 

“புலம்பாம ஸ்டேஷன் போய் சேரு மேன்.” என்ற பிரகாஷும் வாகனத்தை நோக்கிச் சென்றான்.

 

வண்டியில் ஏறிய பிரகாஷை ஓரக்கண்ணில் பார்த்த வல்லபியோ, “உங்க தோஸ்த்தோட பேசி முடிச்சாச்சுன்னா, கேஸை கவனிப்போமா?” என்று கேட்க, ‘ஹையோ, மீண்டும் மீண்டுமா?’ என்று நொந்தான் பிரகாஷ்.

 

*****

 

வல்லபியிடம் பேசி முடித்து வந்த ஜெகதீஷைக் கண்ட பிரகதீஷ்வரனுக்கு சிரிப்பாக வந்தது. அவன் முகத்தை வைத்தே அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்தவன், “என்ன ஜெகா, உன் மேம் கிட்ட எல்லாத்தையும் சொல்லியாச்சா? என்ன சொல்றாங்க உன் மேம்?” என்று வினவினான்.

 

“ஹான், உங்களை தான் அவசரக்குடுக்கைன்னு திட்டுனாங்க.” என்றான் ஜெகதீஷ்.

 

“எது? அந்த முந்திரிக்கொட்டைக்கு நான் அவசரக்குடுக்கையா?” என்ற பிரகதீஷ்வரனோ, “அதை நீயும் கேட்டுட்டு வந்து என்கிட்ட சொல்ற!” என்றான் ரியர்-வியூ கண்ணாடியில் ஜெகதீஷை பார்த்தவாறே.

 

‘க்கும், அவசரக்குடுக்கை, முந்திரிக்கொட்டை – பேரு வைக்கிறதுல ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்ல!’ என்று உள்ளுக்குள் கூறிக் கொண்ட ஜெகதீஷோ, வெளியே அப்பாவியாக, “நீங்க தான சார் கேட்டீங்க, அதான் சொன்னேன்.” என்று கூறினான்.

 

‘அவ்ளோ நல்லவனா நீ!’ என்ற பார்வையை அவன் மீது செலுத்திய பிரகதீஷ்வரனோ, “சிசிடிவி ஃபூட்டேஜ் என்னாச்சு?” என்று வழக்கை பற்றிய பேச்சுக்கு தாவினான்.

 

அதற்கு ஜெகதீஷோ, “முதல் மூணு நாள் ஃபூட்டேஜ் செக் பண்ணியாச்சு சார். எந்த க்ளூவும் இதுவரை கிடைக்கல. நவீன் மத்த நாளோட வீடியோவை பார்த்துட்டு இருக்கான்.” என்று கூறி முடிப்பதற்கும், அவர்களின் வாகனமும் காவல் நிலையத்தை அடையவும் சரியாக இருந்தது.

 

வெளியிலேயே மகளை எமனிடம் தொலைத்தவர்களாக கவலை படர்ந்த முகத்துடன் நின்றிருந்தனர், சிவகுரு – திலகவதி தம்பதியினர்.

 

அவர்களை கடந்து சென்ற பிரகதீஷ்வரனுக்கு அவர்களின் துயரம் புரியாமல் இல்லை. ஆனால், காக்கிச்சட்டையை போட்டு விட்டானே! கொலையாளியை கண்டுபிடிக்கும் வரை, அவன் மனதிலுள்ள உணர்வுகளை இரும்புத்திரைக்கு பின்னே மறைத்தாக வேண்டிய நிர்பந்தத்தில் தானே இருக்கிறான்.

 

அதனால் தான், மகளின் உடலுக்கு கூராய்வு நடக்கும் இடைவேளையில் பெற்றோரை விசாரணைக்காக அழைத்திருக்கிறான்.

 

இருவரையும் உள்ளே அழைத்த பிரகதீஷ்வரன், “உங்களை இந்த நிலையில விசாரிக்கிறது எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. ஆனா, கொலையாளி  அடுத்த கொலையை பண்றதுக்குள்ள பிடிச்சாகனும். அதுக்கு உங்ககிட்ட இருந்து கிடைக்கிற சின்ன தகவல் கூட உதவும்.” என்று நிதானமாகவே பேசினான்.

 

“இனி சொல்றதுக்கு என்ன சார் இருக்கு. அப்போவே சொன்னேன், இப்படி டான்ஸு பாட்டுன்னு வெளியவே சுத்தாதன்னு. எங்க கேட்டா? இப்போ மொத்தமா போயிட்டாளே! ஒத்த பொம்பளை பிள்ளையை தொலைச்சுட்டு நிக்குறோமே!” என்று மகளை இழந்த வருத்தத்துடன் பேசினார் சிவகுரு. திலகவதியோ வாயே திறக்கவில்லை.

 

பிரகதீஷ்வரனுக்கு அவர்களின் நிலை ஒருபக்கம் சங்கடமாக இருந்தாலும், மறுபுறம் காலம் கடந்து கொண்டே இருக்கிறது என்ற பதற்றமும் உண்டானது.

 

அதை சரியாக புரிந்து கொண்ட ஜெகதீஷோ, பிரகதீஷ்வரனிடம் கண்ணைக் காட்டிவிட்டு மற்ற இருவரையும் தன்னுடன் அழைத்துச் சென்றான்.

 

பிரகதீஷ்வரனும் ஒரு பெருமூச்சுடன் தன் முன்னே இருந்த ‘எஸ் கில்லர்’ பற்றிய ஆயிரம் பக்கத்திற்கு மேலிருந்த கோப்பை ஆராய்ந்து கொண்டிருந்தான்.

‘எஸ் கில்லர்’ என்றழைக்கப்படும் விஷ்ணுவர்தன், கோயம்புத்தூர் பீலமேட்டிலுள்ள  ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்த முப்பத்தைந்து வயதுடையவன்.

அவனை நேரில் பார்க்கும் யாரும், கிட்டத்தட்ட இருபது கொலைகளுக்கு, அதுவும் கோரமான கொலைகளுக்கு காரணமான கொலையாளி என்று நினைக்கக் கூட மாட்டார்கள். அத்தகைய மென்குணம் கொண்டவனாக காட்சியளித்தவனுக்குள் தான் மனிதர்களை வேட்டையாடும் மிருகம் ஒளிந்து கொண்டிருந்திருக்கின்றது.

அவனை புகைப்படத்தில் கண்ட பிரகதீஷ்வரனும் அதை ஒப்புக்கொள்ள வேண்டி தான் இருந்தது.

மேலும், அந்த கோப்புகளின் பக்கங்களை புரட்டினான் பிரகதீஷ்வரன். விஷ்ணு அவன் கொலையாளிகளை எப்படி தேர்ந்தெடுத்தான்; எப்படி அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டான் போன்றவற்றுடன் இத்தனை கொலைகள் செய்தும் காவலர்களுக்கு சந்தேகம் வராமல் எப்படி தப்பித்து வந்தான் ஆகியவற்றை அவனே வாக்குமூலமாக தந்திருந்தையும் பார்த்தான்.

அவன் செய்த ஒவ்வொரு கொலையை பற்றியும் விளக்கமாக அந்த கோப்பில் இருக்க, இரண்டுக்கு மேலே பிரகதீஷ்வரனால் கூட படிக்க முடியவில்லை.

முதல் கொலையின் குற்றம் நடந்த இடத்தின் புகைப்படத்தையும், கொலையுண்டவரின் புகைப்படத்தையும் கண்ட பிரகதீஷ்வரனோ, இப்போது ஆராதியா மற்றும் மகதியின் இறந்த உடல்களின் புகைப்படத்தையும் அதனுடன் ஒப்பிட்டு பார்த்தான்.

உன்னிப்பாக பார்க்காவிட்டால், மூன்றுமே ஒரே மாதிரியாக தான் இருந்தன.

ஆனால், கொலையாளி விட்டுச்சென்ற குறியீட்டை பார்த்தால், முதல் கொலையையும் இப்போது நடந்துள்ள கொலைகளையும் செய்தவர்கள் வேறு வேறு என்று கூறிவிடலாம்.

இரண்டு ஆங்கில எழுத்துக்களை கவனித்த இந்த புது கொலையாளி, நடுவிலிருந்த கோட்டை சரியாக பார்க்கவில்லை போலும்!

அப்போது உள்ளே வந்த ஜெகதீஷ், “சார், அவங்க கிட்ட ஓரளவு தான் பேச முடிஞ்சுது. அவங்க சொன்னதுல இருந்து, அவங்க பொண்ணு டான்ஸ் ஆட போறது அவங்களுக்கு பிடிக்கலன்னு தெரியுது. அதுக்காக பலமுறை, ரெண்டு தரப்புக்கும் சண்டை வந்துருக்கு. அது இல்லாம, அவங்க பொண்ணு எப்பவும் சோசியல் மீடியால மூழ்கிடுறாங்கங்கிற கம்ப்லைன்ட்டும் இருக்கு. இது இல்லாம, ரெண்டு பேரும், ஏதோ மறைக்குறாங்கங்கிறது அவங்க பாடி லேங்குவேஜ்ஜூலயே நல்லா தெரியுது சார். மேபி, அந்த பொண்ணோட லவ் மேட்டர் தெரிஞ்சுருக்கலாம். இப்போ சொன்னா, அவங்க மானம் போயிடுமோங்கிற பயத்துல, அதை மறைக்கலாம்.” என்று விசாரணையை மட்டுமில்லாமல், அவன் பகுப்பாய்வையும் சேர்த்தே கூறினான் ஜெகதீஷ்.

“மேபி, அதுக்கான சண்டையினால தான் அந்த பொண்ணு டிப்ரெஷன்ல இருந்தாங்கிறதை மறைக்கிறதுக்காக கூட இருக்கலாம்.” என்று எதையோ யோசித்தபடி கூறினான் பிரகதீஷ்வரன்.

“இருக்கலாம் சார்.” என்று கூறிய ஜெகதீஷ், “சார், இப்போ அவங்க கிளம்பவான்னு கேட்குறாங்க.” என்று கூற, “ம்ம்ம், கிளம்ப சொல்லு ஜெகா. ஆனா, அவங்க மேலயும் ஒரு கண்ணு இருக்கட்டும். அப்பறம் அந்த பொண்ணோட சோசியல் மீடியா அக்கவுண்ட்ஸ் எல்லாத்தையும் இம்மீடியேட்டா செக் பண்ண சொல்லு.” என்றான் பிரகதீஷ்வரன்.

ஜெகதீஷ் வெளியேறும் நேரம், “ஜெகா, பி ரெடி. நாம கோயம்புத்தூர் ஜெயிலுக்கு போற மாதிரி இருக்கும்.” என்றான் பிரகதீஷ்வரன்.

‘கோயம்புத்தூர் ஜெயிலா?’ என்ற கேள்வி உள்ளுக்குள் எழுந்தாலும், வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல், “ஓகே சார்.” என்று தலையை மட்டும் அசைத்தான்.

அப்போது பிரகதீஷ்வரனின் அலைபேசி ஒலியெழுப்ப, அதில் தெரிந்த பெயரைக் கண்டதும், அத்தனை நேரம் வழக்கின் தீவிரத்தில் இறுகியிருந்த முகம் சற்று இளக, இதழோரம் சிறு நக்கல் சிரிப்பும் எட்டிப் பார்த்தது.

“அட, என்ன ஆச்சரியம்! முந்திரிக்கொட்டை மேடம் எனக்கு கால் பண்றாங்க?” என்று கிண்டலாக முணுமுணுத்தபடி அழைப்பை ஏற்றான்.

எடுத்ததும், “நாம பேசணும்.” என்று மறுமுனையிலிருந்து வல்லபி கூற, “இப்பவும் பேசிட்டு தான இருக்கோம்.” என்று நக்கலாக கூறினான் பிரகதீஷ்வரன்.

“ப்ச், கேஸ் விஷயமா பேசணும்னு சொன்னேன்.” என்று அவள் லேசாக எட்டிப்பார்த்த எரிச்சலுடன் கூற, “ஓஹ், அப்போ இவ்ளோ நேரம் பெர்சனலா பேசுனோமா?” என்று இவனும் விடாமல், அவளின் பதற்றத்தை அதிகரித்தான்.

“ச்சை, இவன்கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானா?” என்று அவள் முணுமுணுப்பது கேட்க, “அதனால தான் மனுஷ ஜென்மத்துல சேர்த்தி இல்லாத நீ பேசுறியோ?” என்று தன் பேச்சை தொடர்ந்தான் அவன்.

உடனே, அழைப்பும் துண்டிக்கப்பட, “உஃப், அவளை வெறுபேத்துனதுல நான் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிட்டேன்.” என்று நிம்மதி பெருமூச்சு விட்டான் பிரகதீஷ்வரன்.

அடுத்த இரண்டாவது நிமிடத்தில், ஜெகதீஷ் உள்ளே ஓடி வர, “என்ன ஜெகா, உன் மேடம் பேசுனாங்களா?” என்று சிரிப்புடன் வினவினான் பிரகதீஷ்வரன்.

‘ஓஹோ, நீங்க தான் கோர்த்து விட்டதா?’ என்ற பார்வை பார்த்த ஜெகதீஷோ, அடுத்த நொடியே வழக்கின் தீவிரத்தை உணர்ந்தவனாக, “சார், இந்த ரெண்டு கேஸுக்கும் சம்பந்தம் இருக்க மாதிரி புது லீட் கிடைச்சுருக்காம். அதை பத்தி உங்ககிட்ட பேசணுமாம். உங்களை உடனே, அவங்க ஸ்டேஷனுக்கு வர சொன்னாங்க.” என்றான்.

அதைக் கேட்டதும், பிரகதீஷ்வரன் பரபரப்பானாலும், “ஏன், உங்க மேடம் இங்க வந்து சொல்ல மாட்டாங்களாமா?” என்று கேட்க, “அது எல்லாம் உங்க ரெண்டு பேருக்குள்ள! நானெல்லாம் வந்து மாட்டிக்க மாட்டேன் சார்.” என்று கிண்டல் செய்வது இப்போது ஜெகதீஷின் முறையாகிற்று.

அவனையும் அழைத்துக் கொண்டு வாகனத்தை நோக்கி நடந்த பிரகதீஷ்வரனோ, “என்ன மேன், வரவர கேலி கிண்டல் எல்லாம் பயங்கரமா இருக்கு?” என்று சற்று இலகுவாக பேச, “என்ன சார் பண்றது, எல்லாம் பழக்கதோஷம்.” என்றான் ஜெகதீஷ்.

வழக்கு, விசாரணை என்று முன்தினம் இருந்தே அதற்குள் தலையை கொடுத்தவர்களுக்கு, இப்படியான பேச்சுக்கள் தான் சற்று உயிர்ப்புடன் வைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
12
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்