Loading

அத்தியாயம் 17

 

தன் முன்னிருந்த மகதியின் ஓவியங்களை பார்த்துக் கொண்டிருந்தாள் வல்லபி. ஆராதியாவின் முகம் எத்தனை அழகாக இருந்தது அந்த ஓவியத்தில்! ஆனால், இப்போது அந்த ஓவியத்திற்கு சொந்தக்காரர்கள் இருவரும் உயிருடன் இல்லை.

 

அவ்வளவு தான் வாழ்க்கை அல்லவா? மனிதர்களின் அற்ப புத்திகளுக்கு இடையே சிக்கி இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாக போகிறதோ? அதற்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பம் எவ்வாறெல்லாம் பயன்பட போகிறதோ?

 

இதே சிந்தனையில் வல்லபி ஆழ்ந்திருக்க, அவளை உலுக்கி நிகழ்வுக்கு அழைத்து வந்தான் பிரகதீஷ்வரன்.

 

“என்ன மேடம், வீட்டுக்கு போகலையா? இங்க உட்கார்ந்து என்ன பண்ணிட்டு இருக்க?” என்றவனின் பார்வையும் அவளுக்கு முன்னிருந்த பொருட்களில் படிந்து மீண்டது.

 

“ப்ச், எவ்ளோ அழகான ஃபிரெண்ட்ஷிப்ல இவங்களோடது? அதை தன் சுயநலத்துக்காக கொச்சைப்படுத்தி, அவங்க பேரை கெடுத்து, பெத்தவங்களே அவங்க மகளை குறை சொல்ற நிலைமைக்கு தள்ளி… ம்ச், என்னதான் வாழ்க்கையோ இது?” என்று குறைபட்டாள் வல்லபி.

 

“ஹ்ம்ம், அதுக்காக வாழ்க்கையையே குறை சொல்லாத லபி. இன்னும் நாம பார்க்க வேண்டியது எவ்ளோவோ இருக்கு. அதுவும் போலீஸ் வேலைல இதுக்கெல்லாம் துவண்டு உட்கார்ந்தா எப்படி?” என்றான் பிரகதீஷ்வரன்.

 

சிறிது நேரம் அமைதியாக ஏதோ யோசனையில் இருந்தவள் திடீரென்று, “நீங்க சொன்னது போல நான் போலீஸா இருக்க ஃபிட் இல்லல?” என்று சிறு குரலில் வினவ, அவனோ புருவம் சுருக்கி, “இப்போ எதுக்கு இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க? அது ஏதோ கோபத்துல சொன்னது. அதை நினைச்சு குழப்பிக்காத.” என்றான்.

 

“ம்ச் இல்ல, இந்த கேஸ்ல கூட பாருங்க, அடிக்கடி என் கண்ட்ரோல் லாசாகி, நீங்க தான் அடிக்கடி என்னை கண்ட்ரோல் பண்ண வேண்டியதா இருந்துச்சு. முன்னாடி கூட, எது உண்மைன்னு புரியாம தான நடந்துகிட்டேன். ஒரு போலீஸ், தனக்கு கிடைச்ச தகவல் உண்மையா பொய்யான்னு கூட ஆராயாம முடிவு எடுக்க கூடாது தான? ஆனா, நான் அந்த அடிப்படையை கூட மறந்துட்டு தான் இருந்துருக்கேன்.” என்று வருத்தமாக கூறினாள்.

 

அவள் எதை சொல்கிறாள் என்று புரிந்து கொண்டவன், ஆறுதலாக அவள் தோளில் கையிட்டு, “ப்ச் லபி, இதுக்கு தான் ஓவரா யோசிக்க கூடாதுன்னு சொல்றது. ஆமா, நீ உண்மை எதுன்னு ஆராயாம தப்பா ஒரு முடிவு எடுத்துட்ட தான். ஒரு தப்பான முடிவுக்காக உன் கேரியரே தப்புன்னு சொல்லுவியா. யூ ஆர் வெரி டேலண்டட் லபி. இந்த கேஸ்லேயே நீ எவ்ளோ விஷயம் கண்டுபிடிச்சுருக்க. இன்ஃபேக்ட் உன் உள்ளுணர்வு கூட சரியா தான இருந்துருக்கு. பழசை நினைச்சு சோர்வாகாம, அதை பாடமா எடுத்துட்டு முன்னாடி போற வழியை பார்க்கணும்.” என்று அறிவுரை கூறினான்.

 

அவன் பேசியது வல்லபிக்கும் ஆறுதலாக இருக்க, தன்னை சமன்படுத்திக் கொண்டவள், “இப்போயாவது சார் அந்த கேஸ் பத்தி சொல்வீங்களா?” என்று கிண்டலாக வினவ, “க்கும், இப்போ தான் உனக்கு கேட்கணும்னு தோணுதா?” என்று அவனும் பதிலுக்கு பதில் பேசினான்.

 

அவனை பக்கவாட்டாக இடித்தவள், “இப்படியே சொல்லி ஒவ்வொரு முறையும் எஸ்கேப்பாகிடுறது. ஹ்ம்ம், இன்னைக்கு சொல்லாம விடுறதா இல்ல.” என்று வல்லபி கூற, அவனும் சிறிது பிகு செய்து விட்டு கூற ஆரம்பித்தான்.

 

“ஆக்சுவலி, அந்த பொண்ணு தான் இவனை லவ் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணியிருக்கா. இவன் வேண்டாம்னு ஒதுங்கி போக, ஒருநாள் இவன்கிட்ட வந்து, ‘நான் பிரேக்னன்ட். அதுக்கு நீதான் காரணம். ஒழுங்கா என்னை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ.’ன்னு மிரட்டி இருக்கா. அதுக்கு முன்னாடி, அவங்க காமன் ஃபிரெண்ட்ஸோட டூர் போனப்போ, ஏதோ சம்பவம் நடந்துருக்குன்னு தப்பா நினைச்சு, இந்த பையனும் வேற வழி இல்லாம ஓகே சொல்லியிருக்கான். அப்பறம் தான் தெரிஞ்சுருக்கு, அந்த பிரேக்னன்சிக்கு இவன் காரணம் இல்லன்னு. உடனே, சண்டை போட்டு அந்த பொண்ணை பிரேக்கப் பண்ண, எங்க வெளிய தெரிஞ்சா மானம் போயிடுமோன்னு அந்த பொண்ணும் சூசைட் பண்ணியிருக்கா. அப்பவும் இந்த பையன் மேல இருந்த கோபத்துல, இவனை மாட்டி விடணும்னு வேணும்னே தான் இவன் பேரை லெட்டர்ல எழுதியிருக்கா. இதெல்லாம் அவங்க பிரேக்கப் பண்ண ரெஸ்டாரண்ட் சிசிடிவில கேப்சர் ஆகியிருக்கு. அது மட்டுமில்லாம, டி.என்.ஏ டெஸ்ட் ரிசலட்டும் இந்த யையனுக்கு சாதகமா தான் வந்தது. சப்போஸ், இந்த பையன் மேட்டரை உள்ள கொண்டு வந்தா, அந்த பொண்ணு பிரேக்னன்ட்டா இருந்ததும் வெளிய வரும்னு தான் இதை மொத்தமா மறைச்சாச்சு.” என்றான் பிரகதீஷ்வரன்.

 

அவன் அந்த பெண்ணுக்காகவும் தான் மறைத்திருக்கிறான் என்பதை அறிந்ததும் மேலும் வருத்தமாகிற்று வல்லபிக்கு.

 

அவளை சமாதானப்படுத்தும் விதமாக, “என்ன ஃபீலிங்ஸா? ஓவரா தான் பொங்குது.” என்று கேலி செய்தவன், “முன்னாடி சொன்னது தான். டேக் இட் அஸ் அ லெஸன் அண்ட் மூவ் ஆன்.” என்றான்.

 

அப்போதும் அவள் சோர்வாகவே இருக்க, “இப்போ அந்த பையன் கூட அதுலயிருந்து வெளிய வந்து போலீஸாகிட்டான். நீதான் இப்படி இருக்க! சியர் அப் லபி.” என்று தேற்றினான்.

 

அதில் அவள் மெல்ல சமாதானமாக, “இப்போ என்ன இங்கேயே இருக்க போறியா, இல்ல வீட்டுக்கு போக போறியா?” என்று அவன் கேட்க, “நான் எதுக்கு இங்க இருக்கணும்? அதான் வேலையை முடிச்சாச்சே. வீட்டுக்கு போய் தூங்கணும். நல்லா தூங்கி ரெண்டு நாளாச்சு.” என்றாள் பழைய வல்லபியாக.

 

“தூங்குமூஞ்சி, வீட்டுக்கு போய் தூங்கு. போற வழிலேயே தூங்காத.” என்று அவளை சீண்டிவிட்டு தன் வாகனத்தை வீட்டை நோக்கி செலுத்தினான்.

 

*****

 

அந்த இரவு நேரத்திலும் வீட்டில் விளக்குகள் ஒளிர, ‘இன்னுமா இவங்க தூங்கல?’ என்று நினைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் பிரகதீஷ்வரன்.

 

அவன் வருவதை பார்த்த அவன் அன்னை உமையாளோ, “டேய், உன் மனசுல என்னதான் டா நினைச்சுட்டு இருக்க? இன்னைக்கு எனக்கு தெரிஞ்சே ஆகணும்.” என்று கத்த, “ப்ச் அம்மா, என்னன்னு சொல்லாம இப்படி மொட்டையா கேட்டா நான் என்ன சொல்ல?” என்றவன், தன் தந்தை சிவநேசனை திரும்பி பார்க்க, அவரோ இதழைப் பிதுக்கினார்.

 

“அதான் டா உன் கல்யாணம்! அதைப் பத்தி என்ன யோசிச்சுருக்க? இந்த முறை சும்மா விடுறதா இல்ல. நான் பொண்ணை பார்த்தாச்சு. நீயும் பார்க்குற, இந்த சம்பந்தத்தை முடிக்குறோம்.” என்று உமையாள் கூற, பிரகதீஷ்வரனோ, “ம்மா, இப்போ தான் கேஸ் முடிச்சுட்டு வந்துருக்கேன். டையர்ட்டா இருக்கு. நாளைக்கு பேசலாம்.” என்று கழண்டு கொள்ள பார்த்தான்.

 

விடுவாரா அவன் அன்னை?

 

“பேசி முடிச்சு எவ்ளோ நேரம் வேணும்னாலும் தூங்கு ராசா.” என்று உமையாள் கூற, பெருமூச்சுடன் நெற்றியை கீறியவன், “அந்த அருக்காணியை தான் நிறைய முறை பார்த்துருக்கேனே. திரும்ப என்னத்த பார்க்குறது? நீங்களே பேசி முடிவு பண்ணுங்க.” என்று கூறிவிட்டு அவன் அறைக்கு சென்று விட்டான்.

 

அவன் பதிலில் குழம்பிய உமையாளோ, “இவன் எந்த அருக்காணியை சொல்லிட்டு போறான்? நான் பார்த்த பொண்ணு பேரு அஞ்சலி தான?” என்று வாய்விட்டே புலம்ப, சிவநேசனோ சிரிப்புடன், “அவன் உன் அண்ணன் பொண்ணு அருக்காணியை தான் சொல்றான்.” என்றார்.

 

“எது? அந்த ராங்கியையா?” என்று ஆச்சரியப்பட்ட உமையாளோ உடனே மகாதேவுக்கு அழைத்து விட்டார்.

 

*****

 

இங்கு வல்லபி தன் வீட்டிற்குள் நுழைய, மகாதேவும் திகம்பரியும் உணவு உண்டு கொண்டிருந்தனர். பொதுவாக, இம்மாதிரியான சூழலில், அவள் அறைக்கு சென்று விடுவாள்.

 

இன்றும் அது போல தான் நடக்கும் என்று பெற்றவர்கள் எண்ணியிருக்க, அவர்களின் எண்ணத்திற்கு மாறாக, வல்லபியும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.

 

அதுவே பெற்றவர்களுக்கு ஆச்சரியத்தை தர, சில நொடிகளில், “ம்மா, கேஸ் முடிச்சாச்சு.” என்று வல்லபி பேச ஆரம்பித்தாள்.

 

பிறகு சாப்பிட்டு முடிக்கும் வரை தாயும் மகளும் பேசிக் கொண்டிருக்க, தந்தை வெறும் பார்வையாளராகிப் போனார்.

 

உண்டு முடித்த பின், மகாதேவ் படுக்கையறையை நோக்கி செல்ல, வல்லபியோ, “ப்பா, ஹையர் ஆஃபிசரா தான் பாராட்டுவீங்களா? அப்பாவா பாராட்ட மாட்டீங்களா?” என்று வினவ, மகாதேவ் அப்படியே நின்று விட்டார்.

 

பல மாதங்கள் பின்னான மகளின் அழைப்பு அவரை நிற்கச் செய்திருந்தது.

 

எப்போதும் பெண் பிள்ளைகள் தந்தையின் செல்லம் தானே! அதற்கு வல்லபியும் விதிவிலக்கல்லவே!

 

சில நொடிகள் மௌனமாக கழிய, வல்லபியே அவரின் முன் சென்று நின்று, “சாரி ப்பா, நான் ஏதோ தப்பா யோசிச்சு, இத்தனை நாள் உங்களை தப்பா நினைச்சுட்டேன்.” என்று மன்னிப்பு வேண்ட, அதற்கு மேல் அவளை கெஞ்ச விடாமல், “ச்சே, எதுக்கு டா சாரி எல்லாம்? நாங்க சொல்லியிருந்தா நீயும் புரிஞ்சுருந்துப்ப தான? நான் சொல்லலாம்னு தான் சொன்னேன். பிரகா தான் வேண்டாம்னு சொல்லிட்டான்.” என்று வருங்கால மருமகன் மீது பழி போட்டு விட்டார் அந்த பாசமிகு தந்தை!

 

அப்பறம் என்ன, தந்தையும் மகளும் நடுவீட்டில் கொஞ்ச, அதை கன்னத்தில் கைவைத்து பார்த்திருந்தார் திகம்பரி.

 

அப்போது தான் உமையாள் அழைத்தது.

 

‘என்ன இந்த நேரத்துல?’ என்று தான் மூவருக்கும் தோன்றியது.

 

மகாதேவ் அழைப்பை ஏற்றதும், “அண்ணா, நாங்க எப்போ பொண்ணு கேட்டு வரது?” என்ற உமையாளின் குரல் ஸ்பீக்கரில் போடாமலேயே அனைவருக்கும் கேட்டது.

 

அதைக் கேட்ட மகாதேவ் தான் குழம்பினார். பெண்கள் இருவருக்கும் உமையாள் கேட்டது புரிந்தே இருந்தது.

 

“பொண்ணா..” என்று புரியாமல் மகாதேவ் ஏதோ பேச வர, அதற்குள் சுதாரித்த திகம்பரியோ, கணவனை கையால் இடித்து, வல்லபியை சுட்டிக் காட்டினார்.

 

அப்போது தான் மகாதேவுக்கு புரிந்தது. இது ஏற்கனவே நடந்த பேச்சுவார்த்தை என்பதால், பெரியவர்கள் அனைவருக்கும் இதில் சம்மதமே.

 

அதனால், மகளின் முகத்தை பார்த்திருக்க, வல்லபியோ என்ன சொல்வதென்று தெரியாமல், “உங்க இஷ்டம் ப்பா.” என்று கூறிவிட்டு அறைக்கு ஓடி விட்டாள்.

 

அதன்பிறகு என்ன, திருமண வேலைகள் ஒரு பக்கம் நடக்க, வழக்கு நீதிமன்றம் தொடர்பான வேலைகள் மறுபக்கம் நடந்து கொண்டிருந்தன.

 

மற்றவர்கள் பரபரப்பாக திரிய, சம்பந்தப்பட்ட இருவரும் எப்போதும் போல ஒருவரை மற்றவர் சீண்டியபடி தான் சுற்றினர்.

 

*****

 

ஆராதியா மற்றும் மகதி கொலை வழக்கின் தீர்ப்பு நாள் இன்று.

 

வல்லபி காவல் நிலையத்திலிருந்து நீதிமன்றத்திற்கு அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தாள். செவிப்பேசியில் பிரகதீஷ்வரன் தான், சீக்கிரம் வருமாறு கூறிக் கொண்டிருந்தான்.

 

அப்போது, அங்கு வந்த நவீன், “மேம், இந்த ரிப்போர்ட்…” என்று ஏதோ கூற வர, “டேபிள்ல வைங்க நவீன். கோர்ட் போயிட்டு வந்து பார்த்துக்குறேன்.” என்றுவிட்டு விரைந்தாள்.

 

இதோ, பலகட்ட விசாரணைக்கு பிறகு, குற்றவாளிகளான மூவருக்கும் தண்டனையை அறிவித்து விட்டார் நீதிபதி.

 

ஆராதியாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட சந்தோஷுக்கு ஆயுள் தண்டனையும், மகதி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாத்விக்குக்கு எதிராக போதுமான சாட்சிகள் இல்லை என்பதால், இந்த திட்டத்திற்கு காரணமான மதுமதிக்கும் சாத்விக்குக்கும் இருபத்தைந்து வருட கடுங்காவல் தண்டனையும் தீர்ப்பாக அளிக்கப்பட்டது.

 

தீர்ப்பை கேட்ட வல்லபிக்கு திருப்தியாக இல்லை தான். மகதிக்கு நியாயம் செய்யவில்லையோ என்று யோசித்துக் கொண்டிருந்தவளை அறிந்தவனாக, “கோர்ட்டுக்கு சாட்சி தான் முக்கியம் லபி. இதுக்காக, நீ ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத.” என்று சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.

 

இவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து சிறிது தூரம் தள்ளி நின்றிருந்த ஜெகதீஷோ பிரகாஷிடம், “கேஸை விட இவங்க நடவடிக்கையால நம்மள குழப்பி விட்டு, இப்போ பாரேன் நாளைக்கு எங்கேஜ்மெண்ட்னு சொல்றாங்க.” என்று புலம்பினான்.

 

சரியாக அதே சமயம் பிரகதீஷ்வரன், “ஜெகா..” என்று அழைக்க, “எஸ் சார்.” என்று பதறி ஓடினான் ஜெகதீஷ்.

 

ஜெகதீஷ் அங்கு கண்டது ஆராதியா மற்றும் மகதியின் பெற்றோர்களிடம் பேசிக் கொண்டிருந்த பிரகதீஷ்வரனை தான்.

 

இரண்டு ஜோடிகளும் தங்கள் பெண்களை பற்றி தெரிந்த தகவல்களால் ஓய்ந்து தான் தெரிந்தனர்.

 

முதலில் ஆராதியாவின் பெற்றோரை பார்த்தவன், “மத்தவங்க சொல்றதை விட, பொண்ணை நம்புங்க. ஒரு விஷயம் தெரிஞ்சா, உடனே உங்க பொண்ணை சந்தேக கண்ணோடயே பார்க்காதீங்க. உங்க பொண்ணு தான அவங்க, உங்க எதிரி இல்லையே!” என்றவன், “ஹ்ம்ம், இனி உங்ககிட்ட  சொல்லி என்ன பயன்?” என்று முணுமுணுத்தபடி, மகதியின் பெற்றோரை நோக்கி திரும்பினான்.

 

என்னதான் மகதியின் சங்கடமான கடந்த கால வாழ்க்கையை நீதிமன்றத்தில் விவரிக்கவில்லை என்றாலும், மகதியின் பெற்றோரிடம் கூறியிருந்தான் பிரகதீஷ்வரன்.

 

இப்போது அவர்களை குற்றம்சாட்டும் பார்வையுடன் நெருங்கியவன், “வேலை, பணம் மட்டும் முக்கியமில்ல. நாம யாருக்காக சம்பாதிச்சோமோ அவங்களே இல்லாம போயிட்டா, அந்த பணத்தை வச்சு என்ன செய்ய முடியும்? போன உயிரை திரும்ப வரவழைக்கவா முடியும். இனி, பிள்ளைகளை வளர்க்க தெரிஞ்சுட்டு குழந்தை பெத்துக்க சொல்லணும் போல.” என்று இறுதி வரியை மட்டும் முணுமுணுத்தவன், ஜெகதீஷுக்கு கண்களை காட்டிவிட்டு, வல்லபியுடன் அங்கிருந்து நகர்ந்தான்.

 

*****

 

“நாளைக்கு நிச்சயதார்த்தம், ஆனா, இன்னும் ரெண்டு பேரும் வீட்டுக்கு வராம இருக்கீங்க!” என்று உமையாள் அலைபேசி வழியே கத்திக் கொண்டிருக்க, வல்லபியோ அலைபேசியை மேஜையில் வைத்து விட்டு, “அத்த, நீங்க இப்படி ஃபோன்ல கத்துறதை விட, வீட்டுல இருந்து கத்துனாலே ஸ்டேஷன் வர கேட்கும்.” என்று அவருடன் வம்பு வளர்த்துக் கொண்டே கிளம்பிக் கொண்டிருந்தாள்.

 

எதிரே தான் பிரகதீஷ்வரனும் இருவரையும் கண்டுகொள்ளாத பாவனையில் இருக்கையில் கண்மூடி அமர்ந்திருந்தான்.

 

இனி, இதை தானே அவன் வாழ்க்கை முழுக்க செய்ய வேண்டும்! அதான், ஒரு சிறு ஒத்திகை!

 

அப்போது அவள் கைப்பட்டு, மேஜையில் வைக்கப்பட்டிருந்த காகிதங்கள் கீழே விழ, “அச்சோ அத்த, உங்ககிட்ட பேசிட்டு இருந்தா, எனக்கு இங்க வேலையே ஓடல.” என்று புலம்பியபடி அழைப்பை துண்டித்தவள், கீழே விழுந்த காகிதங்களை எடுக்க குனிந்தாள்.

 

அப்போது எதிரிலிருந்தவனோ, “ஓய், எங்க அம்மா கிட்ட பேசுனதால வேலை ஓடலையா, இல்ல அவங்க பையனை பார்த்ததால வேலை ஓடலையா?” என்று குறும்பாக வினவ, “க்கும், நினைப்பு தான் பொழப்பை கெடுக்குமாம்! அங்க கால் மேல கால் போட்டு உட்கார்ந்துட்டே இருக்காம, வந்து எனக்கு ஹெல்ப் பண்ணுங்க.” என்று அதிகாரம் செய்தாள் காரிகை.

 

இருவரும் சீண்டியபடியே எடுத்து வைக்க, அப்போது தான் அந்த கோப்பு வல்லபியின் பார்வையில் பட்டது.

 

அவள் புருவம் சுருங்க அந்த கோப்பை பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட பிரகதீஷ்வரன், “அப்படி என்னத்த இப்படி பார்க்குற?” என்று வினவ, “மகதி லாக்கர்லையும் வீட்டுலயும் கிடைச்ச பிளாண்ட் சேம்பில்ஸ் செக் பண்ண சொல்லியிருந்தோம்ல அந்த ரிசல்ட். இதை மறந்தே போயாச்சு.” என்று இருவரும் அந்த கோப்பை பார்வையிட்டனர்.

 

அவர்களின் பார்வை அந்த கோப்பின் ஒரு பகுதியில் தடித்த எழுத்துக்களில் அச்சடிக்கப்பட்டிருந்த ‘ஹாலுசினோஜன்’ என்ற வார்த்தையில் பதிந்து அதிர்ந்து நின்றது.

 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, அவர்களின் மனதில் ஒரே கேள்வி தான்.

 

“அப்போ மகதியோட டெத்..?”

 

முற்றும்.?!

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
6
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்