Loading

அத்தியாயம் 16

 

“ஆமா, நான் தான் கொலை செய்ய திட்டம் போட்டுக் குடுத்தேன்.” என்று திமிராக மதுமதி கூற, அவளின் மாறுபட்ட உடல்மொழியோ, ‘அதுக்கு இப்போ என்ன?’ என்ற கேள்வியை மறைமுகமாக கேட்டது.

 

அவளின் திமிர் பேச்சு பிரகதீஷ்வரனுக்கும் வல்லபிக்கும் கோபத்தை வரவழைத்தாலும், இப்போது அவளிடமிருந்து தகவல்களை தெரிந்து கொள்வது அவசியமானதால் சற்று நிதானித்தனர்.

 

“குட். அப்படியே உங்க திட்டம் என்ன, அதை எப்படி செயல்படுத்துனீங்கன்னு சொல்லிட்டா எங்க வேலை முடிஞ்சுடும்.” என்று வல்லபி நக்கலாக கூறினாள்.

 

“ஏன், அதை என் லவர் உங்க கிட்ட கக்கலையா?” என்று அவளை விட படுநக்கலாக வினவினாள் மதுமதி.

 

இழுத்துப் பிடித்த பொறுமை கரையை கடக்கும் நிலையில் இருக்க, பிரகதீஷ்வரன் தான் வல்லபியை கண்களாலேயே சமாதானப்படுத்தினான்.

 

பின் மதுமதியை தீவிரமாக பார்த்து, “உங்களைப் பத்தின உண்மைகளை நீங்களே சொல்லணும்னு எதிர்பார்க்குறோம். சொல்லலன்னா, அதை எப்படி சொல்ல வைக்கணும்னும் எங்களுக்கு நல்லாவே தெரியும். இப்போ பேசிட்டு இருக்க மாதிரியே பொறுமையா எப்பவும் இருக்க மாட்டேன். விசாரணை முடிஞ்சதும், என் பொறுமை எது வரைன்னு உங்க லவர் கிட்டயே கேட்டுப் பாருங்க. அதுக்கு முன்னாடி எல்லா உண்மையையும் நீங்களே கக்குங்க.” என்றான் பிரகதீஷ்வரன்.

 

அவன் பேசிய தொனியில் சற்று பயந்து தான் போனாள் மதுமதி.

 

‘எப்படி என் பேரை சொல்லியிருப்பான்?’ என்று இங்கு வந்ததிலிருந்து மனதில் உறுத்திய கேள்விக்கு, பிரகதீஷ்வரனின் பேச்சிலிருந்து பதிலை எடுத்துக் கொண்டாள்.

 

‘அடிச்சு தான் பேச வச்சுருப்பாங்க.’ என்று தானே பதில் கூறிக் கொண்டவளுக்கு இப்போது தான் மாட்டிக் கொண்ட பயம் நெஞ்சில் தோன்றியது.

 

முன்னர், ஏதோ எரிச்சலில், ஒரு வேகத்தில், “நான் தான் திட்டம் போட்டுக் குடுத்தேன்.’ என்று உண்மையை உளறி விட்டாள் தான். ஆனால், இப்போது யோசித்தால், கொஞ்சம் நிதானமாக இருந்திருந்தால், இப்போதும் அந்த இருவரையும் கோர்த்து விட்டு தப்பித்திருக்கலாமோ என்ற எண்ணம் உண்டாவதை தவிர்க்க முடியவில்லை. அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், ஒரு முயற்சியாவது செய்து பார்த்திருக்கலாமே என்று தன்னையே நிந்தித்துக் கொண்டிருந்தாள்.

 

‘முன்ன பின்ன செத்திருந்தா தான சுடுகாட்டுக்கு வழி தெரியும்!’ என்பது போல, திடீரென்று காவலர்கள் கேள்வி கேட்கவும், முன் அனுபவம் இல்லாத காரணத்தினால், பதற்றத்தில் உண்மையை கூறிவிட்டு, இப்போது வருந்திக் கொண்டிருக்கிறாள்.

 

மதுமதி தன் சிந்தனையில் மூழ்கி இருக்க, சொடக்கிட்டு அவளை அழைத்த வல்லபி, “இனிமே தப்பிக்க வழியே இல்ல மேடம். சோ, நடந்ததை சொல்ல ஆரம்பிக்குறீங்களா, இலை விசாரணையை வேற மாதிரி நான் ஆரம்பிக்கவா?” என்று மிரட்டினாள் வல்லபி.

 

வல்லபி கூறியதை போலவே இனி தப்பிக்க வழி இல்லை என்பதை உணர்ந்த மதுமதியும் பேச ஆரம்பித்தாள்.

 

“எங்க டான்ஸ் ஸ்டுடியோல நான் தான் சீனியர் மெம்பர். சொல்லப்போனா, சாத்விக்குக்கு அப்பறம் ஜாயின் பண்ண மெம்பர் நான் தான். சோ, எனக்கு அங்க முக்கியத்துவம் இருக்கணும்னு நினைக்கிறதுல என்ன தப்பு? கொஞ்ச மாசம் அப்படி தான் போயிட்டும் இருந்துச்சு. சாத்விக் இல்லாதப்போ எல்லாரும் என்னை அப்ரோச் பண்ணாங்க. அப்போ அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு. அது மட்டுமில்லாம, அங்க இருந்த பொண்ணுங்கள்ல நான் தான் ரொம்ப அழகுன்னு எல்லாரும் சொல்லுவாங்க. என் டான்ஸ் ஸ்டெப்ஸை பாராட்டாத ஆளே இல்லன்னு சொல்லலாம். இவ்ளோ ஏன், சாத்விக்கே என்னை தான் எல்லாருக்கும் எக்ஸாம்பிளா சொல்லுவான். இப்படி வானத்துல சிறகடிச்சு பறந்துட்டு இருந்த என்னை, இடைல வந்த ஒருத்தி கீழ தள்ளுனா, அதை பார்த்துட்டு சும்மா இருப்பேனா?” என்ற மதுமதியின் முகமோ கோபத்தில் சிவந்தது.

 

‘பொறாமையா? டான்ஸ் ஸ்டுடியோல முக்கியத்துவம் குறைஞ்சுடுச்சுன்னு கொலையா?’ என்று தான் தோன்றியது வல்லபிக்கு.

 

“ஆராதியா – என் முக்கியத்துவத்தை குறைக்கவே வந்தவ. அவ வந்ததும், யாருக்கும் நான் அழகா தெரியல. என் ஸ்டெப்ஸ் பாராட்டும்படி இல்ல. சாத்விக் கூட என்னை எக்ஸாம்பிளா காட்டல. இது எல்லாத்தையும் என்கிட்ட இருந்து பறிச்சுக்கிட்டா அந்த ஆராதியா.” என்று வன்மத்துடன் கூறினாள் மதுமதி.

 

“இதுக்காக தான் ஆராதியாவை கொலை செய்ய திட்டம் போட்டீங்களா?” என்று வினவினாள் வல்லபி. என்ன முயன்றும், அவள் குரலில், ‘இதெல்லாம் ஒரு காரணமா?’ என்ற தொனியை தடுக்க முடியவில்லை.

 

“இதுக்கு கொலை செய்யணும்னா எப்பவோ செஞ்சுருக்கணும்.” என்று மதுமதி கிண்டலாக கூற, “அப்போ வேற என்ன காரணம்?” என்று கேட்டாள் வல்லபி.

 

“காரணமா?” என்று விரக்தியாக சிரித்த மதுமதி, “காரணம் நிராகரிப்பு! ஒன்னு இல்ல ரெண்டு முறை! அதுவும் நான் ஆசைப்பட்டவங்க என்னை நிராகரிக்க அவ தான் காரணம்னு தெரிஞ்சப்போ, என் மனசு எவ்ளோ பாடுபட்டுச்சு தெரியுமா? அப்போ தான் முடிவு பண்ணேன், அவளைக் கொல்லணும். அது மட்டும் போதாது, எல்லாரும் தூக்கி வச்சு கொண்டாடுற அவளை மொத்தமா அழிக்கணும். அதுக்கு அவ கேரக்டரை ஸ்பாயில் பண்ணனும். அதுக்கு தான், அவ உயிரோட இருக்கும்போதே அவளைப் பத்தி தப்பான தகவல்களை பரப்ப ஆரம்பிச்சேன். முதல்ல, அவ ஒரு சோசியல் மீடியா அடிக்ட்னு ப்ரொஜெக்ட் பண்ண ஆரம்பிச்சேன். அவ நிறைய பசங்க கூட சாட் பண்ணுவான்னு பரப்புனேன்.”

 

“இந்த பக்கம், அவளை சோசியல் மீடியாக்குள்ள சிக்க வச்சதும் நான் தான். அது ஒரு போதை, ஒருமுறை உள்ள போயிட்டா வெளிய வரது கஷ்டம்னு பாவம் அவளுக்கு தெரியல. நிறைய பசங்க கூட ‘ஃபிரெண்ட்லி சாட்’னு பேச வச்சது நான் தான். ஏன், நானே பல ஃபேக் ஐடிக்களை ஆரம்பிச்சு, அவ கூட பையன் மாதிரி பேசியிருக்கேன். அப்படி தான் அவளை ‘செக்ஸ் சாட்’டுக்குள்ள வர வச்சேன். அந்த லூசும் நான் தான்னு தெரியாம செக்ஸ்டிங் பண்ணிட்டு இருந்தா.” என்று மதுமதி சொல்ல சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டிருந்த இருவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

 

ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணின் மீது இத்தனை வன்மமா?

 

ஆம், இருந்ததே மதுமதிக்கு ஆராதியாவின் மேல்!

 

தானும் ஒரு பெண் என்பதை மறந்து, மற்றவளை அழிக்க, தான் அழிந்தாலும் பரவாயில்லை போன்ற மனநிலையில் தான் மதுமதி இருந்திருக்கிறாள்.

 

அவள் கூறியதற்கு எதிர்வினை ஆற்ற கூட தோன்றாமல் இருவரும் அமர்ந்திருக்க, மதுமதியோ அதை எல்லாம் எதிர்பார்க்காதவளாக, தன் பேச்சை தொடர்ந்தாள்.

 

“சந்தோஷ் – எனக்கானவன்னு நான் தேர்ந்தெடுத்து என் காதலை சொல்லி அதுக்கு பதில் வராம, ஒரு பார்வையாவது என் மேல விழாதான்னு, என்னை எதிர்பார்க்க வச்ச சந்தோஷ், அவளை காதல் பார்வை பார்த்துட்டு இருந்தான். எனக்கு எப்படி இருக்கும்? நிராகரிப்பு! அதுவும் வார்த்தைகளால கூட சொல்லப்படாத நிராகரிப்பு! அதுக்கு காரணம் யாரு? அவ தான? அவ மட்டும் அவன் கண்ணுல படலைன்னா, அவன் கண்டிப்பா என்னை தானே காதலிச்சுருப்பான்? ஏற்கனவே, என் அழகுல மயங்கி என் பின்னாடியே சுத்துன சாத்விக், அவ வந்ததுலயிருந்து அவ பின்னாடி சுத்த ஆரம்பிச்சான். அவனை விட சந்தோஷ் பெட்டரா இருந்தான்னு அப்போ விட்டா, இப்போ சந்தோஷையே அபகரிக்க பார்த்தா, சும்மா விடுவேனா? அதான், சந்தோஷை பத்தி தப்பா சொல்லி ஆராதியா மனசுல உண்டான சலனத்தை மொத்தமா கலைச்சுட்டேன். நல்லவேளை, அதுக்கு அப்பறம் நான் நினைச்ச மாதிரியே, கொஞ்ச நாள்ல சந்தோஷ் காதலை சொல்ல, இவ நிராகரிக்க, அந்த சண்டையை பயன்படுத்தி, என் சந்தோஷை திரும்ப என்கிட்ட வர வச்சுட்டேன்.” என்று வெற்றிச்சிரிப்பு சிரித்தாள் மதுமதி.

 

“சந்தோஷ் உன் காதலன்னா, ஏன் இந்த கேஸ்ல அவனை மாட்ட வைக்க ‘எஸ் கில்லர்’ பேட்டர்னை யூஸ் பண்ண சொன்ன?” என்று பிரகதீஷ்வரன் வினவினான்.

 

“அட பரவாலையே, கண்டுபிடிச்சுட்டீங்க போல! ஆனா, அந்த சந்தோஷ் சரியான லூசு! எஸ் கில்லர் ஜெயில்ல இருக்கான்னு கூட தெரியாம, நான் சொன்னதை அப்படியே பண்ணிட்டான்.” என்ற மதுமதி, சிறு இடைவெளி விட்டு, “பின்ன என்ன, போன லவ் முடிஞ்சுதுன்னு விடாம, அவளை பழிவாங்க போறேன்னு சொன்னான். நானும் நல்ல காதலியா சரின்னு சொன்னா, இவன் வேறொரு ஃபேக் ஐடில என் முன்னாடியே அவளோட கடலை போட்டுட்டு இருந்தான். எனக்கு கோபம் வருமா வராதா? கேட்டா, பழி வாங்குறேன், அவளை கஷ்டப்படுத்த போறேன்னு என்கிட்டயே உருட்டிட்டு இருந்தான். ஒரு கட்டத்துல, திரும்ப அவகிட்டயே போக பார்த்தான். இதுல, நடுவுல ஃபிரெண்டு புராணம் வேற! அதான், அந்த டிராமாவை நிறுத்த, நான் இந்த கொலை திட்டம் போட வேண்டியதா போச்சு. என்னை விட்டுட்டு இன்னொருத்தி கூட போக பார்த்தவனை அப்படியே விட மனசில்ல. அதான், இந்த கேஸ்ல அவனை மாட்டிவிட தனியா பிளான் போட்டேன்.” என்று அசராமல் கூறினாள்.

 

“ஓஹ், இந்த திட்டத்துக்கு சந்தோஷ் உடனே சம்மதிச்சுட்டாரா?” என்று பிரகதீஷ்வரன் கேட்க, “எங்க சார், ஆரா பாவம்னு ஒரு பக்கம் புலம்பினா, மகி என்னைப் பத்தி என்ன நினைப்பான்னு இன்னொரு பக்கம் புலம்பினான். அப்பறம், சாத்விக்கை வச்சு தான் இவனை வழிக்கு கொண்டு வந்தேன்.” என்று உதட்டைப் பிதுக்கி கூறினாள்.

 

அதுவரை ஏதோ சிந்தனையில் இருந்த வல்லபி, அதன் முடியவாக, “அப்போ ஆராதியா பத்தி அவங்க அப்பாகிட்ட தப்பா சொன்னதும் நீங்க தான்ல?” என்று வினவ, மதுமதியோ வேகமாக ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.

 

“அந்தாளை நம்ப வைக்குறது அவ்ளோ ஈஸியா இருக்கும்னு நான் நினைக்கவே இல்ல. ஜஸ்ட் உங்க பொண்ணு சரியில்ல, அவ மொபைலை செக் பண்ணுங்கன்னு சொன்னேன். அவரும் நான் நம்பத்தகுந்த ஆளான்னு கூட பார்க்காம, அவ மொபைலை செக் பண்ண, அவ தான் என் ஃபேக் ஐடி கூட பேசிட்டு இருந்தாளே! அதுவே போதும், அவளுக்கும் அவ அப்பாக்கும் சண்டை ஏற்பட. இதுல, நானே எதிர்பார்க்காத ட்விஸ்ட் என்னன்னா, அவ அப்பா அவளை லெஸ்பியன்னு சந்தேகப்பட்டது தான்! அதுவும் ஒரு விதத்துல எனக்கு சாதகமா தான் அமைஞ்சது.” என்று நக்கலாக சிரித்தாள்.

 

அதை கணக்கில் எடுத்துக் கொள்ளாத வல்லபி, “நேத்து அந்த யூ-ட்யூப் சேனலுக்கு தகவலை லீக் பண்ணதும் நீதான?” என்று வினவ, “நானே தான். நான தான் சொன்னேன்ல, அவளை மொத்தமா… மொத்தமா அழிக்கணும்னு.” என்று பழிவெறி தாண்டவமாட கூறினாள் மதுமதி.

 

அவளை திட்ட கூட வார்த்தைகள் வராமல் வல்லபி கோபத்துடன் பார்த்திருக்க, இம்முறை பிரகதீஷ்வரன் கேள்விகளை கேட்க ஆரம்பித்தான்.

 

“ஆராதியாக்கான பதிலை சொல்லியாச்சு. அப்போ மகதிக்கான காரணம் என்ன?” என்று அவன் வினவ, “ம்ச், அவ என் லிஸ்ட்லேயே இல்ல. என்னதான், சந்தோஷ் அடிக்கடி அவளைப் பத்தி பேசுறது எரிச்சல் தந்தாலும், அவ அவனோட ஃபிரெண்டு தான்னும், அதுக்கு மேல இல்லன்னும் எனக்கு நல்லாவே தெரியும். சோ, அவளை நான் கணக்குல கூட எடுக்க மாட்டேன். ஆனா, என்ன காரணம்னு தெரியல, சாத்விக் என்னை தனியா மீட் பண்ணி, மகதியையும் கொல்லணும்னு சொன்னான். முதல்ல நான் முடியாதுன்னு தான் சொன்னேன். ஆனா, பெரிய இவன் மாதிரி, வீடியோ லீக் பண்ணிடுவேன்னு மிரட்டுனான். நானும், அவன் தான கொல்ல போறான்னு ஓகே சொல்லிட்டேன்.” என்றாள் மதுமதி.

 

‘போனால் போகட்டும் என்று இன்னொரு கொலையா?’ என்று வல்லபி பல்லைக் கடித்தாலும், அமைதியாக இருக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால், எதிரிலிருந்தவளை பார்க்காமல், வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டாள்.

 

“சோ, இந்த பிளான் சந்தோஷுக்கு தெரியாது, அப்படி தான?” என்று பிரகதீஷ்வரன் கேட்க, “ஆமா, அவனுக்கு தெரியாது. தெரிஞ்சா, அவன் ஃபிரெண்டுக்காக இந்த பிளானை மொத்தமா ஸ்பாயில் பண்ண சான்ஸ் இருக்கு. அதான் நாங்க சொல்லல. சந்தோஷ் ஆராதியாவை ஸ்டுடியோல கொலை செய்யுற நேரம், சாத்விக் மகதி வீட்டுக்கு போய் அவளை கொலை செய்யணும்னு திட்டம் போட்டோம். எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு. இடையில இந்த சாத்விக் வந்து, லூசு மாதிரி ‘மகதி இறந்துட்டா’ன்னு உளற, சந்தோஷ் அதைக் கேட்டு அவன் மேல பாய, அப்பறம் சாத்விக்கை வச்சு சந்தோஷை மிரட்டி, திரும்ப சாத்விக்கோட மகதி வீட்டுக்கு போய், அவன் பண்ணாம விட்டதை பண்ணின்னு டென்ஷன் படுத்திட்டாங்க.” என்று சலித்துக் கொண்டாள் மதுமதி.

 

“அப்போ இந்த ரெண்டு கொலையையும் கனெக்ட் பண்ண தான், ஆராதியாக்கும் மகதிக்கும் ரிலேஷன்ஷிப் இருக்க மாதிரி செட்டப் பண்ணீங்களா?” என்று வல்லபி வினவ, “அட ஆமா, சந்தோஷ் தான் ருத்ரான்னு நீங்க கண்டுபிடிச்சுட்டா, ஈஸியா எங்களை நெருங்கிடுவீங்கன்னு தான், உங்களை சுத்தல்ல விட, அவன் பயன்படுத்துன மொபைலையும், கூடவே மகதி அடிக்கடி கிறுக்கி வச்சுருக்க ஆராதியாவோட படங்களையும் மகதியோட லாக்கர்ல வைக்க சொன்னேன். அதுக்கும், சந்தோஷோட போராட வேண்டியதா இருந்துச்சு. ஆக்சுவலி, ஆராதியா – மகதி விஷயம் போலீஸுக்கு எப்படி தெரிய வைக்குறதுன்னு யோசிச்சுட்டு தான் இருந்தேன். அந்த நேரத்துல தான் ஆராதியாவோட அப்பாவே உங்ககிட்ட விஷயத்தை கொண்டு வர, நானும் அதுக்கு ஏத்த மாதிரி பேசி, உங்களை அந்த வழியில போக வச்சேன். ஆனா, அதுல தான் நாங்க மாட்டுவோம்னு நான் எதிர்பார்க்கல. ப்ச், இவனுங்க மாட்டுனாலும் என் பேரை சொல்ல மாட்டாங்கன்னு நினைச்சேன். அதுவும் தப்பா போச்சு!” என்றாள் மதுமதி.

 

அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாதவனாக, விசாரணையை முடித்துக் கொண்டு பிரகதீஷ்வரன் வெளியேறும் சமயம், “ஈஷு, சிசிடிவியை கொஞ்சம் ஆஃப் பண்ண சொல்லுங்க.” என்று எழுந்து கொண்டாள் வல்லபி.

 

பிரகதீஷ்வரனும் மதுமதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு தோளை குலுக்கி விட்டு வெளியே செல்ல, அடுத்து பத்து நிமிடங்கள் கழித்து அந்த அறையிலிருந்து, கைகளை உதறிக் கொண்டு வெளியே வந்தாள் வல்லபி.

 

*****

 

அடுத்த இரண்டு மணி நேரம் அவர்களுக்கு பரபரப்பாக சென்றது.

 

மதுமதியின் வாக்குமூலத்தை காட்டி சாத்விக்கையும் பேச வைத்தனர். ஆனால், அவனோ இறுதி வரை தான் மகதியை கொலை செய்யவில்லை என்றே கூறினான்.

 

இந்த விபரங்களை எல்லாம் கோப்பில் பதிவேற்றி, இணை ஆணையரான மகாதேவிடம் சமர்பித்தனர்.

 

அப்போதும் வல்லபி சும்மா இருக்காமல், “சார், வீ காட் எவ்ரிதிங்.” என்று கேலியாக கூறியபடி தான் கோப்பை அவரிடம் கொடுத்தாள்.

 

என்னதான் தந்தை மீது கொண்ட கோபம் தவறென்று தெரிந்தாலும், இப்போது அதன் தாக்கம் குறைந்திருந்தாலும், சட்டென்று சாதாரணமாக அவரிடம் பேச முடியவில்லை. அதனால் தான் இந்த சீண்டல் பேச்சு!

 

அது பிரகதீஷ்வரனுக்கும் புரிந்தாலும், தந்தை – மகளுக்கு நடுவே அவன் செல்லவில்லை.

 

கோப்பை வாங்கி பார்வையிட்டவர், “குட் ஜாப். கேஸோட கோணம் திசை மாறிப் போனாலும், குற்றவாளிகளை சரியா கண்டுபிடிச்சுட்டீங்க. கீப் இட் அப்.” என்று பாராட்டினார் மகாதேவ்.

 

“எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துகிட்டது தான் சார்.” என்று கேலி செய்துவிட்டே வல்லபி அங்கிருந்து செல்ல, அவளையும் அவரையும் நமுட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் பிரகதீஷ்வரன்.

 

“என்ன நடக்குது பிரகா?” என்று மகாதேவ் வெளியே செல்லும் மகளை பார்த்தபடியே கேட்க, “ஓஹ், இப்போ நீங்க மாமாவா பேசுறீங்களா?” என்று அவன் பங்குக்கு பேசிவிட்டு அவனும் வெளியேறி விட்டான்.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்