Loading

அத்தியாயம் 15

 

“ஃபேக் நியூஸுக்கு சப்போர்ட் பண்ண ஆளு தான் அந்த மூணாவது நபர்.” என்று பிரகதீஷ்வரன் கூறிவிட்டு சென்று விட, ‘அது யாரு? ஆராதியா அப்பாவா இருக்குமோ? அவருக்கும் மகதிக்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை, தன் பொண்ணு தப்பா போறதுக்கு மகதி தான் காரணம்னு தப்பா நினைச்சு கொலை பண்ணியிருப்பாரோ? இல்ல இல்ல, ரெண்டு பொண்ணுங்களை பத்தியும் தப்பா தகவல் வரதுக்கு முன்னாடியே, அவரு தான ஆராதியா லெஸ்பியன்னு சொன்னது. இன்ஃபேக்ட், அந்த தகவலை முதல்ல சொன்னதே அவரு தான். அவருக்கு தெரிஞ்சதை வச்சு சொல்லியிருக்காரு. மேபி, அவருக்கு இந்த விஷயத்தை சொன்னது ஏன் ஈஷு சொல்ற இந்த ‘ஆளா’ இருக்கக் கூடாது? என்று தானே கேள்வி, தானே பதிலாக நின்றிருந்தாள் வல்லபி.

 

அப்போது தான் அந்த முகம் மனதிற்குள் வந்து போனது.

 

இல்ல ஜோஸ், உனக்கு தான் தியாவை பத்தி தெரியல.”

 

ஷீ லைக்ஸ் கேர்ள்ஸ்.”

 

என்ற குரல் ஒலிக்க, ‘ம…து…ம..தி..?” என்று வல்லபியின் உதடுகள் சத்தம் வராமல் அந்த பெயரை உச்சரிக்க, அதே சமயம் ஜெகதீஷ் காட்டிய புகைப்படத்தில், சாத்விக்கின் மகிழுந்தில் அமர்ந்திருந்த மதுமதியை கண்டு தன் சந்தேகத்தை உறுதி செய்தான் பிரகதீஷ்வரன்.

 

அப்போது அங்கு வேகமாக வந்த வல்லபி, “மதுமதி தானா?” என்று தான் கண்டுபிடித்ததை கேட்க, அதற்கு மறுமொழியாக அந்த புகைப்படத்தை காட்டிய பிரகதீஷ்வரன், “இந்த ரெண்டு கொலைகளுக்கு பின்னாடி இருக்க மாஸ்டர் மைண்ட் இந்த மதுமதியே தான்!” என்றான்.

 

“பிரகாஷ், இன்வெஸ்டிகேஷன்னு சொல்லி மதுமதியை கூட்டிட்டு வாங்க.” என்று கூறிய வல்லபி, “ஹ்ம்ம், ஜோஸ்ஃபினையும் கூட்டிட்டு வாங்க. நம்ம கண்டுபிடிச்ச இந்த விஷயம் அவங்களுக்கு தெரிய வேண்டாம்.” என்று சேர்த்தே கூறினாள்.

 

மதுமதியை அழைத்து வர ஒரு குழு செல்ல, பிரகதீஷ்வரனும் வல்லபியும் அந்த இடைவேளையில் மீண்டும் சந்தோஷை விசாரிக்க சென்றனர்.

 

செல்லும் வழியில், “மதுமதி – ஆராதியாக்காவது கனெக்ஷன் இருக்கு. ஃபிரெண்ட்ஸுக்குள்ள ஈகோ கிளாஷ்னு ஏதாவது காரணம் இருக்கலாம். ஆனா, மகதிக்கும் மதுமதிக்கும் என்ன தொடர்பு?” என்று வல்லபி யோசனையுடன் கேட்க, “ஹ்ம்ம், மதுமதியோட பொஸஸிவ்நெஸ் கூட காரணமா இருக்கலாம்.” என்று பிரகதீஷ்வரன் கூறிவிட்டு சந்தோஷ் இருந்த அறைக்குள் நுழைந்தான்.

 

*****

 

சந்தோஷ் இருந்த அறைக்குள் நுழைந்த பிரகதீஷ்வரன், “உங்க ஃபிரெண்டு சாத்விக் கொஞ்சம் தகவல்களை சொல்லியிருக்காரு. ஆனா, அது உண்மையா என்னன்னு நீங்க தான் கன்ஃபார்ம் பண்ணனும் சந்தோஷ்.” என்று அவனைக் கூர்மையாக பார்த்துக் கொண்டே கூறினான்.

 

“சார், அவன் என்கிட்டயே பல விஷயங்களை மறைச்சுருக்கான்னு இன்னைக்கு தான் தெரிய வந்துருக்கு. சோ, எனக்கு தெரிஞ்ச வரை சொல்லிடுறேன்.” என்றான் சந்தோஷ்.

 

“ம்ம்ம், அதுக்கு முன்னாடி இந்த ரெண்டு கொலைகளையும் பிளான் பண்ண அந்த மாஸ்டர் மைண்ட் யாருன்னு சொல்லுங்க.” என்று பிரகதீஷ்வரன் வினவ, “ஆராதியாவோட ஃபிரெண்டு மதுமதி தான் சார் காரணம்.” என்று உறுதி செய்தான் சந்தோஷ்.

 

அவன் கூறியதைக் கேட்ட மற்ற இருவரும் பார்வையை பரிமாறிக் கொண்டனர்.

 

எங்கு தான் கூறியதை அவர்கள் நம்பவில்லையோ என்று எண்ணியபடி, “சார், நான் உண்மையை தான் சொல்றேன். மதுமதி தான் முழு திட்டம் போட்டுக் குடுத்தது.” என்று கூற, “நாங்க நம்புறோம் சந்தோஷ். ஏற்கனவே, மதுமதி மேல எங்களுக்கு சந்தேகம் இருந்துச்சு. இப்போ நீங்க அதை உறுதி படுத்திட்டீங்க.” என்றான் பிரகதீஷ்வரன்.

 

இப்போது வல்லபி, “சந்தோஷ், நீங்க, சாத்விக், மதுமதி எப்படி இந்த திட்டத்துக்குள்ள வந்தீங்க?” என்று வினவினாள்.

 

“நான் ருத்ராவா ஆராதியா கூட ஆன்லைன்ல பேசிட்டு இருக்கும்போது தான் மதுமதி கூட பழக்கம் ஏற்பட்டுச்சு. அதுக்கு முன்னாடி, ‘ஹை-பை’யோட முடிஞ்ச எங்க பேச்சு, அதையும் தாண்ட ஆரம்பிச்சுது. சொல்லப்போனா, அவ தான் ஆராதியா உண்டாக்குன ஏமாற்றத்துல இருந்து என்னை மீட்டா. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா நாங்க நெருங்க ஆரம்பிச்சோம்.” என்று பேசிக் கொண்டே இருந்தவன், இந்த இடத்தில் தயங்கி நிறுத்தினான்.

 

‘ஒரு பெண்ணால் உண்டான காதல் தோல்விக்கு பழிவாங்க அவளை ஏமாற்றும் நேரத்தில், இன்னொரு பெண்ணுடன் காதல் உண்டானது.’ என்று கூற அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை போலும்.

 

இப்போது யோசித்தால், ஆராதியா மேலிருந்தது உண்மையிலேயே காதலா, இல்லை வெறும் ஈர்ப்பா என்ற சந்தேகத்துடன், மதுமதியின் மீது தான் கொண்ட காதல் உண்மையா என்றும், அவள் தன் மீது கொண்டிருப்பதாக சொல்லிய காதல் உண்மை தானா என்ற சந்தேகமும் உண்டானது. அதனாலும் தான் அவனின் இந்த தயக்கம் என்றும் கூறலாம்.

 

ஒரு பெருமூச்சை வெளியிட்ட வல்லபி, “சோ, உங்க புது காதலி திட்டம் போட்டுக் கொடுக்க, உங்க பழைய காதலியை கொலை பண்ணியிருக்கீங்க.” என்று நக்கலாக கூறியவள், “ஆமா, ஆராதியாவை கொலை பண்ற ஐடியா உங்களோடதா இல்ல மதுமதியோடதா?” என்றும் வினவினாள்.

 

அவளுக்கு மட்டுமல்ல பிரகதீஷ்வரனுக்கும் இதற்கான பதில் தெரிந்தே இருந்தது. ஆனால், சம்பந்தப்பட்டவனுக்கு புரிய வேண்டும் அல்லவா.

 

அவனோ, கேள்வி புதிது என்பது போல அதற்கான பதிலை தன் மூளைக்குள் தேடி பார்த்துக் கொண்டிருந்தான்.

 

சில நொடிகளில் பதில் கிடைத்தது தான். ஆனால், அதுவும் அவனுக்கு குழப்பத்தையே தந்தது.

 

“அது வந்து… மது தான் ஐடியா குடுத்தது.” என்று கூறியவன், “நான் ஆராக்கும் மகிக்கும் இடையில மாட்டிட்டு தவிச்சப்போ, ஒரு கோபத்துல மது சொன்ன ஐடியா தான் அது.” என்று திணறினான் சந்தோஷ்.

 

“ஹ்ம்ம், ஒரே நேரத்துல ஆன்லைன் ஆஃப்லைன்னு ரெண்டு பொண்ணுங்களை காதலிச்சா, இப்படி தான் ஐடியா குடுப்பா.” என்று வழக்கம் போல வல்லபி முணுமுணுக்க, பிரகதீஷ்வரன் அவளை முறைத்துவிட்டு, “சோ, ஐடியா குடுத்தது மதுமதி, எக்சிக்யூட் பண்ணது நீங்க. இந்த திட்டம் சாத்விக்குக்கு தெரியுமா?” என்று வினவினான்.

 

“ம்ம்ம், தெரியும் சார். என்னதான் மது இந்த ஐடியா குடுத்தாலும், அதுக்கு அப்பறம் நாங்க அதை பத்தி பேசல. ஒரு டைம் எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகிடுச்சு. அப்போ சாத்விக் கிட்ட என் மனசுல இருந்ததை கொட்டுனப்போ, எனக்கே தெரியாம, மது சொன்னதையும் சொல்லிட்டேன். அவனும் இந்த ஐடியாக்கு சப்போர்ட் பண்ண, நாங்க மூணு பேரும் சேர்ந்து தான் இந்த திட்டம் போட்டோம்.” என்றான் சந்தோஷ்.

 

இப்போதும் பிரகதீஷ்வரனும் வல்லபியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

‘சோ, சாத்விக் ஆராதியா கொலை திட்டம் தெரியாதுன்னு சொன்னது பொய். மதுமதியை இந்த கேஸ்ல இழுக்கக் கூடாதுன்னு தான் இதை மறைச்சுருக்கணும்.’ என்று இருவருமே யோசித்தனர்.

 

ஏதோ தோன்ற, “அப்போ சாத்விக் மகதியை கொல்ல பிளான் பண்ணதும் உங்களுக்கு தெரிஞ்சுரிக்கணுமே.” என்று  வல்லபி கேட்க, “இல்ல மேம், சத்தியமா இது எனக்கு தெரியாது. தெரிஞ்சுருந்தா எந்த கொலை திட்டத்துக்கும் நான் ஒத்திருந்துருக்க மாட்டேன்.” என்று கதறினான் சந்தோஷ்.

 

“அப்போ மகியை கொலை செஞ்ச விஷயம் உங்களுக்கு எப்படி எப்போ தெரியும்?” என்று கேட்டாள் வல்லபி.

 

“மேம், கொலை நடந்த அன்னைக்கு டான்ஸ் ஸ்டுடியோ போறதுக்கு முன்னாடி என் மனசுல ஏதோ தப்பா நடக்கப் போகுதுன்னு தோணிட்டே இருந்துச்சு. அதான், முதல்ல மகி வீட்டுக்கு போனேன். எப்பவும் அவ வீட்டுக்குள்ள நான் போக மாட்டேன். அதான், அவளை வெளிய வர சொல்ல கால் பண்ணேன். ஆனா, அவ எடுக்கவே இல்ல. ஆராதியா – ருத்ரா விஷயம் தெரிஞ்சு என்மேல கோபமா இருக்காளோன்னு யோசிச்சேன். ஆனாலும், அந்த நைட் நேரம் அவ வீட்டுக்கு போறதுக்கு மனசில்ல. அதான் அங்க இருந்து ஸ்டுடியோக்கு கிளம்பிட்டேன். அங்க… எல்லாரும் டான்ஸ் பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கும்போது அவங்களுக்கு தெரியாம ஒரு இடத்துல ஒளிஞ்சுக்கிட்டேன். முதல் நாளே அந்த பில்டிங்ல இருக்க சிசிடிவியை ஆஃப் பண்ணிட்டதால, அது எனக்கு ஈஸியாவே இருந்துச்சு. அப்பறம்  ஆராதியா தனியா இருந்தப்போ, அவளை கொலை செஞ்சேன்.” என்று அன்று நடந்ததை அவன் இடத்திலிருந்து கூறினான் சந்தோஷ்.

 

“சோ, உங்களுக்கு அந்த ‘எஸ் கில்லர்’ பத்து தெரியாது ரைட்?” என்று கேட்டு உறுதிபடுத்திக் கொண்டான் பிரகதீஷ்வரன்.

 

“ஹ்ம்ம், சரி மகதி கொலையை பத்தி எதுவும் சொல்லலையே?” என்று வல்லபி வினவ, “மேம், அது நான் ஆராதியாவை கட் பண்ணிட்டு இருக்கும்போது, அங்க தனியா பேச வந்த மதுவும் சாத்விக்கும் பேசுறதை வச்சு தான் மகதி இறந்துட்டான்னு தெரிய வந்துச்சு. அப்போவே சாத்விக் கிட்ட சண்டைக்கு போனேன். அவனோ, நான் ஆராதியாவை கொலை செஞ்ச வீடியோவை காட்டி மிரட்டி, நானும் மதுவும் மகி விஷயத்துல அவனுக்கு ஹெல்ப் பண்ணலைன்னா, அந்த வீடியோவை போலீஸுக்கு அனுப்பிடுவேன்னு மிரட்டுனான். வேற வழி தெரியாததால, மது மகி உடம்புலயும் இதே மாதிரி காயங்களை உண்டாக்கி, அவளையும் சீரியல் கில்லர் கொன்னது மாதிரி செட்டப் பண்ண சொன்னா.” என்று விளக்கம் கொடுத்தான் சந்தோஷ்.

 

“ஓகே சந்தோஷ், நீங்கி இப்போ சொன்னதை வாக்குமூலமா ரெக்கார்ட் பண்ணியாச்சு.” என்ற பிரகதீஷ்வரன் அந்த அறையை விட்டு வெளியே வர, அவனை பின்தொடர்ந்தாள் வல்லபி.

 

“ப்ச், இவன் என்ன இவ்ளோ முட்டாளாவா இருப்பான்? அந்த மதுமதி இவனை ஏமாத்துறது கூட தெரியலையா?” என்று வல்லபி ஆதங்கமாக வினவினாள்.

 

இப்போது அவளின் மொத்த கோபமும் மதுமதியின் மீது திரும்பியது. இப்படி இருவரை ஏமாற்றி, இருவரை கொலை செய்ய வைத்து, அப்படி என்ன சாதிக்க போகிறாள் என்ற உள்ளக்குமுறல் வல்லபியின் குரலில் வெளிப்பட்டது.

 

“அவ ஏமாத்துனது தெரியாம இல்லை, அந்த ஏமாற்றத்தை முழுசா அவனால ஏத்துக்க முடியல. அதான், அவ பெயரை சொல்லிட்டாலும், அவ மேல தப்பில்லன்னு வக்காலத்து வாங்குறான்.” என்று சந்தோஷின் மனநிலையை சரியாக கணித்தான் பிரகதீஷ்வரன்.

 

“ஷீ இஸ் வெரி மேனிப்புலேட்டிவ் அண்ட் எக்ஸ்ட்ரீம்லி டேஞ்சரஸ். இரண்டு கொலையை பண்ண ஆளுங்களை தூண்டுனது மட்டுமில்லாம, அவ மாட்டிக்காம இருக்க, அவளை பத்தி நல்ல இமேஜை ரெண்டு பேருக்கிட்டயும் உருவாக்கி இருக்கா. ஒருத்தன், அவளுக்காக வக்காலத்து வாங்குறான். இன்னொருத்தன், அவ பெயரை கூட சொல்ல மாட்டிங்குறான்.” என்று வல்லபி கூற, “ஹ்ம்ம், எனக்கென்னமோ, அவ பிளானே, இவங்க ரெண்டு பேரையும் இந்த கேஸ்ல சிக்க வைக்கிறது தான்னு தோணுது. இல்லன்னா, ஜெயில்ல இருக்க எஸ் கில்லரோட பேட்டர்னை எதுக்கு யூஸ் பண்ணனும்?” என்று கேட்டான் பிரகதீஷ்வரன்.

 

“ஹ்ம்ம், ஆராதியா இறந்த பதினைஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி தான் மகதியோட டெத்னு அட்டாப்சி ரிப்போர்ட் சொல்லுது. அப்போ ஆராதியாவை சந்தோஷ் கொலை பண்றதுக்கு முன்னாடி விட்ட பிரேக்கப்போ தான் சாத்விக் மகதியை கொல்ல போயிருக்கணும். ஆராதியா இறந்தது எக்ஸஸிவ் பிளட் லாஸ். சோ, என்னதான் முதல்ல சந்தோஷ் ஆராதியாவை தாக்கி இருந்தாலும், ஆராதியா உயிர் உடலை விட்டு பிரிய நேரம் எடுத்துருக்கும். ஆனா, மகதி இறந்தது தொண்டைல ஏற்பட்ட காயத்தால தான். சோ, இந்த கேப்ல சாத்விக் மகதியை கொலை பண்ணிட்டு, திரும்ப டான்ஸ் ஸ்டுடியோக்கு வந்து, சந்தோஷ் சொன்ன மாதிரி அவனை மிரட்ட வாய்ப்பிருக்கு தான?” என்று வல்லபி கூற, “ம்ம்ம், சரிதான். வா நாம அந்த சிசிடிவி ஃபூட்டேஜ்ல டைம் பார்த்து கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்.” என்று பிரகதீஷ்வரன் அவளை அழைத்து சென்றான்.

 

அந்த காணொளி காட்சியும் வல்லபி யூகித்து கூறியதை உறுதிபடுத்தியது.

 

முதலில், மகதியின் வீட்டிலிருந்து சந்தோஷ் தன் வாகனத்தில் செல்வதும், சிறிது நேரத்தில், மகதியின் வீட்டை நோக்கி சாத்விக் தன் வெள்ளை நிற மகிழுந்தில் செல்வதும் தெரிந்தது.

 

முதல் முறை, சாத்விக் மட்டும் தனியாக தான் சென்றிருந்தான்.

 

அதன்பிறகு, மகதியின் வீட்டிலிருந்து அந்த வெள்ளை நிற மகிழுந்து செல்வதும், மீண்டும் சிறிது நேரம் கழித்து அவளின் வீட்டை நோக்கி செல்வதும் பதிவாகி இருந்தது.

 

இம்முறை, சாத்விக்குக்கு அருகே மதுமதியும், அவனுக்கு முன்னே சந்தோஷும் சென்றனர்.

 

அதைக் கண்டதும், “நான் சொன்னது சரிதான் ஈஷு.” என்று வல்லபி கூற, அதை ஆமோதித்தவன், “எனக்கு என்னமோ சாத்விக் மதுமதியை பத்தி சொல்லுவான்னு தோணலை லபி. சோ, நம்ம டீம் மதுமதியை கூட்டிட்டு வந்ததும், முதல்ல அவளை விசாரிப்போம்.” என்று கூறினான்.

 

ஜெகதீஷும் பிரகாஷும், இருவரும் சகஜமாக பேசிக் கொள்வதைக் கண்டு, குழம்பி, பின் ஒருவரையொருவர் பார்த்து உதடு பிதுக்கிக் கொண்டனர்.

 

இருவரும் எப்போது சண்டை கோழிகளாக திரிவர், எப்போது சகஜமாக பேசிக் கொள்வர் என்பது அவர்களே அறியாத விஷயமாகி போனது!

 

*****

 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே மதுமதியும் ஜோஸ்ஃபினும் அங்கு அழைத்து வரப்பட்டனர்.

 

இருவரின் முகங்களும் சற்று பதற்றமாகவே காணப்பட்டன.

 

பிரகதீஷ்வரனைக் கண்டதும் ஜோஸ்ஃபின் தான், “சார், என்னாச்சு? முதல்ல சாத்விக்கை தேடி போலீஸ் வந்தாங்க. இப்போ எங்களை கூட்டிட்டு வந்துருக்காங்க. என்ன தான் நடக்குது சார்?” என்று வினவினாள்.

 

பிரகதீஷ்வரனோ அமைதியாக, “கில்லரை கண்டுபிடிச்சாச்சு. சிலதை உங்ககிட்ட உறுதிபடுத்த தான் இந்த விசாரணை. பயப்பட வேண்டாம்.” என்றவன், அவர்கள் ஏதோ கேட்க வரும் முன், “இந்த விசாரணை முடிஞ்சதும், நாங்களே கில்லர் யாருன்னு சொல்றோம். இப்போ ரெண்டு பேரு கிட்டயும் தனித்தனியா விசாரிக்க போறோம். முதல்ல ஜோஸ்ஃபின் நீங்க வாங்க.” என்று அவர்களுக்கு பேசவே நேரம் கொடுக்காமல் தனியே அழைத்துச் சென்றான்.

 

அங்கு குழப்பத்தில் நின்றிருந்த மதுமதியைக் கண்ட வல்லபி, தன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, “நீங்க இங்க உட்காருங்க மதுமதி.” என்று கூறிவிட்டு, அவளும் முன்னே சென்றவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.

 

*****

 

“ஜோஸ்ஃபின், நான் இப்போ கேட்குற கேள்விகளுக்கு நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க.” என்று பீடிகையுடன் ஆரம்பித்த பிரகதீஷ்வரன், “சாத்விக் ஆராதியாவை ஒன்-சைட்டா லவ் பண்ணதை சொன்ன நீங்க, ஏன் சந்தோஷோட லவ் ப்ரோபோசல் பத்தியும், ரெண்டு பேருக்கும் நடந்த சண்டையை பத்தியும் சொல்லல?” என்று வினவினான்.

 

“என்ன சந்தோஷ் தியாவை லவ் பண்ணானா? இது எப்போ? அவனும் மதுவும் தான லவ் பண்றாங்க!” என்று குழப்பமாக கூறினாள் ஜோஸ்ஃபின்.

 

“சோ, இந்த விஷயத்தை பத்தி உங்களுக்கு எதுவும் தெரியாது, அப்படி தான?” என்று பிரகதீஷ்வரன் மீண்டும் வினவ, “ஆமா சார், நீங்க சொல்லப் போய் தான், இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சுன்னே எனக்கு தெரியுது. மேபி, நான் அன்னைக்கு வராம இருந்துருக்கலாம்.” என்றாள் ஜோஸ்ஃபின்.

 

“ஹ்ம்ம், சரி நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க. மதுமதி கிட்ட விசாரிச்சுட்டு சொல்றோம்.” என்ற பிரகதீஷ்வரன் வல்லபியிடம் கண்களால் சைகை செய்ய, அவளும் புரிந்தது போல, ஜோஸ்ஃபினை வெளியே வேறொரு அறைக்கு, மதுமதியை சந்திக்க நேராதவாறு அழைத்துச் சென்றாள்.

 

செல்லும் வழியில், “மேம், அப்போ சந்தோஷ் தான் கில்லரா?” என்று ஜோஸ்ஃபின் கேட்க, “விசாரணை போயிட்டு இருக்கு மா. முழுசா முடிஞ்சா தான் உறுதியா சொல்ல முடியும்.” என்றாள் வல்லபி.

 

பின், மீண்டும் வந்து மதுமதியை அந்த அறைக்கு அழைத்துச் சென்றாள்.

 

உள்ளே நுழைந்ததும், “சார், ஜோஸ் எங்க?” என்று மதுமதி வினவ, “ஷீ இஸ் சேஃப்.” என்ற பிரகதீஷ்வரன், “ஆனா, நீங்க இல்ல.” என்றும் சேர்த்து கூற, மதுமதியோ புருவ முடிச்சுடன் அவனைப் பார்த்தாள்.

 

“ஓகே மிஸ். மதுமதி, கண்ணாமூச்சி ஆட்டத்தை நாம முடிச்சுக்கலாம்னு நினைக்குறேன். உண்மையை நீங்களே சொல்லிட்டா, டைம் மிச்சம் ஆகும்.” என்று அவன் கூற, அப்போதும் புரியாத பாவனையில் தான் பார்த்தாள் மதுமதி.

 

“ரெண்டு கொலைக்கு மாஸ்டர் மைண்ட்டா இருந்த மதுமதிக்கு நான் பேசுறது புரியலன்னு சொன்னா ஆச்சரியமா இருக்கே.” என்று அவன் நக்கலாக கூற, ஏதோ புரிந்தது போல, “சார், என்ன சார் சொல்றீங்க? நானா! மாஸ்டர் மைண்ட்டா? நான் எதுக்கு என் ஃபிரெண்டை கொலை செய்ய திட்டம் போடணும் சார்?” என்று அதிர்ந்தாள் மதுமதி.

 

“அதை நீங்க தான சொல்லணும்.” என்று பிரகதீஷ்வரன் கூற, “சார், நீங்க தப்பா என்னை சந்தேகப்படுறீங்க.” என்று மதுமதி திகைப்புடனே கூறினாள்.

 

அவளுக்கு அந்த காணொளி காட்சிகளை காட்டி தங்களின் யூகங்களை வல்லபி விளக்க, இப்போது பிரகதீஷ்வரன், “இதுக்கு மேலயும் இல்லன்னு சொல்லப் போறீங்களா மதுமதி? அப்படின்னா, இதையும் தெரிஞ்சுக்கோங்க, உங்க ‘லவர்’ சந்தோஷ் இப்போ அப்ரூவரா மாறிட்டாரு. எல்லாத்தையும் கன்ஃபெஸும் பண்ணிட்டாரு.” என்றான்.

 

அதைக் கேட்டதும் அவளின் முக பாவனை மட்டுமல்ல, உடல்மொழியே மாறுபட, “இடியட், இவனை நம்புனதுக்கு எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கான்!” என்று வாய்க்குள் முணுமுணுத்தவள், பின் பிரகதீஷ்வரனை நேரடியாக பார்த்து, “ஆமா, நான் தான் திட்டம் போட்டுக் குடுத்து அவங்களை கொலை பண்ண சொன்னேன்.” என்று திமிராக கூறினாள் மதுமதி.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
7
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்