Loading

அத்தியாயம் 14

 

சந்தோஷின் மனம் முன்னில்லாத வகையில் குற்றவுணர்வில் தவித்துக் கொண்டிருந்தது.

 

அவனும் ஒரு கொலையை செய்தவன் தான். அப்போது ஏற்படாத குற்றவுணர்வு, இப்போது தோழியின் நம்பிக்கையை காப்பாற்ற தவறிய போது ஏற்படுவது விந்தை தான். ஆனால், என்ன செய்வது மனிதனின் மனம் பல விந்தைகளின் உறைவிடம் தானே!

 

ஏனோ, இதற்கு மேல் உண்மையை மறைக்க அவனுக்கு விருப்பம் இல்லை. மேலும், தன்னை ஏமாற்றியவர்களை தண்டிக்கும் மனநிலை வந்திருந்தது அவனுக்கு. இப்படி ஒரு செயலை தன்னிடமிருந்து மறைத்தவர்கள், இன்னும் எதையெல்லாம் மறைத்திருப்பரோ என்ற எண்ணம் மனதிற்குள் உண்டாவதை தடுக்க முடியவில்லை.

 

அதன் காரணமாகவே அவனின் இந்த முடிவு!

சந்தோஷ் வாக்குமூலம் தருவதாக ஒப்புக்கொள்ள, பிரகதீஷ்வரனும் வல்லபியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

 

இருவரில் ஒருவனிடமிருந்து உண்மையை பெற்று விடலாம் என்று இருவருக்கும் நம்பிக்கை இருந்தது தான். ஆனால், அது இத்தனை விரைவில் நடக்கும் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லை.

 

ஒருபுறம், சந்தோஷ் தன் குற்றவுணர்வில் தவித்துக் கொண்டிருக்க, மறுபுறம் சாத்விக்கோ சந்தோஷிடம், ‘எதையும் கூறாதே!’ என்று சைகையால் சொல்ல முயன்று தோற்றுக் கொண்டிருந்தான்.

 

அவற்றைக் கண்ட பிரகதீஷ்வரன், வெளியில் இருந்த காவலனிடம் சந்தோஷை முதலிலிருந்த அறைக்கு கூட்டிச் செல்லுமாறு பணித்தவன், “இப்போயாவது உண்மையை சொல்லுவீங்கன்னு நம்புறேன் மிஸ்டர். சந்தோஷ்.” என்றான்.

 

அதற்கு விரக்தி சிரிப்பை வெளியிட்ட சந்தோஷோ, “நான் இப்போ சொல்றதை நம்புவீங்களான்னு சந்தேகமா தான் இருக்கு சார். ஏன்னா, இதுவரை நான் மறைச்ச விஷயங்கள் அப்படி.” என்றவன், தனக்கும் ஆராதியாவுக்கும் இருக்கும் சம்பந்தத்தை பற்றி கூற ஆரம்பித்தான்.

 

“நான் ஆராவை முதல்ல பார்த்தது சாத்விக் கிட்ட ரெண்ட் வாங்க போனப்போ தான். பார்த்ததும் பிடிச்சுருச்சு. அவளை பிடிக்காம இருந்தா தான் ஆச்சரியம்! நேரடியா பேச முயற்சி செஞ்சுப்போ, அவ என்னை கண்டுக்க கூட இல்ல. அது தான் அவளோட சுபாவம்னு பின்னாடி தான் தெரிஞ்சுது. பசங்க கிட்ட நேர்ல ஒரு டிஸ்டன்ஸ் மெயின்டேயின் பண்ணுவா. காரணம், அவங்க அப்பாக்கு அவ பசங்களோட பேசுறது பிடிக்காதாம். அவளுக்கு அவங்க அப்பாவோட ரூல்ஸ் பிடிக்காட்டியும், எங்க இந்த பிரச்சனையால, டான்ஸ் ஸ்டுடியோக்கு அனுப்ப மாட்டாரோன்னு பயந்து, அவளும் பசங்க கிட்ட பேச மாட்டா. ஆனாலும், அவகிட்ட எப்படியாவது பேசிடனும்னு நினைச்சு அவளை சோசியல் மீடியால கான்டேக்ட் பண்ண டிரை பண்ணேன்.”

 

“அவளும் என்கூட நல்லா தான் சேட் பண்ணா. முதல்ல நான் யாருன்னே அவளுக்கு தெரியல. அப்பறம், நான் தான் சந்தோஷ்னு சொன்னதுக்கு அப்பறம் கூட நல்லா தான் பேசுனா. ஆனா, நேர்ல பார்க்கும்போது வழக்கம் போல ஒதுக்கம் காட்ட, எனக்கு ஏன் இந்த ரெட்டை வேஷம்னு கோபமும் வந்துச்சு. அப்போதைக்கு அவகிட்ட எதுவும் சொல்லல. ஒருநாள் என் லவ்வை அவகிட்ட சொன்னப்போ, ‘நான் அந்த மாதிரி உன்கிட்ட பழகல’ன்னு அவ சொன்னப்போ தான் கோபத்துல கத்திட்டேன்.” என்று சந்தோஷ் நிறுத்தினான்.

 

“அந்த கோபம் தான் ஆராதியாவை கொலை செய்ய தூண்டுச்சா?” என்று வல்லபி கேள்வி கேட்க, “இல்ல மேம்.” என்றவன், மீண்டும் பேச ஆரம்பித்தான்.

 

“அவ என்னோட பேசி, பழகி ஏமாத்துனதை நினைச்சு எனக்கு மனசு முழுக்க கோபம் இருந்துச்சு தான். அதுக்காக அவளை கொலை செய்யணும்னு எல்லாம் நினைக்கல. அதுக்கு பதிலா, அவளை மாதிரியே, பேசி, பழகி ஏமாத்த திட்டம் போட்டேன். அதுக்கு தான் ருத்ரான்னு ஒரு ஃபேக் ஐடி ஆரம்பிச்சு அவளோட பேச ஆரம்பிச்சேன். அடிக்கடி அவளை பார்க்குற சூழ்நிலையும் இருக்குறதால, ருத்ராவா அவகிட்ட பேச இன்னொரு மொபைலை வாங்கினேன். என்னதான் வெளிய, அவகிட்ட லவ் ப்ரோபோஸ் பண்ணி, அவ ஒத்துக்கலன்னு கத்துனதுக்கு சாரி கேட்டாலும், இன்னொரு பக்கம் ருத்ராவா, அவகிட்ட கொஞ்சம் கொஞ்சமா நெருங்குனேன். அவளோட முன்னாடியே பேசி பழகுனதால, அவளோட பிடித்தம் எல்லாம் எனக்கு அத்துப்படி. அதுபடி, ருத்ராவை அவளுக்கு பிடிச்ச மாதிரி உருவகப்படுத்துனேன். என் முயற்சியும் வீண் போகல. கொஞ்ச நாள்ல அவளே அவளோட காதலை ருத்ராவான என்கிட்ட சொன்னா.” என்றான் சந்தோஷ்.

 

“அதுக்கு அப்பறம் தான் இந்த கொலை திட்டம் உருவாச்சா?” என்று வல்லபி வினவ, அதற்கும் இல்லை என்று தலையசைத்தான்.

 

“அவ காதலை சொன்னதும், உண்மையை சொல்லி எல்லாரு முன்னாடியும் அசிங்கப்படுத்தனும்னு தான் முதல்ல நினைச்சேன். ஆனா, என்னால முடியல. அவளோட காதலை கொஞ்ச காலத்துக்கு அனுபவிக்கணும்னு நினைச்சே நாட்களை கடத்துனேன். இதுல, இன்னொரு பக்கம் மகி – ஆரா ஃபிரெண்ட்ஷிப்பும் பலமாக ஆரம்பிச்சது. இன்ஃபேக்ட் மகி சோசியல் மீடியால ஆரா கூட பேசி ஃபிரெண்ட்டானது எனக்கு லேட்டா தான் தெரிஞ்சது. சப்போஸ், நான் ஆராக்கு பண்றது மகிக்கு தெரிஞ்சா, அவ அதை எப்படி எடுத்துப்பான்னு யோசனையா இருந்துச்சு. கண்டிப்பா, என் ஃபிரெண்ட்ஷிப்பை கட் பண்ணிடுவான்னு பயமாவும் இருந்துச்சு.” என்றான் சந்தோஷ்.

 

இதுவரை சந்தோஷ் கூறியதைக் கேட்ட வல்லபிக்கோ கோபம் பல மடங்காக ஏறிக் கொண்டு இருந்தது.

 

‘ராஸ்கல், ரெண்டு பேர்ல ஒருத்தரோட நம்பிக்கையை கூட காப்பாத்தல. இவனெல்லாம் என்ன ஃபிரெண்டு? இதுல லவ் ஒன்னு தான் கேடு! பொண்ணுங்களோட எமோஷன்ல விளையாடுற இந்த மாதிரி பசங்களோட மனநிலை எல்லாம் எப்போ தான் மாறுமோ?’ என்று மனதிற்குள் சந்தோஷை மட்டுமல்லாது அவனைப் போல இருக்கும் மற்றவர்களையும் சாடியவள், ஏதோ கேட்க எண்ணி வாயை திறக்க, அவளை தடுக்கும் விதமாக, அவளின் கரத்தில் அழுத்தம் கொடுத்து தடுத்தான் பிரகதீஷ்வரன்.

 

சட்டென்று திரும்பி அவனை வல்லபி பார்க்க, அவன் பார்வை என்னவோ எதிரே அமர்ந்திருந்த சந்தோஷிடம் தான் இருந்தது.

 

“இதுல இருந்து என்ன சொல்ல வரீங்க சந்தோஷ்? ஒரு பக்கம் உங்க லவ், இன்னொரு பக்கம் உங்க ஃபிரெண்ட்ஷிப் – இடையில மாட்டிக்கிட்டு தான் ஆராதியாவை கொலை பண்ண முடிவு பண்ணீங்களா?” என்று வல்லபி கேட்க வந்த அதே கேள்வியை, வார்த்தைகளை மட்டும் மாற்றியபடி கேட்டான் பிரகதீஷ்வரன்.

 

‘இதை தான நானும் கேட்க வந்தேன்.’ என்று ஓரக்கண்ணில் அவனை வல்லபி நோக்க, அவனோ, ‘இதை நீ எப்படி கேட்டுருப்பன்னு எனக்கு தெரியும்!’ என்று அவளைப் போல பார்வையாலேயே பதில் கூறினான் பிரகதீஷ்வரன்.

 

இவர்களின் பார்வை பரிமாற்றத்தை கண்டு கொள்ளாத சந்தோஷோ, “இல்ல சார். நான் இப்போ சொன்னது வரை, எனக்கு ஆராவை கொலை செய்யும் எண்ணம் வந்ததே இல்ல.” என்று கூறினான்.

 

“சோ, ஆராதியாவை கொலை செய்யுற பிளான் உங்களோடது இல்லன்னு சொல்ல வரீங்களா?” என்று வல்லபி வினவ, சந்தோஷின் மௌனமே அதற்கான பதிலை சொன்னது.

 

“அப்போ அது யாரோட திட்டம்?” என்று வல்லபி கேட்பதற்கும், உள்ளே அவசரமாக நுழைந்த காவலன் ஒருவன், “சார், அந்த அக்யூஸ்ட் தப்பிச்சு போக முயற்சி பண்ணான். நாங்க பிடிச்சு வச்சுருக்கோம்.” என்று கூற, அந்த இடமே பரபரப்பானது.

 

அந்த சூழ்நிலையிலும் சந்தோஷை ஒருமுறை பார்த்த பிரகதீஷ்வரன், தகவல் சொன்ன காவலனை அங்கே இருக்குமாறு பணித்து விட்டே, சாத்விக் இருக்கும் இடத்தை நோக்கி சென்றான்.

 

*****

 

அந்த அறையில் சுற்றிலும் சில காவலர்கள் நின்றிருக்க, அவர்களுக்கு மத்தியில் தலை குனிந்து அமர்ந்திருந்தான் சாத்விக்.

 

அவனருகே பிரகாஷ் விசாரித்துக் கொண்டிருக்க, பிரகதீஷ்வரனும் வல்லபியும் பிரகாஷிடம் சென்றனர்.

 

“சார் என்ன சொல்றாரு பிரகாஷ்?” என்று வல்லபி சாத்விக்கை முறைத்துக் கொண்டே கேட்க, “இன்னும் வாயே திறக்கல மேம்.” என்றான் பிரகாஷ்.

 

“ஓகே, நீங்க போய் உங்க ரொட்டின் வேலையை பாருங்க.” என்று மற்ற காவலர்களை அனுப்பி வைத்த பிரகதீஷ்வரன், பிரகாஷிடம், “அந்த வெஹிக்கில் டிராக்கிங் என்னாச்சு?” என்று வினவினான்.

 

“வொயிட் கலர் டாட்சன் காரை டிராக் பண்ணிட்டு இருக்கோம் சார். அதுக்குள்ள இந்த விஷயம் தெரிஞ்சதும் என்னை இங்க அனுப்பிட்டு, ஜெகா அந்த கார் நம்பர் வச்சு, ஓனரை டிராக் பண்ணிட்டு இருக்கான். ஃபியூ மினிட்ஸ்ல டீடெயில்ஸ் கிடைச்சுடும் சார்.” என்றான் பிரகாஷ்.

 

அதைக் கேட்டு கேலிச்சிரிப்பு சிரித்த பிரகதீஷ்வரனோ சாத்விக்கை பார்த்துக் கொண்டே, “நீங்க டீடெயில்ஸோட வரதுக்குள்ள, ஆளை நான் கண்டுபிடிச்சுடுவேன் போல.” என்று கூறி சாத்விக்கை அதிர வைத்தவன், “அப்பறம் பிரகாஷ், அந்த கார்ல டிரைவர் சீட் பக்கத்துல இருக்க பேசஞ்சர் சீட்ல இருக்கவங்களோட இமேஜ் தெளிவா கிடைச்சா நல்லா இருக்கும்.” என்று கூற, அதுவரை அதிர்ச்சி தான் என்றாலும் தலை குனிந்து அமர்ந்திருந்த சாத்விக், இப்போது விலுக்கென்று நிமிர்ந்து அமர்ந்தான்.

 

அவன் முகத்தில் அதுவரை இல்லாத பயமும் பதற்றமும் அப்பியிருக்க, அவை அந்த இன்னொரு நபருக்காக தான் என்பது அந்த காவலர்களுக்கு தெரியாமல் இருக்குமா?

 

பிரகாஷை அனுப்பி விட்டு, அங்கு திகைப்பில் அமர்ந்திருந்த சாத்விக்கின் முன் அமர்ந்த பிரகதீஷ்வரன், “சொல்லுங்க சாத்விக், உங்க மேல தப்பில்லன்னா, எதுக்கு இந்த தப்பிக்குற முயற்சி? யாருக்கிட்ட இருந்து தப்பிக்க நினைக்குறீங்க? எங்க கிட்ட இருந்தா, இல்ல உங்களோட கூட்டாளி கிட்ட இருந்தா?” என்று கேள்விகளை அடுக்கினான்.

 

அதற்கு பதில் கூறாமல் அமைதியாக சாத்விக் இருக்க, “இப்படி அமைதியா இருந்து நேரத்தை தான் கடத்துறீங்க சாத்விக். உங்களுக்கே தெரியும், இன்னும் கொஞ்ச நேரத்துல அந்த வொயிட் கலர் டாட்சன் கார் யாரோடதுன்னு நாங்க கண்டுபிடிச்சுடுவோம்னு. அப்பறம் எதுக்கு இந்த அமைதி?” என்று பொறுமையாகவே வினவினான் பிரகதீஷ்வரன்.

 

சாத்விக்கின் மனமோ தடுமாறிக் கொண்டிருந்தது. அவன் மூளை, சற்று முன்னர் அவன் வாங்கிய அடிகளை நினைவுபடுத்த, மனமோ அந்த நபருக்காக வாதாடியது.

 

அவனின் போராட்டத்தை அறியாத வல்லபியோ, “இவங்க எல்லாம் பொறுமையா கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டாங்க. நம்ம ஸ்டைல்ல கேட்டா தான் பதில் வரும் போல.” என்று கூறி பிரகதீஷ்வரனை பார்க்க, “அப்படியா சொல்ற?” என்று அவனும் கைகளை முறுக்கினான்.

 

அச்சிறு செய்கையே சாத்விக்கை, வாதாடும் மனதை பந்தாடி விட்டு, மூளை சொன்ன பேச்சைக் கேட்டு வாயை திறக்க வைத்தது.

 

“சார் சார், வேண்டாம். நான் சொல்லிடுறேன்.” என்று பதறிய சாத்விக், தன் பக்கமிருந்து நடந்ததை கூற ஆரம்பித்தான்.

 

“சார், அன்னைக்கு… சந்தோஷ் சொன்னதுல இருந்தே மகதி மேல… எனக்கு…” என்று அவன் நிறுத்த, முழுதாக அறிந்து கொள்ள வேண்டி கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான் பிரகதீஷ்வரன்.

 

என்னதான் பிரகதீஷ்வரனின் கையும் வாயும் பேசா விட்டாலும், கண்கள் கனலை கக்க, அதை நேராக பார்க்க முடியாதவனாக, மீண்டும் குனிந்து கொண்டான் சாத்விக்.

 

“அந்த வெப்சைட்ல எவ்ளோவோ கேட்டும், மகதியை திரும்ப வர வைக்குற மாதிரி தெரியல. அதான், ஒருநாள் நேர்லயே போய், அவகிட்ட இதை சொல்லி, ஒன் நைட் ஸ்டாண்டுக்கு கூப்பிட்டேன். அதுக்கு ஒத்துகலைன்னா, இந்த விஷயத்தை வெளிய சொல்லிடுவேன்னு மிரட்டுனேன். ஆனா, அவ என்னை கேவலமா பேசி அடிச்சுட்டா. அந்த கோபத்துல தான் அவளை கொலை செய்ய பிளான் போட்டோ…டேன்.” என்று சாத்விக் கூற, அவன் இறுதி வார்த்தையில் இருந்த தடுமாற்றத்தை மற்ற இருவருமே கவனித்துக் கொண்டு தான் இருந்தனர்.

 

“சோ, ‘உங்க’ பிளான் படி, மகதியை கொலை பண்ணிட்டீங்க, அப்படி தான?” என்று ‘உங்க’வில் அழுத்தம் கொடுத்து வல்லபி வினவ, “இல்ல மேம். கொலை பண்றதுக்கு தான் நான் அவ வீட்டுக்கு போனேன். ஆனா, நான் போறதுக்கு முன்னாடியே மகதி கழுத்துல வெட்டுக் காயத்தோட இறந்து கிடந்தா.” என்றான் சாத்விக்.

 

வல்லபிக்கு அவன் பதில் கோபத்தைக் கொடுத்தாலும், பெரும் முயற்சி செய்து பொறுமையை இழுத்து பிடித்தவளாக, “இன்னும் எவ்ளோ நேரம் இப்படி எங்களை சுத்த விட்டு ஏமாத்த போறீங்க சாத்விக்?” என்று வினவ, சாத்விக்கோ, “இது தான் உண்மை மேம்.” என்றான்.

 

அவனையே புருவச் சுருக்கத்துடன் பார்த்த பிரகதீஷ்வரன், “அப்பறம் எதுக்கு திரும்ப மகதி வீட்டுக்கு போனீங்க?” என்று வினவ, “அது… என்னதான் நான் கொலை செய்யலன்னாலும், நான் அங்க வந்துட்டு போனது எப்படியாவது போலீஸுக்கு தெரிஞ்சுடும்னு நினைச்சு, போலீஸை குழப்பி விட, ஸ்டுடியோல ஆராதியா கொலை செய்யப்பட்டது மாதிரியே மகதியோட பாடிலேயும் காயங்களை ஏற்படுத்துனேன்.” என்று தயங்கியபடி கூறினான் சாத்விக்.

 

“வாவ், நல்ல கதை சாத்விக். எப்படி எப்படி, நீங்க பண்ணாத ஒரு கொலையில இருந்து தப்பிக்க, மெனக்கெட்டு அவ்ளோ தூரம் டிராவல் பண்ணி அந்த பொண்ணு உடம்புல வெட்டியிருக்கீங்க, அப்படி தான?” என்று வல்லபி கிண்டலாக வினவ, சாத்விக் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

 

“க்கும், அப்போ உங்களுக்கு சந்தோஷ் தான் ஆராதியாவை கொலை செஞ்சதுன்னு தெரியாது, அப்படியா?” என்று பிரகதீஷ்வரன் வினவ, இம்முறை வேகமாக, “இல்ல சார். அப்போ எனக்கு தெரியாது.” என்றான் சாத்விக்.

 

“ஓஹ், அப்போ எப்போ தெரியும்?” என்று பிரகதீஷ்வரன் வினவ, “அது, ஆராதியா இறந்த தகவலை அவனுக்கு சொல்ல அடுத்த நாள் கால் பண்ணும்போது தெரியும்.” என்று சாத்விக் கூறினான்.

 

அதைக் கேட்டதும் அவனை சந்தேகமாக பார்க்க, “சார், அவன் தான் ருத்ரான்னு எனக்கு முன்னாடியே தெரியும். ஆனா, அவன் கொலை செய்யுற அளவுக்கு போவான்னு நான் எதிர்பார்க்கல.” என்றான் சாத்விக்.

 

“ஓஹ், அப்போ சந்தோஷ் ஆராதியாவை கொலை பண்ணப் போறது உங்களுக்கு முன்னாடியே தெரியாது. நீங்க மகதியை கொலை செய்யப் போறது அவருக்கு தெரியாது. ஆனா, சொல்லி வச்ச மாதிரி, நீங்க உங்க கார்லையும், அவரு அவரோட பைக்லையும், ஒருத்தருக்கு பின்னாடி ஒருத்தர் போவீங்க, அப்படி தான?” என்ற பிரகதீஷ்வரனின் கேள்வியில் இருந்தது கேலியா கோபமா என்று வல்லபியாலேயே பிரித்தறிய முடியவில்லை.

 

அதைக் கேட்ட சாத்விக் என்ன கூறுவது என்று தெரியாமல் விழிக்க, “இப்போ கூட உங்க ரெண்டு பேருக்கும் இடையில இருக்க லிங்க் யாருன்னு சொல்ல மாட்டீங்க இல்ல.” என்ற பிரகதீஷ்வரன், “ஆனா, நான் கண்டுபிடிச்சுட்டேன்.” என்று சாத்விக்குக்கு மட்டுமல்ல வல்லபிக்குமே அதிர்ச்சியை அளித்தான்.

 

“அப்பறம், நீங்க ஆராதியாவை லவ் பண்ணதா அவங்க ஃபிரெண்ட்ஸ் சொன்னாங்களே, அது உண்மை தான?” என்று கேள்வி கேட்டுவிட்டு பதிலை கூட அவனிடமிருந்து எதிர்பார்க்காமல் வெளியே சென்று விட, சாத்விக்குக்கு மனது அடித்துக் கொண்டது.

 

சாத்விக்குக்கு குறையாத குழப்பத்துடன் இருந்த வல்லபியோ, வெளியே சென்ற பிரகதீஷ்வரனுக்கு ஈடு கொடுக்கும் விதமாக வேகமாக நடந்தபடி, “எப்படி கண்டுபிடிச்சீங்க? எப்போ கண்டுபிடிச்சீங்க?” என்று பதற்றத்துடன் வினவ, “உறுதியா தெரியல. ஆனா, ஒருத்தர் மேல சந்தேகம் இருந்துச்சு.” என்றான்.

 

ஓடிக் கொண்டே பேச முடியாமல், அவனின் கரத்தைப் பற்றி நிறுத்தியவள், “இருந்துச்சுன்னா முன்னாடியேவா? எப்படி? எங்க கிட்ட கூட சொல்லல!” என்று மூச்சு வாங்கியபடி கேட்டாள் வல்லபி.

 

“முன்னாடின்னா ரொம்ப முன்னாடி இல்ல. எப்போ இந்த பொண்ணுங்களை பத்தி நமக்கு கிடைச்ச தகவல் ஃபேக்னு தெரிஞ்சதோ, அப்போ தான் சந்தேகம் ஏற்பட்டுச்சு.” என்று கூறிவிட்டு அவளின் கரத்தை எடுத்து விட்டபடி நடக்க துவங்கி விட்டான்.

 

“ஹலோ, எதையும் முழுசா சொல்ற பழக்கம் இல்லையா?” என்று அவள் கத்த, ஒருமுறை தங்களை சுற்றிலும் பார்வையை ஓட்டி விட்டு யாருமில்லை என்பதை உறுதி செய்த பின்னர், “முழுசா கேட்குற பழக்கம் உனக்கு தான் இல்லை.” என்று அவளுக்கு குட்டு வைத்தான்.

 

“க்கும், சார் தான் ஏசிபி ஆச்சே, ஒரு பொண்ணுக்கு புரிய வைக்க தெரியலையா?” என்று நேரம் காலம் பார்க்காமல் இடக்காக அவள் கேட்டு வைக்க, “பொண்ணா இருந்தா புரிய வைக்க முயற்சி பண்ணியிருக்கலாம்.” என்று அவனும் நமுட்டுச் சிரிப்புடன் கூறினான்.

 

அவர்களின் இந்த சமாதான உடன்படிக்கைக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக பிரகதீஷ்வரனின் அலைபேசி ஒலிக்க, அதை எடுத்து பேசியவன், “இதோ வரேன் ஜெகா.” என்று அழைப்பை துண்டித்து விட்டு, வல்லபியிடம், “மூணாவது ஆள் யாருன்னு தெரிஞ்சுடுச்சு. நான் சந்தேகப்பட்டது சரி தான்.” என்றான்.

 

“ப்ச், ஆள் யாருன்னு இன்னும் எனக்கு சொல்லல.” என்று வல்லபி கூற, “ஃபேக் நியூஸுக்கு சப்போர்ட் பண்ண ஆள் தான். யாருன்னு நீயே யோசி.” என்று அங்கிருந்து சென்று விட்டான் பிரகதீஷ்வரன்.

 

‘ஃபேக் நியூஸுக்கு சப்போர்ட் பண்ண ஆளா?’ என்று சொல்லி பார்த்தவளின் மனதில் அந்த முகம் வந்து போனது.

 

தொடரும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
2
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்